Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

Monday, March 10, 2025

பெருமையில்லை, ஆணவம், திமிர்


 நேற்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றுள்ளது. 

அது தொடர்பாக சங்கிகள் பலரும் பகிர்ந்து கொண்டுள்ளது கீழே உள்ளது. 

கடந்த ஆண்டு இந்தியா நடத்திய உலகக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் இந்தியா வந்தது. அதிலும் முதல் போட்டி மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. குஜராத் சங்கிகள் பாகிஸ்தான் வீரர்களை வெறுப்பேற்ற கீழ்த்தரமாக நடந்து கொண்டதையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்போது பாகிஸ்தான் நடத்தும் போட்டியில் விளையாட இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுக்கிறது. அதனை கண்டிக்க யாரும் தயாரில்லை, பாகிஸ்தான் உட்பட. பல நாடுகள் பாகிஸ்தானிலிருந்து துபாய் வந்து இந்தியாவோடு விளையாடி விட்டு சென்றன.

சேர்த்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை ஆட்டி வைப்பது பல ஆண்டுகளாக நடக்கும் கதை. போதாக்குறைக்கு  கிரிமினல் ஷா மகன் ஜெய்ஷா இப்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்.

அதனால் இந்தியா என்ன அராஜகம் செய்தாலும் எல்லா நாடுகளும் அமைதியாகத்தான் இருக்கும்.

இந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாமல் இருந்தது என்பது பெருமைக்குரிய விஷயம் இல்லை. ஆணவம், திமிர். அவ்வளவுதான்.

 ஒரிஜினலாக இவர்கள் பீற்றிக் கொண்ட துல்லிய தாக்குதலே ஒரு ஏமாற்று வேலை என்கிற போது, இந்த திமிரை துல்லிய தாக்குதல் என்று வர்ணிப்பது அசிங்கத்தின் உச்சம். 

Saturday, December 17, 2022

பாகிஸ்தான் இல்லையென்றால் தேஷ் பக்தாள் ?????

 


பார்வையற்றவர்களுக்கான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் பார்வையற்றோர் அணிக்கு மட்டும் விசா கொடுக்க இந்திய உள்துறை அமைச்சகம் மறுத்து விட்டது. 

பாகிஸ்தான் அணியை ஆட அனுமதிக்க மாட்டோம் என்பதெல்லாம் அராஜகமன்றி வேறில்லை.

நிற்க

50 ஓவர் உலகக் கோப்பை அடுத்த வருடம் இந்தியாவில்தான் நடக்க உள்ளதாமே! அப்போதும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அனுமதிக்க மாட்டார்களா?

பாகிஸ்தான் இந்தியா அணிகள் மோதாவிட்டால் நம் சங்கிகள் எப்படி தங்கள் தேஷ் பக்தியை வெளிப்படுத்துவார்கள்?  அதற்காகவாவது அனுமதி கொடுங்களேன்

அப்புறம் அமித்ஷா மகனே, தம்பி ஜெய்ஷா, பாகிஸ்தான் இந்தியா மோதினாதானே கிரிக்கெட் வாரியத்துக்கு துட்டு கோடி கோடியா கொட்டும்! அப்படி கொட்டினாதானே நீயும் கல்லா கட்ட முடியும்!  பாகிஸ்தான் வரலைன்னா நமக்குதான் நைனா நஷ்டம்னு சொல்ல மாட்டியா! இல்லை மோடிக்கு செய்யற அளவுக்கு கவனிப்பை அதானி உங்களுக்கும் செய்யறாரா!

Tuesday, April 12, 2022

காஷ்மீர் பற்றி பேசாதீர் . . .

 


பாகிஸ்தானில் புதிய பிரதம மந்திரியாக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளார். பழைய பெருச்சாளி நவாஸ் ஷெரீபின் தம்பி.

நாடாளுமன்றத்தில் முதல் உரையில் காஷ்மீர் பற்றியும் இந்திய அடக்குமுறைகள் குறித்தும் 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்பு பாகிஸ்தான் அரசு ஏதும் செய்யவில்லை என்றெல்லாம் பேசியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக கம்பு சுற்றினால்தான் பாகிஸ்தான் அரசியலில் குப்பை கொட்ட முடியும். அதைத்தான் இந்த புதுப் பெருச்சாளியும் செய்துள்ளார்.

ஆனால் இவர்கள் எல்லாம் ஒரு விஷயத்தை யோசிப்பதே இல்லை.

"இங்க அடிச்சா அங்க வலிக்கும்" என்பது போல இவர்கள் பேச பேச அதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களைத் தான் பாதிக்கும். இப்போது ஏற்கனவே இஸ்லாமியர்கள் அச்ச உணர்வோடு வாழும் துரதிர்ஷ்டமான நிலையை  இன்றைய வெறி பிடித்த ஆட்சியாளர்களும் அவர்களின்  குண்டர்களும் உருவாக்கியுள்ளனர். 

பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் இது வரை காஷ்மீர் மக்களுக்கு எந்த நல்லதும் செய்ய முடிந்ததில்லை. இனிமேலும் ஏதும் முடியாது.

உங்களால் முடிந்த ஒரே நல்ல காரியம்.

காஷ்மீர் பற்றி நீங்கள் பேசாமல் இருப்பதுதான். 

அந்த மக்கள் எந்த சவாலையும் சந்திப்பார்கள்.


Friday, April 1, 2022

இம்ரான் கானும் மோடியும் தைரியமும்

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் முதல் பக்கத்தில் இரண்டு செய்திகளை படித்தேன்.

ரஷ்யாவுடன் இந்தியா வணிக பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் தீவிரமான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்காவின் துணை பாதுகாப்பு ஆலோசகர் திலீப்சிங் என்பவர் இந்தியாவிற்கு வந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளரை மிரட்டி உள்ளார்.

இன்னும் ஒரு நாளில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்து பதவியை இழக்கும் தருவாயில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தொலைக்காட்சி உரையில் தனக்கு எதிராக ஒரு அன்னிய சக்தி தன் எதிரிகளோடு இணைந்து சதி செய்வதாகவும் அந்த அன்னிய சக்தி அமெரிக்கா என்றும் வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார்.

ஆக பாகிஸ்தான் அரசியலிலும் அமெரிக்கா தலையிடுகிறது. இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது என்றும் இந்தியாவை மிரட்டுகிறது.

இம்ரான் கான் அமெரிக்காவை வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார். அதை பதவி போகப் போவதனால் வந்த தைரியம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

அமெரிக்கா  இந்தியாவை வெளிப்படையாக மிரட்டுகிறதே, அதற்கு 56 இஞ்ச் மார்பு கொண்ட வீராதி வீர, சூராதி சூர மோடி என்ன எதிர்வினை ஆற்றப் போகிறார்? இம்ரான் கானே துணிந்து குற்றம் சுமத்தும் போது மோடி மட்டும் சும்மா இருந்து விடுவாரா என்ன?

பார்க்கத்தானே போறோம் மோடியோட தைரியத்தை?

 

Saturday, March 12, 2022

பாகிஸ்தானுக்குப் பறந்த ஏவுகணை

 


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பதிவை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



பாகிஸ்தான் மீது ‘தவறாக’ ஏவப்பட்ட இந்திய ஏவுகணை

மார்ச் 9 அன்று ஒரு இந்திய ஏவுகணை பாகிஸ்தானுக்குள் ஏவப் பட்டிருக்கிறது. அந்நாட்டின் எல்லையை மீறி 124 கிமீ வரை சென்றிருக்கிறது.,

பாகிஸ்தான் இந்திய வெளியுறவு அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருக்கிறது.

வழக்கமான பராமரிப்பு வேலை நடக்கும் போது தவறுதலாக ஏவப்பட்டு விட்டது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

நல்ல வேளை, உயிர்ச் சேதம் எதுவும் இல்லையென்றும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறது.

ஒரு வேளை சங்கிகள் அடிக்கடி ‘பாகிஸ்தானுக்குப் போ’ என்று சொல்வதை அந்த ஏவுகணை கேட்டிருக்குமோ?

பின் குறிப்பு : நேற்று ஒரு லோக்கல் சேனலில் "தேவர் மகன்" படம் பார்த்தேன். நாசரின் ஆட்கள் கமலஹாசனை லாரி ஏற்றி கொல்லப் பார்ப்பார்கள். தப்பித்த பின்பு கமலஹாசன் ரேவதியிடம் "இது ஆக்ஸிடெண்ட்தான் என்று வீட்டில் சொல்ல வேண்டும்" என்பார். "இது நிஜமாகவே ஆக்ஸிடெண்ட்தானா?" என்று ரேவதி வெள்ளந்தித்தனமாக கேட்பார். அந்த அப்பாவித்தனம் மிகவும் பிடித்ததால் அந்த காட்சியை முகப்புப் படமாக வைத்துள்ளேன்.

அந்த படத்திற்கும் பதிவிற்கும் தொடர்பு உண்டு என்று யாராவது நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல. .

Sunday, September 21, 2014

தம்பி பிலாவல், வாயை மூடிக்கிட்டு போறயா?

 http://ppppunjab.files.wordpress.com/2014/07/svbilawal_narrowweb__300x4810.jpg

பச்சிளம் பாலகனாய் இருந்து கொண்டு இப்படி பாம்பைப் போல விஷம் கக்கலாமா தம்பி பிலாவல்?

காஷ்மீர் எப்படி இந்தியாவோடு இணைந்தது, மிச்சமுள்ள காஷ்மீர் எப்படி பாகிஸ்தானோடு இருக்கிறது என்ற விபரமெல்லாம் தெரியுமா தம்பி?

காஷ்மீரின் விடுதலைக்கு போராடுபவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட காஷ்மீர் சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே தவிர பாகிஸ்தானோடு இணைய வேண்டும் என்று எப்போதுமே சொன்னதில்லையே. தெரியுமா தம்பி?

காஷ்மீர் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சேதமடைந்து மக்கள் கண்ணீர் வடிக்கும் நேரத்தில் இப்படியெல்லாம் டயலாக் விடக்கூடாது என்று உனது அப்பா பத்து பர்ஸென்ட் ஜர்தாரி சொல்லித்தரவில்லையா தம்பி?

பாகிஸ்தானின் மக்கள் தலைவராக உனது தாத்தா பூட்டோ இருந்தார். அவர் தூக்கிலப்பட்ட அனுதாபத்தில் உனது அம்மா பெனாசிர் பூட்டோ பிரதமரானார். அவர்  கொல்லப்பட்ட அனுதாபத்தில் உனது அப்பா ஜர்தாரி ஜனாதிபதியானார். ஆனால் உங்கள் குடும்பம் அடித்த கொள்ளையால் மக்கள் வெறுப்படைந்து விட்டார்கள். 

அதற்காக இப்படி ஒரு நாடகமா தம்பி?

ஏற்கனவே ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் ஆட்சி ஒன்று இங்க இருக்கு. வெறும் வாயையே பிரியாணி சாப்பிடுவது போல மெல்லும் அவர்களுக்கு நிஜமாகவே பிளேட் பிளேட்டா பிரியாணி கொடுத்திட்டியே தம்பி! உனக்கென்ன நீ பாகிஸ்தானில சேபா இருந்துடுவ, நீ பேசின பேச்சுக்கு இந்தியாவில உள்ள முஸ்லீம்களைத்தான இவங்க தாக்க ஆரம்பிப்பாங்க?

கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு போப்பா பிலாவல். 

காஷ்மீரை ஒரு அங்குலம் விடாம மீட்கறதுக்கு முன்னாடி உங்கப்பா கொள்ளையடிச்ச காசுல ஒரு பைசா பாக்கி இல்லாம பாகிஸ்தான் கஜானாவுல சேத்துடு பார்ப்போம்.