Showing posts with label கல்விக்கடன். Show all posts
Showing posts with label கல்விக்கடன். Show all posts

Wednesday, July 20, 2016

நான் வாங்கிய கல்விக்கடன்



 
வசூல் ராஜா அம்பானியால் லெனினின் உயிர் பறி போன சூழலில் நான் வாங்கிய கல்விக்கடன் நினைவுக்கு வந்தது.

மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் பி.பி.ஏ படிக்கையில் National Loan Scholarship என்று அழைக்கப்பட்ட கல்விக்கடனுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கவும் கிடைத்தது. வருடத்திற்கு 700 ரூபாய் என மொத்தம் 2100 ரூபாய் கிடைத்தது.

நான் கல்லூரியில் படித்தது 1982 லிருந்து 1985 வரை. கல்லூரிக் கட்டணம் ஒரு செமஸ்டருக்கு 300 வீதம் ஆறு செமஸ்டருக்கு 1800 ரூபாய், முதலில் கட்டியது ஒரு முன்னூறு ரூபாய், தேர்வுக் கட்டணம் ஒரு தாளுக்கு 40 ரூபாய் என்ற அடிப்படையில் முப்பது தாள்களுக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய். ஆக மொத்தம் கல்லூரிக்கென கட்டியது மூவாயிரத்து முன்னூறு ரூபாய். அதிலே இரண்டாயிரத்து நூறு ரூபாய் கல்விக்கடனாக கிடைத்து விட்டது. மீதமுள்ள தொகையும் விடுதிக்கட்டணம் (அது அதிகபட்சம் மாதம் நூறிலிருந்து நூற்றுப் பத்து ரூபாய் வரை வரும்) நெய்வேலி மதுரை போக்குவரத்துக் கட்டணம் – இவைதான் கல்லூரிப் படிப்பிற்கான செலவு. 

இப்போதைய கல்விக்கட்டணங்களைப் பார்த்தால் பெருமூச்சு வருகிறதல்லவா? எல்.கே.ஜிக்கே இப்போது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நான் சொல்ல வந்த விஷயமே வேறு.

கல்விக்கடன் வாங்கியதில் பிரச்சினையே இல்லை. திருப்பிச் செலுத்துவதில்தான் சிக்கல் வந்து விட்டது. பணம் இல்லாத சிக்கல் அல்ல. எப்படி செலுத்துவது என்பதில்தான் சிக்கல்.

எல்.ஐ.சி பணியில் சேர்ந்து ஆறு மாதம் கழித்து வேலை கன்ஃபர்ம் ஆனதும் கல்லூரித்துறை இயக்குனருக்கு "கல்விக்கடனை எப்படி செலுத்துவது" என்று வழிகாட்டுமாறு கடிதம் எழுதினேன். நாம் செலுத்தும் பணம் ஒழுங்காக நம் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் அல்லவா? அங்கிருந்து பதில் இல்லை. மூன்று மாதங்கள் முடிந்த பின்பு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினேன். அதன் பின்பும் இரண்டு கடிதங்கள். எல்லாமே பதிவுத்தபாலில் அனுப்பிய கடிதங்கள். ஆனால் எல்லாம் கல்லூரித்துறை இயக்குனர் அலுவலக குப்பைத்தொட்டிக்கு போய் விட்டது போல. விலாச மாற்றத்தைக் கூட ரொம்ப சின்சியராக தெரிவித்தெல்லாம் கடிதம் எழுதியிருக்கிறேன்.

அதன் பின்பு என் அப்பா நேரடியாக சென்னைக்கே அந்த அலுவலகத்திற்குச் சென்று எந்த கணக்கில் செலுத்த வேண்டும் என்ற விபரங்களை வாங்கி வந்தார். அந்த வருடம் வந்த போனஸ் தொகையைக் கொண்டு கல்விக்கடனை முழுமையாக ஒரே தவணையில் செலுத்தினேன். கருவூலத்தில் கட்டிய சலானின் நகலோடு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி வைத்தேன். அதற்கும் எந்த பதிலும் கிடையாது.

அதற்குப் பிறகு இரண்டு வருடம் கழித்து ஒரு கடிதம் வந்தது. "திரு ராமன் என்பவர், தான் வாங்கிய கல்விக்கடனை முழுமையாக செலுத்தி விட்டார். ஆனால் அவர் கல்லூரிப் படிப்பை முடித்து ஒரு வருடம் கழித்தே செலுத்தியதால் அபராத வட்டி செலுத்த வேண்டும். அபராத வட்டியை நிர்ணயம் செய்ய உடனடியாக ஊதியச் சான்றிதழை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்" என்பதுதான் கடிதத்தில் இருந்த வாசகங்கள்.

பயங்கரக் கோபம் வந்து விட்டது. அப்போதுதான் சங்கத்தில் சூடான கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்த நேரம் அது. கற்றுக் கொண்ட அத்தனை வித்தையையும் இறக்கி, படு காட்டமான கடிதம் ஒன்றை எழுதி, பழைய கடிதங்களின் நகலை இணைத்து அபராத வட்டியெல்லாம் கட்ட முடியாது என்று ஆணித்தரமாக பதில் அனுப்பி விட்டேன். 

கல்வி அமைச்சர், முதலமைச்சர், ஆளுனர் என சகட்டுமேனிக்கு அனைவருக்கும் நகலை அனுப்பினேன். மனித உரிமை ஆணையம் என்று இருப்பது அப்போது தெரியாது. தெரிந்தால் அவர்களுக்குக் கூட அனுப்பியிருப்பேன்!

இந்த கடிதத்திற்கும் பதில் கிடையாது. அபராத வட்டி கட்டு என்றும் அதற்குப் பிறகு கடிதம் வரவில்லை. 

பின் குறிப்பு " மேலே உள்ள படம் எங்கள் கல்லூரியின் நுழைவாயில்


Monday, July 18, 2016

அருந்ததி, அம்பானி வாங்கிய முதல் பலி லெனின்





ஸ்டேட் வங்கி தான் அளித்த கல்விக் கடன்களை வசூலிக்கும் பொறுப்பை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்தது பற்றி முன்பே எழுதியிருந்தேன்.

வசூல்ராஜா பாணியில் அடியாட்களை அனுப்பி மாணவர்களை மிரட்டப் போகிறார்கள் என்று பலரும் அச்சத்தை தெரிவித்திருந்தனர். அந்த அச்சம் இப்போது நிஜமாகியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த லெனின் என்ற மாணவன் வாங்கிய கடனை உடனடியாக ஒரே தவணையில் கட்ட வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்து ரௌடிகள் மிரட்ட, தொடர்ந்து தொலைபேசியில் தகாத வார்த்தைகளில் பேச, அந்த மாணவன் மானத்துக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டான்.

மாணவர்களின் கல்விக்கடனை வசூலிக்க ரிலையன்ஸ் மாதிரியான நிறுவனங்களுக்கு அதிகாரம் கொடுத்த ஸ்டேட் வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா முதல் குற்றவாளி என்றால் ரௌடிகளை வைத்து தாதா போல தொழில் நடத்திய அம்பானி இரண்டாவது குற்றவாளி. லெனின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள் இவர்கள்தான். மற்றவர்கள் எல்லாம் அடுத்த நிலையில்தான் வருவார்கள்.

ஏழு வருடத்திலிருந்து பதினைந்து வருடம் காலம் வரை கடனை திருப்பிக்கட்டும்படியே கல்விக்கடன் திட்டமே வரையறுக்கப் பட்டுள்ள போது கல்விக்கடனை ஒரே தவணையில் கட்ட வேண்டும் என்று சொல்வது விதி மீறல் என்று குற்றம் சுமத்தி, ஸ்டேட் வங்கி தங்களிடமுள்ள கல்விக்கடனை நாற்பத்தி ஐந்து சதவிகித தொகைக்கு மட்டும்ற் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்றுள்ள போது கல்விக்கடன் வாங்கியவர்களை நாற்பத்தி ஐந்து சதவிகிதத்தை கட்டச் சொல்லலாமே என்று அர்த்தமிக்க கேள்வியை எழுப்புகிறார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் தோழர் சி.பி.கிருஷணன்.

இக்கேள்விக்கு நிச்சயமாக மத்திய அரசோ, ஸ்டேட் வங்கி நிர்வாகமோ பதில் சொல்லாது.

மல்லய்யாக்கள் உல்லாசமாய் இங்கிலாந்தில் பவனி வர லெனின் போன்ற ஏழைகள்தான் மானத்திற்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்கின்றனர். மல்லய்யாக்களிடம் காண்பிக்க முடியாத வீரத்தை வங்கி உயர் நிர்வாகம் ஏழை விவசாயிகளிடமும் ஏழை மாணவர்களிடமும் காண்பிக்கிறது.

பல லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை கட்டாமல் ஏமாற்றி வருகிற மோசடிப் பேர்வழியான அம்பானி மாதிரி ஆட்களை கல்விக் கடனை வசூலிக்க அனுமதித்தது என்பது கொடூரமான முடிவு. லெனின் மரணத்துக்கு காரணமான ஆட்களை கைது செய்து செய்வது முதல் நடவடிக்கை  என்றால் இது போன்ற திட்டங்களை ரத்து செய்வதே இரண்டாவது நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

பின் குறிப்பு : மேலேயுள்ள படம் லெனினின் தந்தை திரு கதிரேசன் அவர்களை வங்கி ஊழியர், இன்சூரன்ஸ் ஊழியர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புக்களின் பொறுப்பாளர்கள் நேற்று சந்தித்து ஆறுதல கூறியபோது எடுத்தது.   

பின் குறிப்பு 2 : மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் இச்சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தார். இச்செய்தியை தினகரன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. ஆனால் "ரிலையன்ஸ்" என்று எழுதுவதற்குப் பதிலாக "தனியார் நிதி நிறுவனம்"  என்று வெளியிட்டு தனது ஊடக அறத்தை பாதுகாத்துக் கொண்டுள்ளது. நிச்சயம் இதற்கு ரிலையன்ஸ் "பதில் மரியாதை" கொடுக்கும்.