Showing posts with label சபதம். Show all posts
Showing posts with label சபதம். Show all posts

Friday, January 29, 2021

புதிய சபதம் என்னமா சின்னம்மா?

 


A 2 சிறையிலிருந்து அதிகாரபூர்வமாக விடுதலையாகி விட்டார். முன்னர் அவர் என்றால் நினைவுக்கு வருவது அவரும் A 1 ம் நகைக்கடையாக காட்சி தரும் புகைப்படம்.

இப்போது நினைவுக்கு வருவது தவழ்ந்து சென்று அவர் காலடியில் வீழ்ந்த எடுபிடியின் காணொளியும், A 1 சமாதியில் அவர் செய்த ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட் சபதங்களுமே.

அன்று அவர் என்னென்ன சபதங்கள் செய்தாரோ, நாம் அறிவோம்.

இப்போதோ நிலைமை மாறி விட்டது. 

ஒருவேளை பெங்களூர் மருத்துவமனையில் இட்லி கொடுக்கப்படாமல் அவர் நல்லபடியாக வெளியே வந்தால் இப்போது A1 சமாதியில் அவர் என்ன சபதம் மேற்கொள்வார்?

உங்களைப் போலவே நானும் அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Saturday, April 8, 2017

கவண் - தோற்ற சபதம்




நேற்று கவண் சென்றிருந்தோம். ட்ங்கல் திரைப்படத்திற்குப் பிறகு பார்த்த படம்.

பாஸிட்டிவான விஷயங்கள்.

முதலாளித்துவ தொலைக்காட்சி ஊடகங்கள் தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த எந்த அளவு கீழிறங்கவும் மோசடிகளில் ஈடுபடவும் தயங்காது என்பதை  அம்பலப்படுத்தியுள்ளது. 

ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான சந்தர்ப்பவாத தொடர்பை அம்பலப்படுத்தியுள்ளது.

அரைத்த மாவையே அரைக்கும் நிகழ்ச்சிகள்தான் என்பதையும் சொல்கிறது. 

விஜய் சேதுபதியின் மெருகேறி வரும் நடிப்பு

ஒரு காட்சியில் வந்தாலும் கவனத்தை ஈர்த்த பவர் ஸ்டார்.

வழக்கமான அடுக்கு மொழி வசனங்கள் பேசினாலும் எரிச்சல்பட வைக்காத டி.ஆர்.

குடிகார அரசியல்வாதியாக போஸ் வெங்கட்டும் நன்றாகவே செய்திருந்தார். 

பாடல் காட்சிகளில் கண்ணைக் கவர்ந்த இயற்கைப் பிரதேசங்கள்.

நேர்மையானவர்களுக்கும் கூட ஊடகங்களில் இடம் உண்டு என்பதையும் காண்பித்தது.

இனி 

நெகடிவ்

பாடல்களும் பின்னணி இசையும் பாடாவதியாக இருந்தது.

முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் காணாமல் போயிருந்தது.

பாண்டியராஜன் மற்றும் விஜய் சேதுபதியின் நண்பர்கள் வில்லனுக்கு எதிராக மாறி விடுவார்கள் என்பதை ஊகிக்க முடிந்தது.

பாண்டேவும் கோபிநாத்தும் அர்ணால்டும்தான் பின்பற்ற வேண்டிய  ஊடகவியலாளர்கள் போல சித்தரித்தது.

கூட்டிக் கழித்து பார்த்தால் கவண் கண்டிப்பாக பாஸ் மார்க்கே பெறுகிறது. 

இறுதியாக

அதென்ன தோற்றுப் போன சபதம் என்று தலைப்பு என்று கேட்கிறீர்களா?


உறவைக் காத்த கிளி படத்திற்குப் பிறகு பார்த்த டி.ஆர் நடித்த படம் இதுதான். தியேட்டருக்குச் சென்ற பிறகு போஸ்டரைப் பார்த்த பிறகே அவரும் நடித்துள்ளார் என்று தெரியும். சபதப்படி நடப்பதற்கான சூழலும் அவகாசமும் இல்லை. இது கூட தெரியாதா என்று கேட்காதீர்கள். கதாநாயகி சமந்தா என்றுதான் நினைத்திருந்தேன். அவர் மடோனா செபஸ்டியன் எனும் வேறு நடிகை என்பதே இடைவேளையின் போதுதான் அறிந்து கொண்டேன். திரைப்பட விஷயத்தில் அவ்வளவு அப்டேட்டாக இருக்கிறேன். 

 

 

Thursday, April 28, 2016

திருமணத்திற்கு ஏனப்பா தேவையற்ற சபதம்?





வேட்பாளர்களை அறிவிப்பதும் மாற்றுவதும் அந்தந்தக் கட்சியின் உரிமை. ஆனால் அது ஒருவரின் திருமணத்தை பாதிக்கக் கூடிய அளவிற்குப் போனதுதான் கொடுமை. அந்தக் கொடுமையை அவரே வரவழைத்துக் கொண்டார் என்பதுதான் பரிதாபம் அல்லது நகைச்சுவை.

ஜெ கட்சியில் 1991 ல் கும்பகோணம் எம்.எல்.ஏ வாக இருந்தவர் ராம.ராமநாதன்.

1996 ம் சட்டமன்றத் தேர்தலின் போது தானும் மீண்டும் எம்.எல்.ஏ வாகி அம்மாவும் மீண்டும் முதல்வரான பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறார். பாவம் இரண்டு பேருமே சட்டமன்ற உறுப்பினராகக் கூட முடியாமல் தோற்றுப் போய் விட்டார்கள்.

அதற்கடுத்த தேர்தலிலும் அதே சபதம். ஜெ முதல்வரானார். ஆனால் இவர் தோற்றுப் போய் விட்டார். ஆகவே சபதம் காரணமாக திருமணத்தை தள்ளிப் போட்டு விட்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு மீண்டும் சீட் கிடைத்தது. அப்போதாவது வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் வாய்க்கொழுப்பு யாரை விட்டது? மீண்டும் சபதமெடுத்தார். ஜெ மீண்டும் முதல்வரானாலும் இவர் தோற்றுப் போய் விட்டார்.

இந்த தேர்தலிலும் முதலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உடனடியாக பழைய சபதத்தை தூசு தட்டி எடுத்து அறிவித்தார். ஐம்பத்தி இரண்டு வயதிலாவது அவர் சபதம் நிறைவேறி அவருக்கு திருமணம் நடக்குமா என்று தொகுதிக்காரர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.

ஆனால் பாவம், அம்மாவின் வேட்பாளர் மாற்று விளையாட்டில் மனிதரை முன்னாள் வேட்பாளாராக்கி விட்டார்கள்.

சபதத்தை திரும்பப் பெற்றுக் கொள்வாரா இல்லை வாஜ்பாய், என்.ரங்கசாமி பட்டியலில் இணைவாரா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

முக்கியமான பின் குறிப்பு : முப்பது வருடங்களுக்கு முன்பு எல்.ஐ.சி யில் உதவியாளராக பணியில் சேர்ந்த போது முதல் நிலை அதிகாரியான பின்பே திருமணம் செய்து கொள்வது என எனக்குள்ளேயே ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். அதற்கான துறைத்தேர்வுகளுக்காக முதலாண்டிலேயே தீவிரமாக படிக்கவும் ஆரம்பித்தேன். பின்பு தொழிற்சங்க ஈடுபாடு அதிகரிக்க, அதுதான் வாழ்க்கைப் பாதை என்று முடிவு செய்ததும் முந்தைய சபதத்தை நான் எனக்குள்ளேயே சப்தமில்லாமல் வாபஸ் வாங்கிக் கொண்டேன்.

இவரும் வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது.

Sunday, March 8, 2015

தியேட்டர் வாசலில் செய்த சபதம்





 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikKb7hLNW5w28oHuaSLIzZY8kN6iVOfFJOiDWvNxLYWVzhTnpkNl2AgOy-YQpcs7wZqQUvGkV6CF323e7Etjlf0rkkKs4xjReHbe3dopWJTO8oQpqgJZErbnYrCAq6dGWr4nqWbQh7Z0U/s1600/IMG_0009.JPG



கோபுர வாசலிலே படம் பற்றி நேற்று நான் பதிவிட்டிருந்ததற்கு பின்னூட்டம் எழுதியிருந்த ஒருவர் "அந்த திரைப்படம் பார்த்த பின்பு நான் திரைப்படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன்"  என்று எழுதியிருந்தார். 

நான் அவ்வளவு வைராக்கியம் கொண்டவன் அல்ல. திரைப்படம் பார்ப்பதையெல்லாம் நிறுத்தவில்லை. ஆனாலும் ஒருவரது திரைப்படம் மற்றும் பார்ப்பதில்லை என்று சத்தியம் செய்து அதை இன்று வரை அதைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.

1981 என்றுதான் நினைக்கிறேன். மதுரை திருநகரில் உள்ள கலைவாணி திரையரங்கத்தில் இரண்டாவது ஆட்டத்திற்கு டி.ராஜேந்தர், கதை திரைக்கதை, வசனம்  எழுதி, பாடல் இயற்றி  இசையமைத்து இயக்கி இரட்டை வேடத்தில் நடிக்கவும் செய்த "உறவைக் காத்த கிளி" படத்திற்கு ஒரு பத்து பேராக சென்றோம். 

உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம் படங்களை பார்த்த போதே  உஷாராகியிருக்க வேண்டும். தியேட்டர் வாசலில் இருந்த சுவரொட்டி அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று சொன்ன போதாவது எச்சரிக்கையாகி பின்வாங்கியிருக்க வேண்டும். 

வேட்டி கட்டியவர் அண்ணன், பேண்ட் போட்டவர் தம்பி என்று இரட்டை வேடத்தில் மிகப் பெரிய வித்தியாசம் காண்பித்து சாதனை படைத்தவர் உலக திரைப்பட வரலாற்றிலேயே டி.ஆர் மட்டுமே. படம் முழுதுமே அவர் மட்டுமே வந்து கொண்டிருந்தார். இருவரும் கத்தி கத்தி பேசிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு "இனிமே என் படம் பாக்க வருவாயா" என்று மிரட்டிக் கொண்டிருந்தார்கள். 

படம் முடிந்து வெளியே வந்து கலைவாணி தியேட்டர் வாசலில் சபதம் எடுத்துக் கொண்டோம். இனி வாழ்நாளில் டி.ஆர் படம் பார்க்கவே மாட்டோம் என்பதுதான் அந்த சபதம். முப்பத்தி இரண்டு வருடங்களாக அந்த சபதத்தை காப்பாற்றி வருகிறேன்.

"வீராச்சாமி" என்று அற்புதமான காவியம் ஒன்றை எடுத்துள்ளார். அவசியம் பாருங்கள் என்று சிலர் சொன்ன போது கூட சபதத்தை காப்பதுதான் முக்கியம் என்று உறுதியாக இருந்து விட்டேன்.