Sunday, April 12, 2020

கொரோனா - நதியின் இரண்டு பக்கங்கள்

உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (WFTU)

பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் அறிக்கை
*******************************

அன்பிற்குரிய இரு பால் சகாக்களே!

நாம் உலகின் நான்கு மூலைகளுக்கும் கொரோனா பரவிக் கொண்டிருக்கிற ஓர் பேரழிவு காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.

உலக தொழிற் சங்க கூட்டமைப்பின் சார்பில் உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்களைப் பாராட்ட விழைகிறோம். ஏனெனில் மனித குலம் பிழைத்திருக்க தேவையான பொருட்களை தங்கள் உழைப்பின் வாயிலாக வழங்கி கொண்டிருக்கிறார்கள். உணவு, மருந்து, சேவைகள், இயந்திரங்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் எல்லாவற்றையும் உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் "சிறப்பான பணி" நமது இதமான பாராட்டுக்கு தகுதியுடையது.

அது போல உடல் நலம் குறித்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நமது பாராட்டுக்கள். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவர்கள் வீரம் மிக்க போராட்டத்தை நடத்துகிறார்கள்.

இது நதியின் ஒரு பக்கம். மனிதத்திற்காக, சகோதரத்துவத்திற்காக,  சமூக அக்கறைக்காக இவர்கள் நிற்கிறார்கள். 

நதியின் மறுபக்கம் நிற்பவர்கள் யார்? இழிவான, சுரண்டக் கூடிய, முதலாளித்துவ லாப வெறி  கொண்டவர்களை காண்கிறோம். ஏகபோகங்களும், சரவதேச முதலாளிகளும் தங்கள் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஊக வணிகம் அரங்கேறுகிறது. சாதாரண மக்களின் துயரிலும் இரத்தத்திலும் தோய்த்தெடுத்த லாபங்களை அவர்களை ஈட்டுகிறார்கள்.

ஏதேன்சில் 10 நாட்களுக்கு முன்பு ஓர் எளிய முகக் கவசம் ஒரு யூரோவுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 83) விற்கப்பட்டது. ஆனால் இன்றோ அதன் விலை 10 யூரோ (ரூ 830).

துருக்கியில் 5 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ பாஸ்தா (கோதுமை வகை) ஒரு லிரா வுக்கு ( இந்திய ரூபாய் 11.30) விற்று வந்தது. இன்றோ அதன் விலை 12 லிரா (ரூ 135).

பங்களாதேஷில் 10 நாட்களுக்கு முன்பு ஒரு எளிய முகத்திரை 20 டாக்காவுக்கு (ரூபாய் மதிப்பில் 18) விற்கப்பட்டது. இன்றோ அது 150 டாக்கா (ரூ 135).

ஐந்து நாட்களுக்கு முன்பு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஒரு முகத்திரை 2.5 யூரோ (ரூபாய் மதிப்பில் 208). இன்றோ அதன் விலை 25 யூரோக்கள் (ரூ 2075).

ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் கிருமி நாசினி 2 டாலர்களாக (ரூ 150 சுமார்)  இருந்தது. இப்போது அது 8 டாலர்கள். (ரூ 600). 

அரிசி, இறைச்சி, மற்றும் அடிப்படையான உணவுப் பொருட்கள் எல்லாவற்றிலுமே இந்த அதீத விலை உயர்வு, ஊக வணிகம் இருக்கிறது என்பதும் உண்மை.

இப் பேரழிவைப் பயன்படுத்தி தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்வது, உரிமைகளை பறிப்பது ஆகியவற்றை பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

அன்பிற்குரிய  தொழிலாளர் சகாக்களே, வேலையற்றவர்களே, ஒயவூதியர்களே,

நாங்கள் எல்லா தொழிற்சங்கங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். ஏக போகங்களின் ஊக விளையாட்டுகளை தொழிலாளர்களுக்கு தெரிவியுங்கள். வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்.

சாதாரண மக்களை பாதுகாக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் அரசுகளும், அரசியல் கட்சிகளும்  மேற்கொள்ள வேண்டுமென கோருவோம்.

சமூகப் பாதுகாப்பிற்கான எல்லா முயற்சிகளையும் உடனடியாக செய்ய வேண்டுமெனக் கோருவோம். பணித் தல மற்றும் ஊதிய உரிமைகளையும் பாதுகாக்க குரல் கொடுப்போம்.

எதிர் வினைகள் இல்லாமல், போராட்டங்கள் இல்லாமல் நாம் உரிமைகளை பாதுகாக்க இயலாது.

உலக தொழிற்சங்க கூட்டமைப்பு (WFTU) ஓர் போர்க் குணமிக்க பெரும் குடும்பம் ஆகும். பெருமைமிகு செயல்பாடுகளை, உயிர்ப்பு மிக்க இருப்பை உறுதி செய்து 75 வது வயதை இந்த ஆண்டு கொண்டாடும் அமைப்பாகும் இது. இப்போதும் அது முன் நிற்கிறது. இறுதி வெற்றியை எட்டும் வரை நிற்கும். 

உங்கள் நலன், உங்கள் மக்கள் நலன் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.

தமிழில் -
 க.சுவாமிநாதன்,
துணைத்தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment