Monday, April 20, 2020

கைதட்ட வேண்டாம், புதைக்க விடுங்கள்


விண்ணிலிருந்து வந்த வெள்ளுடை தேவதைகள்,
உயிர் காக்கும் கடவுள்கள்,
மனித உருவில் நடமாடும் தெய்வங்கள்,
அர்ப்பணிப்பின் அடையாளங்கள்

என்றெல்லாம் கூறி மருத்துவர்களையும் செவிலியர்களையும் பாராட்ட வேண்டும். ஆகவே எல்லோரும் பால்கனிக்கு வந்து கை தட்டுங்கள் என்று அரசர் அறிவிக்க, குடிமக்கள் எல்லாம் கைதட்டல் ஊர்வலம் போனார்கள், தட்டை அடித்து உடைத்தார்கள், சங்கூதிக்கொண்டே உலா போனார்கள். 

ஆனால் அந்த வெள்ளுடை தேவதைகளில் ஒருவர், தான் சிகிச்சை அளித்த ஏதோ ஒரு நோயாளியிடமிருந்து பரிசாகப் பெற்ற வைரஸ் தொற்று காரணமாக மரித்த போது 

அவரை புதைப்பதற்குக் கூட, அவரது இறுதி நிகழ்வு மரியாதையான முறையில் நடக்க முடியாத அளவிற்கு மக்கள் வெறி கொண்டவர்களாக மாறிப் போனார்கள்.

கும்பலாக சூழ்ந்து கொண்டு உருட்டுக்கட்டைகளால் அமரர் ஊர்தியையும் அந்த மருத்துவர் உடலோடு உடன் வந்தவர்களையும் தாக்குகிறார்கள்.

ஒரு இடுகாடல்ல, இரண்டு இடுகாடுகளில் இதே கொடுமைதான் நிகழ்ந்துள்ளது.  

கொலைகாரர்கள் தாங்கள் கொலை செய்தவரின் உடலை நள்ளிரவு வேலையில் திருட்டுத்தனமாக புதைப்பார்களாம். தன் வாழ்நாளில் எத்தனையோ நோயாளிகளை குணப்படுத்தியவருக்கும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. 

உயிர் காக்கும் வாகனமான ஆம்புலன்சின் ஓட்டுனர்கள் தாக்கப்பட்டு ஏராளமான ரத்தமிழந்து அவர்கள் உயிரையே பாதுகாக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

மனிதாபிமானத்தை தன் சேவையில் அதிகபட்சம் வெளிப்படுத்தியவர் என்று சக மருத்துவர்களால் வர்ணிக்கப்பட்டவருக்கு அது மறுக்கப்பட்டு உள்ளது.

இதற்கெல்லாம் யார் காரணம்?

உயிரிழந்த மருத்துவரின் சடலம் அங்கே வரப்போகிறது என்று தகவல் கொடுத்து மக்களை திரட்டியது யார்? உருட்டுக்கட்டைகள் எங்கிருந்து வந்தது?

கொரோனா வைரஸ் தொற்று பற்றி உண்மையான விழிப்புணர்வை உருவாக்குவதற்குப் பதிலாக சினிமாத்தனமாக கை தட்டல், விளக்கேற்றல் போன்ற  வெற்று நடவடிக்கைகள் மக்களை உணர்ச்சியூட்ட பயன்பட்டுள்ளதே தவிர அவர்களுக்கு உண்மையான விழிப்புணர்வு என்பது வரவில்லை.

கை தட்டிய போதும், விளக்கேற்றிய போதும் தனி மனித விலகல் ந்டைமுறைகள் எப்படி மீறப்பட்டதோ அது போலவே மருத்துவர் உடலை புதைக்கக் கூடாது என்று கும்பல் கூடிய போதும் மீறப்பட்டுள்ளது. 

வெறி கொண்ட கும்பலில் இருந்தவர்களில் கை தட்டியவர்களும் விளக்கேற்றியவர்களும் இருந்திருக்கக் கூடும். நேற்றைய கும்பல் வன்முறையால்  அவர்களில் எத்தனை பேருக்கு புதிதாக வைரஸ் தொற்றிக் கொண்டதோ?

அவர்களுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கத்தான் போகிறார்கள் என்பது வேறு விஷயம்.

மருத்துவர்களுக்கோ அவர்களுக்கு துணை நிற்பவர்களுக்கோ கை தட்டல் அவசியமில்லை. 

அவர்களுக்கு என்ன தேவை என்பதை முன்பே எழுதியிருந்தேன். அவற்றை மீண்டும் எழுதுகிறேன்.

பாதுகாப்பாக பணி செய்வதற்குத் தேவையான உபகரணங்கள்.
பணியிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்.
உரிய நேரத்தில் ஆரோக்கியமான உணவு.
பணி நேரத்திற்கு அப்பால் வேலை செய்தால் அந்த காலத்திற்கு நியாயம் ஓவர் டைம் ஊதியம்.
பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமலிருந்தால் பயண ஏற்பாடுகள்.
தேவையற்ற தலையீடுகள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக நியாயமான கோரிக்கைகளுக்காக எதிர்காலத்தில் அவர்கள் அரசையோ நிர்வாகத்தையோ அணுகும் வேளையில் அவர்களை போராட்டத்திற்கு தள்ளாமல் அக்கோரிக்கைகளை தீர்த்து வைப்பது.

இத்தோடு இப்போது இன்னொன்றையும் சேர்க்க வேண்டிய அவ்சியம் துரதிர்ஷ்டவசமாக உருவாகியுள்ளது.

மக்களுக்காக சேவை செய்தவர்கள் மரணிக்கும் துயரமான நிலைமை உருவானால் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அவசியமில்லை. அலைக்கழிக்கப்படாமல் அவர்கள் நல்லடக்கம் மரியாதையாக நிகழட்டும்.



No comments:

Post a Comment