Showing posts with label தொழிற்சங்கம். Show all posts
Showing posts with label தொழிற்சங்கம். Show all posts

Monday, February 23, 2026

தொழிற்சங்கமாய் ஒன்றிணைவோம் - மோடியிடம் லூலா

 


இன்று காலையில் ஆங்கில இந்து நாளிதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. கொஞ்சம் சிரிப்பும் வந்தது.

ஏன்?

முதலில் அந்த செய்தியை பாருங்கள்.


தொழிற்சங்கவாதியும் பிரேசில் தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிகளை முறியடித்து ட்ரம்ப், மோடி போன்ற கிறுக்கு பிடித்த தலைவர்களின் வரிசையில் வரும் போல்சனரோவை தோற்கடித்து இப்போது பிரேசிலின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் லூலா பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மோடியை பக்கத்தில் வைத்துக் கொண்டு என்ன சொன்னார்?

டொனால்ட் ட்ரம்பின் அராஜக வரி விதிப்பால் பாதிக்கப்படும் நாடுகள், தனியாக அவரோடு பேசுவதற்குப் பதிலாக ஒரு தொழிற்சங்கம் போல ஒன்றிணைந்து பேசினால் நிச்சயம் பலன் கிடைக்கும். ஒரு தொழிற்சங்கவாதியாக என் அனுபவமும் இதுதான். ஒரு தனி தொழிலாளி, ஒரு கம்பெனி நிர்வாகத்தின் கொள்கைக்கு எதிராக பேசினால் எந்த பயனும் கிடைக்காது. அதுவே தொழிற்சங்கமாக ஒன்றிணைந்து போராடும் போது அந்த கூட்டு சக்தியால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இதுதான் லூலா சொன்னது. 

அப்போது மோடியின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

என் அனுமானங்கள் இரண்டு.

முதல் அனுமானம் மேலே உள்ள படத்தில் உள்ளது.

இரண்டாவது குரங்குக் குளியல் கீழே உள்ளது. 

"நானே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ட்ரம்பை குஷிப்படுத்த எனென்னம்மோ செஞ்சிக்கிட்டு இருக்கேன். இதிலே இந்த ஆளு பேசினது ட்ரம்புக்கு தெரிஞ்சா அதுக்கு என்ன திட்டுவாரோ?"


Thursday, February 12, 2026

இன்று ஏன் வேலை நிறுத்தம்?

 


இன்று இந்தியா முழுதும் இந்தியாவை நேசிக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி போன்ற மத்திய தொழிற்சங்கங்களும் இன்சூரன்ஸ், வங்கி, தொலை தொடர்பு போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அகில இந்திய அமைப்புக்களும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர்.

என்ன கோரிக்கைகள்?

காலம் காலமாக உழைப்பாளி மக்கள் போராடிப் பெற்ற பல்வேறு உரிமைகளை பறிக்கின்றன மோடி அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கள்.

சிக்காகோ தொழிலாளர்கள் உயிர் கொடுத்து வென்றெடுத்த எட்டு நேர வேலை நேரத்தை காவு கொடுக்கிறார்கள்.

நிரந்தர வேலை என்பதையே கடந்த காலமாக மாற்றி ஒப்பந்த தொழிலாளர்கள் முறையும் குறிப்பிட்ட கால நிர்ணய பணி என்பதும் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பலி கொடுக்கும் செயலாகும்.

வங்கி, இன்சூரன்ஸ் மற்றுமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்பது இந்தியப் பொருளாதாரத்தை பாழுங்கிணறுக்குள் தள்ளும் மூடத்தனம்.

இந்திய உழைப்பாளிகளை சுரண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாக, அவர்கள் என்ன தவறு செய்தாலும் சட்டப்படியே கண்டு கொள்ளாத கேவலமான நிலையை உருவாக்கியுள்ளது மோடி அரசு.

இதற்கு எதிராகத்தான் இன்று வேலை நிறுத்தம்.

எல்.ஐ.சி யின் இன்னும் சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

மூன்றாம் பிரிவு, நான்காம்  பிரிவு பணிகளில் புதிய பணி நியமனம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பணிச்சுமை ஒரு புறம் அதிகரித்து வரும் வேளையில் மறு புறம் பணி ஓய்வுகளின் காரணமாக காலிப் பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையை சரி செய்ய நிர்வாகம் சுணக்கம் காண்பிக்கிறது.

எல்.ஐ.சி யின் பங்குகளை விற்கக் கூடாது.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 % ஆக உயர்த்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும்.

2010 க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷனே தரப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும். உழைப்பாளி மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையோடு கோடிக்கணக்கான தொழிலாளர்கள், போராட்ட களம் புகுகின்றனர். போராட்டங்கள் என்றைக்கும் தோற்றது கிடையாது.

பணி ஓய்வு பெற்றதால் நேரடியாக வேலை நிறுத்தப் பங்கேற்பு என்பது கிடையாது.  எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன், ஊதியத்தை இழந்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் தோழர்களிடமிருந்து  உற்சாகத்தைப் பெற . . .

Friday, January 30, 2026

பொறுப்பில்லாமல்,வெறுப்பில் பேசலாமா யுவர் ஆனர்?

 


தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களும் ஓய்வுக்குப் பிந்தைய பதவிக்கான நுழைவுத் தேர்வை எழுதி விட்டார் போல. வெறுமனே அரசை மட்டும் நம்பாமல் வெரும் வெளி வேண்டும் என்பதற்காக முதலாளிகளின் மனம் குளிரும் படி பேசியுள்ளார்.


மிக மிக அபத்தமாகவும் வன்மமாகவும் உளறியுள்ளார்.  இவர் சொன்ன அபத்தத்தை  சங்கிகள் பலர் வாந்தியெடுப்பார்கள். அப்படிப்பட்ட சுரண்டல்வாதிகள் சாம்சங் போராட்டத்தின் போதும் வாந்தி எடுத்தனர். அந்த மூடர்களுக்கு அறிவு வர வேண்டும் என்பதற்காக அப்போது எழுதிய மூன்று பதிவுகளின் இணைப்புக்கள் கீழே உள்ளது.

தொழிலாளர்களின் போராட்டம் - சங்கிகளின் பொய்க்கணக்கு . . .

டாடாவை வெளியேற்றிய குற்றவாளிகள் யார்?

தொழிற்சங்கம் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதை காலம் உடனடியாகவே உரக்கச் சொன்னது.

அது என்ன?

கீழேயுள்ள இணைப்பை பாருங்கள்.

தொழிற்சங்கங்கள் இருந்திருந்தால் ??? சங்கிகளே சொல்லுங்கள்

தலைமை நீதிபதி அவர்களே, தொழிற்சங்கப் போராட்டங்களால் எத்தனை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன? உங்களிடம் விபரம் உள்ளதா? ஆதாரங்கள் உள்ளதா? சங்கிகள் போல வாய்க்கு வந்ததை உளறக்கூடாது.

எங்கள் எல்.ஐ.சி நிறுவனத்தை அழிக்க ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். அதனை இன்று வரை பாதுகாத்து வருவது எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான். பல நிறுவனங்களுக்கும் காவல் அரண்  தொழிற்சங்கங்கள்தான். 

வீடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப் படக்கூடாதா? அப்படி நிர்ணயிக்கப்படுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஒரு வேளை அப்படி நிர்ணயிக்கப்பட்டால் அந்த ஊதியம் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு உங்களுக்கு கிடையாதா? அரசு நிர்ணயிக்கும் ஊதியத்தை கொடுக்காமல் ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகளை கோர்ட்டுக்கு இழுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

மோடி போல, ஆட்டுக்காரன் போல நீங்கள் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. 

நீங்கள்  படித்தவர். சுயேட்சையான அமைப்பு ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்.

இனியாவது உங்கள் பதவிக்குரிய கண்ணியத்தை காத்திடுங்கள். 

Tuesday, January 20, 2026

நேருவால் முடியும். மோடியால் ????

 


மறைந்த எங்கள் பிதாமகர் தோழர் சந்திரசேகர் போஸ் அவர்களின் தன்வரலாறு நூலான "TALKING ABOUT TIMES PAST" நூலை மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன்.

அதிலே அவர் குறிப்பிட்ட சம்பவத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதால் இங்கே . . .

எல்.ஐ.சி உருவான போது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை ஒன்று இருந்தது.

இருநூறுக்கும் மேற்பட்ட தனியார் கம்பெனிகள். அதில் ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒவ்வொரு ஊதியம். அதிலும் மைய அலுவலகம், கோட்ட அலுவலகம், கிளை அலுவலகம் என்று அலுவலகத்தின் தன்மையை ஒட்டி ஊதியம் மாறும். 

எல்.ஐ.சி நிறுவனம் உருவான பின்பு ஊதியங்களை சீரமைக்க வேண்டியிருந்தது. அதிலும் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் உயர் நிலையில் சீரமைக்க வேண்டியிருந்தது.

எல்.ஐ.சி நிர்வாகமோ, அரசோ  இக்கோரிக்கையை செவி மடுக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டும் முன்னேற்றமில்லை. எனவே போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை. 05.12.1956 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுக்கப்பட்டது.

வேலை நிறுத்தம் நடக்கட்டும்,  தொழிற்சங்கத்தோடு பேசுவதா, வேண்டாமா என்று பிறகு முடிவு செய்கிறேன் என்று நிதியமைச்சட் டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆணவமாக சொல்கிறார்.

வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடக்கிறது. பிசிபிசுத்துப் போகும் என்று நினைத்த அரசிற்கு பெருத்த அடி.

எல்.ஐ.சி ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது. சதன் குப்தா என்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் (அப்போது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிதான்)  பிரச்சினைகளை பேசுகிறார். தோழர் சந்திரசேகர் போஸ் ஹிந்துஸ்தான் கம்பெனி சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த போது தலைவராக செயல்பட்டவர் அவர். அதனால் அவரால் அனைத்து பிரச்சினைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வைக்க முடிந்தது.

அவர் பார்வைத்திறன் அற்றவர். பதிலளிக்க எழுந்த கிருஷ்ணமாச்சாரி, அந்த குறைபாட்டை குத்தி காண்பித்து நக்கலாக பேசுகிறார். 

உடனே தோழர் ஏ.கே.கோபாலன், தோழர்  ஹிரேன் முகர்ஜி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் கோபத்துடன் எதிர்க்கிறார்கள்.

அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு எழுந்திருக்கிறார். 

"கிருஷ்ணமாச்சாரி பேசியது மிகவும் தவறு. அவ்வாறு அவர் பேசியிருக்கக் கூடாது, அவர் பேசியதை அவைக்குறிப்புக்களில் இருந்து நீக்குமாறு சபாநாயகரை கேட்டுக் கொள்கிறேன். ஊழியர் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும்"

அதன் படியே பிரச்சினைக்கும் விரைவில் சங்கமும் ஊழியர்களும் எதிர்பார்த்தபடியே தீர்வு வந்தது.

இதுதான் தோழர் போஸ் எழுதியது.

இதுவே நேருவின் இடத்தில் மோடி இருந்திருந்தால்?

தோழர் சதன் குப்தாவை நிதியமைச்சர் உருவக்கேலி செய்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. ஏனென்றால் அதை மோடியே செய்திருப்பார்.  இன்னும் சொல்லப்போனால் இப்பிரச்சினை நாடாளுமன்ற விவாதத்திற்கே வந்திருக்காது. 

நேரு மனிதராக இருந்தார். மோடி ?????

அதை நான் என் வாயால் சொல்ல வேண்டுமா என்ன!!!!

Monday, January 19, 2026

இன்சூரன்ஸ் என்றால் எல்.ஐ.சி என்பதால் . . .



 சமீபத்தில் இரண்டு ஓய்வூதியர் அமைப்புக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டேன். ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு மத்திய, மாநில, பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புக்கள் சார்பாக நடத்தப்பட்ட கூட்ட,ம் ஒன்று. எட்டாவது ஊதியக்குழுவில் ஓய்வூதிய உயர்வுக்கு வேட்டு வைக்க நினைக்கும் முயற்சிக்கு எதிராக நடத்தப்பபட்ட தர்ணா போராட்டம் இன்னொரு கூட்டம்.

இரண்டு கூட்டங்களிலும்  நான் சந்தித்த தோழர்கள், எல்.ஐ.சி யில் நூறு சதவிகித அன்னிய மூலதனம் அனுமதிக்கப்பட்டு விட்டது. இதன் விளைவுகள் என்னாகுமோ, நாம் எல்.ஐ.சி யில் செய்யப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இருக்குமோ என்ற அச்சத்தை பகிர்ந்து கொண்டார்கள். 

நூறு சதவிகித அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்பது இன்சூரன்ஸ்துறையில் செய்யப்பட்டதே தவிர எல்.ஐ.சி யில் அல்ல என்று விளக்கினேன். 

அது என்ன விளக்கம் என்று இப்பதிவில் சொல்கிறேன்.

எல்.ஐ.சி யில் நூறு சதவிகித அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டு விட்டதா? 

இல்லை, 

நிச்சயமாக இல்லை.

கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.

நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி ஆளுனராக இருந்த ஆர்.என்.மல்ஹோத்ரா  தலைமையில்  இன்சூரன்ஸ்துறையில் சீர்திருத்தம் செய்ய பரிந்துரைகள் வழங்க ஒரு குழு அமைக்கிறார்.

அந்த குழு ஜனவரி 1994 ல்  இரண்டு முக்கியமான  பரிந்துரைகளை அளிக்கிறது.

இன்சூரன்ஸ் துறையில் தொழில் செய்ய வெளிநாட்டுக் கம்பெனிகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களை  அனுமதிக்கலாம்.

எல்.ஐ.சி யின் பங்குகளில் 50 % ஐ தனியாருக்கு விற்று விட வேண்டும்.

நரசிம்மராவ் ஆட்சிக்காலம் முடியும் வரை அந்த பரிந்துரைகளை அவர்களால் அமலாக்க முடியவில்லை.

1997 ல் ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருக்கும் போது இன்சூரன்ஸ் துறையில் தனியார் கம்பெனிகளை 24 % அன்னிய முதலீட்டுடன் அனுமதிக்கும் ஐ.ஆர்.ஏ மசோதாவை ப.சிதம்பரம் கொண்டு வருகிறார். இடதுசாரிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.  திருத்தம் கொண்டு வருகிறார்கள். அதை காங்கிரஸ் கட்சியுடன்  பாஜகவும் சேர்த்து தோற்கடிக்கிறது.  பிறகு ஒரு பாஜக உறுப்பினர் அன்னிய முதலீட்டிற்கு எதிரான திருத்தத்தை கொண்டு வருகிறார். அந்த திருத்தத்தை ஆதரிக்கப் போவதாக இடதுசாரிகள் அறிவிக்கிறார்கள். அந்த திருத்தம் நிறைவேறினால் அரசு கொண்டு வந்த மசோதா தோற்றுப் போகும் என்று அர்த்தம். நிலைமையை உணர்ந்து கொண்ட குஜ்ரால் ஐ.ஆர்.ஏ மசோதாவை திரும்பப் பெறுகிறார்.

பிறகு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ப.சிதம்பரம் கொண்டு வந்த அதே மசோதா, அதே 24 % அன்னிய முதலீட்டுடன் தனியாரை அனுமதிக்கும் ஷரத்துக்களுடன் ஐ.ஆர்.டி.ஏ மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. இடதுசாரிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். சமஜ்வாடி கட்சியும் ராஷ்டிர ஜனதா தள் கட்சியும், அதிமுகவும் (ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை வேறு ஒரு பதிவில் எழுதுகிறேன்) கூட எதிர்க்கிறார்கள். அன்னிய முதலீடு கூடாது என்று வலியுறுத்துவதாக ஒரு தர்ணா நாடகத்தை ஆடிட்டர் விஷமூர்த்தி, சுதேசி ஜக்ரான் மஞ்ச் என்ற பெயரில் நடத்தியது வேறு கதை.

ஐ.ஆர்.டி.ஏ சட்டத்தின் படி ஒரு வெளிநாட்டுக் கம்பெனி தனியாக இந்தியாவில் இன்சூரன்ஸ் கம்பெனி தொடங்க முடியாது. ஏதாவது ஒரு இந்திய முதலாளியின் கூட்டாளியாகத்தான் அந்த இன்சூரன்ஸ் கம்பெனியின் மூலதனத்தில் அதிகபட்சம் 24 % முதலீட்டோடு மட்டும்தான் வர முடியும்.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 24 % அன்னிய முதலீடு என்று இருந்தது மோடி காலத்தில்  49 %,  ஆக முதலில் உயர்த்தப்பட்டது. பின்பு 74 % ஆகவும் உயர்த்தப்பட்டது. 

74 % வரை அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதே, எல்லா தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளிலும் 74 % வரை அன்னிய முதலீடு இருக்கிறதா? 

23 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் மூன்று கம்பெனிகளில் அன்னிய மூலதனமே கிடையாது.

மூன்றே மூன்று கம்பெனிகளில் மட்டும்தான் 74 % அன்னிய மூலதனம் உள்ளது.

எட்டு கம்பெனிகளில்  49 % அன்னிய மூலதனத்திற்கு மேல் கிடையாது.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் உள்ள அன்னிய மூலதனம் என்பது வெறும் 32.67 % மட்டுமே.

உங்களுக்கு சில கேள்விகள்  வரலாம்.

அன்னிய மூலதனத்திற்கு இந்திய இன்சூரன்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய ஆர்வமில்லாத போது எதற்கு 100 % என்று உயர்த்த வேண்டும்?

ஆளில்லாத கடையில் யாருக்காக டீ ஆற்ற வேண்டும்?

இந்த முடிவினால் என்ன பாதிப்பு யாருக்கு வரும்?

ஆளில்லாத கடையில் மோடி டீ ஆற்றுகிறார் என்று நாம் நம்பி விடக் கூடாது. 

இந்திய முதலாளிகளோடு கூட்டாளியாக தொழில் நடத்த முடியாது என்று தனிக்கடை போட காத்துக்கொண்டிருக்கும் அன்னிய கம்பெனிகள் இருக்கின்றன. அவர்களுக்கான வாசலை மோடி திறந்து வைத்துள்ளார். இந்திய மக்களின் முதலீடு முழுமையாக அந்த வெளிநாட்டு கம்பெனிகளின் வசம் போனால் அதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்திற்கு என்ன பயன் இருக்கிறது! நாளை அந்த கம்பெனி ஓடிப் போனால் அதனுடன் பாலிசிதாரர்களின் பணமும் ஓடி விடும்.

இப்போது இந்திய முதலாளிகளோடு கூட்டணி வைத்துள்ள வெளிநாட்டு முதலாளிகள், தனிக்கடை திறக்க தாங்கள் கூட்டாளியாக உள்ள இந்திய இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து தங்கள் மூலதனத்தை திரும்பப் பெற்றுக் கொண்டால் அந்த கம்பெனியின் நிலைமை என்ன ஆகும்? இன்சூரன்ஸ் அடிப்படையில்  ஒரு நீண்ட கால ஒப்பந்தம். பிரிமிய வருமானமும் அந்த அடிப்படையில்தான் முதலீடு செய்யப்பட்டிருக்கும். "என் பணத்தை கொடு, நான் போறேன்" என்று அவர்கள் கழுத்தில் கத்தி வைத்தால் அந்த தனியார் கம்பெனி நிலை குலைந்து போகும், அங்கே பாலிசி எடுத்த மக்களின் பணமும் கூட.

எந்த ஒரு வெளிநாட்டு கம்பெனியும் இந்திய விதிகளை மதிப்பதில்லை. வணிகத்தில் அவர்களிடம் எந்த நெறிமுறைகளும் கிடையாது. அதனால் இந்திய இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு பாதிப்பு வரும். 

எல்.ஐ.சி யைப் பொறுத்தவரை அரசு வெறும் 3.5 % பங்குகளை மட்டும் விற்பனை செய்துள்ளது. மேலும் விற்க வேண்டும் என்று துடிக்கிறது. மிகக் கடுமையாக அந்த முடிவு எதிர்க்கப்பட்டு வருகின்றது. 

ஆக 100 % அன்னிய முதலீடு என்பது எல்.ஐ.சி க்கு அல்ல, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்குத்தான்.

பின் ஏன் இந்த குழப்பம்?

தனது 69 ஆண்டு கால மகத்தான சேவை காரணமாக, நம்பிக்கை என்றால் அது எல்.ஐ.சி என்ற முத்திரையை பதித்ததால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை அலுவலகங்கள், சின்னஞ்சிறு கிராமங்களில் கூட எல்.ஐ.சி யின் முகமாக மாறியுள்ள லட்சக்கணக்கான முகவர்கள்,  அவர்களை வழி நடத்தும் வளர்ச்சி அதிகாரிகள், நேர்மையான, திறமையான, உடனடி சேவையை அளிக்கும் ஊழியர்கள், அதிகாரிகள், ஆகியோரின் அர்ப்பணிப்பால்

மக்கள் மனதில் 

இன்சூரன்ஸ்  என்றால் எல்.ஐ.சி 

என்றே பதிந்துள்ளது. 

எதிர்காலமும் சொல்லும்

இன்சூரன்ஸ் என்றால் எல்.ஐ.சி மட்டுமே

பிகு: இன்று இன்சூரன்ஸ் தேசியமய நாள். 1956 ல் ஆயுள் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கும் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள். 



Friday, January 16, 2026

எம் நினைவுகளில் எந்நாளும் வாழ்வீர்கள் . . .

 



இன்றைய நாள் ஒரு துயரச் செய்தியுடன் விடிந்தது. 

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிதாமகர், நிறுவனத் தலைவர்களில் ஒருவர்,  1955 முதல் 1994 வரை பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தலைவர் ஆகிய பொறுப்புக்களில் அகில இந்திய இன்சூரனஸ் ஊழியர் சங்கத்தை வழி நடத்தியவர். 

செப்டம்பர் 1957 ல் இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழ் தோழர் சந்திரசேகர போஸ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வரத் தொடங்கியது. இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழ் நவம்பர் 1997 ல் சென்னையிலிருந்து வெளிவர தொடங்கும் வரை நாற்பதாண்டுகள் அதன் ஆசிரியராக செயல்பட்டவர்.

ஹிந்துஸ்தான் கோவபரேட்டிவ் என்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியில் சேர்ந்தவர். அங்கேயிருந்த சங்கத்திற்கு வேகம் கொடுக்கிறார். சுரண்டலுக்கு எதிராக போராட்டத்தை துவக்குகிறார். போனஸ் கோரிக்கைக்காக  போராட்டம் நடக்கிறது. ட்ரிப்யூனலுக்கு பிரச்சினை செல்கிறது. லாபம் இல்லை என்று நிர்வாகம் பொய்க்கணக்கு காண்பிக்கிறது. மிகுந்த சிரமத்துடன் உண்மையான கணக்குகளை போட்டோ எடுத்து ட்ரிப்யூனலிடம் சமர்ப்பிக்கிறார். நிர்வாகம் மட்டுமல்ல ட்ரிப்யூனலின் நீதிபதி கூட இது துரோகம் என்று கொந்தளிக்கிறார். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். என்னை என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள், ஊழியர்களுக்கு நியாயமான போனஸை அளியுங்கள் என்பதே அவர் நிலையாக இருந்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீண்டும் ஊழியர்களின் போராட்டத்தால் பணியில் இணைகிறார்.

நாடெங்கிலும் இருந்த பல்வேறு இன்சூரன்ஸ் கம்பெனிகளின் சங்கங்களை ஒன்றிணைத்து ஒரு அகில இந்திய அமைப்பை உருவாக்க ஒரு கூட்டம் பம்பாய் நகரில் நடந்த போது மேற்கு வங்க ஊழியர்களின் சார்பாக அவர் கல்கத்தாவிலிருந்து பம்பாய் செல்கிறார். 01.07.1951 அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உருவாகிறது. அகில இந்திய செயற்குழு உறுப்பினராகிறார் தோழர் போஸ். 1953 ல் முதல் மாநாடு. 1955 ல் இரண்டாவது மாநாடு. அம்மாநாட்டில் அகில இந்திய பொதுச் செயலாளராகிறார் தோழர் போஸ்.

இதற்கிடையில் 1954 ல் ஒரு சம்பவம். மெட்ரோபாலிடன்  இன்சூரன்ஸ் கம்பெனி என்ற தனியார் கம்பெனியில் சங்கம் அமைக்க முயற்சித்த 55 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட அங்கே கல்கத்தா நகர இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக தோழர் சந்திரசேகர் போஸ் மற்றும் பின்னாளில் சங்கத்தை பொதுச்செயலாளராக வழி நடத்திய தோழர் சரோஜ் சவுத்ரி ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.  கீழமை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

1956 ல் ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயமாக்கப்பட்ட போது அதனை வரவேற்று அகில இந்திய இன்சூர்ன்ஸ் ஊழியர் சங்கம் தந்தி அனுப்பியது. அனுப்பியவர் அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் போஸ். முதலாளித்துவ சிந்தனை கொண்ட சில காங்கிரஸ் எம்.பி க்களும் என்றைக்குமே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பாஜகவின் அன்றைய வடிவமான ஜனசங்கும் தேசியமயத்தை கடுமையாக எதிர்த்த போது "ஊழியர்கள் ஆதரிக்கிறார்கள்" என்று அன்றைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் அந்த தந்தியை காண்பித்து உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தில் இது பதிவாகியுள்ளது.

ஊழியர்களுக்கான பலன்களை பெறுவதில் கவனம் செலுத்துபவர் என்றும் நிர்வாகத்தின் முன்மொழிவுகளுக்கு சரியான எதிர்வினைகளை உடனுக்குடன் தருவதில் வல்லவர் என்று எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அவர் ஒரு திறந்த புத்தகம் என்பதை அவரது தன் வரலாறு நூல் உணர்த்தியது. 

1983 . அவர் எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் சங்கத்திலிருந்து அவர் ஓய்வு பெறவே இல்லை. 1994 ல் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாலும் சங்க இயக்கங்களிலிருந்து அவருக்கு ஓய்வு என்பதே இல்லை. 

அவரை முதன் முதலாக பார்க்கும் வாய்ப்பு 1988 ல் கிடைத்தது. அகில இந்திய தலைமையகம் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாறிய போது சென்னை எல்.ஐ,சி கட்டிடத்தில் பிரம்மாண்டமான கூட்டம் ஒன்று நடந்தது. பெரிய ஆரவாரம் இல்லாத தெளிவான நீரோடை போன்றது அவர் பேச்சு. அந்த தெளிவும் அழுத்தமும் இறுதி நாள் வரை மாறவே இல்லை. எங்கள் வேலூர் கோட்டத்திற்கு ஒரு முறை வந்துள்ளார்.

1998 ல் நான் வேலூர் கோட்டப் பொதுச்செயலாளராகிறேன். 2000 ம் ஆண்டு சென்னையில் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது என்னை அழைத்து பேசி உற்சாகமும் நம்பிக்கையும் கொடுத்தார். அந்த காலகட்டத்தில் புதிதாக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற வேறு சிலரையும் அழைத்து உற்சாகப்படுத்தினார் என்று பின்பு அறிந்து கொண்டேன்.










ஏழாண்டுகள் முன்பாக அவரை அவரது வீட்டில் சந்தித்தேன். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரத்திற்கும் மேல் நடந்த சந்திப்பு அது. இயந்திரமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை நாவல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்ற வேட்கையில் கொல்கத்தா சென்று அவருடன் பேசி பல்வேறு விபரங்களை அறிந்து கொண்டேன். அறுபதுகளின் சம்பவங்களை முழுமையாக தன் நினைவிலிருந்து சொன்னவர் மறைந்த தன் சகாக்களான தோழர் சரோஜ், தோழர் சுனில் பற்றி பேசும் போது மட்டும் உணர்ச்சிவயப்பட்டார். 



 வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் இது. தமிழ்நாட்டிலிருந்து தோழர் வந்துள்ளார். அதனால் எங்கள் இருவருக்குமே தோசை ஆர்டர் செய்து விடு என்று பேரனிடம் சொன்னார். இரவு 10.30 க்கு புறப்படுகையில் ஊபரில் டாக்ஸி புக் செய்த போது, பக்கத்தில்தான் டாக்ஸி ஸ்டாண்ட் உள்ளது. நானே ஏற்பாடு செய்து தருகிறேன் என்று அவர் புறப்பட்ட போது அவரது வயது அதிகமில்லை, வெறும் 96 தான். 

அந்த போராட்டத்தை "முற்றுகை" எனும் நூலாகஆறாண்டுகளுக்கு முன்பாக   விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அவரே வெளியிட்டது வாழ்வில் எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.



நூறாண்டுகளை கடந்த நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அவர் தினமும் வந்து கலந்து கொண்டார். மாநாட்டின் போது மட்டுமல்ல அதற்கு முன்பாக மம்தாவின் அடாவடி காரணமாக தற்காலிக அரங்கம் அமைக்கப்பட்ட போது அதன் பணிகளை அன்றாடம் வந்து பார்த்து ஆலோசனை வழங்கியுள்ளார்.




அவரை நாங்கள் இறுதியாக பார்த்தது 31.12.2025 அன்றுதான். 28.12.2025 முதல் 01.01.2026 வரை புவனேஸ்வரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் 29.12.2025 முதல் 31.12.2025 வரை அவர் 104 வயதில் கலந்து கொண்டார். மிகவும் தெளிவான உரை ஒன்றையும் நிகழ்த்தினார். அவரது வருகையும் இருப்புமே அனைவருக்கும் உற்சாகமளித்தது, வேகம் கொடுத்தது.




அதன் பின்பு உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தோழர் சந்திரசேகர் போஸ் இன்று இயற்கையுடன் இணைந்து விட்டார்.

அவர் 

எளிமையின் வடிவம்,'

தியாகத்தின் உருவம்,

உறுதிக்கு உதாரணம்,

வரலாற்றுப் பொக்கிஷம்,

இயக்கத்திற்கு எழுச்சி தந்த நாயகன்.

சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத தலைவர்.

எந்நாளும் அவர் எங்களின் நினைவில் வாழ்வார், வழி காட்டுவார்.




Tuesday, December 30, 2025

கான்பூர்- புதுடெல்லி - நாக்பூர்

 



2007 ல் 21 வது மாநாடு கான்பூர் நகரில் நடைபெற்றது. நாங்களும் சேலம் கோட்டத் தோழர்களும் ஆக்ரா சென்று தாஜ் மஹாலைப் பார்த்து விட்டு பின்பு இன்னொரு ரயில் மூலமாக கான்பூர் செல்வதென்று திட்டமிட்டு புறப்பட்டோம். நாங்கள் ஆக்ரா சென்ற வெள்ளிக்கிழமையன்று தாஜ்மஹால் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று எங்களுக்கு தெரியாது. ஷாஜஹான் சிறை வைக்கப்பட்ட செங்கோட்டையிலிருந்து அவரைப்போலவே தூரத்திலிருந்து தாஜ் மஹாலை பார்த்து மனதை தேற்றிக் கொண்டோம்.

பொது உடமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் சுபாஷினி அலி வரவேற்புக்குழுவின் தலைவர். விடுதலைப் போராட்ட வேங்கை தோழர் கேப்டன் லட்சுலி அவர்களின் வருகையே மிகுந்த உற்சாகமளித்தது. பத்திரிக்கையாளர் திரு சாய்நாத் மாநாட்டை துவக்கி வைத்தார். இம்மாநாட்டில் அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  இம்மாநாட்டிற்காக தற்காலிக அரங்கம் உருவாக்கப் பட்டது. 

நேரடி ரயில் இல்லாததால் ஜான்சி வந்து வேறு ரயிலை பிடித்து திரும்பினோம். புறப்படும் போது வெள்ளை வெளேர் என்றிருந்த டாடா சுமோ ஜான்சியை வந்தடைந்த போது பழுப்பு நிறமாக மாறியிருந்தது. சாலையில் அவ்வளவு புழுதி.அதுதான் உத்திரப்பிரதேசத்தின் சிறப்பு. 




தோழர் அமானுல்லா கான் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 





22 வது பொது மாநாடு 2010 நவம்பரில் புதுடெல்லியில் நடைபெற்றது. இம்முறையும் ஆக்ரா சென்று தாஜ் மஹால் பார்க்கவும் அந்த நாள் வெள்ளிக்கிழமை இல்லாமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டோம். ஒரு டிராவல் ஏஜென்சியோடு முன்பே பேசி முன்பதிவு எல்லாம் செய்திருந்தோம். ஆனாலும் எங்களை ஆக்ராவில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யாமல் அந்த ட்ராவல் ஏஜென்சி டெல்லி வரச் சொல்லி சொதப்பி  ரயிலின் கால தாமதம், போக்குவரத்து இடையூறு ஆகியவற்றால் நாங்கள் தாஜ்மஹால் சென்ற நேரத்தில் கதவுகளை அடைத்துக் கொண்டிருந்தார்கள். தன் முயற்சியில் சற்றும் தளராத தோழர்கள், டெல்லி வந்த பின்பு வெள்ளி நள்ளிரவில் தனி வேனில் ஆக்ரா புறப்பட்டு பேரணி துவங்கும் முன்பாக தாஜ் மஹால் பார்த்து விட்டு திரும்பினார்கள். அந்த பயணத்தில் எங்களுக்கு கைப்பிள்ளையாக திகழ்ந்தவர் மூத்த தோழர் வி.ஆர்.ராதாகிருஷ்ணன்.

ஒரு சிறப்பான பேரணிக்குப் பின்பு ராம்லீலா மைதானத்தில் துவக்க விழா நடைபெற்றது. திரிபுரா முதல்வர் தோழர் மாணிக் சர்க்கார் மாநாட்டை துவக்கி வைத்தார். அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட சிரிஃபோர்ட் அரங்கில்தான் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. 

பஞ்சாபின் பாங்க்ரா நடனம், கவாலி இசை என்று கலை நிகழ்ச்சிகள் அட்டகாசமாக இருந்தது. தகுதி காண் அறிக்கை தயாரிக்கும் மகுழுவில் நான் இடம் பெற்றிருந்தேன். எங்கள் தென் மண்டலத் தோழர்களின் படிவங்களை சேகரித்துக் கொடுத்ததைத் தவிர வேறு பணி எதுவும் நான் செய்யவில்லை. இப்போதைய தென் மத்திய மண்டலத் தலைவரும் அன்றைய ராஜமுந்திரி கோட்டச் செயலாளருமான தோழர் பி.சதீஷ்,தன் கோட்டத் தோழர்களின் உதவியோடு அறிக்கையை தயார் செய்தார். 

மாநாட்டில் தோழர் என்.எம்.சுந்தரம் கௌரவிக்கப்பட்டார். உணர்ச்சி பொங்கிய, நெகிழ்வான தருணமாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது.




மாநாடு முடிந்து பாலிகா பஜார் சென்று ஷாப்பிங் முடித்து தங்குமிடத்தில் இருந்து பெட்டிகளை எடுத்து புறப்பட்டோம். ஆட்டோவில் சென்றால் மாட்டிக் கொள்வீர்கள் என்று டெல்லி தோழர்கள் அருகில் இருந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவுப் பொட்டலங்களோடு கொண்டு சேர்த்தார்கள். நியூ டெல்லி ரயில் நிலையத்திற்கு முந்தைய நிறுத்தத்தில் ஏறிய கும்பலால் நாங்கள் உள்ளே தள்ளப்பட்டோம். நியூ டெல்லி ரயில் நிலையத்தில் என்னாலும் திருப்பத்தூர் தோழர் சி.செல்வத்தாலும் இறங்க முடியவில்லை. அடுத்த நிறுத்ததில் இறங்கி எதிர் திசையில் செல்லும் ரயிலில் ஏறி வந்து சேர்ந்தோம்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் செல்லும் பிளாட்பாரத்திற்கு செல்லவே பதினைந்து நிமிடங்கள் ஆகி விட்டது. அங்கிருந்து எங்கள் பெட்டி இருக்கும் இடம் செல்ல இன்னொரு பத்து நிமிடம். ரயிலில் ஏறி  பெட்டிகளை அடுக்கி வைக்கவும் ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. 








23 வது மாநாடு ஜனவரி 2014 ல் நாக்பூரில் நடைபெற்றது. முதல் நாள் மதியமே சென்ற நாங்கள் மாலை அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய தீட்சா பூமிக்கு சென்று வந்தோம். 

நாக்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில்தான் எங்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணியில் வேலூர் கோட்டத் தோழர்கள் வெள்ளை சட்டை, வேட்டியில் நடை போட்டோம். தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநாட்டை துவக்கி வைத்தார். "தலைவர்கள் முக்கியமா, கொள்கைகள் முக்கியமா?" என்ற முக்கியமான கேள்வியை அவர் எழுப்பினார். இன்றளவும் இந்திய மக்கள் புரிந்து கொள்ளாத விஷயம் அது. 


அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்க இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 



தோழர் வி.ரமேஷ் புதிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இம்மாநாடு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. 

முதல் முறையாக ஒரு மகளிர் தோழர் அகில இந்திய செயலகத்தில் இடம் பெற்றார். தோழர் எம்.கிரிஜா அகில இந்திய இணைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இறுதி நாள் மாநாடு முடிந்து புறப்பட்ட அனைவருக்கும் நாக்பூரின் பிரசித்தி பெற்ற ஆரஞ்சு சோன்பப்டியை நாக்பூர் கோட்டச் சங்கம் கொடுத்தனுப்பியது. 

இரண்டு மாதங்கள் முன்பு முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டுக்கள், கடைசி வரைக்கும் காத்திருப்போர் பட்டியலிலேயே இருந்தது. வேறு வழியின்றி தட்காலில் பதிவு செய்து வீடு திரும்பினோம். 

Sunday, December 28, 2025

பெருமையாக இருக்கிறது.


 முன்னாள் ராணுவ வீரர், அஞ்சல் துறை ஊழியர், தொழிற்சங்கத் தலைவர், மிகச்சிறந்த எழுத்தாளர், அறிவொளி இயக்க செயற்பாட்டாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக, தலைவராக, மதிப்புறு தலைவராக செயல்பட்டு அந்த இயக்கத்தின் ஆணிவேராக திகழ்பவர், "திருப்பி அடித்த கதை" என்ற பெயரில் தஞ்சை மாவட்ட செங்கொடி இயக்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளவர், மகளிர் உரிமைகளுக்காக போராடுபவர், சிறப்பான வகுப்பாசிரியர், இந்தாண்டு சாகித்ய அகாடமி விருதிற்காக ஒரிஜினலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோழர் ச.தமிழ் செல்வன்.

அவருடைய முக நூல் பக்கத்தில் இந்த படத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.

ஆம், எங்கள் வேலூர் கோட்டச்சங்கத்தால் வெண்மணி புதிய நினைவகத்திற்கு வழங்கப்பட்ட தியாகிகள் நினைவுச் சின்னத்தின் முன்பாக எடுத்துக் கொண்ட படத்தைத்தான் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். 

அது எங்களுக்கு பெருமையாக உள்ளது.

பிகு: மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிமுகத்தை தோழர் தமிழ்ச்செல்வன் விரும்ப மாட்டார்.  அவர் விருதுக்கு தேர்வாகியுள்ளார் என்ற செய்தி வெளியானதும் வன்மத்தை அள்ளித்தெளித்த சில வயிற்றெரிச்சல் பேர்வழிகளுக்காக இப்பதிவு. 

அகமதாபத்திலிருந்து ஹைதராபாத் வரை


 



1994 ன் துவக்கத்தில் அகமதாபாத் நகரில் நகரில் நடைபெற்ற பதினைந்தாவது மாநாடு, நான் கலந்து கொண்ட இரண்டாவது அகில இந்திய மாநாடு.

மாநாட்டுக்கு புறப்படும் நாளன்று எங்கள் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அவர்களின் தாயார் காலமாகி விட அவரால் வர இயலவில்லை. தலைமையகத்திலிருந்து கலந்து கொண்ட ஒரே பொறுப்பாளர் நான் மட்டுமே. இந்த மாநாடு 1993 ஜனவரியில் நடந்திருக்க வேண்டும். 6, டிசம்பர், 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் வட இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்பே நடந்தது. 

மும்பை தாதர் வரை ஒரு ரயில், பிறகு அகமதாபாத் வரை இன்னொரு ரயில். மாநாட்டு அறிக்கைகளை தாதர் ரயில் நிலையத்தின் ஒரு ப்ளாட்பார்மிலிருந்து நீண்ட தூரத்திலிருந்த இன்னொரு பிளாட்பார்மிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்த பணி எங்கள் கோட்டத்திற்கு கொடுக்கப்பட்டது. ட்ராலியில் எடுத்துச் செல்ல சொத்தயையே கேட்க மறைந்த தோழர்கள் சிவகுமாரும் மனோகரும் காலியாய் இருந்த ஒரு ட்ராலியை எங்கிருந்தோ எடுத்து வர நாங்கள் தள்ளிக் கொண்டு சென்றோம். 

அந்த மாநாட்டில் ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ந்தது. ஆமாம். நிகழ்ச்சி நிரலில் தோழர் என்.எம்.எஸ் அவர்களுக்கு நன்றியுரை என்று சொல்லப்பட்டிருந்தது. இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்க வேண்டும் என்று மல்கோத்ரா குழு பரிந்துரை அளித்திருக்க தோழர் என்.எம்.எஸ் ஒரு மணி நேரம் நன்றியுரை ஆற்றினார். மாநாட்டை துவக்கி வைத்தவர் (பெயர் நினைவில் இல்லை) ஒரு பொருளாதார டாக்டர். அந்த டாக்டரையும் அன்றைய நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கையும் ஒப்பிட்டு தோழர் என்.எம்.எஸ் பேசியதை கேட்டிருந்தால் மன்மோகன்சிங் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓடியிருப்பார். 

 பணி ஓய்வுக்குப் பிறகும்  நீண்ட காலம் தலைவராக செயல்பட்ட , இன்றைக்கும் பிதாமகராக வழிகாட்டி வரும் தோழர் சந்திரசேகர் போஸ் அந்த  மாநாட்டில் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தோழர் சரோஜ் சவுத்ரி புதிய தலைவரானார். 

மாநாடு நிறைவுற்ற மறு நாள் நாங்கள் சபர்மதி ஆஸ்ரம் சென்றோம். காந்தியடிகள் கொல்லப்பட்டபோது அணிந்திருந்த உடை என்று ரத்தக்கறையுடன் ஒரு ஆடை அங்கே இருந்தது. இது போலவே மதுரை காந்தி மியூசியத்திலும் இருக்கிறதே, இது எப்படி சாத்தியம் என்று அருகில் இருந்த எங்கள் கோட்டத் துணைத்தலைவர் தோழர் புதுவை ஆர்.பி.எஸ் அவர்களிடம் கேட்க ஒரு வாலிபர் அங்கே வந்து "பாபு இங்கே இன்னமும் உயிருடன் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். தயவு செய்து சத்தம் போடாதீர்கள்" என்று மென்மையாக கடிந்து கொண்டார்.  

இப்போதைய மத்தியரசு மகாத்மாவின் பெயரை வேலை உறுதிச் சட்டத்திலிருந்து நீக்கியதை அறிந்திருந்தால் அந்த வாலிபர் என்ன செய்திருப்பாரோ!



அடுத்தது மதுரையில் பதினாறாவது மாநாடு, 1996 ன் இறுதியில்.

மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்க மதுரை, கோவை, சென்னைக் கோட்டங்கள் போட்டியிட தென் மண்டல செயற்குழுக் கூட்டத்தில் அதிக வ்பாக்குகளைப் பெற்று வென்றது மதுரை. அந்த  செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற கிளை 1 வளாகத்தில்தான் இப்போது தீ விபத்து ஏற்பட்டு முதுநிலை கிளை மேலாளர் திருமதி கல்யாணி நம்பி இறந்து போனார்.

இந்த மாநாட்டிற்கு முன்பாக நான்கு  முனைகளிலிருந்து வேன் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதில் இரண்டு வேன்கள் எங்கள் கோட்டம் வழியே பயணித்தது. அரக்கோண்த்திலிருந்து அரியலூர் வரையிலான பிரச்சாரத்திற்கு பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் பொறுப்பேற்க நானும் கோட்டத் துணைத்தலைவர் ஆர்.முருகேசனும் திண்டிவனத்திலிருந்து சீர்காழி வரை சென்றோம். 

கொட்டும் மழையின் ஊடே பிரச்சாரம் நடைபெற்றது. மக்கள் மத்தியில் எப்படி பேசுவது என்ற பயிற்சிக் களமாக அந்த பிரச்சாரம் அமைந்திருந்தது.  

மேற்கு வங்க நிதியமைச்சர்  டாக்டர் அசிம்தாஸ் கப்தாவும் மக்களவை உறுப்பினர் தோழர் பாசுதேவ் ஆச்சார்யாவும் துவக்க நிகழ்வில் பேசி இருக்க வேண்டும். மழை காரணமாக விமானங்கள் ரத்தானதால் இருவராலும் வர இயலவில்லை. முதுபெரும் பொது உடமை இயக்கத் தலைவர் தோழர் ஆர்.உமாநாத் மாநாட்டை துவக்கி வைத்தார்.

இம்மாநாட்டில் தோழர் சரோஜ் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள பஞ்சாப் சிங்கம் தோழர் ஆர்.பி.மான்சந்தா புதிய தலைவரானார்.  அன்றைய தேதியில் மிகவும் இளையவரான தோழர் கே.வேணுகோபால் இணைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

"இந்த இளைஞன் அகில இந்திய செயலகத்தில் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று நான் சொன்னவுடனேயே தன் இணைச்செயலாளர் பொறுப்பை துறக்க முன்வந்த தென் மத்திய மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் சுகுனாகர் ராவ்வை நாம் பாராட்ட வேண்டும்" என்று தோழர் என்.எம்.சுந்தரம் சொல்ல, அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தது. 


முதல் இரண்டு மாநாடுகளில் பார்வையாளராக கலந்து கொள்ள இம்மாநாட்டில்தான் முதல் முறையாக பிரதிநிதியாக கலந்து கொண்டேன். என் மனைவி பார்வையாளராக பங்கேற்றார். எங்கள் மகனை கும்பகோணத்திலிருந்த மாமனார் வீட்டில் விட்டு விட்டு நாங்கள் மாநாட்டில் பங்கேற்றோம். 




அடுத்த மாநாடு ஹைதராபாத் நகரில். இந்து ஆசிரியர் தோழர் என்.ராம் துவக்கி வைத்தார். ஒரு நாள் முன் கூட்டியே வந்து விட்டதால் கோல்கொண்டா கோட்டை, சாலார் ஜங் மியூசியம் எல்லாம் சென்றோம். இன்சூரன்ஸ் மசோதாவிற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று இம்மாநாட்டில்தான் முடிவெடுக்கப்பட்டது. எண்ணற்ற செயல்வீரர்களை அடையாளம் காண்பித்தது  இந்த கையெழுத்து இயக்கம்தான், 

மாநாடு முடிந்து திரும்பும் போது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் ஏற்பட்டது. 

வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய காலத்தில் அந்த சம்பவத்தை எழுதியுள்ளேன்.  வழி மறித்த உளவுத்துறை  என்ற அந்த பதிவை இணைப்பின் மூலம் படித்து விடவும். 



Saturday, December 27, 2025

கட்டாக்கில் முதல் முறையாக

 




நான் கலந்து கொண்ட முதல் அகில இந்திய மாநாடு 1990 ல் ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற 14 வது மாநாடு. சொல்லப் போனால் வேலூர் கோட்டத்திற்கே அதுதான் முதல் மாநாடு. 12.06.1988 அன்றுதான் வேலூர் கோட்டம் உதயமானது.

வேலூர் கோட்டத்திலிருந்து பங்கேற்ற தோழர்களில் நெய்வேலியிலிருந்து கலந்து கொண்ட நாங்கள் எழுவர் மட்டும் சென்னையிலிருந்து சென்னை கோட்டத் தோழர்களுடன் பயணித்தோம்.  மற்ற தோழர்கள் வேலூர் காட்பாடியிலிருந்து  நேரடியாகவே கட்டாக் செல்லும் வண்டியில் சென்று விட்டனர்.  நாங்கள் அத்தனை பேரும் ஒரே பெட்டியில் பயணிக்கவில்லை. வேறு பெட்டியில் பயணித்த இரண்டு தோழர்கள் விசாகப்பட்டிணத்தில் இரண்டு தோழர்கள் பெட்டியின் கதவை தட்டி மீண்டும் இங்கே ஏறிக் கொண்டார்கள். 

ஏன்?

அவர்களை அந்த பெட்டியிலிருந்து வட மாநிலப் பெண்கள் இறக்கி விட்டு விட்டார்கள்.

ஏன்?

அதில் ஒருவர் நிறத்தில் மிகவும் கருப்பாக இருப்பார். அதனால் அவரை எல்.டி.டி.இ என்று சொல்லி இறக்கி விட்டுள்ளனர். இத்தனைக்கும் அப்போது ராஜீவ் காந்தியெல்லாம் கொல்லப்படவில்லை.

கட்டாக்கில் உள்ள  ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில்தான் மாநாடு நடைபெற்றது. ஒடிஷா முன்னாள் முதல்வர் பிஜு பட்னாயக்கின் பங்களா ஒன்றில் மதுரை, தஞ்சை, வேலூர் கோட்டத் தோழர்கள் தங்க வைக்கப் பட்டிருந்தோம். காலை 5 மணிக்கெல்லாம் டீயுடன் தொண்டர்கள் எழுப்பி விடுவார்கள். எங்களை எழுப்பி விட்டவர் அருகில் உள்ள பாரதீப் துறைமுகத்தின் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்பது கடைசி நாளன்று தெரிந்தது.

ஒவ்வொரு நாளும் தோழர் ஜோசப் மதுரை, தோழர் ஜகதீசன், வேலூர், தோழர் எஸ்,ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று கோட்டப் பொதுச்செயலாளர்கள் தலைமையில் தினசரி மகாநதியில் குளிக்கச் செல்வோம். வழியெங்கும் தலைவர்கள் பேசிக் கொண்டு வருவார்கள். நாங்கள் கேட்டுக் கொண்டு வருவோம், அதுவே ஒரு நல்ல அனுபவம்.

மாநாட்டை மேற்கு வங்கத்தின் அன்றைய நிதியமைச்சர் தோழர் அசோக் மித்ரா துவக்கி வைத்தார். அவர் பேசியதில் பல, அன்றைக்கு புரியவில்லை என்பதை மனசாட்சியோடு சொல்ல விரும்புகிறேன்.

விவாதங்கள் மிகச் சிறப்பாக இருந்தன. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை நாடு முழுதும் வழி நடத்திச் செல்லும் தூண்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. 

வி.பி.சிங் ஆட்சி கலைக்கப்பட்டு, பின்பு சந்திரசேகர் ஆட்சியும் கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது.  ரத யாத்திரை முடிந்திருந்தது. மண்டல் கமிஷனுக்கு எதிராக போராட்டங்களும் நடந்து முடிந்திருந்த காலம்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மத வெறிக்கு எதிரான அமைப்பு, சமூக நீதிக்கு ஆதரவான அமைப்பு என்பதை அனைத்து தோழர்களுக்கும் உறுதி செய்தது கட்டாக் மாநாடு.

மாநாடு நடைபெற்ற உள்ளரங்கிற்கு அடுத்தாற்போல் இருந்தது பாரபதி ஸ்டேடியம். மாநாட்டின் கடைசி நாளன்று இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதல் நாளன்று அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் என்.எம்சுந்தரம் "No Comrade should be tempted to see a cricket match" என்று தெளிவாக சொன்னார். 

மாநாடு முடிந்து பேரணி நடந்து கொண்டிருந்த போது ஸ்டேடியத்தில் இருந்து  ஏழெட்டு தோழர்கள் மட்டும் ஓடி வந்து பேரணியில் இணைந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 1500 பேரில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் போட்டிக்கு போயிருந்தனர். அந்த போட்டியில் இந்தியா தோற்றுப் போனது என்பது வேறு விஷயம்.

நான் கலந்து கொண்ட முதல் மாநாடு கட்டாக் மாநாடு. அநேகமாக முழுமையாக கலந்து கொள்ளக் கூடிய இறுதி மாநாடு புவனேஸ்வர் மாநாடு. இரண்டும் ஒடிஷா மாநிலத்தில்தான்.

பிகு" மேலே உள்ள படத்தில் உள்ள வேலூர் கோட்டத் தோழர்களில் தோழர் பாலாஜி, பாலு ஆகிய இருவர் மட்டும் அதிகாரிகளாக பணியில் உள்ளனர். தோழர்கள் ஆர்.வெங்கடேசன், டி.எஸ்.முத்துசாமி, கே.ஆர்.ஸ்ரீதர், ஜி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காலமாகி விட்டனர். இரண்டு படங்களிலும் எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அருகில் நான் உள்ளேன். 




Friday, December 26, 2025

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று . . .

 


ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று பென்ஷன் வங்கிக் கணக்கில் சேர்ந்து விட்டது என்று வரும் குறுஞ்செய்தியை பார்க்கையில் எங்களின் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்வேன். வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அமைப்புக்களோடு ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்கி பென்ஷன் கோரிக்கையை வென்றெடுத்தது, ஓய்வூதிய நிதியில் பற்றாக்குறை வருமானால் நிறுவனமே அதை ஈடு செய்யும் என்ற ஷரத்தை இணைத்தது, பென்ஷனில் மூன்றில் ஒரு பங்கை காசாக்கிக் கொள்ளும் வசதியான கம்யூடேஷன் பலன், ஒரு ஊழியர் பணியில் இருக்கும் போது இறந்து போனால் அக்குடும்பம் இழந்து போகும். அப்பலனை ஈடு செய்ய ஒரு பிரத்யேக குழுக் காப்பீட்டுத் திட்டம், -இதெல்லாம் தோழர் என்.எம்.எஸ் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு அளித்த கொடை. 

உங்களை எந்நாளும் மறவோம் தோழரே . . .

தோழர் சுந்தரம் அவர்கள் மறைந்த போது எழுதிய இரண்டு பதிவுகளை இங்கே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று எங்களை தாக்கிய சுனாமி



26 டிசம்பர் மீண்டும் ஒரு முறை துயரம் தோய்ந்த நாளாய் அமைந்து விட்டது. எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவரும், மிகச் சிறந்த பொருளாதார அறிஞரும் உழைக்கும் வர்க்கத்தின் வழிகாட்டியுமான தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் இன்று மறைந்தார் என்ற செய்தி சுனாமியாய் எங்களை தாக்கியது.

ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் எப்படி சமரசம் இன்றி உறுதியாக இருப்பாரோ, அது போலவே ஊழியர்கள் அலுவலகப் பணியை செய்ய வேண்டும் என்பதிலும் சமரசம் இல்லாமல் கண்டிப்பாக இருப்பார்.

உலகமயத்தின் தீமைகளைப் பற்றியும் சர்வதேச நிதி மூலதனத்தின் லீலைகளைப் பற்றியும் மிகவும் நுணக்கமாக ஆராய்ந்து அவர் எழுதியுள்ள பல்வேறு கட்டுரைகள் உழைக்கும் மக்களுக்கு அவர் வழங்கிய சக்தி மிக்க ஆயுதங்கள்.

1986 ல் எல்.ஐ.சி பணியில் இணைந்தாலும் அவரைப் பார்க்கிற, அவர் உரையைக் கேட்கிற வாய்ப்பு என்பது 1988 ல் தான் கிடைத்தது. அவர் என்னை அறிந்து கொள்ளும் வாய்ப்பு என்பது 1989 ல் நான் அடியாட்களால் தாக்கப்பட்ட பிறகே கிடைத்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு  ஒரு முறை சென்னை சென்ற போது அப்போதைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் கே.நடராஜன் அறிமுகப் படுத்தி வைத்தார். கைகளைப் பற்றிக் கொண்டு "Be Brave and Bold. You can face any challenge" என்று சொன்னதை வாழ்நாளில் மறக்கவே முடியாது. இன்றளவும் அந்த வார்த்தைகள்தான் எதையும் சந்திக்கும் தைரியத்தை அளித்து வருகிறது. சோர்வுற்ற வேறொரு நாளில் அவரோடு தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடலும் உற்சாகம் அளிக்கும் டானிக் 

எங்கள் கோட்டத்தின் வெள்ளி விழா ஆண்டு துவக்க நிகழ்வில் அவர் பங்கேற்று உரையாற்றிய புகைப்படத்தைத்தான் அந்த நாள் முதல் முக நூலில் Cover Photo வாக பெருமிதத்துடன் வைத்துள்ளேன்.  அந்த புகைப்படத்தை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



தன் வாழ்நாள் முழுதையும் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்திற்கும் அர்ப்பணித்த தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வெளியிட்ட சுற்றறிக்கையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 


இன்சூரன்ஸ் ஊழியர்களின்  இமயம் சரிந்தது.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாபெரும் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் இன்று காலை சென்னையில் இயற்கை எய்தினார் என்பதை பெருந்துயரத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அறுபதுகளின் துவக்கத்தில் எல்.ஐ,சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்செயலாளராக ஒரு மிகப் பெரிய பொறுப்பை தன் இளந்தோள்களில் ஏற்றவர் தோழர் என்.எம்.எஸ்.  இரண்டாண்டுகளிலேயே இருபத்தி ஐந்து வயதில் தென் மண்டலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் என்.எம்.எஸ் தன் உழைப்பாலும் அறிவாற்றலாலும் உழைப்பாளி மக்களின் மீதான நேசத்தாலும் நாடறிந்த தலைவராக மாறினார்.

1988 ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பதிமூன்றாவது அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக தோழர் என்.எம்.எஸ் சுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்தின் தலைமையக்கம் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாறியது. மிகுந்த சவால்கள் நிரம்பிய காலகட்டத்தில் அவர் அகில இந்தியப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.

உலகமயமாக்கலின் கோர விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு அதற்கெதிரான போராட்டங்களுக்கு ஊழியர்களை தத்துவார்த்த அடிப்படையில் தயார்படுத்திய பெருமை அவருக்குண்டு. 1990 களின் அமெரிக்கச் சட்டம் சூப்பர் 301, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற விழிப்புணர்வை  உருவாக்க புது டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டின் மூலம் ஒரு மிகப் பெரிய போராட்டத்தின் துவக்கப் புள்ளியாய் இருந்தது தோழர் என்.எம்.சுந்தரம் திகழ்ந்தார்.

இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதிக்க வேண்டும், எல்.ஐ.சி யின் பங்குகளில் 50 % ஐ விற்க வேண்டும் என்ற மல்ஹோத்ரா குழு அறிக்கை அளித்த போது அவை எப்படி தேசத்திற்கும் மக்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று அவர் எழுதிய இரண்டு புத்தகங்கள், நம்முடைய போராட்டங்களின் சக்தி மிக்க ஆயுதங்கள்.

“எல்.ஐ.சி யை  பாதுகாப்பதற்கான நம் போராட்டம், பாலிசிதாரர்களுக்கு சிறப்பான சேவையை செய்வதன் மூலமாக நம்முடைய மேஜையிலிருந்துதான் துவங்குகிறது” என்று நம்மை தொடர்ந்து வலியுறுத்துபவர். அதனை கடைபிடிப்பதால்தான் நம்மால் இந்நாள் வரை மக்களிடம் தைரியமாக செல்ல முடிகிறது. எல்.ஐ.சி நிறுவனமும் இன்று வரை முழுமையான பொதுத்துறை நிறுவனமாக நீடிக்கிறது.  வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களை இணைத்து கூட்டு போராட்டக்குழு அமைத்து பென்ஷனை வென்றெடுத்ததில் தோழர் என்.எம்.எஸ் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் எதிர்காலத்தில் நேரக்கூடாது என்று அவர் காண்பித்த உறுதியை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.

“இன்சூரன்ஸ் வொர்க்கர்” இதழின் ஆசிரியராக பல்லாண்டு காலம் செயல்பட்ட தோழர் என்.எம்.எஸ் எழுதிய “Let us play Politics” கட்டுரைத் தொடர், நமக்கெல்லாம் அவர் எடுத்த பாடங்கள். தொழிற்சங்கத் தலைவர் என்பதைத் தாண்டி மிகப் பெரிய பொருளாதார நிபுணராகவும் திகழ்ந்தார். சுரண்டலற்ற சோஷலிச சமுதாயமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும் என்பதையும் அதற்கான பயணத்தில் நாம் முன்னேற வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்துபவர்.

2002 ம் ஆண்டு ராய்ப்பூரில் நடைபெற்ற பத்தொன்பதவாது மாநாட்டில் அகில இந்தியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் என்.எம்.எஸ் 2007ல் நாக்பூரில் நடைபெற்ற இருபத்தி ஒன்றாவது மாநாடு வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார்.  இந்த ஆண்டு துவக்கத்தில் எர்ணாகுளத்தில் நடைபெற்ற இருபத்தி நான்காவது மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டு வழி காட்டினார்.

1988 ல் வேலூர் கோட்டத்தை அவர் துவக்கி வைத்தார். வெள்ளி விழா கொண்டாட்டங்களை அவர்தான் துவக்கி வைக்க வேண்டும் என்று நாம் அழைத்த போது தன் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சிறப்பித்தார். 1994ல் மல்ஹோத்ரா குழு அறிக்கைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் மூன்று மணி நேரம் அவர் உரையாற்றியதை யாரால் மறக்க இயலும்!

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை தத்துவார்த்தப்பாதையில் அழைத்துச் சென்ற மகத்தான தலைவர் மறைந்துள்ளார். அவரது லட்சியங்களை உயர்த்திப் பிடிப்பதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.

தோழர் என்.எம்.எஸ் அவர்களுக்கு செவ்வணக்கம்

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,

வேலூர் கோட்டம்

கண்களால் அவர் வாழ்வார்



மறைந்த எங்கள் தலைவர் தோழர் என்.எம்.எஸ் பற்றிய நேற்றைய பதிவில் விடுபட்டுப் போன இரண்டு விஷயங்களை இணைக்கவே இப்பதிவு.

World Federation of Trade Unions அமைப்பின் மாநாடு 1988 ல் பல்கேரியா நாட்டின் தலைநகர் ஸோபியா வில் நடைபெற்ற போது அவர் ஆற்றிய உரை என்பது மிகவும் முக்கியமானது.  அந்த உரை இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழில் வெளியானது. விரைவில் அதை பகிர்ந்து கொள்கிறேன்.

WFTU அமைப்பின் ஒரு அங்கம் Trade Union International of Public and Allied Sectors என்பது. அதன் நிர்வாகக்குழு உறுப்பினராக செயல்பட்டவர் தோழர் என்.எம்.எஸ்.

World Social Forum நிகழ்வுகளிலும் அவரது பங்கேற்பு, வழிகாட்டுதல் இருந்துள்ளது.

இந்தியாவைக் கடந்தும் அவரது பணி விரிவடைந்துள்ளது. 

இரண்டாவது முக்கியமான செய்தி.

அவரது விருப்பத்தின்படி அவருடைய கண்கள் கொடையாக அளிக்கப்பட்டது.

மரணத்திற்குப் பின்னும் தன் கண்களால் வாழ்கிற மாமனிதர்.