Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, August 26, 2025

அது கொலைகாரக் கூட்டம்யா அமித்து

 


துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா அணி சார்பில் போட்டியிடும் நீதியரசர் சுதர்ஷன் ரெட்டி, நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர் என்று பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளி அமித்து சொல்லி வருகிறார்.

அதற்கு என்ன காரணம்?

"சல்வா ஜூடும்" என்ற அமைப்பை தடை செய்து அவர் தீர்ப்பளித்தார் என்பது குற்றச்சாட்டு.

சல்வா ஜூடும் என்பது ராணுவத்தின் பிரிவா?

மாநில காவல்துறையின் பிரிவா?

இல்லை மத்திய மாநில கூட்டுப்படையா?

மாநிலங்களின் கூட்டுப் படையா?

இல்லை.

இவை எதுவுமே இல்லை.

சத்திஸ்கர் மாநில பெரும் நிலவுடமையாளர்கள் உருவாக்கிய அடியாள் படை, கூலிப் படை

அவர்களின் முக்கிய இலக்கு மாவோயிஸ்டுகள் கிடையாது. பண்ணையார்களின் அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், போராடும் தலைவர்கள் ஆகியோரைக் கொல்வதுதான். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தனிப் படை என்று சொல்லிக் கொள்வார்கள். அது வெறும் கூலிப்படை. அவ்வளவுதான். சத்திஸ்கர் மாநிலத்தில் இயங்கிய அடியாள் கூலிப்படையின் பெயர் சல்வா ஜூடும் என்றால் பீகாரில் இயங்கிய கூலிப்படையின் பெயர் "ரண்வீர் சேனா" 

இவைகள் எல்லாம் மக்களுக்கு எதிரானவை, ஜனநாயகத்திற்கு எதிரானவை.

சல்வா ஜூடுமிற்கு எதிரான வழக்கில் சுதர்சன் ரெட்டியும் இன்னொரு நீதிபதியும் (அவர் பெயர் தெரியவில்லை) " மக்களை பாதுகாப்பது என்பது  அரசின் வேலை. அதை அவுட்சோர்ஸிங் விட முடியாது" என்று சொல்லித்தான் தடை செய்துள்ளனர். அதை நக்சலைட் ஆதரவு என்று திசை திருப்புவது பாஜகவின் வழக்கமான சின்ன புத்தி.



Saturday, August 23, 2025

அரசியல் காரணமெனில் ஆளுனருக்கு அருகதையில்லை

 


நேற்று காலை ஆங்கில இந்துவில் வெளியான செய்திதான் மேலே உள்ளது. 

ஜனாதிபதி, ஆளுனர்கள் மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் நிர்ணயம் செய்வதற்கு எதிராக ஜனாதிபதி கருத்து கேட்பது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒரு வாதம் வைக்கிறார்.

"அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஜனநாயகக் காரணங்களுக்காகவோ ஒரு ஆளுனர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்யலாம்."  என்று அவர் ஆளுனர்களை நியாயப் படுத்துகின்றார்.

ஆளுனர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர், அரசியல் சாசனத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டியவர். அரசியல் காரணத்திற்காக அவர் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதிக்கிறார் என்றால் அவர் அந்த பதவிக்கு அருகதையே இல்லாதவர்.

அப்படிப்பார்த்தால் எதிர்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுனர்கள் அனைவரும் அந்த பதவிக்கு அருகதையற்ற பொறுப்பற்றவர்கள்.

அப்படிப்பட்ட ஆட்களை துரத்தி விடவும் உச்ச நீதிமன்றம் ஏதாவது வழி செய்தால் நல்லது. . . .



Sunday, April 27, 2025

பட்டியல் போடலாமா இளைய (சங்கி)ராஜா?

 




இசையைத் தாண்டி வேறெதற்காவது இளையராஜா வாய் திறந்தால் அது அபஸ்வரமாகவே இருக்கிறது. 

மோடியைப் போல இந்தியாவுக்காக பாடுபட்ட பிரதமர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பட்டியல் போடலாமா என்று கேட்கிறார்.

மோடியைப் போல இந்தியாவை சீரழித்த பிரதமர்கள் யாரும் கிடையாது என்ற உண்மையை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சங்கியாக மாறியிருக்கிறார்.

விரிவாக ஒரு பட்டியல் நாளை நான் போடுகிறேன்.  அதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு மனம் இருக்குமா தெரியவில்லை.

அவருடைய வீழ்ச்சி மனதிற்கு வருத்தமாக இருக்கிறது.  இனி அவரால் மீள முடியுமா என்பது சந்தேகமே. . .


Wednesday, March 26, 2025

ஆட்டுக்காரன் நிலைமை பரிதாபம் . . .

 


நேற்று எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு நடந்துள்ளது. மோசடி வழக்கில் சிக்கிக்கொண்ட உறவினரை பாதுகாக்கவே இந்த சந்திப்பு என்று ஊடகங்கள் சொன்னாலும் கூட்டணி பேச்சுவார்த்தை பற்றியும் பேசப் பட்டுள்ளதாக சங்கிகள் நம்புகிறார்கள்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சிகண்டி போட்டுள்ள பதிவு கீழே.


அதிமுக கூட்டணிக்காக சங்கிகள் ஏங்குவது நன்றாக தெரிகிறது. அப்படி ஒரு கூட்டணி நிகழாது என்றும் நாம் சொல்ல முடியாது. 

அதிமுக- பாஜ்க கூட்டணி உருவானால் 

முன்பு அந்த கூட்டணி முறிய காரணமாக இருந்த ஆட்டுக்காரன் நிலைமை என்னாகும்?

அழகி படத்தில் மந்திரி பதவியையும் இழந்து ஆடைகள் கிழியும் அளவிற்கு அடி வாங்கிய பாண்டுவின் கதிதான் ஏற்படும்.

பாவம் ஆட்டுக்காரன் . . .

Tuesday, December 31, 2024

மோடியைப் போலவே துணை ஜனாதிபதியும் . . .

 


ரௌடி கவர்னராக இருந்து அதே குணாம்சத்தை துணை ஜனாதிபதி ஆன பின்பும் தொடர்கின்ற ஜகதீப் தன்கர்  தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மோடியைப் போலவே ஒரு காரணம் சொல்லியுள்ளார்.

மோடி தன் மீதான விமர்சனங்களுக்கு தான் ஏழைத்தாயின் மகன் என்பதால்தான் என்னை தாக்குகிறார்கள் என்று அனுதாபம் தேட முயற்சிப்பார்.

அதே பாணியில் துணை ஜனாதிபதியும் தான் ஏழை விவசாயின் மகன் என்பதால்தான் தன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளதாக ஒரு கண்ணீர்க் கதை எழுத முயன்றுள்ளார்.

தன்னுடைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள், பாரபட்சமான செயல்பாடுகள், அமைச்சர்கள் சொல்ல வேண்டிய பதில்களை அவரே சொல்வது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரைகளை அவைக் குறிப்புகளில் இருந்து நீக்குவது போன்ற செயல்களுக்காகத்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை திசை திருப்புகிறார் அவர்.

சிங்கத்தில் இறுதியில் பிரகாஷ்ராஜை சுடுவதற்கு முன்பாக “திருந்தலை இல்ல நீ! செஞ்ச தப்புக்கு வருந்தலை இல்ல” என் வசனம் பேசுவார்.

அது போல திருந்தாத, தவறுக்கு வருந்தாத துணை ஜனாதிபதி யை பதவி நீக்கம் செய்திட வேண்டும்.


Monday, December 30, 2024

பனையூருக்கு இனிமே யாரும் போகாதீங்க. . .

 


பனையூர் –  A1 ஜெயலலிதா  கங்கை அமரனிடமிருந்து ஆட்டைய போட்ட வீட்டில் அமர்ந்து  A 2 சசிகலா இப்போது பனையூரிலிருந்துதான் அரசியல் செய்கிறாராம். அந்த மாளிகையை திரும்பப் பெற கங்கை அமரன் பாஜக சென்றாலும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பது கிளைக்கதை.

WORK FROM HOME அரசியல் என்ற புதிய பாணி அரசியலை கண்டுபிடித்து அமலாக்கிக் கொண்டிருக்கும் தவெக விஜய் தற்போது அரசியல் செய்வதும் பனையூரிலிருந்துதான்.

ஞானப்பழம் கிடைக்காத முருகன் கோபித்துக் கொண்டு பழனி சென்றது போல, பெரிய டாக்டர் அப்பாவிடம் கோபித்துக் கொண்ட சின்ன டாக்டர் மகன் தனிக்கடை போட்டுள்ளதும் பனையூரில்தான்.

அரசியல்வாதிகளின் நெரிசலால் பனையூர் திணறுகிறதாம். ஆகவே இனி புதிதாக அரசியல் கடை திறக்க விழைபவர்கள் வேறு இடத்துக்கு சென்று விடுங்கள்.

 

Tuesday, November 26, 2024

கடவுள் அருள் யாருக்கு மோடி?

 


மஹாராஷ்டிர அரசியல் களம் சுவாரஸ்யமாகியுள்ளது.  அதிக இடங்களை வென்றுள்ளதால் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்தான் அடுத்த முதலமைச்சராக வேண்டும் என்று பாஜக சொல்கிறது (ஆர்.எஸ்.எஸ் சொல்கிறதா என்று தெரியவில்லை. சொல்லும் என்றே தோன்றுகிறது). அமலாக்கப்பிரிவின் கடாட்சம் வேண்டும் என்பதால் அஜித் பவார், பட்னாவிஸ் பக்கம் சென்று விட்டார்.

சிவசேனாவை உடைத்து முதல்வரான ஷிண்டேதான் முதல்வராக வேண்டும் என்று அவரது ஆட்கள் சொல்லத்தொடங்கி விட்டார்கள். பீகாரில் நிதீஷ்குமாருக்கு எம்.எல்.ஏ க்கள் குறைவு, அவர் முதல்வராக உள்ளாரே என்று தொடங்கி நல்லவரு, வல்லவரு, இதர இதர இதர வழிபாடுகளுக்கு குறைச்சலே இல்லை.

யார் முதல்வராவார்?

மூன்று பேரும் கிரிமினல்கள், சந்தர்ப்பவாதிகள், அதிகாரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்.

ஷிண்டேவின் ஆதரவாளர்கள் அவருக்காக மஹாராஷ்டிராவில் உள்ள எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்து கொண்டிருக்கிறார்களாம்.

கடவுள் அருள் யாருக்கு மோடி?

உங்கள் கடவுளைச் சொல்கிறேன், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவந்த் தான். 

Saturday, November 23, 2024

அவரின் நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு . . .

 


மகாராஷ்டிராவில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வேளையில் நேற்று அண்ணல் அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.

"இரண்டு கூட்டணிகளில் எது வெல்கிறதோ, எதற்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளதோ, அந்த கூட்டணிக்கே என் ஆதரவு"

சுயநலம் காரணமாக ஒரு முடிவெடுத்து விட்டு பின்பு அதற்கு ஆயிரம் கொள்கை விளக்கம் கொடுக்கும் சந்தர்ப்பவாதிகள் சூழ் அரசியல் உலகில் ஜெயிக்கறவங்களுக்கு என் ஆதரவு என்று வெளிப்படையாக சொன்ன பிரகாஷ் அம்பேத்கருக்கு என் வாழ்த்துக்கள். 


Wednesday, October 16, 2024

நாகரீகமான அனாமதேயமும் நாசுக்கான பதிலும்.

 


கனடா கொலையும் அமித்ஷாவும் என்ற நேற்றைய பதிவிற்கு அனாமதயேமாக ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். போலிப் பெயரிலும் அனாமதேயமாகவும் கீழ்த்தரமான மொழியில் பின்னூட்டமிடுவதையே பிழைப்பாக வைத்திருக்கும் என்னால் பணி பாதுகாக்கப்பட்ட ஒரு நன்றி மறந்த துரோகி போல அல்லாமல் அவரின் மொழி மிகவும் நாகரீகமாக இருந்தது.

 அவருக்கு நன்றி சொல்லி ஒரு விரிவான பதிலும் அளித்தேன். அவரின் பின்னூட்டத்தையும் என் பதிலையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 நாகரீகமான பின்னூட்டம்

 உங்களுடைய கருத்துக்களில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை தோழரே.மொழிவாரியாக பிரிவினையை ஊக்குவிப்பது தான் மார்க்கசியமா?அமெரிக்க ஆதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த சோவியத்து ஒன்றியம் பல துண்டுகளாக உடைந்து தன் சொந்த சகோதர நாடுகளுடனே சண்டையிட்டுக் கொண்டு அழிந்து வரும் நிலை இந்தியாவிற்கும் வரவேண்டும் எதிர்பார்க்கிறீர்களா? 320 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானம் காலிஸ்தான் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். அப்பொழுது இதே ஜஸ்டின் ட்ருடோவின் தந்தை தான் கனடாவின் பிரதமராக இருந்தார்.இத்தனைக்கும் 284 பயணிகள் கனடா நாட்டவர்கள்.அக்கால கட்டத்தில் இந்திய விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கன்னடிய மக்களால் தூக்கி எறியப்பட்டார் என்பதை நீங்கள் அறியவில்லை போலும்.வளர்ந்து வரும் இந்தியாவின் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்தியாவிற்கு மறைமுகமாக பல தடங்கல்களை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற மேலை நாடுக எதிர்க்க முடியாத நிர்பந்தத்தினால் இந்தியாவின் நிலைத்தன்மையை சீர்குலைத்து தன் கை பாவையாக வைத்திருக்க முயன்று வருவதை பன்னாட்டு அரசியல் அறிந்தோர்க்கு நன்கு தெரியும்.நானும் 25 ஆண்டுகளுக்கு மேல் ஒரு முதன்மையான மத்திய அரசு நிறுவனத்தின் முதன்மையான இடதுசாரி சார்பு தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக பல ஆண்டுகள் பணிபுரிந்தவன். என்றைக்கு தேசவிரோத கருத்துக்களை முன்னெடுத்ததோ அப்போதே இடதுசாரிகளின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

விரிவான பதில்

 சில அனாமதேயங்கள் போல அல்லாமல் நாகரீகமான முறையில் உங்கள் கருத்துக்களை முன் வைத்தமைக்கு மனமார்ந்த நன்றி. உங்கள் புரிதல்கள் சில சரியில்லை என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன். மொழி உணர்வைத் தூண்டி நாட்டை பிரிக்கும் வேலையில் இடதுசாரிகள் என்றும் ஈடுபட்டதில்லை. மாறாக இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாத்து இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்துகிறோம்,  மத வெறியைத் தூண்டி மக்கள் ஒற்றுமையை சிதைக்க முயல்வது சங்கிகளின் வேலை. என் கருத்துக்கள் அனைத்தும் அந்த சங்கிகளை அம்பலப்படுத்துவதுதான்.

 காலிஸ்தான் பிரிவினைகளை எதிர்த்த காரணத்தால் மார்க்சிஸ்டுகள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுதான் வரலாறு. ஏன் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஜலந்தர் கோட்டச்சங்கத்தின் தலைவராக இருந்த தோழர் குருபச்சன்சிங் சென்ற ஜீப் தாக்கப்பட்டு அந்த விபத்தில் நேர்ந்த காயங்களால் அவர் இறந்து போனார்..

 1966 ல் பிறந்தாலும் 1975 அவஸ்ர நிலைக்காலம் முதலே இந்திய அரசியலை பின்பற்றி வருகிற நான் கனிஷ்கா விமானம் தகர்க்கப்பட்டது, அதன் தொடர்ச்சி பற்றியெல்லாம்  நன்கு அறிவேன். காலிஸ்தானி என்று சொல்லி வேறு நாட்டில் கொலை செய்வதெல்லாம் ஒரு அரசின் வேலையா? கீழ்த்தரமான செயல். இதை கண்டிக்காமல் இருக்க முடியுமா? கிரிமினல் உள்துறை அமைச்சராக இருந்தால் கிரிமினல் வேலைதான் நடக்கும்.

 மற்ற நாடுகள் சிக்கலை உருவாக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீண்டும் அளவிற்கு இந்தியா வளர்ந்து விட்டது என்பதெல்லாம் கற்பனாவாதம். முதலாளிகள் வளர்ந்துள்ளனர். மக்கள் வளரவில்லை. பல புள்ளி விபரங்கள் அதைச் சொல்லும்.

 எங்கள் கோட்ட மாநாட்டு அறிக்கைக்காக எழுதப்பட்டவற்றி சிலவற்றை உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

 *****************************************************************

 இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போவதாக ஆட்சியாளர்கள் பீற்றிக் கொண்டிருப்பது தொடர்பாக கடந்த மாநாட்டில் விவாதித்தோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி எட்டு சதவிகிதம் இருக்கும், ஏழரை சதவிகிதம் இருக்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்லப்பட்டு வந்தாலும் கடந்தாண்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி 4.6 % என்ற அளவில்தான் இருந்தது. இந்தியாவின் சராசரி தனி நபர் வருமானம் என்பது 2411 டாலர்கள் மட்டுமே. உலக அளவில் 141 வது இடத்தில் உள்ளது.

  இது எதைக் குறிக்கிறது?

 இந்தியாவில் நிலவும் அசமத்துவத்தின் வெளிப்பாடு இது.  டாலர் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவின் டாலர் பில்லியனர்கள் 200 பேர்.  உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டியலில் முதலிடம் முகேஷ் அம்பானிக்கும் கௌதம் அதானிக்கும் இடையே ஊசலாடுகிறது.

 சர்வதேச அளவில் பல குறியீடுகளில் இந்தியா மிகவும் பின் தங்கி உள்ளது என்பதை பின் வரும் புள்ளி விபரங்கள் உணர்த்தும்.

 மனித வளர்ச்சி குறியீட்டில் 193 நாடுகளில் இந்தியாவின் இடம் 193 நாடுகளில் 134 வது இடம்தான். அதே போல  உலக வறுமைக் குறியீட்டிலும் இந்தியாவின் இடம் 193 நாடுகளில் 134 வது இடமே. இந்திய மக்கட்தொகையில் 14.96 % பேர் வறுமையின் பிடியில் உள்ளனர்.

 மகிழ்ச்சிக்கான குறியீட்டில் நிலைமை இன்னும் மோசம். 146 நாடுகளில் இந்தியா பெற்ற இடம் 126.

 உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 125 நாடுகளில் 111வது  இடம் பெற்றுள்ளது. நம் அண்டை நாடுகளில் நிலைமை இந்தியாவை விட மேலாக உள்ளது. மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் 102 வது இடத்திலும் இலங்கை 60 வது இடத்திலும் வங்க தேசம் 81 வது இடத்திலும் நேபாளம்  69 வது இடத்திலும் உள்ளது.

 இதன் காரணம் என்ன?

 இந்தியாவின் செல்வாதாரங்களில் 40 % இந்தியாவின் பெரும் செல்வந்தர்களாக உள்ள 1 % பேரிடமே உள்ளன. இந்த சமத்துவமின்மைதான் மேலே உள்ள நிலைமைக்குக் காரணம்.

 இவற்றை சரி செய்ய வேண்டிய மத்தியரசோ நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதிச்சட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து வெட்டி வருவதைப் பற்றி கடந்தாண்டே விவாதித்தோம். இப்போது நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. ஆதார் அட்டையை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று கெடுபிடி செய்ததில் பத்து கோடி பேர் திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். வங்கிக் கணக்கு எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதில் உள்ள தொழில்நுட்பப் பிரச்சினைகளால் பணி செய்தும் இரண்டு கோடி தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை. இவர்கள் எல்லாம் வறுமையின் பிடியில் சிக்காமல் எப்படி தப்பிக்க முடியும்!

 இன்னொரு செய்தியும் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய கவலைகளை அதிகரிக்கிறது.

 இந்தியாவின் வீட்டுச் சேமிப்புக்கள் (DOMESTIC SAVINGS) ஒட்டு மொத்த உற்பத்தியில் 5 % மட்டுமே என்ற அளவில் சுருங்கிப் போயுள்ள நிலையில் வீட்டுக் கடன்கள் (DOMESTIC DEBTS) என்பதோ 40 % ஆக இருக்கிறது. சேமிப்பு சுருங்குவதும் கடன் தொகை அதிகரிப்பதும் நாட்டிற்கு நல்லதல்ல. வீட்டு வசதிக் கடன் வாங்குவதால்தான் இந்த நிலை என்று காரணம் சொல்லப்படுகிறது. திருப்பி செலுத்தும் சக்தியை உரிய முறையில் ஆய்வு செய்து கடன் வ்ழங்கப்படுகிறதா என்பது ஒரு கேள்விக்குறி. வங்கிகளின் தற்போதைய முன்னுரிமை டெபாசிட் சேகரிப்பது என்பதிலிருந்து கடன் கொடுப்பது என்று மாறி விட்டது.

 ஏற்கனவே வங்கிகள் கார்ப்பரேட் கம்பெனிகளின் வாராக்கடன் பிரச்சினையால் தவித்துக் கொண்டிருக்கும் போது சாதாரண மக்கள் வாங்கும் கடனும் இணைந்து கொண்டால் வங்கித்துறையின் நிலைமை இன்னும் மோசமாகும். அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடி போன்றதொரு சூழ்நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிற்து.

 இந்தியாவின் உற்பத்தித்துறையிலும் பெரிய முன்னேற்றமில்லை. இறக்குமதி என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது  என்ற தோற்றத்தை இந்தியா  காண்பித்துக் கொண்டே சீனாவுடனான இறக்குமதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 2018 – 19 ல் ஐந்து லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூறு கோடியாக இருந்த இறக்குமதி 2023- 24 ல் எட்டு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி ஐம்பது கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் அதே நேரம் இந்தியாவின் ஏற்றுமதியோ      ஐந்து வருடங்களாக ஒரு லட்சத்தி முப்பத்தி மூன்றாயிரம் கோடியாக  தொடர்கிறது.

 வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையையும் ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை. சாமானிய மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண்பதை விட்டு விட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவகம் செய்வதிலேயே கவனம் செலுத்தினார்கள்.

*********************************************************************************

 இடதுசாரிகள் தேச விரோத செயல்களை செய்வதாக சிறு குழந்தை கூட சொல்லாது. இன்று பின்னடைவை சந்தித்திருக்கிறோம். நாளை பீனிக்ஸ் பறவையாய் எழுவோம்.

 நாகரீகமான முறையில் உங்கள் கருத்துக்களை முன்வைத்தமைக்கு மீண்டும் நன்றி.

 

Monday, September 23, 2024

இலங்கையின் திருப்பம் இனிதாகட்டும்

 


இலங்கையின் அரசியலில் ஒரு மிகப் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட ஒருவர் ஜனாதிபதியாகி உள்ளார்.  ஜே.வி.பி மற்றும் 27 இடதுசாரிக் கட்சிகள், ஜனநாயக அமைப்புக்கள்,  NPP என்ற பெயரில்  இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி கண்டன. அனுராகுமார் திஸநாயகா புதிய ஜனாதிபதியாகி உள்ளார். கொல்லப்பட்ட  முன்னாள்  ஜனாதிபதி சஜித் பிரேமதாசாவும் தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கேயும் தோற்றுப் போயுள்ளனர். ராஜபக்சே குடும்ப வாரிசு எங்கோ ஒரு மூலையில் . . .

ஜே.வி.பி யின் கடந்த காலம் களங்கமானது. இடதுசாரிக் கட்சியாக துவங்கி அதே தடத்தில் கால் பதித்து பின் தடம் மாறி இனவெறி அமைப்பாக தமிழர்களை வேட்டையாடிய ரத்த வரலாறு அவர்களுடையது. ஆனால் ஆயுதங்களை கைவிட்டு ஜுஅனநாயகப் பாதைக்கு திரும்பினார்கள். ராஜபக்சே குடும்பத்திற்கு எதிரான கோபத்தை மக்களின் போராட்டமாக ஒருங்கிணைத்ததுதான் இன்று அனுரா குமார் திஸநாயகாவை ஜனாதிபதி  ஆக்கியுள்ளது.

ஆனாலும் தமிழர்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை வரவில்லை என்பதால்தான் அப்பகுதிகளில்  அனுராவிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரிடத்திலும் ஒற்றுமையை உருவாக்குவதும் அனைருக்குமான வளமான எதிர்காலத்தை கட்டமைப்பதே புதிய அரசின்  இலக்கு என்று சொல்லியுள்ளார்.

மிகவும் சிறந்த சொல் செயல் என்பார்கள். எனவே சொல் செயல் வடிவம் காணட்டும்.

புதிய ஜனாதிபதிக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. இலங்கையின் பொருளாதாரம் மீட்கப்பட வேண்டும். சர்வதேச நிதி அமைப்பின் விதிகளுக்கு முந்தைய அரசுகள் செய்த சரணாகதிகள் இன்னும் ஒரு மிகப் பெரிய சவால். ஊழல் மலிந்து போன நாட்டில் அதனை கட்டுப்படுத்துவது ஆகப் பெரிய சவால்.  இந்த முடிவை விரும்பாத இந்தியா கொடுக்கப் போகும் சிக்கல்கள் எத்தனையோ?

இந்த சவால்களை சந்திக்கும் திறனை மக்களின் ஆதரவு என்ற ஆயுதம் கொடுக்கும்.

இந்த ஆட்சி சோஷலிச ஆட்சியாக மலரும் என்ற அதீத எதிர்பார்ப்பெல்லாம் எனக்கு கிடையாது. ஒரு மக்கள் நல ஆட்சியாக இருந்தாலே போதும்.

அந்த இலக்கை  நோக்கி ஆட்சி முன்னேறட்டும். இலங்கையின் இடதுசாரி துருப்பம் இனிதாக  அமையட்டும்.

Wednesday, May 8, 2024

இதுவும் கர்மாவா சங்கிகளா?

 


எங்கேயாவது ஏதாவது ஜனநாயகத்துக்கு எதிரான சம்பவம் நடந்தால் அதை நியாயப்படுத்தி முட்டு கொடுக்க வாய்ப்பில்லாத போது சங்கிகள் அதனை கர்மா என்று சொல்லி விடுவார்கள்.

இப்போது பாஜக ஆட்சி ஹரியானாவில் கவிழும் நிலை ஏற்பட்டு விட்டது. மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ க்கள் பாஜக பக்கத்திலிருந்து காங்கிரஸ் பக்கத்திற்கு தாவி விட்டார்கள். அதனால் பாஜக பெரும்பான்மையை இழந்து விட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் தோற்றுப் போவார்கள். இதுவும் குதிரை பேரத்தின் விளைவுதான்.

மகாராஹ்டிரா, பீகார், மத்தியப்பிரதேசம், கர்னாடகம் என்றெல்லாம் ஆட்சிகளை கவிழ்த்த பாஜகவின் ஆட்சியும் கவிழ்வது இனிமையான செய்திதான், அந்த முறை உடன்பாடில்லாவிட்டாலும் கூட.

சங்கிகள் இந்த சம்பவத்திற்கு என்ன எதிர்வினையாற்றுவாற்றுவார்கள்?

ஜனநாயகப் படுகொலை என்பார்களா?

இல்லை

கர்மா அவர்களை திரும்பித் தாக்கி விட்டது என்பார்களா?

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தொடர்ந்து அயோக்கியத்தனம் செய்து கொண்டிருப்பவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, யாருடைய ஆதரவு இருந்தாலும் சரி, அடி நிச்சயம் விழும் என்பதைத்தான் ஹரியானா உணர்த்துகிறது.

 

Friday, April 26, 2024

மோடின்னா பயமா EC???

 


தேர்தல் பிரச்சாரத்தின் போது அநாகரீகமாக, ஆபாசமாக, வெறுப்புப் பேச்சு யாராவது பேசினால் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கும்.

மோடி தொடர்ந்து செய்து வரும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டித்து நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கடிதம் அனுப்பி அழுத்தம் கொடுத்த பின்னர் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் மோடிக்கு அல்ல.

பாஜக தலைவர் பதவியில் உட்கார்ந்திருக்கும் பொம்மை நட்டாவிற்கு.

அதிலும் கூட மோடியின் பெயர் இல்லை. உங்கள் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் என்றுதான் சொல்கிறது கடிதம்.

கட்சித்தலைவருக்கு கடிதம் அனுப்பியது மோடிக்காக மட்டும் இல்லை என்று காண்பிக்க "மோடி பொய் பேசுகிறார்" என்று ராகுல் காந்தி சொன்னதற்கு மல்லிகார்ஜூன் கார்கேவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நட்சத்திரப் பேச்சாளர் என்ற மறைப்பு எல்லாம் இல்லை. நேரடியாக ராகுல் காந்தி என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏன்யா தேர்தல் ஆணையர்களா, மோடி என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? அந்தாளு பெயரை சொல்றதுக்கு இப்படி பயப்படறீங்க?

மோடி பொறுக்கி எடுத்து பதவி கொடுத்த விசுவாசமா? எலும்புத்துண்டு போட்டவனுக்கு விசுவாசமா ஏதோ ஒன்னு வாலை ஆட்டுமே, அது மாதிரி . . 

Wednesday, April 17, 2024

செல்லம் சூப்பர் . . .

 


சமீப காலத்தில் நான் பார்த்த சிறப்பான நேர்காணல் திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ், சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்தது.

புஷ்பக விமானத்தில் வரும் மன்னர் என்று மோடியைச் சொல்லும் பிரகாஷ்ராஜ், மோடியின் ஆட்சியை கிழித்து தோரணமாக தொங்க விடுகிறார்.

"ஆப் கி பார் சாக்கோபார்" என்பதே மோடியின் நடுக்கத்தை மறைத்து மாயையை உருவாக்கும் உத்தி என்றார்.

ஊழலும் மோடியும் என்பது பிரிக்க முடியாதது என்று சொல்கிறார். வெட்டி வேலை பார்க்கும் பிரதமர் என்று கிண்டல் செய்கிறார்.

மிகவும் இயல்பான, அழுத்தமான, சங்கிகள் வெட்கப்படுகிற அளவுக்கு நேர்த்தியாக கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அவசியம் முழுமையாக பாருங்கள்.

பேட்டியின் இணைப்பு இங்கே . . .

பார்த்த பின்பு நீங்களும் சொல்வீர்கள் "செல்லம் சூப்பர்"

Friday, March 22, 2024

கோவை வாக்காளர்களே, பிரியாணி செய்யுங்கள்

 


கோவை வாக்காளப் பெருமக்களே, உங்களுக்கோர் அரிய வாய்ப்பு. இந்தியாவின் மிகப் பெரிய பொய்யன் மோடியின் வாரிசான தமிழ்நாட்டின் அண்டப்புளுகன், ஆகாசப் புளுகன் ஆட்டுக்காரன் உங்கள் தொகுதியில் போட்டியிடுகிறான்.

ஒரு சாதாரண பள்ளி மாணவனுக்கு உள்ள அறிவு கூட இல்லாத அரைவேக்காடு,

கலவரத்தைத் தூண்ட அலையும் கயவன்,

சிறுபான்மை மக்கள் மீது விஷத்தைக் கக்கும் வெறியன்,

வாயைத் திறந்தால் பொய், பொய், பொய்யைத் தவிர வேறு எதுவும் அறியாதவன்.

ஊடக முதலாளிகளால் ஊதிப் பெருக்கப்படும் போலி.

தமிழ்நாட்டு அரசியலின் விபத்து.

இப்பேற்பட்ட ஒரு ஜந்துவை தோற்கடித்து அரசியலில் இருந்தே துரத்தி அடிக்கும் நல் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.

ஆட்டுக்கறியில் பிரியாணி செய்யும் நீங்கள், ஆடு வளர்ப்பதாக சொல்லித் திரிபவனின் எதிர்கால கனவுகளை ரோஸ்ட் செய்து சிறப்பானதொரு பிரியாணி செய்வீர்.

ஆட்டுக்காரனின் டெபாசிட்டை இழக்க வைப்பீர். தமிழ்நாடே உங்களைப் பார்த்து தலை வணங்கும். 

Saturday, February 3, 2024

நமது கழகத்திலிருந்து உதிர்ந்த ரோமம் வரை

 


ஜூனியர் விகடனால் உசுப்பேற்றப்பட்டு நாசமாகிப் போன மனிதர் எஸ்.டி.சோமசுந்தரம்.

எம்.ஜி.ஆரின் முதல் அமைச்சரவையிலே அமைச்சராக இருந்தவர். பொறியாளர் பட்டம் பெற்றவர். சக்தி மிக்க அமைச்சராகத்தான் இருந்தார், ஜெ அரசியலுக்கு அழைத்து வரப்படும் வரை. ஜெவுக்கு கொடுக்கப்பட்ட அதி முக்கியத்துவத்துக்கு எதிராக குரல் கொடுத்தார். அது எடுபடாத போது எம்.ஜி.ஆர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்க ஆரம்பிக்க அதிமுகவிலிருந்து நீக்கப்படுகிறார்.

ஊழலை ஒழிக்க வந்தவர் என்ற தோற்றத்தை தொடர் கவர் ஸ்டோரிகள் மூலம் ஜூவி கொடுக்க அவரும் நம்பிக்கையோடு புதிய கட்சியை துவக்குகிறார். “நமது கழகம்” என்று நாமகரணம் சூட்டி தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தேர்தல் முடிவு என்ன ஆனது?

ஒரே ஒரு இடம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும்

வெற்றி பெற்றதா நமது கழகம்?

இல்லை. டெபாசிட் இழந்தது.

அந்த ஒரு தொகுதி கூட நெய்வேலியை உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி தொகுதி. அப்போது என்.எல்.சி பொறியாளர் சங்கத்தின் தலைவராக இருந்த வி.என்.பண்டரிநாதன் மட்டுமே டெபாசிட் பெற்ற ஒரே வேட்பாளர்.

அப்படியானால் எஸ்.டி.எஸ்?

அவர் அதற்கு முன்பாக பல முறை வென்ற பட்டுக்கோட்டை தொகுதியிலேயே டெபாசிட் இழந்தார்.

அதன் பின்பு அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

பிறகு மீண்டும் சில தலைவர்களோடு விலகினார். அப்போதுதான் ஜெ அவர்களை “உதிர்ந்த ரோமம்” என்றழைத்தார்.

அதன் பிறகும் அவர் மீண்டும் இணைந்தார். ஆனால் பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெ வின் வேனில் தொங்கிக் கொண்டு வந்த அசிங்கமெல்லாம் நடந்தது. மணிவண்ணன் கூட அதை “தாய் மாமன்” படத்தில் எஸ்.டி.எஸ் போலவே ஒருவரை நடிக்க வைத்து காட்சியாக்கினார்.

ஜூவி உசுப்பேற்றலுக்கு மயங்காமல் இருந்திருந்தால் பாவம் பிழைத்திருக்கலாம்.

 

 

Wednesday, December 27, 2023

ஜனாதிபதியை கூப்டீங்களா டிமோ?


 சில கேலிக்கூத்துக்கள் டிமோவால் மட்டுமே சாத்தியம்.

 ஜனநாயகத்தின் இருப்பிடம் என்று நம்பப்பட்ட நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு சாமியார்களை அழைத்து அதனை ஒரு மத விழாவாக நடத்தினார்  டிமோ.

 இப்போதோ அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியல் நிகழ்வாக நடத்துகிறார். திருமதி சோனியா காந்தி, தோழர் சீத்தாராம் யெச்சூரி, தோழர் டி.ராஜா  ஆகியோருக்கு அழைப்பனுப்பி வரச் சொல்கிறார். அவர்களும் செல்லப் போவதில்லை  என்று அறிவித்து விட்டனர். அவர்கள் வர மாட்டார்கள் என்று தெரிந்தே அனுப்பப்பட்டது. அப்போதுதானே ஆவர்களை இந்து விரோதிகள் என்று பிரச்சாரம் செய்ய் முடியும்!

 எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பிய டிமோ, இந்தியாவின் முதல் பெண்மணிக்கு அழைப்பிதழ் அனுப்பினாரா?

 அப்படி அவர்களை அழைத்ததாக இதுவரையில் தகவல் இல்லை. எல்.கே.அத்வானிக்கும் முரளி மனோகர் ஜோஷிக்குமே தடை போட்ட டிமோ, புரோட்டாகால் படி தன்னை விட இரண்டு படி உயர்வாக இருக்கிற ஜனாதிபதிக்கு  அழைப்பிதழ் அனுப்ப இனியும் வாய்ப்பில்லை.

 ஏன்?

 காரணம் எளிது.

 நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாத அதே காரணம்தான்.

 அவர், திருமதி திரவுபதி முர்மு

 பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு கைம்பெண்.

 சகுனம் பார்க்கும் சங்கிகள் அவரை நாடாளுமன்றத்துக்குள்ளோ, அயோத்தி ராமர் கோயிலுக்குள்ளோ எப்படி அனுமதிப்பார்கள்????

 சோனியா காந்திக்கு அழைப்பு அனுப்பப்பட்டதே, அவரும் கைம்பெண்தானே என்று சில சங்கிகள் தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துகேள்வி கேட்பார்கள்.

 சோனியா காந்தி நிச்சயம் வர மாட்டார் என்பது திட்டவட்டமாக தெரியும் என்பதால் அழைப்பிதழ் போனது.

 ஜனாதிபதி நிச்சயம் வருவார் என்பது திட்டவட்டமாக தெரியும் என்பதால் அழைப்பிதழ் செல்லவில்லை.

 அவ்வளவுதான் . . . 

Sunday, November 19, 2023

நகல் கபிலை அழைத்து அசலை 👿👿👿


தற்போது நடந்து கொண்டிருக்கும் உலகக் கோப்பை போட்டியை தொலைபேசியில் ஒரு நிமிடம் பார்த்த போது "83 திரைப்படத்தில் கேப்டனாக நடந்த ரண்வீர் சிங்கும் அவர் மனைவியாக நடித்த தீபிகா படுகோனாவும் வந்துள்ளனர்" என்று காண்பித்தார்கள். 

பிறகு முகநூல் வந்த போதுதான் இந்தியாவிற்கு முதன் முதலில் உலகக் கோப்பையை வென்றெடுத்துக் கொடுத்த கபில்தேவிற்கு அழைப்பு இல்லை என்ற தகவல் தெரிந்தது.



அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோரை விட கபில்தேவ் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டார்?

உண்மையான நாயகன் அல்லவா அவர்!

அசலை ஒதுக்கி வைத்து விட்டு நகல் நடிகரை அழைத்துள்ளது கிரிமினல்ஷா வாரியம்.

நடிகரின் ஆட்சியல்லவா? அதனால் நடிகர்களுக்கு மட்டுமே மதிப்பு. நிஜமான நாயகர்களுக்கு அல்ல . . .

Wednesday, November 8, 2023

முடியலை. நிஜமாவே !

 



 

இறந்து போனவரைப் பற்றி எழுதுவதை எப்போதுமே நான் தவிர்த்து விடுவேன்.

 இந்த பதிவில் எழுதுவது கூட விமர்சனம் என்பதை விட தகவல் என்று சொல்வதே சரி.

 புதுவையின் முக்கியமான அரசியல் பிரமுகர் திரு பி.கண்ணன், நேற்று முன் தினம் இறந்து போனார்.

 நேற்றைய ஆங்கில இதழில் அவரது அரசியல் பயணம் என்று பட்டியல் போட்டிருந்தார்கள்.

 அந்த தகவல் மட்டுமே இங்கே

 

காங்கிரஸ் கட்சியில் அரசியல் தொடங்குகிறது

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுகிறார்.

1996 ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதுவை பிரிவை துவக்குகிறார்.

சில வருடங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதுவை பிரிவை மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு இணைக்கிறார்.

2001 ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதுச்சேரி மக்கள் காங்கிரஸை துவக்குகிறார்.

2002 ல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

2005 ல்  புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸை துவக்குகிறார்.

2009 ல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்கிறார்.

சில வருடங்களுக்குப் பின்பு அதிமுகவிற்கு செல்கிறார்.

2019 ல் அதிமுகவிலிருந்து வெளியேறி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியை துவக்குகிறார்.

2021 ல் பாஜகவில் இணைகிறார்.

மணிப்பூர் பிரச்சினையை முன் வைத்து இரண்டு மாதங்கள் முன்பு பாஜகவில் இருந்தும் வெளியேறி விட்டார்.

 ஒரு மனிதரால் இந்த அளவிற்கு கட்சிகள் மாறிக் கொண்டே இருக்க முடியுமா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நிஜமாகவே முடியவில்லை.

Thursday, July 27, 2023

இப்போ வருவேல்ல, இப்போ வருவேல்ல . . .

 


நாடாளுமன்றத்திற்கு வராமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்தார் டிமோ.

இந்தியா கொண்டு வந்த "நம்பிக்கையில்லா தீர்மானம்" டிமோ வை வேறு வழியில்லாமல் நாடாளுமன்றத்திற்கு வர வைக்கும்.

பொய்யும் அபத்தமும் வன்மமும் மட்டுமே இருக்கும் என்றாலும்  கூட வேறு வழியில்லாமல் மணிப்பூர் பற்றி வாய் திறந்தாக வேண்டும்.

தீர்மானத்தில் வெல்லாது. ஆனால் கொண்டு வந்த நோக்கத்தில் இந்தியா வென்றுள்ளது.

Sunday, July 9, 2023

ஏதாவது டீலிங்கா எடப்பாடி?

 



பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது நல்ல விஷயம். அதை எதிர்ப்பதாக அ.இ.அ.தி.மு.க சொல்வதுதான் சந்தேகமாக இருக்கிறது.

 

மோடியோடு ஏதாவது டீலிங் செய்வதற்கான ஏற்பாடா இந்த எதிர்ப்பு அறிவிக்கை எடப்பாடி?

 

உங்க மூஞ்சிங்களைப் பார்த்தா அவ்வளவு நல்லவங்களா தெரியலையே! அப்படியெல்லாம் உங்களுக்கெல்லாம் கொள்ளையடிப்பதைத் தவிர வேறு கொள்கையெல்லாம் கிடையாதே!