Showing posts with label அன்னிய மூலதனம். Show all posts
Showing posts with label அன்னிய மூலதனம். Show all posts

Friday, February 12, 2021

மோடிஜி ஆளில்லா கடையில் யாருக்காக ?

 


இன்சூரன்ஸ் துறையில் அன்னிய  நேரடி முதலீட்டு வரம்பை 49 % லிருந்து 74 % ஆக உயர்த்தப் போவதாக மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அது அவசியமா என்று பார்ப்பதற்கு முன்பாக இரண்டு சம்பவங்களை நினைவு கூர்வது அவசியம்.

 

சம்பவம் 1 : இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணைய மசோதா (அப்போது வெறும் கட்டுப்பாடுதான் வளர்ச்சி இல்லை)  26.08.1997 அன்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார். இன்சூரன்ஸ்துறையில்  தனியார் துறையை அனுமதிக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு திருத்தம் கொண்டு வர அத்திருத்தம் தோற்கடிக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் துறையில் தனியார் கம்பெனிகள் இருக்கலாமே தவிர அன்னிய மூலதனமோ, அன்னிய கம்பெனிகளோ அனுமதிக்கப்படக்க் கூடாது என்ற திருத்தத்தை பாஜக உறுப்பினர் ஒருவர் கொண்டு வருகிறார். இடதுசாரிகள் அந்த திருத்தத்தை ஆதரிப்பதாகச் சொல்கின்றனர். அப்படியானால் அந்த திருத்தம் வெற்றி பெறும் என்பதை உணர்ந்த அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் ஐ.ஆர்.ஏ மசோதாவை திரும்பப் பெறுகிறார். இன்சூரன்ஸ் துறையில் அன்னியக் கம்பெனிகளை வர விடாமல் தடுத்தவர்கள் நாங்கள்தான் என்று பாஜகவினர் கொஞ்ச நாள் பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

சம்பவம் 2 : வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 26 % அன்னிய நேரடி முதலீட்டோடு தனியார் நிறுவனங்களை இன்சூரன்ஸ் துறையில் அனுமதிக்கும்  இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காணைய மசோதாவை 28.10.1999 அன்று பாஜக அரசு மக்களவையில் அறிமுகம் செய்கிறது. அன்றைய தினம் இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய மக்களிடம் நாம் பெற்ற 1,50,54,577 கையெழுத்துக்கள் கொண்ட படிவங்கள் அன்றைய  மக்களவைத் தலைவர் திரு ஜி.எம்.சி.பாலயோகி அவர்களிடம் அளிக்கப்படுகிறது. அதே நாள் புதுடெல்லியில் பாஜகவின் குரு பீடமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவான ஸ்வதேசி ஜக்ரான் மஞ்ச், அதன் தலைவரான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தலைமையில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஒரு தர்ணா போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.

 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவு அன்னிய மூலதனத்தை அனுமதிக்கும் மசோதாவை அறிமுகம் செய்கிறது. இன்னொரு பிரிவோ அதற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. பாரதியார் சொன்ன “நடிப்புச் சுதேசிகள்” என்ற வாசகம் இவர்களைத் தவிர வேறு யாருக்கு பொருந்தும்?

 

அன்னிய மூலதனமே கூடாது என்று திருத்தம் கொண்டு வந்தவர்கள் அவர்களின் ஆட்சியில் முதலில் 26 % அன்னிய மூலதனத்தை அனுமதித்தார்கள். அதையும் அவர்களே எதிர்ப்பதாக வேறு ஒரு நாடகத்தையும் நடத்தினார்கள்.

 

மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் காலத்தில் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி 49 % வரை அன்னிய நேரடி முதலீட்டிற்கு ரத்தினக் கம்பளம் விரித்தனர்.

 

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனம் வந்தால் கட்டமைப்புத் தேவைகளுக்கான நிதி கொட்டிக் கொண்டே இருக்கும் என்று சொன்னார்கள், சொல்கிறார்கள், சொல்வார்கள். கட்டமைப்புத் தேவைகளுக்கான முதலீடுகள் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரும் என்பது அன்றைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் சொன்ன உறுதிமொழி. அப்படிப் பார்த்தால் இந்த இருபது வருடங்களில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் முப்பது லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும். ஆனால் அதிலே நூற்றில் ஒரு பங்காவது வந்ததா என்றால் அது சந்தேகமே!

 

அன்னிய மூலதன வரம்பை 49 % லிருந்து 75 % ஆக உயர்த்த துடிக்கிறார்களே, இப்போது எத்தனை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் 49 % அன்னிய நேரடி மூலதனம் உள்ளது?

 

ஐ.ஆர்.டி.ஏ வின் 2018-2019 ஆண்டறிக்கை உண்மையைச் சொல்கிறது. மொத்தமுள்ள 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களில் அன்னிய மூலதனமே கிடையாது.  ஏகான், அவியா லைப், பார்தி ஏஎக்ஃஎஸ், ஆதித்ய பிர்லா சன்லைஃப், டிஹெச்எப்எல் பரமெரிக்கா, எடெல்வாய்சின் டோக்யோ, ரிலையன்ஸ் நிப்பான், டாடா ஏ.ஐ.ஏ ஆகிய  எட்டு நிறுவனங்களில் மட்டுமே 49 % அன்னிய முதலீடு உள்ளது. ஏழு நிறுவனங்களில் அன்னிய மூலதனம் 26 % லிருந்து 49 % க்குள் உள்ளது. ஐந்து நிறுவனங்களில் 26 % க்கும் குறைவாகத்தான் உள்ளது. அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த மூலதனமே 27,515.75 கோடி ரூபாய்தான். அதில் அன்னிய மூலதனம் 9,764,20 கோடி ரூபாய்தான். அது வெறும் 35.49 % மட்டுமே.

 

பொது இன்சூரன்ஸ் துறையில் நிலைமை இன்னும் மோசம். மொத்தமுள்ள 21 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களில் அன்னிய மூலதனமே கிடையாது. ஐந்து நிறுவனங்களில் மட்டுமே 49 % அன்னிய மூலதனம் உள்ளது. 21 கம்பெனிகளின் மொத்த மூலதனமான 9570.88 கோடியில் அன்னிய மூலதனம் வெறும் 2,895.99 கோடி ரூபாய் மட்டுமே. 29.79 % தான்.

 

அன்னிய மூலதன வரம்பை 49 % ஆக உயர்த்தும் சட்டத் திருத்தம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வந்தாலும் அது 15 ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் 16 பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் தேவைப்படவே இல்லை. இந்த தனியார் நிறுவனங்களுக்கு கூடுதல் அன்னிய மூலதனம் தேவைப்படவே இல்லை என்பதுதானே யதார்த்தம்! அன்னிய மூலதன அளவு குறைவாக இருந்தும் அவர்கள் வணிகம் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்!

 

தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் 49 % வரம்பையே பயன்படுத்தாத நிலையில் 74 % ஆக உயர்த்த வேண்டிய அவசியம் ஏன்? ஆளில்லாத கடையில் யாருக்காக டீ ஆத்துகிறது என்ற கேள்வி மனதுக்குள் எழும்.

 

நரியின் பார்வை இரையின் மீதுதான் என்பதை மறந்து விடக் கூடாது. பல இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு இந்தியக் கம்பெனிகளின் பங்குதாரர்களாக இருப்பது என்பது வேப்பங்காயாக கசக்கக் கூடியது. 100 % மூலதனத்தோடுதான் செயல்பட வேண்டும் என்ற கொள்கையில் மாறாத உறுதியோடு இந்தியாவில் கடை விரிக்காத அன்னியக் கம்பெனிகள் இருக்கிறார்கள்.

 

இங்கிலாந்தின் லாயிட்ஸ் நிறுவனம் 100 % முதலீட்டில் மட்டுமே வருவது என்று பிடிவாதமாக உள்ளது. அதே போல உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான வாரண் பஃபெட்டின் நிறுவனமாக ஜென் ரீ நிறுவனத்தையும் சொல்லலாம். இவை இன்று இந்தியாவில் மறு இன்சூரன்ஸ் நிறுவனமாக செயல்படுகிறதே தவிர நேரடி இன்சூரன்ஸ் வணிகத்திற்கு வரவில்லை.

 

நேரடியாக 100 % அன்னிய மூலதனத்தை அனுமதிப்பதற்கான முதல் கட்டமாகவே இப்போது அன்னிய மூலதன வரம்பை 74 % ஆக உயர்த்தியுள்ளது. அரசின் இறுதி இலக்கு என்பது 100 % தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

 

அது மட்டுமல்ல, பென்ஷன் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அரசுக்கு உள்ளது. இன்சூரன்ஸ் துறையில் உயர்த்தினால் அங்கேயும் உயர்த்துவது மிகவும் எளிதாகி விடும்.

 

பென்ஷன் நிதியை நிர்வகிப்பவர்களாக இன்று ஏழு நிறுவங்கள் உள்ளன. அவர்கள் நிர்வகிக்கும் தொகை 2018 ல் 2,34,579 கோடி ரூபாயாக இருந்தது 2019 ல் 3,18,214 கோடி ரூபாயாக 36 % அதிகரித்துள்ளது. இந்த தொகை அன்னியக் கம்பெனிகளின் கண்களை உறுத்துகிறது.

 

அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதன் பொருள் என்பது ஒன்றுதான். இந்திய மக்களின் உள்நாட்டு சேமிப்பில் ஒரு பகுதிதான் இன்சூரன்ஸ் பிரிமியமாக மாறுகிறது. அப்படிப்பட்ட உள்நாட்டு சேமிப்பின் மீதான கட்டுப்பாடு அன்னிய மூலதனத்தின் கைகளுக்குச் செல்லும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும். அதனால்தான் இதை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. தேசத்தை நிஜமாக நேசிக்கிற ஒவ்வொருவரும் கண்டிப்பாக எதிர்த்திட வேண்டும்.

 முடிப்பதற்கு முன்பாக

 உலகப் பொருளாதார நெருக்கடி வந்த போது அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய வங்கிகள் திவாலாகின. அந்நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான அமெரிக்கன் இன்சூரன்ஸ் க்ரூப் (ஏ.ஐ.ஜி) திவாலின் விளிம்புக்குச் சென்றது. அரசு ஏராளமான நிதி கொடுத்து அந்த நிறுவனத்தை மீட்டது. வணிகத்தில் அரசுக்கு வேலை இல்லை (Government has no business in business) என்று எப்போதும் உபதேசித்துக் கொண்டிருக்கிற யாரும் ஒரு வணிக நிறுவனத்தை பாதுகாக்க ஏன் வரி செலுத்துவோர் பணத்தை விரயம் செய்கிறது என்று கேட்கவே இல்லை.

 ஏ.ஐ.ஜி யும் டாடாவும் இணைந்து டாடா ஏ.ஐ.ஜி என்ற பெயரில் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். ஏ.ஐ.ஜி தடம் புரண்ட போது அன்றைய ஐ.ஆர்.டி.ஏ தலைவர் விவேக் நாராயணன் “டாடா ஏ.ஐ.ஜி நிறுவனத்தில் 24 % மட்டுமே ஏ.ஐ.ஜி யிடம் உள்ளது. மீதமுள்ள 76 % டாடாவிடமே உள்ளதால் பாலிசிதாரர் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று அறிக்கை அளித்தார். ரத்தன் டாடா முழுப் பக்க விளம்பரங்களை பல நாளிதழ்களில் பல நாட்கள் அளித்தார்.

 24 %  மட்டுமே  அன்னிய மூலதனம் இருந்ததால் கவலைப்படாதீர்கள் என்று சொல்ல முடிந்தது. அன்னிய மூலதனம் 74 % ஆக உயர்ந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பார்த்தால் அச்சம் வரவில்லையா?

 தன்னுடைய சேமிப்புக்கு என்ன ஆகும் என்ற அச்சத்தோடு ஒரு பாலிசிதாரர் வாழ்ந்திட வேண்டுமா?

 அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

Wednesday, February 10, 2021

FDI - மோடி சொன்னது சரிதான்.

 



FOREIGN DISTRUCTIVE IDEOLOGY என்றும் AANDHOLAN JEEVI மோடி புதிதாக இரண்டு வார்த்தைகளை சொல்லியுள்ளார். அதில் அந்தோலன் ஜீவி என்பதற்கு மிகச் சிறப்பான ஒரு உதாரணத்தை ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பக்கத்தில் பார்த்தேன்.

 


இதற்கு மேல் அது பற்றி சொல்ல ஏதுமில்லை.  

 

FDI என்றால் FOREIGN DIRECT INVESTMENT என்றுதான் இது நாள் வரை கேள்விப்பட்டுள்ளோம். அதை FOREIGN DESTRUCTIVE INVESTMENT அதாவது அன்னிய பேரழிவு நிதி என்று சொல்வது மிகவும் பொருத்தமான வார்த்தைதான்.

இந்தியா விடுதலை பெற்ற காலத்தில் அதன் தொழில்துறையை முன்னேற்ற உதவுங்கள் என்று கேட்ட போது வரத் தயாராக இல்லாத அன்னிய மூலதனம் இன்று வருகிறது என்றால் இந்தியாவை காப்பாற்றவா அல்லது அழிக்கவா?

 சில்லறை வணிகத்தில் வரும் அன்னிய மூலதனம் இந்தியாவின் கோடிக்கணக்கான சில்லறை வணிகர்களை அழிக்கும்.

 இன்சூரன்ஸ் துறையில் வரும் அன்னிய மூலதனம் இந்தியர்களின் சேமிப்பை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துச் சென்று விடும்.

 பங்குச்சந்தைக்கு வரும் அன்னிய மூலதனம் சிக்கல் வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் நிதியையும் தூக்கிக் கொண்டு வேறு நாடுகளுக்கு பறந்து விடும்.

 எனவே FDI பற்றி  சொல்லியுள்ளது சரிதான். அந்த பேரழிவு நிதியின் தரகர் அவர்தான் என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்.