Showing posts with label தனியார்மயம். Show all posts
Showing posts with label தனியார்மயம். Show all posts

Saturday, April 26, 2025

எல்.ஐ.சி யால் மட்டுமே முடியும்

 



பஹல்காம் தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் இருந்தால் அவர்களின் பட்டுவாடா கேட்புரிமங்கள் உடனடியாக செய்யப் படும் என்றும் அதற்காக சில சிறப்பு தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் எல்.ஐ.சி அறிவித்துள்ளது. அரசின் பட்டியலில் பெயர் இருந்தால் போது இறப்புச் சான்றிதழ் கூட  அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

24.04.2025 அன்றே நெல்லூர் கோட்டம் ஒரு கேட்புரிமத்தை பட்டுவாடா செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இது போல துயரில் தவிப்பவருக்கு வேகமாக எந்த ஒரு தனியார் நிறுவனமும் சேவை செய்யாது என்றும் பொதுத்துறை எல்.ஐ.சி யால் மட்டுமே சாத்தியம் என்று எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.

இது புதிதல்ல.

சுனாமி தாக்கிய போது கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் 24 மணி நேர சேவை செய்தோம்.

காட்பாடி தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள் இறந்த போது வேலூர் மையத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் 24 மணி நேர உதவி மையம் செயல்பட்டது.

இது எல்.ஐ.சி யின் பாரம்பரியம்.

சுனாமி சமயத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அவ்வளவாக இந்தியாவில் கால் பதிக்கவில்லை (இப்போதும் கூட அவர்களால் எல்.ஐ.சி யின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை). ஆனால் சுனாமி தாக்கிய வேறு சில நாடுகளில் அங்கே இருந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , "சுனாமி என்பது கடவுளின் செயல். அதனால் பாலிசி பணத்தை தர முடியாது" என்று மறுத்து விட்டன. பாலிசிதாரர்களின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

மும்பை தாக்குதலின் போது வீர மரணம் அடைந்திட்ட காவல்துறை உயரதிகாரி ஹேமந்த் கார்கரேவின் இறப்புக் கேட்புரிமத்தை எல்.ஐ.சி மறுநாளே வழங்கியது. அவர் இன்னொரு தனியார் நிறுவனத்திலும் பாலிசி எடுத்திருந்தார். உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஹேமந்த் கார்கரே மீட்பு நடவடிக்கைக்குச் சென்றார் என்று சொல்லி பணம் கொடுக்க மறுத்து விட்டது.

இப்படிப்பட்ட தனியார் கம்பெனிகள் கொழிக்க வேண்டும் என்பதற்காக மோடி அரசு எல்.ஐ.சி யின் செயல்பாடுகளை, வணிகத்தை சீர்குலைக்க சில சதிகளை செய்து கொண்டிருக்கிறது.

அதை எந்நாளும் நாங்கள் அனுமதியோம்.


Tuesday, March 25, 2025

தனியார் பள்ளிகளோடு நிறுத்தாதே ஆட்டுக்காரா

 


திருச்சியில் ஆட்டுக்காரன் பேசியது கீழே உள்ளது.

எதுக்கு ஆட்டோக்காரா, தனியார் பள்ளிகளுக்கு அனும்தி தர மாட்டோம் என்பதோடு நிறுத்திக் கொண்டாய்?

ஏற்கனவே உள்ள தனியார் பள்ளிகளை அரசுடமையாக்குவோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியார் கல்லூரிகள் (பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் உட்பட)  இருக்காது.

தனியார் பேருந்துகள் இருக்காது,

தனியார் மருத்துவமனைகள் இருக்காது.

இப்படியெல்லாமும் அளந்து விட வேண்டியதுதானே!

எப்படியும் ஆட்சிக்கு வரப் போவதில்லை, அதனால் வாக்குறுதி கொடுக்க கஞ்சத்தனம் ஏன்?

ஆட்சிக்கு வந்தாலும் தனியாரை பாதிக்கும் எந்த முடிவையும் பாஜக எடுக்காது. ஏனென்றால் பாஜக தனியார்களின் தரகர்கள். 

Wednesday, February 19, 2025

ஆளில்லா கடையிலா மோடி டீ விற்கிறார்?

 


 

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 % ஆக உயர்த்துவோம் என்று நிர்மலா அம்மையார் அறிவித்தது தொடர்பாக சில நாட்கள் முன்பு எழுதியிருந்தேன்.

 இதனை 74 % ஆக உயர்த்திய போது எழுதிய பதிவை கீழே மீண்டும் பகிர்ந்துள்ளேன்.

 அதனை முழுமையாக படியுங்கள். பழைய பதிவு நீல நிறத்தில் உள்ளது.  இப்போது பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை ப்ரௌன் நிறத்தில் கொடுத்துள்ளேன்.

மோடிஜி ஆளில்லா கடையில் யாருக்காக ?

 


இன்சூரன்ஸ் துறையில் அன்னிய  நேரடி முதலீட்டு வரம்பை 49 % லிருந்து 74 % ஆக உயர்த்தப் போவதாக மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அது அவசியமா என்று பார்ப்பதற்கு முன்பாக இரண்டு சம்பவங்களை நினைவு கூர்வது அவசியம்.

 சம்பவம் 1 : இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணைய மசோதா (அப்போது வெறும் கட்டுப்பாடுதான் வளர்ச்சி இல்லை)  26.08.1997 அன்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார். இன்சூரன்ஸ்துறையில்  தனியார் துறையை அனுமதிக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு திருத்தம் கொண்டு வர அத்திருத்தம் தோற்கடிக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் துறையில் தனியார் கம்பெனிகள் இருக்கலாமே தவிர அன்னிய மூலதனமோ, அன்னிய கம்பெனிகளோ அனுமதிக்கப்படக்க் கூடாது என்ற திருத்தத்தை பாஜக உறுப்பினர் ஒருவர் கொண்டு வருகிறார். இடதுசாரிகள் அந்த திருத்தத்தை ஆதரிப்பதாகச் சொல்கின்றனர். அப்படியானால் அந்த திருத்தம் வெற்றி பெறும் என்பதை உணர்ந்த அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் ஐ.ஆர்.ஏ மசோதாவை திரும்பப் பெறுகிறார். இன்சூரன்ஸ் துறையில் அன்னியக் கம்பெனிகளை வர விடாமல் தடுத்தவர்கள் நாங்கள்தான் என்று பாஜகவினர் கொஞ்ச நாள் பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள்.

 சம்பவம் 2 : வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 26 % அன்னிய நேரடி முதலீட்டோடு தனியார் நிறுவனங்களை இன்சூரன்ஸ் துறையில் அனுமதிக்கும்  இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காணைய மசோதாவை 28.10.1999 அன்று பாஜக அரசு மக்களவையில் அறிமுகம் செய்கிறது. அன்றைய தினம் இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய மக்களிடம் நாம் பெற்ற 1,50,54,577 கையெழுத்துக்கள் கொண்ட படிவங்கள் அன்றைய  மக்களவைத் தலைவர் திரு ஜி.எம்.சி.பாலயோகி அவர்களிடம் அளிக்கப்படுகிறது. அதே நாள் புதுடெல்லியில் பாஜகவின் குரு பீடமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவான ஸ்வதேசி ஜக்ரான் மஞ்ச், அதன் தலைவரான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தலைமையில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஒரு தர்ணா போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.

 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவு அன்னிய மூலதனத்தை அனுமதிக்கும் மசோதாவை அறிமுகம் செய்கிறது. இன்னொரு பிரிவோ அதற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. பாரதியார் சொன்ன “நடிப்புச் சுதேசிகள்” என்ற வாசகம் இவர்களைத் தவிர வேறு யாருக்கு பொருந்தும்?

 அன்னிய மூலதனமே கூடாது என்று திருத்தம் கொண்டு வந்தவர்கள் அவர்களின் ஆட்சியில் முதலில் 26 % அன்னிய மூலதனத்தை அனுமதித்தார்கள். அதையும் அவர்களே எதிர்ப்பதாக வேறு ஒரு நாடகத்தையும் நடத்தினார்கள்.

 மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் காலத்தில் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி 49 % வரை அன்னிய நேரடி முதலீட்டிற்கு ரத்தினக் கம்பளம் விரித்தனர்.

 இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனம் வந்தால் கட்டமைப்புத் தேவைகளுக்கான நிதி கொட்டிக் கொண்டே இருக்கும் என்று சொன்னார்கள், சொல்கிறார்கள், சொல்வார்கள். கட்டமைப்புத் தேவைகளுக்கான முதலீடுகள் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரும் என்பது அன்றைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் சொன்ன உறுதிமொழி. அப்படிப் பார்த்தால் இந்த இருபது வருடங்களில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் முப்பது லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும். ஆனால் அதிலே நூற்றில் ஒரு பங்காவது வந்ததா என்றால் அது சந்தேகமே!

 அன்னிய மூலதன வரம்பை 49 % லிருந்து 75 % ஆக உயர்த்த துடிக்கிறார்களே, இப்போது எத்தனை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் 49 % அன்னிய நேரடி மூலதனம் உள்ளது?

 ஐ.ஆர்.டி.ஏ வின் 2018-2019 ஆண்டறிக்கை உண்மையைச் சொல்கிறது. மொத்தமுள்ள 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களில் அன்னிய மூலதனமே கிடையாது.  ஏகான், அவியா லைப், பார்தி ஏஎக்ஃஎஸ், ஆதித்ய பிர்லா சன்லைஃப், டிஹெச்எப்எல் பரமெரிக்கா, எடெல்வாய்சின் டோக்யோ, ரிலையன்ஸ் நிப்பான், டாடா ஏ.ஐ.ஏ ஆகிய  எட்டு நிறுவனங்களில் மட்டுமே 49 % அன்னிய முதலீடு உள்ளது. ஏழு நிறுவனங்களில் அன்னிய மூலதனம் 26 % லிருந்து 49 % க்குள் உள்ளது. ஐந்து நிறுவனங்களில் 26 % க்கும் குறைவாகத்தான் உள்ளது. அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த மூலதனமே 27,515.75 கோடி ரூபாய்தான். அதில் அன்னிய மூலதனம் 9,764,20 கோடி ரூபாய்தான். அது வெறும் 35.49 % மட்டுமே.

 பொது இன்சூரன்ஸ் துறையில் நிலைமை இன்னும் மோசம். மொத்தமுள்ள 21 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களில் அன்னிய மூலதனமே கிடையாது. ஐந்து நிறுவனங்களில் மட்டுமே 49 % அன்னிய மூலதனம் உள்ளது. 21 கம்பெனிகளின் மொத்த மூலதனமான 9570.88 கோடியில் அன்னிய மூலதனம் வெறும் 2,895.99 கோடி ரூபாய் மட்டுமே. 29.79 % தான்.

 அன்னிய மூலதன வரம்பை 49 % ஆக உயர்த்தும் சட்டத் திருத்தம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வந்தாலும் அது 15 ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் 16 பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் தேவைப்படவே இல்லை. இந்த தனியார் நிறுவனங்களுக்கு கூடுதல் அன்னிய மூலதனம் தேவைப்படவே இல்லை என்பதுதானே யதார்த்தம்! அன்னிய மூலதன அளவு குறைவாக இருந்தும் அவர்கள் வணிகம் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்!

 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் 49 % வரம்பையே பயன்படுத்தாத நிலையில் 74 % ஆக உயர்த்த வேண்டிய அவசியம் ஏன்? ஆளில்லாத கடையில் யாருக்காக டீ ஆத்துகிறது என்ற கேள்வி மனதுக்குள் எழும்.

 நரியின் பார்வை இரையின் மீதுதான் என்பதை மறந்து விடக் கூடாது. பல இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு இந்தியக் கம்பெனிகளின் பங்குதாரர்களாக இருப்பது என்பது வேப்பங்காயாக கசக்கக் கூடியது. 100 % மூலதனத்தோடுதான் செயல்பட வேண்டும் என்ற கொள்கையில் மாறாத உறுதியோடு இந்தியாவில் கடை விரிக்காத அன்னியக் கம்பெனிகள் இருக்கிறார்கள்.

 இங்கிலாந்தின் லாயிட்ஸ் நிறுவனம் 100 % முதலீட்டில் மட்டுமே வருவது என்று பிடிவாதமாக உள்ளது. அதே போல உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான வாரண் பஃபெட்டின் நிறுவனமாக ஜென் ரீ நிறுவனத்தையும் சொல்லலாம். இவை இன்று இந்தியாவில் மறு இன்சூரன்ஸ் நிறுவனமாக செயல்படுகிறதே தவிர நேரடி இன்சூரன்ஸ் வணிகத்திற்கு வரவில்லை.

 நேரடியாக 100 % அன்னிய மூலதனத்தை அனுமதிப்பதற்கான முதல் கட்டமாகவே இப்போது அன்னிய மூலதன வரம்பை 74 % ஆக உயர்த்தியுள்ளது. அரசின் இறுதி இலக்கு என்பது 100 % தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

 அது மட்டுமல்ல, பென்ஷன் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அரசுக்கு உள்ளது. இன்சூரன்ஸ் துறையில் உயர்த்தினால் அங்கேயும் உயர்த்துவது மிகவும் எளிதாகி விடும்.

 பென்ஷன் நிதியை நிர்வகிப்பவர்களாக இன்று ஏழு நிறுவங்கள் உள்ளன. அவர்கள் நிர்வகிக்கும் தொகை 2018 ல் 2,34,579 கோடி ரூபாயாக இருந்தது 2019 ல் 3,18,214 கோடி ரூபாயாக 36 % அதிகரித்துள்ளது. இந்த தொகை அன்னியக் கம்பெனிகளின் கண்களை உறுத்துகிறது.

 அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதன் பொருள் என்பது ஒன்றுதான். இந்திய மக்களின் உள்நாட்டு சேமிப்பில் ஒரு பகுதிதான் இன்சூரன்ஸ் பிரிமியமாக மாறுகிறது. அப்படிப்பட்ட உள்நாட்டு சேமிப்பின் மீதான கட்டுப்பாடு அன்னிய மூலதனத்தின் கைகளுக்குச் செல்லும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும். அதனால்தான் இதை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. தேசத்தை நிஜமாக நேசிக்கிற ஒவ்வொருவரும் கண்டிப்பாக எதிர்த்திட வேண்டும்.

 முடிப்பதற்கு முன்பாக

 உலகப் பொருளாதார நெருக்கடி வந்த போது அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய வங்கிகள் திவாலாகின. அந்நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான அமெரிக்கன் இன்சூரன்ஸ் க்ரூப் (ஏ.ஐ.ஜி) திவாலின் விளிம்புக்குச் சென்றது. அரசு ஏராளமான நிதி கொடுத்து அந்த நிறுவனத்தை மீட்டது. வணிகத்தில் அரசுக்கு வேலை இல்லை (Government has no business in business) என்று எப்போதும் உபதேசித்துக் கொண்டிருக்கிற யாரும் ஒரு வணிக நிறுவனத்தை பாதுகாக்க ஏன் வரி செலுத்துவோர் பணத்தை விரயம் செய்கிறது என்று கேட்கவே இல்லை.

 ஏ.ஐ.ஜி யும் டாடாவும் இணைந்து டாடா ஏ.ஐ.ஜி என்ற பெயரில் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். ஏ.ஐ.ஜி தடம் புரண்ட போது அன்றைய ஐ.ஆர்.டி.ஏ தலைவர் விவேக் நாராயணன் “டாடா ஏ.ஐ.ஜி நிறுவனத்தில் 24 % மட்டுமே ஏ.ஐ.ஜி யிடம் உள்ளது. மீதமுள்ள 76 % டாடாவிடமே உள்ளதால் பாலிசிதாரர் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று அறிக்கை அளித்தார். ரத்தன் டாடா முழுப் பக்க விளம்பரங்களை பல நாளிதழ்களில் பல நாட்கள் அளித்தார்.

 24 %  மட்டுமே  அன்னிய மூலதனம் இருந்ததால் கவலைப்படாதீர்கள் என்று சொல்ல முடிந்தது. அன்னிய மூலதனம் 74 % ஆக உயர்ந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பார்த்தால் அச்சம் வரவில்லையா?

 தன்னுடைய சேமிப்புக்கு என்ன ஆகும் என்ற அச்சத்தோடு ஒரு பாலிசிதாரர் வாழ்ந்திட வேண்டுமா?

 அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

 நான்கு வருடத்திற்கு முன்பு சொன்னதுதான். நிலைமையில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை. ஒரே ஒரு நிறுவனத்தில் மட்டும்தான் 74 % அன்னிய மூலதனம் உள்ளது. ஒட்டு மொத்தமாக 32 % அன்னிய முதலீடுதான் உள்ளது. அப்படியென்றால் ஆளில்லா கடையில் மோடி டீ விற்கிறாரா?

 இல்லை.

 பழைய பதிவில் சொன்னதை மறுபடியும் படியுங்கள்,

 “வந்தால் தனியாத்தான் வருவோம்” சில வெளிநாட்டு நிறுவனங்கள்  காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்காக 100 % அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கான முதல் கட்டமாகத்தான் 74 % ஆக உயர்த்தியுள்ளார்கள் என்று எழுதியிருந்தேன்.

 இப்போது அதுதான் நடந்துள்ளது.

 100 % அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுவதால் சில நிறுவனங்கள் இப்போது வரும்.

 இதன் மூலம் இப்போதுள்ள தனியார் நிறுவனங்களிலும் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

 எப்படி?

 விரைவில்  விரிவாக பார்ப்போம்.

பிகு : பழைய பதிவில் விவேக்கின் படத்தை பயன்படுத்தியதால் இப்போதைய பதிவில் "தெறி" திரைப்படத்தின் கடைசிக் காட்சியை பயன்படுத்தியுள்ளேன் . . .

Thursday, August 29, 2024

3662 கோடி ரூபாயும் நிர்மலா அம்மையாரும்

 


1956 ல் 5 கோடி ரூபாயும் பின்பு 2011 ல் 95 கோடி ரூபாயும் எல்.ஐ.சி யின் மூலதனமாக  ஒன்றிய அரசு முதலீடு செய்த தொகை. 

அந்த மூலதனத்திற்கு 2023-2024 நிதியாண்டிற்கான லாபத்தில் அரசின் பங்குத் தொகையாக ரூபாய் 3662.17 கோடி ரூபாயை எல்.ஐ.சி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா அம்மையாரிடம் அளித்துள்ளார்கள்.

இவ்வளவு ரூபாயை வழங்கும் எல்.ஐ.சி க்கு அந்த அம்மையார் விசுவாசமாக இருப்பார்களா? எல்.ஐ.சி க்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரமாவது கொடுக்காமல் இருப்பாரா? 

அப்படிப்பட்ட நேர்மையெல்லாம் அந்த அம்மையாருக்கு கிடையாது என்பது சோகமான யதார்த்தம். 

Thursday, February 16, 2023

ஏடிஎம் கொள்ளை - தனியார்மயத்தின் விளைவு

 



திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை தொடர்பான நேற்றைய பதிவின் தொடர்ச்சி

 

ஏடிஎம் ம்மை உடைத்தவர்கள் யார் என்பது அங்கிருந்த சி.சி,டிவி காமராக்களில் பதிவாகவில்லை.,

 

ஏடிஎம்மை உடைத்தால் காவல் நிலையத்திலும் வங்கியிலும் ஒலிக்க வேண்டிய அலாரம் ஒலிக்கவில்லை.

 

இந்த ஏ.டி.எம் களில் காவலர்களும் இல்லை.

 

என்ன காரணம்?

 

பணம் வைப்பது முதற்கொண்டான ஏ.டி.எம் தொடர்பான பராமரிப்பு சேவைகள் அனைத்தும் இப்போது வங்கிகளால் அரசு வங்கிகளும் சரி, தனியார் வங்கிகளும் சரி அவைகளால் நேரடியாக செய்யப்படுவதில்லை. அவை ,அனை,த்தும் சில ,தனியார் ஏஜென்ஸிகளுக்கு அவுட்சோர்ஸிங் முறையில் ஒப்பந்தத்திற்கு கொடுக்கப்ப்பட்டு விட்டன.

 

காமெரா இயங்குகிறதா, அலாரம் இயங்குகிறதா என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை.

 

கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம் களில் மட்டுமா?

 

பெரும்பாலான ஏ.டி.எம் களில் இதுதான் நிலை என்று சொல்கிறது போலீஸ்.

 

அதே போல இப்போதெல்லாம் ஏ.டி.எம் களில் செக்யூரிட்டிகளை பார்ப்பதும் அரிதாகி வருகிறது. எதற்கு சம்பளம் கொடுப்பது என்று நிறுத்தி விட்டார்கள் போல..

 

தனியார்மயம் என்றால் அலட்சியம் என்பதற்கு பல உதாரணங்கள் ஏற்கனவே இருக்கிறது. ஏ.டி.எம் பராமரிப்பு புதிய உதாரணம்.

 

இந்த சமயத்தில் இன்னொரு திரைப்படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. விக்ரம் பிரபு நடித்த ஒரு படத்தில் .ஏ.டி.எம் பராமரிப்பு சேவை நிறுவன ஊழியர்கள் எப்படி போலி கார்டுகளை உருவாக்கி வாடிக்கையாளர்களின் பணத்தை சூறையாடுவார்கள் என்பதைக் காண்பித்திருப்பார்கள்.

 

வங்கிகள் பராமரிப்பு சேவைகளை தாங்களே செய்யாவிட்டால் இந்த மோசடிகள் கூட எதிர்காலத்தில் அதிகமாகி விடும்.

Thursday, November 10, 2022

போர்ஜரி செய்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி.

 



இந்த செய்தியை ஒரு தோழர் ஒரு குழுவில் பகிர்ந்திருந்தார்.

 


தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் யோக்கியதை என்ன என்பதை இச்செய்தி விளக்குகிறது.

 நவம்பர் 2015 ல் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அனில் தேசாய் என்ற 18 வயது வாலிபன் பாரதி AXA இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பத்து லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்து கொள்கிறான். ஆக 2016 ஸ்ல் அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக மருத்துவரை அணுகுகிறான். சிகிச்சை பலனில்லாமல் 01, செப்டம்பர் அன்று இறந்து போகிறான்.

 அவனது வாரிசுதாரரான அவனது அம்மா, காப்பீட்டுத் தொகையை கோருகிறார். பணம் தர பாரதி AXA இன்சூரன்ஸ் மறுக்கிறது. நுகர்வோர் நீதிமன்றம் செல்கிறார். 28 ஆகஸ்ட் 2016 அன்றுதான் முதல் முறையாக அவர் மருத்துவரை சந்திக்கிறார். நான்கு நாட்களில் இறந்து போய் விட்டார் என்ற மருத்துவரின் சான்றிதழை அவர் சமர்ப்பிக்க இன்சூரன்ஸ் கம்பெனியோ இன்னொரு சான்றிதழை காட்டுகிறது.

 அதே மருத்துவரின் லெட்டர் பேடில் “அனில் தேசாய்க்கு இரண்டு மூன்று வருடங்களாக சிறுநீரகக் கோளாறு இருந்ததாகவும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும் எழுதி இருந்தது. இந்த உண்மையை பாலிசி எடுக்கையில் மறைத்து விட்டதால் பணம் தர முடியாது என்று சாதித்தது.

 கடைசியில் நுகர்வோர் நீதிமன்றம் மருத்துவரை விசாரணைக்கு அழைக்க குட்டு உடைந்தது. கம்பெனி சமர்ப்பித்த சான்றிதழைப் பார்த்த மருத்துவர் அது தனது கையெழுத்தில் எழுதப்பட்டது அல்ல என்றும் ஏராளமான பிழைகள் இருப்பதாகவும் தனது லெட்டர்பேட்டை தன் மருத்துவமனையில் இருந்து திருடியிருக்கலாம் என்று சொல்லி விட்டார்.

 பாலிசிதாரருக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற பாரதி AXA இன்சூரன்ஸ்  போர்ஜரி  செய்துள்ளதை கண்டித்த நுகர்வோர் நீதிமன்றம் பாலிசி உரிமத்தொகையோடு, 8 % வட்டியும், ஒரு லட்ச ரூபாய் இழப்பீடும் வழக்குச் செலவுகளுக்காக பத்தாயிரம் ரூபாயும் கொடுக்கச் சொல்லி தீர்ப்பளித்தது.

 1956 க்கு முன்பு இருந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இப்படித்தான் பாலிசிதாரர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து வந்தார்கள்.

 அதே மோசடிப் பேர்வழிகள் மோசடி வேலைகளை மீண்டும் துவக்கி விட்டார்கள். இன்சூரன்ஸ் வளர்ச்சி ஒழுங்காற்று ஆணையம் இதையெல்லாம் கண்டு கொள்ளாது. அவர்கள் தனியாருக்கு வளர்ச்சி ஆணையம். பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு கட்டுப்பாட்டு (ஒழுங்காற்று) ஆணையம். ஆயிரம் தனியார் கம்பெனிகள் வந்தாலும் அவை எல்.ஐ.சி யின் நிழலின் அருகில் கூட நெருங்க முடியாது.

 ஆனாலும் இது போன்ற மோசடி நிறுவனங்களை முன்னேற்றத்தான் “பொதுத்துறை நிறுவனங்கள் சாவதற்காகவே பிறந்தன (BORN TO DIE) என்று ஒருவர் சொன்னார்.

 அவர் இந்தியாவுக்கு பிரதம மந்திரியாம்.

Monday, October 31, 2022

ஓட்டை உடைசல் குஜராத் மாடல் . . .

 


குஜராத்தில் உடைந்து நொருங்கியது வெறும் தொங்கு பாலம் மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டுவதாக கதை சொல்லப்பட்ட குஜராத் வளர்ச்சி மாடலும்தான்.

புனரமைப்புப் பணிகளை தனியாரே செய்தாராம்,

பணி முறையாக நடந்ததா என்று சோதிக்கும் முன்னரே திறந்து விட்டார்களாம்.

Too much privatization என்று முன்னொரு காலத்தில் ரயில்வே விபத்தொன்றை பார்த்த பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேய்ர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

இங்கே தனியார் பாஜக கூட்டுக் களவாணித்தனம் 70 உயிர்களை பலி வாங்கி விட்டது.

தனியாருக்கு தீபாவளிக்கு முன்பு காசு பார்க்கும் வெறி.

பாஜகவிற்கு பாலத்தை திறந்து வைத்து வளர்ச்சி முகம் காட்டி ஓட்டுக்களை பறிக்கும் வெறி.

இந்த வெறிக்கு இரை 70 உயிர்கள்.

இனி எவனாவது குஜராத் மாடல் என்றால் ஆம் ஆத்மி தேர்தல் சின்னத்தால் அடியுங்கள். (அரவிந்த் கேஜ்ரிவாலும் அந்த அடிக்கு தகுதியானவர் என்பது இன்னொரு விஷயம்) 

Monday, June 20, 2022

அதெல்லாம் முடியாதுடா தம்பி . . .

 


அக்னிபாத் எனும் அயோக்கியத்திட்டத்தை சரியாக புரிந்து கொண்ட இளைஞர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய ஒவ்வொரு ஒன்றிய மந்தியும் சாரி மந்திரியும் தங்கள் துறையில் வேலை வாய்ப்பில்  10 %  ஒதுக்கீடு அக்னி வீரர்களுக்கு தருவோம் என்று அறிவித்து வருகின்றனர். 

இது போன்ற இட ஒதுக்கீடெல்லாம் கொல்லைப்புற வழியில் வருவதாகும். இதையெல்லாம் அனுமதிக்க முடியாது என்று இரண்டு மாதம் முன்புதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆக இந்த 10 % இட ஒதுக்கீடு என்பதே பெரிய டுபாக்கூர் வேலைதான். மோடியின் மந்திரிகள் மட்டும் மோடியைப் போலவே ஃப்ராடுகள்தானே என்ற உங்கள் மனதின் குரல் கேட்டு விட்டது.

மற்ற மந்திரிங்க அறிவிப்பை கேட்டதும் விமானத்துறை மந்திரியான ஓடுகாலித் தம்பி ஜோதிர் ஆதித்தியா சிந்தியாவும் உணர்ச்சிவசப்பட்டு விமானத்துறையிலும் 10 % இட ஒதுக்கீட்டுன்னு சொல்லிட்டான்.

தம்பி சிந்தியா, ஏர் இந்தியாவை டாடா கிட்ட வித்துட்ட, ஏர்போர்ட்டை எல்லாம் அதானிகிட்ட கொடுத்திட்ட, இவங்கெல்லாம் அக்னிவீரனுக்கு வேலை கொடுப்பாங்களா? (கிழிப்பாங்க) நீ மந்திரியாக இருக்கறதே தண்டம்தான்.  இதுல விமானத்துறையில் 10 % இட ஒதுக்கீடுன்னு காமெடி செய்யறே!

பிகு: அக்னிபாத் என்பது சமூக நீதிக்கு எதிரான மிகப் பெரிய மனு தர்ம சதி. விரிவாக விரைவில் எழுதுவேன்


Tuesday, May 3, 2022

இன்று நாங்கள் ஏன்?

 


எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கு எதிராக நாங்கள் இன்று இரண்டு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்தம் நடத்தவுள்ளோம். அது ஏன் என்று விளக்கி எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையின் தமிழாக்கம் மோடி அரசின் வஞ்சகத்தையும் முறைகேடுகளையும் தெளிவாக விளக்கும். 

                  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்,

                                               ஹைதராபாத்

ல்.ஐ.சி பங்கு விற்பனை – முதலீட்டாளர் லாபம் பெற

குறை மதிப்பீடு.

               04 மே அன்று  இரண்டு மணி நேர வேலை நிறுத்தம்

மூலம் எதிர்த்திடுவோம்.

எல்.ஐ.சி பங்கு விற்பனை 4 மே 2022 அன்று தொடங்குகிறது. பங்கு விற்பனை தொடர்பான விபரங்கள் எல்.ஐ.சி இயக்குனர் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கு விற்பனையும் பங்கின் விலையும்  இயக்குனர் குழுவாலேயே நிர்ணயிக்கப்படுவது போன்றதொரு தோற்றத்தை உருவாக்க அரசு முயல்கிறது. இந்த மகத்தான நிறுவனத்தோடு இணைந்த யாரும் இதை நம்ப மாட்டார்கள். இந்நடவடிக்கைகள் அனைத்தும் நிதியமைச்சகத்தால் எடுக்கப்பட்டவைதான். இயக்குனர் குழுவால் முடிவெடுக்கப்பட்டது போன்று மேல் பூச்சு தரப்படுகிறது. குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்துவது என்ற தங்களின் பரிந்துரையை இரண்டு வருடங்களாக அமலாக்க முடியாத எல்.ஐ.சி இயக்குனர் குழுவால் நிறுவனத்தின் கட்டமைப்பின் அடிப்படைத் தன்மையை மாற்றும் முடிவையெல்லாம் எடுக்க முடியாது.


 எல்.ஐ.சி பங்கின் விலையை நிர்ணயிப்பதில் மிகப் பெரிய முறைகேடு நிகழ்ந்துள்ளதாக முன்னணி ஊடகவியலாளர் திரு வி.ஸ்ரீதர், நியூஸ்க்ளிக் இதழில் எழுதியுள்ளார். அவர் எழுதியதை மறுக்க இயலாது. எல்.ஐ.சி யின் உள்ளார்ந்த மதிப்பு 5.39 லட்சம் கோடி ரூபாய் என அமெரிக்க நிறுவனம் மிலிமென் நிர்ணயித்துள்ளது. பங்குச்சந்தையில் இணைக்கப்பட்ட இதர தனியார் நிறுவனங்களின் மதிப்பையும் இதே நிறுவனம்தான் நிர்ணயித்தது. அங்கே எல்லாம் பங்கின் விலை உள்ளார்ந்த மதிப்பின் 2.50 லிருந்து 3.5 மடங்கு வரை நிர்ணயிக்கப்பட்டது. உள்ளார்ந்த மதிப்பைப் போல மூன்று மடங்கு அளவில் எல்.ஐ.சி பங்கும் நிர்ணயிக்கப்படும் என்று துவக்கத்தில் சொல்லப்பட்டது. அதாவது எல்.ஐ.சி யின் மதிப்பு 13.5 லட்சம் கோடியிலிருந்து 16.2 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 ஆனால் எல்.ஐ.சி யின் மதிப்பை உள்ளார்ந்த மதிப்பின் 1.1 மடங்காக ரூபாய் 6 லட்சம் என்றே நிர்ணயிக்கப்பட்டது. அதனால் 3.5 % பங்குகளை விற்பதன் மூலம் ரூபாய் 47.250 கோயிலிருந்து ரூபாய் 56,700 கோடி ரூபாய் கிடைப்பதற்குப் பதிலாக 21,000 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும். இது பிரம்மாண்டமான ஊழல் இல்லையென்றால் வேறு எது? இந்த மதிப்பின் மூலம் கேந்திரமான முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று ஒன்றிய அரசு நியாயபடுத்துகிறது. உண்மையான மதிப்பீட்டின்படி விலை நிர்ணயிப்பதற்குப் பதிலாக  முதலீட்டாளர்கள் விருப்பப்படி நிர்ணயிப்பது வினோதமானது. எல்.ஐ.சி சர்வதேச அளவில் 5 ம் இடத்தில் மூன்றாவது வலிமையான நிறுவனமாகவும் பத்தாவது நம்பகத்தன்மையுடைய நிறுவனமாகவும் இருப்பது அரசு அறியாத ஒன்றல்ல. அதனால்தான் சர்வதேச அளவிலான பல ஆய்வாளர்கள், உலக அளவிலேலே எல்.ஐ.சி யின் மதிப்பீடு மிகவும் மலிவாக இருப்பதாக ஆச்சர்யப் பட்டுள்ளனர்.

 எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பது தனியார்மயத்திற்கான முதல் நடவடிக்கை என்று பார்ப்பதாலேயே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அதனை எதிர்க்கிறது. தனியார்மயத்திற்கு எதிரான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போராட்டம் மல்கோத்ரா குழு தன் பரிந்துரைகளை அளிப்பதற்கு முன்பே துவங்கியது. தனியார்மயமாக்கவேண்டும் என்ற பரிந்துரைக்குப் பின் அது வேகமானது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டம் நம் உன்னத நிறுவனத்தை தனியார்மயமாக்கும் அனைத்து முயற்சிகளையும் கடந்த 28 ஆண்டுகளாக தடுத்து வந்தது. அரசின் கொள்கையை அமலாக்க விடாமல் 28 ஆண்டுகள் ஒரு தொழிற்சங்கத்தின் போராட்டத்தால் தடுக்க முடியும் என்பது உலக அளவில் ஈடு இணையற்ற ஒரு இயக்கம் என்று சர்வதேச அளவிலும் போராட்டப் படுகிறது. பங்கு விற்பனையின் துவக்கம் என்பது இன்சூரன்ஸ் ஊழியர்களை அச்சுறுத்தி விடாது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். அரசின் கொள்கைகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடும்.

 இன்றைய சர்வதேச சூழலில் எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பதை அரசு தன் வருவாய் பற்றாக்குறையை எப்படியாவது ஈடு கட்டும் தவிப்புடன் முயற்சி என்று சுருக்கி விட முடியாது. அதை விட விரிந்த பின்னணி கொண்டது. அரசு நவீன தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்குவதன் மூலம் செல்வாதாரங்களை ஏழை மக்களிடமிருந்து செல்வந்தர்களுக்கு மடை மாற்றுகிறது. தனியார்மயம் அதில் ஒரு பகுதி. எல்.ஐ.சி தேசத்தின் சொத்து. இந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செல்வத்தை பணக்கார, லாப வெறி கொண்ட பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மாற்ற முயல்கிறது. எல்.ஐ.சியின் விரிவாக்கத்திற்கோ வளர்ச்சிக்கோ எந்த முதலீடும் செய்யாததால், நிறுவனத்தின் உடைமையாளர்கள் நாங்கள்தான் என்று சொந்தம் கொண்டாட அரசுக்கு எந்த தார்மீக நியாயமும் கிடையாது என்றே நாம் வலியுறுத்தி வருகிறோம்.  எல்.ஐ.சியின் விரிவாக்கமும் வளர்ச்சியும் பாலிசிதாரர்களின் நிதி கொண்டே நிகழ்ந்ததால் உண்மையில் அவர்கள்தான் உடைமையாளர்கள். பாலிசிதாரகளை ஆற்றுப்படுத்தும் முயற்சியாக அவர்களுக்கு 10 % பங்குகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று அரசு அறிவிக்கிறது. அதன்படி பாலிசிதாரர்களுக்கு 2.21 கோடி பங்குகள் ஒதுக்கப்படும். ஆனால் தனி நபர் பாலிசிதாரர்களின் எண்ணிக்கையோ 20 கோடிக்கு மேல் உள்ளது. பெருவாரியான பாலிசிதாரர்களின் நலனுக்கு எதிரானதுதான்.

 இக்கொள்கைகளுக்கு எதிராக போராடுவது என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் முடிவெடுத்துள்ளது. 28,29,மார்ச், 2022 இரண்டு நாள் வேலை நிறுத்தம் எல்.ஐ.சி பங்கு விற்பனையின் தீமைகள் குறித்து தேசிய அளவில் கவனம் பெற உதவியுள்ளது. எனவே கருத்தொற்றுமையை உருவாக்கவும் அனைத்து சங்கங்களின்  ஒன்று பட்ட போராட்ட நடவடிக்கையை உறுதிப்படுத்தவும் இரண்டு மணி நேர வேலை நிறுத்தம் குறித்து அவர்களிடம் முன்மொழிந்துள்ளோம். இந்த பிரம்மாண்ட ஊழலுக்கு எதிராக மற்ற சங்கங்களும் எதிர்வினைகளை ஆற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

 பங்கு விற்பனை துவங்கும் 04.05.2022 அன்று இரண்டு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்தம் மேற்கொள்ள அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் அனைத்திந்திய எல்.ஐ.சி ஊழியர் சம்மேளனமும் அறைகூவல் விடுத்துள்ளது. அனைத்து எல்.ஐ.சி ஊழியர்களையும் இவ்வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு இதுவரை காணாத மகத்தான வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தங்கள் நிறுவனத்தை சூறையாடும் முயற்சிகளுக்கு எதிராக போராடும் பொறுப்பை எப்படிப்பட்ட இடர்கள் இருப்பினும்,   எல்.ஐ.சி ஊழியர்கள் கைவிட மாட்டார்கள் என்று வரலாறு நினைவில் கொள்ளட்டும்.

வாழ்த்துக்களுடன்

                       தோழமையுள்ள                   

                                                                                                   (ஒப்பம்) ஸ்ரீகாந்த் மிஸ்ரா                                                                                              பொதுச்செயலாளர்

Saturday, March 26, 2022

அவசியம் பாருங்க. அனுபவத்தை கேளுங்க

 


எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடர்பாக "காம்ரேட் டாக்கீஸ்" தயாரித்துள்ள ஆவணப்படம்.

பங்கு விற்பனை தொடர்பான ஒன்றிய அரசின் வாதங்களை எங்கள் தலைவர்கள் சுக்கு நூறாக தகர்ப்பது மட்டுமல்ல, பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால் பலன் பெற்ற பாலிசிதாரர்களின் அனுபவப் பகிர்வும் உண்டு.

அவசியம் பாருங்கள்

யூட்யூப் இணைப்பு இங்கே

Monday, March 14, 2022

மூன்று தோல்விகள் - மூன்று வெற்றிகள்

 



*நாளொரு கேள்வி: 05.03.2022*

தொடர் எண் : *642*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *.சுவாமிநாதன்*

########################

*மூன்று தோல்விகள்*

*மூன்று வெற்றிகள்*

கேள்வி: 5 சதவீதம் எல்..சி பங்கு விற்பனையை நிறைவேற்றுவதில் அரசு வெற்றி பெற்று விடுமா

*.சுவாமிநாதன்*

வேறு எந்த பொதுத் துறை பங்கு விற்பனையும் சந்திக்காத அளவிற்கு எல்..சி பங்கு விற்பனைக்கு பரவலான எதிர்ப்பு உள்ளது. அதையும் மீறி அரசாங்கம் பங்கு விற்பனையை செய்தால் *அதற்கு பேர் வெற்றி அல்ல. அது ஜனநாயக விரோதம்.*

அரசு ஏற்கெனவே

மூன்று தார்மீக தோல்விகளை சந்தித்து விட்டது

*ஒன்று,* எல்.. சி பங்கு விற்பனைக்கான சட்ட திருத்தத்தை தனி மசோதா ஆக கொண்டு வந்தால் 2008 இல் நடந்தது போல அதன் மீது கவனக் குவிப்பும், ஆழமான விவாதம் நிகழ்ந்து திரும்பப் பெற வேண்டி வரலாம் என்ற அச்சத்தால் பட்ஜெட் உடன் இணைந்த நிதி மசோதாவுக்குள் சொருகி அரசு நிறைவேற்றியது முதல் தார்மீக தோல்வி

*இரண்டாவது,* வழக்கமாக பங்கு விற்பனைக்கு சொல்கிற எந்த காரணத்தையும் எல்..சி நோக்கி முன் வைக்க முடியவில்லை என்பது. நட்டம், திறமையின்மை, சேவை பரவல் என்ற எதையும் முன் வைக்க முடியவில்லை. அரசு வைத்த புதிய வாதங்கள் "செபியின் கூடுதல் கண்காணிப்பு," "மக்களுக்கு விற்பனை" என்ற இரண்டு முக மூடிகளும் கூட கிழிந்து தொங்கி விட்டன. அரசாங்கத்தால் கருத்து போராட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை

*மூன்றாவது* 1994 இல் மல்ஹோத்ரா குழு அறிக்கை 50 சதவீத பங்கு விற்பனை என்று பேசியது. 28 ஆண்டுகளுக்கு பிறகும் 10 % என்று செய்திகளைக் கசிய விட்டு அதுவும் இயலாமல் 5 சதவீதம் என ஆறுதல் கொள்ள வேண்டி வந்திருப்பது

ஆனால் எல்..சி பங்கு விற்பனையை எதிர்க்கிற இயக்கம் *மூன்று வெற்றிகளை* ஈட்டி இருக்கிறது 

*ஒன்று* "எப்போதும் (At all Times) அரசு கைகளில் எல்..சி யின் 51% பங்குகள் இருக்கும் என்ற திருத்த மசோதா பிரிவு 5 இல் சட்ட பூர்வமான உறுதி மொழி இடம் பெற்று இருப்பது. இதனால் என்றும் எல்..சி அரசு நிறுவனமாக  நீடிக்கும் என்று அரசு சொல்ல வேண்டி வந்துள்ளது. *வார்த்தைகளின் உயிர் போராட்டங்களில்தான் இருக்கிறது* என்பதில் ஐயமில்லை. ஆனாலும் இத்தகைய உறுதி மொழியை அரசு தர வேண்டி வந்துள்ளது

*இரண்டாவது,* எல்..சி பாலிசிகளுக்குள்ள அரசு உத்தரவாதம் (Sovereign Guarantee) பறிக்கப்படாது என்ற உறுதி மொழி. 2008 இல் பங்கு விற்பனை முன் மொழியப்பட்ட போது அரசு உத்தரவாதம் சேர்த்து பறிக்கப்படும் என்றே முன் மொழியப்பட்டது. இப்போது அவ்வாறு அரசாங்கம் சொல்லவில்லை

*மூன்றாவது,* அரசின் இவ்வளவு பிடிவாதங்களுக்கு பிறகும் களத்தில் பங்கு விற்பனைக்கு எதிரான வெப்பம் தக்க வைக்கப்பட்டிருக்கிறது. அரசின் முடிவுகளுக்கு போடப்பட்டுள்ள  வேகத் தடைகள் எல்லாம் எதிர் காலப் போராட்டங்களுக்கு வாசல்களாக உள்ளன.

*வெற்றியா தோல்வியா என்பதல்ல போராட்ட இயக்கத்தின் முன்புள்ள கேள்வி. நீதியா அநீதியா என்பதே கேள்வி.* இந்த தெளிவே இவ்வளவு சோதனைகளுக்கு மத்தியிலும் உறுதியாக நிற்க வைத்துள்ளது

*செவ்வானம்*