Thursday, April 9, 2020

செட்டி நாட்டு கும்மாயம் – WVA




ஊரடங்கு காலத்தில் வழக்கமான காபி கலக்கும் பணியைத் தவிர புதிய சமையலறை முயற்சிகள் எதுவும் செய்யவில்லை.

செட்டி நாட்டு சமையல் வகைகள் என்று ஒரு தோழர் பல்வேறு செட்டிநாட்டு சமையல்களுக்கான தயாரிப்பு முறைகளை பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதில் உடனடி சாத்தியமான “கும்மாயம்” என்ற இனிப்பைத்தான் தயார் செய்தேன்.

அரை டம்ப்ளர் வெள்ளை உளுந்து, கால் டம்ப்ளர் பாசிப்பருப்பு, ஒரு ஸ்பூன் பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியாக நல்ல வாசனை வரும் வறுத்து எடுத்துக் கொண்டேன். தனித்தனியாக வறுத்தாலும் அதன் பின்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில்  பொடி செய்து கொண்டேன்.



ஒன்றரை டம்ப்ளர் வெல்லத்தை பொடி செய்து அதை கொஞ்சம் தண்ணீர் விட்டு அதில் பொடி செய்த மாவையும் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்தில் கலந்து கொண்டேன்.




பிறகு வாணலியில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொண்டேன். பிறகு அதே வாணலியில் இன்னும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அது சூடானதும் அதில் ஏற்கனவே தயாராக இருந்த மாவை சேர்த்து சிறிது நேரம் கிளற வேண்டும். மாவு வடிவம் மாறும் போது தேங்காய் துறுவலையும் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறி, கடைசியில் ஏலக்காய் பொடி, முந்திரி கலந்து  எடுத்து வைத்தால் "செட்டி நாட்டு கும்மாயம்" தயார்.



கிட்டத்தட்ட அவல் புட்டின் ருசி, பாசிப்பருப்பின் வாசனையோடு இருந்தது.

நன்றாக இருந்ததா என்று கேட்கிறீர்களா?

"உன் மாப்பிள்ளை செய்த ஸ்வீட்" என்று என் மனைவி அவர்களின் அம்மாவின் கொடுத்ததே தரச்சான்றாக கருதுகிறேன்.

அதென்ன WVA என்ற கேள்வி வருகிறதல்லவா?

WITH VALUE ADDITION

எனக்கு வந்த சமையல் குறிப்பில் தேங்காய் துறுவல், முந்திரி எல்லாம் இல்லை. அது இரண்டும் நான் புதிதாக சேர்த்தது. 

செய்து பாருங்கள்.

சுலபமானது. சுவையானது. 



No comments:

Post a Comment