Showing posts with label தெரு நாய்கள். Show all posts
Showing posts with label தெரு நாய்கள். Show all posts

Wednesday, March 19, 2025

தெரு நாய் புரவலர்களுக்கு என்ன கட்டுப்பாடு?

 


மேலேயுள்ள கட்டுப்பாடு வரவேற்கத்தக்கது. இதனை சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுதும், ஏன் இந்தியா முழுதும் கூட விரிவுபடுத்த வேண்டும்.

வளர்ப்பு நாய்களை விட தீவிரமான பிரச்சினை தெரு நாய்கள். தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையையும் எந்த அரசும் இது வரை எடுக்கவில்லை. எடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.

ஆனால் கட்டுப்படுத்த இன்னொரு விஷயம் இருக்கிறது.

தெரு நாய்களை ஊக்குவிக்கும் பலர் இருக்கிறார்கள். தொழு நோயாளிகளுக்கு சேவை செய்ய வாழ்க்கையை அர்ப்பணித்த அன்னை தெரசா =வின் மறு பிறப்பு என்ற நினைப்பில் சிலர் பத்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட்டை இருபது நாய்களுக்கு பிரித்து போடுகிறார்கள். 

அவர்கள் போடும் துண்டு பிஸ்கெட்டை சாப்பிடும் நாய்கள் அடுத்து அந்த தெருவில் செல்பவர்களை துரத்த ஆரம்பிக்கின்றன.

அப்படி தெரு நாய்களின் மீது கருணை உள்ளவர்கள், நடுத்தெருவில் தெருநாய்களுக்கு பிஸ்கெட் போடுவதற்கு பதிலாக அவர்களது வீட்டில் வைத்து வளர்க்கலாமே!

தெரு நாய்களைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை, தெரு நாய்களை ஊக்குவிப்பவர்கள் மீதாவது கட்டுப்பாடு கொண்டு வரலாமே! 

Saturday, October 5, 2024

ஏ.டி.எம் மில் கைது செய்த நாய்கள்

 

நேற்று முன் தினம் எழுதிய  காரில் நாய்களுக்கு என்ன ஆய்வு?  என்ற பதிவின் தொடர்ச்சி இது.

 நேற்று காலை எங்கள் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்மிற்கு சென்றிருந்தேன்.

 பணத்தை எடுத்து விட்டு வெளியே வர முடியவில்லை.

 



ஏ.டி.எம் வாசலில் இரண்டு நாய்கள் படுத்துக் கொண்டு எழ  மறுக்கின்றன. கதவை திறக்க முடியவில்லை. கதவை சற்று தள்ளினால் ஆவேசமாக குரைக்க தொடங்கி விட்டன. குரைத்து விட்டு மீண்டும் கதவின் மீது சாய்ந்து படுத்துக் கொண்டு விட்டன. அந்த நேரத்தில் அந்த நாய்களை துரத்த வேறு எந்த வாடிக்கையாளர்களும் கூட வரவில்லை. கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் இப்படியே கடந்தது.  போலீஸ் லாக்கப்பில் இருந்த  ஒரு  ஃபீலிங்.                                                                                                                                                                                                                                                                                                                                                       

 

நல்ல வேளையாக மூன்றாவதாக ஒரு நாய் வர, அந்த நாயோடு இந்த இரண்டு நாய்களும் சண்டை போட செல்ல, ஒரு வழியாக வெளியே வந்தேன், விடுதலையாகி.

 

வாஜ்பாய் ஆட்சியில்  நாய்க்கடிக்கான மருந்து உற்பத்தி லவ்பெல்லால் தனியாருக்கு அளிக்கப்பட்டதையும் அதே வாஜ்பாய் ஆட்சியில் தெருநாய்களை கொல்லக் கூடாது என்று மேனகா காந்தி சட்டம் போட்டதையும் இணைத்து பாருங்கள்.

 

தனியார் உற்பத்தி செய்யும் நாய்க்கடி மருந்து விற்க நாமெல்லாம் நாய்க்கடி பெற வேண்டும்.

 

இந்த வாஜ்பாய் பிறந்த நாளை நல்லாட்சி தினமாக வேறு கொண்டாடுகிறார்கள். கொடுமை.

Thursday, October 3, 2024

காரில் நாய்களுக்கு என்ன ஆய்வு?

 


கடந்த வாரம் சென்னை சென்று இரவு திரும்பும் போது வீட்டு வாசலில் மாநாடு நடத்திக் கொண்டிருந்த நாய்கள் பிறகு காரை சூழ்ந்து கொண்டு என்னமோ ஆய்வு நடத்திக் கொண்டிருந்தன.

 



அப்படி என்ன ஆய்வு செய்து என்ன கண்டு பிடித்திருக்கும்.

 வேலூர் மேயரம்மா, தெரு நாய் தொல்லைக்கு தீர்வே கிடையாதா?

 பிகு: இப்படியெல்லாம் ஒரு பதிவு அவசியமா என்று யோசித்தேன். இன்று காலை ஏற்பட்ட அனுபவம் எழுத வைத்து விட்டது. அப்படியென்ன அனுபவம்? அது ஸ்பெஷல். நாளை . . . .

 

Sunday, November 26, 2023

மாடுகள் மறியலா?

 


மேலே உள்ள புகைப்படத்தை நேற்று மாலை ஏழு மணி அளவில் எடுத்தேன். இடம் எங்கள் தெருதான். இது ஏதோ ஒரு நாள் நிகழ்வு அல்ல. எப்போதும் நடந்து கொண்டிருப்பதுதான். குறுகலான சில தெருக்களில் இரு சக்கர வாகனம் செல்வது கூட சிரமமாக இருக்கும். வேலூரின் பெருவாரியான பகுதிகளிலும் இதே நிலைதான். வேலூரில் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை தெரு மாடுகள் கடந்து விடும் போலிருக்கிறது!

சாலைகளில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை ஒருமுறை பார்த்தேன். மாட்டு முதலாளிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மாலை செய்தித்தாளின் சுவரொட்டியிலும் கூட பார்த்தேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. மாநகராட்சியின் எச்சரிக்கையையெல்லாம் மாட்டு முதலாளிகள் மதிப்பதே இல்லை.

சென்னையில் ஒரு கோர சம்பவம் நிகழ்ந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அது போன்றதொரு சம்பவத்திற்காக காத்திருக்கிறதா வேலூர் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம்?

Tuesday, March 7, 2023

புலிகளுக்கும் நாய்த் தொல்லை

 



மனிதர்களுக்கு மட்டுமல்ல புலிகளுக்குக் கூட நாய்த்தொல்லை ஏற்பட்டுள்ளது. இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி.

 

இரண்டு மாதம் நிரம்பிய நான்கு புலிக்குட்டிகளை அதன் தாய்ப்புலி விட்டுப் போய்விட்டது. ஆந்திர மாநில பெத்த கும்மாடபுரம் என்ற கிராமத்தில் இது நடந்துள்ளது.

 

கைவிடப்பட்ட குட்டிப்புலிகளை தெரு நாய்கள் தாக்கத் தொடங்கி விட்டன. பிறகு கிராம மக்கள்தான் நாய்களை துரத்தி விட்டு வனத்துறைக்கு தகவல் சொல்லி அக்குட்டிப்புலிகளுக்கு பாதுகாப்பாய் இருந்துள்ளன.

 

இப்போது அப்புலிகளை பராமரிக்க ஏதாவது மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பலாமா என்று வனத்துறை திட்டமிடுகிறதாம்.

 

நாய்க்கு செக்கும் தெரியாது, சிவ லிங்கமும் தெரியாது என்பார்கள். அது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.

 

குரைப்பதும் குதறுவதும் தெரு நாய்களின் குணாம்சம். அவற்றுக்கு நான்கு வயது சிறுவனும் ஒன்றுதான், நான்கு குட்டிப்புலிகளும் ஒன்றுதான்.

 

தெரு நாய்களை அடித்துக் கொல்லாதவரை அது கண்டவரையெல்லாம் கடித்துக் கொண்டுதான் இருக்கும்,

Wednesday, February 22, 2023

மேனகாவின் கொலைகார நாய்கள்

 


 

பிரதீப் என்ற நான்கு வயது சிறுவன் ஒருவனை நான்கு தெரு நாய்கள் துரத்தி முகத்திலும் நெஞ்சிலும் மற்ற பகுதிகளிலும் கடித்து குதறியதில் அவன் இறந்து போயுள்ளான்.

 

இது நடந்தது ஞாயிற்றுக்கிழமையன்று,  ஹைதராபாத் நகரில்.

 

ஒவ்வொரு நாய்க்கடி மரணத்துக்கும் பொறுப்பு மேனகா அம்மையார் மட்டுமே!

 

தெரு நாய்களை கொல்லக்கூடாது. அவற்றுக்கு கருத்தடை ஊசி போட்டு விட வேண்டும் என்று விலங்குகளின் மீது மட்டும் கருணையை பொழியும் மேனகா அம்மையார் போட்ட உத்தரவு.

 

இதைத் தொடர்ந்து நாய்க்கடி மருந்துகள் தயாரிக்கும் பொறுப்பை பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பறித்து தனியார் கம்பெனிகளுக்கு ஒப்படைத்தார் சின்ன டாக்டரய்யா என்பது வேறு கதை . . .

 

தெரு நாய்களின் தொல்லை என்பது இன்று இந்திய அளவிலான பிரச்சினை. எங்கள் சத்துவாச்சாரி பகுதியில் ஒரு மாதத்திற்கு மார்க்கெட் பகுதியில் ஒரு வெறி நாய் நாற்பது பேரை கடித்ததாக செய்தி வந்தது.

 

இங்கே ஹைதராபாத்தில் அச்சிறுவனை கடித்த நாய்கள் அனைத்தும் கருத்தடை செய்யப்பட்டவை. இந்த கருத்தடை ஊசியால் நாய்களின் இனப் பெருக்கம் குறையலாமே தவிர, அவற்றின் குணாம்சம் மாறாது. எத்தனையோ மனிதர்களின் வாலையே நிமிர்த்த முடியாத போது நாய்களை என்ன செய்ய முடியும்! மேலும் அப்படியெல்லாம் தெரு நாய்களின் எண்ணிக்கை குறைந்தது போலவெல்லாம் தெரியவில்லை. எங்கள் பகுதியில் அரை கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு போய் விட்டு எங்கள் வீட்டிற்கு திரும்ப வருகையில் வழியில்  உலாவும் தெரு நாய்களின் எண்ணிக்கையை எண்ணுவது என் வழக்கம். போன மாதம் 28 என்றிருந்தது போன வாரம் 36 ஆக உயர்ந்திருந்தது.

 

இப்பிரச்சினைக்கு  இரண்டு தீர்வுகள் உண்டு.

 

முந்தைய பாணியில் தெரு நாய்களைக் கொல்வது.

 

அது ஈவிரக்கமற்ற செயலென்றால்

 

பசுவிற்கு கோசாலைகள் வைத்து பராமரிப்பது போல, தெரு நாய்களுக்கும் அரசே பராமரிப்பு மையங்களை உருவாக்கி அங்கே அடைப்பது.

 

நாய்களின் உயிர்களும் முக்கியம்தான். தாங்கள் செய்வது என்னவென்று அறியாத நாய்களிடமிருந்து மனிதர்களை அதை விடவும் முக்கியமல்லவா!

 

பிகு: மேனகா அம்மையாரை மேனகா காந்தி என்பதா அல்லது அவர் பாஜககாரர் என்பதால் மோடி சொன்னபடி மேனகா நேரு என்று பெயரை மாற்றிக் கொண்டு விட்டாரா என்பது தெரியாத காரணத்தால் பொதுவாக மேனகா அம்மையார் என்று எழுதி விட்டேன்.

 

 

Wednesday, September 21, 2022

நாய்ப்பிரியர் ராதாராஜன் கவனத்திற்கு

 


நாய்ப்பிரியரும் சிறுபான்மையினர் மீது நாய் போல கடித்துக் குதறி தாக்குதல் நடத்துபவருமான ராதா ராஜன் அம்மையார் அவர்கள் அவர்களைப் போலவே வெறி நாயாக செயல்படும் சக சங்கி எச்.ராசா வின் ட்வீட்டை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 


ஒரு அல்சேஷன் நாயை கொலை செய்ய தூண்டிய உங்கள் கட்சி வெறி நாய் எச்.ராசா மீது உங்கள் நாய்கள் பாதுகாப்பு சங்கமான பீட்டா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

 குறைந்தபட்சம் நீங்கள் எச்.ராசாவைப் பார்த்து குரைக்கவாவது செய்வீர்களா?

Monday, August 23, 2021

இரண்டு தவறுகள் - இரண்டு பலிகள்

 


இன்றைய இரண்டு துயரங்கள்

 இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்த இரு துயரமான செய்திகள் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது.

 விழுப்புரத்தில் திமுக கூட்டத்திற்கு கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் பனிரெண்டு வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்து போனான்.

 அந்த குடும்பத்திற்கு இழப்பீடு  கொடுத்து சட்டரீதியான பிரச்சினை வராமல் சமாளித்திருக்கலாம். ஆனால் குழந்தைத் தொழிலாளரை பயன்படுத்தியது என்பது மிகப் பெரிய தவறு. ஆளும்கட்சியானாலும் தவறு தவறுதான். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

 பூந்தமல்லி பக்கத்தில் ஐந்து சிறுவர்களை தெரு நாய் கடித்துள்ளது. அதில் நால்வர்  தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஒரு சிறுவனை   மட்டும் அவனது  குடும்பத்தினர் நாட்டு வைத்தியரிடம் கூட்டிச் சென்றுள்ளனர்.

 இந்த பையன் மட்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டு ரேபிஸ் பீடிக்கப்பட்டு இறந்து போயிருக்கிறான். மற்றவர்கள் நன்றாகவே இருக்கிறார்கள். பெற்றோரின் மூட நம்பிக்கை பிள்ளையின் உயிரை பறித்து விட்டது.

தெரு நாய் பிரச்சினைக்கு எப்போதுதான் தீர்வு வருமோ? 

Friday, February 14, 2020

ட்ரம்பை வேலூருக்கு வரச்சொல்லுங்க . ..




ட்ரம்பின் அகமதாபாத் வருகையை ஒட்டி தடுப்புச்சுவர் மட்டும் கட்டவில்லையாம்.

அந்த நகரில் உள்ள தெரு நாய்கள், சாலையில் திரியும் கால்நடைகள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்தி உள்ளார்களாம்.

இந்த செய்தியைப் படித்ததும் தோன்றியதுதான் பதிவின் தலைப்பு.

டொனால்ட் ட்ரம்ப் வந்தாலாவது வேலூரின் தெரு நாய் பிரச்சினைக்கு தீர்வு வராதா என்ற ஆதங்கம்தான் . . .

Friday, October 11, 2019

வேலூர் நாய்ப் பண்ணை





நேற்று சங்கப் பணியாக புதுவை, கடலூர் சென்றிருந்தோம்.  இரவு வேலூர் திரும்ப இரவு பதினொரு மணிக்கு மேல் ஆகி விட்டது. கோட்டச் சங்கப் பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் செந்தில்வேலை அவர் வீட்டில் இறக்கி விடச் சென்றால் வழியெங்கும் ஒவ்வொரு தெருவிலும் குறைந்த பட்சம் நான்கு நாய்கள். ஒரு தெருவுக்குள் நுழைந்தால் கிட்டத்தட்ட பதினைந்து நாய்கள் சாலை மறியல் செய்வது போல சூழ்ந்து கொண்டது. காருக்குள் அமர்ந்த படி பாதுகாப்பாக எடுத்த படம்தான் மேலே உள்ளது.  

இரு சக்கர வாகனத்திலோ அல்லது நடந்து வந்தால் அவர்களின் கதி அதோகதிதான்.

இது அந்த பகுதி என்று மட்டுமல்ல, வேலூர் முழுதுமே இதே நிலைமைதான்.

இந்தியாவில் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் உயரவில்லை.. தெரு நாய்களின் எண்ணிக்கை மட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாதது போல, தெரு நாய்களின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த முயலவில்லை. தெரு நாய்கள் மூலம் மக்கட்தொகையை  குறைக்கும் ஹிட்டன் அஜெண்டா ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை.

Monday, June 24, 2019

நிஜ "டாக்" செக்யூரிட்டி சர்வீஸஸ்



காலையில் போட்ட பதிவு அழகு பற்றியது.

இப்போதைய பதிவு யதார்த்தம் குறித்தது.

காதல் மன்னன் படத்தில் கிரீஷ் கர்னார்ட் பிளாக் டாக் செக்யூரிட்டி சர்வீஸஸ் என்று நடத்துவதாக காண்பித்திருப்பார்கள்.

ஆனால் இங்கோ?

காட்பாடி ரயில் நிலையம் சென்று வீடு திரும்பினால் வீட்டு வாசலில் கதவை திறக்க முடியாமல் ஒரு நாய்க் கூட்டமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. 



ஹாரன் சத்தத்திற்கெல்லாம் அசைய மாட்டோம் என்று அலட்சியமாக இருந்தார்கள். பின்பு சத்தம் போட்டு விரட்டியதும் அவர்கள் செக்யூரிட்டி சர்வீஸ் வேலையை செய்ய பக்கத்து வீட்டு வாசலுக்கு போய் விட்டார்கள்.



இயற்கை, அழகு என்றோடு மட்டும் இருப்பதல்ல வாழ்க்கை, இது போன்ற இம்சைகளும் நிறைந்ததுதான். 

Friday, April 5, 2019

இந்த வருஷம் ரெண்டு ஜாஸ்தி




முதலில் போன வருடம் பிப்ரவரி மாதம் எழுதியதை படியுங்கள்.

நள்ளிரவில் நாற்பது ??????



பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு நேற்று முடிந்தது. எத்தனை மணிக்கு முடிவுகள் வெளியானாலும் அவர்களுக்கான பணியிடம் என்ன என்பதை முடிவு செய்து விடுவோம் என்று தொழிலுறவு மேலாளர் சொன்னதால் அலுவலகத்திலேயே சங்கப் பொறுப்பாளர்கள் காத்திருந்தோம். அது வழக்கமான நடைமுறைதான். பதவி உயர்வு முடிவுகள் வெளி வந்து பணியிடங்களை இறுதிப்படுத்தி அதற்கான ஆணை வெளி வந்தவுடன் வீட்டிற்கு கிளம்புகையில் இரண்டரை மணி ஆகி விட்டது. நள்ளிரவு இரண்டரை மணி. 

நம்ம ஏரியா நாய்த் தொல்லைக்காக ஆட்டோவிலேயே வீட்டிற்கு போகலாம் என்றால் கோட்ட அலுவலகக் கிளையின் செயலாளர் தோழர் கங்காதரன், "நான் உங்களை வீட்டில் விட்டு விட்டுப் போகிறேன். நாய்கள் என்ன செய்கிறது என்று பார்ப்போம்" என்று சொல்ல அவர் கொடுத்த தைரியத்தில் அவர் வண்டியின் பின் அமர்ந்து புறப்பட்டேன்.

அலுவலகத்திலிருந்து வீடு வருகிற வரை வழி எங்கும் நாய்கள் மயமே. அந்த காலத்தில் பத்து அடிக்கு ஒரு ஜெயலலிதா கட் அவுட்  இருக்கும். அந்த கட் அவுட்டிற்கு ஒரு போலீஸ் காவல் இருப்பார். அது போல பத்தடிக்கு ஒரு நாய். 

வீடு வரும் வரையில் எண்ணிக் கொண்டே இருந்தேன். சரியாக நாற்பது நாய்கள். "பாவம் களைத்துப் போய் வீடு திரும்புகிறார்கள், பிழைத்துப் போகட்டும்" என்று அமைதியாக இருந்து விட்டன.

இன்று காலை அலுவலகம் வந்ததும் தோழர் கங்காதரன் சொன்னார்.

"ஐம்பத்தி மூன்று"

நான் புரியாமல் பார்த்தேன்.

உங்கள் வீடு வரை நாற்பது. 
என் வீட்டிற்கு போகிற வரையில் ஐம்பத்தி மூன்று.

மேனகா காந்தி உள்ளிட்ட ப்ளூ க்ராஸ், பீட்டா ஆட்களை வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் நள்ளிரவில் நடக்க வைக்க வேண்டும். 




இந்த வருடமும் அதே கதைதான். பதவி உயர்வு முடிவுகள், பணியமர்த்தல் ஆணை எல்லாம் கடந்த வியாழனன்று நடந்தது. அலுவலகத்திலிருந்து புறப்பட்ட போது மணி சரியாக நள்ளிரவு 01.30. இந்த வருடமும் கோட்ட அலுவலகக் கிளைச் செயலாளர் தோழர் உ.கங்காதரனே என்னை அவரது இரு சக்கர வாகனத்தில் என்னை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுப் போனார்.

இந்த வருடம் வழியில் உள்ள நாய்களை எண்ணுவது என்று முடிவெடுத்தே புறப்பட்டோம்.

என்னுடைய வீடு வரும் வரை சாலையில் இருந்த நாய்களின் எண்ணிக்கை மொத்தம் முப்பத்தி ஒன்பது. கடந்த வருட எண்ணிக்கையான நாற்பதை விட ஒன்று கம்மி.

தோழர் கங்காதரன் வீடு போய் சேர்ந்ததும்  16 என்று  ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அவர் வீடு செல்லும் வழியில் இருந்த நாய்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் 13 ஐ விட மூன்று அதிகம்.

மொத்தத்தில் இந்த ஆண்டின் எண்ணிக்கை இரண்டு அதிகம்.

எதற்கு இந்த நாய்கள் பற்றிய புள்ளி விபரம் என்ற கேள்வி வருகிறதல்லவா?

“தனி ஒருவன்” படத்தில் ஒரு வசனம் வரும்.

“பேப்பர்ல முதல் பக்கம் ஒரு செய்தி வரும். கடைசி பக்கம் இன்னொரு செய்தி வரும். ஆராய்ஞ்சு பார்த்தால்தான் இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கறது தெரியும்”

“நகராட்சிகள் தெரு நாய்களைக் கொல்லக் கூடாது. மாறாக அவைகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து விட வேண்டும்”  என்ற உத்தரவை வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் இறுதியில் மேனகா காந்தி பிறப்பிக்கிறார்.

அடுத்து வந்த மன்மோகன்சிங் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்கிற  சின்ன டாக்டர் நாய்க்கடிக்கான மருந்து தயாரிக்கிற லைசன்ஸை அதுவரை அதனை தயாரித்துக் கொண்டிருந்த ஒரு பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து பறித்து ஒரு தனியார் நிறுவனத்துக்கு அளிக்கிறார்.

இந்த இரண்டு செய்திகளுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா?

Friday, December 21, 2018

எந்நேரமும் நாய்கள் . . .

மிக முக்கியமான முன் குறிப்பு:

இந்த பதிவு எந்த அனாமதேயத்தையும் குறித்து அல்ல. வேலூர் நகரத்தின் முக்கியமானதொரு பிரச்சினை குறித்தது. 



கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று  மூன்று வேளை வீட்டை விட்டு வெளியே வந்தேன். 

அந்த மூன்று முறையும் பார்த்த காட்சி கீழே புகைப்படமாக உள்ளது.




பிகு

சில கேடு கெட்ட அனாமதேயங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நாய்களோடு ஒப்பிட்டு நாய்களை இழிவுபடுத்தும்  மோசமானவன் அல்ல நான். 

Thursday, February 15, 2018

நள்ளிரவில் நாற்பது ??????


பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு நேற்று முடிந்தது. எத்தனை மணிக்கு முடிவுகள் வெளியானாலும் அவர்களுக்கான பணியிடம் என்ன என்பதை முடிவு செய்து விடுவோம் என்று தொழிலுறவு மேலாளர் சொன்னதால் அலுவலகத்திலேயே சங்கப் பொறுப்பாளர்கள் காத்திருந்தோம். அது வழக்கமான நடைமுறைதான். பதவி உயர்வு முடிவுகள் வெளி வந்து பணியிடங்களை இறுதிப்படுத்தி அதற்கான ஆணை வெளி வந்தவுடன் வீட்டிற்கு கிளம்புகையில் இரண்டரை மணி ஆகி விட்டது. நள்ளிரவு இரண்டரை மணி. 

நம்ம ஏரியா நாய்த் தொல்லைக்காக ஆட்டோவிலேயே வீட்டிற்கு போகலாம் என்றால் கோட்ட அலுவலகக் கிளையின் செயலாளர் தோழர் கங்காதரன், "நான் உங்களை வீட்டில் விட்டு விட்டுப் போகிறேன். நாய்கள் என்ன செய்கிறது என்று பார்ப்போம்" என்று சொல்ல அவர் கொடுத்த தைரியத்தில் அவர் வண்டியின் பின் அமர்ந்து புறப்பட்டேன்.

அலுவலகத்திலிருந்து வீடு வருகிற வரை வழி எங்கும் நாய்கள் மயமே. அந்த காலத்தில் பத்து அடிக்கு ஒரு ஜெயலலிதா கட் அவுட்  இருக்கும். அந்த கட் அவுட்டிற்கு ஒரு போலீஸ் காவல் இருப்பார். அது போல பத்தடிக்கு ஒரு நாய். 

வீடு வரும் வரையில் எண்ணிக் கொண்டே இருந்தேன். சரியாக நாற்பது நாய்கள். "பாவம் களைத்துப் போய் வீடு திரும்புகிறார்கள், பிழைத்துப் போகட்டும்" என்று அமைதியாக இருந்து விட்டன.

இன்று காலை அலுவலகம் வந்ததும் தோழர் கங்காதரன் சொன்னார்.

"ஐம்பத்தி மூன்று"

நான் புரியாமல் பார்த்தேன்.

உங்கள் வீடு வரை நாற்பது. 
என் வீட்டிற்கு போகிற வரையில் ஐம்பத்தி மூன்று.

மேனகா காந்தி உள்ளிட்ட ப்ளூ க்ராஸ், பீட்டா ஆட்களை வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் நள்ளிரவில் நடக்க வைக்க வேண்டும். 

பின் குறிப்பு : படம் பழையதுதான். 

Thursday, December 7, 2017

மேனகா அம்மையாரை மனதில் தொழுதபடி


நேற்று இரவு ஒன்பது மணிக்கு ஒரு முக்கியமான வேலையாக வெளியே போக வேண்டியிருந்தது. 

வீட்டை விட்டு வெளியே வந்தால் பேரணி போல ஒரு ஆறு நாய்கள் நடை போட்டுக் கொண்டிருந்தன. பிறகு வீட்டு வாசலிலேயே அமர்ந்து விட்டன. மேனகா அம்மையாரை மனதில் தொழுதபடி புறப்பட்டேன்.

திரும்பி வருகையில் வேலூர் மாவட்ட ஆட்சியரகம், எஸ்.பி அலுவலகம் இரண்டுக்கும் நடுவில் உள்ள சாலையில் ஒரு ஐந்து நாய்கள் சாலை மறியல் செய்வது போல வழியை மறித்து படுத்துக் கிடந்தன. ஹாரன் ஓசைக்கு எல்லாம் அவை அசையவே இல்லை. வாகனங்களில் செல்பவர்கள்தான் ஒரு ஓரமாக ஒதுங்கி போக வேண்டியிருந்தது.

வழியில் வேளாளர் தெரு என்று ஒரு தெரு. அங்கே மூன்று, நான்கு என்று கூட்டணி போட்ட நாய்க் கூட்டம் ஒரு மூன்று. சுயேட்சையாக திரிந்தவர்கள் ஒரு அறுவர் என்று தெருவில்  இருந்த மனிதர்களை விட நாய்களின் எண்ணிக்கை அதிகம்.

பதினோரு மணிக்கு தூங்குவதற்காக விளக்கை அணைத்தால் அப்போது ஒரு நாய் ஓலமிட ஆரம்பிக்க, அந்த இசைக்கச்சேரியில் இதரர்களும் இணைந்து கொள்ள நம் தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.

வேலூர் மாநகராட்சி எதுவும் செய்யப் போவதில்லை. முன்பு இருந்த கமிஷனர் லஞ்சம் வாங்குகையில் கையும் களவுமாக பிடிபட்டு கைதானதால் புதிதாக இன்னொருவர் வந்தார். இரண்டு மாதத்திற்குள்ளாக அவரும் லஞ்சம் வாங்கி பிடிபட்டு சிறைக்கு போய்விட்டார்.

என்றுதான் தீருமோ வேலூரின் நாய்த்தொல்லை? 

பின் குறிப்பு:  இணைய தள இணைப்பிற்கு என்ன அச்சமோ தெரியவில்லை! நான் கொஞ்சம் பயத்தோடு தூரத்தில் இருந்தபடி எடுத்த புகைப்படங்களை இந்த பதிவில் போட மறுக்கிறது!!!

Saturday, November 19, 2016

ஆ.வி நிறைவேற்றுமா இந்த ஆசையை?

ஏற்கனவே பல முறை இப்பிரச்சினை குறித்து எழுதியுள்ளேன். அதனையே ஆனந்த விகடன் இதழுக்கும் அனுப்பியுள்ளேன். அந்த மின்னஞ்சலை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

கடந்த வியாழன் இரவு பதினோரு மணிக்கு சென்னை சென்று திரும்புகையில் வீட்டு வாசலில் சூழ்ந்து கொண்டது  தெரு நாய்கள் கூட்டம். எனது காரை ஓட்டி வந்த ஓட்டுனர் இரண்டு சக்கர வாகனம் வைத்திருந்தாலும் அதிலே போக முடியாத சூழ்நிலை. காரிலே வீட்டுக்குப் போய் விட்டு காலையில் கொண்டு வந்து விடுங்கள் என்று சொல்லி அனுப்பினேன். 

தெரு நாய்களின் மக்கட்தொகை அதிகரித்துக் கொண்டே இருப்பது பற்றியும் அதனுடைய பிரச்சினை பற்றியும் மேனகா காந்திக்கு கொஞ்சமாவது புரிதல் வேண்டும் என்றால் அவர் தன்னந்தனியாக இரவு நேரத்தில் நடந்து பார்க்க வேண்டும்.

ஆனால் இந்த ஆசை நிறைவேறாது என்ற யதார்த்தத்தையும் புரிந்தே வைத்துள்ளேன்.
 

பெறுனர்,

ஆசிரியர்,
ஆனந்த விகடன்,
சென்னை.

அன்புடையீர்,

ஆசை பகுதியை தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கும் ஒரு ஆசை நீண்ட நாட்களாக உண்டு. அதனை உங்களது முயற்சிகள் வாயிலாக நிறைவேற்ற வாய்ப்புள்ளதா என்று எதிர்பார்ப்பிலேயே இக்கடிதத்தை அனுப்புகிறேன்.

தெரு நாய்கள் மீது மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு உள்ள பரிவும் அதன் காரணமாக அவர் எடுத்த நடவடிக்கைகளும் இன்று தெரு நாய்களின் அபரிமிதமான பெருக்கத்திற்கு உதவியுள்ளது.

தெரு நாய்கள் மீது அவருக்குள்ள பிடிப்பை தெரு நாய்கள் அறியுமா என்று எனக்கொரு சந்தேகம். அது போல தெரு நாய்கள் மக்களை எப்படி அச்சுறுத்துகின்றன என்பது திருமதி மேனகா காந்திக்கு தெரியுமா என்பதும் இன்னொரு சந்தேகம்.

ஆக இந்த ஐயங்களை போக்கும் வண்ணம், திருமதி மேனகா காந்தி அவர்களை வேலூரில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் இரவு பத்து மணிக்கு மேல் நடந்து செல்லுமாறு ஏற்பாடு செய்திட வேண்டும் என்பதே என் ஆசை.

இத்துடன் உள்ள இணைப்பில் இருக்கிற முதல் படம் கடந்த வியாழன் இரவு சென்னை சென்று இரவு பதினோரு மணிக்கு வீடு திரும்புகையில் என் வீட்டு வாசலில் எடுத்த படம். 



இரண்டாவது படம் வேலூர் சத்துவாச்சாரியின் பிரதானமான வணிகப் பகுதியான ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் இரவு எட்டு மணிக்கு தெரு நாய்கள் மாநாடு நடத்திக் கொண்டிருந்தபோது எடுத்த படம்.


தெரு நாய்கள் பற்றி திருமதி மேனகா காந்தி அவர்கள் ஒரு நேரடி அனுபவம் பெற வேண்டும் என்ற எனது ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

பசுக்கள் மீது பாசத்தை வெளிப்படுத்தி கோசாலைகளை ஏற்படுத்தும் இன்றைய மத்தியரசு (ராஜஸ்தானில் அதன் அவலமான நிலையின் அனுபவத்தை படித்த போதிலும்) ஏன் தெரு நாய் சாலா அல்லது அவர்களுக்கு பிரியமான மொழியில் பைரவசாலா கூட அமைக்கலாமே.

இதை நகைச்சுவையாக ஒதுக்கிட மாட்டீர்கள் என நம்புகிறேன்.

வாழ்த்துக்களுடன்,

தோழமையுள்ள
 எஸ்.ராமன்,

Sunday, October 30, 2016

பட்டாசுக்காவது பயப்படட்டும்




நேற்று முழுதும் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. இன்று மாலை ஆறரை மணிக்குப் புறப்பட்டு ஏழரை மணிக்கு திரும்பி வந்தேன்.

வழியில் கண்ட முக்கியமான ஒரு மாற்றம்.

நான் செல்லும் வழியில் சாதாரணமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அங்கங்கே கோஷ்டியாகவோ அல்லது தனித்தனியாகவோ பயமுறுத்திக் கொண்டிருக்கும்.

ஆனால் இன்றோ ஒரு நாய் கூட கண்ணில் படவில்லை. 

காரணம் பட்டாசு உருவாக்கிய பயம்.

யாருக்கும் அஞ்சாமல் அனைவரையும் மிரட்டுகிற தெரு நாய்கள் பட்டாசுகளுக்காவது பயப்படுகிறதே!

 

Tuesday, March 31, 2015

போன வருடம் போலீஸ், இந்த வருடம் நாய்கள்

 http://www.thehindu.com/multimedia/dynamic/01158/CB28--STRAY_DOGS_1158408f.jpg

வீடு திரும்ப பதினோரு மணிக்கு மேலாகும் என்றால் காலையில் அலுவலகம் செல்லும் போதே ஆட்டோவில் சென்று இரவும் ஆட்டோவில் திரும்புவேன். காரணம் தெருநாய்ப் பிரச்சினை. ஆனாலும் சில சமயம் நாம் எதிர்பாராமல் நேரமாகி விட்டால் வீடு வந்து சேரும் வரை கொஞ்சம் பதட்டமாகவே இருக்கும். வீட்டிற்கு வர மூன்று வழி உண்டு. அந்த மூன்று வழிகளிலும் பட்டா போட்டு கொடுத்தது குறைந்தது நான்கு  அல்லது ஐந்து நாய்க் கூட்டங்களாவது இருக்கும். 

நேற்று  பதிவு எழுத்தர் என்ற பணிக்கான பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு நடந்தது.  நேர்முகத் தேர்வு முடிந்த நாளே பதவி உயர்வு முடிவுகளை வெளியிடுவது என்ற நடைமுறை உள்ளதால் அதனை அறிந்து கொள்ள சங்கப் பொறுப்பாளர்களும் ஆர்வமுள்ள சில முன்னணித் தோழர்களும் அலுவலகத்தில் இருப்பது வழக்கம்.

கடந்த வருடம் இதே பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு 30.04.2014 அன்று முடிந்து வெளியானது. இரவு பதினோரு மணியாகி விட்டது. நாய்த் தொந்தரவில் சிக்கிக் கொள்ளப் போகிறோம் என்ற அச்சத்திலேயே வீடு  திரும்பினால் வழியில் போக்குவரத்துக் காவலர்கள் மடக்கி விட்டார்கள். 

அன்றைக்கு டாஸ்மாக் கனவான் ஒருவரின் நியாயமான கேள்வியால் இன்ஸ்பெக்டர் எரிச்சலான   சம்ப்வத்தைப் பற்றி கடந்த வருடமே பதிவு செய்திருந்தேன். அதனால் வீடு திரும்ப இன்னும் தாமதமானது. அன்று என்னமோ நாய்கள் சீக்கிரமாக தூங்கி விட்டது போல. யாரும் தொல்லை கொடுக்கவில்லை.

இரவு பத்து முப்பதிற்கு அலுவலகத்திலிருந்து புறப்பட்டேன். இந்த வருடமும் மாதக் கடைசி. ஆகவே மீண்டும் ஒரு முறை டிராபிக் போலீஸ்  மடக்கப் போகிறது என்று நினைத்தால் அவர்களின் தொல்லை இல்லை. 

மாறாக இரண்டு இடங்களில் நாய் துரத்தத் தொடங்கி விட்டது. ஒரே ஒரு நல்ல விஷயம். இரண்டு இடங்களிலும் அவர்களது தெரு முனை வந்ததும் நின்று விட்டது. எல்லை தாண்டாத பயங்கரவாதம்.

அவர்களின் தனிமையை நாம் தொந்தரவு செய்யும் போது அவர்கள் நமக்கு தொல்லையாக மாறி விடுகின்றனர்.

ஆகவே நாய்களின் நேரத்தைக் கணக்கில் கொண்டு நம்முடைய வேலைகளை நாம் திட்டமிட்டாக வேண்டும். 

எல்லா புகழும் மேனகா காந்திக்கே