Showing posts with label சமூகம் மத நல்லிணக்கம். Show all posts
Showing posts with label சமூகம் மத நல்லிணக்கம். Show all posts

Tuesday, August 27, 2013

“ராமனை வைத்து அரசியல் பண்ணாதீர்கள்.”

தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன், தனது முகநூல்
சுவரில் எழுதியுள்ள அருமையான கட்டுரை. 

ராமனை வைத்து அரசியல் செய்யாதே என்று ராமன் என்ற 
பெயருடைய நானே எழுதுவது சுவையாக உள்ளதல்லவா?

என் பெற்றோர் சூட்டிய பெயர் ராமன் என்பதால் இதிகாச ராமனை
நான் போற்ற வேண்டுமா என்ன? அல்லது இதிகாச ராமனை
யாராவது தூற்றினால் அது என்னை பாதிக்குமா என்ன?

என்னை தூற்ற வேண்டும் என்று நினைக்கிற சிலர் இதிகாச
ராமனை தூற்றினால் அது அவனுக்கு பொருந்துமா என்ன?

என்ன குழப்பமாக உள்ளதா?

குழப்பத்தை விட்டு விட்டு கட்டுரையை படியுங்கள்


“ராமனை வைத்து அரசியல் பண்ணாதீர்கள்.”


- அ.குமரேசன்

அயோத்தி நகரத்தைச் சேர்ந்த சாதுக்கள் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர்களுக்கு இப்படி வலியுறுத்தியிருக்கிறார்கள்.

விஎச்பி அமைப்பினர் அயோத்தியில் சவுராஸி கோஸ் பரிக்ரமா என்ற பெயரில் அயோத்தியில் ஞாயிறன்று (ஆகஸ்ட் 25) தொடங்கவிருந்த பாத யாத்திரை திட்டத்தை இந்த சாமியார்களும் கோவில் பூசாரிகளும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட அரசு அனுமதிக்க வேண்டும் என்பது இந்த பரிக்ரமாவின் ஒரு கோரிக்கை.

மசூதிக்குள் முன்பு “சுயம்புவாக” தனது சிலையை உதிக்க வைத்த பகவான் ராமனால் தனக்கொரு கோவிலையும் சுயம்புவாக எழ வைக்க முடியாதா? எதற்காக அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து அதற்கொரு பரிக்ரமா? அட ராமா!

பாரம்பரியமாக இப்படிப்பட்ட பரிக்ரமா நிகழ்ச்சிகள் ஏப்ரல், மே மாதங்களில்தான் நடைபெறும். திடீரென ஒரு புதிய பெயரில் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் இதை நடத்தத் திட்டமிட்டதற்கு வழிபாடு சார்ந்த போலிக்காரணங்களைச் சொல்லிக்கொள்கிறார்கள். உண்மை நோக்கம் விரைவில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இந்து மக்களிடையே மதவெறி உணர்வைத் தூண்டிவிடுவதே. மோடி மூளைச்சலவைப் பிரச்சாரம் உள்ளிட்ட உத்திகள் எதுவும் எதிர்பார்த்த பலனைத் தராது என்பது புரிந்துவிட்டதால், இப்படியொரு மதவாதப் பாதையில் பரிக்ரமா நடத்தும் திட்டம்.

செப்டம்பர் 13 வரை நடைபெற இருந்த இந்த யாத்திரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட் ஏழு மாவட்டங்கள் இஸ்லாமிய மக்கள் மிகுதியாக வாழும் பகுதிகள். இதற்கு மேலும் இவர்களது சூழ்ச்சித்திட்டத்திற்கு சாட்சியம் வேண்டுமா?

ஒவ்வொரு ஆண்டும் பரிக்ரமா ஏற்பாடு செய்கிற குழுவின் தலைவரான மஹந்த் ஞான்தாஸ், “நான் 10 வயதிலிருந்து பரிக்ரமாவில் பங்கேற்று வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியில் தொடங்கி பைசாக் நவமியில் பரிக்கரமா முடியும். இந்த ஆண்டு அதை சாதுக்கள் சரியான நேரத்தில் ஏற்கெனவே நடத்திவிட்டார்கள்,” என்று கூறியிருக்கிறார்.

“இது மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து தேர்தல் வாக்குகளைத் திரட்டுகிற முயற்சிதான்,”, என்கிறார் மஹந்த் ஜூகல் கிஷோர் சாஸ்திரி. இவர் விஎச்பி அமைப்பின் செயலாளராக இருந்து பின்னர் அதிலிருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“கடந்த 20 ஆண்டுகளில் விஎச்பி மக்கள் ஆதரவை இழந்துவிட்டது. சிலர் மட்டுமே அதன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். அதன் இந்த மதவெறித் திட்டத்திற்கு அயோத்தி மக்கள் ஒத்துழைக்கவில்லை. அவர்களைப் பாராட்டியாக வேண்டும்,” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

“சில சுயநல சக்திகள் சாதுக்களைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கின்றன. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கப்போகிறதோ அதைத்தான் நாங்கள் மதிப்போம், பின்பற்றுவோம்,” என்று ராம ஜென்மபூமி அமைப்பின் தலைமைப் பூசாரி மஹந்த் சத்யேந்திரா தாஸ் கூறியுள்ளார். அரசு நிர்வாகம் பரிக்ரமா யாத்திரையைத் தடுத்து நிறுத்தியதையும் இந்த சாமியார்கள் வரவேற்றிருக்கிறார்கள்.

1992ல் இதே போன்று நடந்த ரதயாத்திரை, அதையொட்டி அரங்கேற்றப்பட்ட கொடூரமான வன்முறைகளையும், இன்றளவும் அயோத்தியில் கோவில் கட்டுவது தொடர்பாகக் கிளறிவிடப்படும் பதற்ற நிலைமைகளையும் மறக்க முடியுமா? பாஜக கூட்டணி மத்திய ஆட்சியதிகாரத்திற்கு வர முடிந்ததில் இந்த மதவாத அடையாள அரசியலுக்குப் பெரும் பங்குண்டு.

பகுத்தறிவாளர்களுக்குக் கடவுளும் இல்லை, மதமும் இல்லை. ஆனால் மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளை மதிக்கிறோம். அந்த நம்பிக்கைகளை வெறியாக மாற்றும் சூதுகளை எதிர்க்கிறோம் - எந்த மதமாக இருந்தாலும்.

ஆன்மீகப் போர்வை போர்த்திய அரசியல் சூழ்ச்சிகளை, எங்கள் வீட்டிற்கு இன்று காலையில் கூழ் கொடுத்துச் சென்ற எதிர்த்தெரு படவட்டம்மன் கோவில் பக்தர்களும், சென்ற வாரம் ரமலான் கஞ்சி கொடுத்தனுப்பிய பக்கத்துத்தெரு ரஹமத் மசூதி அன்பர்களும், கிறிஸ்துமஸ் கேக் அனுப்ப இருக்கிற தேவாலய சகோதரர்களும் முறியடிப்பார்கள்.

Sunday, November 18, 2012

மருத்துவர் ஐயா ,பூசணித் தோட்டத்தையே ஒரு பிடி சோற்றில் மறைக்க முயல்கிறார்

தர்மபுரி கலவரத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும்
சம்பந்தமே இல்லையென்று கூசாமல் பொய்
சொல்கிறார் மருத்துவர் ஐயா.

தமிழகத்தில் ஜாதிய உணர்வுகளை அரசியல் 
ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டதில்
முக்கிய இடம் இவருக்கே உண்டு.

தனது சமுதாயத்திற்கு கூட எதுவும் செய்யாமல்
திமுக போல பாமக வையும் குடும்பக் கட்சியாக
மாற்றியவர் என்ற பெருமையும் உடையவர்.

ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பையன்  மேல்
ஜாதிப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது
மோசடி காடுவெட்டியின் குரலை இவரும்
எதிரொலித்து விட்டார்.

இதற்காக திருமண வயதை உயர்த்த வேண்டும்
என்று கோரிக்கை வேறு வைக்கிறார். ஹரியானா
கட்டாயப் பஞ்சாயத்துக்காரர்களுக்கும்  இவருக்கும்
பெரிய வித்தியாசமில்லை. இருவரும் பெண்கள்
சுதந்திரத்திற்கு எதிரானவர்கள்தான்.

இப்படி பொய் பேசிக் கொண்டிருப்பதால்தான்
மருத்துவர் ஐயாவின் தளம் கரைந்து கொண்டே
இருக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொள்வது
நலம்.
 

Wednesday, June 27, 2012

சபாஷ் ஜெயலலிதா




இன்று தமிழக அரசு எடுத்துள்ள ஒரு முடிவு நிஜமாகவே பாராட்டத் தக்கது. பாலியல் கொடுமைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வது, அவர்களது சான்றிதழ்களை ரத்து செய்வது ஆகிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

பாலியல் கொடுமைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவது பற்றிய புகார்கள் சமீப காலத்தில் அதிகரித்து வருகின்றது. மதுரை மாவட்டம் பொதும்புவில் ஆரோக்கியசாமி என்ற தலைமை ஆசிரியர் பல ஆண்டுகளாக  ஏராளமான சின்னஞ்சிறு மாணவிகளை சீரழித்துள்ளான். ஆனால் அவன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் தோழர் பிருந்தா காரத் அங்கே வரவேண்டியிருந்தது. உயர்நீதி மன்றம் கடுமையாக குட்டியாக பின்பும் காவல்துறை அசையவில்லை.

ஐந்து வயது, ஆறு வயது சிறுமிகளிடம் கூட தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் கூட உண்டு. தெய்வத்திற்கு சமமாக மதிக்கப்பட்டும் ஆசிரியர் இனத்தில் இப்படி கேடு கெட்ட புல்லுருவிகளும் உண்டு. பல சமயம் எவ்வித நடவடிக்கையும் கிடையாது, சில சமயம் மாறுதல் என்பது மட்டுமே தண்டனையாக இருக்கும்.

இப்படிப்பட்ட சூழல் நிலவும் நேரத்தில் ஆசிரியர் இனத்தையே களங்கப் படுத்தும்  அற்பப் பதர்களுக்கு  கடுமையான தண்டனை என்பது மிக மிக அவசியமான ஒன்று.

இது முறையாக அமுலானால்  பல தவறுகள் குறையலாம். எனவே தமிழக முதல்வரை மனமாற பாராட்டுகிறேன்.

என்ன, ஜெ எப்போதாவதுதான், அரிதாகத்தான் நல்ல முடிவுகளை எடுக்கிறார். பெரும்பாலான நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராகத்தான் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்...

Friday, December 9, 2011

இந்த உணர்வை எந்த கொம்பனாலும் கும்பலாலும் மாற்ற முடியாது.



இன்று ஒரு நண்பரின் முக நூலில் பார்த்த புகைப்படம் கீழே.

இந்தியாவின்  மத நல்லிணக்கத்திற்கு  இதை விட ஒரு 
சிறந்த உதாரணம்  இருக்க முடியுமா? 


எத்தனை  மத வெறிக்கும்பல்  முயன்றாலும்  இந்த 
உணர்வை  மாற்ற முடியாது.