Showing posts with label எல்.ஐ.சி. Show all posts
Showing posts with label எல்.ஐ.சி. Show all posts

Thursday, September 4, 2025

GST அகற்றம் AIIEA வின் வெற்றி

 


தனி நபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான 18 % ஜி.எஸ்.டி அகற்றப்பட்டுள்ளது. நேற்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் முடிவு இது.

இந்த முடிவு கோடிக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு பயனளிக்கும். இந்த முடிவு அவ்வளவு எளிதாக வந்து விடவில்லை. அதன் பின்னால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுதியான, தொடர்ச்சியான போராட்டங்களும் பிரச்சார இயக்கங்களும் முயற்சிகளும் அடங்கியுள்ளன.

தன் குடிமக்களுக்கு எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை ஒரு மக்கள் நல அரசிற்கு உண்டு. அனைவருக்குமான மருத்துவம் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உண்டு.

ஆனால் இந்த கடமையை நிறைவேற்றுவதைப் பற்றி உலகமயக் கொள்கையை பின்பற்றும் எந்த அரசும் கவலைப்படுவதில்லை.

அதனால் மக்களே தங்களின், தங்கள் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய ஆயுள் காப்பீட்டை நாடுகின்றனர். மருத்துவ செலவினங்களை சமாளிக்க மருத்துவக் காப்பீட்டை நாடுகின்றனர்.

அரசு செய்யத் தவறியதை குடிமக்களே தங்களது சொற்ப சேமிப்பில் இருந்து மேற்கொள்கிற போது அதற்கு 18 % ஜி.எஸ்.டி விதிப்பதென்பது ஒரு விதத்தில் அராஜகமே.

சேவை வரி என்று ஆரம்பித்த காலம் முதலே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அதனை எதிர்த்து வருகின்றது. மக்கள் மத்தியில் 2004ம் ஆண்டு முதல் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களை நடத்தி வந்தது ஏ.ஐ.ஐ.இ.ஏ.

பாலிசிதாரர்களுக்கு தேவையற்ற சுமையாக மாறியது ஜி.எஸ்.டி, இன்சூரன்ஸ் பரவலை அதிகரிக்க வேண்டும் என்று உபதேசித்த அரசு, வழக்கமாக வரும் வணிகத்தைக் கூட ஜி.எஸ்.டி பாதிக்கிறது என்ற யதார்த்தத்தை கணக்கிலெடுக்க மறுத்தது. 

2019 முதல் இந்த இயக்கம் தீவிரமானது. நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது, ஜி.எஸ்.டி கவுன்சில்  உறுப்பினர்களை சந்தித்து  ஆதரவு திரட்டுவது, பாலிசிதாரர்களிடமிருந்து கடிதங்கள் பெற்று நிதியமைச்சருக்கு அனுப்புவது என எத்தனையோ இயக்கங்களை சங்கம் நடத்தியது. எங்கள் கோட்டத்தில் கூட புதுவை முதல்வர் திரு நாராயணசுவாமி அவர்களை இரண்டு முறை எங்கள் தென் மண்டலத் தலைவர்களோடு சந்தித்து விவாதித்துள்ளோம். தொகுதிக்கு வராத எம்.பிக்களை தவிர அனைவரையும் சந்தித்துள்ளோம்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு பின்பு  இயக்கம் சூடு பிடித்தது. நாடு முழுதிலும் நானூறுக்கும் மேற்பட்ட எம்.பிக் களை சந்தித்தோம். பாஜக உறுப்பினர்கள் கூட எங்களின் நியாயத்தை உணர்ந்து ஆதரவு அளித்தார்கள். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஜி.எஸ்.டி யை அகற்றச் சொல்லி நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.


எங்கள் கோட்டத்திலும் எம்.பி க்களை சந்தித்தோம்.



மக்களவை, மாநியல்ங்களவையில் எம்.பிக்கள் பிரச்சினையாக எழுப்பினர்.

இந்தியா அணி எம்.பி க்கள் நாடாளுமன்றத்தில் தர்ணா நடத்தினர்.



ஆனாலும் நிர்மலா அம்மையார் அசையவில்லை.

ஜி.எஸ்.டி கவுன்சிலில் இது தொடர்பான விவாதம் வந்த போது ,முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.  ஜி.எஸ்.டி அமைச்சரவைக்குழு விவாதித்து பரிந்துரை அளிக்கட்டும் என்று காலம் தாழ்த்தப்பட்டது.

இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்ற சூழல் உருவான பின்பு, இப்போது ஜி.எஸ்.டி அகற்றப்பட்டுள்ளது.

மக்களுக்காகவும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய இந்த போராட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக ஜி.எஸ்.டி அகற்றம் திகழும். 

எல்.ஐ.சி யை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாப்பது என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சித்தாந்த நிலைப்பாடு.

வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலிலும் காண்பிக்கிற அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் ஒளி வீசும் மணி மகுடத்தில் இன்னும் ஒரு ரத்தினக்கல் பதிக்கப் பட்டுள்ளது.

இந்த வெற்றியோடு சங்கத்தின் பயணம் தொடரும், மேலும் உறுதியாக, மேலும் உற்சாகத்துடன். . .


Tuesday, August 5, 2025

நன்றி சொல்லும் நேரம் இது . . .

 



பணி ஓய்வு நாள் வந்து அதன் பின்னும் நான்கு நாட்கள் கடந்து விட்டது. 31.007.2025 அன்று பணி ஓய்வு. அதன் பின்பு 02.08.2025, 03.08.2025 ஆகிய நாட்கள் கோட்டச்சங்கத்தின் 38 வது பொது மாநாடு. கொஞ்சம் ஓய்விற்குப் பிறகு இன்றுதான் வலைப்பக்கத்திற்கு வர அவகாசம் கிடைத்தது. 

வேறு எதுவும் இங்கே எழுதப் போவதில்லை.

நன்றி நவில்வது மட்டுமே நோக்கம்.

வாட்ஸப் மூலமாக,
முகநூல் மூலமாக,
தொலை பேசி மூலமாக
வாழ்த்து தெரிவித்த
நேரடியாக இருக்கைக்கும் வீட்டிற்கும்
பின்பு அலுவலகத்தில் நடந்த,
சங்கம் சார்பாக மண்டபத்தில் நடந்த
பணி நிறைவு பாராட்டு விழாக்களில் கலந்து கொண்ட, பங்கேற்று வாழ்த்திய
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள், தோழர்கள்
எல்.ஐ.சி அதிகாரிகள், ஊழியர்கள்,
தோழமைச்சங்கத் தோழர்கள், பொறுப்பாளர்கள்,

நண்பர்கள், உறவினர்கள்,

பணி நிறைவு பாராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய வேலூர் கோட்டச்சங்கப் பொறுப்பாளர்கள், அவர்களை வழிநடத்திய இளம் தலைவர்கள் தோழர் எஸ்.பழனிராஜ், பொதுச்செயலாளர், தோழர் பி.எஸ்.பாலாஜி, தலைவர் ஆகியோருக்கு வார்த்தைகளால் எப்படி நன்றி தெரிவிப்பேன்! இனி வரும் காலமும் நான் எப்போதும் போல உங்களுடன் இணைந்தே செயல்படுவேன் என்பதைத் தவிர!!

அனைத்தையும் தாண்டி  திருமணமான நாள் முதற்கொண்டு இன்றைய நாள் வரை என் பயணத்தில் துணை நின்று மன ரீதியாக, பொருளாதார ரீதியாக எனக்கு கை கொடுத்தவர். என்னுடன் நேரடியாக மோத முடியாத கோழைகளால் மன வலியும் காயங்களும் பெற்றவர்.  அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு எனக்கு பக்க பலமாக இருந்த அவரின்றி நான் இல்லை. எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்து தாயுமானவனாக திகழும் என் மகன். இவர்கள் இருவருக்கும் எந்நாளும் நான் என்ன நன்றி சொல்ல முடியும்! என் அன்பை பகிர்ந்து கொள்வதைத் தவிர!

எல்.ஐ.சி பணியிலிருந்துதான் ஓய்வு. மக்களுக்கான பொது வாழ்க்கையில் இருந்து அல்ல என்று பணி நிறைவு பாராடு விழாவில் வாழ்த்திய பல தலைவர்கள், தோழர்கள் கூறினார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வண்ணம் செயல்படுவதுதான் அவர்களுக்கு நான் செலுத்தும் உண்மையான நன்றியாக இருக்கும். 

என அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி நிறைவு செய்கிறேன்.

 


Thursday, July 31, 2025

விடை பெறும் வேளை இது



வாழ்க்கைப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். முப்பத்தி ஒன்பது வருடம், மூன்றரை வருடங்கள் பணி செய்து இன்று எல்.ஐ.சி நிறுவனப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். 

16.07.1986 அன்று பயிற்சி உதவியாளராக பணியில் சேர்ந்து உயர் நிலை உதவியாளராக ஓய்வு பெறுகிறேன். சங்கப்பணி என்ற திசை வழியில் பயணம் அமைந்ததால் பதவி உயர்வுகளை நாடவில்லை. திருமணம் ஆன போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலிக்கு என்னால்  அவரால் மாறுதல் பெற இயலவில்லை. இருவரும் ஒன்றாக பணியாற்ற வாய்ப்பு இருந்த வேலூருக்கு என்னால் உதவியாளராக மாறுதல் பெற இயலாது. உயர்நிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்றால்தான் சாத்தியம் என்பதால் அந்த பதவி உயர்வு பெற்றேன். என் மனைவி ஏன் நெய்வேலி வர வேண்டும்? நான் ஏன் அவர் பணியாற்றிய கும்பகோணத்திற்கு சென்றிருக்கக் கூடாது> இந்த சிந்தனை நீண்ட காலத்திற்கு பிறகே வந்தது. ஆணாதிக்க் சிந்தனையின் வெளிப்பாடுதான் மனைவியை மாறுதல் நாட வைத்தது என சுய விமர்சனமாக ஏற்றுக் கொள்கிறேன்.

எல்.ஐ.சி பணி மூலம் என்ன பெற்றேன்?

மிக முக்கியமானது சமூக அந்தஸ்து. கல்லூரி தேர்வு முடிவு வந்த ஆறாவது மாதத்திலேயே வேலையில் சேர்ந்து விட்டேன். பார்வைகளே சொன்னது வித்தியாசத்தை. வேலைக்கு செல்பவன் என்று கிடைக்கும் மரியாதையை விட எல்.ஐ.சி வேலை எனும் போது ஒரு படி மேலேதான்.

பொருளாதார தன்னிறைவு  என்பது பொருளாதார வளம் என்ற அளவிற்கு முன்னேற்றம் கிடைத்தது. ஓய்வு பெற்ற பிறகும் வாழ்க்கையை எடுத்துச் செல்லும் வாய்ப்பை, நம்பிக்கையை எல்.ஐ.சி அளித்துள்ளது.

முன்பெல்லாம் பல நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பற்றி மகாத்மா காந்தி சொன்னதை எழுதி வைத்திருப்பார்கள். அதை வாசகமாக பார்க்காமல் வாழ்க்கை முறையாக பார்க்கும் ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் எல்.ஐ.சி. இங்கே கற்றுக் கொண்ட பொறுப்புணர்வு வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

எல்.ஐ.சி எனக்குக் கொடுத்த மிகப் பெரிய வாய்ப்பு எல்.ஐ.சி க்கு முன்பே தோன்றி எல்.ஐ.சி தோன்ற காரணமாக இருந்த எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். 

எல்.ஐ.சி பற்றி நான் முன்னர் சொன்னது அனைத்தின் பின்னணியிலும் எங்கள் ஏ.ஐ.ஐ.இ.ஏ உள்ளது. அதைப் பற்றி பிறகு பார்ப்போம். இனி அவசரம் அவசரமாக ஓடி பத்து மணிக்கு ரேகை வைக்க அவசியம் கிடையாதல்லவா!

இன்று நான் பெற்ற எல்லாமே பொருளாதார வளம், ஞாஅம், மிகப் பெரும் அனுபவம், புரிதல், தோழர்கள் பட்டாளம் என எல்லாமே எங்கள் சங்கம் தந்ததுதான். எந்த சவாலாக இருந்தாலும் சந்திக்கும் உறுதியும் கூட.

02.05.2025 அன்று நடந்த மோசமான சாலை விபத்தில் இரண்டு இடங்களில் எலும்பு  முறிந்து அறுவை சிகிச்சைநடந்த வேளையில் இந்த நாளில் பணியில் மீண்டும் சேர்ந்து ஓய்வு பெறுவேனா அல்லது ஸ்டெர்ச்சர் அல்லது வீக் சேரில் கடைசி நாள் மட்டும் வந்து செல்வேனா என்ற கேள்வி இருந்தது. 

கடந்த மாதமே பணியில் இணைய முடிந்ததென்றால் அதற்கு சங்கம் ஊட்டி வளர்த்த உறுதிதான் காரணம்.

இரண்டாவது இன்னிங்ஸில் என்ன செய்யப் போகிறேன்.

களத்திற்குச் செல்ல உடல்நிலை உடனடியாக அனுமதிக்காது. அதனால் நிலுவையில் உள்ள எழுத்துப் பணிகளுக்கு முன்னுரிமை.

இங்கே வந்து போகும் நேரமும் அதிகமாகும், இயல்பாகவே . . .


Tuesday, July 1, 2025

எங்களுக்கு வயது 75

 


இன்று எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு பிறந்த நாள். 74 வருடங்களை நிறைவு செய்து 75 வது வயதில் அடியெடுத்து வைக்கிறது.

ஒரு மாபெரும் நதியின் துவக்கம் சின்னஞ்சிறு ஓடையாகத்தான் இருக்கும் என்பது எங்களது சங்கத்திற்கும் பொருந்தும். 01.07.1951 அன்று மும்பை தாதரில் ஒரு சின்னஞ்சிறிய அரங்கில் தோன்றிய சங்கம் ஒரு சாதனை வரலாற்றுக்கு சொந்தமான அமைப்பாக திகழ்கிறது.

இந்தியாவின் முதன்மையான தொழிற்சங்கமாக கட்டமைத்த தியாகிகள், தலைவர்கள், தோழர்கள் அனைவருக்கும் செவ்வணக்கம்.

எங்கள் வாழ்வும் வளமும் எப்போதும் எங்கள் சங்கமே என்ற புரிதலோடு அதனை கண்ணின் மணி போல காத்து மேலும் முன்னேற்றுவோம் என்று உறுதியேற்கிறோம்.


Saturday, April 26, 2025

எல்.ஐ.சி யால் மட்டுமே முடியும்

 



பஹல்காம் தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் இருந்தால் அவர்களின் பட்டுவாடா கேட்புரிமங்கள் உடனடியாக செய்யப் படும் என்றும் அதற்காக சில சிறப்பு தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் எல்.ஐ.சி அறிவித்துள்ளது. அரசின் பட்டியலில் பெயர் இருந்தால் போது இறப்புச் சான்றிதழ் கூட  அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

24.04.2025 அன்றே நெல்லூர் கோட்டம் ஒரு கேட்புரிமத்தை பட்டுவாடா செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இது போல துயரில் தவிப்பவருக்கு வேகமாக எந்த ஒரு தனியார் நிறுவனமும் சேவை செய்யாது என்றும் பொதுத்துறை எல்.ஐ.சி யால் மட்டுமே சாத்தியம் என்று எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.

இது புதிதல்ல.

சுனாமி தாக்கிய போது கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் 24 மணி நேர சேவை செய்தோம்.

காட்பாடி தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள் இறந்த போது வேலூர் மையத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் 24 மணி நேர உதவி மையம் செயல்பட்டது.

இது எல்.ஐ.சி யின் பாரம்பரியம்.

சுனாமி சமயத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அவ்வளவாக இந்தியாவில் கால் பதிக்கவில்லை (இப்போதும் கூட அவர்களால் எல்.ஐ.சி யின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை). ஆனால் சுனாமி தாக்கிய வேறு சில நாடுகளில் அங்கே இருந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , "சுனாமி என்பது கடவுளின் செயல். அதனால் பாலிசி பணத்தை தர முடியாது" என்று மறுத்து விட்டன. பாலிசிதாரர்களின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

மும்பை தாக்குதலின் போது வீர மரணம் அடைந்திட்ட காவல்துறை உயரதிகாரி ஹேமந்த் கார்கரேவின் இறப்புக் கேட்புரிமத்தை எல்.ஐ.சி மறுநாளே வழங்கியது. அவர் இன்னொரு தனியார் நிறுவனத்திலும் பாலிசி எடுத்திருந்தார். உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஹேமந்த் கார்கரே மீட்பு நடவடிக்கைக்குச் சென்றார் என்று சொல்லி பணம் கொடுக்க மறுத்து விட்டது.

இப்படிப்பட்ட தனியார் கம்பெனிகள் கொழிக்க வேண்டும் என்பதற்காக மோடி அரசு எல்.ஐ.சி யின் செயல்பாடுகளை, வணிகத்தை சீர்குலைக்க சில சதிகளை செய்து கொண்டிருக்கிறது.

அதை எந்நாளும் நாங்கள் அனுமதியோம்.


Wednesday, April 16, 2025

40 - கணக்கில் வராததையும் கணக்கில் கொண்டு . . .

 


இன்று எல்.ஐ.சி பணியில் நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளேன்.

16.04.1986 அன்று சென்னை உனைட்டெட் இந்தியா கட்டிடத்தில் எங்களுக்கான 15 நாட்கள் பயிற்சி வகுப்பில் இணைந்தேன். அப்போதெல்லாம் மூன்று மாதம் பயிற்சிக் காலம், மூன்று மாதம் தகுதி காண் பருவம். பயிற்சிக் காலம் பணிக்காலமாக கணக்கில் எடுக்கப் படாது. 1990 க்குப் பிறகு பயிற்சிக்காலம் என்று தனியாக கிடையாது. தகுதி காண் பருவம் ஆறு மாதங்களாகி விட்டது. 

எல்.ஐ.சி கணக்கில் சேர்க்காவிட்டாலும் நான் இணைந்தது இந்த நாள்தானே! அதனால் அதனை கணக்கில் கொண்டால் இந்த நாளில் நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். நாற்பதாவது ஆண்டை நிறைவு செய்ய முடியாது. ஏனென்றால் 3107.2025 அன்று பணி நிறைவு.

இந்த நாற்பது ஆண்டு கால அனுபவங்களை நினைத்துப் பார்த்து நல்ல, சவாலான அனுபவங்களை பின்னர் பகிர்ந்து கொள்வேன்.

சமூகத்தில் ஒரு மதிப்பும் பொருளாதார தன்னிறைவும் எல்.ஐ.சி யால்தான் கிடைத்தது என்பதை பதிவு செய்கிறேன். அதன் பின்புலமாக இருந்தது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான் என்பதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

முதல் நாள் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது.

அலுவலக பயிற்சி வகுப்பு சுய அறிமுகம், அதிகாரிகளின் வாழ்த்துரை (முதுநிலை கோட்ட மேலாளருக்கு அன்றுதான் பதவி உயர்வு ஆணை வந்திருந்ததால் அவருக்கான வாழ்த்துரை), எல்.ஐ.சி பற்றிய அறிமுகம் என்று கழிந்தது.

மாலையில்தான் முக்கியமான சம்பவம்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அறிமுகக் கூட்டம். மகத்தான் தலைவரும் அன்றைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா அவர்களின் கம்பீரமான உரை சங்கத்தை நோக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான துவக்கப்புள்ளி. 




எப்படி மறக்க இயலும் இந்நாளை !!!

Wednesday, February 19, 2025

ஆளில்லா கடையிலா மோடி டீ விற்கிறார்?

 


 

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 % ஆக உயர்த்துவோம் என்று நிர்மலா அம்மையார் அறிவித்தது தொடர்பாக சில நாட்கள் முன்பு எழுதியிருந்தேன்.

 இதனை 74 % ஆக உயர்த்திய போது எழுதிய பதிவை கீழே மீண்டும் பகிர்ந்துள்ளேன்.

 அதனை முழுமையாக படியுங்கள். பழைய பதிவு நீல நிறத்தில் உள்ளது.  இப்போது பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை ப்ரௌன் நிறத்தில் கொடுத்துள்ளேன்.

மோடிஜி ஆளில்லா கடையில் யாருக்காக ?

 


இன்சூரன்ஸ் துறையில் அன்னிய  நேரடி முதலீட்டு வரம்பை 49 % லிருந்து 74 % ஆக உயர்த்தப் போவதாக மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அது அவசியமா என்று பார்ப்பதற்கு முன்பாக இரண்டு சம்பவங்களை நினைவு கூர்வது அவசியம்.

 சம்பவம் 1 : இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணைய மசோதா (அப்போது வெறும் கட்டுப்பாடுதான் வளர்ச்சி இல்லை)  26.08.1997 அன்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார். இன்சூரன்ஸ்துறையில்  தனியார் துறையை அனுமதிக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு திருத்தம் கொண்டு வர அத்திருத்தம் தோற்கடிக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் துறையில் தனியார் கம்பெனிகள் இருக்கலாமே தவிர அன்னிய மூலதனமோ, அன்னிய கம்பெனிகளோ அனுமதிக்கப்படக்க் கூடாது என்ற திருத்தத்தை பாஜக உறுப்பினர் ஒருவர் கொண்டு வருகிறார். இடதுசாரிகள் அந்த திருத்தத்தை ஆதரிப்பதாகச் சொல்கின்றனர். அப்படியானால் அந்த திருத்தம் வெற்றி பெறும் என்பதை உணர்ந்த அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் ஐ.ஆர்.ஏ மசோதாவை திரும்பப் பெறுகிறார். இன்சூரன்ஸ் துறையில் அன்னியக் கம்பெனிகளை வர விடாமல் தடுத்தவர்கள் நாங்கள்தான் என்று பாஜகவினர் கொஞ்ச நாள் பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள்.

 சம்பவம் 2 : வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 26 % அன்னிய நேரடி முதலீட்டோடு தனியார் நிறுவனங்களை இன்சூரன்ஸ் துறையில் அனுமதிக்கும்  இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காணைய மசோதாவை 28.10.1999 அன்று பாஜக அரசு மக்களவையில் அறிமுகம் செய்கிறது. அன்றைய தினம் இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய மக்களிடம் நாம் பெற்ற 1,50,54,577 கையெழுத்துக்கள் கொண்ட படிவங்கள் அன்றைய  மக்களவைத் தலைவர் திரு ஜி.எம்.சி.பாலயோகி அவர்களிடம் அளிக்கப்படுகிறது. அதே நாள் புதுடெல்லியில் பாஜகவின் குரு பீடமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவான ஸ்வதேசி ஜக்ரான் மஞ்ச், அதன் தலைவரான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தலைமையில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஒரு தர்ணா போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.

 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவு அன்னிய மூலதனத்தை அனுமதிக்கும் மசோதாவை அறிமுகம் செய்கிறது. இன்னொரு பிரிவோ அதற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. பாரதியார் சொன்ன “நடிப்புச் சுதேசிகள்” என்ற வாசகம் இவர்களைத் தவிர வேறு யாருக்கு பொருந்தும்?

 அன்னிய மூலதனமே கூடாது என்று திருத்தம் கொண்டு வந்தவர்கள் அவர்களின் ஆட்சியில் முதலில் 26 % அன்னிய மூலதனத்தை அனுமதித்தார்கள். அதையும் அவர்களே எதிர்ப்பதாக வேறு ஒரு நாடகத்தையும் நடத்தினார்கள்.

 மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் காலத்தில் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி 49 % வரை அன்னிய நேரடி முதலீட்டிற்கு ரத்தினக் கம்பளம் விரித்தனர்.

 இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனம் வந்தால் கட்டமைப்புத் தேவைகளுக்கான நிதி கொட்டிக் கொண்டே இருக்கும் என்று சொன்னார்கள், சொல்கிறார்கள், சொல்வார்கள். கட்டமைப்புத் தேவைகளுக்கான முதலீடுகள் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரும் என்பது அன்றைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் சொன்ன உறுதிமொழி. அப்படிப் பார்த்தால் இந்த இருபது வருடங்களில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் முப்பது லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும். ஆனால் அதிலே நூற்றில் ஒரு பங்காவது வந்ததா என்றால் அது சந்தேகமே!

 அன்னிய மூலதன வரம்பை 49 % லிருந்து 75 % ஆக உயர்த்த துடிக்கிறார்களே, இப்போது எத்தனை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் 49 % அன்னிய நேரடி மூலதனம் உள்ளது?

 ஐ.ஆர்.டி.ஏ வின் 2018-2019 ஆண்டறிக்கை உண்மையைச் சொல்கிறது. மொத்தமுள்ள 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களில் அன்னிய மூலதனமே கிடையாது.  ஏகான், அவியா லைப், பார்தி ஏஎக்ஃஎஸ், ஆதித்ய பிர்லா சன்லைஃப், டிஹெச்எப்எல் பரமெரிக்கா, எடெல்வாய்சின் டோக்யோ, ரிலையன்ஸ் நிப்பான், டாடா ஏ.ஐ.ஏ ஆகிய  எட்டு நிறுவனங்களில் மட்டுமே 49 % அன்னிய முதலீடு உள்ளது. ஏழு நிறுவனங்களில் அன்னிய மூலதனம் 26 % லிருந்து 49 % க்குள் உள்ளது. ஐந்து நிறுவனங்களில் 26 % க்கும் குறைவாகத்தான் உள்ளது. அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த மூலதனமே 27,515.75 கோடி ரூபாய்தான். அதில் அன்னிய மூலதனம் 9,764,20 கோடி ரூபாய்தான். அது வெறும் 35.49 % மட்டுமே.

 பொது இன்சூரன்ஸ் துறையில் நிலைமை இன்னும் மோசம். மொத்தமுள்ள 21 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களில் அன்னிய மூலதனமே கிடையாது. ஐந்து நிறுவனங்களில் மட்டுமே 49 % அன்னிய மூலதனம் உள்ளது. 21 கம்பெனிகளின் மொத்த மூலதனமான 9570.88 கோடியில் அன்னிய மூலதனம் வெறும் 2,895.99 கோடி ரூபாய் மட்டுமே. 29.79 % தான்.

 அன்னிய மூலதன வரம்பை 49 % ஆக உயர்த்தும் சட்டத் திருத்தம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வந்தாலும் அது 15 ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் 16 பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் தேவைப்படவே இல்லை. இந்த தனியார் நிறுவனங்களுக்கு கூடுதல் அன்னிய மூலதனம் தேவைப்படவே இல்லை என்பதுதானே யதார்த்தம்! அன்னிய மூலதன அளவு குறைவாக இருந்தும் அவர்கள் வணிகம் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்!

 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் 49 % வரம்பையே பயன்படுத்தாத நிலையில் 74 % ஆக உயர்த்த வேண்டிய அவசியம் ஏன்? ஆளில்லாத கடையில் யாருக்காக டீ ஆத்துகிறது என்ற கேள்வி மனதுக்குள் எழும்.

 நரியின் பார்வை இரையின் மீதுதான் என்பதை மறந்து விடக் கூடாது. பல இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு இந்தியக் கம்பெனிகளின் பங்குதாரர்களாக இருப்பது என்பது வேப்பங்காயாக கசக்கக் கூடியது. 100 % மூலதனத்தோடுதான் செயல்பட வேண்டும் என்ற கொள்கையில் மாறாத உறுதியோடு இந்தியாவில் கடை விரிக்காத அன்னியக் கம்பெனிகள் இருக்கிறார்கள்.

 இங்கிலாந்தின் லாயிட்ஸ் நிறுவனம் 100 % முதலீட்டில் மட்டுமே வருவது என்று பிடிவாதமாக உள்ளது. அதே போல உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான வாரண் பஃபெட்டின் நிறுவனமாக ஜென் ரீ நிறுவனத்தையும் சொல்லலாம். இவை இன்று இந்தியாவில் மறு இன்சூரன்ஸ் நிறுவனமாக செயல்படுகிறதே தவிர நேரடி இன்சூரன்ஸ் வணிகத்திற்கு வரவில்லை.

 நேரடியாக 100 % அன்னிய மூலதனத்தை அனுமதிப்பதற்கான முதல் கட்டமாகவே இப்போது அன்னிய மூலதன வரம்பை 74 % ஆக உயர்த்தியுள்ளது. அரசின் இறுதி இலக்கு என்பது 100 % தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

 அது மட்டுமல்ல, பென்ஷன் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அரசுக்கு உள்ளது. இன்சூரன்ஸ் துறையில் உயர்த்தினால் அங்கேயும் உயர்த்துவது மிகவும் எளிதாகி விடும்.

 பென்ஷன் நிதியை நிர்வகிப்பவர்களாக இன்று ஏழு நிறுவங்கள் உள்ளன. அவர்கள் நிர்வகிக்கும் தொகை 2018 ல் 2,34,579 கோடி ரூபாயாக இருந்தது 2019 ல் 3,18,214 கோடி ரூபாயாக 36 % அதிகரித்துள்ளது. இந்த தொகை அன்னியக் கம்பெனிகளின் கண்களை உறுத்துகிறது.

 அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதன் பொருள் என்பது ஒன்றுதான். இந்திய மக்களின் உள்நாட்டு சேமிப்பில் ஒரு பகுதிதான் இன்சூரன்ஸ் பிரிமியமாக மாறுகிறது. அப்படிப்பட்ட உள்நாட்டு சேமிப்பின் மீதான கட்டுப்பாடு அன்னிய மூலதனத்தின் கைகளுக்குச் செல்லும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும். அதனால்தான் இதை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. தேசத்தை நிஜமாக நேசிக்கிற ஒவ்வொருவரும் கண்டிப்பாக எதிர்த்திட வேண்டும்.

 முடிப்பதற்கு முன்பாக

 உலகப் பொருளாதார நெருக்கடி வந்த போது அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய வங்கிகள் திவாலாகின. அந்நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான அமெரிக்கன் இன்சூரன்ஸ் க்ரூப் (ஏ.ஐ.ஜி) திவாலின் விளிம்புக்குச் சென்றது. அரசு ஏராளமான நிதி கொடுத்து அந்த நிறுவனத்தை மீட்டது. வணிகத்தில் அரசுக்கு வேலை இல்லை (Government has no business in business) என்று எப்போதும் உபதேசித்துக் கொண்டிருக்கிற யாரும் ஒரு வணிக நிறுவனத்தை பாதுகாக்க ஏன் வரி செலுத்துவோர் பணத்தை விரயம் செய்கிறது என்று கேட்கவே இல்லை.

 ஏ.ஐ.ஜி யும் டாடாவும் இணைந்து டாடா ஏ.ஐ.ஜி என்ற பெயரில் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். ஏ.ஐ.ஜி தடம் புரண்ட போது அன்றைய ஐ.ஆர்.டி.ஏ தலைவர் விவேக் நாராயணன் “டாடா ஏ.ஐ.ஜி நிறுவனத்தில் 24 % மட்டுமே ஏ.ஐ.ஜி யிடம் உள்ளது. மீதமுள்ள 76 % டாடாவிடமே உள்ளதால் பாலிசிதாரர் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று அறிக்கை அளித்தார். ரத்தன் டாடா முழுப் பக்க விளம்பரங்களை பல நாளிதழ்களில் பல நாட்கள் அளித்தார்.

 24 %  மட்டுமே  அன்னிய மூலதனம் இருந்ததால் கவலைப்படாதீர்கள் என்று சொல்ல முடிந்தது. அன்னிய மூலதனம் 74 % ஆக உயர்ந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பார்த்தால் அச்சம் வரவில்லையா?

 தன்னுடைய சேமிப்புக்கு என்ன ஆகும் என்ற அச்சத்தோடு ஒரு பாலிசிதாரர் வாழ்ந்திட வேண்டுமா?

 அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

 நான்கு வருடத்திற்கு முன்பு சொன்னதுதான். நிலைமையில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை. ஒரே ஒரு நிறுவனத்தில் மட்டும்தான் 74 % அன்னிய மூலதனம் உள்ளது. ஒட்டு மொத்தமாக 32 % அன்னிய முதலீடுதான் உள்ளது. அப்படியென்றால் ஆளில்லா கடையில் மோடி டீ விற்கிறாரா?

 இல்லை.

 பழைய பதிவில் சொன்னதை மறுபடியும் படியுங்கள்,

 “வந்தால் தனியாத்தான் வருவோம்” சில வெளிநாட்டு நிறுவனங்கள்  காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்காக 100 % அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கான முதல் கட்டமாகத்தான் 74 % ஆக உயர்த்தியுள்ளார்கள் என்று எழுதியிருந்தேன்.

 இப்போது அதுதான் நடந்துள்ளது.

 100 % அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுவதால் சில நிறுவனங்கள் இப்போது வரும்.

 இதன் மூலம் இப்போதுள்ள தனியார் நிறுவனங்களிலும் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

 எப்படி?

 விரைவில்  விரிவாக பார்ப்போம்.

பிகு : பழைய பதிவில் விவேக்கின் படத்தை பயன்படுத்தியதால் இப்போதைய பதிவில் "தெறி" திரைப்படத்தின் கடைசிக் காட்சியை பயன்படுத்தியுள்ளேன் . . .

Sunday, January 19, 2025

வரலாற்றை மோடி வகையறாக்கள் மறந்ததால் . . .

 


இன்று இன்சூரன்ஸ் தேசியமய நாள். 1956 ல் இதே நாளில்தான் ஒரு அவசரச் சட்டம் மூலமாக ஆயுள் இன்சூரன்ஸ் வணிகத்தை அன்றைய நேரு அரசு தேசியமயமாக்கியது. நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் வானொலியில் அந்த முடிவுக்கான காரணங்களை விளக்குகிறார்.

தனியார் கம்பெனிகளின் மோசடிகள் காரணமான சூறையாடப்பட்ட பாலிசிதாரர்களின் நலனை பாதுகாப்பது என்பதுதான் முக்கியக் காரணம். வணிகர்கள் நாற்பது விதமான மோசடிகளை செய்வார் என்று சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் சொல்லியுள்ளார். அதற்கும் மேல் எண்ணற்ற மோசடிகளை செய்தவர்கள் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் என்று ஃபெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் பதிவு செய்கிறார்.

ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயம் எல்.ஐ.சி எனும் மகத்தான நிறுவனத்தை உருவாக்கியது. ஐந்து கோடி ரூபாய் மூலதனத்துடன் உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி யின் சொத்து மதிப்பு  இப்போது 52 லட்சம் கோடி ரூபாயை கடந்து விட்டது. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எல்.ஐ.சி என்பதற்கு மேல் வேறென்ன எழுத வேண்டும்!

இருபதாண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய் அரசால் இன்சூரன்ஸ் துறை தனியாருக்கு திறந்து விடப்பட்டது. 23 கம்பெனிகள் இப்போது செயல்பட்ட போதும் அவர்களால் எல்.ஐ.சி யின் முதன்மைத்தன்மையை அசைக்க முடியவில்லை. கிட்டே நெருங்கவும் முடியவில்லை.

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை புரியவே பிறந்திருக்கும் மோடியால் இதனை சகித்துக் கொள்ள முடியுமா?

பட்ஜெட் கூட்டத்தொடரில் சில மாற்றங்களை கொண்டு வர உத்தேசித்துள்ளது. தனியார் கம்பெனிகளுக்கு வளர்ச்சி ஆணையமாகவும் எல்.ஐ.சி க்கு மட்டும் கட்டுப்பாடு ஆணையமாகவும் செயல்படுகிற INSURANCE REGULATORY AND DEVELOPMENT AUTHORITY சில விபரீத பரிந்துரைகளை கொடுத்துள்ளது.

அன்னிய நேரடி முதலீட்டை 100 % ஆக உயர்த்துவது.

இதன் மூலம் இந்நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் பாலிசிதாரர் பணம் அன்னிய நாடுகளுக்கு பறந்து விடும். ஏமாற்றி விட்டு ஓடினால் நீங்கள் அங்கே போய்தான் வழக்கு நடத்த வேண்டும். மொத்தத்தில் இந்தியாவுக்கோ, இந்திய மக்களுக்கோ தம்படிக்கு பிரயோசனமில்லை.

இன்சூரன்ஸ் கம்பெனி துவக்க குறைந்த பட்சம் 100 கோடி ரூபாய் மூலதனம் முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒரு விதி. காப்பீடு எடுக்கப்படும் தொகையைப் போல ஒன்றரை மடங்கு கையிருப்பு  SOLVANCY MARGIN இருக்க வேண்டும் என்பது இன்னொரு விதி.

இந்த இரண்டு விதிகளையுமே தளர்த்தப் போகிறார்கள். அதன் மூலம் புற்றீசல் போல இன்சூரன்ஸ் கம்பெனிகள் மழையில் முளைக்கும் காளான் போல உதிக்கும். அன்றே இறக்கும் ஈசல் போல காணாமல் போகும். அவைகளை நம்பி முதலீடு செய்தவர்கள் கதி???????

எல்.ஐ.சி வணிகத்தின் அச்சாணி முகவர்கள்தான். ஐ.ஆர்.டி.ஏ கொண்டு வந்த ஒரு பைத்தியக்கார விதி காரணமாக பாலிசித்திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது. அதனால் முகவர்களின் வாழ்வாதாரத்திலும் பெரிய பாதிப்பு உருவாகியுள்ளது.

இந்த சூழலில் எல்.ஐ.சி முகவர்களை தனியார் கம்பெனிகள் ஆக்கிரமிக்கும் சதியை வேறு ஐ.ஆர்.டி.ஏ கொண்டுள்ளது. இன்சூரன்ஸ் துறையில் நெறிமுறையற்ற வணிகத்திற்கே இது இட்டுச் செல்லும்.

மொத்தத்தில் என்ன ஆகும்?

எப்படி 1956 ல் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் மோசடிகளால் மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதே போன்ற நிலை 2026 லேயே உருவாகும்.

"வரலாற்றை மறந்தால் அது இன்னும் வேகத்தோடு மீண்டும் நிகழும்" என்பார்கள்.

தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் மோசடிகளை மோடி வகையறாக்கள் மறந்து விட்டார்கள். அதனால் புதிய மோசடிகளுக்கு வாசலை திறந்து வைக்க முயல்கிறார்கள்.

ஆனால் நாங்கள் மறக்கவில்லை. எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மறக்கவில்லை. மக்களிடம் சென்று உண்மைகளைச் சொல்லி அவர்களின் கருத்துக்களை ஆயுதமாகக் கொண்டு போராடி வருகிறோம். 

"வலுவான எல்.ஐ.சி, வலிமையான இந்தியா" என்ற முழக்கத்தோடு களம் இறங்கியுள்ளோம்.

நிச்சயம் நாங்கள் எல்.ஐ.சி யையும் காப்போம், தேசத்தையும் காப்போம்.

Sunday, January 5, 2025

எல்.ஐ.சி யில் மட்டும் ஏன் முடியாது?

 


முன் குறிப்பு : ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த காலத்தில் எழுதப்பட்ட பதிவு. சற்று தாமதமாக இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் நடைபெற்று அங்கே DREU சங்கம் வெற்றி பெற்றுள்ளது. இது மகிழ்ச்சிகரமான செய்தி. ரயில்வே துறை ஒரு மத்தியரசு நிறுவனம். அங்கே அரசு அங்கீகாகரத்திற்கான தேர்தலை நடத்தியுள்ளது.

மத்தியரசு நிறுவனமாக இருக்கிற  பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலும்  மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையாக சங்க அங்கீகாரத் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை ஆறு முறையோ ஏழு முறையோ அங்கே தேர்தல் நடந்துள்ளது.

நிதித்துறைக்கு கீழ் உள்ள வங்கித்துறையில் அனைத்து வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு  ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் அனைத்து சங்கங்களும் கையெழுத்திடுகின்றன.

நிதித்துறையின் கீழ் வரும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் நான்காண்டுகளுக்கு ஒரு முறை சங்க அங்கீகாரத் தேர்தல் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது.

ஆனால்

அதே நிதியமைச்சகத்தின் கீழ்வரும் எல்.ஐ.சி யில் மட்டும் சங்க அங்கீகாரத் தேர்தல் இது வரை நடந்ததே இல்லை.

தொழிற்சங்க ஜனநாயகம் ஏன் எல்.ஐ.சி யில் மட்டும் மறுக்கப்படுகிறது?

காரணம்?

பயம், பயமின்றி வேறில்லை.

ஏனென்றால் இங்கே எல்.ஐ.சி யில் எண்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர் எண்ணிக்கையுடன் பெரும்பான்மையாக உள்ளது ஒரே ஒரு சங்கம் மட்டும்தான்.

அது

எங்களின் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

எல்.ஐ.சி தோன்றும் முன்னே தோன்றிய சங்கம்.

நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிரான சங்கம்.

மக்கள் ஒற்றுமையையும் மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் உயர்த்திப் பிடிக்கிற சங்கம்.

நிறுவன நலனுக்காகவும் பாலிசிதாரர்கள், முகவர்கள்,  ஊழியர் நலனுக்காகவும் சமரசமின்றி தொடர்ந்து  போராடுகின்ற  சங்கம்.

எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க தொடர்ந்து போராடுகின்ற, மக்களின் ஆதரவை திரட்ட அவர்கள் மத்தியில் பல பத்தாண்டுகளாக கருத்துப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிற சங்கம்.

 அது மட்டுமல்ல, இங்கே அரசுக்கு ஆதரவான சங்கம் என்பது ஊழியர்களால் புறக்கணிக்கப்பட்ட சங்கம், அதற்கும் அங்கீகாரம் கொடுத்து அழகு பார்க்க வாய்ப்பே கிடையாது.

 நிர்மலா அம்மையார் மட்டுமல்ல அவர்களுக்கு முன்பாக இருந்த அருண் ஜெய்ட்லி கூட அந்த சங்கத்தை வளர்க்கப்பார்த்தார். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். எங்களுக்கு 1995 ல் பென்ஷன் திட்டம் அறிமுகமானது. சிறிய அளவிலான ஊழியர்கள் அப்போது அத்திட்டத்தில் இணையவில்லை. வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்த பின்னணியில் பென்ஷன் திட்டம்தான் லாபகரமானது என்பது புரிந்து பென்ஷன் திட்டத்தில் இணைய எங்களுக்கும் வாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கை உருவானது.

 அக்கோரிக்கையை வென்றெடுக்க எங்கள் சங்கம் தொடர்ந்து போராடியது. முயற்சிகள் எடுத்தது. வேலை நிறுத்தங்கள் மேற்கொண்டோம். அரசு உயர் அதிகாரிகளிடம் நியாயத்தை விளக்கினோம். இறுதியில் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 அருண் ஜெய்ட்லி என்ன செய்தார் தெரியுமா? அரசாணை வெளியிடப்பட்டதும் அதனை எல்.ஐ.சி நிர்வாகத்திற்குக் கூட தெரிவிக்காமல் அவருடைய ஆதரவு சங்கத்திற்கு சொல்லி தகவலை பரப்ப வைத்தார். ஏதோ அவர்கள்தான் பெற்றுக் கொடுத்தது போன்ற தோற்றத்தை உருவாக்க நினைத்த அற்ப ஆசை. ஒரு சில அப்பாவிகள் வேண்டுமானால் அந்த மாயையில் மயங்கியிருக்கலாம். ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் யாரால் அந்த பலன் வந்தது என்பதில் தெளிவாக இருந்தார்கள்.

 தங்களுக்கு எந்நாளும் அடிபணியாத ஒரு சங்கம் அங்கீகாரம் பெறுவதை தடுக்க முயல்கின்றனர்.  நாட்டின் ஜனநாயகத்தையே  மதிக்காத கும்பல் தொழிற்சங்க ஜனநாயகத்தை மட்டும் மதிக்குமா என்ன?

 ஆனால் நாங்கள் விட மாட்டோம். தொடர்ந்து போராடுவோம். இறுதி வெற்றி எங்களுடையதே.

 

 

Wednesday, November 20, 2024

எல்.ஐ.சி – இந்தி – முரண்பாடுகள்

 


நேற்று முன் தினம் முழுதும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்ட விஷயம் எல்.ஐ.சி இணைய தளம் தொடர்பானதுதான். ஊழியர் பணி விதிகளுக்கு கட்டுப்பட்டவன் என்ற முறையில் அது பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை.

 ஆனால் இந்த சர்ச்சையில் நான் கவனித்த ஒரு முரண்பாட்டை சுட்டிக் காட்டவே இந்த பதிவு,

 முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விமர்சனத்தை முன் வைத்த அனைவருமே எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனமாகவே தொடர வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள். ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக நின்றவர்கள். பங்கு விற்பனைக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் சமூக வலைத்தளம் உள்ளிட்ட  மக்கள் மன்றங்களில் பேசியவர்கள், எழுதியவர்கள். இன்சூரன்ஸ் பிரிமியம் மீது ஜி.எஸ்.டி கூடாது என்றவர்கள்.

 இவர்களோடு மல்லு கட்டியவர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் “பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காகவே பிறந்தவை” என்று சொன்ன மோடியின் ஆதரவாளர்கள். எல்.ஐ.சி யின் பங்கு விற்பனையை வாயில் உமிழ்நீர் வடிய ஆதரித்தவர்கள், இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு ஜி.எஸ்.டி வசூலிப்பது அநியாயமானது என்று ஊழியர்கள் குரல் கொடுத்த போது செவிகளை இறுக்கமாய் மூடிக் கொண்டவர்கள்.

 ஆக அவர்களின் கரிசனம் எல்.ஐ.சி யின் மீதல்ல, இந்தியின் மீது . . .

 

Thursday, November 14, 2024

நேருவும் மோடியும்

 


நேருவுக்கும் மோடிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை பாருங்கள்.


 எங்கள் சங்கத்தின் போர் வாளான “இன்சூரன்ஸ் வொர்க்கர்”  நவம்பர் 2024 இதழின் அட்டைப்படத்தில் வெளியானது,

 எல்.ஐ.சி – அன்றும் இன்றும்

 

அன்று – 1956 ல்

 

லாப நோக்கு என்பது வெளியேறுகிறது.

சேவை நோக்கமே மிகவும் பிரதானமாகிறது.

இன்று

 

பங்குதாரர்களுக்கு லாபத்தையும்

கூடுதல் மதிப்பையும் உருவாக்குவது

Monday, September 2, 2024

வலுவான எல்.ஐ.சி, வலிமையான இந்தியா . . .

 


எல்.ஐ.சி யின் 68 வது ஆண்டு விழா தொடங்கி விட்டது. 

நிறுவனத்திற்கு 68 வயதாகியிருக்கலாம். ஆனால் அதன் சிந்தனையும் செயல்பாடுகளும் இளைஞர்களுக்கானது, அவர்களின் வண்ணமயமான எதிர்காலத்திற்கானது. அதைத்தான் மேலே உள்ள படம் உணர்த்துகிறது.

இன்சூரன்ஸ் வார விழா இந்தியா முழுதும் உள்ள எல்.ஐ.சி ஊழியர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது எங்கள் நிறுவனம் என்ற உடமை உணர்வோடு ஊழியர்கள் திகழ்வதை வேறு எங்கேயாவது இந்த அளவில் பார்த்துள்ளீர்களா?

அதற்குக் காரணம், எல்.ஐ.சி தோன்றுவதற்கு முன்பே உதயமாகி எல்.ஐ.சி யின் தோற்றத்திற்கே காரணமான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இல்லையேல் எல்.ஐ.சி இன்றைக்கு உள்ள வலுவான நிலையில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிப்பது என்ற முடிவை முறியடித்தது, எல்.ஐ.சி யின் 50 % பங்குகளை விற்பது என்ற மல்கோத்ரா குழுவின் பரிந்துரையை முறியடித்தது ஆகியவையே எல்.ஐ.சி யின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எல்.ஐ.சி யின் காவல் அரண்.

5 கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்ட எல்.ஐ,சியின் சொத்து மதிப்பு இன்று 52 லட்சம் கோடியை கடந்துள்ளது. அந்த நிதிதான் மக்கள் நலத் திட்டங்களுக்குச் செல்கிறது. அந்த நிதிதான் பங்குச்சந்தையைக் கூட பாதுகாக்கிறது. எல்.ஐ.சி இல்லையேல் இந்தியப் பொருளாதாரம் இல்லை.

அதனால்தான் எங்கள் சங்கம் சொல்கிறது. 

"எல்.ஐ.சி வலுவாக இருந்தால்தான் இந்தியா வலிமையாக இருக்கும்"

எனவே எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனமாக வலுவாக இருப்பதற்கு எங்களோடு இணைந்து குரல் கொடுங்கள் என்று மக்களை அணுகும் விதத்தில் எங்கள் வேலூர் கோட்டத்தில் நாளை 03.செப்டம்பர் 2024 அன்று தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவுள்ளோம்.

வலிமையான இந்தியாவை உருவாக்கும் வலுவான எல்.ஐ.சி யை சீரழிக்க ஒன்றிய அரசாலோ, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களோ அல்லது முதலாளித்துவ ஊடகங்கள் தொடங்கி எலும்புத் துண்டுகள் வாங்கி அவதூறு பரப்பும் சில்லறை பத்திரிக்கைகள் வரை யாராலும் முடியாது.

ஏனென்றால் எல்.ஐ.சி ஒரு மக்கள் நிறுவனம். 

பிகு: நேற்றே எழுதியிருக்க வேண்டிய பதிவு. கணிணி சிக்கல் செய்ததால் தாமதம்.

Thursday, August 29, 2024

3662 கோடி ரூபாயும் நிர்மலா அம்மையாரும்

 


1956 ல் 5 கோடி ரூபாயும் பின்பு 2011 ல் 95 கோடி ரூபாயும் எல்.ஐ.சி யின் மூலதனமாக  ஒன்றிய அரசு முதலீடு செய்த தொகை. 

அந்த மூலதனத்திற்கு 2023-2024 நிதியாண்டிற்கான லாபத்தில் அரசின் பங்குத் தொகையாக ரூபாய் 3662.17 கோடி ரூபாயை எல்.ஐ.சி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா அம்மையாரிடம் அளித்துள்ளார்கள்.

இவ்வளவு ரூபாயை வழங்கும் எல்.ஐ.சி க்கு அந்த அம்மையார் விசுவாசமாக இருப்பார்களா? எல்.ஐ.சி க்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரமாவது கொடுக்காமல் இருப்பாரா? 

அப்படிப்பட்ட நேர்மையெல்லாம் அந்த அம்மையாருக்கு கிடையாது என்பது சோகமான யதார்த்தம். 

Friday, September 1, 2023

காக்கும் கரங்களும் காவல் அரணும்

 



01.09.1956 ல் உருவான எல்.ஐ.சி நிறுவனத்துக்கு இன்று உதய தினம். மக்களின் சேவையில்  67 ஆண்டுகளை நிறைவு செய்து கம்பீரமாக நடை போடுகிறது.

எல்.ஐ.சி நிறுவனத்தை சிதைக்க, சீர் குலைக்க எத்தனையோ முயற்சிகளை இக்காலக்கட்டத்தில் அதன் உடமையாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிற அரசு(உண்மையான உடமையாளர்கள் பாலிசிதாரர்களே)ம், சில சமயங்களில் நிர்வாகமுமே கூட எடுத்தாலும் எல்.ஐ.சி யின் வெற்றிப் பயணம் நிற்கவில்லை.

தனியார் கம்பெனிகள் எத்தனையோ பேர் வந்தாலும் தன் முதன்மை இடத்தை தக்க வைத்துக் கொண்டு முன்னேறுகிறது எல்.ஐ.சி.

எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாப்பது என்பது எங்கள் தத்துவார்த்தக் கடமை என்ற புரிதலோடு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி யின் காவல் அரணாக என்றென்றும் திகழும்.

அனைவருக்கும் எல்.ஐ.சி உதய தின வாழ்த்துக்கள் . . .. 

Sunday, July 16, 2023

37 முடிந்து 38

 

முப்பத்தி ஏழு ஆண்டுகள் பணி முடிந்து இன்று முப்பத்தி எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.

சமூகத்தில் நல் மதிப்பும் பொருளாதார வ்ளமும் கொடுத்த என் நிறுவனமான எல்.ஐ.சி ஆப் இந்தியாவையும்

சுய மரியாதையையும் பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதி செய்த எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தையும்
நன்றியோடு நினைத்துப் பார்க்கும் தருணம் இது.
இன்னும் இருபத்தி மூன்றரை மாதங்களில் பணி நிறைவை எதிர்நோக்கி உற்சாகத்துடன் தொடருது என் பயணம்

Monday, April 3, 2023

எல்.ஐ.சி கட்டிடத்தின் முந்தைய தீ

 


நேற்று முழுதும் தமிழ்த் தொலைக்காட்சிகள் எல்லாம் சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை வைத்து பொழுதை ஒப்பேற்றி விட்டார்கள். பெரிய பாதிப்பு  இல்லாதது மனதுக்கு நிறைவு.

எல்.ஐ.சி கட்டிடம் இதற்கு முன்பும் ஒரு மிகப் பெரிய தீ விபத்தை 1975 ல் கண்டுள்ளது. தொலைக்காட்சிகள் இல்லாததால்  நாளிதழ்களில் வந்த செய்திகள்தான். உயரமான கட்டிடங்களில் தீ பிடித்தால் அணைப்பதற்கான உபகரணங்கள் நம்மிடம் கிடையாது என்ற பலவீனமும் அப்போதுதான் தெரிய வந்தது. “ஸ்னார்க்கல்” என்றொரு இயந்திரம் வாங்கப் பட்டுள்ளது என்று பிறகு செய்திகள் வந்தன.  "நீயா?" திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கூட அந்த இயந்திரம் வரும்.

“இனிமேல் ஆங்கிலத்தில் 23 எழுத்துக்கள்தான்.

 ஏன்?

 அதான் எல்.ஐ.சி எரிஞ்சு போச்சே”

 போன்ற மொக்கை ஜோக்குகளை படித்ததும் நினைவுக்கு வந்தது.

 நான் இங்கே பகிர்ந்து கொள்ளப் போவது வேறு விஷயம்.



 எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இருந்தவரும் நான் ஆசானாக மதிப்பவருமான தோழர் கே.நடராஜன் அவர்களை சில மாதங்கள் முன்பாக பெங்களூரில் அவரது வீட்டில் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது எல்.ஐ.சி கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்து பற்றியும் பேச்சு வந்தது.

 அவர் கூறியதை அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.

 “நானும் தோழர் ராஜப்பா(சமீபத்தில் மறைந்த தலைவர், தென் மண்டலப் பொதுச்செயலாளராக, அகில இந்திய துணைத் தலைவராக இருந்த தோழர்) வும் அன்று பாண்டிச்சேரியில் ஒரு கூட்டத்திற்காக போயிருந்தோம். தகவல் கிடைத்ததும் சென்னை வந்த பிறகு நேரே எல்.ஐ.சி கட்டிடத்திற்குத்தான் சென்றோம்.

 மின் கசிவு காரணமாக முதல் மாடியில் ஏற்பட்ட தீ, மற்ற மாடிகளுக்கும் பரவி இருந்தது. அப்போது எல்.ஐ.சி கட்டிடத்தின் இரண்டு தளங்களில் ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனி வாடகைக்கு இருந்தது. அவர்களுடைய வனஸ்பதி பிராண்டான “டால்டா” வை அங்கே ஸ்டாக் வைத்திருந்தார்கள். நெருப்பு கொழுந்து விட்டு எரிய அது ஒரு முக்கியமான காரணம்.

 தீ விபத்து நடந்த மறு நாளே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச்செயலாளர் தோழர் சரோஜ் சவுத்ரி கல்கத்தாவிலிருந்து விமானத்தை பிடித்து சென்னை வந்தார். எல்.ஐ.சி யின் உயரதிகாரிகள் யாரும் கூட அப்போது சென்னை வரவில்லை.

 தோழர் சரோஜ் சவுத்ரி உடனடியாக ஊழியர் கூட்டத்தை நடத்தச் சொல்லி உரையாற்றினார். ஒரு பள்ளி வளாகத்தில்  பணிகளை தொடர்வதற்கான ஏற்பாடுகள் சங்கத்தின் முன் முயற்சியால் நடந்து கொண்டிருந்தது.

 “பாலிசிதாரகளுக்கான சேவையில் எவ்வித பாதிப்பும் இருக்கக் கூடாது. விபத்தில் எரிந்து போன ஆவணங்களை மீண்டும் உருவாக்குவதில் ஊழியர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட அசௌகர்யங்கள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் ஊழியர்கள் பணி செய்ய வேண்டும். இதுதான் இப்போது நமக்கு முன்னுரிமை”

 என்று தோழர் சரோஜ் வலியுறுத்திப் பேசினார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. குறுகிய காலத்திலேயே இயல்பான வேலைகள் நடக்க ஆரம்பித்தது. ஒரு தொழிற்சங்கம் நிறுவனத்தின் வளர்ச்சியில் எவ்வாறு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணமாக தோழர் சரோஜ் அவர்களின் உடனடி வருகையும் உரையும் ஊழியர்களின் பணியை ஊக்குவிப்பதாக அமைந்திருந்ததும்  அதற்கேற்றார்போல்  அவர்கள் வேகமாகவும் பொறுப்பாகவும் பணியாற்றியதையும் சொல்லலாம்.”

 நல்ல வேளை, இந்த முறை ஆவணங்களுக்கு பாதிப்பு இல்லை.

Friday, February 3, 2023

பாலிசிதாரர்கள் பணம் பாதுகாப்பாய் . . .

 



 

ரீடிஃப்.காம் இணைய இதழிற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் அமானுல்லாகான் அளித்த பேட்டியின் தமிழாக்கம் கீழே.

 


கேள்வி : எல்.ஐ.சி தனது ஒட்டு மொத்த சொத்து மதிப்பில் 1 % க்கும் குறைவாகத்தான் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறுகிறது. இருப்பினும் இத்தொகை 35,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவே உள்ளது. இது மக்களுக்கு கவலை அளிக்காதா?

 

பதில் : இதற்கு இரண்டு பகுதிகளாக நான் பதிலளிக்கிறேன். அரசு கார்ப்பரேட் கூட்டுக் களவாணித்தனத்திற்கு மிகவும் கச்சிதமான உதாரணம் அதானி. ஒரு அமைப்பாக இதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. ஹிண்டர்பர்க் அறிக்கை பல அடிப்படையான, முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது என்பதையும் நாங்கள் ஏற்கிறோம்.

 

அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உண்மைகளை கண்டறிய வேண்டும் என்று எங்கள் அமைப்பு விரும்புகிறது. அது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.

 

எல்.ஐ.சி யில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு நம்பிக்கை அளிக்க நியாயமான விசாரணை அவசியம் தேவை.

 

பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் செபி எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை என்பதை கவலையோடு பார்க்கிறோம்.செபியும் கூட உண்மைகளை கண்டறிய வேண்டும்.

 

அதானியின் வளர்ச்சிக்காக கடைபிடிக்க வழிமுறைகளை நாங்கள் எதிர்க்கிறோம்.

 

அரசியல்வாதிகளின் ஆதரவோடு ஒரு தனி நபர் வளர முடியும் என்பதற்கு அதானி ஒரு தெளிவான  உதாரணம்.

 

எல்.ஐ.சி மீது அதானி தாக்கம் இரண்டாவது அம்சம்

 

ஹிண்டன்பர்க் அறிக்கை மீது தங்களுக்கு சில கவலைகள் உள்ளதென்பதை எல்.ஐ.சி தெளிவாகக் கூறிவிட்டது.

 

மிகப் பெரும் முதலீட்டாளர் என்ற முறையில் ஹிண்டர்பர்கிடமும் சில கண்டறிதல் மேலாக அதானியிடமும் கேள்வி கேட்கும் உரிமை எல்.ஐ.சி க்கு உள்ளது.

 

எல்.ஐ.சி யின் இந்த நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம்.

 

எல்.ஐ.சி யின் முதலீட்டுக் கொள்கைப்படி பாதுகாப்பான முதலீடுகளான அரசுப் பத்திரங்கள், அரசின் கடன் பத்திரங்கள் ஆகியவற்றொ 80 % முதலீடு செய்யப்படும் 

 

மீதமுள்ள 20 % பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும். நீண்ட கால சேமிப்புக்களில்தான் எல்.ஐ.சி முதலீடு செய்யும்.

 

பாலிசிதாரர்களுக்கு நீண்ட கால சேமிப்பின் வழியாக பயன் கிட்டக்கூட்டிய விதத்தில்தான் எல்.ஐ.சி யின் முதலீடு அமைந்திருக்கும். எல்.ஐ.சி யிடம் ஒரு முதலீட்டுக்குழு உள்ளது. தீவிரமான பரிசீலனைக்குப் பிறகே முடிவுகள் எடுக்கப்படும்.

 

அதானி குழுமத்தில் செய்யப்பட்ட முதலீடு தொடர்பாக அனைவரும் சந்தை மதிப்பால் நிகழ்ந்திருக்கக் கூடிய (Notional Loss ) இழப்பைப் பற்றித்தான் பேசுகிறார்களே தவிர, நிஜமான இழப்பைப் பற்றி பேசுவதில்லை.

 

எல்.ஐ.சி அதானியின் பங்குகளை சந்தையில் விற்காததால் அதற்கு நிஜமான இழப்பு எதுவும் ஏற்படவில்லை.

 

முதலீட்டின் அளவு 35,000 கோடி என்பதால் அதானி பங்குகள் வாயிலாக சந்தை மதிப்பில் எல்.ஐ.சி லாபமும் ஈட்டியுள்ளது.  இப்போது கூட அதன் மதிப்பு 56,000 கோடி ரூபாய். எல்.ஐ.சி க்கு லாபமும் கிடையாது, நஷ்டமும் கிடையாது. அவை எல்லாம் வெறும் சந்தை மதிப்புதான்.

 

எல்.ஐ.சி லாபமடைந்ததா, நஷ்டமடைந்ததா என்ற கேள்வியே எல்.ஐ.சி சந்தையில் பங்குகளை விற்கும் போதுதான் வரும். தற்போதைக்கு எல்லாம் காகிதக் கணக்குகள்தான்.

 

கேள்வி: நாம் முன்பு விவாதித்த போது எல்.ஐ.சி பங்குகளை விற்கும் அரைன் முடிவு, எல்.ஐ.சி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதித்தது என்றீர்கள்.  இச்சூழலும் மக்களுக்கு எல்.ஐ.சி மீதுள்ள நம்பிக்கையை பாதிக்கும் என்று கருதுகிறீர்களா?

 

பதில் :  இங்கே இரண்டு பிரச்சினைகள் உள்ளது.  முதலீடு செய்ய எல்.ஐ.சி யிடம் ஏராளமான உபரி உள்ளது. ஒவ்வொரு வருடமும் எல்.ஐ.சி நான்கரை லட்சம் கோடி ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை உபரி ஈட்டுகிறது. இதனை எங்கே முதலீடு செய்வீர்கள்? நீங்கள் பணத்தை வெறுமனே வைத்திருக்க முடியாது.

 

அதை நீங்கள் வெறுமனே வைத்திருந்தால் பாலிசிதாரர்களுக்கு லாபம் தர முடியாது. அதனால் முதலீடு செய்ய வேண்டும். பொறுப்போடும் சாதுர்யத்தோடும் முதலீடு செய்ய வேண்டும்.

 

கேள்வி : இவ்வளவு பெரிய தொகையை ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானதா?

 

பதில் : ஒட்டு மொத்தமாக பங்குச்சந்தையில் செய்யப்பட்ட முதலீட்டில் பார்த்தீர்கள் என்றால் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டது  7 % அளவில்தான் இருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தில் இன்னும் கூடுதலாக, பொதுத்துறை வங்கிகளில் இதை விட அதிகமாகவே முதலீடு செய்யப் பட்டுள்ளது. 35,000 கோடி ரூபாய் என்பது பெரிதாக தெரிந்தாலும் எல்.ஐ.சி ஈட்டுகிற உபரியை ஒப்பிடுகையில் சிறிய தொகைதான்.

 

எல்.ஐ.சி யின் முதலீடு குறித்து இதற்கு முன்பும் பல முறை பொது வெளியில் விவாதத்திற்கு வந்துள்ளது.

 

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்குகளை எல்.ஐ.சி வாங்கும் போது அரசின் சுமையை குறைக்கவே எல்.ஐ.சி பணத்தை கொட்டுகிறது என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் ஓ.என்.ஜி.சி பங்குகள் வாயிலாக எல்.ஐ.சி நல்ல லாபத்தை சம்பாதித்தது.

 

ஐ.டி.பி.ஐ வங்கியின் பங்குகளை எல்.ஐ.சி வாங்கும் போதும் அது ஒரு நலிவடைந்த வங்கி என்பதால் கடுமையான விமர்சனங்கள் வந்தன. ஆனால் ஐ.டி.பி.ஐ வங்கி மூலமும் எல்.ஐ.சி லாபமீட்டியது.

 

எல்.ஐ.சி க்கும்  மற்ற முதலீட்டாளர்களுக்குமான பெரிய வேறுபாடு என்னவென்றால் எல்.ஐ.சி ஒரு நீண்ட கால முதலீட்டாளர். அதே நேரம்  வங்கிகளால் நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள முடியாது.

 

பாலிசிதாரர்களின் பணம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று நான் கூறுகிறேன். எங்களின் சால்வென்சி மார்ஜின் எவ்வளவு இருக்க வேண்டுமோ அதை விட அதிகமாகவே உள்ளது. எல்.ஐ.சி அளிக்க வேண்டிய தொகைகளை விட சொத்துக்கள் அதிகமாகவே உள்ளது. இங்கே நான் சந்தை மதிப்பை சொல்லவில்லை. ஆவணங்களில் சொல்லப்பட்ட மதிப்பின்படி  சொல்;கிறேன்.

 

அதனால் மக்கள் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை. அவர்களின் பணம் பத்திரமாகவே உள்ளது.

 

கேள்வி : அதானி குழுமத்தில் முதலீடு செய்வதென்ற முடிவு பொருளாதார முடிவென்பதை விட  அது  அரசியல் முடிவுதானே?

 

பதில் : எல்.ஐ.சி யும் முதலாளித்துவத்தை வளர்க்க பயன்படும் ஒரு நிறுவனம்தான். ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனம் வேறு.  அதனால் அதனை  தங்களின்  ஆதாயங்களுக்காக பயன்படுத்தும்.

 

ஆனால் ஒரு தொழிற்சங்கமாக, பொது அமைப்பாக, எல்.ஐ.சி க்கு கிடைக்கிற லாபமெல்லாம் அது சமூகத்தில் உள்ள பெரும்பாலானருக்கு சென்றடைவதை உறுதி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. பாலிசிதாரர்களின் ப்ணத்திற்கும் முழுமையான பாதுகாப்பு வேண்டும்.

 

கேள்வி : அதானி குழும பங்கு வீழ்ச்சிக்கு பொருளாதாரம் ஆற்றிய எதிர்வினையை   பார்க்கையில் ஒரு குழுமத்தால் இந்தியப் பொருளாதாரத்தையே  பாதிக்க முடியும் என்பது ஏதோ ஒரு அபாய அறிவிப்பு போல அமைந்துள்ளதல்லவா?

 

பதில் : ஆம், அபாயகரமான  தருணம்தான்.  ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களால். இந்தியப் பொருளாதாரத்தின் கேந்திரமான கட்டமைப்பு திட்டங்களான துறைமுகம், விமான நிலையம் ஆகியவை ஒரு தனி நபரால் வாங்கப்படுவதென்பது தவறானது.

 

ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை என்பதே இல்லை. இக்கேள்வியைத்தான் அடிப்படையாக எழுப்பிட வேண்டும். இல்லேள்வியை எழுப்பிடுமாறு   எல்.ஐ.சி  நிர்வாகத்திடமும்  கூறியுள்ளோம். எல்.ஐ.சி மட்டுமல்ல அனைவரும் கவலைப்பட வேண்டிய விஷயம் இது.

 

பொருளாதாரத்தின் ஏகபோகத்தன்மை உருவாகி வருவது பற்றி ஒவ்வொரு இந்தியரும் கவலைப்பட வேண்டும். ஏனென்றால் இப்படிப்பட்ட பொருளாதார மாதிரியால்தான் நாட்டில் மிகப் பெரிய அசமத்துவம் ஏற்பட்டு வருகிற்து.

 

தமிழாக்கம் & வெளியீடு

 

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,

வேலூர் கோட்டம்