Showing posts with label நுழைவுத் தேர்வு. Show all posts
Showing posts with label நுழைவுத் தேர்வு. Show all posts

Wednesday, June 1, 2022

எங்கதாம்பா படிச்சீங்க?????

 



ஒவ்வொரு வருடமும் சிவில் சர்வீஸஸ் தேர்வு, ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு முடிவுகள் வந்ததும் பயிற்சிப் பள்ளிகள் தங்கள் வெற்றி மாணவர்கள் என்றொரு பட்டியலை நாளிதழ்களின் முதல் பக்கத்தில் பல வண்ண விளம்பரமாக அளிப்பார்கள்.

பல மாணவர்கள் எல்லா பட்டியலிலும் இருப்பார்கள்.

இந்த வருடம் சிவில் சர்வீஸஸ் தேர்வு முடிவுகளுக்குப் பின் வெளியான மூன்று விளம்பரங்களைப் பாருங்கள்.




 
6, 9, 12 இடங்களில் வந்தவர்கள் மூன்று விளம்பரங்களிலும் உள்ளார்கள். 

2,15,16,19 இடங்களில் வந்தவர்கள் தங்கள் பள்ளியில் படித்ததாக இரண்டு விளம்பரங்கள் சொல்கிறது.

ஏம்பா, நீங்க நிஜமாக எங்கதான் படிச்சீங்க? ஒன்றிலா? இரண்டிலா? இல்லை மூன்றிலுமா?

இல்லை மூன்றிலும் பணம் கட்டி கோனார் நோட்ஸ் போல ஏதாவது வாங்கிக் கொண்டீர்களா?

ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் படிக்க எப்படித்தான் நேரம் கிடைத்ததோ? செலவு செய்ய பணம் கிடைத்ததோ?

பயிற்சி மையங்களில் படித்தால்தான் தேர்வு என்றொரு நிலை வந்தால் நாளை சிவில் சர்வீஸஸ் தேர்வுகளிலும் பணம் படைத்தவர்கள்தான் வெற்றி பெற முடியும் என்றாகி விடும். 

இந்த விளம்பரங்களைப் பார்த்தால் அந்த கவலைதான் வருகிறது. 

Tuesday, May 9, 2017

வெடிகுண்டு வைக்கவா போனாங்க????





மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு என்பதே ஒரு அராஜகம். மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிற செயல். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்த வேறு மாநில மாணவர்களை தமிழகத்தில் உள்ள இடங்களில் சேர்ப்பதற்கான நரித்தந்திரம். பயிற்சி மையம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பு, கிராமப்புற மாணவர்களை அங்கேயே இருக்க வைக்கும் சதி என்று பல்வேறு அம்சங்கள் நீட் தேர்வை எதிர்ப்பதற்கான காரணமாக இருந்தது.

மற்ற மாநிலங்களின் நிலைமை என்ன என்று தெரியாது. தேர்வு மையங்கள் ஒதுக்குவதிலேயே பலரை பாதிக்க வைத்துள்ளார்கள். மூன்று மையங்களை தேர்ந்தெடுக்கச் சொல்லியுள்ளனர். ஆனால் பலருக்கு அவர்களின் முதல் விருப்பத்திற்குப் பதிலாக வேறு மையங்களில்தான் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், திருச்சி மாணவர்கள் வேலூருக்கு வர, வேலூர் மாணவர்கள் சேலம், கோவை என்றெல்லாம் சென்றுள்ளனர்.

பொதுவாக இது போன்ற நுழைவுத் தேர்வுகளில் ஒரு மையத்திற்கான விருப்பத்தைத் தெரிவித்தால் போதுமானதாக இருக்கும். இங்கே மூன்று மையம் என்று சொல்லி மாணவர்களை அலைக்கழித்துள்ளார்கள். நுழைவுத் தேர்வுக்கான கட்டணத்தைத் தவிர பயணக்கட்டணம், தங்கும் இடம், உணவு என்று வெட்டித்தனமாக பணத்தை செலவு செய்ய வைத்துள்ளனர். இந்த வெயிலில் பயணத்தின் மூலம் ஏற்படும் களைப்பு இன்னொரு பாதிப்பு,

இதை விட அராஜகம் தேர்வு மையங்களில் நடந்த ஆடை சோதனை அயோக்கியத்தனம். நடந்தது சோதனை அல்ல, மாணவர்களின் தன் மானத்தோடு அரசு நடத்திய ஆணவத் தாக்குதல். அதிகார வெறியின் உச்சகட்டம்.

தேர்வு எழுதப் போன மாணவர்களை ஏதோ வெடிகுண்டு வைக்கப் போனவர்கள் போல சோதனை செய்து அசிங்கப்படுத்தி உள்ளார்கள்.

முழுக்கை சட்டை கூடாது என்று சட்டையை கத்தறித்துள்ளனர்.
துப்பட்டாவை தூக்கி எறிந்துள்ளனர்.
தோடு, மூக்குத்தி எல்லாவற்றையும் கழற்ற வைத்துள்ளனர்.

இதையெல்லாம் முன்னரே விதிகளாகச் சொல்லியிருந்தார்களே, இதைக் கூட படிக்க மாட்டார்களா என்று சிலர் கேட்கிறார்கள். காப்பி அடிப்பதை தடுப்பதற்காகத்தானே என்று நியாயம் வேறு பேசுகிறார்கள். இவங்களாம் டாக்டராகி என்ன கிழிக்கப் போறாங்க என்ற கேள்விகளை கேட்கும் அதி மேதாவிகள் அப்பட்டமான மோடி ஆதரவாளர்களாகவும் சமூக நீதிக்கு எதிரானவர்களுமாகவே உள்ளனர் என்பது யதேச்சையானதல்ல. கீழ்த்தட்டில் உள்ளவர்கள் மேலே வந்து விடக்கூடாது என்ற வெறியின் வெளிப்பாடுதான்.  

ஆனால் இந்த விதிகளே அபத்தமாக இருக்கிறதே, முழுக்கைச்சட்டையில் பிட் வைக்க முடிபவனால், சட்டை காலரில் வைக்க முடியாதா? அப்போ அடுத்த தேர்வில் காலரையும் வெட்டி விடுவார்களா? கறுப்புக் கலர் பேண்ட் போடக்கூடாது என்று சொல்வதில் என்னய்யா லாஜிக் இருக்கு? இப்படிப்பட்டவர்கள் எல்லாம் தேர்வு நடத்தும்போது மாணவர்களை குறை சொல்லாதீர்கள்.  முழுக்கை சட்டை மட்டுமே உள்ளவர்கள்  அரைக்கை சட்டை வாங்க காசு செலவழிக்க வேண்டுமா? தமிழகத்திலும் கேரளாவிலும் இந்த அயோக்கியத்தனம் நடந்து கொண்டிருக்கையில் பாஜக ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் கேள்வித்தாள் கசிந்து நான்கு பேர் கைதாகி உள்ளனர். அதை தடுக்க துப்பில்லாதவர்கள் இங்கே கத்திரிக்கோலோடு அலைந்து மாணவர்களை அச்சுறுத்தியுள்ளார்கள்.

துப்பட்டா இல்லாவிட்டால் எத்தனையோ பெண்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வு உருவாகும் என்ற அடிப்படை புத்தி கூடவா ஒரு அரசுக்கு இருக்காது. முஸ்லீம் பெண்கள் பள்ளி, கல்லூரிக்குள் பர்தா அணிந்து வரக்கூடாது. அவர்கள் பிட் அடிக்கிறார்கள் என்று அசிங்கமாக பேசிய எச்.ராஜா கட்சிதானே ஆட்சியில் உள்ளது!

சில பெண்களின் உள்ளாடைகள் கூட அகற்றப்பட்டது என்பதை படிக்கையில் மனது கொதிக்கிறது.

அது போல சின்ன மூக்குத்தியில் என்னய்யா ஒளித்து வைக்க முடியும்? தலைவிரி கோலத்தோடு பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கறுப்புக் கயிற்றை எல்லாம் அறுத்தவர்கள், பூணூலை மட்டும் கண்டு கொள்ளாதது ஏன்?

சரி, இந்த எழவு சோதனையெல்லாம் மோடி மாநிலத்து மாணவர்களுக்கு கிடையாதா? சரி இதுதான் விதி என்றால் அங்கே முழுக்கை சட்டையோடு பரிட்சை எழுதுகிறார்களே! அங்கே உள்ளவர்கள் மட்டும் காப்பி அடிக்காத உத்தம சீலர்கள், இங்கே உள்ளவர்கள் எல்லாம் திருடர்கள்! இதைத்தானே சொல்கிறது மத்தியரசு?  



முழுக்கை சட்டையை அரைக்கையாக வெட்டி அந்த சட்டையையே இனி போட முடியாமல் செய்வதற்கான அதிகாரத்தை யார் அளித்தார்கள்? இந்த சட்டை இல்லாவிட்டால் இன்னொன்று யாரும் திமிரோடு பேசாதீர்கள்.

வேலையில் சேர்வதற்கு முன்பாக நல்ல சட்டை என்று என்னிடம் இரண்டு சட்டைதான் உண்டு. பரிட்சைக்கான நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு (என்ன நான் கலந்து கொண்டது மூன்று நேர்முகத் தேர்வுகள்தான். இரண்டாவதாக கலந்து கொண்ட எல்.ஐ.சி யிலேயே  வேலை கிடைத்து விட்டது) என்று எதுவாக இருந்தாலும் அந்த  இரண்டு சட்டையைத்தான் மாற்றி மாற்றி அணிந்து கொள்வேன். அப்படிப்பட்ட நிலையில்தான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப்போதும் உள்ளார்கள். இருக்கும்  ஒரே நல்ல சட்டையும் நாசமானால் அவர்களுடைய மன நிலை என்ன ஆகும் என்பதை பத்து லட்ச ரூபாய் கோட் அணிந்து கொண்ட மோடியால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? சாவு வீட்டிலேயே மூன்று முறை உடை மாற்றுபவராக மோடி இருக்கலாம். எல்லோருக்கும்  அதற்கான வசதி கிடையாது.
                                                    
தேர்வு எழுதுவதற்கு முன்பாக மாணவர்களை அச்சுறுத்தி அவர்கள் மனதில் பதற்றத்தை உருவாக்கும் கீழ்த்தரமான உத்தி, தமிழகத்திலும் கேரளாவிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உளவியல் தாக்குதலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் நம் அனைவரையுமே, நாளை பேருந்திலோ, புகை வண்டியிலோ செல்லக் கூட நிர்வாணப்படுத்த தயங்காத கேவலமான அரசு இது.