Showing posts with label நீட் தேர்வு. Show all posts
Showing posts with label நீட் தேர்வு. Show all posts

Sunday, July 21, 2024

"நீட்" மோசடி நிரூபணமானது . . .

 


நீட் தேர்வு என்பது பயிற்சி மையங்களுக்கு கொட்டிக் கொடுக்க வசதியுள்ள பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கான தேர்வு என்பதைக் கடந்து மோசடியான வழிகளில் தேர்வாக லட்சங்களை கொடுக்கும் வல்லமை உடையவர்களுக்கான தேர்வு என்பதுதான் இப்போதைய யதார்த்தம்.

 உச்ச நீதிமன்றம் தேர்வு மையங்களின் அடிப்படையிலான முடிவுகளை வெளியிடச் சொல்லி உத்தரவிட அத்தகவல் மோசடியை நிரூபித்துள்ளது.

 அதிக மதிப்பெண் எடுத்தவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள்   ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் என்ற சின்னஞ்சிறு ஊரிலிருந்துதான் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதே போல மஹாராஷ்டிரா, குஜராத், பீகார், உ.பி ஆகிய மாநிலங்களில் உள்ள சில குறிப்பிட்ட மையங்களின் மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள்.  கேள்வித்தாள்கள் கசிவும் அங்கெல்லாம் நடந்துள்ளது. விபரங்கள் இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் உள்ளது.

 இப்படி மோசடிகளின் மொத்த வடிவமாக உள்ள “நீட்” தேர்வு இனியும் வேண்டுமா?

 தமிழ்நாட்டுடன் இந்திய மக்கள் அனைவரும் இணைந்து உரக்க குரல் கொடுக்க வேண்டும். . .

 BAN NEET


Thursday, June 27, 2024

நீட் – நடத்துவது ??????

 


பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் அழுதால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்பதுதான் “நீட்” தேர்வு வேண்டாம் என்பதற்கான முக்கியக் காரணம்.

இப்போது என்ன நிலைமை?

 நீட் பயிற்சி மையங்கள் இப்போது தரகு மையங்களாக மாறி விட்டது. “நீட்” மூலம் தரம் உறுதி செய்யப்படுகிறது என்பதெல்லாம் கட்டுக்கதை ஆகி பணம் உள்ளவர்களுக்கு சீட் வாங்கித்தரும் தரகர்களாக பயிற்சி மையங்களும் நீட் தேர்வின் நிர்வாகிகளும் மாறியுள்ளனர்.

நீட் அமைப்பின் தலைமை நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார்.

 பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 குற்றச்சாட்டுக்களும் ஆதாரங்களும் பல மாநிலங்களிலிருந்தும் குவியத் தொடங்குகிறது. கைதுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 “நீட்” தேர்வை  ஒட்டு மொத்தமாக நீக்க வேண்டும் என்பதற்கு இவற்றை விட இன்னும் ஒரு முக்கியமான காரணம் புதிதாக கிடைத்துள்ளது.

 ஆம்.

 நீட்டை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி என்ன மாதிரியான அமைப்பு?

 அரசின் துறையா?

அரசு நிறுவனமா?

 இல்லை, இல்லை, இல்லை.

 


மன மகிழ் மன்றம், குடியிருப்போர் அமைப்பு (பதிவு செய்யப்படாத டுபாக்கூர் சங்கங்களை குறிப்பிடவில்லை) போல சாதாரண “சொஸைட்டி”.

 ஆமாம்.

 சொஸைட்டி சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட சாதாரண சொஸைட்டி.

 எந்த சட்டத்தின் படியும் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. அதனால் யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டிய பொறுப்பும் இல்லாத அமைப்பு. இதனை நம்பி பல லட்சம் மாணவ/மாணவியரின் எதிர்காலத்தை ஒப்படைத்திருப்பது கொடுமையானது. பி.எம் கேர்ஸ் நிதிக்கு முன்பாகவே மோடி அரசு செய்த மோசடி நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸியை சொஸைட்டி என்ற அளவிலேயே வைத்துக் கொண்டது. அதிலிருந்தே தெரிகிறது மோசடி செய்யும் நோக்கில்தான் மோடி அப்படி உருவாக்கினார் என்பது.

 அதனால் உரக்கச் சொல்வோம்.

 “நீட்” தேர்வை அகற்று . . .

”நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி”யை கலைத்திடு

Wednesday, June 19, 2024

நீட் - எதிர்ப்புத் தீ பரவட்டும்

 


தமிழ்நாடு மட்டும் எதிர்த்துக் கொண்டிருந்த நீட் தேர்வுக்கு எதிரான குரல் மற்ற மாநிலங்களிலும் இப்போது பரவத் தொடங்கி விட்டது.

உ.பி. மஹாராஷ்டிரா, குஜராத், பீகார் மாநிலங்களிலும் எதிர்ப்பு தொடங்கி விட்டது.

பயிற்சி மையங்கள் என்ற பெயரில் செயல்படும் தரகு மையங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வசதி கொண்ட பெரும் செல்வந்தர்கள் வீட்டு வாரிசுகள் மட்டுமே மருத்துவக் கல்வி பயில முடியும் என்ற நிலையை உருவாக்கியதுதான் நீட் தேர்வின் சாதனை.

பயிற்சி மைய தரகர்களும் நீட் தேர்வு ஆணையமும் இணைந்து செய்யும் முறைகேடுகள் இப்போதுதான் வெளி வரத் தொடங்கியுள்ளது. 1563 என்பதெல்லாம் சொற்ப எண்ணிக்கை. கடலின் அடியே மூழ்கியிருக்கும் பெரும் பனிப்பாறையின் நுனிதான் குஜராத் முறைகேடு.

.001 தவறு கூட இருக்கக்கூடாது என்று சொல்கிறது உச்ச நீதிமன்றம். நீட் தேர்வே முறைகேடுகளின் மையமாகிப் போனதால் அதற்கு வாய்ப்பில்லை. 

எனவே ஒரே தீர்வு

நீட் தேர்வை அகற்றுவதுதான்.

அந்த கோரிக்கையை வலியுறுத்தும் மக்கள் குரல் வலுக்கட்டும்.

எதிர்ப்புத் தீ பரவட்டும் . . .

Friday, April 19, 2024

ஆட்டுக்காரன் ஊளையிட்டது நல்லது

 


வாக்களிக்க புறப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் "உயிரே போனாலும் நீட்டை ரத்து செய்ய மாட்டோம்" என்று ஆட்டோக்காரன் சொன்னதை கேட்டேன்.

அந்த ஒரு வார்த்தையே நீட் ரத்தாகி விடும் என்பதற்கான அறிகுறி. ஏனென்றால் ஆட்டுக்காரன் வரலாறு அப்படி.

வேளாண் சட்டங்களில்  ஒரு கமா, ஃபுல் ஸ்டாப் கூட மாறாது என்று சொன்ன இரண்டாவது நாளே, அனைத்து சட்டங்களையும் திரும்பப் பெறுவதான மோடியின் அறிவிப்பு வந்தது.

ஆனால் இந்த முறை மோடியின் பெயரில் அறிவிப்பு வராது. ஏன்?











அப்போது அவர் பிரதமராக இருக்க மாட்டார். 

Friday, February 4, 2022

ஆட்டுத் தாடியின் ஆணவம் . . .

 


உங்களால் ஒரு போதும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று ராகுல் காந்தி மக்களவையில் முழங்கிய போதே நீட் மசோதா தொடர்பாக ஒரு அராஜகம் நிகழும் என்று எதிர்பார்த்தேன்.

அது போலவே நடந்து விட்டது. மசோதா திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.

ஏழை எளிய மாணவர்களும் கிராமப்புற மாணவர்களும் பாதிக்கப் படுகின்றனர் என்பதுதான் நீட் எதிர்ப்பிற்கான அடிப்படை. அதை காரணமாக சொல்லி திருப்பி அனுப்பியதுதான் ஆட்டுத்தாடியின் கொழுப்பு.

"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா! இது நாகாலாந்து இல்லை" என்றெல்லாம் முரசொலியில் எழுதியது திமுகவும் அரசும் ஆட்டுத்தாடிக்கு உணர்த்தி மாநிலத்தை விட்டே ஓட வைக்க வேண்டும்.

ராகுல் காந்தியை பப்பு என்று மோடி வகையறாக்கள் கிண்டல் செய்தாலும் அவருக்கு பயப்படுகின்றார்கள் என்பதை செய்கையால் காண்பித்து விட்டார்கள். சங்கிகள் மறுக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

ராகுல் காந்தி சபித்தது போல தமிழ்நாட்டை எந்நாளும் ஆள முடியாது என்பதை உணர்ந்த காரணத்தால்தான் வஞ்சிக்க தொடங்கி விட்டார்கள்.

Monday, September 20, 2021

வாழப் பிறந்தோம்! வாழ்ந்து காட்டுவோம்



 *நாளொரு கேள்வி: 18.09.2021*


வரிசை எண் : *475*

இன்று நம்மோடு திருமிகு *பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு* (பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை)
##########################

*வாழப் பிறந்தோம்! வாழ்ந்து காட்டுவோம்!*
கேள்வி: நீட் பயத்தில் மாணவர் தற்கொலைகள் நிகழ்கிறதே! 

*பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு*

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்" என்ற திருக்குறள் வழியாகத் *திருவள்ளுவர்* ஒரு மகத்தான உண்மையை நமக்கு உணர்த்த முற்படுகிறார்.

“தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தவர்” என்று நம்புகிறோம். அந்தத் தெய்வத்தாலேயே ஆகாமல் போனால்? வள்ளுவர் சர்வ சாதாரணமாக, “அதனால் என்ன? உடல் வருத்தி முயன்று பார், உரிய பலன் கிடைக்கும்,” என்கிறார். 

இதைவிடச் சிறந்த, தன்னம்பிக்கை ஊட்டும் வரிகளை வேறு எவராலும் சொல்லிவிட முடியாது. 

மிகப்பெரும் போராட்டம் நடத்தியே, விதை முளைத்து வளர்கிறது. பூமியைக் கிழித்துக்கொண்டு மேல் எழும்பி வரும் செடியின் இலை நுனியைத் தொட்டுப் பாருங்கள். இவ்வளவு *மென்மையான இலை எவ்வாறு இவ்வளவு கடினமான மண்ணையும் கல்லையும் தகர்த்திக் கொண்டு வெளியே வந்தது?*

மென்மையாக இருப்பது பலவீனம் அல்ல.‌ வாழ்க்கையில் எதிர்பார்த்தது கிடைக்காமல் போனாலோ, அடைய நினைத்ததை அடைய முடியாமல் போனாலோ, அது ஒருவரின் 
இயலாமையோ, தோல்வியோ அல்ல.  மேலும் முயலவும், வெவ்வேறு மாற்றுகளைச் சிந்திக்கவும், வாழ்க்கை அனுபவம் நமக்குக் கற்றுத் தரும் *மகத்தான பாடம் அது.*

முதல் முயற்சியில், அடுத்தடுத்த தொடர் முயற்சிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்தவர்கள்தான் பின்னாளில் பல மகத்தான சாதனைகளைச் 
செய்துள்ளனர் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. 

பெண் படிக்கக்கூடாது என்று சொன்ன சமூகக் கட்டமைப்பில், பெண்ணைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க, *ஜோதிபாவுடன்* இணைந்து *சாவித்திரிபா* முயன்ற போது, உற்றார் உறவினர் ஒன்றுகூடிப் பல இடைஞ்சல்கள் செய்தார்கள். பல்வேறு வகையான அவமானங்களை எதிர்கொண்டு அன்று சாவித்திரிபா துணிந்து முயன்றதால்தான், பெண்கள் எத்துறையிலும் பயிலும் வாய்ப்பை இன்று பெற்றனர். 19ம் நூற்றாண்டில், நமக்கு எதற்கு இந்த அவமானம் என்று சாவித்திரிபா ஒதுங்கியிருந்திருப்பாரானால்? "இலட்சியத்தை அடைய விட மாட்டார்கள், பிறகு நாம் இருந்து என்ன பலன்," என்று தன்னைத் தானே மாய்த்துக் கொண்டிருந்திருப்பாரானால், 21ம் நூற்றாண்டில் விண்ணிலும், கடல் ஆழத்திலும், சந்திர மண்டலத்திலும், செவ்வாய்க் கிரகத்திலும் கால்வைத்து ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பை நம் பெண்கள் பெற்றிருக்க முடியுமா? முடிந்திருக்கலாம், இந்த நூற்றாண்டில் அல்ல, இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து. 

புதுக்கோட்டையில் பெண்கள் கல்லூரியில் சேர அனுமதி இல்லை என்றிருந்த காலத்தில், *முத்துலட்சுமியின்* இடைவிடாத போராட்டம், அன்று புதுக்கோட்டையை ஆண்ட மன்னரின் காதுகளுக்குச் சென்றது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர்ந்து, முதல் பெண் மாணவியாகத் தன்னந்தனியாகப் பயின்று, பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து மகத்தான சாதனை புரிந்தவர்தான் டாக்டர் முத்துலட்சுமி. இலட்சியத்தை அடையவிடாமல் தடைகள் உருவாவதைக் கண்டு முத்துலட்சுமி துவண்டுப் போய் இருந்தால், இந்த சாதனை சாத்தியப்பட்டிருக்குமா?

வாழ்க்கையில் எதுவுமே தோல்வி கிடையாது. அனைத்துமே வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்கள்தான். 
குழந்தைகள், மாணவர்கள் தோல்வியாக எதையும் கருதக் கூடாது. முடியாமல் போனால், அதனால் என்ன? அடுத்ததை யோசிக்கிறேன் என்று வாழ்க்கை போராட்டத்தை மகிழ்ச்சியோடு நடத்த வேண்டும். 

ஒரு உயிரை உருவாக்க இயலாத நம்மால் உயிரை மாய்த்துக்கொள்ள  உரிமையளித்தது யார்? 
தற்கொலைகள் எந்தச் சிக்கலையும் தீர்த்ததாக வரலாற்றில் எங்கும் காண முடியாது. தற்கொலை சிக்கலைப் பெரியதாக்கியிருக்கிறதே தவிர, தீர்த்தது இல்லை. 

தற்கொலை என்ற சிந்தனை யாருக்கும் வரக் கூடாது. வாழப் பிறந்தோம். வாழ்ந்து காட்டுவோம் என்ற வைராக்கியம் கொள்வோம். 

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி" என்றார் *வள்ளலார் இராமலிங்க அடிகள்.* 

ஜோதி என்றால் ஒளி. ஒளி இருளை விலக்கும். கல்வி இல்லாதவர் அறியாமை எனும் இருளில் இருப்பவராகக் கருதப்படுவர். கல்வி அறியாமையெனும் இருளகற்றி, அறிவு எனும் ஒளியைத் தரும். அறிவு விரிவடையும்போது அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற அருள் உள்ளம் பெருகும். 

'நாம் எல்லோரும் ஒருவரே' என்ற உணர்வு, அனைவருக்குமானவராக நம்மை வாழ வைக்கும். அறிவு அருளைப் பெருக்கும். அருளைப் பெருக்கும் ஜோதி, "அருட்பெருஞ்ஜோதி" என்றார் வள்ளலார். 

அதை இன்னும் சரியாக நாம் விளங்கிக்கொள்ள, *பாவேந்தர் பாரதிதாசனார்* புதிய உலகு செய்ய விடுக்கும் அழைப்பைப் படிப்போம்: 

"எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உனது மானிடப் பரப்பை
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்
அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்துகொள் உன்னைச் சங்கமமாக்கு

மானிட சமுத்திரம் நானென்று கூவு
பிரிவிலை எங்கும் பேதமில்லை
உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன்; ‘உடைமை மக்களுக்குப் பொது’
புவியை நடத்துப் பொதுவில் நடத்து."

தன்னலம் நீங்கி பொது நலம் காண பாவேந்தர் கூறும் வரிகளையும் பார்ப்போம்: 
"தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெலாம் ‘ஒன்றே’ என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே."

மடிந்து வீழாமல், தாயுள்ளத்துடன் வாழந்து காட்டுவோம். 

*செவ்வானம்*

Tuesday, October 20, 2020

நீட் – தேவையில்லாத ஆணியே

 



இந்த வருட நீட் தேர்வு முடிவுகள்  உணர்த்தும் உண்மை ஒன்றுதான். அத்தேர்வு அவசியமில்லை.

 

மருத்துவப் படிப்பிற்கான தகுதியை நிர்ணயிக்கும் அந்த நிறுவனம் தகுதியானதுதானா என்ற கேள்வியை அந்த நிறுவனம் வெளியிட்ட தேர்வு முடிவுகளின் பட்டியலே உருவாக்கி விட்டது. தேர்வு எழுதியவர்களை விட பல மடங்கு  பேர் தேர்ச்சி பெற்றதாகவும் சதவிகிதக் கணக்குகளும் அந்த நிறுவனம் ஒரு பூஜ்ஜியம் என்றே உணர்த்துகிறது. ஒரு அறிக்கையை தயாரிப்பதிலேயே அலட்சியம் காண்பிக்கிற அமைப்பு தேர்வுக்கான வினாக்களை தயாரிப்பதிலும் விடைகளை திருத்துவதிலும் கவனம் செலுத்தியிருக்கும் என்று எப்படி நம்ப முடியும்?

 

ஒடிசாவை சேர்ந்த மாணவன் நூறு சதிவிகித மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றதாக செய்தி. அந்த மாணவன் எங்கள் பயிற்சி மையத்தில்தான் படித்து தேர்ச்சி பெற்றான் என்று ஆறு பயிற்சி மையங்கள் விளம்பரம் வெளியிட்டுள்ளதும் ஒரு செய்தி.

 


“ஸ்ரீஜன் சூர்யாவுக்கு மரண அடி” என்ற தலைப்பில் ஒரு செய்தியில் நீட் தேர்வு எளிமையானதுதான் என்று ஒரு மாணவன் சொன்னதாக பார்த்தேன். அந்த மாணவனின் பின்னணியில் ஒரு கோச்சிங் மையம் இருப்பதை நீங்களும் பாருங்கள்.

 


ஆடு மேய்ப்பவரின் மகன் அரசுப் பள்ளி மாணவர்களிலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றதற்காக பாஜகவினர் சால்வை அணிவித்ததாகவும் ஒரு செய்தி. அனிதாவின் மரணத்தின் போது ஆசிரியை பணியை ராஜினாமா செய்த சபரிமாலா, பல பேரிடம் பணம் திரட்டி அந்த மாணவனை தனியார் பயிற்சி மையத்தில் படிக்க வைத்து வெற்றி பெற வைத்தார். அந்த மாணவனுக்கு சால்வை அணிவிக்க பாஜகவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற விமர்சனங்களையும் பார்த்தேன். ஆசிரியை சபரி மாலாவும் ஒரு காணொளியில் அந்த கேள்வியை எழுப்பியிருந்தார்.

 


இந்த செய்திகள் எல்லாம் ஒரு முக்கியமான உண்மையைத்தான் உரைக்கின்றன.

 யாரெல்லாம் பணம் பறிக்கும் பயிற்சி மையங்களில் பயின்றார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றுள்ளார்.

 பனிரெண்டாம் வகுப்பு முடிந்த வருடமே இவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. ஒரு வருடம் முழுதும் நீட் தேர்விற்காக பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகே வெற்றி பெற்றுள்ளார்கள்.

 நான் அறிந்து இந்தாண்டு தேர்ச்சி பெற்ற பலரும் கூட மேலே சொன்ன வரையறைக்கு உட்பட்டவர்களே.

 ஆக “நீட்” தேர்வில் வெற்றி பெற வேண்டுமெனில்

 ஒரு வருட கல்வியை தியாகம் செய்தாக வேண்டும்.

தனியார் பயிற்சி நிறுவனத்தில் சில லட்சங்களை கொட்டி பயில வேண்டும்.

 இவை இரண்டும் யாருக்கு சாத்தியம்?

 யாருக்கு சாத்தியம் என்பதை விட யாருக்கு சாத்தியமில்லை என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.

 ப்ளஸ் டூ படிப்பிற்கே தனியார் பள்ளியில் படிக்க கட்டணம் செலுத்த வழியில்லாமல் அரசுப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கு தனியார் பயிற்சி நிறுவனங்களில் லட்சக் கணக்கில் செலுத்துவது எப்படி சாத்தியம்?

 அரசுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது என்றால் என்ன எழவிற்கு பொதுத்தேர்வுகள் நடத்த வேண்டும்.

 “நீட் தேர்வு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப் படுபவை என்று சொல்வது சரியல்ல. தனியார் பயிற்சி நிறுவனங்கள் கோடி கோடியாக சம்பாதிப்பதற்கான ஏற்பாடன்றி வேறல்ல.

 நீட் அமைப்பிற்கும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கும் இடையே எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கிறதா என்பது ஆராயப் பட வேண்டும்.

 நிச்சயமாக சொல்ல முடியும்.

நீட் என்பது தேவையற்ற ஆணியே.

 பிகு: நீட் தேர்வுக்கு எதிராக பணியை ராஜினாமா செய்த திருமதி சபரி மாலா, ஒரு மாணவனை மட்டும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்த்தது என்பது ஒரு முரண் என்றே பார்க்கிறேன்.


பிகு 2 : ஏழை மாணவர்களின் வாழ்வை அழிப்பது மோடி என்று மிகச் சரியாக சொல்லியுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு வாழ்த்துக்கள்



 

Wednesday, September 16, 2020

நீட் தற்கொலைகள் –ஒரு விவாதம்

 



 

நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள பெற்றோர்களே காரணம் என்று முதலில் சொன்ன பாஜகவின் நச்சுப் பாம்பு கரு.நாகராஜன் பிற்கு தற்கொலைக்கு சூர்யாதான் காரணம் என்று ஒரே போடு போட்டு விட்டார். இந்த பினாமி அரசு சூர்யா மீது “தற்கொலைக்கு தூண்டிய வழக்கு” பதிந்தால் கூட ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

 

இத்தகைய சூழலில் தமிழகத்தில் மட்டும் ஏன் நீட்டுக்கு எதிராக தற்கொலைகள் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. நீட்டை எதிர்ப்பவர்கள் இழிவு படுத்தப் படுகின்றனர். நீதிமன்றமும் இத்தகைய செயலுக்கு விதிவிலக்கல்ல.

 

இந்த நிலையில் பின் வரும் பதிவும் அதற்கான ஒரு பின்னூட்டமும் பல பொய்களை தோலுரிக்க  உதவிகரமாக இருக்கும்

 

*நாளொரு கேள்வி: 16.09.2020*

 

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *ஆர். தர்மலிங்கம்*

#######################

 

*கேள்வி*

 

நீட் தேர்வு அச்சத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது கோழைத்தனம் என்று கடந்து செல்வது சரிதானா?

 

*ஆர். தர்மலிங்கம்*

 

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது  மிகுந்த கவலையளிக்கிறது.*இதுவரை தமிழகத்தில் பெரம்பலூர் அனிதா முதல் மதுரை துர்கா வரை 12 மாணவர்களை இழந்துள்ளோம்.*

 

தற்கொலை செய்வதும், தற்கொலைக்கு தூண்டுவதும் சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. தற்கொலைகள் குறித்து ஊடகங்களிலும்,சமூக ஊடங்களிலும் விவாதங்கள் நடக்கிறது.

 

தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் என்றும் மருத்துவர் படிப்புக்கு இடம் கிடைக்காவிட்டால்  நர்ஸிங் படிக்கலாமே அதுவும் கிடைக்காவிட்டால் லேப் டெக்னிசியன் ஆகலாமே என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலரோ பெற்றோர்கள் பிள்ளைகள் மீது கொடுக்கும் அழுத்தமே காரணம்  என்கிறார்கள். மற்ற சிலரோ பெற்றோர்களே குழந்தைகளை திட்டாதீர்கள் என்று அறிவுரை சொல்கிறார்கள்.

 

தேசிய கட்சியின் செயலாளர் ஒருவர்   காதல் தோல்வியால் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதனால் காதலை தடை செய்து விடலாமா? பள்ளி இறுதி தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதனால்  பள்ளி இறுதி தேர்வே வேண்டாம் என்று சொல்லி விடலாமா? என *விதண்டாவாதம்* செய்வதையும் பார்க்கிறோம்.

 

மாணவர்களின் தற்கொலைக்கு அரசின் கல்வி கொள்கையும், நீட் தேர்வுகளை நடத்தியே தீருவோம் என்ற அரசின் பிடிவாதமும்,   சமூகத்தின் அழுத்தமுமே காரணம் என்பதை  உணர மறுப்பது ஏன்?

 

*தற்கொலை என்பதை கோழைத்தனம் என்று ஒரு வரியில் கடந்து/செல்ல இயலாது.* அதன் உளவியல் முக்கியம்  கடுமையான மன உளைச்சல், விரக்தி மனப்பான்மை, இனி எதற்குமே நான் தகுதியில்லை என்ற  குற்ற உணர்வும்  மாணவர்களை தற்கொலைக்கு தள்ளுகிறது. இந்த நிலைக்கு இளம் மாணவர்கள் வருவதற்கு இந்த சமூகமும், அரசின் கொள்கையும்தான் காரணம் என்பதை உணர வேண்டாமா?

 

எல்.கே.ஜி யில் சேர்த்த உடனே முதுகில் சுமக்கும் புத்தக மூட்டையோடு அந்த இளம் தளிர்கள் மீது நமது எதிர்பார்ப்பையும் கனவையும் நம்மை அறியாமலேயே சுமையாக ஏற்றி விடுகிறோம். மருத்துவம் சமூகத்தில் ஒரு செல்வாக்கை உருவாக்கும் படிப்பு  என்பதால் அதை நோக்கி குழந்தைகளை ஒட வைக்கிறோம்.  சில வீடுகளில் குழந்தை பிறந்த உடனேயே டாக்டர் பிறந்து விட்டார் என்று சொல்வதை கூட கேட்டிருப்போம்.இதற்கு அந்த குழந்தைகளின் பெற்றோர் மட்டுமே   காரணம் என்று சொல்லி தப்பித்துக்  கொள்ள முடியாது.சமூக பார்வையே அப்படித்தான் இருக்கிறது. *வெற்றி பெற்றவர்களின் கதைகளையே சொல்லும் சமூகம் தோல்விகளை எதிர் கொள்ள ஒரு போதும் கற்றுக் கொடுப்பதில்லை.*

 

கல்வியை, குழந்தைகளின் அறிவை   அவர்கள் பெறும் மதிப்பெண் மூலமே  தீர்மானிக்கும் போக்கு காலகாலமாக இங்கே இருக்கிறது.   மருத்துவ படிப்புக்கோ அல்லது உயர் படிப்புக்கோ தயாராகும் மாணவர்களை ஒரு உயிராக கூட பார்ப்பதில்லை. போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு ரோபோட் மாதிரி பார்க்கிறோம். எந்நேரமும் படிப்புதான்.பள்ளி விட்டால் டியுசன்.டியுசன் முடிந்தால் பயிற்சி மையம் தற்போது ஆன் லைன் டெஸ்ட் என தூங்கும் சில மணிநேரம்   தவிர *வாழ்நாள் கனவை துரத்தி கொண்டே மாணவர்கள் ஒட வைக்கப்படுகிறார்கள்.*

 

மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட்  தேர்வு தேவையற்றது என்று சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள்  சொல்ல முடியும். நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் திரும்ப திரும்ப சொல்வது மருத்துவராக தகுதி வேண்டாமா? என்பதுதான்.  *நீட் தேர்வு வருவதற்கு முன்பு பள்ளி தேர்வில் மதிப்பெண் பெற்று மருத்துவராக பணியாற்றி வரும் எல்லோரும் தகுதியற்றவர்களா?*  மருத்துவத்தில் அவர்கள் சாதிக்கவில்லையா?  என்ற கேள்விக்கு பதில் இல்லை.

 

வணிகத்தில் ஒரு பொருளின் மீதான தேவையை, விருப்பத்தை தொடர்ந்து  தக்க வைப்பது  அவசியம். அதற்காக அதை போல மதிப்பு மிகுந்த பொருள் எங்கேயேயும் இல்லை,கிடைக்காது என்ற எண்ணத்தை உருவாக்கிட வேண்டும். *இன்று கல்வி, அதுவும் மருத்துவ கல்வி மிகப்பெரிய வணிகமாக, தொழிலாக மாறியுள்ளது.* சமூகத்தில் செல்வாக்கு பெற்ற மருத்துவ படிப்பை வியாபாரமாக்கிட அதன்    மதிப்பை தக்க வைத்திட நீட் போன்ற போட்டித்  தேர்வு பயன்படுகிறது.

 

மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கிறது என்பதால் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பள்ளி இறுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான இடம் நிரப்பபட்டது.

 

தற்போது மத்திய அரசின் கொள்கைப்படி மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம். இதற்காக தனியாக படித்து    பயிற்சி பெற வேண்டிய நிலை.

 

நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நாடெங்கிலும் துவங்கி *வியாபாரம்* சக்கை போடு போடுகிறது. பல பள்ளிகளில் பள்ளிப்படிப்போடு நீட் பயிற்சி வகுப்பும் நடத்துகிறார்கள். நீட் தேர்வு பயிற்சிக்காக பல லட்சம்   கட்டணம் வசூலிக்கப்படுகிறது. *பள்ளி இறுதி தேர்வு தயாராகவே நேரம் இல்லாத போது  நீட் தேர்வு மாணவர்களை பயமுறுத்துகிறது.* 

 

ஒரு மாணவர் மூன்று முறை  மட்டுமே முயற்சி செய்ய முடியும் என்று இருப்பதால் தேர்வு நெருங்கும் போது மிகுந்த மன உளைச்சலுக்கும்   அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள்.

 

தற்கொலை செய்திகள் வரும் போதெல்லாம் அது கோழைத்தனம்  என்று கடந்து விடுவதால் ஒரு போதும் தீர்வு காண முடியாது.

*ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னால் உள்ள சமூக காரணிகளை அதை மாற்ற முயல்வதுமே முறையான அணுகுமுறையாக* இருக்க முடியும்.

 

*செவ்வானம்*

 

*தமிழகத்தில் மட்டும் ஏன் தற்கொலைகள்*

 

தோழர் தர்மலிங்கம் அக்கறையோடு கருத்துக்களை முன் வைத்துள்ளார். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான பகிர்வு

 

தமிழகத்தில் மட்டும் ஏன் தற்கொலைகள் என்று ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள். இதன் பொருள், இம் மரணங்கள் நீட்டை முன்னிட்டு அல்ல என்ற கருத்தை கொஞ்சமும் மனச் சாட்சி இன்றி உருவாக்க முயல்கிறார்கள்

 

எந்த மாநிலத்தில் சாதாரண ஏழை எளிய மக்கள் சமுக நீதியின் பயன்களை கூடுதலாக பெற்றுள்ளார்களோ அங்கு அவை அபாயத்திற்குள்ளாகும் போது ஆத்திரமும், ஆற்றாமையும் ஒரு சேர எழும். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சமுகத்தின் பல தளங்களில் உயர்வது மற்ற மாநிலங்களை விட இங்குதானே அதிகம் நிகழ்ந்திருக்கிறது. நுழைவுத் தேர்வு ஒழிக்கப்படுவது, இட ஒதுக்கீட்டிற்கான விழிப்பு எல்லாம் இருக்கிற இடத்தில் இத்தகைய இரு வேறு உணர்வுகளும் எழாமல் எப்படி இருக்கும்! ஆகவே தமிழகத்தில் மட்டும் ஏன் அதிக எதிர்ப்பு, ஏன் தற்கொலைகள் என்ற கேள்வி அர்த்தமற்றது. தவறான அர்த்தம் கொடுக்கும் நோக்கமுள்ளவை

 

ஆத்திரம் மிகுபவர்கள் போராட்ட களத்திற்கும், ஆற்றாமை மிகுபவர்கள் விரக்தி முடிவுகளுக்கும் செல்வது நடந்தேறுகிறது. இரண்டின் பின்னாலும் உள்ள நியாயம் முக்கியம். இடதுசாரி, ஜனநாயக, சமுக நீதி, முற்போக்கு இய்க்கங்களுக்கு ஓர் கடமை உள்ளது

 

ஆற்றாமைகளை ஆத்திரமாக மாற்றுவதும், கயிறைத் தேடும் அருமை இளைஞர்களை நம்பிக்கை தந்து களத்திற்கு கொண்டு வரவேண்டியதும் அவசியம்

 

நல்ல விவாதத்தை துவக்கிய தர்மலிங்கத்திற்கு நன்றி.

 

-          தோழர் கே.சுவாமிநாதன், துணைத் தலைவர்,

-          தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு