Showing posts with label ஜனநாயகப் படுகொலை. Show all posts
Showing posts with label ஜனநாயகப் படுகொலை. Show all posts

Wednesday, April 15, 2026

மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில்

 


"நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க, இன்னிக்கு நீங்களும் என்னை மாதிரியே மாறிட்டீங்க, நான் செஞ்ச தவறிலயே பெரிய தவறு இதுதான்"

உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற ஊரின் முடிவை நிறைவேற்ற குளத்திற்குள் இறங்கும் முன்பு விஜயன் பேசும் வசனம் அது.

மகளிர் இட ஒதுக்கீடு வேணும்னு கேட்டுக்கிட்டு இருந்த உங்க எல்லாரையும் இன்னிக்கு மகளிர் இட ஒதுக்கீடு வேண்டாம்னு சொல்ல வச்சுட்யேன். நான் செஞ்சதுலயே மிகப் பெரிய சாதனை இதுதான்.

-இதுதான் மோடியின் மனதில் ஓடும் வசனமாக இருக்கும்.

நாளை மோடி கொண்டு வரப்போகும் மசோதாவால் தொகுதி எண்ணிக்கைகள் எப்படி மாறும் என்பதை கீழே உள்ள பட்டியல் உணர்த்தும். 


இப்போதுள்ள 545 என்ற எண்ணிக்கையின் விகிதத்தின் படி 850 ற்கு உயர்த்தினால் 203 இடங்களை பெற வேண்டிய தென்னிந்திய மாநிலங்கள் 166 இடங்களை பெறுவதும் 313 இடங்களை பெற வேண்டிய இந்தி பேசும் வட மாநிலங்களான உபி,மபி, பீகார், குஜராத், ராஜஸ்தான் 367 இடங்களை பெறும். 

இதை மோசடி என்றழைக்காமல் வேறென்ன சொல்வது?

இதனை கண்டிப்பாக முறியடிக்க வேண்டும். 

காங்கிரஸ் கட்சி என்ன செய்யப் போகிறது? 

அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது
மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை என்று நான் சொன்னேன்
தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது 46 ஆக குறையும்
அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும்
மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3%. இது குறைந்து 20.7% ஆகும்
மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும்
அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்

மேலே உள்ளது முன்னாள் ப.சிதம்பரம் சொன்னது. இவர் சொல் காங்கிரஸ் அம்பலம் ஏறுமா? பப்பு என்ற குற்றச்சாட்டை நிஜமாக்கிக் கொண்டிருக்கிற ராகுல் காந்தியும் அவரது ஆலோசகர்களான மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், ஜோதிமணி போன்ற பாஜக ஸ்லீப்பர் செல்களும் யோசிக்க விடுவார்களா?

மோடி செய்வது ஜனநாயகக் குற்றம் என்றால் அதை காங்கிரஸ் ஆதரித்தால் அது ஜனநாயகத் துரோகம்.

கடந்த கால அனுபவம் அந்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதை காங்கிரஸார்தான் போக்க வேண்டும்.

Saturday, February 14, 2026

அந்த பதவிக்கு அவர் அருகதையில்லை . . .

 

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இது நாள் வரை இவ்வளவு மோசமான அவைத்தலைவரை பார்த்ததில்லை. 

அந்த பதவியில் இருந்தவர்கள் அனைவருமே தோழர் சோம்நாத் சட்டர்ஜி, திரு ஜி.எம்.சி.பாலயோகி, திரு மனோகர் ஜோஷி  நீங்கலாக  அனைவருமே எது ஆளும் கட்சியோ, அதைச் சேர்ந்தவர்கள்தான்.

ஆளும்கட்சி சார்பாகத்தான் அவர்கள் செயல்பட்டிருந்தாலும் கொஞ்சமாவது நடுநிலையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை சொல்ல கொஞ்சமாவது வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் ஓம் பிர்லா?

ஒரு சபாநாயகரின் முதல் கடமை - துணை சபாநாயகர் தேர்வு. 

12 வருடங்களாக நடக்கவில்லை. இவருக்கு முன்பிருந்த சுமித்ரா மகாஜன் அம்மையாரும் சரி, இவரும் சரி, அதைப் பற்றி கவலைப்படவே இல்லை.

அமைச்சர்கள் சொல்ல வேண்டிய பதில்களை இவரே சொல்லி விடுகிறார். 

எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து அதில் மகிழ்ச்சி அடைபவர், அப்போதுதானே அவர்கள் அரசை விமர்சிக்க முடியாது.

இதில் மிக மிக மோசமான நடவடிக்கைதான் பெண் எம்.பி க்கள் மோடியை தாக்கவிருப்பதாக பழி போட்டது. மோடியை விட கற்பனை வளத்தில் சிறந்தவராக இருக்கிறார்.

அவரை பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிகவும் சரியானது. அது தோற்றுப் போகும். ஆனால் ஒரு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது வரலாற்றில் பதிவாகிறதல்லவா! அது போதும்.

பிகு: எழுதி இரண்டு நாளான பதிவு இது. ஓம் பிர்லா பல்பு வாங்கிய ஒரு சம்பவம் சிரிப்பைத் தந்தது. அது கீழே . . 


 

Wednesday, January 14, 2026

தளபதிக்கே ஓட்டு கிடையாதா?

 


மேலே உள்ளது அமைதிப்படை படத்தில் வரும் ஒரு காட்சி. தன் மனைவியை அமாவாசை கொல்லச் சொல்லும் போது மணிவண்ணன் பேசும் வசனம் இது.

இன்றைக்கு யார் அது போல ஓவராக ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தனியாக சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

கீழேயுள்ள படத்தை பாருங்கள்.



மேலேயுள்ள படத்தில் இருப்பவர் அட்மிரல் அருண் பிரகாஷ். இந்திய கப்பற்படையின் தளபதியாக 31.07.2004 முதல் 31.10.2006 வரை செயல்பட்டுள்ளார். இவரது மொத்த பணிக்காலம் நாற்பது ஆண்டுகள். எழுபதுகளில் நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் நேரடியாக களத்தில் இருந்துள்ளர். அதற்காக கொடுக்கப்பட்டதுதான் "வீர் சக்ரா பதக்கம்"

அவர் பெற்ற பதக்கங்களின் விபரம் கீழே உள்ளது. 



இப்போது எதற்கு அந்த வயதான அதிகாரி பற்றி எழுதுகிறீர்கள் என்று கேட்கிறீர்களா?

பணி ஓய்வுக்குப் பிறகு அவரும் அவரது மனைவியும் கோவாவில் வசித்து வருகிறார்கள். 

ஒரு பொறுப்பான குடிமகனாக SIR க்கான படிவத்தை உரிய நேரத்தில் நிரப்பிக் கொடுத்துள்ளார்.

அவருக்கு தேர்தல் ஆணையத்திலிருந்து கடிதம் வந்துள்ளது.

என்னவென்று?

அவரும் அவரது மனைவியும் இந்திய குடிமக்கள் என்று நிரூபிப்பதற்கான ஆவணங்களோடு 18 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு வருமாறு அந்த கடிதம் சொன்னது.

இது ஏதோ ஒரு சின்ன கோளாறு. அதற்காக மோடியை அமாவாசை என்ற ரேஞ்சிற்கு  பேச வேண்டுமா என்றுதானே யோசிக்கிறீர்கள் ! 

இந்த பிரச்சினை என்றில்லை, எப்போதுமே மோடி அமாவாசைதான். அது வேறு விஷயம்.

கப்பற்படை தளபதியாக இருந்தவருக்கு வேண்டுமென்றே வாக்குரிமையை மறுப்பதாக குற்றம் சாட்டுகிறீர்களா?

ஆமாம்.

ஏன்? அதற்கென்ன அவசியம்?

ராணுவத்தில் பணி நியமன முறையை மாற்றி ராணுவ வீரர்களை ஒப்பந்தக் கூலிகளாக மாற்றும் அக்னிபாத் முறையை திரு அருண்பிரகாஷ் கடுமையாக கண்டித்துள்ளார். ராணுவத்தை பலவீனப்படுத்தி விடும் என்று எச்சரித்தார்.

இது போதாதா மோடிக்கு?

கப்பற்படை தளபதியாக இருந்தாலும் அரசின் மூடத்தனத்தை சாடினால் அவர்களது குடியுரிமையை கேள்விக்குறியாக்கி விடுவார்கள். 

கேடு கெட்ட ஆட்சி இது. 


Tuesday, March 12, 2024

கலவரத்தை தூண்டுவது திசை திருப்பவா?

 


குடியுரிமைச் சட்டத்தை அமலாக்குவதற்கான அரசாணையை மோடி அரசு வெளியிட்டு விட்டது, வீரம் செறிந்த ஒரு போராட்டம் மக்கள் விரோத, மத வெறி சட்டத்தின் அபாயங்களை மக்களிடம் எடுத்துச் சென்றது. கொரோனா தொற்று அரசுக்கு சாதகமாக அமைய போராட்டம் ஒத்தி  வைக்கப்பட்டது. ஆனாலும் அரசுக்கு தெரியும், கனல் போல கோபம் உள்ளுக்குள் இருக்கும் என்று. 

மோடிக்கு இது மோசமான நேரம். பொய்களை வைத்து மூன்றாவது முறையாக வெல்ல முடியாதென்று தெரிந்து விட்டது. உச்ச நீதிமன்றம் வேறு அசிங்கப்படுத்துகிறது. புல்வாமா போல மீண்டும் ராணுவ வீரர்களை சாகடிக்க முடியாது. ஆகவே பிரச்சினையை திசை திருப்ப வேண்டும். அதனால்தான் குடியுரிமைச்சட்டத்தை கையில் எடுத்து விட்டது.

தேர்தல் பத்திரம், தேர்தல் ஆணையர் விவகாரங்களை திசை திருப்புவது மட்டும் நோக்கமல்ல. 

குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக நிச்சயம் போராட்டம் நடக்கும். எங்காவது வன்முறை நிகழ்ந்தால், (அப்படி நிகழாவிட்டால், அரசே ஏற்பாடு செய்யும்) அதைக் கொண்டு கலவரங்களை நாடு முழுதும் தூண்டுவது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி வாக்கு வாங்கி நாட்டின் அமைதிக்கு வாய்க்கரிசி போடுவதுதான் நோக்கம்.

அது நிகழக்கூடாதென்றால் போராட்டங்கள் அழுத்தமாக உண்மைகளை அமைதியாக சொல்ல வேண்டும். கலவர சங்கிகளின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் அவர்களின் சதிகளை அம்பலப்படுத்த வேண்டும்.

ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளே வீழ்ச்சியடைந்தார்கள், மோடி மட்டும் என்ன பெரிய??????/

Sunday, February 18, 2024

தண்டத்துக்கு ஒரு மக்களவை

 



பதினேழாவது மக்களவை போல வேஸ்டான ஒன்று எதுவுமே கிடையாது.

 ஆமாம்.

 ஆண்டுக்கு 55 நாட்கள் மட்டுமே கூடியுள்ளது. முதலாவது மக்களவை ஆண்டிற்கு 135 நாட்கள் செயல்பட்டுள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாடாளுமன்ற ஜனநாயகம் இக்காலக்கட்டத்தில் கேலிக்கூத்தானது புரியும்.

 எந்த ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் நோட்டீஸ் அளித்த பிரச்சினையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவே இல்லை.

 முக்கியமான பல மசோதாக்கள் விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 அதிகபட்ச உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட மக்களவையும் இதுதான்.

 உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத பிரதமரைக் பார்த்தது இந்த மக்களவை.

 இதை விட முக்கியமான ஒன்று உண்டு.

 துணை சபாநாயகரே தேர்ந்தெடுக்கப்படாத மக்களவை இதுதான். எதிர்க்கட்சி உறுப்பினர்தான் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது என்பது மரபு. அதற்குக் கூட மனமில்லாத அற்ப ஜந்துக்களின் கையில் இருந்த 17 வது மக்களவை நிஜத்தில் தண்ட  அவை.

இந்த தண்டக் கருமாந்திரங்கள் பதினெட்டாவது மக்களவைக்கும் வர வேண்டுமா?

Friday, December 15, 2023

ஆட்சிக்கு அருகதையற்றவர்கள் - இன்னொரு சான்று

 


பாஜக எம்.பி யின் துணையோடு உள்ளே வந்து மக்களவையில் "வண்ணப்புகை உமிழும் கருவி" பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று போராடியதற்காக சபாநாயகர் 15 எம்.பிக்களை இடை நீக்கம் செய்கிறார்.


இந்த நடவடிக்கையே அராஜகமான ஒன்று. பாஜக எம்.பி க்குள்ள தொடர்பை திசை திருப்ப ஏற்கனவே சில கதைகளை கட்டவிழ்த்துள்ளது பாஜக ஐ.டி விங். மக்களவை உறுப்பினர்கள் இது பற்றி பேசக்கூடாது என்பதற்காகத்தான் இடை நீக்க நடவடிக்கை.

இதிலே மிகப் பெரிய கொடுமை என்பது

அன்றைய தினம் அவைக்கே வராத திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனையும் இடை நீக்கம் செய்துள்ளதுதான்.

இந்த அளவு பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதே பாஜகவும் டிமோவும் ஆட்சி நடத்த அருகதையற்றவர்கள் என்பதற்கான லேட்டஸ்ட் சான்று. 

Friday, March 24, 2023

ராமர், கிருஷ்ணர், மோடி

 


நேருக்கு நேராக போரிட்டால் வெல்ல முடியாதென்பதற்காக வாலியை மறைந்திருந்து கொன்றவர் ராமர்.

பீஷ்மரின் வில்லை மௌனமாக்க சிகண்டி எனும் திருநங்கையை அர்ஜூனன் தேரில் அமர வைத்து.

அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்று முழக்கமிட்டு துரோணரை தேரில் நிராயுதபாணியாக அமர வைத்து

போருக்கு முன்பே கர்ணனின் கைகளை கட்டிப் போடக்கூடிய விதத்தில் வரங்களை வாங்க வைத்து

பாண்டவர்களுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தது கிருஷ்ணன்.

இவற்றையெல்லாம் சொன்னது ராமாயணமும் மகாபாரதமும்தான்.

ராமரையும் கிருஷ்ணரையும் வணங்குவதாக சொல்லிக் கொள்ளும் மோடியும் அவர்களின் மோசடி நடைமுறையை கையிலெடுத்து ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் ஜெயில் தண்டனை வாங்கிக் கொடுத்து எம்.பி பதவியை பறித்து விட்டார்.

மொத்தத்தில் மூவரிடமும் நேர்மையில்லை.

நேரடியாக மோத துணிவில்லாமல் ஒளிந்து கொண்டு மோதுபவர்கள் எல்லோருமே கோழைகள். இதிலே 56 இஞ்ச் மார்பென்ற பீற்றல் வேறு.

பாகுபலி படத்தின் இடைவேளையில் மக்கள் மனதில் பல்வாள் தேவனை விட பல மடங்கு உயர்ந்து நிற்கும் பாகுபலி போல காட்சியளிக்கிறார் ராகுல் என்பதுதான் யதார்த்தம்.

நடப்பதும் நல்லதற்குத்தான் . . .

 

Tuesday, February 23, 2021

ஆட்சியைக் கவிழ்த்தது தோற்றுப் போனவர்கள்

 



நேற்று புதுவையில் நடந்த ஜனநாயகப் படுகொலை பற்றிய பதிவைப் படித்த ஒரு புதுவை தோழர் “நியமன எம்.எல்.ஏ க்கள் எல்லாம் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு மோசமாக தோற்றவர்கள்” என்று வாட்ஸப் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று ஒரு பயணம். இரவில் வீடு திரும்புகையில் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் அந்த விபரங்களை தேடி எடுத்தேன்.

2016 சட்டமன்ற தேர்தலில் பாஜக முப்பது தொகுதிகளிலும் போட்டியிட்டது.  மொத்தம் பதிவான 7,90,881 வாக்குகளில் அது பெற்ற மொத்த வாக்குகள் 18406 மட்டுமே.

உசுடு என்ற ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 6,323 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. இரண்டு தொகுதிகளில் மட்டும் தலா 1492, 1633 வாக்குகளைப் பெற்று நான்காவது, ஐந்தாவது இடங்களைப் பெற்றிருந்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் பாஜக பெற்றது வெறும் 2.32 % மட்டுமே.

 ஐநூறுக்கும் மேல் வாக்குகள் பெற்ற தொகுதிகள் ஐந்து. மூன்னூறிலிருந்து ஐநூறுக்குள் பெற்றது மூன்று தொகுதிகள். இருநூறிலிருந்து முன்னூறுக்குள் பெற்றது எட்டு தொகுதிகள். நூறிலிருந்து இருநூறுக்குள் பெற்றது ஒன்பது தொகுதிகள். நூறுக்கும் குறைவாகப்ப் பெற்றது இரண்டு தொகுதிகள்.

 கிரண் பேடியால் தன்னிச்சையாக நியமனம் செய்யப்பட்ட மூன்று எம்.எல்.ஏ க்களில் ஒருவர் புதுவை பாஜக தலைவர். இன்னொருவர் பாஜக பொருளாளர். இன்னொருவரோ “கல்வி வள்ளல்:. சங்கர் என்ற பொருளாளர் இறந்து போனதால் அந்த இடத்தில் விக்ரமன் என்ற இன்னொரு சங்கி நியமன எல்.எல்.ஏ ஆகிறார்.

 இந்த நியமன எம்.எல்.ஏ க்கள் பெற்ற வாக்கு விபரங்களைப் பார்ப்போம்.

 கல்வி வள்ளல் எஸ்.செல்வ கணபதி போட்டியிடவில்லை.

 லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட வி.சாமிநாதன் பெற்றது 1,492 வாக்குகள் மட்டுமே. நான்காவது இடம். வெற்றி பெற்றவர் பெற்றதோ 11,980 வாக்குகள்.

 மனவேலி தொகுதியில் போட்டியிட்ட டி.விக்ரமன் பெற்றது 172 வாக்குகள் மட்டுமே. ஒன்பதாவது இடத்தைப் பிடித்தவர் இவர். வெற்றி பெற்றவர் பெற்றதோ  9,194 வாக்குகள்.

 இன்னொரு முக்கியமான ஒன்று உண்டு. கவிழ்ப்பு வேலையை முன் நின்று செய்த கிரண் பேடி அம்மையார் டெல்லி சட்டமன்ற தேர்தலில் 2,200 வாக்குகள் வித்தியாசத்திலும் தமிழிசை அம்மையார் மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் 3,47,200 வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்றுப் போனவர்கள்.

புதுவை மக்களால் கேவலமான முறையில் நிராகரிக்கப்பட்டவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஆட்சியை கவிழ்ப்பது என்பது எவ்வளவு மோசமான செயல்!

 

நிச்சயம் இதற்கு புதுவை மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

Tuesday, September 22, 2020

வெட்கம் கெட்டு டீ குடிக்கனுமா ????

 




 

மக்களை பாதிக்கும் மசோதா அது.
அதன் மீது நேரடி வாக்கெடுப்பு வேண்டும் என்றார்கள்.
மறுத்தாய்.
தேர்வுக் குழுவுக்கு அனுப்பி விவாதிப்போம் என்றார்கள்.
மறுத்தாய்.
குரல் வாக்கெடுப்பு என்று சொல்லி
நாடாளுமன்ற ஜனநாயகத்தின்
குரல்வளையை நெரித்தாய்.
 
உரிமையை தக்க வைக்க,
மரபை நீடிக்கச் செய்ய
உன்னை சூழ்ந்து கொண்டு
குரல் கொடுத்தவரை
வெளியே துரத்தினாய்.
 
அவப்பெயர் சொல்லி
இடை நீக்கம் செய்தாய்.
 
காந்தி சிலையின் காலடியில்
போராட்டம் துவங்கிய போது
கண்டு கொள்ளாமல் சென்றாய்.
 
காலையில் வந்து தேநீர் கொடுத்தாமல்
வெட்கம் கெட்டுப் போய் அதை
குடிக்க வேண்டுமா?
 
நாடகம் பலிக்காமல் போனதால்
உண்ணாவிரத நாடகம் நடத்தினால்
நல்லவனாகி விடுவாயா என்ன?
 
மோடி வேண்டுமானால் வாழ்த்தலாம்.
மக்கள் மனதில் நீ
என்றுமே ஜனநாயகத்தை
படுகொலை செய்த பாவிதான் , , ,

 

பிகு 1: ஒரு நாளாவது அரசியல் பதிவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பார்த்தால் விட மாட்டேன் என்று மோடி வகையறாக்கள் அடம் பிடித்தால் நான் என் செய்வேன்?

 

பிகு @ : விவசாய் மசோதாவை கண்டித்த மாநிலங்களவை உறுப்பினர்களை இடை நீக்கம் செய்தார்கள். அதைக் கண்டித்து அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இடை நீக்கம் செய்ய வைத்த மாநிலங்களவை துணைத்தலைவர், காலையில் அவர்களுக்கு தேநீர் கொடுப்பது போல ஒரு நாடகத்தை நடத்தப் பார்த்தார். அவர் அளித்த டீயை அவர்கள் மறுத்து விட்டனர். அடுத்த நாடகமாக அவர்கள் தன்னை அவமதித்து விட்டதனால் உண்ணா விரதம் இருப்பதாக அடுத்த நாடகத்தை துவக்கியுள்ளார்.

 

அதெப்படி சங்கிகள் எல்லோருமே சிறந்த நடிகர்களாக இருக்கின்றனர்.

 

 

 

 

 

Thursday, September 3, 2020

கொரோனாவின் பெயரால் - திமிரா? பயமா?

 


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. 

இந்த கூட்டத் தொடரில் கேள்வி நேரமும், உறுப்பினர்கள் நோட்டீஸ் எதுவும் இல்லாமல் எந்த பிரச்சினையையும் எழுப்ப வாய்ப்பளிக்கும் பூஜ்ஜிய நேரமும் (ZERO HOUR) ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவின் பெயரைச் சொல்லி நடந்துள்ள அராஜகம் இது.

எதிர்க்கட்சிகளின் உரிமைகளை முடக்கும் ஜனநாயகப் படுகொலை இது.

ஏன் இந்த முடிவு? நாங்கள்தான் பெரும்பான்மை என்ற வழக்கமான திமிரா அல்லது கேள்விகளை சந்திக்க முடியாத பயமா?

அதிகரிக்கும் கொரோனா தொற்று

மோடியின் மர்ம நிதி,

பெருகி வரும் வேலையின்மை

குறைந்து போகும் ஒட்டு மொத்த உற்பத்தி

மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி யை ஏமாற்றுவது,

புதிய கல்விக் கொள்கை

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை

சீனாவுடனான பிரச்சினையில் முரண்பாடான அறிக்கைகள்


இப்படி  ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளிக்க கையாலாகாத ஒரு கேடு கெட்ட அரசு ஜனநாயக படுகொலையை நிகழ்த்துகிறது.

அவர்கள் சில மசோதாக்களை நிறைவேற்றப் பார்க்கிறார்கள். அதற்காகத்தான்  இக்கூட்டத் தொடர்.

அதுவும் நடக்காவண்ணம் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் நடக்க முடியாவண்ணம் முடக்கிட வேண்டும்.

மக்களுக்கு எதிரான மசோதாக்கள் நிறைவேறாமல் தடுப்பது நாடாளுமன்றம் செயல்படுவதை விட நல்லதுதான்.

Thursday, November 22, 2018

கர்னாடகா தப்பு, காஷ்மீர் ரைட்டு




அம்பலமான காவிகளின் இரட்டை நிலைப்பாடு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டே எம்.எல்.ஏ க்கள் கொண்ட காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சியின் சஜத் லோனை முதல்வராக்க பாஜக முன்வந்ததன் மூலம் காவிகளின் இரட்டை நிலைப்பாடு  அம்பலமாகி உள்ளது.

பெரும்பான்மை இல்லாமல் குதிரை பேரத்தை மட்டும் நம்பி யெடியூரப்பா கர்னாடக முதல்வராக பதவியேற்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க நாற்பத்தி எட்டு மணி நேர அவகாசம் மட்டுமே அளிக்கப்பட அதற்குள் பேரங்கள் வெற்றியடையவில்லை என்பதால் ராஜினாமா செய்து விட்டு ஓடிப் போனார்.

ஒரு மாற்று அரசினை உருவாக்க காங்கிரஸ் கட்சி, தன்னை விட குறைவான இடங்களைப் பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக ஆதரவளித்தது. குறைவான இடம் பெற்றவருக்கு அதிக இடம் பெற்றவர் ஆதரவளிப்பதா என்று குய்யோமுய்யோ என்று பாஜக குதித்தது. ஜனநாயகக் கேடு என்றெல்லாம் வர்ணித்தது.

காஷ்மீரில் இரண்டு இடம் மட்டுமே பெற்ற கட்சிக்கு இருபத்தி ஐந்து இடம் பெற்ற கட்சி ஆதரவு அளிப்பது ஜனநாயகக் கேடா இல்லை வேறு ஏதாவது கேடா?

கர்னாடகத்திற்கு தவறு என்று சொல்லப்பட்டது காஷ்மீருக்கு மட்டும் எப்படி சரியானது?

இந்த கேள்விகளுக்கெல்லாம் காவிகள் பதில் சொல்ல மாட்டார்கள்.

காவிகளின் தேச பக்தி வேஷம் கூட இந்த பிரச்சினையில் கலைந்து போனது.

அதை நாளை பார்ப்போம். . .


Tuesday, July 4, 2017

இது அசிங்கம் கிரண் பேடி




இந்தியாவின் மூதல் பெண் ஐ.பி.எஸ்  அதிகாரி என்று பெருமையாய் உங்களை மதித்திருக்கிறேன்.

சர்வ வல்லமை படைத்த இந்திரா காந்தியின் காரையே கிரேனில் இழுத்துச்சென்ற போது "இதுதாண்டா போலீஸ்" என்று வியந்திருக்கிறேன்.

திஹார் சிறைச்சாலையை சீர்திருத்தும் முயற்சியை மனமாற பாராட்டியும் இருக்கிறேன்.

அன்னா ஹசாரே எனும் நாடகக்காரர் "ஊழலுக்கு எதிரான போராட்டம்" என்ற  டைட்டிலில் நடத்திய நாடகத்தில் நீங்களும் ஒரு வேஷம் போட்டீர்களோ, அப்போதுதான்  முதல் நெருடல் எழுந்தது. 

டெல்லி தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் பதவி எனும் மோகத்தால் ஈர்க்கப்பட்டு பாஜக எனும் கழிவு நீர்க் குட்டையில் குதித்த போது நொந்தே போனேன்.

பூவோடு சேர்ந்த நார் மணக்கும் என்ற சொலவடை உள்ள இந்த தேசத்தில் பன்றியோடு சேர்ந்த கன்றும் கழிவைத் தின்னும் என்றும் சொல்வார்கள். 

நீங்கள் இரண்டாவது சொலவடைக்கு உதாரணமா அல்லது  உங்கள் பாஜக அடையாளத்தை பணியிலிருந்த போது ஒளித்து வைத்திருந்தீர்களா என்பதுதான் தெரியவில்லை.

துணை நிலை ஆளுனர் என்று உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசைப் பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முட்டுக்கட்டை போட்டு ஜனநாயகத்திற்கு சவாலை உருவாக்கினீர்கள். 

பாஜக உங்களுக்கு அளித்த பரிசுக்கு பதில் மொய்யாக "பாஜக கட்சியின் பிரமுகர்களுக்கு நியமன எம்.எல்.ஏ பதவி கொடுத்து ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தியுள்ளீர்கள்.

இது அசிங்கத்திலும் அசிங்கம், கேடு கெட்ட அசிங்கம். 

இனி நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் என்றெல்லாம் பேசாதீர்கள். அது இன்னும் அசிங்கமாக இருக்கும்.

பின் குறிப்பு : இப்படி கொல்லைப்புற வழியாக பதவிகளை பிடிப்பதற்குப் பதிலாக பிஜேபி காரர்கள் பிச்சை எடுக்கலாம். அது இதை விட கௌரவமாக இருக்கும்