Monday, December 31, 2018

நன்றி சொல்லி 2018 ஐ . . .





அவர்களால்தான் சாத்தியமானது . . .

























கஜா புயல் நிவாரண அனுபவத்தை என்னமோ தொடர்ச்சியாக எழுத இயலவில்லை. அதனால் இந்த வருடத்தின் இறுதிப் பதிவை எங்கள் தஞ்சைக் கோட்டச் சங்கத்திற்கு நன்றி சொல்லி நிறைவு செய்ய விழைகிறேன்.

புயல் தாக்கி கிட்டத்தட்ட  நான்கைந்து நாட்கள் ஆன பின்பே நிதி தருமாறு எங்கள் தோழர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி சேரும் என்றுதான் எதிர்பார்த்தோம். அப்படித்தான் எங்கள் தஞ்சைக் கோட்டச்சங்கத்திடமும் கூறி இருந்தோம்.

ஆனால் ஒரு கிளையை இன்னொரு கிளை மிஞ்சுவது என்று நிதி குவிந்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து எழுபது ஆயிரத்தை தொட்டது.

நிவாரணப் பொருட்களை வேலூரில் வாங்கி எடுத்து வருவதா என்றும் என்ன பொருட்கள் வேண்டும் என்றும் கேட்டதற்கு 

அனைத்துப் பொறுப்புக்களையும் தஞ்சைக் கோட்டத் தோழர்களே சுமந்து கொண்டார்கள்.

பொருட்களை வாங்குவது,
அவற்றை ஒழுங்கமைப்பது,
எந்தெந்தப் பகுதிகளுக்கு என்ன அளிப்பது,
பயனாளிகளை தேர்ந்தெடுப்பது,
அந்த பகுதியில் உள்ள தோழர்களோடு ஒருங்கிணைப்பது,
அந்த பகுதிகளுக்குச் சென்று வினியோகிப்பது,

என்று அனைத்து பணிகளையும் அவர்களே பார்த்துக் கொண்டார்கள். எங்கள் கோட்டத்திற்கு மட்டுமல்ல, எங்களுக்கு முன்பாகச் சென்ற இதர கோட்டங்களுக்கும்தான். கிட்டத்தட்ட இருபது நாட்கள் தஞ்சைக் கோட்டத் தோழர்கள் இதே பணியாகத்தான் இருந்தார்கள்.

பட்டுக்கோட்டை கிளைத் தோழர்களின் பணி மகத்தானது. பட்டுக்கோட்டை கிளை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் அறை நிவாரணப் பொருட்களின் கோடவுனாகவே மாறி இருந்தது.

கடைகளில் இருந்த பொருட்களை இறக்கி வைத்து பேக் செய்வது,
பின் நிவாரணப் பணி வாகனத்தில் ஏற்றுவது,
பின்பு குறிப்பிட்ட இடத்தில் அதை இறக்கி வினியோகிப்பது போன்ற அனைத்து  நிவாரணப் பணிகளையும் அவர்களே பார்த்துக் கொண்டார்கள்.

தஞ்சைக் கோட்டச்சங்கத்தின் தலைவரும் தென் மண்டல துணைத்தலைவருமான தோழர் ஆர்.புண்ணியமூர்த்தி நிவாரணப்பணியினை முழுமையாக வழிகாட்டி எங்களோடு இருந்தார். தஞ்சைக் கோட்டத்தின் இளைய கோட்டப் பொறுப்பாளர் தோழர் விஜயகுமார் துல்லியமான திட்டமிடலோடு பணிகளை ஒருங்கிணைத்தார்.

தஞ்சைக் கோட்டத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் என்.சீனிவாசன் அன்று முழுதும் எங்களோடு இருந்தது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை.

பாளையம்
உதயசூரியபுரம்
நம்பிவயல்
திருவோணம்
பரவலாக்கோட்டை
சாந்தன் காடு

ஆகிய கிராமங்களில் உள்ள 715 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினோம். 

தஞ்சைக் கோட்டத் தோழர்களால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான எங்களின் மிகச் சிறிய பங்களிப்பு என்பது சாத்தியமானது. பாதிக்கப்பட்டவர்களிடம்  நேரடியாக செல்ல முடிந்தது.

அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைச் சொல்லி 2018 ம் ஆண்டின் இறுதிப் பதிவை நிறைவு செய்கிறேன்.

நாளை சந்திப்போம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நாளை கேரளத்தில் பிரம்மாண்டமாய் . . .



ஆர்எஸ்எஸ் - பாஜக மதவெறிக்கு எதிராக பிரம்மாண்டப் போர்


- கே.சண்முகம்






“நாங்கள் அசுத்தமானவர்கள் அல்ல” என்ற ஆவேச முழக்கத்துடன் ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் 2019 ஜனவரி 1 புத்தாண்டு அன்று, பழமைவாதிகளுக்கு எதிராக ‘வனிதா மதில்’ என மலையாளத்தில் கூறப்படும் “பெண்கள் சுவர்” அமைக்க உள்ளனர். மனிதச் சங்கிலி என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது அமைய இருப்பது ‘பெண்கள் சுவர்’ பிரம்மாண்டமான மதில். பொதுவாக கொடிய விலங்குகள், திருடர்கள் உள்ளே புகாமல் பாதுகாக்கவே சுவர் அமைக்கப்படுகிறது. அதைப் போலவே முற்போக்கு மறுமலர்ச்சி அடைந்துள்ள கேரளாவை நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுக்க முயற்சிக்கும் சாதி மதப் பழமைவாதிகள் மீண்டும் புகுந்து விடாமல் தடுப்பதற்கே இந்தச் சுவரை எழுப்புகிறார்கள் கேரளப் பெண்கள்.

காலங்காலமாக பெண்களுக்கு எதிராக, பெண்ணடிமைத்தனத்தை வலுப்பெறச் செய்யும் இழி சிந்தனை கொண்டவர்கள்,  பிஜேபி, சங் பரிவாரக் கும்பலின் தலைமையில் கேரளாவில் மீண்டும் தலையெடுக்க முயற்சிக்கும் இந்த காலகட்டத்தில், அவர்களுக்கு எதிராக வலுவான சித்தாந்த ரீதியாக நடைபெறும் இவ்வியக்கம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகிறது. இதே கேரளாவில் தான் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்ற ஆதிக்க சக்திகளின் ஆணவத்தை சமூக சீர்திருத்தவாதிகளின் தலைமையில் பெண்கள் அடித்து நொறுக்கினார்கள். பெண்களின் மார்பகங்களுக்கு வரி விதித்த அயோக்கிய ஆண்டைகளுக்கு எதிராக தனது மார்பகத்தையே வெட்டி வீசிய வீர மங்கைகளின் முற்போக்குக் கேரள மண்ணில் மீண்டும் இதுபோன்ற சனாதனவாதிகளையும், மதவெறியர்களையும் வளர விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகவே பிரம்மாண்டமான பெண்கள் சுவர் கம்பீரமாக எழ இருக்கிறது

 ஆர்.எஸ்.எஸ். காரர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்,“சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து, பக்தி, ஆசாரம் என பொய்க்காரணம் கூறி பிஜேபி – சங் பரிவார கும்பல்கள் மனித நாகரீகமற்ற முறையில் போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்துக்களை மத ரீதியாக அணி திரட்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையலாம் என்ற இவர்களின் கீழ்த்தரமான நோக்கமும், அதற்காக அவர்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டங்களும் மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்பட்டு வருகிறது.

கம்யூனிஸ்ட்டுகளின் கையில் காவல்துறை இருந்தால்…

சபரிமலைப் பிரச்சனையில் வெகுமக்களின் ஆதரவைப் பெறாத பாஜக கும்பலின் இப்போராட்டத்தைக் கேரள இடது முன்னணி அரசு திறம்படக் கையாண்டு வருகிறது. அவதூறு பிரச்சாரம் செய்து வரும் கும்பல்களுக்கு கேரள முதல்வர் திரும்பத் திரும்ப சொல்லி வரும் ஒரு விசயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னால் மட்டும் பல லட்சம் பெண்கள் அணி திரண்டுள்ளார்கள். இது போக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளின் பின்னால் லட்சக்கணக்கான பெண்கள் அணி திரண்டுள்ளனர். அவர்களில் ஒருவரைக் கூட சபரிமலைக்குச் செல்லுங்கள் என்று அரசு கூறவில்லை. காரணம் உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்சனையில் கேரள அரசு மிகுந்த அக்கறையுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட்டு வருகிறது. அதே நேரம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் பெண்கள் எவராவது சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமையாகிறது என்பதுதான்.

 சபரிமலையில் பெரிய அளவில் கலவரத்தைத் தூண்டி ரத்த ஆறு ஓடச் செய்யப் பல வழிகளிலும் முயற்சிக்கும் பிஜேபி, சங் பரிவாரக் கும்பலைக் காவல் துறையினர் மிகுந்த லாவகத்தோடு கையாண்டு வருகின்றனர். குறிப்பாக காவல்துறை கண்காணிப்பாளர் யதிஷ் சந்திரா ஐபிஎஸ் இப்போது இளைஞர்களின் ஹீரோவாகவே மாறிவிட்டார். அவரைப் பற்றி எழுதாத பத்திரிகைகள் குறைவு. கம்யூனிஸ்ட்டுகளின் கையில் காவல்துறை இருந்தால் எப்படிச் செயல்படும் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக கேரள காவல்துறையினரின் நடவடிக்கைகள் உள்ளது.

கேரள முதல்வரின் சீரிய முடிவு

இச்சூழலில் தான் சித்தாந்த ரீதியாக மக்களைத் திரட்ட“முற்போக்கு மறுமலர்ச்சி கேரளத்தை முன்னெடுத்துச் செல்வோம்” என்ற முழக்கத்தோடு கடந்த மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் சமூக மாற்றத்திற்காகப் போராடிய அமைப்புகள் அனைத்துக்கும் அழைப்பு விடுத்து எழுச்சிமிகு கூட்டத்தைக் கூட்டினார். இது மக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்,இடது ஜனநாயக முன்னணி கட்சிகளுடன் 197 அமைப்புகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் வலுவான ஆதரவைத் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் தான் ‘பெண்கள் சுவர்’ அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

வனிதா மதிலுக்கு வரவேற்பு

மக்கள் செல்வாக்குள்ள ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன அமைப்பின் (எஸ்.என்.டி.பி) தலைவர் வெள்ளாப்பள்ளி நடேசன், பெண்கள் சுவர் நிகழ்வின் கன்வீனராகத் தேர்வு செய்யப்பட்டார். இதில் முக்கிய விசயம் என்னவென்றால் இவர் சமீப காலம் வரை பிஜேபியோடு நெருக்கமாக இருந்தவர். சபரிமலை ஐயப்பன் கோவில் பிரச்சனையில் பிஜேபி,சங் பரிவாரத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து, முற்போக்கு சமூக நீதிக்காகப் போராடிய ஸ்ரீ நாராயண குரு வழியில் செல்லும் தங்கள் அமைப்பு பிஜேபி, சங்பரிவாரக் கும்பலின் பிற்போக்குத்தன நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்க முடியாது என்று கூறியே பிஜேபியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பிஜேபிக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. இவரையும் வசைபாடத் துவங்கினார்கள்.

இந்நிலையில் பெண்கள் சுவருக்குத் திட்டமிட்டவர்கள் கூட எதிர்பாராத வகையில் கேரளா முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள், இது தங்களின் உரிமையை மீட்கும் போராட்டம் என உணர்ந்து தாங்களாகவே பெண்கள் சுவருக்கு ஆதரவாக களத்தில் திரண்டு வருகிறார்கள். இது இவர்களை எதிர்ப்பவர்களுக்குப் அச்சத்தைக் கொடுத்துள்ளது. காரணம் இந்தச் சுவர் தங்களின் பழமைவாத பெண்ணடிமைத்தன, மதவெறி சிந்தனைகள் மீது விழுந்து நொறுக்கி விடும் என்ற பயத்திலும், உலகமே பேசப் போகும் சாதனையாக இது அமையப் போவதை நினைத்து எரிச்சலிலும், பிஜேபி,சங் பரிவார் கூட்டமும், காங்கிரசும், என்.எஸ்.எஸ். என்ற சாதிய அமைப்பும் இந்நிகழ்வை வலுவாக எதிர்ப்பதோடு, தங்களால் முடிந்த அளவு கொச்சைப்படுத்தியும், அவதூறு பரப்பியும் வருகிறார்கள்.

முற்போக்குத் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் ‘பெண்கள் சுவர்’
மிக முக்கியமான மூன்று கோசங்களை மட்டும் முன்னிறுத்தியே பெண்கள் சுவர் எழுப்பப்படுகிறது.

1. கேரளாவைப் பைத்தியக்காரர்களின் நாடாக மாற்ற அனுமதியோம்.
2. முற்போக்குக் கேரள மரபுகளை தகர்த்திட அனுமதியோம்.
3. ஆண்-பெண் பாலின சமத்துவத்தை உத்திரவாதப்படுத்துவோம்.

- இந்த முழக்கங்கள் கேரளா முழுவதும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “பெண்கள் சுவர்”நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறப் போகிறது. கேரளாவின் கடைசி எல்லையான காசர்கோடு முதல், தலைநகர் திருவனந்தபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் 620 கிலோ மீட்டர் நீளத்துக்கு பெண்கள் சுவர் அமைய உள்ளது. இதில் பெண்கள் மட்டுமே பங்கேற்பர். இந்தப் பெண்கள் தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் பெண்கள் சுவருக்கு அணி வகுக்கப்போகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக வரும் ஆண்கள் எதிர்புறம் நிற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த இயக்கங்களின் 30 லட்சம் பெண்கள் இச்சுவரில் இணைய உள்ளதாக கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், 50 லட்சத்துக்கும் மேல் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்நிகழ்வு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறப் போவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் சுவர் அமைப்பதற்காக வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் கோழிக்கோட்டிலும், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் ஆலுவாவிலும்,கோட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் ஆலப்புழையிலும் பெண்கள் சுவரில் இணைகிறார்கள்.

பிரமிக்கச் செய்யும் விரிவான ஏற்பாடுகள்

கேரளா முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் துவங்கி வார்டுகள் வரை சிறப்பான விளம்பரங்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகள், பிரச்சாரக் கூட்டங்கள், பேரணிகள், கலை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. டிச.10 அன்று ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைமையில் 15,000 மையங்களில் “பெண்கள் சங்கமம்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.முதலில் 30 லட்சம் வீடுகளைப் பெண்கள் குழுக்கள் நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார்கள். மீதமுள்ள 40 லட்சம் வீடுகளையும் டிச.27ம் தேதிக்குள் சந்தித்து முடிக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.2000 நடைபயணப் பிரச்சாரப் பேரணிகள் 2000 மையங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

25,000 ஸ்குவாடுகள் (குழுக்கள்) வெகுஜன அமைப்புகளைச் சார்ந்த பெண்களையும், பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களையும், பல்வேறு அரசு, தனியார் நிறுவன பெண் ஊழியர்களையும் இணைத்து பெண்கள் சுவர் வெற்றிக்காக முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார்கள். அனைத்து வீடுகளிலும் இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் முற்போக்கு தீபங்கள் ஏற்றப்பட உள்ளது.கல்லூரி வளாகங்களில் மாணவ-மாணவியரிடையே பெண்கள் சுவர் நிகழ்வு மிகுந்த எழுச்சியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக மாணவிகள் மிகுந்த ஆவேசத்தோடு களத்தில் இறங்கியுள்ளார்கள். தொடர் ஓட்டங்கள், கலை நிகழ்வு, மனிதச் சங்கிலி, பொது இடங்களில் பெரிய திரைகளில் கையொப்பம் பதிவது, ஓவியப்போட்டிகள் என பல வடிவங்களில் உணர்ச்சி மிகு பணியைச் செய்து வருகின்றனர்.மாணவர்களும் இளைஞர்களும் இணைந்து “யுவஜன சங்கமம்” மூலம் பெண்கள் சுவருக்கு ஆதரவாகப் பல நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.

தொழிற்சங்கத்தைச் சார்ந்த பெண்கள், உழைக்கும் பெண்கள், ஆசிரியைகள், அரசு ஊழியர்கள், பெண்கள் அமைப்புகள், திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள், சிறுபான்மையினர் - பெரும்பான்மையினர் என்ற பேதமின்றி லட்சக்கணக்கானோர் பெண்கள் சுவரில் இணைய உள்ளனர்.பெண்களுக்கு சனாதனவாதிகளால் இழைக்கப்பட்டக் கொடுமைகளை ஆங்காங்கே கலை நயத்துடன் சிலைகளாகவும், சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும் காட்சிக்கு வைத்துள்ளார்கள். இதில் ஒற்றை மார்பை அறுத்து எறிந்த படி நிற்கும் வீர மங்கை நங்கேலியின் முழு உருவச் சிலை அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்துகிறது.

எழுச்சிமிகு பாடல் குறுந்தகடு

“தாழ்ந்தவர்களல்ல நாங்கள் … அசுத்தமானவர்களல்ல நாங்கள்” என்ற பாடலும்,“எத்தனையெத்தனை சுவர்களைத் தகர்த்தெறிந்த நாங்கள் …எத்தனையெத்தனை கதிர்களை அறுத்தெறிந்த நாங்கள்” என்பது போன்ற உணர்ச்சி மிகு பாடல்களின் குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது. கேட்போரை உத்வேகப்படுத்தும் இப்பாடல்கள் கேரளா முழுவதும் கம்பீரமாக ஒலிக்கிறது.

நிக் உட் வருகை

அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற பத்திரிகையாளரும், புகைப்படக் கலைஞருமான நிக் உட் (Nick Ut)“நானும் உங்களோடிருக்கிறேன்” என்ற முழக்கத்தோடு பெண்கள் சுவரை வாழ்த்த வருகிறார்.இவர் வியட்நாம் யுத்த களத்தில் பத்திரிகையாளராகச் செயல்பட்ட போது 1972 ஜூன் 8 ம் தேதி வியட்நாமில் கொடிய நாபாம் குண்டுவீசப்பட்டது. இதன் வெப்பம் தாங்க முடியாமல் 9 வயது பெண் குழந்தை உள்ளிட்டோர் ஆடை இழந்து ஓடி வரும் புகைப்படம் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படத்தை எடுத்த இவருக்கு உயரிய “புலிட்சர்” விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேசியத் தலைவர்கள் வருகை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களான பிருந்தா காரத் திருவனந்தபுரத்திலும், சுபாஷினி அலி எர்ணாகுளத்திலும், ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே மலப்புறத்திலும் பங்கேற்கிறார்கள். பல்வேறு பெண்கள் அமைப்புகளின் மாநில, தேசியத் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

எதிர்க்கும் கட்சிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள்

இந்த பெண்கள் சுவரைத் தகர்த்திட பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. அவர்களோடு காங்கிரசும் கை கோர்த்து பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். காங்கிரசின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலாவும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் பெண்கள் சுவரை “சாதிச் சுவர்” என்று கொச்சைப்படுத்தி வரும் சூழலில் பல காங்கிரஸ், பிஜேபி தலைவர்கள் அக்கட்சிகளை விட்டு வெளியேறி வருகிறார்கள். பலர் கட்சித் தலைமைக்கு எதிராகக் களத்தில் இறங்கியுள்ளார்கள். 

இவர்களில் முக்கியமானவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், தலித் பெடரேஷன் மாநிலத் தலைவருமான ராமபத்ரன் கூறுகையில், “முற்போக்கு மறுமலர்ச்சி கேரளாவை வலுப்படுத்தும் பெண்கள் சுவரில் தலித் பெடரேஷனைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்வார்கள். எங்களால் இதிலிருந்து விலகி நிற்க முடியாது.இதில் பங்கேற்றால் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கி விடுவோம் என்ற மிரட்டல்கள் என்னிடம் வேண்டாம். சபரிமலைப் பிரச்சனையைச் சொல்லி மத வெறியர்களின் வெறியாட்டத்தை உணர்வுப்பூர்வமாக தடுப்பதற்காகவே முதல்வர் பினராயி விஜயன் அனைத்து முற்போக்கு சக்திகளையும் அழைத்தார். பெண்கள் சுவரில் பங்கேற்கும் அமைப்புகளை சாதி அமைப்புகள் என்று காங்கிரஸ் தலைமை நினைக்கிறதா என்பதை தைரியமிருந்தால் வெளிப்படுத்த வேண்டும்” என்று கூறினார். மேலும் அவர், “இந்த பெண்கள் சுவருக்கு பெருகி வரும் ஆதரவைப் பார்த்தால் ஒரு கோடிப் பெண்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இது கேரளாவில் மட்டுமல்ல... இந்தியாவில் மட்டுமல்ல...உலகம் முழுவதும் உள்ள முற்போக்காளர்களின் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்” என்றும் கூறினார்.

பெருகி வரும் ஆதரவு

ஆர்ச் பிஷப் கார்டினல் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் இவ்வியக்கத்தில் தாங்களும் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இதைப் போல மேலும் பல அமைப்புகளும் இதில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன. எல்லா மதத்தில் உள்ள பெண்களும், அனைத்து சமுதாயங்களில் உள்ள பெண்களும், தங்கள் விடுதலைக்கான போராட்டம் இது என்பதை உணர்ந்து இவ்வியக்கத்தில் கலந்து கொள்ள தன்னார்வத்துடன் விருப்பம் தெரிவித்துள்ளனர். அனைத்து மதத்தவரும் சேர்ந்து மதச் சார்பற்ற தன்மையையும், பெண்களின் உரிமையையும் ஒரே குரலில் ஓங்கி ஒலிக்க உள்ளனர்.

கேரள முதல்வரின் சூளுரை

கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறம்போது,“முற்போக்கு மறுமலர்ச்சி கேரளாவை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் அனைத்து சக்திகளும் இவ்வியக்கத்தில் இணைய வேண்டும். பல அமைப்புகளில் உள்ள பெண்கள், பெண்களின் சமத்துவத்திற்காக நடைபெறும் இப்போராட்டத்தில் பங்கேற்க சாதி-மத வேறுபாடின்றி தாங்களாகவே பெரிய அளவில் அணி திரண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதே பெண்கள் சுவரை எதிர்ப்பவர்களுக்கு மிகுந்த அச்சத்தைக் கொடுக்கிறது. இந்த பயத்திலிருந்து உருவாவதே பொய்ப் பிரச்சாரங்களும், தரக்குறைவான வார்த்தைகளும். பெண்கள் சுவர் பெண்களுக்கு மட்டுமானது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். 

பெண்கள் சுவருக்காக அரசின் கஜானாவிலிருந்து பணம் வாரி இறைக்கப்படுகிறது என்ற தவறான பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்படுகிறது. ஆனால் இதற்காக ஒரு ரூபாய் கூட அரசு செலவிடவில்லை என்பதே உண்மை. இதை நீதிமன்றத்திலும் தெளிவுபடுத்தியுள்ளோம். தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டிருந்தால் கொஞ்ச பேர்களாவது நம்பி வராமல் இருந்து விடுவார்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் எண்ணம் ஈடேறப் போவதில்லை. இவர்களின் எதிர்ப்பிலிருந்தே இவ்வியக்கம் மாபெரும் வெற்றியடையப் போகிறது என்று உறுதியாகியுள்ளது”என்றார். கேரள முற்போக்கு வரலாற்றில், தற்போது நடைபெற இருக்கும் ‘வனிதா மதில்’ - “பெண்கள் சுவர்” பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம்.

கட்டுரையாளர்: தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர்.
தகவல் உதவி: தேசாபிமானி, கைரளி பீப்பிள் டிவி

நன்றி - தீக்கதிர் 31.12.2018

கடைசி நாளில் ஒரு காமெடி



2018 ஆம் ஆண்டின் இறுதி நாளில் ஒரு காமெடிக் காட்சியை பார்த்து சிரியுங்கள்.

இந்த கூழைக்கும்பிடு கூட வழக்கமான நடிப்புதான் என்றாலும் நன்றாக சிரிக்க முடியும்.


Sunday, December 30, 2018

பெரும் புளுகாண்டி ஜெயமோகன்



ஜெயமோகன் தளத்தில் கடுமையான வசை இருந்ததாலும் காவிகள் கலாட்டா செய்ததாலுமே தோழர் சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய “தாண்டவபுரம்” நாவலை கடந்த வருடம் சென்னை புத்தக விழாவில் வாங்கினேன்.

போன வாரம்தான் அந்த நூலை படித்து முடித்தேன். அந்த நூல் குறித்து எழுதும் முன்பாக தோழர் ஆதவன் தீட்சண்யாவால் “உளறுவாயன்” என்று அன்போடு அழைக்கப்படுகிற ஜெமோ, நாவல் குறித்து எழுதியதை மீண்டும் படிக்க, அந்த தளத்திற்கு மீண்டும் சென்றேன்.

அப்போதுதான் ஜெயமோகன் ஒரு மிகப் பெரிய புளுகாண்டி என்பதற்கான இன்னொரு ஆதாரம் அவரது தளத்திலேயே கிடைத்தது.

தோழர் டி.செல்வராஜ் மற்றும் தோழர் சோலை சுந்தரப்பெருமாள் ஆகியோருடைய நூல்களைப் பற்றி 2013 ம் ஆண்டில் வசை பாடுகிறார். வழக்கம் போல் கோல்கேட் பேஸ்ட் விளம்பரம் போல அழகியல் இல்லை, உள்ளுணர்வு இல்லை, உப்பு இல்லை, கரி இல்லை என்று திட்டுகிறார்.

ஆனால் அதுவே மூன்றாண்டுகள் கழித்து

சோலை சுந்தரப்பெருமாள் அல்லது டி.செல்வராஜ் எதையாவது பொருட்படுத்தும்படியாக எழுதிவிடமுடியும் என நான் நினைக்கவில்லை. ஆகவே அந்நூல்களைப் படிக்கவில்லை. படிக்கப்போவதுமில்லை

என்று பந்தா காண்பிக்கிறார்.

தேதி வாரியாக அவர் எழுதியதை படியுங்கள்.

14.01.2013

டி செல்வராஜ் மூத்த முற்போக்கு எழுத்தாளர். இருபதாண்டுகளுக்கு முன் நான் வாசித்தவற்றில் அவரது மலரும் சருகும், தேநீர் போன்றவை அந்தவகை எழுத்துக்களுக்குள் நல்லவை என்ற எண்ணம் இருந்தது

இப்போது வாசிக்கையில் பாவமாக இருக்கிறது. பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் கதைச்சுருக்கம் சொல்ல அதைக்கேட்டுப் பிள்ளைகள் எழுதிய கதைகள் போல. ஒரே மாதிரி சொற்றொடர்கள். ஒரே மாதிரி கதைப்போக்கு.

அவரது விருதுபெற்ற தோல் என்னும் நாவலை அவர் ஐம்பதுகளில் எழுதினார் என்ற எண்ணமே வந்தது. இலக்கியம் என்பதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

18.07.2013

சோலை சுந்தரப்பெருமாளின் நாவல் பெரும்சான்று. அதைப்பற்றி நான் ஏன் எழுதவில்லை என்று பலர் கேட்டனர். அது முதன்மையாக ஒரு நாவலே அல்ல. உள்நோக்கம் கொண்ட கீழ்த்தரமான ஜோடனை. கலையோ வாழ்க்கைப்பார்வையோ இல்லாதது

அத்துடன் அதில் தகவல்பிழைகள் என சொல்லமுடியாது, அது சொல்லும் எல்லா தகவல்களுமே பிழைதான்.


18.07.2016

சோலை சுந்தரப்பெருமாள் அல்லது டி.செல்வராஜ் எதையாவது பொருட்படுத்தும்படியாக எழுதிவிடமுடியும் என நான் நினைக்கவில்லை. ஆகவே அந்நூல்களைப் படிக்கவில்லை. படிக்கப்போவதுமில்லை. இந்தப்பகுதிகளை (அதாவது வழக்கம் போல, அவரே கேள்வி, அவரே பதில்) வாசிக்கையில் சீண்டும் நோக்குடன் திட்டமிட்டு எழுதப்பட்டது எனத் தெரிகிறது.

2013 ல் இரண்டு தோழர்களின் எழுத்துக்களைப் பற்றி கடுமையாக திட்டி விட்டு 2016 ல் அவர்களின் நூல்களை படிக்கவில்லை.  படிக்கப் போவதுமில்லை, என்று எழுதுவதிலிருந்தே தெரிகிறது ஜெயமோகன் ஒரு மிகப் பெரிய புளுகாண்டி என்று.

இதிலே எப்போது வாய் திறந்தாலும் “அறம், முறம்” என்று அளந்து விடுவதில் மட்டும் குறைச்சலே இல்லை.

Friday, December 28, 2018

அதிகாலையில் அந்த இரட்டையர் . . .

ஒரு அதிகாலைப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களில் சந்திரனும் சூரியனும்



அவரது கொலையின் பின்னே . . .





காவிகளால் கொல்லப்பட்ட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் அவர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பினை “கௌரி லங்கேஷ், தெரிவு செய்யப்பட்ட சொற்கள்” என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்தாண்டு வெண்மணியில் வாங்கிய நூல் இது.

மொத்தம் பத்து கட்டுரைகள் அடங்கிய நூல் இது.  மோடி ஆட்சியில் ஒடுக்கப்படும் பேச்சுரிமை, மாட்டரசியல், உ.பி தேர்தலுக்கு முன்பாக மத்தியப் பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறைக் கைதிகள், கால்நடை விற்பனை தடைச்சட்டத்தின் பின்னே உள்ள பொருளாதார அரசியல், நக்ஸலைட்- சி.ஆர்.பி.ஃஎப் மோதல்கள், பெரும் தெய்வங்களை உருவாக்கும் பின்னணி, இஸ்லாமியப் பெண்களின் துயரம், சித்தராமையா மீது செய்யப்பட்ட விஷமப் பிரச்சாரம் என்று பல தளங்களில் கட்டுரைகள் விரிகிறது.

லிங்காயத் மதத்தின் தோற்றமும் அதன் சீர்திருத்தக் கருத்துக்களும் எப்படி தந்திரமாக இந்து மதத்தால் நீர்த்துப் போக வைக்கப்பட்டது என்பது பற்றியும் தாங்கள் ஏன் தனித்த மதம் என்று லிங்காயத்துக்கள் போராட்டம் நடத்துகின்றனர் என்பதும் இதனால் யெடியூரப்பாவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி  பற்றியுமான கட்டுரை மிக முக்கியமானது.

அந்த போராட்டத்தின் கருத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமானவராக கௌரி லங்கேஷ் இருந்தார் என்பதால்தான் அவரை காவிகள் குறி வைத்தார்களோ என்று இந்த நூலைப் படிக்கையில் தோன்றியது.