Monday, April 13, 2020

இன்னும் இரண்டு அறிமுகங்கள்

"முற்றுகை" நூலுக்கு எங்கள் கோட்ட இணைச் செயலாளர் தோழர் ஜி.வைத்திலிங்கமும் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி தோழர் ரமணனும் எழுதிய அறிமுகங்களை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



முற்றுகை 

இன்சூரன்ஸ் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் வேலூர்  கோட்டத்தின் பொதுச் செயலாளர் தோழர் எஸ் ராமன் அவர்கள் எழுதி வெளிவந்துள்ள இப்புத்தகம் 80 பக்கங்களைக் கொண்டது இருபத்தி இரண்டு அத்தியாயங்களை உள்ளடக்கியது சென்னை பாரதி புத்தகாலயம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.  அனைவரும் வாங்கி படித்து முற்றுகைக்கு பின்னால் இருக்கக்கூடிய வரலாற்று போராட்டத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்று விழைகிறேன்.

புனைவுகளின் கதாபாத்திரங்கள் வழியே ஒரு மாபெரும் போராட்டத்தை விவரிக்கும் ஆவணமாக இப்புத்தகத்தை உருவாக்கிய தோழர் ராமன் அவர்களுக்கு  பாராட்டுக்கள் இந்த நூலை உருவாக்க ராமன் அவர்கள் நேரடியாக இந்த போராட்டம் நடைபெற்ற மண்ணான கல்கத்தா நகருக்கு சென்று தங்கி தரவுகளைத் திரட்டி மேலும் இதன் போராட்டத்தின் உண்மை தன்மையை தோழர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மும்மூர்த்திகளில் ஒருவர் சந்திரசேகர் போஸ் அவர்களை சந்தித்து பல மணி நேரம் உரையாடி தரவுகளைத் திரட்டி இந்த புத்தகத்தை ஆவணப்படுத்தி உள்ளார்.

 1964 இல் இருந்து 1968 வரை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய இலாக்கோ விஜில் போராட்டம் நம் சங்கத்தின் பெருமைமிகு வரலாறுகளில் மணி மகுடமாய் இன்றும் திகழ்கிறது. 1965 இல் துவங்கிய இயந்திர மயத்திற்கு எதிராக மாதக்கணக்கில் இல்லை இல்லை வருடக்கணக்கில் நீடித்த போராட்டம் கம்ப்யூட்டரை நிறுவ விடாமல் இலக்கோ கட்டிடத்தை சுற்றி அமர்ந்து இரவு பகலும் முழுவதும் கண்காணித்து தடுத்து நிறுத்திய காவியம் ஒருவேளை அந்த போராட்டம் தோல்வியுற்று இருந்தால் நம் நிறுவனமான எல்ஐசியில் பல ஆண்டுகளுக்கு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இந்திய ஆண்டுகளில் பணி நியமனம் பெற்று இந்நிறுவனத்தில் வந்திருக்க இயலாது. அதில் நானும் ஒருவனாக இருந்திருக்கலாம் 

இந்த போராட்டத்தின் மூலமாக பல்வேறு அடக்குமுறைகளையும் ஒற்றுமையையும் புதிய புதிய தொழிற்சங்க போராட்ட வடிவங்களையும் அதாவது கொல்கத்தாவில் துர்கா பூஜையை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வீதிகளில் கொண்டாடியது உட்பட நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. 

இந்த போராட்டத்தின் வெற்றி நாம் நம் நிறுவனத்தை பாதுகாக்கும் போராட்டமாக மட்டும் இந்த இலக்கோ விஜில் போராட்டத்தை நடத்தவில்லை மாறாக படித்த இளைஞர்கள் பிற்காலத்தில் எல்ஐசி என்ற மாபெரும் நிறுவனத்தை தாங்கிப் பிடிக்க வேண்டும் தோளில் சுமக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு இந்த போராட்டத்தை மக்கள் போராட்டமாக அனைவருக்குமான போராட்டமாக முன்னெடுத்தது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மிகப்பெரும் சாதனை அதில் பீடி தொழிலாளர்கள் ரிக்ஷா தொழிலாளர்கள் மாதர் சங்கங்கள் மாணவர் அமைப்புகள் அரசு ஊழியர்கள் துறைமுகத் தொழிலாளர்கள் என்று போராட்டக்களத்தில் இரண்டு வருடமாக நம்மோடு நின்றவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது 

அதேபோல் இந்த போராட்டம் நடைபெற்ற காலக்கட்டத்தில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களில் எதிர்வினை எவ்வாறு இருந்தது நிர்வாகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களின் செயல்கள் எவ்வளவு கீழ்தரமாக இருந்தது எவ்வளவு பழிவாங்கும் நடவடிக்கை என்று இந்த புத்தகம் பல்வேறு விரிவான தகவல்களை சொல்லிச் செல்கிறது அடக்குமுறைகளை உச்சகட்டமாக பணியிடை நீக்கம் பணிநீக்கம் சிறையிலடைப்பு வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு மாறுதல் என்று நிர்வாகத்தின் கோரமுகம் பல இடங்களில் வெளிப்படுகிறது ஆனாலும் ஒன்றுபட்ட ஒற்றுமையான போராட்டத்தின் மூலம் சாதுரியமான முடிவுகளை எடுக்கும் தலைவர்களின் தொலைநோக்குப் பார்வை மூலம் இந்த போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது இதன் மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவம் என்பது அலாதியானது 

ஒரு தொழிற்சங்கத்தில் அரசியல் பார்வை தேவை என்பதை இந்த புத்தகம் கோடிட்டு காட்டுகிறது . தொழில கத்தையும் தொழிலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் நலனையும் அதன்மூலம் தேசத்தின் கட்டுமானத்தையும் நாம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால் ஒரு தொழிற்சங்கம் தொழிற்சங்க அரசியல் பார்வையோடு அனைத்தையும் அணுக வேண்டும் என்பதை இப்புத்தகம் நிறுவி செல்கிறது. நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் 55 தோழர்கள் என்ன ஆனார்கள் என்று இன்றுவரை தெளிவாக தெரிய வராத சூழலில்  இப்புத்தகத்தை படித்து முடிக்கும்போது மனது கனக்கிறது ஒன்றுபட்ட போராட்டத்தின் வெற்றி நம் நிறுவனத்திற்கு புதிய வாசலைத் திறந்து விட்டது மட்டுமல்லாமல் உலக அளவில் பல உச்சங்களைத் தொட சாதனைகளைப் புரிய நம் நிறுவனமான எல்ஐசி யை அந்தப் போராட்டம் பாதை போட்டு கொடுத்தது என்று சொன்னால் அது மிகையல்ல 

அப்போராட்டத்தில் பங்கெடுத்த உயிர்நீத்த சிறை சென்ற கடுமையான தாக்குதலுக்கு ஆளான யாருக்கும் பென்சன் கிடையாது.. ஆனால் இன்றோ நாம் அனைவரும் பென்ஷன் காரர்களாக இருக்கிறோம் என்று சொன்னாள் அவர்களுடைய தொலைநோக்கு உடைய போராட்டம் நம் கண் முன்னே விரிகிறது.  இப்போராட்டத்தின் இடையே  போராட்டத்தில் பூத்த புதுமலர் களாக  ஒரு காதல் கதையும்  இழையோடி வருகிறது. இதை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள தெரிந்துகொள்ள நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.. தோழர் ராமன் அவர்களின் இப்புத்தகத்தை  வாங்கி படிப்பது மட்டுமே.. நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

 ஜி வைத்திலிங்கம்

 இணைச் செயலாளர் 
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் வேலூர் கோட்டம்


முற்றுகை

1960களில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இயந்திரமயமாக்கலை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் ‘இலாக்கோ விஜில்’ என்றழைக்கப்படும் நீண்ட போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வேலூர் கோட்ட ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் தோழர் இராமன் ‘முற்றுகை’ என்ற பெயரில் புனைவு ஒன்று எழுதியுள்ளார். இது ராமனின்      புத்தகம். ஒரு தொழிற்சங்கத்தின் போராட்ட வரலாறை புனைவாக எழுதிய பிற புத்தகங்கள் எத்தனை என்று தெரியவில்லை. ஆனால் இது நடுத்தர வர்க்க ஊழியர்களுக்கும் குறிப்பாக இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கக்கூடிய அருமையான புத்தகம். 

                   1964-65 காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்த பின்னணியைப் பயன்படுத்தி பம்பாய் எல்ஐசி மத்திய அலுவலகத்தில் சூப்பர் கணினி ஒன்றை வைத்த கையோடு இன்னொன்றை கொல்கத்தாவில் வைக்க எல்ஐசி நிர்வாகமும் அன்றைக்கு இருந்த காங்கிரஸ் அரசும் முயற்சி செய்கிறது. அதை வைக்க இருந்த இலாக்கோ எனும் கட்டிடத்தை எல்ஐசி ஊழியர்களும் கொல்கத்தா நகர் பிற தொழிலாளிகளும் இடது சாரித் தலைவர்களும் பல மாதங்கள் முற்றுகைபோல் பாதுகாத்து அந்தக் கணினியை வைக்க விடாமல் முறியடித்த சம்பவம்தான் புத்தகத்தின் மையக் கரு. இன்றைக்கு கணினி தொழில் நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தும் நிறுவனங்களுள் எல்ஐசியும் ஒன்று. இந்த இரண்டு மாறுபட்ட நிலைமைகளுக்கான விளக்கமும் புத்தகத்தில் இருக்கிறது.

 அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுதி, சமயோசிதம், மக்கள், அரசியல் தலைவர்கள், பிற பிரிவு ஊழியர்கள் ஆகியோருடன் இணைப்பு ஆகியவை இந்தப் போராட்ட வெற்றிக்கு காரணங்களாக விளங்குவதை பார்க்க முடிகிறது.  

      ராமனின் புனைவுத் திறமை பல இடங்களில் பளிச்சிடுகிறது. ஒன்றைக் குறிப்பிட்டு சொல்லவேண்டும். ரித்விக் கடக்கின் பிரபல திரைப்படம் ‘மேகே தாகா தரா’ 

(தமிழில் ‘அவள் ஒரு தொடர்கதை’ – இது குறித்து படிக்க மேகத் தொப்பி அணிந்த நட்சத்திரம் https://solvanam.com/2011/06/10/%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a/) 

இந்த புத்தகத்தில் மீண்டும் மீண்டும் வருகிறது. ஆனால் அதன் கதையையோ மற்ற விஷயங்களையோ அவர் எங்குமே விவரிக்கவில்லை. ஒரு இடத்தில் மட்டும் ஒரு பாத்திரத்தின் தோற்றத்தை விவரிக்க மட்டுமே பயன்படுத்துகிறார். எழுத்தாளர் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைக்க வேண்டும் என்பதில்லை. வாசகனின் ஆர்வத்தை தூண்டி பல கேள்விகளை எழுப்பி அவனை தேடச் செய்வதே ஒரு சிறந்த படைப்பின் அடையாளம். அதில் இராமன் வெற்றி பெற்றிருக்கிறார். எல்ஐசியிலும் இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்திலும் நடந்த பல சம்பவங்களை இதில் ஆங்காங்கே கீற்று போல் காட்டுகிறார். எனவே இளம் எல்ஐசி ஊழியர்களும் மற்ற நடுத்தர வர்க்க ஊழியர்களும் அது குறித்து மேலும் தேடி படிப்பார்கள். அவற்றை சுருக்கமாக சொல்வதன் மூலம் மையப் பொருளான இலாக்கோ முற்றுகையின் முக்கியத்துவம் குறையாமல் இருக்கிறது. 

                    பல பெரிய எழுத்தாளர்கள் ஒரு புத்தகத்தை எழுதுவதற்கு சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வுகள் செய்து எழுதுவார்கள். ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’ அப்படி எழுதப்பட்டது என்று நினைவு. கிராமத்துப் பெண்களின் நிலை குறித்து எழுதுவதற்கு அம்பை தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு சென்றது ‘எழுத்தாளர்கள் கி.ராவுக்கு எழுதிய கடிதங்களில்’ பார்க்க முடிகிறது. இராமனும் இந்தப் புத்தகம் எழுதுவதற்கு கொல்கத்தா சென்று சம்பந்தப்பட்ட இடங்களைப் பார்த்து தோழர் சந்திரசேகர் போசுடன் பல மணி நேரங்கள் உரையாடி தகவல்களை திரட்டி உள்ளார். எழுதுவதற்கு திறமை மட்டுமல்ல உழைப்பும் சம அளவில் தேவைப்படுகிறது.               

ராமனின் நகைச்சுவை உணர்வும் சில இடங்களில் பார்க்க முடிகிறது. இயந்திரமயமாக்கல் குறித்து ஊழியர் சங்கம் நிர்வாகத்தை கேட்கும்போது ‘அமைதியாகக் கேட்பார்கள்,கோபமாகக் கேட்பார்கள், வேலை நிறுத்தம் செய்துகூட கேட்பார்கள், எப்படிக் கேட்டாலும் பதில் சொல்லக்கூடாது’ என்று வடிவேலு நகைச்சுவையை நினைவு படுத்துகிறார். தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக வரும் என்று சேர்மன் ஆவலோடு காத்துகொண்டிருக்கும் காட்சியை அவர் விவரிக்கும்போது ‘அமைதிப் படை’ அமாவாசை சிலருக்கு நினைவுக்கு வரலாம்.. 

                 அட்டைப் படத்தில் பிரம்மாண்டமான போராட்டத்தையும் அந்தக் கட்டிடம் இன்று பிரம்மாண்டமாக எழும்பியிருப்பதையும் காட்டியிருப்பது உலகில் நடந்த வளர்ச்சிகளெல்லாம் தொழிலாளிகளின் உழைப்பும் போராட்டமுமே காரணம் என்பதை குறியீடாகக் காட்டுகிறது. இலக்கியமும் தொழிற்சங்கமும் இணைவது பாராட்டப்பட வேண்டும். அதோடு அது தேவைகூட. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கும் தோழர் ராமனுக்கும் பாராட்டுகள்.

-ரமணன்,
ஓய்வு பெற்ற எல்.ஐ.சி அதிகாரி

No comments:

Post a Comment