Showing posts with label சு.வெங்கடேசன். Show all posts
Showing posts with label சு.வெங்கடேசன். Show all posts

Tuesday, July 29, 2025

எங்கள் மனதில் தேசம். உங்கள் மனதில் ?????

 எங்கள் மனதில் தேசம் உள்ளது .

உங்கள் மனதில் தேர்தல் உள்ளது .



- ஆப்பரேசன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் எனது உரை
அவைத் தலைவர் அவர்களே உங்களுக்கு எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பகல்ஹாம் தாக்குதலுக்கு எதிராக தேசமே ஒன்றுபட்டு நிற்கிறது. வீழ்ந்த ஒவ்வொரு உயிரும் ஏற்படுத்திய வலியும் வேதனையும் ரணமாய் நிற்கிறது.
அந்த தாக்குதலுக்கு எதிராக இந்தியா தொடுத்த எதிர்வினை அதுசார்ந்த விவாதத்தை மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு இந்த அவையிலே நடத்துவதற்கு எதிர்கட்சிகளாகிய நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த முயற்சி இன்றைக்கு நேற்றைக்கு அல்ல , கடந்த இரண்டு மாதங்களாக இந்த முயற்சியை எதிர்கட்சிகள் பொறுப்புணர்ச்சியோடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மாதங்களாகவும் பொறுப்புணர்ச்சி என்றால் என்ன என்ற விலை கேட்பதைப் போல ஆளுங்கட்சித் தரப்பு தொடர்ந்து வினையாற்றிக் கொண்டிருக்கிறது. அவற்றினுடைய ஒரு சான்று தான் இந்த அவையிலே இப்போதும் நடந்திருக்கிறது என்பதை முதலில் நான் பதிவு செய்கிறேன்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த விவாதத்தை துவக்கி வைத்துப் பேசினார். 2016 ஆம் ஆண்டு உரி தாக்குதல் நடந்த போது ஆளுங்கட்சி என்ன சொன்னதோ , 2019 ஆம் ஆண்டு பதன்கோடு தாக்குதல் நடந்த பின்னணியில் ஆளுங்கட்சி என்ன சொன்னதோ அதையே தான் இன்றைக்கு மீண்டும் இவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நீங்கள் பேசிய இவ்வளவிற்கும் பிறகு இந்தத் தீவிரவாதத் தாக்குதல் பகல்ஹாமில் எப்படி நடந்தது ? தாக்குதல் துவங்கி ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு தான் உதவியோ , தகவலோ அரசுக்கு கிட்டியிருக்கிறது என்ற செய்தி எவ்வளவு பெரிய வெட்கக்கேடானது . இது மூன்றடுக்கு பாதுகாப்பின் தோல்வி. இராணுவத்தின் தோல்வி , CRPF யினுடைய தோல்வி , ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினுடைய தோல்வி என மூன்றினுடைய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்கப் போவது ? அதிகாரிகளா ? அமைச்சரா ? ஒரே தேசம் ஒரே தலைவர் என்று நீங்கள் சொல்கிற மாண்புமிகு பிரதமர் அவர்கள் இதற்கு பொறுப்பேற்கப் போகிறாரா ? யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் ?
நீங்கள் உங்கள் ஆட்சிக்கு முன்புவரை நடந்த எல்லா சம்பவங்களுக்கும் நேரு துவங்கி மன்மோகன்சிங் வரை பொறுப்பேற்க வேண்டும் என சொல்லுவீர்களே , இப்போது நீங்கள் யாரைக் கையைக் காட்டப் போகிறீர்கள் என்ற கேள்வியை நாங்கள் எழுப்ப விரும்புகிறோம் . இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்த போது சவுதி அரேபியாவிலே இருந்த நம்முடைய மாண்புமிகு பிரதமர் அவர்கள் தனது பயணத் திட்டத்தைக் குறுக்கிக் கொண்டு உடனடியாகப் புறப்பட்டார்.
நேரடியாக அவர் பகல்ஹாமிற்கு போகப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்தது. நேரடியாக காஷ்மீருக்குப் போகப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால் அவர் நேரடியாக பீஹாரினுடைய தேர்தல் பேரணிக்குப் போனார். எங்கள் இதயங்களில் தேசம் இருக்கிறது. உங்கள் இதயங்களில் தேர்தல் மட்டும் தான் இருக்கிறது என்பதை இந்த நாடு தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரைக் கூட்டுங்கள் என்று மீண்டும் மீண்டும் நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். பிரதமர் என்ன சொன்னார் ? ஜனநாயகத்தின் கோவில் இந்த நாடாளுமன்றம் என்று சொன்னார். சரி கோவிலுக்கு வாங்க என நாங்கள் கூப்பிடுகிறோம். கோவிலுக்கு வர இவ்வளவு பயப்படுகிற ஒரு பிரதமரை நீங்கள் கொண்டிருப்பது சரியா ? நியாயமா ? ஏன் அதுவும் சிறப்பு வழிபாட்டிற்கு வாருங்கள் , சிறப்பு கூட்டத் தொடருக்கு வாருங்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.
இங்கே வராமல் பீஹாருக்குப் போய் பிரதமர் பேசுகிறார் “ கற்பனை செய்ய முடியாத தாக்குதலை நாங்கள் நடத்துவோம்” என்றார். கற்பனை செய்ய முடியாத தாக்குதலை நடத்துவார் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நடத்தினார் , யார் நடத்தினார் ? அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தினார் கற்பனையே செய்ய முடியாத ஒரு தாக்குதலை. இந்தப் பிரச்சனையில் அதிகமாகத் தோல்வி அடைந்திருப்பது உள்துறை அமைச்சகமா ? அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகமா? என்ற விவாதத்தை இந்த அவை நடத்திக் கொண்டிருப்பது எதிர்கட்சிகளாகிய நாங்கள்.
சர்வதேச நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. அதன் நிர்வாகக் குழுவில் 25 நாடுகள் இருக்கிறது . அதில் ஒரு நாடு கூட இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. உலக அரங்கில் இந்தியாவை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் நீங்கள் என்பதை இங்கே நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதேபோல பாலஸ்தீன பிரச்சனையில் ஐநா தீர்மானத்தில் இருந்து விலகியது, ஈரான் மீதான தாக்குதல் விவகாரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்துப் போடாதது, ட்ரம்ப்பினுடைய பேச்சுக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றாதது , வர்றீங்க மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒரு கோழை நாடாக கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் இங்கே குற்றஞ்சாட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
எனக்கு முன்னாள் பேசிய மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்குச் சொல்வதற்கு அனைத்துக் கட்சிக் முழுசா நீங்கள் அனுப்பினீர்கள். எதிர்கட்சிகளெல்லாம் அதில் பங்கெடுத்தார்கள். என்ன விசித்திரம் தெரியுமா ? உங்களால் கடந்த காலங்களில் யாரெல்லாம் தேச துரோகிகள் என்று சொன்னீர்களோ , அந்த தேசத்துரோகிகளில் பலர் எதிர்க்கட்சி குழுவில் பங்கெடுத்தோம். ஏனென்றால் எங்களுக்கு முக்கியம் தேசம் தான். அதுமட்டுமல்ல ஒவ்வொரு குழுவிலும் ஒன்று அல்லது இரண்டு இஸ்லாமிய எம்.பிக்கள் பங்கெடுத்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இஸ்லாமிய எம்பிகளுக்கான பிரதிநிதித்துவத்தை கொடுத்த முதல் விசயம் இது தான் . அதைக் கொடுத்தவர்கள் எதிர்க்கட்சிகளாகிய நாங்கள்.

நேற்றைய தினம் நம்முடைய மரியாதைக்குரிய பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து சோழர்களுடைய பேரரசை நினைவுபடுத்தி சோழர்கள் நடத்திய போரையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார். நான் ஒரு வரலாற்று மாணவனாக, வரலாற்றை அறிந்த எழுத்தாளன் என்ற முறையில் சொல்கிறேன் , இந்தியாவில் இருந்த ஒரு பேரரசு கடல்கடந்த வெற்றியைப் பெற்றது என்றால் அது ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் சோழப் பேரரசு மட்டும்தான்.

அந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா ? ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ தான் நடத்திய எல்லா போரையும், தான் ஆரம்பித்த எல்லா போரையும் அவன் தான் முடித்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் முடித்து வைக்கவில்லை. '

மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை முடித்து வைத்தது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்பதை 25 முறை சொன்னார். ராஜராஜன் ஆரம்பித்த போரை பக்கத்து நாட்டு மன்னன் முடித்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜ ராஜனும் , ராஜேந்திரச் சோழனும்.

எனவே இன்றைக்கும் கூட இந்த அவையில் நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் விவாதத்தை ஆரம்பித்து பேசினார் . ராமன் எப்படி இலங்கையின் மீது படையெடுத்து ராவணனைக் கொன்றானோ அதேபோல இந்தப் படையெடுப்பை பிரதமர் நடத்தியிருக்கிறார் என்று சொன்னார். இன்னொரு அமைச்சர் எழுந்து சொல்கிறார் , என்ன சொன்னார் ? சிசுபாலனுடைய தலையை வெட்டுவதற்கு சுதர்சன சக்கரத்தை கிருஷ்ணன் பயன்படுத்தியதைப் போல பிரதமர் படைகளைப் பயன்படுத்தினார் என்று சொல்கிறார். "ராமன், கிருஷ்ணன் போன்ற கடவுள்களை எல்லாம் உங்கள் தோல்விகளை மறைக்க இவ்வளவு மலினமாக பயன்படுத்துவது நியாயமா? ஆத்திகவாதிகளின் மனம் புண்படாதா? இந்துக்களின் மனம் புண்படாதா? என்பதை மிக வேதனையோடு நாங்கள் இங்கு கேட்கிறோம்.

மாண்புமிகு பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது பேச்சில் ஒருமுறை கூட மறந்துகூட கர்னல் சோஃபியா குரேஷிக்கு ஏற்பட்ட அவமதிப்பை , மத்திய பிரதேசத்தின் உங்கள் எம்பி விஜய் ஷா அவமரியாதையாக பேசியதைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் ?

அதேபோல பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்தான் குதிரை ஓட்டியான அதில் ஷா. அதில் ஷாவின் வீரத்தைப் பாராட்டி ஒரு வார்த்தை கூட நீங்கள் பேசவில்லை. ஒரு அதில் ஷா மட்டுமல்ல தீவிரவாதத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அதில் ஷாக்கள் இருக்கிறார்கள் என உணர்த்தியது காஷ்மீர் மக்கள் . அந்த காஷ்மீர் மக்களின் ஒருமைப்பாட்டை அங்கீகரித்து ஒருவார்த்தை நீங்கள் பேசவில்லை .

வேதனையோடு நாங்கள் சொல்கிறோம் . மதரீதியான வேறுபாடுகளை பயங்கரவாதத்தை வைத்து அதிகரிக்க முடியாது என்பதுதான் இந்தியா சொல்கிற செய்தி. அது தான் இந்தியா . அந்த இந்தியாவை உங்களால் ஒருபோதும் பிளக்கவோ, வெறுக்கவோ முடியாது .
நாங்கள் வெல்வோம் !

மக்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் முழங்கியது.

Tuesday, July 15, 2025

கொஞ்சமா? இல்லை ஹெவியா பொறாமை

 


கடந்த மூன்று நாட்களாக தோழர் சு.வெங்கடேசன் முக நூலில் வறு பட்டுக் கொண்டிருக்கிறார். காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது எப்படி வன்மம் தெளிக்கப்படுவதற்கான காரணமாக அமைந்ததோ அது போல இப்போதைய வன்மத்திற்கு "வேள்பாரி" நாவலின் விற்பனை ஒரு லட்சம்  பிரதிகளை கடந்திருப்பது  காரணமாக உள்ளது.



சங்கிகளைத் தவிர வேறு யாரெல்லாம் என்று பார்த்தால் . . .

பெரும்பாலும் எழுத்தாளர்கள் . . .
சுவாரஸ்யமாக எழுத முடியாத எழுத்தாளர்கள், இரண்டாவது பதிப்பை காணாதவர்கள்(இடதுசாரிகள் என்ற வரையறைக்குள்ளும் வருபவர்கள்) . சி.பி.எம் மீது ஒவ்வாமை கொண்டவர்கள், ரஜினிகாந்த் கலந்து கொண்டது வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்தது போலாகி விட்டது.  அதனால் முற்போக்கு முகாமில் இருக்கும் கமலஹாசன் ரசிகர்களும் இணைந்து விட்டனர்.

அத்தனை வன்மத்திற்கும் ஒரே ஒரு காரணம்தான் உண்டு.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் எழுதிய ஒரு நூலின் விற்பனை ஒரு லட்சத்தை கடப்பதா என்ற பொறாமையன்றி வேறில்லை. 

இது ஒன்றும் புதிதல்லவே!

திருவிளையாடலில் வந்த வசனம்தானே!

Tuesday, March 11, 2025

நாகரீகம் எது? அருமை சு.வெ

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெம்கடேசன் இன்று மக்களவையில் நிகழ்த்திய உணர்ச்சிகரமான உரை.

சங்கிகளுக்கு வெ.மா.சூ.சொ.ரோ இருந்தால் தூக்கில் தொங்குவார்கள். அது எதுவும் இல்லையென்பதால்தான் நாலு கால் ஜந்துகளாக திரிகிறார்கள்.

காணொளியை முழுமையாக பாருங்கள். அதில் வெடிக்கும் கோபத்தை பார்க்க தவறாதீர்கள்.



பட்டினி போட்டாலும் பணியாத தன்மானமும் , பகுத்தறிவும் கொண்ட தமிழ்சமூகம் உங்களுக்குப் பாடம் புகட்டும்

ஒன்றிய நிதிமானியக் கோரிக்கையில் எனது உரை ;
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே ,
வணக்கம் .
எனக்கு முன்னால் குறுக்கீடு செய்து பேசிய மாண்புமிகு அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் இந்தியை எதிர்த்தால் அது இந்தியாவை எதிர்ப்பது என்று அவர் கூறினார். இந்தித் திணிப்பை எதிர்த்தால் தான் அது இந்தியாவைப் பலப்படுத்துவது என்பதை அமைச்சருக்கு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
இந்தியா ஹிந்தியா அல்ல ; எல்லா மொழிகளினுடைய சமத்துவத்தில் தான் இந்தியா நிற்கிறது. காசி தமிழ்ச் சங்கத்திற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை , கல்விக்கு காசு கொடுங்கள் என்று கேட்டால் அது புரியாத உங்களுக்கு , எந்தத் தாய்மொழியின் அருமையும் புரியப் போவதில்லை. கல்வியின் அருமையும் புரியப் போவதில்லை.
கூட்டாட்சியின் மீதான தாக்குதல் தான் நவ பாசிசத்தினுடைய கூறு. நாங்கள் நீங்கள் கொடுத்த அறிக்கையில் இருந்து சொல்கிறோம். நிதி அயோக்கின் அறிக்கை வறுமை ஒழிப்புத் திட்டத்தில் முன்மாதிரியாக இருக்கிற முதல் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது. உங்களது பொருளாதார அறிக்கையில் மனிதவளத்தைப் பெருக்குவதில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது. நீங்கள் கொடுத்திருக்கிற அறிக்கையில் டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது.
உயர்கல்வி துவங்கி பொது சுகாதாரம் வரை தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் நாங்கள் கொடுக்கிற 1 ரூபாய் வரிக்கு நீங்கள் திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா மட்டுமே என்பது எவ்வளவு அவலமானது . ஆனால் பீகார் செலுத்துகிற 1 ரூபாய் வரிக்கு 7 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறீர்கள். உத்தரப் பிரதேசம் கொடுக்கிற 1 ரூபாய் வரிக்கு 1.75 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறீர்கள் . இப்படி திருப்பிக் கொடுக்கிற எங்கள் உரிமையைக் கேட்டால் , நீங்கள் எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள்.
நிதியில் , கல்வியில் , ஆட்சி நிர்வாகத்தில் என எல்லா முனைகளிலும் கூட்டாட்சியைத் தாக்குகிறீர்கள். மாநிலங்களைப் பட்டினி போட்டு பணிய வைக்கிறீர்கள். பட்டினி போட்டு பணிய வைக்கும் உங்களது அதிகாரத்திற்கு எதிராக நிமிர்ந்து நிற்பவர்களை நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பயன்படுத்திய வார்த்தையை நீங்களே திரும்பப் பெறுகிறீர்கள் என்றால் , எவ்வளவு நாகரிகமற்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தினீர்கள் என இப்போதாவது நீங்கள் உணர்கிறீர்களா என்று நாங்கள் கேட்கிறோம். நீங்கள் அந்த வார்த்தையைத் திரும்பப் பெற்ற பிறகும் தமிழ்நாட்டிலே இருக்கிற ஒரு ஒன்றிய அமைச்சர் உங்களது பேச்சை ஆதரிக்கிறார் என்றால் , இது தான் நாகரிகமா என்று நாங்கள் கேட்க நினைக்கிறோம்.
கல்வி அமைச்சகத்தின் கீழே வருகிற ஐஐடியின் இயக்குநர் மாட்டு மூத்திரம் குடிக்கச் சொல்கிறார் , அது நாகரிகமா எனக் கேட்க உங்களால் முடியவில்லை . கல்விக்குக் காசு கேட்டால் எங்களைப் பார்த்து நாகரிகமா என்று நீங்கள் எங்களைக் கேட்கிறீர்கள் .
அதேபோல இந்தியர்களைக் கைவிலங்கிட்டு அனுப்பி வைத்தது அமெரிக்கா. அதன் மீது கோபம் வரவில்லை. அதற்கு எதிராக கார்ட்டூன் போட்ட ஆனந்த விகடன் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கிறீர்கள். இது நாகரிகமா என்று உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம்.
மூன்று வருடமாகப் பற்றி எரிகிறது மணிப்பூர். ஒருமுறை கூட பிரதமர் போகவில்லை. ஒருமுறை கூட போகாத பிரதமர் இருக்கிற ஒரு அவைக்கு மணிப்பூரின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறீர்களே ? இது நாகரிகமா என்ற கேள்வியை உங்களிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

இதே அவையில் 543 உறுப்பினர்கள் இருக்கிறோம். ஆனால் 848 இருக்கையை இந்த அவையிலே நீங்கள் அமைத்திருக்கிறீர்கள். உங்களது மறைமுக சதித்திட்டத்திற்காக தென் மாநிலங்களின் உரிமையை நசுக்க நினைக்கிற உங்களின் சதிக்கு எதிராக இன்றைக்குத் தமிழ்நாடும் , தமிழ்நாட்டின் முதலமைச்சரும் , தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் இன்றைக்கு ஓரணியில் நிற்கிறார்கள். தென்மாநிலங்களுக்கு நீங்கள் இழைக்கிற வஞ்சகத்திற்கு எதிராக இந்தியாவின் கூட்டாட்சியைக் காப்பதற்கு நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம்.

அதேபோல இதே அவையில் நீங்கள் தாக்கல் செய்திருக்கிற இந்த நிதி நிலை அறிக்கையில் சிறு , குறு தொழில்களுக்கு மிக அதிகமான வட்டி. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு மிக அதிகமான வரிவிலக்கு. உங்களது வரிக்கொள்கையை ஒரு வரியில் விளக்குவதற்கு இது ஒன்றே போதுமென்று நினைக்கிறேன். அதேபோல கடந்த மூன்று மாதமாக MNREGA திட்டத்திற்கு கொடுக்க வேண்டிய தொகையை ஒன்றிய அரசு விடுவிக்க மறுக்கிறது. எங்களது மதுரை மாவட்டத்தில் மட்டும் 121 கோடி ரூபாய் உழைத்த மக்களுக்கான கூலியை நிறுத்தி வைத்திருக்கிறார் பிரதமரும் , நிதி அமைச்சரும் என்ற குற்றச்சாட்டை இந்த அவையிலே நாங்கள் முன்வைக்க விரும்புகின்றோம்.
அதேபோல இன்றைக்கு மும்மொழிக் கொள்கையைக் கடைபிடித்தால் தான் தமிழ்நாட்டின் கல்வித் துறைக்குக் கொடுக்க வேண்டிய 2500 கோடியை விடுவிப்போம் என்று கல்வி அமைச்சர் சொல்கிறார். பட்டினி போட்டு பணிய வைக்க முடியும் என்று அதிகார வர்க்கம் நினைத்தால் , பட்டினி போட்டாலும் பணியாத தன்மானமும் , பகுத்தறிவும் கொண்ட தமிழ்சமூகம் உங்களுக்குப் பாடம் புகட்டும். கொடுப்பதால் மட்டுமே நீங்கள் உயர்ந்தவர்கள் , பெறுவதால் மட்டுமே நாங்கள் தாழ்ந்தவர்கள் அல்ல. அரசியல் சாசனத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை தமிழ்நாடு மீண்டும் மீண்டும் புரிய வைக்கும்.

Wednesday, February 5, 2025

திருப்பரங்குன்றம் - பக்தி அல்ல, வெறுப்பரசியல்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். தமிழக அரசு மீண்டும் மீண்டும் சொதப்பிக் கொண்டிருக்கிறது. ஆட்சியின் செயலற்ற தன்மையை காண்பிக்கிறதா அல்லது காவிகள் ஆட்சிக்குள் ஊடுறுவியுள்ளதா என்பதை முதல்வர் கண்டறிய வேண்டியது உடனடி அவசியம்




திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி எழுப்பட்டுள்ள பிரச்சனை முருகப்பெருமான் சம்பந்தப்பட்டதோ, சிக்கந்தர் தர்ஹா சம்பந்தப்பட்டதோ அல்ல, முழுக்க முழுக்க பாஜக-வின் வெறுப்பு அரசியல் சம்பந்தப்பட்டது.

சு. வெங்கடேசன் எம் பி
திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்துத்துவா கும்பல் தங்களின் மதவெறி நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. 90-களில் இராமகோபாலன் வகையறாக்கள் முயற்சி செய்து தோல்வியடைந்ததை இப்பொழுது ஹெச்.ராஜா, அண்ணாமலை வகையறாக்கள் கையிலெடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது இந்து அறநிலையத்துறைக்கான உரிமை என்ன, சிக்கந்தர் தர்காவுக்கான உரிமை என்ன என்பது குறித்து, பல ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தீர்ப்பு வழங்கி உறுதிப்படுத்தியுள்ளன.

திருப்பரங்குன்றத்து மக்களாலோ, அல்லது சம்பந்தப்பட்ட இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தாலோ அல்லது தர்கா நிர்வாகத்தாலோ உரிமை சம்பந்தமான பிரச்சனை எதுவும் இப்போது எழுப்பப் படவில்லை. பின்னர் பிரச்சனையை எழுப்புவது யார்? ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் அமைப்புகள்தான் ஒன்றாகவும் நன்றாகவும் இருக்கும் ஊரில் மதவெறியை கிளப்பிவிட்டு தங்களின் வாக்கு வங்கியை பலப்படுத்த இதுவொன்றே வழி என்று இறங்கியுள்ளன.

அயோத்தி துவங்கி சம்பல் வரை அரங்கேற்றிய நிகழ்ச்சி நிரலை இங்கும் அரங்கேற்ற முயல்கின்றனர். இவர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றிய இந்த இடங்களில் எல்லாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றங்கள், இவர்களின் செயல்திட்ட நிறைவேற்றத்தின் பகுதியாக இருந்துள்ளன என்பது கசப்பான உண்மை.

திருப்பரங்குன்றத்திலும் அச்சு அசலாக அதே மாதிரியை இவர்களால் அரங்கேற்ற முடிகிறது என்றால் மாவட்ட நிர்வாகம் மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது என்பதே பொருள். திடீரென இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக மாறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை இருக்கிறது.

இங்கு வழிபாடு சார்ந்த உரிமை பிரச்சனை எழுப்பப்பட்டது என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறார்கள். இந்த பிரச்சனையை எழுப்பியது யார்? தர்காவில் கந்தூரி வழிபாட்டு உரிமையில் எந்த அடிப்படையில் காவல்துறை தலையிட்டது. காவல்துறைக்கு புகார் கொடுத்தது யார்? வருவாய் துறை எந்த அடிப்படையில் இதில் தலையிட்டது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் இந்துத்துவா அமைப்பினரின் நுண் திட்டங்களுக்குள் பொதிந்து கிடக்கிறது.

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்று அவர்களாகவே கேள்வி எழுப்பி, போலி வாட்ஸ் அப் செய்திகளை உருவாக்கி, பொது சமூகத்தில் பரப்பியவர்கள் குறித்து துளி அளவாவது அக்கறை கொண்டு காவல்துறை தலையீடு செய்ததா? வெறுப்பு பிரச்சாரம் தங்கு தடையின்றி பரப்படும் போது ஒரு நடவடிக்கைகூட காவல்துறையிடமிருந்து இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஜனவரி 27 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் திமுக, அதிமுக, காங்., சிபிஎம், சிபிஐ, தெமுதிக, விசிக, மநீமை, மமக, ஐயூஎம் எல் உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள் திருப்பரங்குன்றம் மலையில் இது வரை இருந்து வந்துள்ள வழிபாட்டு மரபுகள் என்ன என்பதையும், அதில் தலையீடு செய்து பிரச்சனையை உருவாக்கி மக்கள் ஒற்றுமையை கெடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் ஆணையருக்கும் மனு அளித்துள்ளனர். மக்கள் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பவர்களை தனிமை படுத்த கோரும் மிக முக்கிய நடவடிக்கை இது. அரசியல் கட்சிகள் மிகுந்த பொறுப்புணர்வோடு இந்த பணியை செய்தன.

இந்த கட்சிகளை சார்ந்தவர்கள் மட்டுந்தான், இதற்கு முன் இந்த ஊரில் இருந்தார்களா? மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையில் அயல்நாட்டிலிருந்து ஜனவரி மாதம் தான் திருப்பரங்குன்றத்தில் நுழைந்துள்ளார்களா? காலகாலமாக இருந்து வரும் வழிபாட்டு மரபுகள் பற்றி எதுவும் தெரியாதது போல, கட்சிகள் சொல்வதை எழுதி வாங்கி, நாங்கள் நீதிமன்றத்தில் தருகிறோம் என்று சொல்வது மட்டும்தான் மாவட்ட நிர்வாகத்தின் பணியா?

மதவெறியர்களை தனிமைப்படுத்த வேண்டிய ஒரு பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் மெத்தனமான அணுகுமுறையோடு செயல்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு நிறைவேற்றப்பட்ட முறையும், நேற்று நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் வாதிட்ட முறையும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதற்கு யார் பொறுப்பேற்பது என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி எழுப்பட்டுள்ள பிரச்சனை முருகப்பெருமான் சம்பந்தப்பட்டதோ, மலை சம்பந்தப்பட்டதோ, சிக்கந்தர் தர்ஹா சம்பந்தப்பட்டதோ அல்ல, முழுக்க முழுக்க பாஜக-வின் வெறுப்பு அரசியல் சம்பந்தப்பட்டது.

அக்கட்சியின் தலைவர் ஹெச்.ராஜா, திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்றும், அயோத்தி போல முதல் யுத்தம் திருப்பரங்குன்றத்தில் துவங்கிவிட்டது என்றும் பழங்காநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஷம் கக்கியுள்ளார்.

எந்த அயோத்தியை தங்கள் அரசியலின் அடிப்படையாக்கினார்களோ அதே அயோத்தியில் இந்த மக்களவை தேர்தலில் தோற்கடித்து விரட்டப்பட்டார்கள்.

மதவெறியை தனிமை படுத்தும் ஆன்மீக பலமும், பாசிசத்தை எதிர்கொண்டு வீழ்த்தும் மதச்சார்பற்ற அரசியலின் தனித்துவமிக்க பலமும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஹெச் ராஜாவின் மதவெறி கணக்குகளை தவிடுபொடியாக்கும் வலிமை குன்றத்திற்கு உண்டு
.
தீய நோக்கங்களுக்காக இறைவனின் பெயரை பயன்படுத்துபவனே ஆன்மீகத்தின் முதல் எதிரி என்பதை நன்கு அறிந்த திருப்பரங்குன்றத்து மக்களும், தமிழகத்து மக்களும் பாஜக-வின் வெறுப்பு அரசியலை முறியடித்து காட்டுவார்கள்.

Thursday, January 23, 2025

ஸ்டிக்கர் ஒட்டி ஆட்டுக்காரனுக்கு சமர்பணம்

 "செத்ததுக்கு செல்லாமல் பத்துக்கு போன" ஆட்டுக்காரனால்தான் டங்க்ஸ்டன் திட்டம் ரத்தானதென்று கதைத்துக் கொண்டிருக்கும் அயோக்கிய, அடி முட்டாள் சங்கிகள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு கீழே உள்ளது.

போராட்டத்தை முழுமையாக விவரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய பதிவை ஸ்டிக்கர் ஒட்டி ஆட்டுக்காரனுக்கு சமர்ப்பிக்கிறேன்.




டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து!

ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாமல் போராடிய மக்களின் மகத்தான வெற்றி.
சு. வெங்கடேசன் எம்.பி

அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலத்தை உள்ளடக்கிய மதுரை மேலூரின் 2015.51 எக்டர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்திருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. வரவேற்கத்தக்க இச்செய்தி ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாது உறுதியுடன் போராடிய மதுரை மக்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக கடந்த நவம்பர் மாதம் ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. இச்செய்தி வெளியானவுடனாக இத்திட்டத்தால் தமிழர் வரலாற்றுப் பெருமைகள் குவிந்து கிடக்கும் மற்றும் உயிர்ப்பன்மைய முக்கியத்துவமிக்க பகுதிகள் அழியக்கூடிய அபாயம் இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக இது தொடர்பான தகவல்களைத் திரட்டி 19.11.2024 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். 21.11.2024 அன்று டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதினேன். பின்னர் அவரை நேரில் சந்தித்தும் இத்திட்டத்தைக் கைவிடக்கோரி வலியுறுத்தினேன். 3.12.2024 அன்று நாடாளுமன்றத்தில் இத்திட்டத்தின் பாதகமான விளைவுகளை எடுத்துரைத்தேன். இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சருக்குப் பதிலளித்த ஒன்றிய சுரங்க அமைச்சகம் இத்திட்டத்தை உரிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றித் தொடருவோம் என உறுதிபடத் தெரிவித்தது.

இதற்கிடையில் தமிழ் நாடு அரசு இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதை ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருந்தது. ஆனால், இத்தனை முயற்சிகளுக்குப் பின்னரும் திட்டத்தைத் தொடர்வதில் ஒன்றிய அரசு உறுதியாக இருந்தது. அரிட்டாப்பட்டி , மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 எக்டர் நிலப்பகுதியைத் தவிர்த்து 1800 எக்டர் அளவிலான நிலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. ஒன்றிய அரசின் இந்த சூழ்ச்சியை மக்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்துப் பரப்புரை செய்தோம். ஒருபிடி மண்ணைக்கூட மேலூரில் இருந்து எடுக்க முடியாது என முழங்கினோம்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள் மூன்று நாட்கள் மகத்தான நடைபயண பிரச்சாரத்தை மேற்கொண்டனர். தொடர்ந்து மண்ணையும், மக்களையும் காக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜனவரி 7 ஆம் தேதி 20 கி.மீட்டருக்கு மேல் நடந்தே சென்று போராட்டத்தை முன்னெடுத்தனர். திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளையும், தமிழக பா.ஜ.க.வின் மடைமாற்றும் உத்திகளையும் நம்பாமல் தமிழர் வரலாற்றுப் பெருமைகளையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் காக்கும் நோக்கில் மதுரை மக்கள் காட்டிய உறுதிப்பாடுக்கு முன் இன்று ஒன்றிய அரசு அடிபணிந்துள்ளது.

எப்படியாவது இத்திட்டத்தைச் செயல்படுத்தி இயற்கை வளங்களை வேதாந்தாவுக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை மக்களின் போராட்டம் உடைத்து நொறுக்கியுள்ளது.

டங்க்ஸ்டன் ஏல ஒப்பந்தத்தை வேதாந்தாவுக்கு எதிராக மட்டுமல்ல யாருக்கும் தரவிட மாட்டோம் என்னும் உறுதியும், ஒருபிடி மண்ணைக்கூட அள்ள விட மாட்டோம் என்னும் தீரமும் , ஏலத்தை முழுமையாக ரத்துச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என்கிற மக்களிம் நெஞ்சுரமும் இன்று ஒன்றிய அரசை ஆட்டிப் பார்த்திருக்கிறது. அதன் விளைவாகவே ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தை கைவிடுவதாக முழுமையாக அறிவித்துள்ளது. இது உறுதிமிக்க மக்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி. நமது வாழ்வையும், வரலாற்றையும் , வளத்தையும் பாதுக்காக்க நடைபெற்ற போராட்டத்திற்கு கிடைத்த தீர்க்கமான வெற்றி.

போராட்டங்களே நம் மண்ணை மீட்கும் . நம் மக்களைக் காக்கும். இந்தப் போராட்டத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் களம்கண்ட அனைத்து அமைப்புகள், விவசாய பெருமக்கள், சூழல் ஆர்வலர்கள் என எல்லோருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி. இப்போதல்ல , எப்போது எந்த அரசும் எங்கள் வாழ்வையும், வளங்களையும் சூரையாட அனுமதிக்க மாட்டோம்.
All reactions:
You, Subba Rao Chandrasekara Rao, Shahul Hameed and 908 others