புதுகை வலைப்பதிவர் விழா பற்றிய எனது முந்தைய பதிவுகளில்
அற்புதமான ஏற்பாடுகளை அர்ப்பணிப்புணர்வோடு செய்திருந்த விழாக் குழுவினரின் துல்லியமான ஏற்பாடுகள், கடுமையான உழைப்பு பற்றி பாராட்டியிருந்தேன்.
விக்கிபீடியா ரவிசங்கர், தமிழ் இணையக் கலவிக் கழகத்தின் மா.தமிழ்ப்பரிதி, அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா அவர்களின் உரைகளை பகிர்ந்து கொண்டிருந்தேன்.
ஓவியத்தால் மெருகேற்றப்பட்டிருந்த கவிதைகளை படம் பிடித்து பதிவேற்றியிருந்தேன்.
எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் உரை பற்றி எழுதி காணொளியின் இணைப்பும் அளித்திருந்தேன்.
இவை மட்டுமல்ல சிறப்பு. வேறு ஒன்றுதான் என்றும் சொல்லியிருந்தேன்.
வலைப்பதிவர் விழாவை சிறப்பான வெற்றியாக்கியது அங்கே முழுமையாக சங்கமித்திருந்த வலைப்பதிவர்கள்தான்.
வலைப்பக்கம் எழுதுவது பெரும்பாலும் பொழுது போக்கிற்குத்தான். நம் கருத்துக்களை பறிமாறிக் கொள்ளவும் நம் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வடிகாலாகவும்தான். எந்த வித பொருளாதார ஆதாயமும் இல்லாமல் நமது எழுத்துக்களை சுதந்திரமாக முன்வைப்பதற்கான தளம் என்பதுதான் நம்மை வலைப்பக்கத்திற்கு ஈர்த்தது.
பல்வேறு கருத்துக்கள் உள்ளவர்கள், சித்தாந்த, சமூகப் பின்னணி உள்ளவர்கள், மாறுபட்ட குணாம்சம் கொண்டவர்கள் ஆகியோரின் சங்கமமாக வலைத்தளம் உள்ளதென்றால் அவர்கள் அத்தனை பேரும் சங்கமித்த சிறந்த தருணமாக வலைப் பதிவர் திருவிழா அமைந்திருந்தது.
கணிணியில் யாருடைய எழுத்துக்களை படிக்கிறோமோ, யாருடைய எழுத்துக்களால் சிலிர்த்துப் போயிருந்தோமோ, நம்முடைய எழுத்துக்களையும் படித்து பின்னூட்டம் எழுதுகிறார்களே என்று மகிழ்ந்திருந்தோமே, அவர்களையெல்லாம் ரத்தமும் சதையுமாக நேரில் பார்க்க கிடைத்த வாய்ப்பை விட மிகச் சிறப்பானதாக வேறு எந்த அம்சத்தைச் சொல்ல முடியும்?
இந்த விழாவிற்காக வந்தவர்கள் எத்தனையெத்தனை பேர்.....
அமெரிக்காவிலிருந்து ஒருவர், டெல்லியிலிருந்து சிலர், கேரளாவில் இருந்து சிலர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து என்று நூற்றுக்கணக்கான வலைப்பதிவர்கள் வந்தது "வலைப்பக்கத்தில் எழுதுவது வெறும் பொழுது போக்கல்ல, எங்கள் வாழ்வின் ஒரு பகுதி" என்ற உணர்வில்தான் என்று தோன்றியது.
ஐவர் ஐவராய் அறிமுகம் செய்து கொண்ட போது "ஆஹா, இவர்தானா அது! இவர் எழுதியதை நாம் படித்திருக்கிறோமே" என்றதொரு நேசம் உடனடியாக வந்தது. எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே வந்திருக்கும் என்றே நம்புகிறேன்.
அனைவரோடும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் நிகழ்ச்சிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் கொஞ்சம் தயங்கினேன். ஆனாலும் கூட சில பதிவர்களோடு அறிமுகம் கிடைத்தது.
"மீசை வைத்த குழந்தையப்பா" என்ற பாடலுக்கு பொருத்தமான திரு கரந்தை ஜெயகுமார் அவர்களை சந்தித்து சிறிது நேரம் பேச முடிந்தது. அவரது அன்பின் அடையாளமாக அவர் அன்று வெளியிட்ட நூலை எனக்கு அளித்தார். அது மட்டுமல்ல நான் அளித்த எனது நூலையும் அவரது வலைப்பக்கத்தில் பிரசுரித்து பெருமை சேர்த்துள்ளார்.
நெல்லை திரு சுப்ரா அவர்களோடுதான் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
திருப்பதி மஹேஷ் அவர்களை மீண்டும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பேருந்தில் முன்பதிவு செய்ததை படித்தேன் என்று சொல்லி அசத்தினார்.
வேலூர் அன்பே சிவம் அவர்களை திரு விசுவாசம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு புதுகையில்தான் சந்தித்தேன்.
நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு திரும்பிய போது பெரியவர் திரு புலவர் ராமானுஜம் அழைத்து கை கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது.
முதலிடத்தில் நீண்ட நாட்கள் இருந்து, மீண்டும் அதைக் கைப்பற்றப் போகும் திரு ஜோக்காளி அவர்கள் என்னை அழைத்து நானும் ஒரு காலத்தில் சி.ஐ.டி.யு சங்கத்தில் பொறுப்பாளராக இருந்தவன் என்று கூறியது புதிய செய்தி.
கரூர் பூபதி என்ற தோழர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
திரு தமிழ் இளங்கோ அவர்களோடு அறிமுகம் செய்து கொண்ட போது "உங்க எழுத்துக்களைப் பார்த்து நீங்க ரொம்பவும் வயசானவரா, கம்யூனிஸ்ட் கரை போட்ட வேஷ்டி கட்டிக் கொண்டு வருவீங்க என்று எதிர்பார்த்தேன். இவ்வளவு இளைஞராக இருப்பீங்க என்று நினைக்கவில்லை" என்று சொன்ன போதும் மனம் கொஞ்சம் குளிர்ந்துதான் போனது.
தோழர் முத்து நிலவனை மதிய உணவு வேளையின் போதுதான் பார்த்து பேச முடிந்தது. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களை வீட்டிற்குப் புறப்படும் வேளையில்தான் பார்த்து கை கொடுக்க முடிந்தது.
தில்லையகத்து க்ரானிக்கல்ஸ் கீதா அவர்களைப் பார்த்து "வேலூரில் பார்த்தது நினைவில் உள்ளதா?" என்று கேட்க முடிந்தது.
இந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன் என்பதற்கான சான்றாக விழாவில் அறிமுகம் செய்து கொண்ட போது எடுத்த புகைப்படத்தை தோழர் முத்து நிலவன் தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார், அதுவும் பிரபல பதிவர் (?) என்ற அறிமுகத்தோடு.
நாம் அனைவரும் தமிழ்ப் பதிவர்கள் என்ற உணர்வோடு ஒரு விடுமுறை நாளை பதிவர் விழாவிற்காக ஒதுக்கி புதுக்கோட்டைக்கு பயணம் செய்தது என்பதுதான் வலைப்பதிவர் விழாவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.
இந்த விழாவிற்குப்பிறகு பலர் மீண்டும் தீவீரமாக எழுதி வருவது இந்த விழா உருவாக்கியுள்ள தாக்கம்.
மீண்டும் சந்திக்கும் போது இன்னும் அதிகமான தமிழ்ப்பதிவர்கள் உருவாகியிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு புதுகை வலைப்பதிவர் விழா குறித்த பதிவுகளை நிறைவு செய்கிறேன்.
பின் குறிப்பு ஒன்று : இந்த விழாவில் கண்டிப்பாக சந்திக்கலாம் என்று நம்பியவர் பெரியவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்தினவேல் அவர்கள். ஆனால் அவர் வராதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.
பின் குறிப்பு இரண்டு : திரு தமிழ் இளங்கோ என்னை இளைஞர் என்று கூறியதை பெருமையாக என் மனைவியிடம் கூறினேன். அவருடைய பதிலோ "அவர் ஒரு சபை நாகரீகத்திற்காகக் கூறியிருப்பார். அடுத்த வருடம் உங்களுக்கு ஐம்பது வயதாகி விடும் என்பதை மறந்து விட வேண்டாம்" என்று வந்து விழுந்தது.