Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Friday, November 1, 2024

அமரன் - நெகிழ்ச்சியும் சில பிழைகளும்

 


அமரன் - வெளியான முதல் நாளே மதிய வேளை காட்சியில் பார்த்த படம். இரண்டு அச்சங்களுடன்தான்  படத்துக்கு சென்றேன்.

வீர தீர செயலுக்காக வழங்கப்படும் அசோகச் சக்கரா விருதை இறப்பிற்குப் பின் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை என்பதால் பழைய விஜயகாந்த், அர்ஜூன் படங்கள் போல ஓவர் டோஸாக தனி நபர் சாகசத்தை முன்னிறுத்தி ஒட்டு மொத்த காஷ்மீர் மக்களையும் இந்தியாவிற்கு எதிரானவர்களாக சித்தரிப்பாவர்களோ என்பது முதல் அச்சம்.

இரண்டாவது அச்சம் ? கடைசியில் சொல்கிறேன்.

பிழைகளை முதலில் சொல்லி விட்டு திரைப்படம் பற்றிய அனுபவத்தை பிறகு எழுதுகிறேன்.

காஷ்மீர் பிரச்சினை பற்றி சிவகார்த்திகேயனிடம் சுருக்கமாக ராகுல் போஸ் (விஸ்வரூபம் படத்து வில்லன், இப்படத்தில் ராணுவ கர்னல்) சொல்லும் போது காஷ்மீரை இந்தியாவை இணைக்க காஷ்மீர் மன்னர் ஹரிசிங் முதலில் விரும்பவில்லை, பாகிஸ்தான் படையெடுத்த போது வேறு வழியில்லாமல் நேருவோடு பேசினார் என்று  சரியாக சொன்னாலும் காஷ்மீர் மக்களின் தலைவர் ஷேக் அப்துல்லா இந்தியாவுடன்தான் இணைய வேண்டும் என்று வற்புறுத்தினார் என்பது விடுபட்டு விட்டது. 

சாலையில் நிற்கும் பெண்களின் கணவர்களோ அல்லது சகோதரர்களோ அல்லது தந்தைகளோ தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள் அல்லது தீவிரவாதிகளாக மாறினார்கள் என்று சொல்கிறார். காணாமல் போன வாலிபர்களில் பலரும் ராணுவத்தால் கூட்டிச் செல்லப்பட்டவர்களும் அடக்கம் என்ற யதார்த்தம் சொல்லப்படவில்லை.

வி.பி.சிங் காலத்தின் உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையதின் மகள் ரூபையா சையது கடத்தப்பட்டு தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்ட பின்புதான் பிரச்சினை தீவிரமானது என்று சொல்லப்படுகிறது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது இந்தியா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டதல்லவா பிரச்சினையின் வேர்!

காஷ்மீரில் மக்களின் ஆயுதமாக கற்கள் மாறியது என்பது உண்மை. வேறு ஆயுதங்கள் இல்லாமல் பல சமயம் தற்காப்பிற்காகவும் பயன்படுகிறது. ஆனால் தீவிரவாதிகளை பாதுகாக்க மட்டுமே கற்கள் வீசப்படுவது போல படத்தில் காண்பிக்கப்படுகிறது.

இவை படத்தின் பிழைகள்.

இனி படத்தின் அனுபவத்திற்கு வருகிறேன்.

ராணுவ முகாம் ஒன்றின் மீதான ஒரு தாக்குதலோடு தொடங்கும் படத்தில் சிவகார்த்திகேயன் அடிபட்டு முகமெங்கும் ரத்தம். ஆனால் அது உண்மையான ரத்தமில்லை என்று அறியும் அவரது சகாக்கள் திகைத்து நிற்க தாக்குதலே உண்மையில்லை என்றும்  அந்த குழு செய்த தவறுகளையும் அவர் பட்டியல் இடுவார். அப்போதிலிருந்து வரை இறுதி வரை படம் விறுவிறுப்பாகவே செல்லும்.

 மேஜர் முகுந்த் வரதராஜனின் ராணுவ வாழ்க்கை, சொந்த வாழ்க்கை இரண்டும் சமச்சீரான விகிதத்தில் கலந்து தரப்பட்டுள்ளது. சாய் பல்லவியுடனான காதல், அதில் வரும் பிரச்சினைகள், இந்து முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் முடியும் திருமணங்கள், ராணுவப் பணி காரணமாக குடும்பத்தை பார்க்க முடியாமல் இருப்பது என்பது ஒரு பகுதி என்றால் ஜெய்ஷ்.இ.முகமது கமாண்டர் அல்தாப் பாபாவை சுற்றி வளைத்தும் பிடிக்க முடியாதது, பின்பு இன்னொரு ஆபரேஷனில் சுட்டுக் கொல்வது, கமாண்டர் பொறுப்பை ஏற்கும் ஆசிஃப் வானியின் தாக்குதல், இறுதித் தாக்குதல் என்று இன்னொரு பகுதி செல்லும்.

 கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியின் கதை என்பதால் “எனக்கு என்ன ஆனாலும், இறந்தே போனாலும் அழக்கூடாது” என்று  சிவகார்த்திகேயன் மனைவியிடம் உறுதிமொழி கேட்கும் போதே கிளைமேக்ஸில் சாய்பல்லவிக்கு நடிப்பதற்கான பெரிய ஸ்கோப் உள்ளது என்பது தெரிந்து விடுகிறது.

 ஆசிஃப் வானியை பிடிப்பதற்கான ஆபரேஷனில் சிவகார்த்திகேயனும் அவரது சகாவும் ஆசிப் வானியின் தாக்குதலில் கொல்லப்பட இவர்களின் தாக்குதல்களில் ஆசிப் வானியும் கொல்லப்பட முகுந்த் வரதராஜனுக்கு இறப்புக்குப் பிந்தைய அசோக சக்கரா விருது தரப்படுகிறது,

 தாக்குதல்கள்  பில்ட் அப் இல்லாமல் ,     இயல்பாக இருப்பது ஒரு நல்ல அம்சம்.

 முகுந்த் வரதராஜன் பாத்திரத்தில் சிவ கார்த்திகேயன் கச்சிதமாக பொருந்துகிறார். அவரது திரை வாழ்வில் அவருக்கு இது முக்கியமான திரைப்படமாக இருக்கும்.

 படத்தில் மிகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியவர் சாய் பல்லவி என்றுதான் சொல்ல வேண்டும். சிவ கார்த்திகேயன் காதலை வெளிப்படுத்தும் நேரத்தில் சேட்டன் என்றழைத்து என் அம்மா, அப்பாவை சேட்டன் என்றுதான் சொல்வார் என்ற குறும்பாக இருக்கட்டும், பட்டாளத்துக்காரனுக்கு கல்யாணம் செய்து தர மாட்டேன் என்று அப்பா பிடிவாதம் பிடிக்கையில் காண்பிக்கும் சோகம், “முகுந்து” என்றழைக்கும் நேசம், பிரிவின் துயரை சொல்வதும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கையில் தாக்குதல் நடக்க மறுமுனையில் கேட்கும் குண்டு சத்தங்களை கேட்டு பதறுவதும் ஐ யம் ஃபைன் என்று முகுந்த் சொல்கையில் வெடித்து அழுவதும் மரணச் செய்தி கேட்டதும் அழுகையை கட்டுப்படுத்திக் கொள்வதாக இருக்கட்டும் அசத்துகிறார் சாய் பல்லவி. அடுத்த தேசிய விருது அவரை தேடி வர வேண்டும்.

 பின்னணி இசை சிறப்பாக உள்ளது. பாடல்கள் ஏனோ என்னை ஈர்க்கவில்லை, வயதானது கூட காரணமாக இருக்கலாம். மரணத்துக்கு பிந்தைய காட்சிகள் எல்லாம் மிகவும் இயல்பாக நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

 சில பிழைகள் இருந்தாலும்  பார்க்க வேண்டிய படம்தான்.

 பிகு: இரண்டாவது அச்சம் என்னவென்று சொல்லவில்லையே என்று உங்கள் மனதின் குரல் ஒலிப்பது எனக்கு கேட்கிறது. இப்பதிவுக்கான படத்தை கூகிளில் தேடுகையில் இதோ கீழே உள்ள படமும் கிடைத்தது.


 ஆமாம். கார்த்திக் நடித்த அந்த மரண மொக்கை படமான “அமரன்” படத்தை முதல் நாளே பார்த்து நொந்தது நினைவுக்கு வந்தது. அந்த மொக்கை படத்தின் பெயரில் இந்த படமும் வருகிறதே, எப்படி இருக்குமோ என்பதுதான் இரண்டாவது அச்சம்.

 



Friday, September 27, 2024

“லப்பர் பந்து” பார்க்கலாம்

 



 

நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைப்படப் பதிவு.

 

கடந்த சனிக்கிழமை அரங்கில் பார்த்த படம்.  ஒரு நிமிடம் கூட சலிப்படைய வைக்காமல் நகைச்சுவை, காதல், குடும்ப உறவுகள், மோதல்கள், ஜாதிய உணர்வுகள் உருவாக்கும் வலி என அனைத்தையும் சரியாக கலந்து கொடுத்துள்ள திரைப்படம்.

 

கிராமத்து கிரிக்கெட் போட்டிகளை களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் நாயகர்களான “அட்ட கத்தி” தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்கிடையிலான ஈகோவும் அது எப்படி காதலுக்கு இடையூறாக மாறி தகர்க்கப்படுகிறது என்பதை  சுவாரஸ்யமான காட்சிகளோடு கொடுத்துள்ளார் புது இயக்குனர் பச்சைமுத்து  தமிழரசன்.

 

பழைய திரைப்படப்பாடல்களை பயன்படுத்திக் கொள்வது என்று சுப்ரமணியபுரத்தில் ஆரம்பித்த கலாச்சாரம் இப்படத்திலும்.

 

“பொட்டு வச்ச தங்கக்குடம், இந்த ஊருக்கு நீ மகுடம்” என்ற விஜயகாந்த் பாடல் அப்போது ஹிட் ஆனதா என்று தெரியாது. இப்போது மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

 

தினேஷின் மனைவியாக வருபவரின் பாத்திரம் சிறப்பாக உருவாக்கப் பட்டுள்ளது. வேலைக்குச் செல்லாமல் கிரிக்கெட் விளையாட வந்த கணவனை ட்ராக்டரில் ஏற்றி அழைத்துச் செல்கையில் கிரிக்கெட் பிட்சை அழிப்பதில் தொடங்கி தன் கணவனைப் போலவே கிரிக்கெட்டில் மூழ்கி குடும்பப் பொறுப்புக்களை கவனிக்காதவன் மகளின் கணவனாகக் கூடாது என்பதில் காண்பிக்கும் அக்கறையும் அப்பாத்திரத்தை வலுவாக்கிறது. அம்மா  வீட்டுக்கு கோபத்துடன் பிரிந்து போன மனைவியின் நினைவாக அவரது புடவைகள் மீது படுத்துக் கொள்கிற கணவனை வீடு திரும்பிய பின் “ஒரே புடவை மேல படுக்க மாட்டியா, தினம் ஒரு புடவை மீது படுத்திக்கிட்டா யார் துவைச்சு மடிக்கிறது?” என்று கேட்பது சுவாரஸ்யமான காட்சி.

 

அவர்களின் மகளாக வருபவரும் கவனிக்க வைக்கிறார். காதலனுடன் சண்டை போடும் காட்சியில் பஸ்ஸில் ஏறச்சொல்லி சத்தம் போடும் கண்டக்டரை அதட்டுவதெல்லாம் புது விதமான காட்சி.

 

துணைப் பாத்திரங்களில் வருபவர்களும் ரசிக்க வைக்கிறார்கள். தினேஷின் மாமாவாக வரும் குடிமகன் (அவர் யாரென்று தெரியவில்லை. விக்கிரமனின் “உன்னை நினைத்து” படத்தில் ஜப்பானில் டெலிபோன் பூத் நடத்துவாரே, அவரா?),  விளையாடாத கிரிக்கெட் கேப்டன் காளி வெங்கட்,  அதிரடி கமெண்டுகளை அள்ளி வீசும் பால.சரவணன் ஆகியோர் படத்துக்கு பக்க பலம்.

 

“ஜாலி ஃப்ரண்ட்ஸ்” என்ற அணிக்கு எல்லாமுமாக இருக்கிற காளி வெங்கட், காலனியைச் சேர்ந்த ஹரிஷ் கல்யாணை அணியில் இணைக்க வேண்டும் என்று  முயன்றதற்காக அணியிலிருந்தே வெளியேற்றப்படுவதும் அவர் “அடேங்கப்பா அணி” என்று புதிய அணியை உருவாக்கி போட்டி போடுகிறார்கள்.

 

முக்கியமான போட்டியில் தினேஷும் ஹரிஷ் கல்யாணும் அவுட்டாகி விட காளி வெங்கட்டின் பெண் அடித்து விளையாடுவது எதிர்பார்த்ததுதான். ஆனால் காளி வெங்கட்டும் ஆட்டத்தில் கலக்குவது எதிர்பாராத் ஆச்சர்யம்.

 

படத்தின் கிளைமேக்ஸை ஊகிக்க முடிந்தாலும் சிறப்பான ஒன்று. காலனித் தெருப் பையன் என்ற காரணத்தால் ஹரிஷ் கல்யாணை ஒதுக்குகிற அணி, பலவீனமான நிலையில் அதே காலனித் தெருவிலிருந்து மூன்று, நான்கு பையன்களை இணைத்துக் கொள்வதும் அவர்கள் பிரகாசிப்பதால் அந்த அணியினரால் கொண்டாடப்படுவதும் தொடர வேண்டும் என்பதால் கடைசி பந்தில் அந்த அணியை வெல்ல வைப்பது நெகிழ்ச்சியானது.

 

நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம் “லப்பர் பந்து”

 

பிகு: இதை  கண்டிப்பாக எழுதியே வேண்டும். இந்த படத்தை கொண்டாடும் சங்கிகள், தமிழரசன் பச்சைமுத்து போல மென்மையாக சொல்ல வேண்டும் என்று பா.ரஞ்சித், மாரி.செல்வராஜ் ஆகியோருக்கு உபதேசிக்க ஆரம்பித்து விட்டனர்.

 

ஒரு நேர்காணலில் இதே கருத்தை பேட்டி கண்டவர் கேட்க அதற்கு இயக்குனர் சொன்ன பதில் மிகவும் முக்கியமானது.

 

“அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள், நான் வேடிக்கை பார்த்தவன், நான் இப்படித்தான் எடுப்பேன், அவர்கள் ஆக்ரோஷமாகத்தான் (AGGRESSIVE) ஆகத்தான் எடுப்பார்கள். அப்படித்தான் எடுக்க முடியும்.

Monday, December 4, 2023

பார்க்கிங் : கொலை முயற்சியெல்லாம் ?????

 


ஞாயிறு பார்த்த படம். இந்த புயல் மழையிலும் சினிமா தேவையா என்று கேட்காதீர்கள். நேற்று மதியத்திலிருந்து இரவு வரை வேலூரிலும் மழை இல்லை. இன்று காலை முதல் இப்போது வரை சாதாரணமான, கொஞ்சம் கனமான தூறல்கள்தான்.

படத்தின் பெரும்பான்மை காட்சிகள் கீழ் போர்ஷனும் மாடி போர்ஷனும் அமைந்த ஒரு வீட்டிலேயே அமைந்து விடுகிறது. பைக் வைத்துள்ள நகராட்சி அலுவலர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு சிக்கனமான, நேர்மையான அதிகாரி. மாடி போர்ஷனுக்கு வரும் ஐ.டி ஊழியர் ஹரிஷ் கல்யாண், கர்ப்பிணி மனைவியை அழைத்துச் செல்ல வசதியாக இருக்கும் என்று கார் வாங்குகிறார். வாசல் போர்ட்டிகோவில் பெரும்பகுதியை கார் ஆக்கிரமித்துக் கொள்ள பைக்கை எடுக்க சிரமப்படுகிறார் பாஸ்கர். இது ஈகோ பிரச்சினையாகி போர்டிகோ காருக்குத்தான் என்று வீட்டு உரிமையாளர் இளவரசு சொல்லி விட போட்டிக்கு கார் வாங்குகிறார் பாஸ்கர்.

போர்ட்டிகோவில் யார் காரை நிறுத்துவது என்று இருவரும் அற்பத்தனமாக போட்டி போட பிரச்சினை முற்றுகிறது. கைகலப்பு, போலீஸில் பொய் வழக்கு, பொய்யான லஞ்சப்புகாரில் சிக்க வைப்பது என்று முற்றிப்போய் இருவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய முயற்சிப்பது என்ற அளவில் செல்ல, மழை நீரில் சிக்கிய கர்ப்பிணி மனைவியை எம்.எஸ்.பாஸ்கர்தான் மருத்துவ மனையில் அப்பா என்று சொல்லி சேர்த்தார் என்பது தெரிந்து அவரை இறுதி நிமிடத்தில் ஹரிஷ் கல்யாண் காப்பாற்ற சுபம்.

நாணயமான அதிகாரியாக சிக்கன சிகாமணியாக காண்பிக்கப்படும் எம்.எஸ்.பாஸ்கர் வெறும் வீம்பிற்காக ரொக்கம் கொடுத்து கார் வாங்கும் போதே அந்த கேரக்டர் பலியாகி விடுகிறது. கர்ப்பிணி மனைவிக்காக வாங்கிய காரை போர்ட்டிகோவிலிருந்து எடுக்க தயங்கும் போது ஹரிஷ் கல்யாண் கேரக்டரும் பலியாகி விடுகிறது. வெறும் பார்க்கிங் பிரச்சினைக்காக கொலை அளவிற்கு செல்வதெல்லாம் டூ மச்.

ஆனால் இந்த கேள்விகள் எல்லாம் படம் முடிந்த பிறகே வருமளவிற்கு சுவாரஸ்யமாக வேகமாக படம் சென்றது என்பது உண்மை. எம்.எஸ்.பாஸ்கர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இன்னொரு படம். விரசமான காட்சிகள் இல்லாத படமும் கூட.  பழி வாங்கல், கொலை முயற்சி என்றெல்லாம் செல்லாமல் வேறு மாதிரி கூட இயக்குனர் சிந்தித்து இருக்கலாம்.

ஆனால் மோசமான சில மனிதர்களின் ஈகோ எந்த எல்லையையும் தாண்டி செல்லும் என்பதும் யதார்த்தம்தானே!

Wednesday, May 10, 2023

PS 2 – மணியின் செல்வன்

 


ஞாயிறு அன்று காலைக்காட்சியில் பார்த்த படம். பரவாயில்லை. அந்த காலைக்காட்சியிலேயே  சுமார் அறுபது பேர் இருந்திருப்பார்கள். மின் கட்டணத்திற்கான பணம் வசூலாகி இருக்கும்.

குறைந்த பட்சம் எட்டு முறை படித்த நாவல் பொன்னியின் செல்வன். மணிரத்னம் – ஜெயமோகன் கூட்டணி என்பதால் பெரிய எதிர்பார்ப்பு கிடையாது, அதனால் ஏமாற்றம் கிடையாது என்று முதல் பாகம் வெளி வந்த போதே எழுதியிருந்தேன். முதல் பாகம் தந்த அனுபவத்தால்  இரண்டாவது பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பு கிடையாது.

 படத்தில் சிறப்பாக இருந்த சில அம்சங்கள்.

 பாடல்களும் பின்னணி இசையும். சோழர் காலத்தில் இசை எல்லாம் எப்படி இருந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் பலரும் ஒப்பிடுவது அந்த காலத்து வரலாற்று, புராணப்படங்களுக்கு கே.வி.மகாதேவன், மெல்லிசை மன்னர்கள் அளித்த இசைதான். அந்த வகையில் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அற்புதம், “வீரா, தீரா” பாடலை நான்கைந்து முறையாவது யூட்யூபில் பார்த்து கேட்டிருப்பேன்.

 வழக்கமான மணிரத்னத்தின் படங்கள் போல இருட்டிலேயே பாதி படம் நகர்ந்தாலும் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.

 விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஜெயம் ரவி கிஷோர், ஆகியோரின் நடிப்பும் பொருத்தமாக இருந்தது.

 இது படத்தில் உள்ள நல்ல அம்சங்கள்.

 சொதப்பிய விஷயங்களை சொல்ல வேண்டுமல்லவா!

 பொன்னியின் செல்வன் நாவலே வரலாறு கிடையாது எனும் போது நாவலின் விஷயங்களை மாற்றும் அதிகாரம் இயக்குனருக்கு கிடையாதா என்றொரு கேள்வி எழுப்பப்படுகிறது.

 உண்மை, அந்த அதிகாரம் இருக்கிறது என்றே எடுத்துக் கொண்டாலும் நாவலின் மிக அடிப்படையான அம்சங்களை சிதைக்கக் கூடாதல்லவா!

 ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்து கொண்டதாக காண்பிப்பது அந்த பாத்திரத்தின் வீரத்தையே கொச்சைப்படுத்துகிற ஒன்றாகும்.

 நாவலில் பொன்னியின் செல்வனோ, குந்தவையோ ஆதித்த கரிகாலனை ஒரு இடத்தில் கூட சந்திக்க மாட்டார்கள். ஆனால் இங்கே அவசியமே இல்லாமல் ஒரு சந்திப்பு நடக்கிறது. கடம்பூர் மாளிகை சதியையே வந்தியத்தேவன் அறிவது யதேச்சையாக நடக்கும் விஷயமாகும். முதல் பாகத்திலேயே அதை ஆதித்த கரிகாலனே வந்தியத்தேவனிடம் சொல்வது போன்ற சொதப்பல் இது

 மதுராந்தகன், கண்டராதித்தர், செம்பியன்மாதேவிக்கு பிறந்த மகன் அல்ல என்பதற்காகத்தான் அவர் அரசராவதை செம்பியன்மாதேவி கடுமையாக எதிர்ப்பார். உண்மையான மகன் சேந்தன் அமுதனுக்கு கடைசியில் பொன்னியின் செல்வன் மகுடம் சூட்டுவதாக கதை சொல்லும்.

 ஆனால் இங்கேயோ சேந்தன் அமுதன் பாத்திரத்தை டம்மியாக்கி மதுராந்தகனுக்கே மகுடம் சூட்டுகிறார்கள். பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவன் என்ற உண்மை தெரிந்து ஆபத்துதவிகளோடு இணைந்து பிற்காலத்தில் அமரபுஜங்க பாண்டியன் என்ற பெயரில் சோழ நாட்டின் மீதே படை எடுத்து வந்த ஒரு பாத்திரத்தை சோழ அரசனாக்குவதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.

 இதெல்லாம் காண்பித்தால் நேரமாகாதா என்றொரு கேள்வியும் வந்தது.

 நாவலில் வரவே வராத ராஷ்டிரகூட போர், மதுராந்தகனோடு டீலிங், வானதி போலவே தோற்றமளித்த ராஷ்டிரகூட இளவரசி, பாகுபலி டைப்பில் எடுக்கப்பட்ட கடைசி போர் ஆகியவற்றை தவிர்த்திருந்தால் நாவலுக்கு நியாயம் செய்திருக்கலாம்.

 மணிமேகலை என்ற பாத்திரமே காணவில்லை. அரச குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நான் எந்த விதத்தில் குறைந்தவள் என்று கேள்வி கேட்டு நானும் இளவரசன் ஒருவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று முதலில் சொல்லும் பூங்குழலி பிறகு பூக்கட்டும் சேந்தன் அமுதனின் காதலை ஏற்று, அரச குடும்பத்து அரசியல் தேவை இல்லை என்று சொல்லி மணமுடிப்பதாக கல்கி எழுதியிருப்பார். பின்பு அவர் அரசியாவது அவருக்கான நீதி என்றும் எழுதியிருப்பார். ஆனால் படத்திலோ, பூங்குழலியை ஒரு பேராசைக்காரியாகவே காட்டி அந்த பாத்திரத்தின் கம்பீரத்தை அழித்திருப்பார்கள்.

  பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, லால் ஆகியோர் பரிதாபத்துக்கு உரியவர்கள்.

 அப்புறம் வசனம்?

 நாவலில் வந்த வசனங்களை பல இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். மற்றவை ஒன்றும் சுகமில்லை.

 ஆனால் புளிச்ச மாவு ஆஜானின் விஷமம் இருக்கிறது. சோழர்கள் காலத்தில் பாரதம் என்றெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. ஆனால் பாரதம் முழுதும் ஆலயங்கள் எழுப்ப வேண்டும், அதன் மூலம் நம் பெருமையை பரப்ப வேண்டும் என்று ஜெயம் ரவியை பேச வைத்து தன் ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தை உள்ளே நுழைத்து விட்டார்.

 மொத்தத்தில் இந்த படம் பொன்னியின் செல்வன் இல்லை, மணியின் செல்வன்.

 பிகு: முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ஜெயராம் பேசியது மிகவும் வைரலானது. “மணி, பசிக்குது மணி” என்று பிரபு பசியில் துடித்ததை பிரபுவின் குரலில் பேசி ஜெயராம் கலக்கியிருப்பார். அந்த காட்சியில் பிரபு அரசவையில் உட்கார்ந்திருப்பார். ஒரே ஒரு நொடி மட்டுமே அக்காட்சியில் அவர் திரையில் தோன்றுவார். அந்த ஒரு நொடிக்காக அந்த பெரிய உருவத்தை ஒரு நாள் முழுதும் பட்டினி போட்டதெல்லாம் அடுக்கவே அடுக்காது மணிரத்னம்.

Thursday, October 6, 2022

PS 1 – எதிர்பார்ப்பில்லை, ஏமாற்றமில்லை.

 


பொன்னியின் செல்வன் நாவலை குறைந்த பட்சம் பத்து முறையாவது படித்தவன் நான். என் வாசிப்புக்கு ஊக்கம் கொடுத்த முக்கிய நூலாக பொன்னியின் செல்வனையும் முக்கிய எழுத்தாளராக சுஜாதாவையும் சொல்வேன். அந்த அடித்தளத்தில்தான் தொடங்கியது என் வாசிப்பு. பிறகு சீரியஸான விஷயங்கள் தொடர்பாக கவனத்தை திருப்பியது ராகுல சாங்குருத்தியாயனின் “வோல்கா முதல் கங்கை வரை” யும் ஃபிடல் கேஸ்ட்ரோவின் “வரலாறு என்னை விடுவிக்கும்” நூல்களும்.

பொன்னியின் செல்வன் நாவலை பல முறை படித்தவனாக இருந்தும் திரைப்படமாகப் போகிறது என்ற செய்தி அப்படி ஒன்றும் உற்சாகத்தைத் தரவில்லை.

 

அதற்கு முக்கியமான காரணம் இரண்டு.

 

ரோஜா தொடங்கி, பம்பாய், உயிரே என்று எடுத்துக் கொண்ட பிரச்சினைகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆட்சியாளர்களுக்காக சமரசம் செய்து கொண்டு உண்மைகளை திரித்துக் கூறிய மணிரத்னம்.

 

கட்சி ஆபீஸில் சுந்தர் ராமசாமியை கொலை செய்ய லீகல் ஒப்பினியன் வாங்கிக் கொண்ட, கள்ள ஓட்டு போட 60 லட்ச ரூபாய் கொடுப்பது போல வஜனம் எழுதிய பு.மா ஆஜான்.

 

அதனால் படம் சூப்பராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்லை. அதனால் எந்த ஏமாற்றமும் இல்லை.

 

பூமணியின் “வெக்கை” நாவலை “அசுரன்” என்று செழுமைப்படுத்திய வெற்றிமாறன் அல்ல, மணிரத்னம். சிதைக்காமல் இருந்தாலே போதும் என்ற உணர்வுதான் இருந்தது.

 சரி, இப்போது படத்துக்கு வருவோம்.

 நல்ல அம்சங்கள்.

 பெரும்பாலான பாத்திரங்களுக்கு நடிகர், நடிகையர் பொருந்தி இருந்தனர். ஆதித்த கரிகாலனுக்கு விக்ரம், வந்தியத் தேவனுக்கு கார்த்தி, அருண்மொழி வர்மனுக்கு ஜெயம் ரவி, குந்தவைக்கு த்ரிஷா, நந்தினிக்கு ஐஸ்வர்யா ராய், சின்ன பழுவேட்டரையருக்கு பார்த்திபன், மதுராந்தகனுக்கு ரஹ்மான், ஆழ்வார்க்கடியானுக்கு ஜெயராம், திருக்கோயிலூர் மலையமானாக லால், கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவி ஆகியோர் கச்சிதம். இவர்கள் அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்கள். சுந்தர சோழன் பிரகாஷ்ராஜின் தாடியை சவரம் செய்திருக்கலாம். அதே போல பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திற்கு சத்யராஜ் அல்லது நெப்போலியன் பொருந்தியிருப்பார்கள். ஒட்டு மொத்த சோழ நாட்டின் நிகழ்வுகளையும் தன் விரல் நுனியில் வைத்திருக்கும் அமைச்சர் அநிருத்த பிரம்மராயர் ஏனோ இங்கே பஞ்சத்தில் அடிபட்ட தோற்றத்தில் உள்ளார். பூங்குழலி பாத்திரத்திற்கு நயன்தாரா பொருத்தமாக இருந்திருப்பார்.

 பொன்னி நதி பார்க்கனுமே என்ற முதல் பாடலைத் தவிர மற்ற பாடல்களும் பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு பொருத்தமாகவே இருந்தது. அந்த முதல் பாடலின் “ ஈமாரி, எச மாரி” வரிகள் “குச்சி குச்சி ராக்கம்மா” பாடலை ஏனோ நினைவுபடுத்தியது. மற்ற பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு.

 கொஞ்சம் பாகுபலி தாக்கம் இருப்பினும் கலை இயக்கம் சிறப்பு.

 ஒளிப்பதிவு அற்புதம், ஒலிப்பதிவும் கூட, ,மணிரத்னம் படங்களில் வசனம் காதில் விழுவதே ஒரு அதிசயமல்லவோ!

 இப்போது பலவீனங்களை பார்ப்போம்.

 நாவலை மாற்றுவதற்கு இயக்குனருக்கு படைப்புச் சுதந்திரம் உண்டு என்பது உண்மையே. ஆனால் அந்த படைப்புச்சுதந்திரம் இங்கே திரைப்படத்திற்கு நியாயம் செய்துள்ளதா?

 தஞ்சை செல்லும் வழியில் கடம்பூரில் தங்கும் வந்தியத்தேவன் யதேச்சையாகத்தான் சிற்றரசர்களின் சதியை அறிவான். ஆனால் இங்கோ ஆதித்த கரிகாலனுக்கே அந்த சதி தெரிந்து விபரங்களை அறிந்து வருமாறு வந்தியத் தேவனிடம் சொல்கிறான். அதனால் அந்த மாளிகைச் சதி உருவாக்க வேண்டிய சஸ்பென்ஸ்  அடிபட்டு  விட்டது.

 தஞ்சையில் சிற்றரசர்கள் கூட்டம் நடக்கையில் குந்தவை உள்ளே புகுந்து என் சகோதரர்களுக்கு உங்கள் மகள்களை திருமணம் செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்று சொல்லி விட்டு ஏதோ குழப்பத்தை உருவாக்கிய பெருமிதத்தோடு வானதியிடம் பேசியபடி நடந்து போகும் காட்சி,  இறுதிப் போட்டியின் இடைவேளையில் அணியின் வீராங்கனைகளை கண்டபடி திட்டி விட்டு “கொளுத்திப் போட்டிருக்கேன். இன்னும் நாப்பது நிமிஷத்துக்கு புள்ளிங்க தீயா விளையாடும்” என்று விஜய் நயன்தாராவிடம் சொல்லும் பிகில் படக் காட்சியைத்தான் நினைவு படுத்தியது. இரண்டும் மொக்கைக் காட்சிகள்தான். அட்லி சுட்ட ரொட்டியை மணியும் சுட்டு விட்டார்.

 படத்தின் மிகப் பெரிய குறையாக நான் கருதுவது துண்டு துண்டாக தொடர்ச்சியில்லாமல் வரும் காட்சிகள்தான். பூங்குழலி போன்ற பாத்திரங்களுக்கு சரியான அறிமுகம் இல்லை. படத்தின் நீளம் காரணமாக இருக்கலாம். இலங்கையில் நடக்கும் சண்டைக்காட்சியையும் இறுதியாக கப்பலில் நடக்கும் சண்டைக் காட்சியை சுருக்கியிருந்தால் முக்கியமான செய்திகளை சொல்லி இடைவெளிகளை தவிர்த்திருக்கலாம். கருத்திருமன் நாவலில் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் கதாபாத்திரம். இங்கே அந்த பெயர் மட்டும் படகோட்டிக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது.

 அதே போல மணிரத்தினம் பெரும்பாலான காட்சிகளை அவரது வழக்கமான பாணியில் இருட்டிலேயே எடுத்துள்ளார், அவை அவசியமற்றது என்ற போதிலும். ஆஜான் வசனம்- பாராட்டவும் ஏதுமில்லை, திட்டவும் ஏதுமில்லை.

 ஒரு முறை பார்க்கலாம் என்ற அளவிலான படம்தான். அதுவும் நடிக நடிகையர்களுக்காக.

 தமிழனின் பெருமையா? இந்து மன்னனின் பெருமையா என்றெல்லாம் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த அளவு சர்ச்சைக்கான விஷயம் எதுவுமே படத்தில் இல்லை என்பதுதான் யதார்த்தம். நாவலும் அன்றைய மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசவில்லை. திரைப்படமும் பேசவில்லை.

 அது மட்டுமல்ல

 ராஜராஜசோழனின் சிவப்பற்றை வெளிப்படுத்தும் அளவிற்கு காட்சிகள் இல்லை என்ற விமர்சனம் வேறு ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் நாவலைப் படிக்காதவர்கள் என்றே சொல்வேன். அரியணையை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சி மட்டுமே நாவலின் கருப்பொருளே தவிர பக்தியின் மேன்மையை சொல்வது அல்ல. செம்பியன்மாதேவி மற்றுமே சிவ பக்தராக காண்பிக்கப்படுவார். மதுராந்தகனின் பக்தி கூட அன்னையால் திணிக்கப்பட்ட ஒன்றுதான்.

 கதாபாத்திரங்கள் விபூதி அணியவில்லை என்று ஒரு விமர்சனம் வந்தது. அப்படியெல்லாம் இல்லை. அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும் மதச் சின்னங்களோடுதான் இருக்கிறார்கள். பிறகு புதிய சர்ச்சை வந்தது. விக்ரம், ஜெயம் ரவி பிரகாஷ்ராஜ் போன்ற அரச குடும்பத்தினர் சிறிய அளவில் திருநூறு அணிந்திருக்கையில் அவர்களுக்கு எதிராக சதி செய்யும் வில்லன் கதாபாத்திரங்களான சிற்றரசர்கள் பெரிய அளவில் விபூதி பூசியிருப்பது போல வைத்திருப்பதும் உள் நோக்கமுடையது என்ற குற்றச்சாட்டும் வந்தது.

 இந்திய ஜனநாயகத்திற்கு, மக்கள் ஒற்றுமைக்கு, மத நல்லிணக்கத்திற்கு, சாமானிய மக்களின் மேம்பாட்டிற்கு எதிரான வில்லன்களான பாஜக கட்சியினரும் தங்களை பக்தர்களாகத்தானே காண்பித்துக் கொள்கிறார்கள். இந்த உண்மை அவர்களை சுடுகிறது போல!

 

Saturday, June 18, 2022

வீட்டில விசேஷம். தியேட்டரில . . . .

 


வீட்டில விசேஷம் - இன்று மதியக் காட்சியில் பார்த்த படம்.

சத்யராஜ், ஊர்வசி போன்ற அனுபவமிக்க நடிகர்களின் ஆற்றல் மிளிரும் படம். 

ஒரு நாற்பதாண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் இதுவெல்லாம் ஒரு கதைன்னு எடுக்க வந்துட்டாங்க என்று விமர்சனம் வந்திருக்கும்.

காலம் மாறியதால் வித்தியாசமான கதைக் களமாக மாறி விட்டது.

திருமண வயதில் மகன் ஆர்.ஜே,பாலாஜி இருக்க, பெற்றோருக்கு மீண்டும் குழந்தை பிறக்கும் சூழ்நிலை வந்து விடுகிறது. 

50 வயதில் குழந்தையா என்று சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள்தான் படம். ஆர்.ஜே.பாலாஜியும்  பள்ளியில் படிக்கும் தம்பியும்தான் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்,

இந்த கதையை கண்ணீரும் கம்பலையுமாக எடுக்காமல் காமெடியாக எடுக்க முயற்சித்துள்ளார்கள்.

எல்லா குடும்பக் கதைகள் போல மகன்,, மாமியார் எல்லாம் கடைசியில் பெற்றோரை அரவணைக்கிறார்கள்.

கொஞ்சம் திசை மாறினாலும் விரசமாகும் வாய்ப்பு உண்டு. அப்படி நேராமல் காப்பாற்றி விட்டார்கள்.

பதட்டத்தை உருவாக்க வேண்டிய லேபர் ரூம் காட்சி, நகைச்சுவையின் உச்சகட்டம்.

பிகு: வெளியான இரண்டாவது நாளாக இருந்தாலும் தியேட்டரில் விசேஷமில்லை. பால்கனி வகுப்பில் இருபது பேர்தான் இருந்திருப்போம். 

Tuesday, June 7, 2022

விக்ரம் – இருட்டும் ரத்தமும்

 



6.30 மணிக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த நிலையில் 6 மணியிலிருந்தே நல்ல மழை. முன்பதிவு செய்தது வேஸ்டாகிவிடும் என்றுதான் தோன்றியது. 6.25 க்கு மழை நிற்க வேகமாக சென்றாலும் படம் ஆரம்பித்து கமலஹாசன் “வெத்தல, வெத்தல ”(ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் “வெத்தல வெத்தல கொழுந்து வெத்தலையோ பாடல் வரிகள் மனதில் பதிந்தது போல பத்தல, பத்தல என்ற வரிகள் மனதில் நிற்கவில்லை) என்று பாடி, ஆடிக் கொண்டிருந்தார்.

 

கைதி போலவே படத்தின் பெரும் பகுதி இருட்டில்தான் நடக்கிறது. அந்த இருட்டிலும் ரத்தம் பீறிட்டு தெறிக்கிறது. பின்னணி இசைக்கு வேலை இல்லாமல் தோட்டாக்களின் சத்தம்தான் பெரும் இரைச்சல். இருட்டு, ரத்தம், தோட்டா, போதை,இதற்குள்ளாகத்தான் படமே.

 

ஆனாலும் போரடிக்காமல் போவதுதான் படத்தை ஓட வைத்துள்ளது. ஃபகத் ஃபாஸில் தன் இயல்பான நடிப்பால் படத்தின் முதல் பாகம் முழுதையும் சுமக்கிறார். இடைவேளையில்தான் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட கமலஹாசன் வருகிறார்.

 

கைதியில் போலீஸிடம் பிடிபட்ட 900 கிலோ போதைப் பொருளை வில்லன் விஜய் சேதுபதி மீட்க துடிக்கிறார். அந்த போதை பொருளை கைப்பற்றிய போலீஸான மகன் கொல்லப்பட்டதால் அதற்கு காரணமானவர்களை வரிசையாக கொல்கிறார் கமலஹாசன். கொலைகாரர்களை தேடும் ரகசிய ஏஜெண்ட் ஃபகத் ஃபாஸில் ஆகியோருக்குள் சுழல்கிறது கதை. இதற்குள் செண்டிமெண்டிற்காக இதய நோயுள்ள கமலின் பேரக்குழந்தை.

 

படம் பார்க்கலாமா?

 

கைதியின் தொடர்ச்சியாய் சரியாக இணைத்திருப்பது, அதன் முக்கியப் பாத்திரங்களை இங்கே கொண்டு வந்தது. (எஸ்.பி ஆபிஸில் போலீஸால் அடிபட்டு இருந்த அர்ஜூன் தாஸ் எப்படி கடைசி காட்சியில் வந்தார் என்றுதான் தெரியவில்லை)

 

போலீஸ் – கிரிமினல் கூட்டணியை அம்பலப்படுத்துவது.

 

வேலைக்காரப் பெண்மணி  ஏஜெண்டாக மாறி சண்டை போடுவது, அதுபோலவே குமாரலேலும் சந்தான பாரதியும் கூட ஏஜெண்டுகளாக இருப்பது,

 

குழந்தையின் உயிரைக் காக்க ஃபகத் ஃபாஸில் நடத்தும் போராட்டம்,

 

கடைசி நிமிடத்தில் வந்து ஈர்க்கும் சூர்யா.

 

இவை அனைத்துக்கும் மேலாக வயதுக்கு ஏற்ற பாத்திரத்தில் கலக்கிய கமலஹாசன்,

 

ஆகியவை விக்ரமை பார்க்கலாம் என்று சொல்ல வைக்கிறது.

 

படத்தின் குறைகளாக நான் கருதுவது.

 

போதைப் பொருட்களின் தீமையை உணர்ச்சிமயமாக சொல்லும் படத்தில் படம் முழுக்க யாராவது சரக்கடிப்பது, போதைப் பொருள் எடுத்துக் கொண்ட விஜய் சேதுபதி சக்திமானாக மாறுவதெல்லாம் நெருடல்.

 

பீரங்கி உட்பட அனைத்து ஆயுதங்களும் பிரயோகிக்கப்படுகிறது. விக்ரம் 3 வந்தால் ஏவுகணை, சப்மரின் கொண்டுதான் சண்டை போட வேண்டும்.

 

நம் கையிலேயே ரத்தப் பிசுக்கு ஒட்டியிருப்பது போல ஒரு ஃபீலிங்.

 

தராசில் வைத்துப் பார்த்தால் இன்னொரு விறுவிறுப்பான படத்தை அளிப்பதில் லோகேஷ் கனகராஜ் வெற்றி பெற்றுள்ளார். இசை எனக்கு திருப்தியளிக்கவில்லை.

 

இதிலே ஒரு திருப்தியான விஷயம் என்னவென்றால் எங்கள் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசா தியேட்டர் நவீனமயமாக்கப்பட்டதுதான்.

Wednesday, November 3, 2021

ஜெய் பீம் – வயிற்றெரிச்சல் ஓவரா இருக்கே!

 


ஜெய் பீம் இன்னும் பார்க்கவில்லை. பல தோழர்களின் விரிவான விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது. நேரத்தை கண்டுபிடித்து எப்படியாவது இந்த வாரத்தில் பார்த்து விட வேண்டும்.

படத்தைப் பார்க்க தூண்டும் இன்னொரு காரணி வயிற்றெரிச்சல் பதிவுகள்.

செங்கொடி இயக்கத்தின் போராட்டம் அழுத்தமாக பதிவாகும் காரணத்தால் மதிமாறன் ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது.  பட்டியலின சாதிகள் மட்டுமே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான ஜெய் பீம் என்ற முழக்கத்தை பயன் படுத்த வேண்டும். பழங்குடி இன மக்களுக்கு எதிராக சாதிய பாகுபாடு ஏதுவும் கிடையாது என்பது அவரின் அரிய கண்டுபிடிப்பு. இதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து டாக்டர் பட்டம் வாங்கலாம். டாக்டர் மதிமாறன் என்றால் யூட்யூப் ஹிட்ஸ் அதிகமாகும். சில்லறை இன்னும் தேறும்.

கதறல் அதிகமென்று பரத்வாஜ் ரங்கன் எனும் ஒரு விமர்சகர் பேசுகிறார். அவரை லாக்கப்பில் வைத்து லாடம் கட்டினால் அவர் கதறல் இன்னும் அதிகமாக இருக்கும் வாய்ப்புண்டு.

தேவரய்யாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சூர்யாவுக்கு வாழ்த்து என்று ஒருவர் கதையையே மொத்தமாக மாற்றி விட்டார். படத்தை முழுதும் பாராட்டி விட்டு கம்யூனிஸ்டுகள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்ற உறுதியோடு களத்தில் நின்றோர் என்று எழுதி விட்டு இது பா.ரஞ்சித் இழுத்த தேர் என்று முடிக்கும் ஓர் பதிவு..

ஜெய் பீம் என்பது இந்தி வார்த்தை. சும்மா சொன்னேன் என்று ஒரு பிட்டை வீசுகிறார் அர்ஜூன் சம்பத்.

திரௌபதி, ருத்ர தாண்டவம் மாதிரி மக்களால் ஆதரிக்கப்படாமல் மீடியாக்களால் தூக்கிப் பிடிக்கப்படும் படம் என்று மத்யமர் சங்கி ராகவேந்திரன் ஷர்மா.

இவர்களுக்கெல்லாம் வயிற்றெரிச்சல் வந்ததற்கு என்ன காரணம்?

அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டைகளாக இருக்கிற பழங்குடி மக்களின் துயர் துடைக்க செங்கொடி இயக்கம் நடத்திய போராட்டம் பற்றி ஒரு திரைப்படம் வருபதுதான்.

இவர்கள் கடுப்பாவதைப் பார்க்கையில் ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

தின மலர் வேறு கதை கட்டியுள்ளது. அது தனி பதிவாக நாளை