Showing posts with label கோவை கலவரம். Show all posts
Showing posts with label கோவை கலவரம். Show all posts

Thursday, December 19, 2024

கோவை - பிரியாணி அண்டாக்கள் ஜாக்கிரதை

 


கோவையில் உள்ள பிரியாணி கடைக்காரர்கள் எல்லாம் பதற்றத்தில் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆறு வருடங்களுக்கு முன்பு செப்டம்பர் 22ம் தேதி நடைபெற்ற நிகழ்வு இன்னும் மறக்க முடியாத அச்சத்தை தந்துள்ளது.

சசிக்குமார் என்ற சங்கி, சொந்த காரணங்களுக்காக (காரணத்தை சொல்ல நான் விரும்பவில்லை)  கொலை செய்யப்பட்டபோது சங்கிகள் ஊர்வலம் என்ற பெயரில் ரௌடித்தனம் செய்து கடைகளை உடைத்து பொருட்களை திருடிப் போனார்கள். அதிலே பிரியாணியை அண்டாவோடு திருடிப் போனார்கள்.

அதற்கென்ன இப்போது என்று கேட்கிறீர்களா?


பாஜக நாளை ஊர்வலம் போனால் கோவைக்காரர்கள் பயப்படாமல் என்ன செய்வார்கள்? கடைகளை அடைத்து வைத்தால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. 

ஆமாம், ஆட்டுக்காரா, இந்த ஊர்வலத்துக்கு தலைமை அர்ஜுன் சம்பத்தானே? கோவைக் கலவரத்தின் போது மருத்துவமனையில் நான்கு பேரை கொலை செய்தமைக்காக சிறைக்கு போய் இன்னமும் பெயிலில் இருக்கும் பயங்கரவாதிதானே அவரு!



Tuesday, September 22, 2020

அண்டா பிரியாணி திருட்டு தினம்

 


வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் முக நூலில் நினைவு படுத்தினார்.  2016 ம் வருடம் இதே நாளில்தான் சங்கிகள் காவல்துறை ஆசியோடு வெறியாட்டம் ஆடினார்கள்.

 தனிப்பட்ட காரணங்களால் கொல்லப்பட்ட சசிகுமார் என்ற சங்கியின் மரணத்திற்கு மதச்சாயம் பூசி சடலத்தை வைத்துக் கொண்டு ஊர்வலம் என்ற பெயரில் இஸ்லாமியர்களின் கடைகளை அடித்து நொறுக்கினார்கள். மொபைல் போன் கடைகளை உடைத்து உள்ளே புகுந்து மொபைல் போன்களை  திருடிக் கொண்டு ஓடினார்கள். ஆஜ்மீர் பிரியாணி கடை என்ற கடையில் அப்படியே அண்டாவோடு பிரியாணியை கொள்ளையடித்துத் தின்றார்கள்.

 அண்டா பிரியாணி திருட்டுக் கட்சி என்ற பெயரும் பாரதீய ஜனதா கட்சிக்கு வர இந்த சம்பவம்தான் காரணம்.

 சங்கிகள் அடிப்படையாக மோசமானவர்கள். எல்லாவற்றிலும் மோசடி செய்பவர்கள். அதனால் அவர்களோடு வர்த்தக உறவோ, ஏன் குடும்ப உறவோ உள்ளவர்கள் கூட பாதிக்கப்படுகிறார்கள். அந்த மோசமான குணாம்சத்தின் விளைவாக, சங்கிகளின் துரோகத்தின் எதிர்வினையாக சில நேரம் கொலைகள் கூட நிகழ்கிறது.

 ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழும் கொலைகளுக்குக் கூட மதச்சாயம் பூசி மதக் கலவரத்தைத் தூண்டுவது என்பதும் சங்கிகளின் குணாம்சம். இதிலே மிகப் பெரிய கேடி எச்.ராசா. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தலையீட்டால் ராசா தூண்டியும் ராமநாதபுரத்தில் கலவரம் தடுக்கப்பட்டது என்பது இந்த மாத உதாரணம். ஆனால் எடுபிடி அரசு அந்த எஸ்.பியை பந்தாடி விட்டது.

பாஜகவின், சங்கிகளின் கலவர வரலாற்றை நினைவு கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. “அண்டா பிரியாணி திருட்டு தினம்” நினைவு படுத்துவது இதைத்தான்.

 திருடிச் சென்ற அண்டா இன்னும் திரும்பி வராததால்

#அண்டாவை_திருப்பிக்கொடுங்கடா

என்று சொல்ல வேண்டியுள்ளது.

Tuesday, September 27, 2016

பொட்டு வைத்தால் விட்டு விடுவார்கள்????????




கோட்டைமேடு, துடியலூர் பகுதிகளுக்கு மாதர் சங்க தூதுக்குழு போனோம். பல கடைகளில் பொருட்கள் களவாடப் பட்டுள்ளன. மீதி கொளுத்தப் பட்டுள்ளன. சமூக வலைத்தளத்தில் வந்த செல் போன் கடையைப் பார்த்தோம். உரிமையாளர் தற்கொலை மனநிலையில் உள்ளார். ரூ.60 லட்சம் இழப்பு. அவர் இசுலாமியர். பக்கத்தில் மகாலட்சுமி பேக்கரியும் சுத்தமாய் திருடப் பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தலா 2000 இரண்டு கோஷ்டிகள் கேட்ட போது இவர் 500 கொடுத்தது தான் காரணம். கடைகளின் உரிமையாளர்கள் வாய் விட்டு அழுகிறார்கள்.

 துடியலூரில் ஓர் இசுலாமிய குடும்பத்தில் இரண்டு நாட்களில் திருமணம். கட்சி தோழர்கள் முன் கூட்டியே தகவல் கொடுத்து அவர்களை அப்புறப்படுத்தியதால் தப்பித்தனர். 5,6 வீடுகள் அங்கு உள்ளன. எல்லாம் சில்லு சில்லாக நொறுங்கிக் கிடக்கின்றன. அவர்களின் மாட்டுக்கறி கடை தகர்க்கப்பட்டுள்ளது. மாட்டின் மீது அக்கறை என நினைத்து விடாதீர்கள். அங்கிருந்த மாடுகள் அடிக்கப் பட்டு, ஒரு கன்றுக்குட்டி இரு சக்கர வாகனத்தில் அபேஸ் செய்யப் பட்டுள்ளது.

 மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மக்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க முழுமையாகத் தவறி விட்டன. தெரிந்தே நடந்ததாகவே ஊகிக்க வேண்டியிருக்கிறது. இறுதி ஊர்வலம் 18 கிமீ தொலைவு செல்ல அனுமதி ஏன் அளிக்கப்பட்டது? கல்லெறி மற்றும் சூறையாட லின் போது போலீஸ் என்ன செய்தது? சில இடங்களில் போன் செய்தும் ஸ்டேஷனில் எடுக்கவில்லை. எஸ்.பி.க்கு செய்தால் ஸ்டேஷனுக்கு செய்யுங்கள் என்று சொல்லப் பட்டது.

 இரண்டு பள்ளிக் குழந்தைகளை இரு பக்கமும் இடுக்கிக் கொண்டு முகம் நிறைந்த பீதியோடு ஓர் இசுலாமியர் சாலையைக் கடக்கும் போட்டோ வலை தளத்தில் வந்தது. அந்தப் பள்ளியைப் பார்த்தோம். அவர் வெளியே போயிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை.

அனைவரும் கூறுவதிலிருந்து சில கேள்விகள் - பெரிய பெரிய கற்கள் கடைகளை உடைக்க பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. நினைத்த மாத்திரத்தில் அது தெருவில் கிடைக்காது. பல இடங்களில் கடப்பாரை வைத்து நெம்பப் பட்டுள்ளது. சின்ன கேஸ் சிலிண்டர் வைத்து ஷட்டர் அறுத்து எடுக்கப் பட்டுள்ளது. இது திட்டமிட்ட வன்முறை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

துடியலூரில் ஒரு பகுதியில் கணிசமாய் இசுலாமியர்கள். அச்சத்தில் நடுங்கியவர்களைக் காக்க அங்கிருந்த மாதர், வாலிபர் சங்க உறுப்பினர்கள் திரண்டு பகுதியின் நுழைவிடத்தில் வந்து நின்று விட்டனர். உயிரைத் துச்சமென மதித்து களத்தில் நின்ற அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அங்கிருந்த 5 வயது இசுலாமிய சிறுமி பொட்டு வைத்திருந்தாள். நம்மிடம் விளக்கினாள். பொட்டு வைத்திருந்தால் ஒன்றும் செய்ய மாட்டார்கள், இந்துக்கள் என விட்டு விடுவார்கள். நமக்கு நெஞ்சே வெடித்து விட்டது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் உ.வாசுகி அவர்களின் முக நூல் பதிவுகளில் இருந்து. 

மேலே உள்ள படம் தோழர் உ.வாசுகி, அரக்கோணத்தில் நடைபெற்ற எங்கள் கோட்ட மாநாட்டை துவக்கி வைத்த போது எடுத்தது.  

Saturday, September 24, 2016

கோவைக்கலவரம் பற்றி மீண்டும் படியுங்கள்




சில மாதங்கள் முன்பு ஒரு நூல் பற்றி எழுதியிருந்தேன்.  நேற்று காவிப்படை கோவையில் நடந்து கொண்டதையும் அதற்கு உறுதுணையாக காக்கிகள் இருந்ததையும் பார்க்கையில் இக்கலவரமும் முன் கூட்டியே திட்டமிடப் பட்டது என்றும் கலவரத்துக்கான சூழலை பிள்ளையார் சதுர்த்தியில் இருந்தே திட்டமிட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.


 

Wednesday, July 6, 2016

கோவை கலவரம் – ஒரு நூல், மூன்று அதிர்ச்சிகள்




சென்னை புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயத்தில் வாங்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து பணம் கொடுத்து விட்டு பில் போடும் போதுதான் இந்த நூலைப் பார்த்தேன். இதுவும் வாங்க வேண்டிய ஒன்று என முடிவு செய்து வாங்கினேன். நேற்றைய புதுவைப் பயணத்தில்தான் படித்தேன். அந்த நூலில் சொல்லப்பட்ட மூன்று செய்திகள் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்ததால் அவற்றை பதிவு செய்யவே உடனடியாக இன்றே எழுதுகிறேன்.

அந்த நூல் : கோவை கலவரத்தில் எனது சாட்சியம்.

இந்திய தேசிய லீக் கட்சியின் புவனகிரி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு ஏ,வி,அப்துல் நாசர் சொல்ல பழனி ஷஹானால் எழுதப்பட்டு சென்னை ஆழி பப்ளிஷர்ஸால் வெளியிடப்பட்ட நூல். விலை ரூபாய் 100.

போக்குவரத்து காவலர் செல்வராஜ், அல்உமா  தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பின்பு நடைபெற்ற வெறியாட்டத்தின் பின்பும் கோவையில் குண்டு வெடிப்பிற்குப் பிறகும் களப்பணி செய்தவர்

கோவை கலவரம், அதற்கு முன்பிருந்த சூழல், ஊதி பெருக்கப்பட்ட பகைமை உணர்ச்சி, காவல் துறையில் ஊடுறுவிய காக்கிகள் போன்ற பல விஷயங்கள் ஏற்கனவே அறிந்ததுதான். அவற்றையெல்லாம் இவர் உறுதி செய்கிறார்.

இந்த நூலில் சொல்லப்பட்ட மூன்று முக்கியமான விஷயங்கள் நான் அறியாதவை. எனவே எனக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது.

இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டது போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொலை. ஒரு இந்து போலீஸ்காரரை கொலை செய்தததற்கு பழி வாங்கவே இந்து முன்னணி வெறியாட்டத்தில் ஈடுபட்டது. போலீஸ் அவர்களுக்கு உடந்தையாக இருந்தது என்பதுதான் இதுவரை நாம் அறிந்த செய்தி.

கொல்லப்பட்ட போக்குவரத்து காவலர் செல்வராஜ் இந்து அல்ல, அவரது முழுப் பெயர் அந்தோணி செல்வராஜ். ஆக ஒரு இந்துவின் கொலைக்காக இந்து முன்னணி களமிரங்கவில்லை. ஏற்கனவே உள்ள பகைக்கு கணக்கு தீர்க்கவே இக்கொலையை காரணமாக்கியது. 
கலவரம் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு அப்போது கோவை போலீஸ் கமிஷனர் பொறுப்பு வகித்த மாசாண முத்து காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்துகிறார். முஸ்லீம் காவலர்களை வெளியே போகச் சொல்லி விட்டு நடந்த கூட்டத்தில் காவல்துறை அல்லாத ஒரு மனிதர் கலந்து கொண்டு போலீஸை வெறியூற்றுகிறார். அந்த மனிதர் யார் தெரியுமா? வீரத்துறவியார் என்று அழைக்கப்படுகிற ராம.கோபாலன். காவல்துறை கூட்டத்தில் அவருக்கு என்ன வேலை?

முதல் நாள் இரவு கூட்டம் நடக்கிறது. மறுநாள் முந்நூறு போலீசார் மாசாணமுத்து தலைமையில் ஊர்வலம் போகிறார்கள். அவர்களுக்கு பின்னே இந்து முன்னணியினர். அதன் பின்பே கலவரம் தொடங்குகிறது. அழிவு வேலை ஆரம்பிக்கிறது. மிகப் பெரிய துணிக்கடையான ஷோபா டெக்ஸ்டைல்ஸ் ஷட்டரை போலீசே உடைத்து பொருட்களை சூறையாடவும் தீயிட்டு கொளுத்தவும் ஏற்பாடு செய்கிறது.

கலவரத்திற்கு எதிர்வினையாக குண்டு வைக்க அல் உமா திட்டமிடுகிறது. இப்படி ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது என்பதை தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் கோவை போலீஸ் கமிஷனரிடமும் தமிழக டி.ஜி.பி யிடமும் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் அதை தடுப்பதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குண்டு வெடிப்பு நடக்கட்டும் என்று காத்திருந்தது போலவே தெரிகிறது என்று குற்றம் சுமத்துகிறார் அப்துல் நாசர்.

ஒரு சமுதாயத்தையே குற்றப்பரம்பரையாக சித்தரிக்க காவல் துறையும் காவிக் கூட்டமும் கை கோர்த்து சதி செய்தது என்ற அவரது குற்றச்சாட்டு வலிமையானது.

ஆனால் அவர்கள் எல்லாம் இன்று சமுதாயத்தில் கௌரவமிக்கவர்களாக வாழ்கிற போது குற்றத்திற்கு தொடர்பில்லாத பல அப்பாவிகள் இன்னும் சிறையில் வாடுவது ஒரு மிகப் பெரிய அநீதி.

வன்முறையும் அப்பாவி மக்களைக் கொன்றதும் இஸ்லாத்திற்கே முரணானது என்பதை பல இடங்களில் அழுத்தமாக சொல்கிறார் நாசர். கோவை கலவரம் தொடர்பான ஒரு உண்மையான ஆவணாக இந்நூலை பார்க்கிறேன். இந்த நூலை கொண்டு வந்ததற்கும் இன்னொரு கலவரம் நிகழ்வதை தடுத்ததில் ஆற்றிய பங்கிற்கும் (நூலை வாங்கி விபரங்களை அறிந்து கொள்ளுங்களேன்) திரு ஏ.வி.அப்துல் நாசர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.