Showing posts with label சுற்றுச் சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச் சூழல். Show all posts

Tuesday, April 28, 2026

மாட்டுச்சாணத்திற்கு வெங்காயம் மேல்

 


கோடை வெப்பத்தை சமாளிக்க மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்றை காங்கிரஸ் கட்சியிலிருந்து தன் கோஷ்டியோடு தாவி ம.பி யில் பாஜக அமைச்சகத்தை உருவாக்கிக் கொடுத்தமைக்காக மத்திய அமைச்சர் பதவியென்ற எலும்புத்துண்டை  ருசித்துக் கொண்டிருக்கும் ராஜ வம்சத்து வாரிசு ஜோதிராதித்யா சிந்தியா சொல்லியுள்ளார்.


இப்படி ஒரு சுலபமான வழி இருப்பது தெரியாமல் நான் வீட்டிற்கு ஏ.சி போட்டு பணத்தை விரயம் செய்து விட்டேன்.

கடந்த வருடம் ஒரு கல்லூரி முதல்வர் இன்னொரு அறிவியல் கண்டுபிடிப்பை தன் கல்லூரியில் அமலாக்கினார்.


வகுப்பறைகளின் சுவரில் மாட்டுச்சாணம் பூசினார் அவர். அந்த காலத்தில் வீடுகளின் தரைகளில் சாணி மொழுகினார்களே என்று நியாயப்படுத்தினார்கள் பலர். அவர்கள் எல்லாம் தங்கள் வீட்டின் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிக் கொண்டார்களா என்பதுதான் தெரியவில்லை.

மாட்டுச்சாண தொழில் நுட்பத்திற்கு வெங்காய தொழில் நுட்பம் பரவாயில்லை என்று தோன்றுகிறது. வெங்காயத்தின் விலை உயர்வு, வெங்காயம் அழுக அழுக புதிதாய் வைப்பது ஆகியவற்றுக்கு ஆகும் செலவு, மாட்டுச்சாண நாற்றத்தில் வாழ்வதை விட மேல். 

வெங்காயத்தை கக்கத்தில் வைத்து காய்ச்சல் வரவழைக்கிற டெக்னிக் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்த வெங்காய விஞ்ஞானி சொல்றதை பிரதமர் அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் ஆகிய இடங்களிலும் அங்கிருப்பவர்களிடமும் சோதித்துப் பார்க்கவும்.

மேலே நீல நிறத்தில் இருப்பது தமுஎகச தலைவர் தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய பதிவு.

என்னுடைய ஆலோசனை மாறானது.

வெங்காய தொழில் நுட்பத்திற்கு மாறாக மாட்டுச்சாண தொழில் நுட்பத்தை மாட்டுக்குண்டர்கள் சூழ் பிரதமர் அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பயன்படுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்.

அப்படியென்றால் வெங்காய தொழில் நுட்பத்தை எங்கே பயன்படுத்துவது?

கண்டிப்பாக நிதியமைச்சர் நிர்மலா அம்மையாரின் வீட்டிலும் அலுவலகத்திலும்  . . .

அப்போதாவது அவர் வெங்காயத்தின் அவசியத்தை புரிந்து கொள்வார் என்று எதிர்பார்ப்போம். 

Wednesday, February 18, 2026

அழிவை அழைக்கும் அழகிய நிக்கோபார் தீவுகள்


 












மேலே உள்ள அழகான படங்களை நன்றாக இன்னொரு முறை கூட பார்த்துக் கொள்ளுங்கள்.

அழகு சொட்டும் இந்த இடங்கள் இனி இதே போல இருக்குமா என்பது ஐயே.

பத்து லட்சம் மரங்களை வெட்டி, 130 ஏக்கர் காட்டை காலி செய்து 166 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு துறைமுகம், ஒரு விமான நிலையம், ஒரு மின் உற்பத்தி நிலையம், ஒரு பிரம்மாண்ட மால் உள்ளிட்ட நகரியம் கொண்ட 82,000 கோடி மதிப்பிலான மெகா திட்டத்தில் தாங்கள் தலையிட எந்த அவசியமும் இல்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாணையம் திட்டவட்டமாக கூறி விட்டது.

அதன் பொருள் என்ன?

நிக்கோபார் தீவுகளை உங்கள் இஷ்டத்திற்கு எப்படி வேண்டுமானால் அழித்துக் கொள்ளுங்கள் என்று பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்.

விமான நிலையம், துறைமுகம், மின் உற்பத்தி நிலையம் ஆகிய மூன்றுமே அதானி நடத்தும் முக்கியத் தொழில்கள் என்பதை நினைவில் கொள்க.

சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்களின் ஆட்சேபத்திற்கு அரசு என்ன விளக்கம் கொடுத்தது என்பதைக் கூட சொல்ல அவசியமில்லை என்று தேசிய பசுமை ஆணையம் சொல்லி விட்டது.

கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல இயற்கையை அழித்து விட்டு சுற்றுலாவை மேம்படுத்தப் போகிறார்களாம்! என்ன கேலிக்கூத்து இது!

புவி வெப்பமயமாதல் காரணமாக அந்தமான்-நிக்கோபார் தீவுகள், மாலத்தீவுகள்  ஆகியவை கடலில் முழுகிப் போகும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் விற்பன்னர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். 

பத்து லட்சம் மரங்களை வெட்டி அந்த அழிவை முன் கூட்டியே வரவேற்கிறது மோடி அரசு.

பிகு: ஒரு புறத்தில் பத்து லட்சம் மரங்களை வெட்டும் மத்திய அரசு இன்னொரு புறம் அழிவதற்காகவே பிறந்தது என்று மோடியால் சொல்லப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகியவற்றை "மரங்களை நடுங்கள்"  என்று அழுத்தம் கொடுப்பார்கள். அரசின் அரசியல் புரியாத இந்நிறுவனங்களும் தங்களது முன்னுரிமைப் பணிகளை கோட்டை விட்டு விட்டு "கிடப்பது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில் வை" என்பது போல எம் கடன் மரம் நடுவதே என்று அலைந்து கொண்டிருக்கின்றன. 

Sunday, February 26, 2023

எவன் செத்தா என்ன? துட்டுதான்

 


ஜோஷிமத்தின் நிலைமை பற்றி முன்னரே எழுதியிருந்தேன். கொஞ்சம் சிரமம் பார்க்காமல்  கீழே உள்ள இணைப்பின் மூலமாக அந்த பதிவை கொஞ்சம் படித்து விட்டு பாருங்கள்.

 

 "ஜோஷிமத்துக்கு போகாதீங்க" என்ற பதிவின் இணைப்பு இங்கே . . .

ஏற்கனவே  ஜோஷிமத் இன்னும் நான்கு செண்டி மீட்டர் அளவிற்கு புதையுண்டுள்ளது.  சாலைகள் பிளவுண்டு கிடக்கிறது. வீடுகளின் விரிசல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் வீடுகளை இழந்து கொண்டே இருக்கிறார்கள்.

 

இத்தகைய சூழலில் சார்தம் யாத்திரையை நடத்தியே தீருவதென்று உத்தர்கண்ட் மாநில பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.

 

சாலைகளின் பாதிப்புக்கள் இன்னும் சரி செய்யப்படவில்லை, வீடுகளில் விரிசல்கள் நிற்கவே இல்லை, ஏற்கனவே வீடிழந்தவர்கள் விடுதிகளில்தான் தங்கியுள்ளனர், ஊருக்கு வரும் பக்தர்கள் எங்கே தங்குவார்கள்? இன்றைய சூழலில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் அதை ஊர் தாங்குமா?

 

இதெல்லாம் ஜோஷிமத் மக்கள் கேட்கும் கேள்விகள்.

 

இவை எதற்கும் பதில் இல்லை.

 

பதில் சொல்ல தயாராக இல்லை.

 

அவர்கள் நோக்கம் ஒன்றுதான்.

 

யாத்திரை நடத்தி கல்லா கட்டுவது மட்டுமே இவர்கள் நோக்கம்.

Saturday, January 28, 2023

ஜோஷிமத்துக்கு போகாதீங்க . . .

 


ஜோஷிமத்தில் என்ன நடக்கிறது?

 


ஜோஷிமத் உத்தர்கண்டில் இருக்கிற ஒரு சின்ன நகரம்.  ஆதி சங்கரரால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிற நான்கு சங்கர மடங்களான சிருங்கேரி, துவாரகா, பூரி, ஜோஷிமத் ஆகிய நான்கு மடங்களில் ஒன்று அங்கே இருக்கிறது.

 காஞ்சி சங்கர மடம் ஆதி சங்கரரால் நிறுவப்பட்டதல்ல, சிருங்கேரி மடத்தின் கிளையாக கும்பகோணத்தில் அமைக்கப்பட்டு அது பின் காஞ்சிக்கு மாறி இறையாண்மை கொண்ட தனி மடமாக அறிவித்துக் கொள்ளப்பட்டது என்று மற்ற மடங்கள் சொல்லும் பஞ்சாயத்து இந்த பதிவுக்கு அவசியமில்லை.

 ஜோஷிமத் இந்தாண்டின் துவக்கத்தில்  ஊடகங்களில் அடிபட்டு இப்போது காணாமல் போயுள்ளது. ஜோஷிமத்தில் செய்யும் ஆய்வுகள் தொடர்பாக எந்த ஒரு அமைப்பபும் எந்த ஊடகத்திடமும் வாய் திறக்கவே கூடாது என்று ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சகம் பிறப்பித்த சுற்றறிக்கையே  ஊடகங்களின் மௌனத்திற்கு காரணம்.

 சரி அப்படி என்னதான் அங்கே பிரச்சினை?

 நான்கு செண்டிமீட்டர் அளவில் ஊர் புதைந்து போயுள்ளது. உள்ளூர் சாலைகள் முதற்கொண்டு தேசிய நெடுஞ்சாலைகள் வரை விரிசல் கண்டுள்ளது. சில இடங்களில் சாலையே காணாமல் போய் விட்டது.  861 கட்டிடங்களில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. 181 வீடுகள் மக்கள் வசிக்க லாயக்கற்றது என அறிவிக்கப்பட்டு அந்த வீடுகளில் உள்ளவர்கள் அகற்றப் பட்டுள்ளனர்,

 278  குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு அனுப்பப் பட்டுள்ளனர். உயிர்ச்சேதத்தைத் தவிர்க்க  இரண்டு பெரிய விடுதிகளும் மூன்று தனியார் கட்டிடங்களும் இடிக்கப்பட்டு விட்டன.  எங்கிருந்து வருகின்றது என்று தெரியாமலேயே ஒரு நொடிக்கு 540 லிட்டர் என்று வெளியேறிய தண்ணீர் இப்போது ஒரு நிமிடத்திற்கு 182 லிட்டர் என்ற அளவில் தண்ணீர் வருகிறது. ஜோஷிமத் சங்கர மடத்தில் கூட விரிசல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன.

 அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

 பல ஆய்வகங்கள் சோதனை சேய்து வருகின்றன. அந்த முடிவுகளைத்தான் வெளியே, ஊடகங்களுக்கு சொல்லக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டுள்ளது மோடி அரசு.

 தடைக்கு என்ன காரணம் என்பதை பின்னர் பார்ப்போம். ஆனால் இங்கே நிலைமை மோசமானதற்கு காரணம் அறிய பெரிய ஆய்வுகள் அவசியமில்லை.  இமயமலைப் பகுதியில் கட்டிடங்கள் கட்ட பல விதிகள் உண்டு. ஆனால் அவை எதுவும் கண்டு கொள்ளப்படாமல் புற்றீசல் போல முளைத்த கட்டிடங்கள், ஆசிரமங்கள், என்.டி.பி.சி அமைக்கும் ஒரு அனல் மின் நிலையம், நெடுஞ்சாலைப் பாலங்கள் போன்ற கட்டுமானப்பணிகள்  ஜோஷிமத்தை பில்டிங்கும் வீக்கு, பேஸ்மெண்டும் வீக்கு என்ற நிலைக்கு தள்ளி விட்டது. விரிசல் விழுந்த கட்டிடங்கள் உயிருக்கு அபாயம் என்ற நிலையில்தான் உள்ளது.

 அரசு ஏன் செய்திகளை மறைக்கப்பார்க்கிறது?

 உத்தர்கண்டின் முக்கியத் திருவிழா சார்தம் யாத்திரை. புண்ணியத் தளங்களாக கருதப்படுகிற  யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு இடங்களுக்கு செல்வதே சார்தம் யாத்திரை. இந்த யாத்திரையின் நுழைவாயில் ஜோஷிமத். ஜோஷிமத்தான் பக்தர்களுக்கான தங்கும் வசதிகள் உள்ள ஊர். இந்த யாத்திரைக்கு வரும் பக்தர்கள் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 7500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்குமாம். ஜோஷிமத் பற்றிய உண்மைகள் தெரிந்து பக்தர்கள் வராமல் போனால் இத்தனை பணமும் வராமல் போய் விடுமே என்பது மட்டுமே அரசின் கவலை.

 20,000 மக்கட்தொகை  தொகை உள்ள போதே இந்த நிலை என்றால், விரிசல் விழுந்த கட்டிடங்களில் அவர்கள் தங்கினால் என்ன ஆகும்?

 இந்து மதக் காவலர்கள் என்று சொல்லிக் கொண்டே இந்துக்களின் உயிர்களோடு விளையாடுகிறது.

 எனவேதான் சொல்கீறேன்.

 ஜோஷிமத்துக்கு போகாதீங்க.

Monday, September 7, 2020

கடல் குப்பைத் தொட்டியா?

 *நாளொரு கேள்வி: 07.09.2020*

 //இன்று 100 வது நாள்//

 


இன்று நம்மோடு தமிழகத்தின் முக்கியமான சுற்றுப் புற சூழலியலாளர் *பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்.*

***********************************

 *கடல் காப்போம்*

 *கேள்வி:* கடல் மாசுபடல் பற்றிய கவனமும், அக்கறையும் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

 *பூவுலகு சுந்தர்ராஜன்*

 

நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை எது அதிகமாக தயாரிக்கிறது என்று *ட்விட்டரில் கேள்வி* கேட்டு இருந்தேன். அதற்கு 51% மேல் காடுகள் தான் என தேர்வு செய்திருந்தனர். 

 உண்மை என்னவெனில், நாம் சுவாசிக்கும் *ஆக்சிஜனில் 70% தயாரிப்பது பெருங்கடல்கள்தான்.*

 *25% த்தை *அமேசான், போர்னியா போன்ற வெப்பமண்டல காடுகளும், மீதமிருக்கும் 5%தான் நாம் வளர்கின்ற மரங்களும் செடிகளும் கொடுக்கின்றன.*

 பெருங்கடல்கள் தயாரிக்கின்றன என்றால் எப்படி? எந்த அதானியும், அம்பானியும் அங்கே தொழிற்சாலை வைத்து ஆக்சிஜனை தயாரிக்கவில்லை, கடலில் உள்ள சின்ன சின்ன உயிரினங்களும் தாங்கள் உணவு தயாரிக்கும் முறையில் ஆக்சிஜனை வெளியிடுகின்றன, நமக்கு ஆக்சிஜனை கிடைக்கிறது. *நம்முடைய கட்டைவிரலின் மேற்பகுதியில் உள்ள அளவில் மட்டும் சுமார் 10 லட்சம் உயிரினம் இருக்கும் அளவிற்கு சிறியதொரு உயிரினம், "ப்ரொக்ளோரோகாக்கஸ்" (prochlorococcus).* அந்த சிறிய உயிரினம்தான் நாம் சுவாசிக்கக்கூடிய ஐந்தில் மூச்சில் ஒரு மூச்சுக்கான ஆக்சிஜனை தயாரிக்கிறது, அப்படியெனில் கடலின் மகத்துவத்தை புரிந்துகொள்ளவேண்டும். அதனால்தான் *கடல் ஒன்றும் நம்முடைய குப்பைதொட்டியல்ல,*  என்று சொல்லி வருகிறோம். 

 காலநிலை மாற்றம் கடல்களின் வெப்பத்தை அதிகரிக்க அதில் உள்ள *பவளப்பாறைகள்* அழிந்துவருகின்றன, அவைதான் சிறிய உயிர்களின் வாழ்விடம். *கடலில் அணுக்கழிவுகளை, அனல் மின் நிலைய கழிவுகள், ரசாயன தொழிற்சாலைகளிலிருந்து வரக்க்கூடிய கழிவுகள், நகர கழிவுகள், உரம் சார்ந்த விவசாய கொடுக்கக்கூடிய பிரச்சனைகள், ரசாயன பூச்சு மற்றும் "பிஒபி"யில் (POP) செய்யப்படும் சிலைகள், நெகிழி* என நாம் கொட்டுவது நாம் சொந்தக்காசில் 

சூனியம் வைத்துக்கொள்வது போன்றது. இந்த கழிவுகள் அனைத்தும் கடலில் வாழக்கூடிய சிறிய உயிரினங்களை பாதிக்கின்றன, அது நமக்கான  ஆக்சிஜன் தயாரிப்பைப் பாதிக்கிறது.

 அதனால்தான் சொல்கிறோம், இப்போது மட்டுமல்ல எப்போதும் கடலில் கொண்டு எதை கரைப்பதையும் தடுக்கவேண்டும், தவிர்க்கவேண்டும். - 

*#SaveOurOceans*

 

*****************

*செவ்வானம்*