Showing posts with label சாலை. Show all posts
Showing posts with label சாலை. Show all posts

Sunday, November 15, 2020

மாட்டுக்கும் இதுதான் ரோடுலே!

                     


நேற்று இரவு பதினோரு மணிக்கு மேல் இருக்கும். வாசலில் ஏதோ வாகனத்தின் ஹாரன் ஒலி விடாமல் கேட்டுக் கொண்டிருந்ததால் என்னவென்று பார்க்க வெளியே வந்தேன்.

சாலையின் நடுவே ஒரு மாடு உட்கார்ந்து கொண்டிருந்தது.  நட்ட நடுவில் அது இருந்ததால் அதனை கடந்து போக முடியாத ஒரு வேன் தொடர்ந்து எழுப்பிய ஹாரன் ஒலி அது. ஹாரன் ஒலிக்கு அது அசைந்து கொடுக்காததால் வேனிலிருந்து ஒருவர் இறங்கி வந்து அதனை எழுப்பி விட முயற்சித்தார். அப்போதும் அது எழுந்து நின்றதே தவிர, வழி கொடுக்கவில்லை. 

அந்த போராட்டம் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடித்தது என்பது  இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா என்று கேட்டது போல அதன் பார்வை இருந்தது.



பிரச்சினை மாட்டினுடையதோ அல்லது வேனுடையதோ அல்ல. 

வேலூர் நகரத்தின் சாலைகள் எல்லாமே இப்போது மாட்டுத் தொழுவம் போலத்தான் இருக்கிறது. அதிலும் ஒரு பத்து நிமிடம் மழை பெய்தாலே, சாலை சேறும் சகதியாக மாறி விடுகிறது.

இந்த சாலைகளையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்ற நினைப்பே மாநகராட்சிக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. 

எங்கள் பகுதிக்கு பிரதான சாலையிலிருந்து வர ஒரு சின்ன பாலம் உண்டு. அது இப்போது மிகக் கேவலமாக சந்திர மண்டலக் குழிகள் போல உள்ளது. இரு சக்கர வாகனத்திலோ, ஆட்டோவிலோ தொடர்ந்து சென்றால்   எலும்புகள்  இடம் மாறும் அபாயம் உண்டு.

கடந்த வாரம் மாநகராட்சி ஆணையர் அந்த பாலம் வழியே வந்ததால் ஏதாவது நடவடிக்கை இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை.

இனிமே இந்த பாலம் வழியே வராதே என்று ஓட்டுனருக்கு சொல்லி அந்த நடவடிக்கை போதும் என்று இருப்பார் போல!