Showing posts with label வேலூர். Show all posts
Showing posts with label வேலூர். Show all posts

Tuesday, December 10, 2024

வேலூரில் சந்திர மண்டலம்

 



மேலே உள்ள படங்கள் ஒன்றும் சந்திர மண்டலத்தில் எடுக்கப்பட்டது இல்லை. இரண்டு நாட்கள் முன்பாக எங்கள் பகுதியில் போடப்பட்ட கான்கிரீட் சாலை.

சாலை போட முடிந்தவர்களால் மாடுகளை அந்த பகுதிக்கு வராமல் தடுக்க முடியவில்லை போலும்! அந்த அளவிற்கு தெரு மாடு பிரச்சினை வேலூரில்.

கீழேயுள்ள படம் இன்னொரு கொடுமை

இரண்டு தெருக்களுக்கும் நடுவில் உள்ள ஒரு சின்ன பகுதி. அதை மட்டும் அம்போ என்று விட்டு விட்டார்கள். அந்த பகுதிக்கு எப்போது விடிவுகாலம் பிறக்குமோ?

Sunday, November 24, 2024

நான் வேலூர் எம்.பி. Meta AI காமெடி

 


முகநூலைப் பார்த்தால் ஒரே Meta AI யிடம் தங்களைப் பற்றி கேள்வி கேட்டு அது சொல்லும் பதிலை பதிவு செய்வதுதான்.

ஆசை யாரை விட்டது!

நானும் முயற்சி செய்தேன்.

அது சொன்ன பதிலை பாருங்கள்

இதில் மிகப் பெரிய காமெடி என்னவென்றால் 2009 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறவே இல்லை. திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் வேட்பாளராக நின்ற எம்.அப்துல்ரஹ்மான் வெற்றி பெற்றார். 

பெயர், கட்சி என்று எதுவுமே சரியில்லை. இந்த நுண்ணறிவை முழுமையாக எதற்கும் நம்ப வேண்டாம் என்றுதான் சொல்ல விழைகிறேன்.

Meta இத்தேர்தல் குறித்த சில நினைவுகளை கிளறி விட்டது.

2009 மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு நுண் பார்வையாளராக சென்றிருந்தேன். நான் அமர்ந்திருந்த மேஜையில் மொத்தம் 18 சுற்றுகளில் முதல் சுற்றில் மட்டும்தான் அதிமுக வேட்பாளர் எல்.கே.எம்.பி வாசு முன்னிலை பெற்றிருந்தார். மற்ற அனைத்து சுற்றுக்களிலும் முஸ்லீம் லீக் வேட்பாளர்தான் முன்னிலை பெற்றார்.

சில மோசடிப்பேர்வழிகள் தேர்தலை பயன்படுத்தி அவரிடமிருந்து லம்பாக ஒரு தொகையை ஆட்டையப் போட்டிருந்தார்கள் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன். பாவம் அவர்!

பிகு: Meta AI ஐ ஏன் நம்ப வேண்டாம் என்பதற்கு இன்னொரு உதாரணமும் சொல்கிறேன். வாட்ஸப்பில் அறிமுகமான போது அதை கேட்ட கேள்விக்கு அப்போது சொன்ன பதிலும் அதே கேள்விக்கு இப்போது சொன்ன பதிலும் கீழே






Sunday, November 17, 2024

தமிழ்நாட்டில் முதல் முறையாக . . .

 



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட மாநாடு நேற்றும் இன்றும் திருப்பத்தூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளராக தோழர் எஸ்.டி.சங்கரி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். 

தமிழ்நாட்டில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தோழர், தோழர் சங்கரிதான். அந்த பெருமை வேலூர் மாவட்டத்திற்கு கிட்டியுள்ளது என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொறுப்பாளராக, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக முத்திரை பதித்துள்ள தோழர் எஸ்.டி.சங்கரி, இப்புதிய பொறுப்பிலும் மிளிர்வார் என்பது நிச்சயம்.

தோழர் சங்கரி அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.


பிகு : மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி எங்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் தோழர் எஸ்.டி.சங்கரி சிறப்புரையாற்றிய போது எடுத்த புகைப்படங்கள் மேலே உள்ளது. 

Saturday, November 2, 2024

மோசடிப்பேர்வழிகளின் சதுரங்க வேட்டை ஓயாது.

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி.

மண்ணுளிப் பாம்பை நான்கு கோடி ரூபாய்க்கு விற்கும் வேளையில் ஐவரை காவல்துறை கைது செய்துள்ளது. இது நேற்று வேலூர் மாவட்டத்தில் ஜவ்வாது மலை அடிவார கிராமம் ஒன்றில் நடந்துள்ளது.

மண்ணுளி பாம்பு விற்பனை என்ற மோசடி பற்றிய செய்திகள் சமீப காலமாக வரவில்லை. சதுரங்க வேட்டை திரைப்படம் கொடுத்த விழிப்புணர்வு என்று நினைத்திருந்தேன். அப்படியெல்லாம் ஒரு மண்ணும் உருவாகவில்லை என்பது இந்த செய்தி உணர்த்துகிறது.

ஆமாம். உண்மைதான்.

வாயை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பிழைப்பு நடத்தும் மோசடிப் பேர்வழிகள் உலகெங்கும் பரவியுள்ளனர். அவர்கள் மோடி போல பிரதமராகவும் இருக்கலாம், உங்களை ஏமாற்றிய/ஏமாற்றிக் கொண்டிருக்கிற நண்பனாக உலாவிய துரோகியாகவும் இருக்கலாம்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களின் சதுரங்க வேட்டை நடந்து கொண்டுதான் இருக்கும்.


மேலே உள்ளதுதான் நான்கு கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட மண்ணுளி பாம்பு. இதற்கு என்ன பெயர் வைத்திருந்தார்களோ? 

விஜய்/ரஜினி/கமல்/அஜித்/சூர்யா/விக்ரம்/சிவ கார்த்திகேயன்/தனுஷ்/சிம்பு?

Saturday, October 5, 2024

ஏ.டி.எம் மில் கைது செய்த நாய்கள்

 

நேற்று முன் தினம் எழுதிய  காரில் நாய்களுக்கு என்ன ஆய்வு?  என்ற பதிவின் தொடர்ச்சி இது.

 நேற்று காலை எங்கள் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்மிற்கு சென்றிருந்தேன்.

 பணத்தை எடுத்து விட்டு வெளியே வர முடியவில்லை.

 



ஏ.டி.எம் வாசலில் இரண்டு நாய்கள் படுத்துக் கொண்டு எழ  மறுக்கின்றன. கதவை திறக்க முடியவில்லை. கதவை சற்று தள்ளினால் ஆவேசமாக குரைக்க தொடங்கி விட்டன. குரைத்து விட்டு மீண்டும் கதவின் மீது சாய்ந்து படுத்துக் கொண்டு விட்டன. அந்த நேரத்தில் அந்த நாய்களை துரத்த வேறு எந்த வாடிக்கையாளர்களும் கூட வரவில்லை. கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் இப்படியே கடந்தது.  போலீஸ் லாக்கப்பில் இருந்த  ஒரு  ஃபீலிங்.                                                                                                                                                                                                                                                                                                                                                       

 

நல்ல வேளையாக மூன்றாவதாக ஒரு நாய் வர, அந்த நாயோடு இந்த இரண்டு நாய்களும் சண்டை போட செல்ல, ஒரு வழியாக வெளியே வந்தேன், விடுதலையாகி.

 

வாஜ்பாய் ஆட்சியில்  நாய்க்கடிக்கான மருந்து உற்பத்தி லவ்பெல்லால் தனியாருக்கு அளிக்கப்பட்டதையும் அதே வாஜ்பாய் ஆட்சியில் தெருநாய்களை கொல்லக் கூடாது என்று மேனகா காந்தி சட்டம் போட்டதையும் இணைத்து பாருங்கள்.

 

தனியார் உற்பத்தி செய்யும் நாய்க்கடி மருந்து விற்க நாமெல்லாம் நாய்க்கடி பெற வேண்டும்.

 

இந்த வாஜ்பாய் பிறந்த நாளை நல்லாட்சி தினமாக வேறு கொண்டாடுகிறார்கள். கொடுமை.

Thursday, October 3, 2024

காரில் நாய்களுக்கு என்ன ஆய்வு?

 


கடந்த வாரம் சென்னை சென்று இரவு திரும்பும் போது வீட்டு வாசலில் மாநாடு நடத்திக் கொண்டிருந்த நாய்கள் பிறகு காரை சூழ்ந்து கொண்டு என்னமோ ஆய்வு நடத்திக் கொண்டிருந்தன.

 



அப்படி என்ன ஆய்வு செய்து என்ன கண்டு பிடித்திருக்கும்.

 வேலூர் மேயரம்மா, தெரு நாய் தொல்லைக்கு தீர்வே கிடையாதா?

 பிகு: இப்படியெல்லாம் ஒரு பதிவு அவசியமா என்று யோசித்தேன். இன்று காலை ஏற்பட்ட அனுபவம் எழுத வைத்து விட்டது. அப்படியென்ன அனுபவம்? அது ஸ்பெஷல். நாளை . . . .

 

Wednesday, July 10, 2024

மலர் வளையத்துடன் வீர வணக்கம்

 





அடிமைத்தளையை அறுத்தெரிய,

சுதந்திரக்காற்றை சுவாசிக்க
மத ஒற்றுமையின் அடையாளமாய்
குருதி சிந்தி  இன்னுயிர் நீத்த
வேலூர் சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு
சுதந்திரப் போர் தியாகிகளுக்கு
216 வது வருட நினைவு தினமான இன்று
சிப்பாய் புரட்சி தியாகிகள் நினைவுச்சின்னத்தில்
எங்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில்
மலர் வளையம் வைத்து
வீர வணக்க முழக்கமிட்டு

அஞ்சலி செலுத்தினோம்.

Tuesday, February 27, 2024

வேலூரில் நல்ல வேட்டை

 


வேலூரில் புத்தக விழா என்ற அறிவிப்பைப் பார்த்தது முதலே சென்று வர வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அதற்காக துவக்கப்பட்ட ஒரு வாட்ஸப் குழுவில் வேறு இணைத்து அன்றாட நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் பதிவு செய்து கொண்டே இருந்தார்கள். ஆனால் தொடர்ச்சியான வேலைகள், பயணங்கள் காரணமாக அதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.

இன்றுதான் விழாவின் இறுதி நாள் என்பதால் இன்று எப்படியாவது சென்றிட வேண்டும் என்ற வேகத்துடன், மதிய உணவு இடைவேளையின் போது வேகம், வேகமாக சென்று, அதை விட அதி வேகமாக அரங்குகளுக்குள் நுழைந்து புத்தகங்களை வாங்கி வந்தேன்.

செலவழித்த நேரம் குறைவென்றாலும் புத்தகங்கள் வாங்கியதில் குறையெதுவும் இல்லை. மனம் நிறைவடையக்கூடிய விதத்தில்தான் இருந்தது. ஞாயிறு கடலூர் சென்று திரும்பிய நேரத்தில் 256 பக்கங்கள் கொண்ட கள அனுபவ கட்டுரை நூலை படித்து முடிக்க முடிந்ததால் உருவான தைரியமே இந்த அளவு புத்தகங்களை வாங்க தூண்டியது.

இன்று வாங்கிய நூல்களின் பட்டியல் கீழே


எண்

நூல்

ஆசிரியர்

பக்கம்

1

தண்ணீர்

அசோகமித்திரன்

112

2

எரியும் மண் -மணிப்பூர்

கிர்த்திகா தரன்

83

3

நாடோடியாகிய நான்

சமுத்திரக்கனி

136

4

நரவேட்டை

சக்தி சூர்யா

280

5

நகலிசைக் கலைஞன்

ஜான் சுந்தர்

143

6

எதனையும் மறக்க இயலாது

நேஹால் அகமது - தமிழில் சுனந்தா சுரேஷ்

160

7

போராட்டம் தொடர்கிறது

பிரபீர் பூர்காயஸ்தா தமிழில் .சுப்பாராவ்

253

8

செயலற்ற அரசு

எம்.ராஜ்ஷேகர் - தமிழில் .சுப்பாராவ்

352

9

பேசும் பொம்மைகள்

சுஜாதா

230

10

திருடர்களின் கைகள் மென்மையானவை

கரங்கார்க்கி

103

11

மலரும் சருகும்

டி.செல்வராஜ்

198

12

சபக்தனி

சம்சுதீன் ஹீரா

272

13

தமிழ்ச் சினிமாவில் கம்யூனிசம்

பாலு மணிவண்ணன்

88

 

 

 

2410

 

பார்ப்போம், எவ்வளவு விரைவாக இவற்றையெல்லாம் வாசித்து முடிக்க முடிகிறதென்று.                                                          

Sunday, November 26, 2023

மாடுகள் மறியலா?

 


மேலே உள்ள புகைப்படத்தை நேற்று மாலை ஏழு மணி அளவில் எடுத்தேன். இடம் எங்கள் தெருதான். இது ஏதோ ஒரு நாள் நிகழ்வு அல்ல. எப்போதும் நடந்து கொண்டிருப்பதுதான். குறுகலான சில தெருக்களில் இரு சக்கர வாகனம் செல்வது கூட சிரமமாக இருக்கும். வேலூரின் பெருவாரியான பகுதிகளிலும் இதே நிலைதான். வேலூரில் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை தெரு மாடுகள் கடந்து விடும் போலிருக்கிறது!

சாலைகளில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை ஒருமுறை பார்த்தேன். மாட்டு முதலாளிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மாலை செய்தித்தாளின் சுவரொட்டியிலும் கூட பார்த்தேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. மாநகராட்சியின் எச்சரிக்கையையெல்லாம் மாட்டு முதலாளிகள் மதிப்பதே இல்லை.

சென்னையில் ஒரு கோர சம்பவம் நிகழ்ந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அது போன்றதொரு சம்பவத்திற்காக காத்திருக்கிறதா வேலூர் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம்?

Tuesday, November 14, 2023

மரணம் தந்த நினைவுகள் . . .

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியுமான தோழர் பாசுதேப் ஆச்சார்யா, நேற்று காலமானார். அவருக்கு என் செவ்வணக்கம்.

இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் தோழர் பாசுதேப் ஆச்சார்யா. எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்தவர். இன்சூரன்ஸ் ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து துல்லியமாக அறிந்தவர். 01.08.1992 முதல் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊதிய உயர்வில் அநீதி செய்தது மத்தியரசு. பேச்சுவார்த்தை இல்லாமல் தனது முன்மொழிவை அறிவிக்கை மூலமாக திணித்தது. அந்த அநீதிக்கு எதிரான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போராட்டத்தை மக்களவையில் எதிரொலித்தவர் தோழர் பாசுதேப் ஆச்சார்யா. இது குறித்து விவாதிக்க வேண்டுமென்று சுமார் 90 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களை திரட்டவும் உதவியவர்.

1996 டிசம்பர் இறுதியில் மதுரையில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 16 வது பொது மாநாட்டின் துவக்க நிகழ்வில் அவர் சிறப்புரையாற்றிருக்க வேண்டும். மாநாட்டை துவக்கி வைத்து அன்றைய மேற்கு வங்க நிதியமைச்சர் தோழர் அசிம்தாஸ் குப்தா பேசுவதாக இருந்தார் என்று நினைவு. ஆனால் அப்போது தமிழ்நாடு முழுதும் பெய்து கொண்டிருந்த கடும் மழையால் அனைத்து வித போக்குவரத்துக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இருவரும் வர இயலாமல் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் ஆர்.உமாநாத், மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மறுநாள் பிரதிநிதிகள் மாநாட்டில்தான் தோழர் பாசுதேப் ஆச்சார்யா உரையாற்றினார். இன்சூரன்ஸ் ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சினைகள் குறித்து அவர் மிகவும் துல்லியமாக புரிந்து கொண்டுள்ளவர் என்பதை அப்போதுதான் உணர முடிந்தது.

தோழர் பாசுதேப் ஆச்சார்யா என்றால் என் மனதுக்கு இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வரும். 1996 ல் வேலூரில் தென் மண்டல மாநாடு நடைபெறுகிறது. அலைபேசி வசதிகள் அறிமுகமாகாத காலகட்டம் அது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச்செயலாளர் தோழர் என்.எம்.சுந்தரம், டெல்லிக்கு எஸ்.டி.டி பேச வேண்டும் என்று சொல்லுகிறார். அழைத்துச் செல்கிறேன். சிதம்பரம் கிளையின் அன்றைய தலைவர் மறைந்த தோழர் கே.அனந்தராமன் கார் ஓட்டுகிறார். மாநாட்டு அரங்கம் அருகில் இருந்த ஒரு எஸ்.டி.டி பூத் திமுகவின் நகரச்செயலாளராக இருந்து மதிமுக சென்று மீண்டும் திமுகவிற்கே திரும்பிய பூபாளன் என்பவருடையது. நாங்கள் சென்ற போது அவர்தான் இருந்தார்.

இணைப்பு கிடைத்து தோழர் என்.எம்.எஸ் பேசத் தொடங்கிய பின்பு நாங்கள் இருவரும் வெளியே வந்து விட்டோம். கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் தொலைபேசி உரையாடல் நடந்தது. ஆயிரம் ரூபாய் வரை பில் வந்ததாக நினைவு.

பணத்தை கொடுக்க நாங்கள் உள்ளே சென்ற போது திரு பூபாளன், ஆச்சர்யமாக "யார் சார் இவரு! இப்படி ஒரு இங்கிலிஷ் இதுவரை என் வாழ்வில் கேட்டதில்லை. பெரும்பாலான வார்த்தைகளை முதல் முறையாக கேட்கிறேன். அந்த பக்கம் இருந்தவர் பேசினதும் கேட்டதும் அவரும் இவர் மாதிரியேதான் பேசினார்" வினவ பதில் சொல்லி விட்டு புறப்பட்டோம்.

மறுமுனையில் பேசியவர் தோழர் பாசுதேப் ஆச்சார்யா , , ,





Thursday, September 22, 2022

அவ்ளோ பேர் இருக்காங்களாம்

 


நேற்று வேலூரில் பார்த்த சுவரொட்டி கீழே உள்ளது.

 


காலையில் கைதாகி கல்யாண மண்டபத்தில் காத்திருந்து போலீஸ் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு மாலையில் வீடு வந்து சேரும் போராட்டத்திற்கெல்லாம் ஏதோ பலான சாமியார் பிரேமானந்தா பெற்ற இரட்டை ஆயுள் தண்டனை ரேஞ்சிற்கு பில்ட் அப் கொடுத்து  “விடுதலை செய்” என்று வெட்டியாய் போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டும் அளவிற்கு பாஜகவிடம் காசு உள்ளது.

 இந்த போஸ்டரின் முக்கிய நோக்கம் என்ன தெரியுமா?

 அந்த கட்சிக்கு வேலூரில் 103 பேர் இருக்காங்களாம். அதைத்தான் இந்த மாதிரி போஸ்டர் அடிச்சு சொல்றாங்க!

 

பிகு 1 :  ஸ்மார்ட் சிட்டி பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பது அவர்கள் போராட்டத்தின் நோக்கம். ஸ்மார்ட் சிட்டி என்பதே ஒரு தேவையில்லாத ஆணி. அதை கொண்டு வந்தது மோடி என்பதும் அதற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்ததும் எடப்பாடி அரசுதான் என்பதும் பாஜக ஆட்களுக்கு தெரியாது போல!

 

பிகு 2 : ஸ்மார்ட் சிட்டி திட்டம் காரணமாக சாலைகள் படு கேவலமாக உள்ளது என்பது உண்மை. ஒன்றிய அரசு திட்டமா? எடப்பாடி சம்பந்தி ஒப்பந்தக்காரரா என்பதெல்லாம் மக்களுக்கு தேவையில்லாத ஒன்று. அவர்களின் கோபம் இயல்பாகவே ஒரு வருடமாக செயல்பட்டுக் கொண்டுள்ள/செயல்படாத மாநகராட்சி மீதுதான் திரும்பும். எனவே சாட்டையை கையிலெடுத்து ஒப்பந்தக் காரரை வேலை வாங்க வேண்டியது அவர்களின் பொறுப்புதான்