Sunday, March 31, 2013

கருணாநிதி பெற்றது என்பதால் இந்த கதியா?

இன்று ஹிந்து நாளிதழில் பார்த்த செய்தி இது.



சென்னை மாநகரக் காவல்துறைக்காக ஹுண்டாய் நிறுவனம்
இலவசமாக  வழங்கிய  கார்களில் பல பயன்படுத்தப்படாமல்
தூசி படிந்து உறங்கிக் கொண்டிருக்கிறது.

இதை ஒழுங்காக பராமரித்தால் இன்னும் பல ஆண்டுகள்
பயன்படுத்த முடியும் என்றாலும் அதைச் செய்யாமல்
இப்போது புறக்கணித்து விட்டது காவல்துறை.

கருணாநிதி காலத்தில் வழங்கப்பட்டது என்பதற்காக
ஜெ காலத்தில் இந்த கார்கள் புறக்கணிக்கப் படுகின்றதா?

இந்த கார்களை வாங்கிய விசுவாசத்தால்தான் ஹூண்டாய்
நிறுவனத்திற்கு ஆதரவாக வாலாட்டிக் கொண்டு
போராடிய தொழிலாளர்களை காவல்துறை பல முறை
தாக்குதல் நடத்தி சிறைக்கு அனுப்பியது.

அப்படிப் பட்ட கார்களுக்கே இந்த கதி!

Saturday, March 30, 2013

பெண்களுக்கு மிகவும் அவசியம்

நேற்று ஒரு மகளிர் தோழரின் பெண்ணுடைய திருமண
நிச்சயதார்த்த விழாவிற்கு  சென்றிருந்தோம்.

விழாவில் அமர்ந்திருக்கிற போது  பழைய நினைவுகள்
நெஞ்சில் அலை மோதியது. கிட்டத்தட்ட பதினெட்டு 
வருடங்கள் முன்பாக சென்றேன்.

அந்த பெண் ஊழியர் கருணை அடிப்படையிலான பணி
நியமனம் பெற்றவர். அவரது கணவர் எல்.ஐ.சி யில் 
உயர்நிலை உதவியாளராக பணியாற்றியவர். கிட்டத்தட்ட
நாற்பது வயதிற்குள் இருக்கும் போது உடல் நலம்
பாதிக்கப்பட்டார். சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
சிகிச்சை பலனளிக்காமல் சிறு வயதிலேயே இறந்து போனார்.

மருத்துவ மனையிலிருந்து அவரது உடலை நாங்கள்தான்
வீட்டிற்கு எடுத்து வந்தோம். ஆம்புலன்ஸிலிருந்து உடலை
கீழே இறக்க அப்போது வேறு யாரும் இல்லாமல் நானும்
வேறு மூன்று தோழர்கள்தான் தூக்கிக் கொண்டு வந்தோம்.

அவருக்கு  சின்னஞ்சிறியதாய் மூன்று குழந்தைகள். இவர்களை
என்ன செய்யப்போகிறேன் அன்று இந்த பெண் தோழர் கதறியது
இன்னும் நெஞ்சில் இருக்கிறது. அப்போது எல்.ஐ.சி யில் 
பென்ஷன் திட்டத்திற்காக உடன்பாடு எட்டப்பட்டாலும் அரசாணை
வராததால் அமுலாகாத நேரம் அது.

காரியம் எல்லாம் முடிந்த பின்பு அவர்கள் வீட்டிற்குச் சென்று
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு விண்ணப்பம்
அளிக்குமாறு மூத்த  தலைவர்கள் கூறிய போது அவர் முடியவே
முடியாது என்று மறுத்து விட்டார். வீட்டுக்குள்ளேயே இருந்த
அவருக்கு  வேலை செய்ய வருவதில் அவ்வளவு தயக்கம்,
அவ்வளவு பயம்.

அவரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து பணியில் சேர வைத்தது
சங்கம். மிகுந்த கூச்ச உணர்வோடு வந்தவர்கள் காலம் உருண்டோட
உருண்டோட இன்றி இயல்பு நிலைக்கு வந்து விட்டார்கள். சில
வருடங்களுக்கு முன்பு முதல் பெண்ணின் திருமணமும் முடிந்து
விட இப்போது இரண்டாவது பெண்ணிற்கான திருமணமும்
நிச்சயமாகி விட முகத்தில் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும்
பார்க்க முடிந்தது.

இதற்கு அடிப்படை அவர்களது வேலை, வேலை கொடுத்த
நம்பிக்கையும் தைரியமும். குடும்பத்தலைவன் இறந்து
போய் விட்டால் எல்லாமே போய் விட்டது என்று இடிந்து
போய் நிற்காமல் இருப்பதற்கு தைரியம் அளிப்பது வேலை.

அந்த வகையில் பெண்களுக்கு வேலை என்பது மிக மிக
அவசியம். மத்திய அரசு கருணை அடிப்படையிலான பணி நியமனம்
என்பதை தொடரவில்லை. வங்கி, பொது இன்சூரன்ஸ் ஆகியவையில்
கூட இப்போது  கருணை அடிப்படையிலான பணி நியமனம்  என்பது
கிடையாது. 

ரொக்கமாக எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் பணி 
அளிக்கிற நம்பிக்கையை பணத்தால் அளித்து விட முடியாது.
இதை அரசுகள் உணர வேண்டும்.




 

Friday, March 29, 2013

சேகுவாரா வேண்டாம், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் படம் போட்ட சட்டை போடுங்கப்பா........







நடிகர் சரத் குமார் ஒரு வார இதழிற்கு அளித்த பேட்டியில் சேகுவாரா மட்டும்தான் புரட்சியாளரா, இன்றைய இளைஞர்கள் பகத்சிங், வாஞ்சிநாதன், ஜான்சிராணி ஆகியோரின் படங்கள் போட்ட சட்டைகளை ஏன் அணிவதில்லை என்று கேள்வி கேட்டுள்ளார்.

பகத்சிங், வாஞ்சிநாதன், ஜான்சிராணி ஆகியோரை இன்றைய இளைஞர்களுக்கு அவ்வளவாக தெரிவதில்லை என்ற அவரது ஆதங்கம் கூட நியாயமாக தெரியலாம். இவர்களைப் பற்றி இளைஞர்கள் அறிந்து கொள்ள இவர் இது வரை என்ன செய்துள்ளார். இவரது திரைப்படங்களிலாவது ஏதேனும் காட்சிகள், வசனங்கள் வைத்ததுண்டா?

ஆனால் செகுவாரா படம் போடுவது வேதனையாக உள்ளது என்ற வார்த்தைதான் உதைக்கிறது. செகுவாராவை வணிக நோக்கங்களுக்காக சிலர் பயன்படுத்துகின்றனர். ஒரு புரட்சியாளனை இப்படி வணிக பிம்பமாக பயன்படுத்துகின்றார்கள் என்று வேதனைப் பட்டால் அது சரியாக இருக்கும்.

ஆனால் செகுவாராவை போற்றுவது இவருக்கு வேதனையாக உள்ளதாம்.

சில மாதங்கள் முன்பு காவிப்படை முகநூலில் நடத்திய அதே விஷப் பிரச்சாரத்தை சரத்குமாரும் செய்வதன் உள் நோக்கம் என்ன?

அது சரி செகுவாரா என்ன சரத் குமார் போல அவ்வளவு பெரிய ஆளா என்ன

ஏதோ அர்ஜெண்டினாவில் பிறந்தார், கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகார எழுச்சிக்கு எதிராக நடைபெற்ற புரட்சியில் பிடல் காஸ்ட்ரோவிற்கு தோள் கொடுத்தார். உலகெங்கும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக புரட்சியை உருவாக்க நாடு நாடாக சென்றார். காங்கோ புரட்சிகர இயக்கத்திற்கு உதவி செய்ய ஆப்பிரிக்கா சென்றார்.

கியூப புரட்சிகர அரசில் அமைச்சராக, ரிசர்வ் வங்கி தலைவராக கிடைத்த பொறுப்புக்களை உதறித் தள்ளி பொலிவிய நாட்டு புரட்சிக்கு உதவி செய்ய சென்று அமெரிக்கப் படைகளால் தந்திரமாய் சுட்டுக் கொள்ளப்பட்டார்.

இதுதான் சே.

அவர் என்ன நாட்டாமை படத்தை அனுமதி இல்லாமல் ஜேஜே (இன்றைய ஜெயா டிவி) யில் வெளியிட்டதற்காக திமுக வில் சேர்ந்தாரா?

இல்லை  திருச்செந்தூர் தொகுதியில் திமுக  உள்கட்சி மோதலால்
தோற்கடிக்கப்பட்டாரா?

இரண்டாவது முறை ராஜ்யசபா சீட் கிடைக்காததால் கோபித்துக் கொண்டு அம்மாவோடு சேர்ந்தாரா?

இல்லை அங்கிருந்து பல்டி அடித்து தனிக்கட்சி ஆரம்பித்து ஜாதிய அரசியல் செய்தாரா?

காமராஜருக்கு மணிமண்டபம் கட்டுகிறேன் என்று சொல்லியே காலத்தை ஓட்டுகிறாரா?

ஓ.பி.எஸ்ஸை மிஞ்சும் அளவிற்கு அம்மா புகழ் பாடுகிறாரா? (ஆனால் தா.பா விற்கு ஈடு இணையில்லை)

இது போல என்ன தியாகம் செய்தார் சேகுவாரா?

ஆகவே இளைஞர்களே,

இனிமேல்

சேகுவாரா வேண்டாம், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் படம் போட்ட சட்டை போடுங்கப்பா........

பின் குறிப்பு : சரத்குமார் சட்டையில் சேகுவாரா படத்தை
ஒட்டி வைத்தது எனது கைங்கர்யம்தான்.



Wednesday, March 27, 2013

இது வசந்த காலம் - ஆமாம், நிஜமாதாங்க

சுட்டெரிக்கும் வெயில் காலம் இங்கே தொடங்கி விட்டது.

எனவே ஹாலந்து நாட்டின் வசந்த கால பூங்காக்களுக்கு
சென்று வண்ண மலர் காட்சிகளை கண்டு களியுங்கள்.

எனக்கு வந்த மின்னூஞ்சல் நீங்களும் கண்டு களிக்க
இங்கே உங்களுக்கும்













Tuesday, March 26, 2013

கலைஞர், சோனியா, சி.பி.ஐ பரபரப்பு உரையாடல்

கலைஞர், சோனியா ஆகியோர் முக நூலில் உரையாடினால்
எப்படி இருக்கும் என்ற கற்பனை உரையாடலை 
இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது.

ப.சி, முலாயம்,மாயாவதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, சி.பி.ஐ
என யாரையும் அது விட்டு வைக்கவில்லை.

இது கற்பனையாக இருந்தாலும் நிஜத்திற்கு நெருக்கமாகவே
உள்ளதுதான் சுவாரஸ்யம்.

நீங்களும் படித்து சிரியுங்கள்.

 

Sunday, March 24, 2013

ஃபேன்ஸி ஸ்டோரான இண்டிகோ விமானம்







சமீபத்தில் டெல்லி சென்று வந்தேன். எல்.டி.சி ப்ளாக் (விடுமுறை பயணச் சலுகை) ஒன்று காலாவதியாகும் நிலையில் இருந்ததால் விமானத்தில் சென்று வந்தேன். விமானங்களில் உணவு, காபி கொடுப்பதையெல்லாம் நிறுத்தி எத்தனையோ காலம் ஆகி விட்டது. ஐந்து நட்சத்திர ஹோட்டல் சாப்பாடு என்று சொன்னாலும் எந்த சாப்பாடும் சகிக்காது என்பது வேறு விஷயம். முன்பு ஒரு அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் கொடுப்பார்கள். இப்போது அதுவும் இல்லை. பத்து பைசா மிட்டாய் கூட கிடையாது.

உணவோ, காபி, டீயோ எது வேண்டுமானாலும் யானை விலை, குதிரை விலை கொடுத்து வாங்கிட வேண்டும். தண்ணீர் கேட்டால் மட்டும் போனால் போகிறது என்று நாக்கை நனைக்க அரை கப் தருகிறார்கள். அது தொண்டை வரை கூட செல்வதில்லை.

இதுவெல்லாம் பரவாயில்லை என்றாகி விட்டது இப்போதைய அனுபவம்.

இண்டிகோ ஏர்லைன்ஸில்தான் டெல்லி சென்று திரும்பி வந்தேன்.

முதலிலேயே ஒரு அறிவிப்பு கொடுத்து விட்டார்கள். உங்கள் சீட்டிற்கு முன்பாக ஒரு புத்தகம் உள்ளது. அதைப் படித்து உங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். பிறகு எங்கள் ஊழியர்கள் வருவார்கள் என்று.

புத்தகத்தை புரட்டினால் ஏராளமான பொருட்கள்

தொப்பிகள்,
ஸ்கூல் பைகள்,
கேஷ் பேகுகள்,
செல்போன், லாப்டாப் பவுச்சுகள்,
கவரிங் நகைகள்,
செண்ட் பாட்டில்கள்,
நெயில் பாலிஷ் பாட்டில்கள்,
பேனாக்கள்

இத்யாதி, இத்யாதி வகையறாக்கள்.

விலை கொஞ்சம் குறைவுதான்.
ஆமாம்
விமானத்தின் விலையை விட கொஞ்சம் குறைவுதான்.

பெல்ட் மாட்டுவது, கடலில் விழுந்தால் எப்படி தப்பிப்பது போன்ற சம்பிரதாயங்கள் முடிந்த பின் ட்ராலியைத் தள்ளிக்கொண்டு இது வேண்டுமா, அது வேண்டுமா என ஏர் ஹோஸ்டஸ்கள் விற்பனைப் பிரதிநிதிகளாக மாறி விட்டனர்.

விமானத்தில் இருப்பதற்கு பதிலாக ஏதோ ஒரு ஃபேன்ஸி ஸ்டோரில் இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது.

அதிகமான விலையாக இருந்தாலும் அவற்றையும் வாங்கும் பணக்காரர்களும் அங்கே இருந்தார்கள் என்பதுதான் யதார்த்தம்.

விமானக் கட்டணத்திற்கு மட்டும்தான் எல்.டி.சி யில் பணம் கிடைக்கும். விமானத்தில் விற்கும் பொருட்களுக்குக் கிடையாதே! எனவே வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும்...

Saturday, March 23, 2013

ஜெயலலிதாவிடம் முலாயம்சிங் கற்றுக் கொள்ளாத பாடம்






கடந்த முறை நான் டெல்லி சென்ற போது நோய்டாவில் மாயாவதி அமைத்த  யானைப் பூங்கா   (இணைப்பு தரப்பட்டுள்ளது) பற்றி எழுதியிருந்தேன். அண்ணல் அம்பேத்கர் பூங்கா என்ற பெயரில் தனது தேர்தல் சின்னமான யானையை எங்கெங்கும் அவர் சிலையாக வடிவமைத்திருந்தார். உ.பி தேர்தலின் போது அந்த யானைகள் மீது தேர்தல் ஆணையம் வெள்ளைத்துணி போர்த்தி வைத்திருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இப்போது டெல்லி போன போதும் நோய்டாவில்தான் தங்கியிருந்தேன். யானைப் பூங்கா வழியாகத்தான் சென்று வர வேண்டும்.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் அந்த பூங்கா மூடப்பட்டிருக்கும்  அல்லது யானைகள் அகற்றப் பட்டு முலாயம்சிங் யாதவின் சைக்கிள் சின்னம் வைக்கப்பட்டிருக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன்.

ஆனால் நான் ஏமாந்து போனேன்.

பூங்கா இயங்கிக் கொண்டிருந்தது. மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். யானைகள் அப்படியே இருந்தன. மாயாவதி  உருவாக்கியிருந்த அமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

உத்தரப் பிரதேச அரசியலில் எலியும் பூனையுமாக மோதிக்கொண்டு இருந்தாலும் தமிழகத்தில் ஜெயலலிதா போல கருணாநிதி உருவாக்கிய  அனைத்தையும் மாற்றாதது கொஞ்சம் ஆரோக்கியான விஷயம்தான். இந்த அல்பத்தனத்தை முலாயம் கற்றுக் கொள்ளாதது நல்லதுதான்.


Friday, March 22, 2013

பிரசுரிக்க முடியாத புகைப்படங்கள்





இவை பிரசுரிக்கக்கூடாத புகைப்படங்கள் அல்ல. முதலாளித்துவ ஊடகங்களால் பிரசுரிக்க முடியாத புகைப்படங்கள்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி,
வீர மண் ஜாலியாபாக்
செங்கோட்டையாம் கொல்கத்தா
வணிகத் தலைநகர் மும்பை

என நான்கு மையங்களிலிருந்து மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை, கொள்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்து நிறைவாக புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் 19.03.2013 அன்று நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தின் புகைப்படப் பதிவுகள் இது.

மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப் பயணமாக, கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் நேரடியாக மக்களிடத்தில் செய்திகளை கொண்டு சென்றது அதிர்வலைகளை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் பொதுக்கூட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான தோழர்கள் அணி திரண்டனர்.

சொகுசு ரதங்கள், சொகுசு கேரவன் வேன்கள் கிடையாது. சாமானிய மக்கள் பயணிக்கும் வேன்கள்தான். அதிலேதான் நாடெங்கும் சென்று வந்தார்கள். எழுச்சி மிக்க கூட்டம் அது. எளிய பாமர மக்கள் நாடு முழுதிலிருந்தும் சாரைசாரையாக அணி திரண்டு வந்தார்கள். முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் அரங்கில் நுழைந்த காட்சி சிலிர்ப்பூட்டியது.

பெரும் ஊடகங்கள் நிகழ்ச்சிக்கு தங்கள் அவுட் டோர் வேன்களில் வந்த போதும், மக்கள் மேடையை பார்க்க தடை செய்கின்ற விதத்தில் புகைப்படக்காரர்கள்  மறைத்து நின்ற போதும், எல்லா ஊடகமும் இந்த முக்கியமான நிகழ்வை இருட்டடிப்பே  செய்தன.

மார்க்சிஸ்ட் கட்சியின் வலிமையை எடுத்துரைக்கும் காட்சிகளை முதலாளித்துவ ஊடகங்களால் எப்படி  காண்பிக்க முடியும்?

பின் குறிப்பு : இந்த புகைப்படங்கள்  அடுத்தவர்களின் பதிவுகளிலிருந்து அவர்களுக்கு நன்றி கூட சொல்லாமல் காப்பி அடித்து வெளியிடும் புகைப்படங்கள் அல்ல. நானே கைக்காசு செலவழித்து டெல்லி சென்று நேரடியாக எடுத்த புகைப்படங்கள்.























பி.கு : ஒரு காமெடி பீஸ் அனாமதேயம் நான் கடையை மூடி விட்டதாய் நினைத்து அல்ப சந்தோஷம் அடைந்துள்ளது. நான்கு நாட்கள் ஊரில் இல்லாததால் நான் இறந்து விட்டேன் என்று கூட அந்த கேடு கெட்ட அனாமதேயம் சந்தோஷப்பட்டிருக்கும். இதோ நான் நன்றாகவே உள்ளேன் என்பதை இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு அது புகையட்டும். எத்தனை பின்னூட்டங்களை அது எழுதினாலும் அது எல்லாம் டெலீட்தான். ஆகவே டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்.