Showing posts with label உலகமயம். Show all posts
Showing posts with label உலகமயம். Show all posts

Wednesday, February 19, 2025

ஆளில்லா கடையிலா மோடி டீ விற்கிறார்?

 


 

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 % ஆக உயர்த்துவோம் என்று நிர்மலா அம்மையார் அறிவித்தது தொடர்பாக சில நாட்கள் முன்பு எழுதியிருந்தேன்.

 இதனை 74 % ஆக உயர்த்திய போது எழுதிய பதிவை கீழே மீண்டும் பகிர்ந்துள்ளேன்.

 அதனை முழுமையாக படியுங்கள். பழைய பதிவு நீல நிறத்தில் உள்ளது.  இப்போது பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை ப்ரௌன் நிறத்தில் கொடுத்துள்ளேன்.

மோடிஜி ஆளில்லா கடையில் யாருக்காக ?

 


இன்சூரன்ஸ் துறையில் அன்னிய  நேரடி முதலீட்டு வரம்பை 49 % லிருந்து 74 % ஆக உயர்த்தப் போவதாக மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அது அவசியமா என்று பார்ப்பதற்கு முன்பாக இரண்டு சம்பவங்களை நினைவு கூர்வது அவசியம்.

 சம்பவம் 1 : இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணைய மசோதா (அப்போது வெறும் கட்டுப்பாடுதான் வளர்ச்சி இல்லை)  26.08.1997 அன்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார். இன்சூரன்ஸ்துறையில்  தனியார் துறையை அனுமதிக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு திருத்தம் கொண்டு வர அத்திருத்தம் தோற்கடிக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் துறையில் தனியார் கம்பெனிகள் இருக்கலாமே தவிர அன்னிய மூலதனமோ, அன்னிய கம்பெனிகளோ அனுமதிக்கப்படக்க் கூடாது என்ற திருத்தத்தை பாஜக உறுப்பினர் ஒருவர் கொண்டு வருகிறார். இடதுசாரிகள் அந்த திருத்தத்தை ஆதரிப்பதாகச் சொல்கின்றனர். அப்படியானால் அந்த திருத்தம் வெற்றி பெறும் என்பதை உணர்ந்த அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் ஐ.ஆர்.ஏ மசோதாவை திரும்பப் பெறுகிறார். இன்சூரன்ஸ் துறையில் அன்னியக் கம்பெனிகளை வர விடாமல் தடுத்தவர்கள் நாங்கள்தான் என்று பாஜகவினர் கொஞ்ச நாள் பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள்.

 சம்பவம் 2 : வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 26 % அன்னிய நேரடி முதலீட்டோடு தனியார் நிறுவனங்களை இன்சூரன்ஸ் துறையில் அனுமதிக்கும்  இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காணைய மசோதாவை 28.10.1999 அன்று பாஜக அரசு மக்களவையில் அறிமுகம் செய்கிறது. அன்றைய தினம் இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய மக்களிடம் நாம் பெற்ற 1,50,54,577 கையெழுத்துக்கள் கொண்ட படிவங்கள் அன்றைய  மக்களவைத் தலைவர் திரு ஜி.எம்.சி.பாலயோகி அவர்களிடம் அளிக்கப்படுகிறது. அதே நாள் புதுடெல்லியில் பாஜகவின் குரு பீடமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவான ஸ்வதேசி ஜக்ரான் மஞ்ச், அதன் தலைவரான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தலைமையில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஒரு தர்ணா போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.

 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவு அன்னிய மூலதனத்தை அனுமதிக்கும் மசோதாவை அறிமுகம் செய்கிறது. இன்னொரு பிரிவோ அதற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. பாரதியார் சொன்ன “நடிப்புச் சுதேசிகள்” என்ற வாசகம் இவர்களைத் தவிர வேறு யாருக்கு பொருந்தும்?

 அன்னிய மூலதனமே கூடாது என்று திருத்தம் கொண்டு வந்தவர்கள் அவர்களின் ஆட்சியில் முதலில் 26 % அன்னிய மூலதனத்தை அனுமதித்தார்கள். அதையும் அவர்களே எதிர்ப்பதாக வேறு ஒரு நாடகத்தையும் நடத்தினார்கள்.

 மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் காலத்தில் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி 49 % வரை அன்னிய நேரடி முதலீட்டிற்கு ரத்தினக் கம்பளம் விரித்தனர்.

 இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனம் வந்தால் கட்டமைப்புத் தேவைகளுக்கான நிதி கொட்டிக் கொண்டே இருக்கும் என்று சொன்னார்கள், சொல்கிறார்கள், சொல்வார்கள். கட்டமைப்புத் தேவைகளுக்கான முதலீடுகள் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரும் என்பது அன்றைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் சொன்ன உறுதிமொழி. அப்படிப் பார்த்தால் இந்த இருபது வருடங்களில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் முப்பது லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும். ஆனால் அதிலே நூற்றில் ஒரு பங்காவது வந்ததா என்றால் அது சந்தேகமே!

 அன்னிய மூலதன வரம்பை 49 % லிருந்து 75 % ஆக உயர்த்த துடிக்கிறார்களே, இப்போது எத்தனை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் 49 % அன்னிய நேரடி மூலதனம் உள்ளது?

 ஐ.ஆர்.டி.ஏ வின் 2018-2019 ஆண்டறிக்கை உண்மையைச் சொல்கிறது. மொத்தமுள்ள 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களில் அன்னிய மூலதனமே கிடையாது.  ஏகான், அவியா லைப், பார்தி ஏஎக்ஃஎஸ், ஆதித்ய பிர்லா சன்லைஃப், டிஹெச்எப்எல் பரமெரிக்கா, எடெல்வாய்சின் டோக்யோ, ரிலையன்ஸ் நிப்பான், டாடா ஏ.ஐ.ஏ ஆகிய  எட்டு நிறுவனங்களில் மட்டுமே 49 % அன்னிய முதலீடு உள்ளது. ஏழு நிறுவனங்களில் அன்னிய மூலதனம் 26 % லிருந்து 49 % க்குள் உள்ளது. ஐந்து நிறுவனங்களில் 26 % க்கும் குறைவாகத்தான் உள்ளது. அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த மூலதனமே 27,515.75 கோடி ரூபாய்தான். அதில் அன்னிய மூலதனம் 9,764,20 கோடி ரூபாய்தான். அது வெறும் 35.49 % மட்டுமே.

 பொது இன்சூரன்ஸ் துறையில் நிலைமை இன்னும் மோசம். மொத்தமுள்ள 21 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களில் அன்னிய மூலதனமே கிடையாது. ஐந்து நிறுவனங்களில் மட்டுமே 49 % அன்னிய மூலதனம் உள்ளது. 21 கம்பெனிகளின் மொத்த மூலதனமான 9570.88 கோடியில் அன்னிய மூலதனம் வெறும் 2,895.99 கோடி ரூபாய் மட்டுமே. 29.79 % தான்.

 அன்னிய மூலதன வரம்பை 49 % ஆக உயர்த்தும் சட்டத் திருத்தம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வந்தாலும் அது 15 ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் 16 பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் தேவைப்படவே இல்லை. இந்த தனியார் நிறுவனங்களுக்கு கூடுதல் அன்னிய மூலதனம் தேவைப்படவே இல்லை என்பதுதானே யதார்த்தம்! அன்னிய மூலதன அளவு குறைவாக இருந்தும் அவர்கள் வணிகம் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்!

 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் 49 % வரம்பையே பயன்படுத்தாத நிலையில் 74 % ஆக உயர்த்த வேண்டிய அவசியம் ஏன்? ஆளில்லாத கடையில் யாருக்காக டீ ஆத்துகிறது என்ற கேள்வி மனதுக்குள் எழும்.

 நரியின் பார்வை இரையின் மீதுதான் என்பதை மறந்து விடக் கூடாது. பல இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு இந்தியக் கம்பெனிகளின் பங்குதாரர்களாக இருப்பது என்பது வேப்பங்காயாக கசக்கக் கூடியது. 100 % மூலதனத்தோடுதான் செயல்பட வேண்டும் என்ற கொள்கையில் மாறாத உறுதியோடு இந்தியாவில் கடை விரிக்காத அன்னியக் கம்பெனிகள் இருக்கிறார்கள்.

 இங்கிலாந்தின் லாயிட்ஸ் நிறுவனம் 100 % முதலீட்டில் மட்டுமே வருவது என்று பிடிவாதமாக உள்ளது. அதே போல உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான வாரண் பஃபெட்டின் நிறுவனமாக ஜென் ரீ நிறுவனத்தையும் சொல்லலாம். இவை இன்று இந்தியாவில் மறு இன்சூரன்ஸ் நிறுவனமாக செயல்படுகிறதே தவிர நேரடி இன்சூரன்ஸ் வணிகத்திற்கு வரவில்லை.

 நேரடியாக 100 % அன்னிய மூலதனத்தை அனுமதிப்பதற்கான முதல் கட்டமாகவே இப்போது அன்னிய மூலதன வரம்பை 74 % ஆக உயர்த்தியுள்ளது. அரசின் இறுதி இலக்கு என்பது 100 % தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

 அது மட்டுமல்ல, பென்ஷன் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அரசுக்கு உள்ளது. இன்சூரன்ஸ் துறையில் உயர்த்தினால் அங்கேயும் உயர்த்துவது மிகவும் எளிதாகி விடும்.

 பென்ஷன் நிதியை நிர்வகிப்பவர்களாக இன்று ஏழு நிறுவங்கள் உள்ளன. அவர்கள் நிர்வகிக்கும் தொகை 2018 ல் 2,34,579 கோடி ரூபாயாக இருந்தது 2019 ல் 3,18,214 கோடி ரூபாயாக 36 % அதிகரித்துள்ளது. இந்த தொகை அன்னியக் கம்பெனிகளின் கண்களை உறுத்துகிறது.

 அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதன் பொருள் என்பது ஒன்றுதான். இந்திய மக்களின் உள்நாட்டு சேமிப்பில் ஒரு பகுதிதான் இன்சூரன்ஸ் பிரிமியமாக மாறுகிறது. அப்படிப்பட்ட உள்நாட்டு சேமிப்பின் மீதான கட்டுப்பாடு அன்னிய மூலதனத்தின் கைகளுக்குச் செல்லும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும். அதனால்தான் இதை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. தேசத்தை நிஜமாக நேசிக்கிற ஒவ்வொருவரும் கண்டிப்பாக எதிர்த்திட வேண்டும்.

 முடிப்பதற்கு முன்பாக

 உலகப் பொருளாதார நெருக்கடி வந்த போது அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய வங்கிகள் திவாலாகின. அந்நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான அமெரிக்கன் இன்சூரன்ஸ் க்ரூப் (ஏ.ஐ.ஜி) திவாலின் விளிம்புக்குச் சென்றது. அரசு ஏராளமான நிதி கொடுத்து அந்த நிறுவனத்தை மீட்டது. வணிகத்தில் அரசுக்கு வேலை இல்லை (Government has no business in business) என்று எப்போதும் உபதேசித்துக் கொண்டிருக்கிற யாரும் ஒரு வணிக நிறுவனத்தை பாதுகாக்க ஏன் வரி செலுத்துவோர் பணத்தை விரயம் செய்கிறது என்று கேட்கவே இல்லை.

 ஏ.ஐ.ஜி யும் டாடாவும் இணைந்து டாடா ஏ.ஐ.ஜி என்ற பெயரில் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். ஏ.ஐ.ஜி தடம் புரண்ட போது அன்றைய ஐ.ஆர்.டி.ஏ தலைவர் விவேக் நாராயணன் “டாடா ஏ.ஐ.ஜி நிறுவனத்தில் 24 % மட்டுமே ஏ.ஐ.ஜி யிடம் உள்ளது. மீதமுள்ள 76 % டாடாவிடமே உள்ளதால் பாலிசிதாரர் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று அறிக்கை அளித்தார். ரத்தன் டாடா முழுப் பக்க விளம்பரங்களை பல நாளிதழ்களில் பல நாட்கள் அளித்தார்.

 24 %  மட்டுமே  அன்னிய மூலதனம் இருந்ததால் கவலைப்படாதீர்கள் என்று சொல்ல முடிந்தது. அன்னிய மூலதனம் 74 % ஆக உயர்ந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பார்த்தால் அச்சம் வரவில்லையா?

 தன்னுடைய சேமிப்புக்கு என்ன ஆகும் என்ற அச்சத்தோடு ஒரு பாலிசிதாரர் வாழ்ந்திட வேண்டுமா?

 அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

 நான்கு வருடத்திற்கு முன்பு சொன்னதுதான். நிலைமையில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை. ஒரே ஒரு நிறுவனத்தில் மட்டும்தான் 74 % அன்னிய மூலதனம் உள்ளது. ஒட்டு மொத்தமாக 32 % அன்னிய முதலீடுதான் உள்ளது. அப்படியென்றால் ஆளில்லா கடையில் மோடி டீ விற்கிறாரா?

 இல்லை.

 பழைய பதிவில் சொன்னதை மறுபடியும் படியுங்கள்,

 “வந்தால் தனியாத்தான் வருவோம்” சில வெளிநாட்டு நிறுவனங்கள்  காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்காக 100 % அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கான முதல் கட்டமாகத்தான் 74 % ஆக உயர்த்தியுள்ளார்கள் என்று எழுதியிருந்தேன்.

 இப்போது அதுதான் நடந்துள்ளது.

 100 % அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுவதால் சில நிறுவனங்கள் இப்போது வரும்.

 இதன் மூலம் இப்போதுள்ள தனியார் நிறுவனங்களிலும் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

 எப்படி?

 விரைவில்  விரிவாக பார்ப்போம்.

பிகு : பழைய பதிவில் விவேக்கின் படத்தை பயன்படுத்தியதால் இப்போதைய பதிவில் "தெறி" திரைப்படத்தின் கடைசிக் காட்சியை பயன்படுத்தியுள்ளேன் . . .

Tuesday, January 18, 2022

கோல்கேட் பற்பசையும் டிராகுலா பற்களும்


இங்கே டிராகுலா பற்கள் யாருடையது என்பதை இப்பதிவை படித்து முடித்த பின்பு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சாமானியர்களின் வாழ்வைப் பறிக்கிற எல்லோருக்குமே ரத்தம் குடிக்கும் டிராகுலாவின் பற்கள்தான். 



 *நாளொரு கேள்வி: 17.01.2022*


தொடர் எண்: *596*

இன்று நம்மோடு அரசியல் பொருளாதார நிபுணர் *பிரவீன் சக்ரவர்த்தி* (இந்து நாளிதழ் கட்டுரையின் ஒரு பகுதி) தமிழில் சாரம்: க.சுவாமிநாதன்
#########################

*கேள்வி:* மகாராஷ்டிராவில் கால்கேட் பற்பசை வியாபாரிகள் அதைப் புறக்கணிக்கிற எதிர்ப்பை ஏன் தெரிவித்துள்ளார்கள்?

*பிரவீன் சக்ரவர்த்தி* 

இந்தியாவில் கால்கேட் போன்ற பெரு நிறுவனங்கள் நுகர்வு பொருள் சந்தையில் *7,00,000 சிற்றூர், கிராமங்களில் 1.30 கோடி கடைகளுக்கு* தங்கள் சரக்குகளை இடை நிலை விநியோகிப்பவர்கள் மூலம் கொண்டு செல்கின்றன. *இந்த நுகர்வோர் அளிப்பு சங்கிலியை நம்பி வாழ்பவர்கள் 2 கோடி குடும்பங்கள். அதாவது கிட்டத்தட்ட 10 கோடி பேர்.*

கால்கேட் இந்த அளிப்பு சங்கிலியை உடைத்து பி டூ பி (B2B) தொழில் நுட்பக் கம்பெனிகளான ரிலையன்சின் *ஜியோ மார்ட், ஊடான்* போன்றவை வாயிலாக நுகர்வோரை நேரில் சென்றடைய முயற்சிப்பதே பிரச்சினை. 

கோல்கேட் நிறுவனம் பாரம்பரிய இடைநிலை விநியோகிப்பவர்களுக்கு 100 கிராம் பேஸ்ட் ஐ ரூ 40 க்கு தந்தால் அவர்கள் சிற்றூர், கிராமக் கடைகள் வரை கொண்டு செல்லும் போது தூரத்தை பொறுத்து ரூ 45 லிருந்து ரூ 55 வரை அது விற்கப்படும். ஆனால் ஜியோ மார்ட், ஊடான் போன்ற நிறுவனங்கள் ரூ 35 க்கு நுகர்வோருக்கு கொண்டு போய் சேர்த்து விடுகின்றன. *நுகர்வோருக்கு இவ்வளவு விலைக் குறைப்பு கிடைக்கிறது எனில் கடைகளுக்கு போவார்களா?* இடை நிலை விநியோகிப்பவர் களுக்கும் வேலை இல்லை. 

இதுதான் பிரச்சினை. இந்த B2B தொழில் நுட்ப நிறுவனங்கள் வாயிலாக கோல்கேட் விற்பனை செய்யக் கூடாது என்பதே இடை நிலை விநியோகிப்பவர் கோரிக்கை. இதை கோல்கேட் ஏற்கவில்லை. இதனால்தான் இடை நிலை விநியோகிப்பவர் நடத்தும் *புறக்கணிப்பு போராட்டம்.* இதனால் மகாராஷ்டிராவின் கிராமக் கடைகளில் கோல்கேட் கிடைப்பதில்லை. 

ஒரு கேள்வி எழுகிறது. இடை நிலை விநியோகிப்பவர்களுக்கே ரூ 40 க்கு கொடுத்த   கோல்கேட் அதே விலைக்குதானே ஜியோ மார்ட்டுக்கு, ஊடானுக்கு தரும், *ஆனால் அந்த நிறுவனங்கள் எப்படி ரூ 35 க்கு விற்க முடியும்?* செயலிகள் வாயிலாக விற்பது என்றாலும் எப்படி வாங்குகிற விலையைக் காட்டிலும் எப்படி விற்பனை விலை குறைவாக இருக்க முடியும்? இதுவே *கழுத்தறுப்பு விலை* (Predatory Pricing) என்பது. இந்தியாவில் ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு துறையில் செய்த அதே அனுபவம்தான். இவர்கள் பெரு நிறுவனங்கள் என்பதால் சில ஆண்டுகளுக்கு நட்டத்தை தாங்குவார்கள். 

ஊடான் நிறுவனம் 5000 கோடி வரை நட்டத்தை சந்தித்துள்ளது. ஜியோ மார்ட் இதை விட கூடுதல் நட்டத்தை சந்தித்துள்ளது. நட்டத்தை சந்திக்கிற சில ஆண்டுகளில் இந்த இடை நிலை விநியோகிப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள். *அதற்குப் பிறகு சந்தை இவர்கள் கைகளில் முழுவதும் வந்து விடும்.* அப்புறம் இவர்கள் வைப்பதே விலை. அப்போது அந்த சின்னக் கடைக்காரர்களையும் கூட பயன்படுத்திக் கொள்வார்கள். (அவர்களின் லாபத்திலும் கை வைப்பார்கள். ஒரே கல்லில் மூன்று மாங்காய். இடை நிலை விநியோகிப்பவர்கள், சின்னக் கடைக்காரர்கள், நுகர்வோர் மூன்று பேருக்குமே ஆப்பு. *செ.வா*)

இதில் *இன்னொரு எதிரி* ஒளிந்திருப்பதுதான் கதையில் உள்ள ட்விஸ்ட். இவ்வளவு நட்டங்களை இந்த B2B பெரும் தொழில் நுட்ப நிறுவனங்கள் தாங்க முடிவதற்கு காரணம் *அமெரிக்க மலிவுக் கடன்* அவர்களுக்கு கிடைப்பதுதான். இந்த அந்நிய நிறுவன "வினை மூலதனக் கம்பெனிகள்" (Venture Capital Companies) அமெரிக்க பென்சன் சேமிப்புகளை தன் வசம் வைத்திருப்பவை. *ஒரு அமெரிக்க பென்சன் தாரர் இந்தியாவின் கழுத்தறுப்பு போட்டிக்கு உதவி நம்ம ஊர் சாதாரண இடை நிலை விநியோகிப்பவர்களின்வாழ்க்கையை பறிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?* இந்த கடன் அந்த பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். நம்ம ஊர் சாதாரண இடை நிலை விநியோகிப்பவர்களுக்கு கிடைக்காது. அவர்கள் நமது வங்கியில் போய் கடன் வாங்குவது என்றால் பிணை தர வேண்டும். தாவு தீர்ந்து விடும். 

இந்த கழுத்தறுப்பு விலைத் தந்திரம் *உலகளாவிய உத்தியாக* மாறி இருக்கிறது. ஃபேஸ் புக், அமேஜான் போன்ற நிறுவனங்கள் இப்படி ஆடும் ஆட்டங்கள் பற்றி அமெரிக்காவின் ஃபெடரல் டிரேட் கமிஷன் புதிய சேர்மன் லினா கான் மிகக் கடுமையாக விமர்சித்து இருப்பது குறிப்பிடத் தக்கது. 

கோடிக் கணக்கான மக்களின் வாழ்வைப் பறிக்கிற இந்த பெரு நிறுவனங்களின் விளையாட்டு இந்திய நாட்டின் சமூக அமைதியை சீர் குலைத்து விடும். 

*செவ்வானம்*

Friday, January 7, 2022

வீதிகளெங்கும் மக்கள் தலைகளாக . . .

 





*நாளொரு கேள்வி: 06.01.2022*

தொடர் எண் : *585*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
###########################

*கஜகஸ்தான் தெருக்கள் எல்லாம் மக்கள் தலைகள்*

கேள்வி: கஜகஸ்தானில் ஒரே அமளி துமளியாய் இருக்கிறதே!

*க.சுவாமிநாதன்*

கஜகஸ்தான் 1 கோடியே 20 லட்சம் மக்கள் வாழும் நாடு. வடக்கே ரஷ்யா, கிழக்கே சீனாவை எல்லைகளாக கொண்டது. *தெருக்கள் முழுவதும் போராட்டக்காரர்கள் தலைகள்* தென்படுவதாக செய்திகள் கூறுகின்றன. 

விமான நிலையம், அரசு  செயலகம், பல அரசு அலுவலகங்கள் எல்லாம் போராட்டக் காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கின்றன. 33 காவல் வாகனங்கள் உட்பட 120 வாகனங்கள் தீக்கிரையாகி உள்ளன. 400 வணிக கூடங்கள் தாக்கப்பட்டுள்ளன.  *எமர்ஜென்சியை* அதிபர் பிரகடனம் செய்துள்ளார். அமைச்சரவை பதவி நீக்கத்திற்கு ஆளாகியுள்ளது. 

*கேஸ் விலை* உயர்வே காரணம் என சொல்லப்படுகிறது. ஒரு லிட்டர் கேஸ் இந்திய ரூபாய் மதிப்பில் 10.20 லிருந்து ரூ 21 க்கு கிடு கிடு என உயர்ந்திருக்கிறது. 100% விலை உயர்வு. 90 சதவீத வாகனங்கள் கேஸ் மூலம் ஓடுகிற நாட்டில் மக்கள் மத்தியில் கோபம் வருவது இயல்புதான். 2019 இல் இருந்தே விலையை சந்தை தீர்மானிக்கும், மின்னணு வர்த்தகத்திற்கு நகரும் என்ற கொள்கை நிலை நோக்கி அரசு செல்ல ஆரம்பித்தது. அதன் உச்ச கட்ட தாக்கத்தைத்தான் அந்த தேசம் இன்று சந்தித்து வருகிறது.

ஆனால் இப் போராட்டத்தின் *வேர்கள்* கேஸ் விலை உயர்வை விட ஆழமானது. 

*ஒன்று,* உலக மயக் கொள்கைகளின் தோல்வி. சந்தை தீர்மானிக்கும் என்றால் மக்கள் நலன் பறி போகும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. 

*இரண்டாவது,* வருமானம் மீதான தாக்குதலாக மக்கள் பார்க்கிறார்கள். சராசரி வருமானம் ரூ 35000 ஆக உள்ள அந்த நாட்டில் எங்கள் வருமானத்தை ரூ 2,00,000 ஆக உயர்த்துங்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். 

*மூன்றாவது,* அங்குள்ள பொருளாதார நிலைமைகளின் மீதான குவி கோபம் (Pent up anger) ஆகும் இது. பெரும் ஏற்றத் தாழ்வுகள் உருவாகியுள்ள சூழலில் அதன் விளை பொருளாக இந்த கோபம் அமைந்துள்ளது.

ஆகவே கஜகஸ்தான் அனுபவம் எல்லா நாடுகளுக்குமே பாடம்தான். 

என்றாலும் இன்னும் கூடுதல் செய்திகளுக்காக காத்திருப்போம். வேறு பரிமாணங்கள் உண்டா என்பதையும் ஆய்வு செய்வோம்.

*செவ்வானம்*

Wednesday, September 22, 2021

பெரும் குப்பைக்குப் பின்னே!

 குப்பை பற்றிய கட்டுரை என்று ஒதுக்காமல் படியுங்கள். மிகவும் முக்கியமானது.

 


*நாளொரு கேள்வி: 21.09.2021*

 

வரிசை எண் : *478*

 

இன்று நம்மோடு "பூவுலகின் நண்பர்கள்" இணைய பதிவில் இடம் பெற்றுள்ள சூழலியல் ஆர்வலர் *. ஜியோ டாமின்

#########################

 

*"குப்பையும் வர்க்கமும்"*

 

கேள்வி: குப்பைகள் பெருகுவது எவ்வாறு எதிர் கொள்ளப்பட வேண்டும்? அது குறித்த சமூகப் பார்வை எவ்வாறு இருக்க வேண்டும்?

 

*ஜியோ டாமின்*

 

குப்பைகளைப் பற்றி படிக்கவும் எழுதவும் தொடங்கியதிலிருந்தே சென்னையின் குப்பைக் கிடங்குகளை நேரில் சென்று பார்த்து ஆழமாக அவற்றை அவதானிக்க வேண்டுமென்பது எனது நீண்டநாள் ஆவல். இது தொடர்பாக நான் ஒரு நண்பரிடம் விசாரித்தேன். அவர் அனுபவம் அதிர்ச்சியை தந்தது

 

குப்பைக் கிடங்குகளைப் பார்வையிட சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் அனுமதி பெறுவது அவசியம். அப்படி அந்த அனுமதிக்காக அலைந்தபோது இறுதியில் அனுமதிக் கடிதத்தில் கையெழுத்திட்ட அதிகாரி சொன்னதாக எனது நண்பர் சொன்ன விஷயம் என்னை அதிர்ச்சியடையச் செய்தது. *“நீங்க உங்களோட சொந்த ரிஸ்க்லதான் அதுக்குள்ளே போகப் போறீங்க. உலகில் என்னவெல்லாம் தொற்று வியாதிகளுக்கானக் கிருமிகள் உள்ளனவோ அத்தனையும் அங்கே இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. என்னெவெல்லாம் நச்சு வேதிப்பொருட்கள் உலகில் புழக்கத்தில் உள்ளனவோ அவை எல்லாவற்றுக்கும் நீங்கள் இலக்காக வாய்ப்புகள் உண்டு. சில நிமிடங்கள் அங்கே உலாவுவதுகூட உங்களுக்குக் கடுமையானப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதிகாரிகளாகிய நாங்களே அவற்றினுள் நுழைவதில்லை. தனிப்பட்ட முறையில் மாணவர்களாகிய நீங்கள் அங்கே செல்வதை நான் ஏற்கவில்லை. இதற்குமேல் உங்கள் விருப்பம்.”* என்றிருக்கிறார். இதைக் கேட்ட நண்பர் அனுமதி பெற்ற பிறகும் முடிவை மாற்றிக்கொண்டு தனது திட்டத்தைத் கைவிட்டிருக்கிறார்

 

குப்பைகளுக்கு ஒரு மந்திரசக்தி உண்டு. ஒரு நாட்டின் வளர்ச்சி  அதிகரிக்க அதிகரிக்க குப்பைகளும் அதிகரிக்கும். நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு குப்பைகளை உருவாக்குகிறோம் என்பதோடு ஒரு பழங்குடி சமூகம் எவ்வளவு குப்பைகளை உருவாக்கக்கூடும் என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள் இந்த உண்மை புரியும். *நாகரிகமும் வளர்ச்சியும் இணைந்து உருவாக்கிய குழந்தைகள்தான் குப்பைகள்போலும்! இவ்விடத்தில் ஒரு காடோடியை நம்மிடமிருந்து பிரித்துக்காட்ட நாம் பயன்படுத்தும்நாகரிகம்என்ற வார்த்தையே எத்தனை அருவெறுப்பானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.* 

 

ஒரு தனிநபர் சராசரியாக ஒருநாளில் உருவாக்கும் குப்பையின் எடையைக் கணக்கிட்டால் *கனடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்* முன்னணியில் நிற்கின்றன. இந்தியாவின் தனிநபர் குப்பையைவிட இந்த நாடுகளில் இருப்பது 7 மடங்குக்கும் மேல் அதிகமாகும். இந்தியாவையே எடுத்துக்கொண்டால் முன்னேறிய மாநிலங்கள் பின்தங்கிய மாநிலங்களைவிட அதிகமாகக் குப்பையை உருவாக்குகின்றன. முன்னேறிய நகரங்கள் பின்தங்கிய நகரங்களைவிட அதிகமாகக் குப்பையை உருவாக்குகின்றன. நகரங்கள் கிராமங்களைவிட அதிகமாகக் குப்பையை உருவாக்குகின்றன. ஒரு கிராமத்தின் வசதிமிக்க ஒரு குடும்பம் வறுமையில் உழலும் ஒரு குடும்பத்தைவிட மிக அதிகக் குப்பையை உருவாக்குகிறது

 

2016 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியா வருடத்துக்கு சுமார் 5.2 கோடி மெட்ரிக் டன் குப்பைகளை உருவாக்குகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னை நகரம் மட்டுமே அரசின் புள்ளிவிபரங்கள்படி சுமார் 18 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை ஒரு வருடத்தில் உருவாக்குகிறது. சராசரியாக இந்திய நகரவாசி ஒருவர் ஒரு நாளைக்கு 400 முதல் 450 கிராம் குப்பையை உருவாக்குகிறார். சிறு நகரங்களில் இது சுமார் 250 கிராமுக்குக் குறைவான அளவிலும் பெரு நகரங்களில் 500 கிராமுக்கு மேலும் உள்ளது. (மேற்கண்டப் புள்ளி விபரங்கள் Centre for Science and Environment இன் *NOT IN MY BACKYARD* புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.)

 

இந்தியாவில் *திடக்கழிவுகளில் மட்காக் குப்பைகளின் அளவு* சராசரியாக 40 முதல் 60 விழுக்காடு என்று எடுத்துக்கொண்டால் அதிகபட்ச மட்காக் குப்பைகளை வருமானத்தில் மேல்தட்டு மக்களும் குறைந்தபட்ச மட்கும் குப்பைகளை பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மக்களும் உருவாக்குகின்றனர். அதாவது குப்பையின் அளவிலும் எடையிலும் தரத்திலும் மோசமான , கையாள இயலாத கழிவுகளை மேல்தட்டு வர்க்கமே உற்பத்திச் செய்கிறது. இந்த தகவல்கள் எல்லாம் *வர்க்கமும் குப்பையும்* எப்படி ஒன்றோடொன்றுப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதை நன்கு உணர முடியும்.

 

ஆனால், அதே நேரத்தில் சுகாதாரம் சீர் செய்யும் பணியில் யார் அதிகம் இருக்கிறார்கள்? அது குறித்த ஒரு காட்சி நம் கண்முன் விரிந்தால் எந்த வர்க்கத்தினர் அல்லது எந்த வர்க்கத்தினரின் வாழிடங்கள் நம் மனக்கண்ணில் தோன்றும்இங்கு ஒரு விசித்திரம் புலப்படும்

 

ஒரு திரைப்படத்தில் துணி வெளுக்கும் தொழிலாளி பாத்திரத்தில் நடித்த நடிகர் *கவுண்டமணி* உலகத்தில் இரண்டே சாதிகள்தான் உண்டு. ஒன்று துணியை அழுக்காக்குகிற சாதி; இன்னொன்று துணியைத் துவைக்கிற சாதிஎன்பார். அதேப் போன்று சொல்வதானால் *‘இங்கு இரண்டே சாதிகள்தான். ஒன்று குப்பையை உருவாக்குகிற சாதி. இன்னொன்று அந்தக் குப்பையில் உழல்வதற்காகவும் அதைக் காலமுழுதும் சுமப்பதற்காகவும் கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதி’.*

 

வெயிலோமழையோ இல்லை இரவோபகலோ மூக்கைத் துளைக்கும் துர்நாற்றத்துக்கும் மூச்சுத்திணறச் செய்யும் புகைக்கும் இடையே அருவெறுப்பு கொள்ளச் செய்யும் பயன்படுத்தித் தூக்கி வீசப்பட்ட டயபருக்கும் நாப்கினுக்கும் இடையேக் கையைவிட்டு நெகிழிப்பையைத் துளாவி எடுக்கும் அந்த மனிதர்களைப் பாருங்கள்.

 

*யாரிவர்கள்?*

 

கருத்துப்போனப் கிழிந்தப் புடவையின் மீது தொளதொளத்தச் சட்டையை அணிந்தபடித் அலையும் இந்தப் பெண் யாராக இருக்கும்? உடலெங்கும் மொய்த்தாலும் கடற்கரையில் விளையாடும் சிறுவனைப்போல உத்வேகத்துடன் அதே நேரத்தில் கூரியக் கண்களுடன் குப்பைகளைத் துளாவியபடிப் பவனிவரும் இந்தச் சட்டையணியாதச் சிறுவன் யார்? இரண்டு கால்களிலும் வெவ்வேறு செருப்புடன் நெகிழிப்பையைக் கையுறையாக்கியபடி குப்பையைக் கிளறிக்கொண்டிருக்கும் இந்தப் பெரியவர் யார்? புழுதி பறக்கும் மண்ணில் புரண்டு மிதிபட்டதைப் போலத் தோற்றமளிக்கும் இந்த முகங்கள் எவருடையவை?

 

*"நவீனர்கள்" பலர் பார்க்க விரும்பாத முகம். சமூக அநீதியின் முகம். சூழல் அநீதியின் முகம்.*

 

குப்பைகளைக் கையாளும் முறைசாரா / சார்ந்தத் தொழிலாளர்கள் மீது சமூகத்தின் கவனம் படிவதில்லை. பாதாளச் சாக்கடையில் இறக்கப்படுபவர் விஷவாயு தாக்கி உடனடியாக உயிரிழக்கிறார். குப்பையில் இறங்குபவர் கொஞ்சம் கொஞ்சமாய் நச்சுக்கழிவுகளில் அமிழ்ந்து சாகிறார். ஆங்கிலத்தில் இவர்களை கவுரவப்படுத்துவது போன்ற *‘Garbage warriors’* என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. *அதீதப் புனிதப்படுத்தல்கள்* கூடப் பல நேரங்களில் பயனற்றதாகவும் ஆபத்தாகவுமே முடிந்துவிடும்.

 

*குப்பைகளைக் கையாளும் / குப்பைகளில் மறுசுழற்சி செய்யத்தக்கக் கழிவுகளைப் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள்* நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் சுற்றுச் சூழலின் நலனுக்குப் பெரும் பங்கு வகிக்கிறார்கள். மறுசுழற்சிக் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் இல்லாத நம் பகுதிகளில் இவர்களுடையப் பங்களிப்பு மிக முக்கியமானது. மூலப் பொருள் விரையத்தைத் தடுத்தல், கழிவின் அளவைக் குறைத்தல், மறுசுழற்சி செய்தல் போன்றவற்றைச் செய்யும் இவர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி அங்கீகரித்தல், நச்சுக் கழிவுகளைக் கையாளத் தேவையானக் கையுறைகள் போன்றப் பாதுகாப்பு உபகரணங்களைத் தொடர்ந்து வழங்குதல், தெருக்களில் குப்பைகளைச் சேகரிக்கும் முறைசாராத் தொழிலாளர்களுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்குதல், அபாயகரமான கழிவுகள் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வழங்குதல், முக்கியமாகக் குழந்தைத் தொழிலாளர்களை இத்தொழிலிருந்து அகற்றி அவர்களுக்கு மறுவாழ்வளித்தல் போன்றவற்றை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். இந்தத் தொழிலாளர்களின் தேவைகளை முழுமையாக ஆய்வு செய்து இவர்களின் பணிச்சூழலையும் வாழ்வையும் சமூக மதிப்பையும் மேம்படுத்தும் விதத்தில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

 

குப்பைகளை உற்பத்திச் செய்வோருக்கு கட்டணமும் குப்பை மேலாண்மை விதிகளை மீறுவோருக்கும் கடுமையான அபராதங்களும் விதித்து அவ்வாறு வசூலிக்கப்படும் தொகையின் ஒரு பகுதியை அரசு இந்தத் தொழிலாளர்கள் நலனுக்குச் செலவிட வேண்டும்.

 

மறுசுழற்சி செய்யத்தக்கக் குப்பைகளைச் சுகாதாரமான முறையில் வழங்கவேண்டியது குடிமக்கள் கடமை

 

*குப்பைகள் வெறும் குப்பைகள் அல்ல. அவை சமூகத்தின் மனசாட்சியைக் காட்டும் கண்ணாடிகள். ஒரு நாட்டின் குப்பைகள் அந்த நாட்டின் சாதிய வர்க்க பேதங்களையும் அரசின் நிர்வாகத்திறனையும் குடிமக்களின் பொறுப்புணர்வையும் சமூக நீதியின் நீட்சியையும் திறந்து காட்டுபவை.*

 

******************

*செவ்வானம்*