Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Sunday, November 15, 2015

தொடர் பதிவில் நானும்




கடவுளைக் கண்டேன் என்ற தொடர் பதிவில் என்னையும் எழுதச் சொல்லி நண்பர் செல்வகுமார் கேட்டுக் கொண்டார்.  நமக்கு ஒத்து வராத தலைப்பாகி விட்டதே என்பதால் கொஞ்சம் தாமதமாகி விட்டது. சரி கடவுளை விட்டு விடுவோம்.  சின்னதும் பெரியதுமாக இருக்கிற நமது ஆசைகளை  மட்டும் எழுதி வைப்போம் என்று தொடங்குகிறேன்.

1) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாத நிலை வேண்டும். வல்லான் பொருள் கொழிக்கும் தனியுடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை.

2) அரசியலிலும் நிர்வாகத்திலும் ஒழிந்திட வேண்டும் ஊழல்.

3) பாதுகாப்புச் செலவினங்களுக்காக பட்ஜெட்டில் பெரும் தொகை ஒதுக்கப்படும் நிலை மாற்றப்பட்டு கல்விக்கும் சுகாதாரத்திற்கும் போதுமான தொகை ஒதுக்கப்பட வேண்டும்.

4) மனிதர்களை ஜாதி கொண்டும் மதம் கொண்டும் பார்க்கிற, பிரிக்கிற இழிநிலை நீங்கிட வேண்டும்.

5) வேலையில்லா திண்டாட்டம் ஒழிந்திட வேண்டும்.

6) வாக்களித்த மக்களை புறக்கணித்து பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு வால் பிடிக்கும் அரசுகளை மக்கள் புறக்கணித்திட வேண்டும்.

7) வயிற்றுக்குச் சோறிடும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைத்திட வேண்டும்.

8)  கடுமையாக உழைத்து லாபத்தை பெருக்கும் தொழிலாளிகளுக்கு அந்த லாபத்தில் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும். 

9) இயற்கை அளித்த செல்வங்களை சுரண்டுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

10) தீவிரவாதிகளின் ஆயுதங்கள்  பறிக்கப்பட்டு மௌனமாக வேண்டும். அரசு பயங்கரவாதத்திற்கும் இது பொருந்தும்.

தோழர் செல்வகுமார், இது போதுமா? இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமல்லவா?
 

 

Saturday, June 6, 2015

வேலூரில் (மினி) பதிவர் சந்திப்பு

பதிவர் திரு  விசுawesome  அவர்களின் விசுவாசமின் சகவாசங்கள் நூல் வெளியீட்டு விழா இன்று வேலூர் ஊரிஸ் கல்லூரியில் நடைபெற்றது.

வி.ஐ.டி வேந்தர் திரு ஜி.விஸ்வநாதன் அவர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றினார். திரு விசுவாசம் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். திரு விசுவாசம் அவர்களின் தாயார் செய்து வரும் சமூக நலப் பணிகள் குறித்து பலரும் பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேரன் பாடிய ஒரு பாடலும் நன்றாக இருந்தது. த,மு,எ,க,ச மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் கவிஞர் முத்து நிலவன் தன் அழகு தமிழால் நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார். 

இந்த நூல் விற்பனை மூலம் வரும் தொகையை வேலூரிலேயே சமூக நலப் பணிகளுக்கு பயன்படுத்தப் போவதாக திரு விசுவாசம் அறிவித்தார். பாராட்டத்தக்க செயல் இது.

பல வலைப் பதிவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஒரு சிறப்பம்சம். 

திருவாளர்கள் திண்டுக்கல் தனபாலன், மதுரைத் தமிழன், தருமி, ராயல் செல்லப்பா, கோவை ஆவி, தில்லையகத்து துளசிதரன், கீதா. மகேஷ், வாத்தியார் எனும் அன்பு பால கணேஷ், மூங்கில் காற்று முரளி மற்றும் உள்ளூர் அன்பே சிவம் சிவசக்தி என பலரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இன்னும் ஓரிருவர் கூட இருந்தார்கள்.

அத்தனை பேரோடும் அறிமுகம் செய்து கொண்டு  புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். இன்னும் கொஞ்ச நேரம் கூட இருந்து பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் வேறொரு பணி காரணமாக புறப்பட வேண்டியதாயிற்று.

புதுக்கோட்டையில் பதிவர் திருவிழா நடத்தலாம் என்ற யோசனை இருப்பதாக தோழர் முத்துநிலவன் கூறினார். நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் அப்போது அனைவரையும் நேரில் சந்திக்கலாம். 

நூல் வெளியீட்டிற்கும் பல பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கியதற்கும் திரு விசுவாசம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

இன்றைய நிகழ்வின் புகைப்படங்கள் கீழே.