Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

Wednesday, April 17, 2024

செல்லம் சூப்பர் . . .

 


சமீப காலத்தில் நான் பார்த்த சிறப்பான நேர்காணல் திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ், சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்தது.

புஷ்பக விமானத்தில் வரும் மன்னர் என்று மோடியைச் சொல்லும் பிரகாஷ்ராஜ், மோடியின் ஆட்சியை கிழித்து தோரணமாக தொங்க விடுகிறார்.

"ஆப் கி பார் சாக்கோபார்" என்பதே மோடியின் நடுக்கத்தை மறைத்து மாயையை உருவாக்கும் உத்தி என்றார்.

ஊழலும் மோடியும் என்பது பிரிக்க முடியாதது என்று சொல்கிறார். வெட்டி வேலை பார்க்கும் பிரதமர் என்று கிண்டல் செய்கிறார்.

மிகவும் இயல்பான, அழுத்தமான, சங்கிகள் வெட்கப்படுகிற அளவுக்கு நேர்த்தியாக கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அவசியம் முழுமையாக பாருங்கள்.

பேட்டியின் இணைப்பு இங்கே . . .

பார்த்த பின்பு நீங்களும் சொல்வீர்கள் "செல்லம் சூப்பர்"

Thursday, November 16, 2017

மோடியைத் தோலுரித்த . . .




நேற்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான கட்டுரை இது. மோடியின் பொய்களை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் தோலுரித்து காண்பிக்கிறார். 

ஆங்கிலத்தில் வெளியான நேர் காணலை தமிழாக்கம் செய்தவர் எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்செயலாளர் தோழர் எஸ்.சிவசுப்ரமணியன் என்பது எங்களுக்கு ஒரு பெருமை.






மார்தட்டிக் கொள்ளாதீர்...

பொதுத்துறை வங்கிகளில் பெரிய அளவிற்கு கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கிற - இந்திய சமூகத்தின் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அலுவலகத்திற்கு பட்டியல் கொடுத்தோம்; ஆனால் அந்த பட்டியல் என்னாயிற்றோ எனத் தெரியவில்லை என உண்மையை அம்பலப்படுத்துகிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் தலைசிறந்த பொருளாதார வல்லுநருமான டாக்டர் ரகுராம் ராஜன். பணமதிப்பு நீக்கம் முற்றிலும் மோடி அரசின் முடிவு என கடுமையாக சாடுகிறார்.தி வீக் இதழுக்காக பத்திரிகையாளர் பர்கா தத்துக்கு அவர் அளித்த நேர்காணலின் சில பகுதிகள் இங்கே.


பணமதிப்பு நீக்கம்பற்றி நீங்கள் சொல்லியுள்ளவை தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளன. அந்த நடவடிக்கையில் நீங்கள் இல்லை. உங்களுடைய கருத்துகளுக்கு அரசு என்ன மதிப்பளித்தது?

அரசிடம் நான் எப்பொழுதும் வெளிப்படையாகவே கருத்துக்களைத் தெரிவித்து வந்துள்ளேன். நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு என்னுடைய கருத்துக்கள் பதிவாகியுள்ளன. பொது நலனுக்காகவே உண்மையான நிலவரத்தை நான் எடுத்துக் கூறியுள்ளேன். ஏதாவதொரு வகையில் உண்மை உணர்த்தப்பட வேண்டும் என்பது முக்கியமானது. பல்வேறு தளங்களிலிருந்து பெற்ற தகவல்களுக்குப் பின்னர் அரசானது நிதி அமைச்சகத்தில் ஒரு குழுவை நியமித்தது. நாங்கள் (ஆர்பிஐ) ஒரு துணை ஆளுநரை அக்குழுவிற்கு அனுப்பினோம். நாங்கள் (ஆர்பிஐ) இது குறித்து அனுப்பிய அறிக்கைக்குப் பின்னர் அக்குழுவானது பணமதிப்பு நீக்கம் குறித்த விவாதத்தை நடத்தியது. அரசானது பணமதிப்பு நீக்க நடவடிக்கையை உறுதியாக எடுக்குமாயின் நாங்கள் கூறியவைகளை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளும் என நம்பினோம்.

u ஆனால் அரசு, அவ்வாறு நீங்கள் கூறியவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையே?

ஆம். ஆனால் அந்நடவடிக்கையானது (பணமதிப்பு நீக்கம்) நான் ரிசர்வ் வங்கியை விட்டு வெளியே வந்த பின்னர் எடுக்கப்பட்டது. எந்தவொரு பொருளாதார நிபுணரும் தேவையான பணம் அச்சிடப்பட்டு வெளியே புழக்கத்திற்கு தயாரான பின்னரே இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனச் சொல்லுவார். 

u என்ன தயாரிப்புகள் தேவை என்பதனை ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுக் காட்டியது? 

நீங்கள் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொள்கின்ற நாளன்று, எவ்வளவு பணத்தை நீங்கள் திரும்பப் பெறுகிறீர்களோ அவ்வளவு பணம் புதிய நோட்டுக்களாக புழக்கத்திற்கு வரவேண்டும் எனக் கூறுவார்கள். மின்னணு சாதனங்கள் மூலம் செலவு செய்வது என்பது ஒரே இரவில் நடந்து விடாது. பொருளாதார நடவடிக்கைகளை அது சுருக்கிவிடுகிறது. எவ்வளவு பணத்தை நாம் திரும்பப் பெறுகிறோமோ அவ்வளவு பணத்தை நாம் தயாராக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பொருளாதார நிபுணர்கள் கூறுவார்கள்.

u ஆனால் நாம் இப்போது விவாதிப்பது புழக்கத்தில் இருந்த 86 சதவீத பணத்தைத் திரும்பப் பெற்ற நடவடிக்கையைப் பற்றி...

அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பணத்தையாவது புதிய நோட்டுக்களில் அரசு உத்திரவாதப்படுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் தேவை உள்ளவர்களுக்கு ஏடிஎம்கள் மூலம் பணம் கிடைத்திருக்கும்.

u ரகுராம் ராஜனும், ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரிக்கவில்லை எனில் யாருடைய ஆலோசனையின் பேரில் அரசு, இந்த நடவடிக்கையை மேற்கொண்டது? அப்படியெனில் அரசு ஆர்பிஐயை புறக்கணித்துள்ளது. இது ஆர்பிஐ யின் சுதந்திரத்தைப் பறிப்பதாகாதா? 

 உண்மையில் இங்கு கேள்வி என்னவெனில் ஆர்பிஐ இல்லாமல் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமா என்பதுதான். 1978 அனுபவத்தைப் பார்த்தோமானால், அன்று இருந்த அரசு ஆர்பிஐயைக் கலந்தாலோசிக்காமலே ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆகையால் ஆர்பிஐயை புறக்கணித்து அரசு நடவடிக்கை மேற்கொள்வதற்கு சட்டத்தில் பல வழிகள் உள்ளன. ஆர்பிஐக்கு அரசு உத்தரவிடுவதற்கும் ஆர்பிஐயின் சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன. ஆனால் அவையெல்லாம் இதுவரை பயன்படுத்தப்பட்டதில்லை. ஆகையால் இதுபோன்ற சட்ட வழிமுறைகளெல்லாம் பயன்படுத்தப்படாதவரை உங்களது (ஆர்பிஐயின்) சுதந்திரமும் பாதிக்கப்படவில்லையென்றே நினைக்கின்றேன். ஒருவேளை பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வேனென்று ஆர்பிஐயின் முன்னாள் கவர்னர் டாக்டர் ஒய்.வி. ரெட்டி அவர்கள் கூறியது இங்கு குறிப்பிடுவதற்கு சுவையானது; ‘‘அவ்வாறு அரசு செய்திருந்தால் (ஆர்பிஐயை கலந்தாலோசிக்காமல்) நான் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்ந்திருப்பேன். பின்னர் கவர்னர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன்.’’


u டாக்டர் மன்மோகன் சிங் போன்றவர்கள் வளர்ச்சியானது 1 அல்லது 2 சதவீதம் குறையும் என்றார்கள். இவ்வருடத்தின் முதல் காலாண்டிற்கான வளர்ச்சி 5.7 சதவீதமாகக் குறைந்து விட்டது. ஜிடிபி விகிதம் வெகுவாகக் குறையக்காரணம் பணமதிப்புநீக்க நடவடிக்கை என நினைக்கின்றீர்களா? 

ஜிடிபி வளர்ச்சியின் பாதிப்பில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு முக்கியமான அம்சம் என நினைக்கின்றேன். அந் நடவடிக்கையின் பாதிப்புக்களை நாம் சரியாக மதிப்பிடவில்லை. குறிப்பாக ஒழுங்குபடுத்தப்படாத பொருளாதாரத்தில் (Informal Economy) நாம் சரியாக மதிப்பிடுவதில்லை. நம்பிக்கைக்குரிய பொருளாதார நிபுணர்கள் ஜிடிபியானது 1லிருந்து 2 சதவீதம் வரை குறையும் என்றே கூறினார்கள்.

u நீங்கள் மிகவும் துல்லியமாக சொன்னதாக, செயல்பட்டதாக நினைக்கின்றீர்களா? 

நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது என்றுதான் சொல்ல விரும்புகின்றேன். நமக்கு நிறைய பிரச்சனைகள்உள்ளன. ஆனால் உண்மையில் பிரச்சனை எங்கு ஆரம்பமாகின்றது என்று சொன்னால், ‘நாம் எவ்வளவு நன்றாகச் செயல்படுகிறோம் பார்’ என்று நமக்கு நாமே மார் தட்டிக் கொள்ளும்பொழுதுதான். அவ்வாறு செய்யும்போது, நாம் செய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் மீது கவனத்தைச் செலுத்துவதில்லை. நான் சமீபத்தில் பெய்ஜிங் (சீனா) சென்றிருந்தேன். உலகிலேயே எந்த நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது எனக் கேட்கின்றார்கள். நமக்கு நாமே மார் தட்டிக் கொள்வதைப் போல இது போன்ற விஷயங்களும் தொடர்ந்து நம்மைத் துரத்தும். அச்சுறுத்தும். மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும். நமக்கு நாமே பாராட்டிக் கொள்ளக் கூடாது. ஊடகங்கள் சில நாட்கள் அதனைச் சொல்லும். ஆனால் முதலீட்டாளர்கள் மறந்து விட மாட்டார்கள். 

நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தோமானால் நாம் மெத்தனமாக இருந்துள்ளோம் என்பதுதான் உண்மை. அதற்குப் பிறகும் நாம் எதுவும் நன்றாகச் செய்யவில்லை. வளர்ச்சி 9லிருந்து 10 சதவீத அளவிற்கு அடைவதற்கு செய்யத் தவறியதை நாம் கண்டுணர்ந்து அதனைச் செய்ய வேண்டும். நம்மைவிட மேல்நிலையில் இருக்கின்ற பிரிக்ஸ் நாட்டின் வளர்ச்சியை எட்ட வேண்டுமானால்கூட நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. நம்மை நாமே புகழ்ந்து கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். எதைச் செய்ய வேண்டுமோ அதிலே கவனத்தைச் செலுத்த வேண்டும்.

u அன்று ஐஐடியில் பேசும்போது சகிப்புத் தன்மை பற்றிப் பேசியிருந்தீர்கள். உங்களுடைய புத்தகத்தில் இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுடைய பேச்சுகளுக்குப் பின்னர் சில அமைச்சர்கள் கோபமாக இருப்பதாகச் சொன்னீர்களே? 

அரசை நான் குறிப்பிடவில்லையெனினும்கூட, அது அரசாங்கத்திற்கெதிரான பேச்சாக பார்க்கப்படுவது சுவாரஸ்யமான ஒன்றுதான். இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தியாவில் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ள சகிப்புத்தன்மை அவசியமானது என்றுதான் நான் பேசினேன். இறுதியில் இந்தியாவின் பொருளாதார வல்லமையோடு அது இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. இந்தியாவுக்கென சில பிரத்யேகமான அம்சங்கள் உள்ளன. பேச்சு சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவையே அவை. இவையெல்லாம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவசியமானவை.

மாற்றத்தைப் படைக்கும் திறன் படைத்த இந்திய நடுத்தர வர்க்கமானது எவ்வித கட்டாயப்படுத்தலுமின்றி, நிர்ப்பந்தமுமின்றி வாழ விரும்புகின்றது. அப்படி ஒரு சூழ்நிலையை நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது. இல்லையெனில் நாம் நம்முடைய பலங்களில் ஒன்றினை இழந்து விடுவோம். ஆகையால் அடக்க நினைப்பது சரியல்ல. இதுதான் அன்று எனது பேச்சின் பொருளாக இருந்தது. நிதி அமைச்சகத்திலுள்ள சஞ்சீவ் சன்யால் இது குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். எப்பொழுது இந்தியா அடக்குமுறைகளற்று இருந்ததோ அப்பொழுது நன்றாகச் செயல்பட்டது என அதில் அவர் சொல்கின்றார். இதைத்தான் நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்ல விரும்புகிறோம்.  ஒரு அரசு ஊழியனாக எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைத்ததோ அங்கெல்லாம் ஒரு நல்ல செய்தியை இந்த நாட்டின் இளைஞர்களுக்குச் சொல்ல விரும்பினேன். சகிப்புத் தன்மையற்ற இந்தியாவை உருவாக்குங்கள் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை.

u வாராக் கடன் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. நீங்கள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு ‘வங்கியிலிருந்து வாங்கிய கடனை வேண்டுமென்றே கொடுக்காமல் வைத்திருப்பவர்கள்’ பட்டியலை வெளியிட வேண்டுமென்று நீங்கள் உறுதியாகக் கூறியது எனக்கு நினைவிற்கு வருகிறது. விஜய் மல்லையா பிரச்சனையை எவ்விதம் பார்க்கிறீர்கள்? சமீபத்தில் நீங்கள் பேசியபோது சலுகை சார் முதலாளித்துவமும் (Crony Capitalism), பெரிய முதலைகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதும், டிரம்ப் போன்றவர்கள் மேலெழுந்து வருவதற்கு உதவுகிறது எனப் பேசியுள்ளீர்கள். இங்கு (இந்தியாவில்) பெரிய முதலைகள் இருப்பதைப் பார்க்கிறோம். ஒரு புறம் அவர்கள் உல்லாசமாக உள்ளபோது, மறுபுறம் அவர்களுடைய ஊழியர்கள் ஊதியம் கூடப் பெற முடியாமல் இருப்பதையும் பார்க்கின்றோம். இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வர முடியவில்லை என நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?

ரிசர்வ் வங்கிக்கென தனியாக புலனாய்வு அமைப்பு எதுவும் கிடையாது. இந்திய சமூகத்திலுள்ள உண்மைக் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டுமென நான் நினைத்தேன். அதனால்தான் பெரிய அளவில் மோசடி செய்தவர்களின் பட்டியலைத் தயாரித்தோம். அதை பிரதமரின் அலுவலகத்திற்குக் கொடுத்தோம். 4,5 வருடங்களாக இத்தகையவர்களை புலனாய்வு செய்துள்ளீர்கள். அதன் விளைவுதான் என்ன எனக் கேட்டோம். மோசடி செய்துள்ள பெரிய முதலைகளில் ஓரிருவரைப் பிடித்தால் கூட இந்த சமூக அமைப்பில் வெற்றியாகத்தான் பார்க்கின்றேன். செலவுக்கும் அதிகமாக பில் காட்டுவது இங்கு அதிகமாக உள்ளது. இந்திய அமலாக்கத் துறை இது குறித்து விவாதம் நடத்தியுள்ளது. ஏன் அதை நாம் விசாரணை செய்யவில்லை? அவ்வாறு விசாரணை செய்தோமானால் நாம் பல முதலைகளைப் பிடிக்க முடியும்.

u ஏன் அது நடைபெறவில்லை? நீங்கள் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது அதில் என்ன பிரச்சனையைச் சந்தித்தீர்கள்? 

இவற்றை விசாரணை செய்வது ரிசர்வ் வங்கி கவர்னரின் வேலையல்ல. ஆனால் இது போன்ற விசாரணைகள் என்ன ஆயிற்று என்கிற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. செலவுக்கு அதிகமாக பில் காட்டியதாக ஏன் ஒருவர் மீது கூட குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்பு பணப் பரிவர்த்தனை சம்பந்தமாக ஒரு வங்கியின் மேலாளருக்கும், ஒரு நிறுவனத்திற்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்கள் குறித்து சிபிஐ விசாரணை செய்தது. அந்த விசாரணை என்ன ஆயிற்று? அந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவராக இறந்து போனார்கள். அது எப்படி? கடைசியில் அந்த விசாரணை குறித்து மக்களுக்கு எதுவுமே சொல்லப்படவில்லையே, ஏன்?

u வங்கியில் வாங்கிய கடனை வேண்டுமென்றே கொடுக்காமல் வைத்திருப்பவர்களை (Wilful Defaulters) என்ன செய்யலாமென்று நினைக்கின்றீர்கள்? 

அவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதை நிறுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும். சிலர் மீண்டும் மீண்டும் கடன் வாங்குகிறார்கள். நமக்கு என்ன பழக்கம் இருக்கிறது என்று சொன்னால் நாம் கடன் யார் வாங்குகிறார்கள் என்றும், அது வாராக் கடனாகிறதா என்றும் மட்டுமே பார்க்கின்றோம். நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், யார் வங்கியின் தலைவராகவோ, அதிகாரியாகவோ இருக்கும்போது அதிகக் கடன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது; வாராக் கடன்கள் அதிகமாகியிருக்கிறது என்று பார்ப்பேன். ஒரு சிஇஓ இருந்த காலத்தில் சில வங்கிகள் பிரச்சனைக்குள்ளானதை நாம் பார்த்தோம். நானாக இருந்தால் இது போன்றவர்களையே விசாரணை செய்வேன். 

u 1990களிலிருந்தே பெரும்பாலான ரிசர்வ் வங்கி கவர்னர்கள் ஐந்து வருடங்கள் பணியாற்றியுள்ளார்களே?


என்னுடைய பணிக்காலத்தை நீட்டிக்க வேண்டுமென்று அரசாங்கத்திற்கு எந்தவிதக் கட்டாயமுமில்லை. எனக்கும் ஐந்து வருடங்கள் கட்டாயம் கவர்னராக இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய ஊழியர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தில், நான் ஆரம்பித்து வைத்த வேலைகள் முடிகின்றவரை நான் தொடர்ந்து இருக்க விருப்பப்படுவதாக தெரிவித்திருந்தேன். ஆனால் அரசானது எனது பணிக் கால நீட்டிப்பிற்கான எந்த வாய்ப்பினையும் கொடுக்கவில்லை.

(செப்டம்பர் 17, 2017 தேதியிட்ட தி வீக்
இதழில் வெளிவந்த நேர்காணலில் இருந்து) 

தமிழில் : செ.சிவசுப்ரமணியன்

Wednesday, October 26, 2016

தொடர்கிறது . . . .

மார்க்சிஸ்ட் இதழிற்காக மார்க்சிய அறிஞர் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களது நேர்காணலின் நிறைவுப் பகுதி.


இப்போது நேர்காணல் தொடர்கிறது.



மார்க்சிஸ்ட் : திராவிட இயக்கங்களின் தேசியம் பற்றிய புரிதல், பற்றி….

எஸ்.வி.ஆர் : தமிழருக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் மொழிக்கென்று நீண்ட வரலாறு இருக்கிறது. தமிழருக்கு என்று பரந்த நிலத்துடன் கூடிய கலாச்சாரம் இருக்கிறது. இவற்றையெல்லாம் தனது அரசியலுக்கு திமுக பயன்படுத்திக் கொண்டது.

தமிழ் உணர்வுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உணர்ந்து வானமாமலை போன்றவர்கள் பழந்தமிழ் இலக்கியங்களை, அதன் வரலாறுகளை ஆராய்ச்சி செய்ய துவங்கினார். ஜீவா கம்பராமாயணத்தில் சோசலிச கருத்துக்கள் இருக்கிறது என்று சொல்லும் அந்த நிலைக்கு கூட போனார். ஆரம்பத்தில் திமுக வட மாநில முதலாளிகளின் மீதான எதிர்ப்பு அரசியலை கையிலெடுத்தனர். அப்போது அதில் நியாயமும் இருந்தது. இந்தியா விடுதலை பெற்றபோது இருந்த முதல் நிலை 50 பெரு நிறுவனங்களில் ஒன்று மட்டும் பிரிட்டிஷாருடையது. மற்றவை எல்லாம் வட மாநில முதலாளிகளுடையது. “வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறதுஎன்ற அவர்கள் கோஷம் எழுப்பிய போது அதில் கொஞ்சம் உண்மையுமிருந்தது.

திமுக. ஆட்சிக்கு வந்த காலத்தில் மாநிலங்களின் உரிமை, மாநில சுயாட்சி என்றெல்லாம் பேசியது. காங்கிரஸ் அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாடு நடத்தக் கூட முயற்சி செய்தார்கள். ஆனால் இப்போது அது பற்றி பேசுவதில்லை. நாங்கள் தான் உண்மையான கம்யூனிட்டுகள் என்றெல்லாம் கூட பேசி வந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் முதலாளிகளுக்காக தொழில் அமைதி நிலவ வேண்டும். உற்பத்தி பெருக வேண்டும் என பேச ஆரம்பித்தனர். திமுகவின் முதல் ஆட்சி காலத்திலேயே தொழிற்சங்கங்களை கடுமையாக ஒடுக்க துவங்கினார். ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம் போன்ற இடங்களில் செயல்பட்ட தொழிற்சங்கங்கள் அடக்கு முறைகள் சந்தித்தன. சென்னையில் வி.பி. சிந்தன் தலைமையில் செயல்பட்ட தொழிற்சங்கம் மீது ஏவி விடப்பட்ட அடக்கமுறைகளெல்லாம் நமக்கு தெரியும். எம்.ஜி.ஆர். காலத்திலும் இது தொடர்ந்தது.

காலனி ஆதிக்க எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு பொறுத்த வரையில் காங்கிரஸ்காரர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் கிடையாது. அவாகள் வரலாறு நெடுக சமரச வாதிகளாகவே தான் இருந்துவந்து உள்ளனர். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட சேதம், கப்பற்படை எழுச்சி, நேதாஜி விவகாரம், இந்திய விமானப்படையிலேயே ஏற்பட்ட கிளர்ச்சி இதெல்லாம்தான் அவர்களுக்கு பெரிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. ராணுவத்திலேயே கலகம் பிறக்கும் சூழல் ஏற்பட்டதால், நம்பகமான கூட்டாளியிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்ற அடிப்படையிலேயே விடுதலை கிடைத்தது.

இன்னும் பிரிட்டிஷ் மூலதனத்தின் தாக்கம் இருந்து கொண்டுதானே இருக்கிறது. காமன்வெல்த்திலிருந்து வெளியேறி விட்டார்களா? ஒரு நாட்டு ஏகாதிபத்திய மூலதனத்திற்கு பதிலாக இன்று பல நாட்டு ஏகாதிபத்திய மூலதனம் வருகின்றது.

மார்க்சிஸ்ட் : பெரியார் ஆகஸ்ட் 15 நூலின் முன்னுரையில், அம்பேத்கர்,பெரியார், சிங்காரவேலர் ஆகியோரின் மரபுகளை ஆக்கபூர்வமான காலத்துக்கு ஏற்ற ஒரு கூட்டிணைவாக (synthesis) ஆக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டுமென தாங்கள் குறிப்பிட்டது வரவேற்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், இதற்கு ஸ்தூலமான வடிவம் கொடுப்பது எப்படி? திராவிட கட்சிகள் பிரதேச முதலாளித்துவ வர்க்க குணாம்சம் கொண்டவை என்பது கம்யூனிஸ்ட்களின் நிலை. இது போன்ற பல முரண்பாடுகள் உள்ள நிலையில் கூட்டிணைவு சாத்தியமாகுமா?

எஸ்.வி.ஆர் : சிங்காரவேலர், அம்பேத்கர், பெரியார் கூட்டிணைவு எனும் போது அவர்களின் சிந்தனைகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது. அவர்கள் பேசியது போன்ற நடைமுறை திட்டத்தை இன்று வகுத்தளிக்க முடியாது. ஆனால் அவர்களை அடையாளமாக எடுத்துக்கொள்ள முடியும்.

அத்பேத்கரும், பெரியாரும் சாதி எதிர்ப்பாளர்கள். அவர்களுடைய கூற்றுப்படி இந்தியாவில் சாதி உணர்வை நிர்மூலம் ஆக்காமல் வர்க்க உணர்வை உருவாக்க முடியாது.

அம்பேத்கரை பொறுத்தவரை அவருக்கு கம்யூனிசம் மீது நாட்டமும் இருந்தது. விமர்சனமும் இருந்தது. “அயல்நாட்டவருக்கு ஒரு விண்ணப்பம்என்ற பெரிய கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் எழுதுகிறார். இந்தியாவின் கருத்து என்று உங்களுக்கு சொல்லப்படுபவை முழுவதும் இங்குள்ள காங்கிரஸ் தேசிய வாதிகளின் கருத்தே. இந்திய மக்கள் என்பதில் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ளனர். அவர்களின் உணர்வுகளை இங்கு யாருமே பேசுவதில்லை. எனவே, எங்களுடைய குரல்களையும் கவனியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் அவர் ‘1871 கம்யூன்பற்றி குறிப்பிடுகின்றார். அடித்தட்டு மக்கள் ஆட்சிக்கு வந்தால் ஒழிய அவர்களுக்கு உரிய உரிமைகள் கிடைக்காது என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்துகிறார். “காந்தியும், காங்கிரஸும் தீண்டாதோருக்கு செய்தது என்ன?” என்ற நூலில் கூட அமெரிக்க மார்க்சிஸ்ட் ஆன எட்பர்க் ஹார்ட்டேகரின் மேற்கோள்களை நிறைய இடங்களில் குறிப்பிடுகின்றார். அவருக்கு சோசலிச உணர்வு இருந்து வந்து உள்ளது.

சிங்காரவேலர் இறுதிவரை சாதி எதிர்ப்பு, சோசலிசம் ஆகிய இரண்டையும் இணைத்தே கொண்டு போகின்றார். பல நேரங்களில் காங்கிரஸ் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டது. ஒத்துழையாமை இயக்கம், உப்பு சக்தியாகிரகம் நடைபெறுகின்ற சமயத்தில் பெரியார் அதை இரண்டு ஜமீன்தார்களுக்கு இடையே நடைபெறும் மோதல் என எழுதுகிறார். காங்கிரஸையும், பிரிட்டிஷாரரையும் அப்படி குறிப்பிடுகின்றார். பகத்சிங்கை தூக்கிலிட்ட சமயத்தில் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தை மேற்கொள்காட்டி, ‘வன்முறையை நாங்கள் ஆதரிக்கவில்லை; ஆனாலும் பகத்சிங் போன்ற நேர்மையாளர்களை மிகவும் மதிக்கின்றோம்என்று சொல்லும் பெரியார் மாகாணத்திற்கு நான்கு இளைஞர்களை இது போன்று தூக்கிலிடுங்கள் என்று கோபத்துடன் எழுதுகிறார்.

காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை குறிப்பிடும் போது பிரிட்டிஷ் முதலாளிகள் சங்கம் சார்பாக இர்வினும், இந்திய முதலாளிகள் சங்கம் (Indian Chamber of commerce) சார்பாக காந்தியும் கையெழுத்து இடுகின்றனர் என்று சொல்கிறார்.

காங்கிரஸில் இருந்த தலைவர்களும் சாஸ்திரங்களை, சாதிய அமைப்பு முறையை நியாயப்படுத்துபவர்களாகவே இருந்தனர். மதன் மோகன் மாளவியா என்ற காங்கிரஸ் தலைவர் பிராமணர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்வதால், வெளிநாட்டு செல்லும் போது பரிகாரத்திற்காக களிமண்ணை எடுத்துச் சென்றார். ‘குத்தூசி குருசாமிஅவரைமண்ணுருண்டை மாளவியாஎன்றுதான் குறிப்பிடுவார். அவர்தான் பின்னாட்களில் இந்துத்துவா சக்திகள் வளர காரணமாக இருந்தார்.

மனிதக் கழிவுகளை மனிதர் அகற்றும் முறையினை ஒழிப்பதற்காக ஏழு வருஷம் மகர் சத்தியாக்கிரகத்தை அம்பேத்கர் நடத்துகின்றார். ஏழு வருஷம் தொடர் வேலை நிறுத்தம். யாருமே நடத்தாதது. “இந்திய தொழிலாளர் கட்சிமூலமாக அது நடத்தப்பட்டது. அம்பேத்கர் அடிமூலத்திலிருந்து வரும் மாற்றங்களை சீர்திருத்தம் என்றுதான் சொல்கிறார். வன்முறை மூலம் நடைபெறும் செயல்களை குறிக்கவே புரட்சி என்ற சொல்லை கையாளுகின்றார். கிராம்ஷிகண்ணுக்கு புலனாகாத மாற்றங்கள் என்று குறிப்பிடுவார்நாம் அரசு கட்டமைப்பை தகர்க்கின்றோம். மாற்றம் நிகழ்வது நமக்கு தெரிகிறது. அதனால் அதை புரட்சி என்று குறிப்பிடுகின்றோம். ஆனால் காலம் காலமாக இருப்பவற்றை மாற்றி அமைப்பதை எப்படி குறிப்பிடுவது? திராவிட இயக்கங்களை விமர்சிக்கின்றோம். இன்றைக்கு நான்கு வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசுகின்ற சூழலே உள்ளதே. முன்பு அப்படி பேச முடியாது. இரண்டு இடைநிலை சாதியை சேர்ந்தவர்கள் கூட நண்பர்களாக பழக முடியாது. நல்ல உடைகள் கூட இடைநிலை சாதியை சார்ந்தவர்கள் உடுத்த முடியாமல் இருந்தது. இப்போது நிலைமை மாறியுள்ளதற்கு திராவிட இயக்கமும் ஒரு காரணம். அதற்காக, திமுக, அதிமுக-வை திராவிட இயக்கங்கள் என்று குறிப்பிட முடியுமா?

மார்க்சிஸ்ட்: ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்து

எஸ். வி. ஆர்: ஏகாதிபத்தியம் என்பது இன்று நேரிடையாக இல்லை. கண்ணுக்கு புலனாக விதத்தில் ஏகாதிபத்திய முறைகள் நிலவுகின்றது. அமெரிக்கா தான் இன்று முக்கிய ஏகாதிபத்திய நாடு, அதற்கு சில ஐரோப்பிய நாடுகள் துணை போகின்றன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் காலனி நாடுகள் என்று எதுவும் கிடையாது, அதனால் காலனி எதிர்ப்பு போராட்டங்கள் கிடையாது. நேரடியாக ஒரு நாட்டை ஆக்கிரமிப்பது என்பது இன்று கிடையாது. ஆனால் மறைமுகமான சுரண்டல் என்பது நிலவுகிறது. ஏகாதிபத்தியம் என்பது மக்கள் கண்ணுக்கு புலனாகாமலேயே தனது சுரண்டல் பணியை செய்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியும், அதன் அடாவடித்தனமான சுரண்டல் பற்றியும் மக்கள் மத்தியில் எப்படி கொண்டு செல்வது? ராணுவ தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்ற ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா போன்ற நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் நேட்டோ படைகள் பற்றியும், அவர்கள் நடவடிக்கைகள் பற்றியும் தெரியும்.

ஆனால் நமது நாட்டில் நேரிடையாக ஏகாதிபத்தியம் பற்றி தெரியாது. மறைமுகமாக அனைத்திலும் ஏகாதிபத்திய சுரண்டல் உண்டு. நாம் அணியக்கூடிய உடை, உண்ணக் கூடிய உணவு எல்லாவற்றையும் யார் தீர்மானிக்கிறார்கள்?

லெனின் அவர்கள் எழுதியஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்என்ற நூலில் முதலாளித்துவ காலத்திற்கு முந்தைய ஏகாதிபத்தியங்கள் பற்றி பேசுகிறார். ரோமப் பேரரசு பற்றியும் அந்த கால கட்ட பேரரசுகள் பற்றியும் பேசுகிறார். அப்போதைய ஏகாதிபத்தியங்கள் தன்மை அடிப்படையில் வேறுபட்டவை. அதற்குப் பிறகு, தொழிற்சாலைகள் உருவானபின், மூலதனம் வளர்ந்தபின் உருவான காலகட்டத்தில் சந்தையை பங்கிட்டுக் கொள்வதில் ஏகாதிபத்தியங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டு போர்கள் நடந்தன. ஆனால், இப்போது ஏகாதிபத்தியங்கள் ஒன்று சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலைதான் நிலவுகின்றது. அவர்களுக்குள் ஏற்படும் முரண்பாடுகளால் போர்கள் நடைபெறும் நிலை இல்லை. மாறாக, அவர்களுக்கு வெளியே உள்ள நாடுகள் மீதுதான் போர் தொடுக்கிறார்கள். சிரியா, ஈராக், அதையடுத்து ரஷ்யாவை சுற்றிலும் நேட்டோ படைகளை நிறுத்தியுள்ளார்கள். யூகோஸ்லோவியாவை உடைத்தனர். தங்களுக்கு அடிமையாக இருக்க விரும்பாத நாடுகளை ஒன்று சேர்ந்து தாக்குகின்றனர்.

மார்க்சிஸ்ட்: பாசிசம் என்று மரபு ரீதியாக ஒரு வரைவிலக்கணம் சொல்லி வருகிறோம். இப்போது இருக்கும் சூழலை பாசிசம் என்று சொல்வது சரியானதா?

எஸ்.வி.ஆர் : அளவுக்கு மிறிய சர்வாதிகாரத்தை பாசிச அடக்குமுறை என்று சொல்லுகிறோம். அறிவியல் ரீதியாக அது சரியல்ல. நிதி மூலதனத்தின் கை ஓங்கி உள்ள இடத்தில்தான் பாசிசம் வரும் என்ற வரைவிலக்கணத்தை அப்படியே இங்கு பொருத்திப் பார்க்க முடியாது. போர்ச்சுக்ல்லில் ஷைலாசர் ஆட்சியில் பாசிசம் இருந்தது. அங்கு, அப்போது நிதி மூலதன குவிப்பு இல்லை. இத்தாலியில் பாசிசம் இருந்தது. ஹிட்லருடன் இருந்ததால் சில இடங்களில் மட்டும் யூதர்கள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் ஜெர்மனியில் இருந்ததைப் போல அழித்தொழிப்பு முகாம்கள் போன்ற கொடும் அடக்குமுறைகள் அங்கு இருக்கவில்லை. பாசிசத்தை வரையறுப்பது ஒரே மாதிரி எல்லா இடங்களுக்கும் பொருந்தும் என்பது அல்ல. இங்கு ஜனநாயகத்தை முற்றிலும் மறுக்கக்கூடிய, முதலாளித்துவத்திற்கு சேவை செய்யக்கூடிய, ஒற்றை அடையாளத்தை திணிக்கக்கூடியதாக உள்ளது.

மார்க்சிஸ்ட் : இந்துத்துவா கருத்து நிலை சார்ந்து வேகவேகமாக மக்கள் திரட்டல் நடந்து வரும் நிலையில் இந்த அபாயத்தை எதிர் கொள்ள திராவிட கருத்து நிலையின் பல கூறுகள் பயன்படக்கூடும். பொதுவாகஇடது சாரிகள் ஆற்ற வேண்டிய பங்கு பற்றி

எஸ்.வி.ஆர் : இன்றைக்கு ஆட்சியிலுள்ள பாஜக சாதியை நிலை நிறுத்த விரும்புகிறது. சாதி வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கொள்கை. கையிலுள்ள ஐந்து விரல்களை போல சாதி அமைப்பு உள்ளது. பிரிந்திருந்தாலும் அவை ஒன்றாகவே இயங்குகின்றன. இது கடவுளால் அருளப்பட்டது என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லுகிறது. ஆனால் அவர்களிடம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கட்டை விரலுக்குரிய இடத்தை கொடுங்கள் என்று சொல்லிப் பாருங்கள் ஒத்துக்கொள்வார்களா? சாதி என்ற பிரிவினை இருப்பதால்தான் பாசிச சக்திகள் செயல்பட முடிகிறது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் துவக்க காலத்திலும் அதற்கு பிறகும் போர்க்குணமிக்க போராட்டங்களை நாம் நடத்தியுள்ளோம். நவீன தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக உள்ளது. போராடும் இயக்கங்களை ஆயுதம் கொண்டு ஒடுக்க எளிதில் முடிகிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட அரபு புரட்சி, வால் ஸ்டீரிட் முற்றுகை போன்றவற்றை அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போக முடியவில்லை. தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு எளிதில் ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராக போராடுபவர்களை அடையாளம் காணவும், பின் தொடரவும் முடியும். மாவோயிஸ்டுகள் ஒருபுறம் ஆயுதப் போராட்டங்களை நடத்தி வந்தாலும் இன்றைய சூழலில் அவை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. வெகு மக்களை திரட்டுவதுதான் நமக்குள்ள ஒரே வழி. அதை வலிமையாக நாம் செய்ய வேண்டும்.

இன்றைய சூழலில் சூழலியல் பிரச்சனைகளையும் நாம் கையிலெடுக்க வேண்டும். பல பிரச்சனைகளில் ஒன்றாக இவற்றைப் பார்க்கக் கூடாது. ஏகாதிபத்திய இலாப வெறியால் உலகில் உள்ள மனிதர்கள் வாழும் ஒரே கிரகமான புவிக்கோளம் ஆபத்தை எதிர் நோக்கி உள்ளது. மனித குலத்தை பாதுகாக்க, மற்ற எல்லோரையும் விட நமக்கு அதிக பொறுப்பு உள்ளது. சோவியத் யூனியன் கால கட்டத்தில் போல்ஷ்விக் கட்சி சூழலியல் விஷயங்களில் மிகுந்த அக்கறை செலுத்தியது. வனப்பகுதிகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தப்பட்டன. புகாரின் அவர்களின் எழுத்துக்களில் சூழலியல் விஷயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிரஷ்னொவ் காலத்தில் கூட சூழலியல் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. அந்த வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

இன்றைய மகாராஷ்டிராவில் தண்ணீர் பிரச்சனை மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் குடிநீர் பிரச்சனை உள்ளது. இஸ்ரேல் சிரியாவுடனான போருக்கு பிறகு திருப்பித்தரப்பட்ட பகுதிகளில் கோலான் குன்றுகள் இல்லை. அதை அவர்களே வைத்துக் கொண்டனர். ஏனென்றால் அவர்களின் நீர் ஆதாரம் அங்குதான் உள்ளது. அதைப் பாதுகாத்து தங்களிடமே வைத்துக் கொள்ள வேண்டும்என்று நினைக்கின்றனர்.

இனி அடுத்து நாடுகளிடையேயான சண்டை, பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீருக்காக நடக்கக் கூட வாய்ப்புள்ளது. புவி அவ்வளவு மாசுப்பட்டுள்ளது. எனவே சூழலியல் பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டும். அணு மின்சாரம் உண்மையிலேயே மிகப் பெரிய செலவு பிடிக்கக்கூடியது. அனல், புனல் மின் திட்டங்களை விட பல மடங்கு செலவு பிடிக்க கூடியது.

நியூட்ரினோ திட்டத்தை பொறுத்தவரையில் அது அவசியமான ஆராய்ச்சி ஆகும். அத்திட்டத்திற்கு எதிரான வாதங்களை நாம் அறிவியல் ரீதியாக முறியடிக்க வேண்டும். அறிவியலை மிக உயர்ந்த கட்டத்திற்கு கொண்டு போக நியூட்ரினோ திட்டம் மிகவும் அவசியம் ஆகும்.
மின் உற்பத்தித்திட்டங்களில் இன்று மரபு சாரா திட்டங்கள் முன்னுக்கு வந்து விட்டன. பல நாடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்கள் பிரபலமாகி வருகின்றன. உலக நாடுகளில் பெருகும் குப்பைகளை சமாளிப்பது இன்றைக்கு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது. நாம் இவற்றுக்கெல்லாம் மாற்று முறைகளை முன் வைக்க வேண்டும்.

நம்மாழ்வார் இயற்கை விவசாயம் என்ற மாற்றை முன் வைத்தார். நிலச்சீர்திருத்தம் குறித்து அவர் எதுவுமே பேசவில்லை. இருப்பினும் ஒரு மாற்றை முன் வைத்து நிலைப்படுத்தினார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு நிலம் சார்ந்த உறவுகள் பற்றிய ஆய்வுகளை நாம் செய்ய வேண்டும். மிகப் பெரிய அளவு நிலங்களை உடைமையாக வைத்து இருப்பவர்கள் இன்று இல்லை. அதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. கோவில் நில உடைமைகளில்கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே அது சார்ந்த ஸ்தூலமான ஆய்வுகள் நமக்கு தேவை. இல்லையென்றால் நாம் பழைய விவரங்களை வைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்போம்.

இன்னும் தமிழகத்தில் உள்ள சில மார்க்சிய அறிவு ஜீவிகள் பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். நமக்கு இன்றைய தேவை, இன்றுள்ள சூழல் குறித்து விரிவான ஆய்வுகள், ஏகாதிபத்தியத்தின் இன்றைய செயல்பாடு, நிதி மூலதனத்தின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுகள் தேவை. தமிழகத்திலுள்ள இடதுசாரி அறிவு ஜீவிகள் எல்லோரும் ஒன்றிணைந்து இத்தகை ஆய்வுகளை செய்ய முன்வர வேண்டும் என்பதே எனது விருப்பம். அது இன்றைய காலத்தின் தேவையும் கூட. பழமை வாதம் பற்றி பேசுவது எரிச்சலையே உண்டு பண்ணுகிறது. அதனால்தான் நான் தேசிய வாதிகள் பற்றி பேசுவது கிடையாது. நாம் சர்வ தேசிய வாதிகள். நமக்கு சர்வ தேசிய உணர்வுதான் இருக்க வேண்டும். குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி இறந்தால், நமது சொந்தக்காரர் இறந்ததைப் போல நமக்கு உணர்வு வர வேண்டும். மக்கள் மத்தியில் சர்வ தேசிய உணர்வினை வளர்க்க நாம் பாடுபட வேண்டும்.