Tuesday, February 28, 2017

சங்கிகளே, எது ஆபாசம், எது அராஜகம்?

மேலே படத்தில் உள்ள பெண் குர்மெஹர் கவுர். இந்த பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்வேன் என்று ஒரு மாணவன் மிரட்டுகிறான். இன்னொருவனோ அந்த பாலியல் கொடுமையை எப்படி செய்வேன் என்று விவரிக்கிறான். அவர்கள் நிஜமாகவே மாணவர்களா என்று தெரியாது. ஆனால் சங் பரிவாரத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி  அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாணவர்கள் என்று குறிப்பிட்டுள்ளேன்.

இந்தப் பெண் செய்த தவறு என்ன?

இந்த புகைப்படத்தில் கையில் வைத்துள்ள அட்டை.

ரௌடித்தனம் செய்யும் ஏ.பி.வி.பி அமைப்பைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன் என்று உறுதியாகச் சொன்னதால் இந்த மிரட்டல். காவிகளின் இந்த கீழ்த்தரமான செயலை எழுதினால் சில சங்கிகளுக்கு கோபம் வேறு வந்து விடுகிறது. ஆபாசம், அராஜகம் என்று வேறு அதற்கு அர்த்தம் சொல்கிறார்கள்.

ஒரு பெண்ணை பாலியல் கொடுமை செய்வேன் என்று சொல்வது ஆபாசமா?

இல்லை அப்படி பேசுகிற, அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அம்பலப்படுத்துவது ஆபாசமா?

ஒரு கல்லூரியில் நுழைந்து மாணவர்களை குண்டாந்தடியில் அடித்து தாக்குவது அராஜகமா?

இல்லை அந்த அராஜகத்தை நிகழ்த்துவர்கள் மத்திய ஆளும் கட்சியின் அடியாட்கள் என்று எழுதுவது அராஜகமா?

அசிங்கமான வார்த்தைகளை அனாமதேயமாக ஒளிந்து கொண்டு எழுதுவது ஆபாசமா?

இல்லை அந்த ஆபாசத்திற்கு கடுமையான எதிர்வினை புரிவது ஆபாசமா?

உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் லாப வெறிக்காக இந்தியாவின் செல்வாதாரங்களை அடமானம் வைப்பதை தரகர் வேலை என்று சொல்லி விமர்சிக்காமல் தேச பக்தர் என்று போற்றி விருது அளிக்க வேண்டும் என்று சங்கிகள் விரும்புகிறார்கள் போலும்.

பொய்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பிழைப்பு நடத்துகிற அரசு இந்த அரசு. அதனை அம்பலப்படுத்துபவர்களை மிரட்ட சில அடியாட்களை ஏவி விடும். அவர்கள் அனாமதேயங்களாக ஆபாச வார்த்தைகளில் அர்ச்சிப்பார்கள். விமர்சிப்பவர்கள் பெண்களாக இருந்து விட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணிக்கு நிகழ்ந்ததை மறந்திருக்க முடியாது.

இதிலே கருத்துச் சுதந்திரம் இருப்பதால்தான் உங்களால் மோடியையே எதிர்த்து எழுத முடிகிறது என்று வேறு. எனது கருத்துரிமை மோடியால் கிடைத்தது அல்ல. அரசியல் சாசனம் தந்த உரிமை. சுதந்திரப் போராட்டம் கொடுத்த உரிமை. சுதந்திரப் போராட்டத்தின் தியாக வேள்வியில் எங்கள் முன்னோர்களின் உதிரமும் கலந்திருக்கிறது. சங்கிகளுக்கோ காட்டிக் கொடுத்த கேவலமான பாரம்பரியம் மட்டுமே உள்ளது.

கருத்துரிமையை முடக்க சட்டத்தால் முயற்சிப்பார்கள். அதற்கு வாய்ப்பு இல்லாத போது எந்த அளவிற்கும் தரம் தாழ்ந்து போவார்கள்.

உங்கள் பேச்சில். சிந்தனையில், எழுத்தில் ஆபாசம் இருக்கிறது. நடவடிக்கைகளில் அராஜகம் இருக்கிறது. அதை நியாயப்படுத்தும்போது நீங்கள் வெட்கம் கெட்டவர்கள் என்பதும் தெரிகிறது. ஆகவே உங்களைப் போலவே அடுத்தவரை நினைக்கும் எண்ணம் எல்லாம் வேண்டாம்.

இந்த தேசத்தின் பெரும் துயரம் மோடி ஆட்சிக்கு வந்தது. அதற்குக் காரணம் அவர் சொன்ன பொய்களை நம்பி வாக்களித்த அப்பாவி மக்கள். மோடியால் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை இரண்டரை ஆண்டுகளில் பலரும் உணர்ந்து வருந்துகிறார்கள்.

இரண்டரை வருட மோசமான ஆட்சிக்குப் பின்னும் மோடியை ஆதரிப்பவர்களை “முட்டாள் அல்லது அயோக்கியர்” என்று இல்லாமல் வேறெப்படி அழைப்பது? இந்த உண்மையை சங்கிகளால் ஏற்றுக் கொள்ள முடியாது. கோபம்தான் வரும். ஆபாசமாக பேசுவதைத் தவிர வேறென்ன அவர்களால் என்ன முடியும்?

பின் குறிப்பு : இந்த குர்மெஹர் கவுர் தொடர்பாக இன்னும்  எழுத வேண்டியுள்ளது. முடிந்தால் இன்று இல்லையேல் நாளை

Monday, February 27, 2017

யாருக்கு அனாமதேய அடியாள் அதிகம்?
வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய நாள் முதல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவாரக்கும்பலை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது ஆசான் ஜெமோவும் வசை பாடுவதற்கு  வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பார்.

மோடியை விமர்சித்தால் நாராயணசாமி என்றொரு சங்கி மட்டும் அவ்வப்போது அபத்தமாக உளறி விட்டு போவார். கோபால கிருஷ்ணன் என்றொரு சங்கி வந்து எழுதினார். அவர் ஆபாசமாக கேட்ட அதே கேள்வியை அவரிடமே மீண்டும் கேட்ட பிறகு காணாமல் போய் விட்டார். சில அனாமதேயங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் கொண்டையை மறைக்கத் தெரியாத சிலரும் உண்டு என்பது வேறு விஷயம்.

நிற்க இந்த பதிவின் மூலம் நான் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால் 

அனாமதேயங்களாக வந்து ஆபாச வார்த்தைகள் பேசும் அடியாட்கள் யாருக்கு அதிகம்?

மோடி?
ஜக்கி?
ஜெமோ?

ஜக்கி - மோடி கிரிமினல் கூட்டணி பற்றி ஐந்து பதிவு எழுதியிருந்தேன். ஆனால் அப்போதெல்லாம் பெரிதாக அனாமதேயங்களை காணவில்லை. ஜக்கிக்கும் இதர பிற கார்ப்பரேட் சாமியார்களுக்கும் ஜால்ரா அடித்து மத வெறி விஷத்தை கக்கிய ஜெமோவை அரசியல் சாசனப்படி உள்ளே தூக்கிப் போட வேண்டும் என்று சொன்னவுடன் அனாமதேய அடியாட்கள் பொங்கிக் கொண்டு வருகிறார்கள். ஆபாச வார்த்தைகளுக்கும் குறைவே இல்லை.

இதிலிருந்து தெரிய வரும் உண்மை என்னவென்றால் 

மோடியை விட
ஜக்கியை விட

ஆசானுக்கே  அடியாட்கள் அதிகம்.

இந்த ஒரு காரணத்திற்காகவே ஆசானுக்கு "ஞான பீட" விருது கொடுக்க வேண்டும். 

ஞான பீட விருதுக்கு வாய்ப்பில்லையென்றால் குறைந்த பட்சம்
"ன பீட" விருதாவது கொடுங்கப்பா.

 

ராணுவ "வியாப" ஊழல்

இன்றைய ஹிந்து நாளிதழில் வந்துள்ள செய்தியை படியுங்கள்.

இரண்டிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை ராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் விற்கப்பட்டுள்ளன.

உயரதிகாரிகள் வரை இந்த ஊழலின் பின்னணியில் இருக்கும் வாய்ப்பு உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் சொல்கின்றனர்.

சீனியர் அதிகாரிகளை புறம் தள்ளி தங்களுக்கு வேண்டிய ஒரு வெறியரை தளபதியாக்கிய இந்த ஆட்சியில்
 
வியாபம் ஊழல் குற்றவாளிகளை பாதுகாக்கும் மோடி அரசாங்கத்தில்

உணவு சரியில்லை என்று சொன்ன வீரரை சிறையில் அடைத்த தர்பாரில்
ராணுவத்தில் ஊழல் இல்லையென்றால்தான் அதிசயம். 
 

Sunday, February 26, 2017

ஜெமோவை தூக்கி உள்ளே போட வேண்டும்
ஒரு கார்ப்பரேட் சாமியாரின் நிகழ்ச்சி - அதற்கு மோடி வருகை - கடுமையான எதிர்ப்பு - கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 

இத்தனை களேபரம் நடக்கையில் சங் பரிவார ஆஸ்தான இலக்கிய வியாதி வாய் திறந்து விஷத்தை வாந்தி எடுக்காமல் இருக்கிறதே என்று யோசித்தேன்.

ஒன்றுக்கு இரண்டு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவுகள் எழுதி நல்ல தூக்கத்தை வரவழைத்து விட்டார்.

ஆசான் பக்கம் பக்கமா எழுதினா அதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான். சரக்கு இல்லை, நேர்மை இல்லை, அவரோட மொழியில் சொல்ல வேண்டும் என்றால் அறம் இல்லை. ஆகவே உங்களுக்கு உறக்கத்தை வர வைத்து, சுற்றி வளைத்து கதை விடுவார். ஜக்கி விஷயத்திலும் அப்படித்தான்.

வழக்கமாக அவர் கையாளும் அதே கேவலமான, மட்டமான, கீழமையான வாதத்தைத்தான் இப்போதும் ஆசான் பயன்படுத்தியுள்ளார்.

ஜக்கி மீது விமர்சனம் வைக்கிற அனைவரும் மாற்று மதத்தவர் என்று ஒற்றை வரியில் கடந்து போகிறார். 

கார்ப்பரேட் சாமியார்களின் அவசியத்தைப் பற்றி பத்தி பத்தியாக எழுதுகிறார். கார்ப்பரேட் சாமியார்களால்தான் இந்து மதத்தை பாதுகாக்க முடியுமாம். கார்ப்பரேட் சாமியார்களால் வளர்த்தெடுக்கப்பட்ட வாலிபர்களைக் கண்டு மாற்று மதத்தவர்கள் எல்லாம் பயப்படுகிறார்களாம். அதனால்தான் எதிர்க்கிறார்களாம். 

கிரிமினல் சாமியார்களால்தான் பாதுகாக்க முடியும் என்ற அளவிற்கு பலவீனமான அடிப்படையுள்ள மதம்தான் தன்னுடைய மதம் என்று ஆசான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்றுதான் நான் பார்க்கிறேன்.

ஜக்கி மீதான் எல்லா கிரிமினல் குற்றச்சாட்டுக்களுக்கும் நேரடியாக பதில் சொல்ல முடியாமல் விளக்கெண்ணெய்யாய் குழப்பி உள்ளார் ஆசான். 

ஜக்கி ஆதரவாளர்கள் எல்லாம் மோடி ஆதரவாளர்களாக மாறி விடுவார்கள் என்றுதான் எல்லோருக்கும் பதற்றமாம். மோடியை ஆதரிப்பவர்கள் மட்டுமல்ல, ஜக்கியை ஆதரிப்பவர்களும் கூட ஒரே கேடகரிதான். முட்டாள்கள் எண்ணிக்கையில் புதிதாக எதுவும் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று எங்களுக்கு தெரியும் ஆசானே.

மிஸ்டர் ஜெயமோகன், உங்களையோ, மோடியையோ, ஜக்கியையோ, அல்லது இதர கிரிமினல்களையோ எதிர்ப்பவர்களையோ மாற்று மதத்தவர்கள் என்று சொல்லி, மத வெறியை தூண்டி மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டும் கேடு கெட்ட வேலையை  மட்டுமே உங்களின் எழுத்து செய்கிறது.

இந்திய அரசியலமைப்பிற்கும் மக்கள் ஒற்றுமைக்கும் எதிரான நீங்கள்தான் உண்மையிலேயே  தேசத்துரோகி, மக்கள் எதிரி.  ராமசீதா கிளப்பிய வதந்திக்கும் உங்கள் கட்டுரைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. 

உங்களை சிறையில் தள்ளுவதே சரியாக இருக்கும்.

சிறைக்கு செல்ல விருப்பம் இல்லையென்றால்

உங்கள் மத வெறி நாற்றமெடுக்கும் பேனாவை மூடியாவது வையுங்கள்.

சபாஷ் பிரிதிவிராஜ், வேறு யார்???????

கேரள மாநிலத்தில் ஒரு நடிகைக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைக்குப் பிறகு

நடிகர் பிரிதிவிராஜ்

தனது திரைப்படங்களில் பெண்களை கிண்டல் செய்தும் இழிவுபடுத்தியும் தான் நடித்த காட்சிகளுக்காக, பேசிய வசனங்களுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு திரைப்படங்களும் ஒரு  காரணமாக இருப்பதை தான் உணர்வதாகவும் இனி தான் நடிக்கும் படங்களில் பெண்களை இழிவுபடுத்துகிற காட்சிகளோ, வசனமோ கண்டிப்பாக இருக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.

இந்த முடிவு உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது, நல்லதொரு முன்னுதாரணமாக மற்ற திரைக்கலைஞர்களும் பின்பற்ற வேண்டியது. அடுத்து யார் இவ்வாறு அறிவிக்கப் போகிறார்கள் என்றரிய ஆவலோடு காத்திருக்கிறேன்.

சபாஷ் பிரிதிவிராஜ். 

பின் குறிப்பு : தங்கள் துறையைச் சேர்ந்தவர் ஒருவர் தாக்குதலுக்கு உட்பட்டால்தான் இதெல்லாம் இவர்களுக்கு புரிகிறதா என்ற கேள்வி எழலாம். இப்போதாவது வந்திருக்கிறதே என்று மகிழ்ச்சியடையுங்கள்.
 

Saturday, February 25, 2017

ஜக்கி கூத்து - ஒரு பக்தரின் பார்வையில்

திரு வினைதீர்த்தான் - ஓய்வு பெற்ற எல்.ஐ.சி அதிகாரி. அவர் தொழிற்சங்க தலைவரோ, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரோ கிடையாது. சொல்லப் போனால் சிவாலயங்களை தேடித் தேடி பார்த்து அக்கோயில்களின் சிறப்புக்களை முக நூலில் பகிர்ந்து கொள்கிற ஒரு பக்தர். 

ஆதியோகி கூத்து பற்றி முக நூலில் அவர் பகிர்ந்து கொண்ட அர்த்தமிக்க, ஆழமான பதிவை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மீண்டும் சொல்கிறேன். அவர் ஒரு பக்தர். இடதுசாரி அல்ல. 


நேற்றிரவு ஆதியோகியின் முகம் சிலை திறப்புவிழாவை தொலைக்காட்சியில் கண்டேன்.பிரதமர் மோதியின் ஆங்கிலமும் தெளிவும் கவர்ந்தன. குரு ஜக்கி வாசுதேவின் ஆட்டத்தையும் உயர்ந்தபட்ச ஓசையில் பக்தர்கள் ஆண், பெண்களின் ஆட்டமும் பார்த்தேன்.

ஜக்கியிடம் கேட்கப்பட்ட ”சிவனின் தலையில் ஏன் சந்திரன் இருக்கிறது” என்ற ஒரு கேள்விக்கு அவர் சோமனாகிய சந்திரன் (சோமரசம்) ‘இண்டாக்சியேசன்’ குறியீடு என்று விளக்கமளித்தார். சிவன் சதா இண்டாக்சியேசனில் இருக்கிறார். ஆனால் முழுவிழிப்போடு இருக்கிறார் என்று சொன்னார். சந்திரன் குறியீடுக்கு இது சரியான விளக்கமா? 

ஆதியோகிக்கே இந்த மாதிரி கதைகட்டினால் அவருடைய பக்தர்கள் சிவன்நிலையை அடைய கெமிக்கல் போதையில் ஆரம்பித்து கொஞ்சம்கொஞ்சமாக கெமிக்கல் போதையின் உதவி இல்லாமலேயே சதா ஆனந்தநிலையை அடையலாமென்று உபாயம் சொல்லிக்கொடுப்பார்கள் போல உள்ளது. 

1.ஈஷா யோகமையத்தில் பக்தர்கள் ஆடிய ஆட்டத்தைக் கண்டபோது, ஒரு படித்தவர் போலிருந்த பெண் மயங்கி விழுந்ததைக் கண்டபோது போதைவஸ்து குறித்த ஐயமே எழுகிறது.

ஈசன் சந்திர பிறையணிந்துள்ளதற்கு சோமரசம் பருகிய இண்டாக்சியேசன் ஆனால் முழுவிழிப்புணர்வின் குறியீடு என்பது சரியான விளக்கமா?


2.குரு பளபளக்கும் ஆடையணிந்துள்ளார். உயர்ந்த காலணி அணிந்துள்ளார். ஒருவகையில் அழகுபடுத்திய தாடி, முடி வளர்த்துள்ளார். ஆனால் சீடர்கள் மொட்டையடித்து, காவிகட்டி,மெல்லிய தேகத்துடன் அடிமைகள் போல காணப்படுகிறார்கள். குருவுக்கு ஒரு நீதி. மூளைச்சலவைசெய்யப்பட்ட அடிமைகளுக்கு ஒரு நீதியா?


3. மையத்திற்கு ஒரு முறை சென்றிருந்தபோது கிரானைட் கற்களால் இழைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். மதுரையச்சுற்றிய மலைகளெல்லாம் பிளக்கப்பட்டு பாளங்களாக ஈஷா மையத்தை அடைந்துவிட்டதோ என்று வியந்தேன், ஆயிரக்கணக்கில் Block களாக கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்றுள்ள நண்பர்கள் பார்த்திருப்பீர்கள். அவை எங்கிருந்து, எவ்வாறு வந்தன என்று கண்டறிய விசாரணைக்கமிஷன் போடவெண்டும்.


சுற்றுச்ச்சூழல் கேடுவிளைத்தல் குறித்த விசாரணைகமிஷனோடு இதனையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.


என்னை உறுத்திய மேற்கண்ட மூன்று விஷயத்தோடு பிறவற்றைக் குறித்தும் நண்பர்கள் எழுதுங்கள்.நன்றி..

அவர் மேலும் எழுதியிருந்ததையும் இங்கே பதிவிட்டுள்ளேன்


நேற்றிரவு முதலில் காரைக்குடி நகரச்சிவன் கோவிலுக்குச் சென்றோம். வழிபாட்டுக்கு ஒரு பக்கம் கூட்டம் முட்டி மோதிக்கொண்டு இருந்தது. ஒருபக்கம் திருநாவுக்கரசர் நற்பணிமன்றத்தார் எந்தவித ஆரவாரமுமில்லாமல் திருவாசகம் முற்றோதல் செய்து கொண்டிருந்தனர். அரைமணி நேரம் நின்று உருகிக்கேட்டு வந்தோம். திருநெறிய தெய்வத்தமிழ் தேர்ந்தால் ஜக்கி சொல்கிற ONENESS தானே வந்து சேரும். விக்கிரகத்தைக்கூட கூட்ட நெரிசலில் தரிசிக்க வேண்டியதில்லை.

Friday, February 24, 2017

தின மலர், தேச நேசனாம்
நேற்று முன் தினம் போலிச்சாமியார் ஜக்கி வாசுதேவிற்கும் போலி தேச பக்தர் மோடிக்கும் உள்ள ஒற்றுமைகளை மோடிக்கும் ஜக்கிக்கும்தான் பொருத்தம்  என்ற  பதிவில் பட்டியலிட்டிருந்தேன்.


அதற்கு தேச நேசன் என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வந்திருந்தது.

அதை கீழே கொடுத்துள்ளேன்.


என்ன இது? ஏன் திரு மோடி என்றால் மட்டும் இப்படி ஒரு கொடூரம். இது புடிக்கலையை.. தாராளமா நாட்டை விட்டு வெளியேறுங்கள். தேசவிரோதமா இப்படிலாம் எழுதாதீர்கள். தேச விரோதிகள் நீங்கள். அதற்கு நான் பின்வரும் பதிலை கொடுத்தேன்.

  1. Typical response of a Sanghi. Let the criminal quit his PM post. You are making the country and people miserable. How long you will remain a fool by supporting Modi?


யார் அந்த தேச நேசன் என்று தேடிப் போய்ப் பார்த்தால் அந்த இணைப்பு    நேரடியாக தின மலர் இணைய தளத்திற்குத்தான் செல்கிறது.


தேச நேசன் 

மேலே கொடுக்கப்பட்ட இணைப்பை சொடுக்குங்கள். அது நேராக தின மலருக்குத்தான் செல்கிறது. 

நினைப்புதான் பிழைப்பை கெடுக்குமாம்.  சுதந்திரப் போராட்டத்தை காட்டிக்கொடுத்த சங் பரிவார துரோகிகளை தூக்கிப் பிடிக்கிற தின மலர் பத்திரிக்கை, தேச நேசன் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டு விஷம் கக்குவதற்குப் பதிலாக  "இந்து நேசன்"  என்ற பெயரை வைத்துக் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

நினைவில் இருக்கிறதல்லவா?

அந்த காலத்தில் லட்சுமிகாந்தன் (பாகவதர், என்.எஸ்.கே வழக்கு) நடத்திய மஞ்சள் பத்திரிக்கையின் பெயர் "இந்து நேசன்" 

அழிவு (ஆதி) யோகி பற்றி அற்புதமாய் ஒரு . . .

இன்று காலை தீக்கதிரில் படித்த ஒரு அற்புதமான கவிதையை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். போலிச்சாமியாரின் பக்தர்களுக்கும் காவிக்கூட்ட (சங் பரிவார) கள்வர்களுக்கும் நிச்சயம் எரிச்சல் வரும். உண்மையைச் சொன்னால் கோபம் வருவது இயல்புதானே. வழக்கமான வசவாளர்கள் வழக்கம் போல விஷம் கக்கி விட்டு தங்களை அசிங்கப்படுத்திக் கொண்டு செல்லுமாறு அன்புடன் அழைக்கிறேன். 
 
அதியோகி அழைக்கிறார்


 
அதியோகி அழைக்கிறார்
மனையாளைப் புதைத்த
நிலத்தருகே
உமையாளின் கணவருக்கு
சிலை எழுப்பி
அதியோகி அழைக்கிறார்

மலை குடைந்த
குகை மாளிகையில்
களி நடம் புரியும் கவியோகி
வெட்ட வெளியில்
மலை அளவு சிலை வைத்து
அதியோகி அழைக்கிறார்

சுற்றி இருக்கும்
வனம் நிலம்
அத்தனைக்கும் ஆசைப்பட்ட
அற்புத
அதியோகி அழைக்கிறார்

திருநீற்றுப்பட்டை அடித்து
தயாராவதற்கு முன்பே
திருட்டுப்பட்டா தயாரித்த
அதியோகி அழைக்கிறார்

கடும் கருங்கல்லில்
பெரும் சுவர் எழுப்பி
கஜ முகங்களின் வழித்தடுத்து
மீறி நீளும் துதிக்கைகளுக்கு
மின்சார வேலி போட்டு
சிவமோட்சம் கொடுத்த
சித்தர்
அதியோகி அழைக்கிறார்

தன்மகளுக்கு
தாம்பத்யம் தந்தருளி
பிறர் மகளுக்கு பிரம்மச்சரியம்
பூனும் போது சிரைத்த ரோமங்களை
தன் தாடியில் சூடிய தவ
அதியோகி அழைக்கிறார்

நிலம் பிரித்து வனம் அழித்து
செதுக்கி வைத்த சிலை
தென்னாடு உடைத்து
என் நாட்டவர்க்கும் இறைவனாய்
இருப்பவனுக்கு
ஐகோர்ட்டில் ஆர்டர் வாங்கி
பிரதிஷ்டை செய்ய
அதியோகி அழைக்கிறார்

122 அடியைத் திறக்க
56 அங்குலம் வருகிறார்
கோடி கோடியாய் கொட்டி
சுத்தம் செய்வேன் கங்கையை என்றவர்
திறக்கும் சிவனின்
தலையில் கங்கை
இல்லை இல்லவே இல்லை

- ந.முத்து

நன்றி - தீக்கதிர் 24.02.2017

Thursday, February 23, 2017

க்வார்ட்டரும் பிரியாணியும் உண்டா ஜக்கிஜி?
போலிச் சாமியார் ஜக்கி காட்டை அழித்து செய்துள்ள சிவன் சிலையை 
நாட்டை அழித்து வரும் போலி தேசபக்தர் மோடி திறந்து வைக்கவுள்ள

அந்த கூட்டத்திற்கு அப்பாவி பக்தர்களை அழைத்து வர 
இலவச பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக 
தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டு 
வழவழ தாள்களில் பல வண்ண சுவரொட்டிகள்
வேலூர் நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளன.

நன்றாக கூட்டத்தை கூட்டுங்கள்  ஜக்கிஜி,
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் காலி நாற்காலிகளைப் 
பார்த்து வலியோடு இருக்கும் மோடிக்கு 
அழைத்து வரப்பட்ட கூட்டம் மூலம் வருடிக் கொடுங்கள்.

இலவசப் பேருந்துகள் மட்டுமா
இல்லை
க்வார்ட்டரும் பிரியாணியும் கூட உண்டா?

கேடு கெட்ட அரசியல்வாதிகள் செய்யும்
எல்லா அராஜகங்களையும் செய்யும் உங்களுக்கு
சொல்லித் தர வேண்டுமா என்ன?


சிவன் முகத்திற்குப் பின்னே ?????

 நேற்றைய தீக்கதிர் இதழில் வெளியான வழக்கறிஞர் தோழர் மு.ஆனந்தன் அவர்களின் கட்டுரை ஜக்கி சாம்ராஜ்யத்தின் அராஜக நடவடிக்கைகளையும் கையாலாகாத அரசு நிர்வாகத்தையும் அம்பலப் படுத்துகிறது.

அழிக்கும் கடவுள் சிவன் என்று புராணம் சொல்கிறது. இங்கே இயற்கையை அழித்து சிவனுக்கு சிலை.


 
 
 
ஆதியோகியின் பெயரால் அழித்தொழிப்புகள் 

( இன்றைய ( 22.02.2017 ) தீக்கதிரில் பிரசுரமாகியுள்ள எனது கட்டுரை ) - மு.ஆனந்தன் - 

சத்குரு உங்களை பிரதிஷ்டைக்கு அழைக்கிறார். யோகாவை அருளிய ஆதியோகி – சிவன் திருவுருவப் பிரதிஷ்டைக்கு சத்குரு உங்களை வரவேற்கிறார்.  தெய்வீகம் கொஞ்சும் தென்கைலாய மலைச்சாரலில் மகத்துவம் ததும்பும் மகாசிவராத்திரி நன்னாளில் பிப்ரவரி 24, 2017 அன்று சத்குருவின் சங்கல்பத்தில் கருணையின் துறைமுகமாய் 112 அடி  உயரத்தில் ஆதியோகி சிலையை  பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். உலகிலேயே பெரிய சிவன் முகத்தை காண வாருங்கள். கடந்த ஒரு மாதமாக துண்டறிக்கைகள்,  பதாகைகள், பேனர்கள், போஸ்டர்கள் , பேரூந்து விளம்பரங்கள், தொலைகாட்சிகள், சிலையின் மாதிரியுடன் ஊர்வலங்கள் வாயிலாக சத்குரு உங்களை அழைத்துக் கொண்டிருப்பது உங்கள் காதுகளில்  விழுகிறாதா மக்களே… 

பல்லுயிர்ப் பெட்டகம் ;

 ஈஷா யோகா மையத்தின் முகவரியில் வெள்ளியங்கிரி மலையடிவாரம் அல்லது வெள்ளியங்கிரி மலைச்சாரல், கோவை என்றிருக்கும்.  துபாய் குறுக்குச் சந்து எனபது போல் வெள்ளியங்கிரி மலைசாரல்தான் இவர்கள் முகவரியாம். அதனால் நீங்கள் முதலின் தென்கையாலம் எனப்படுகிற வெள்ளியங்கிரி மலையையும் அதன் அடிவாரப் பரப்பையும் தெரிந்து கொள்ள வேண்டும் 

மேற்குத் தொடர்ச்சி மலையின் கோவை குற்றாலம், தொள்ளாயிரமூர்த்திகண்டி எனப்படுகிற வைதேகி நீர்வீழ்ச்சி, சாடியாத்தா பாறை நீரூற்று, வெள்ளியங்கிரி மலை ஆகியவை நொய்யலின் பிறப்பிடங்கள்.  உலகின் இரண்டாவது சுவையான குடிநீரை வழங்கும் சிறுவாணியின் பிறப்பிடமும் இதுவே. வெள்ளியங்கிரி மலை என்பது  உச்சிப் பிள்ளையார் கோயில், கைதட்டி சுனை, பாம்பாட்டி சுனை, ஒட்டர்சித்தர் சமாதி, பீமன் களியுருண்டை பாறை, அர்ச்சுனன் தவப்பாறை, திருநீறு மலை, கிரிமலை என 7 மலைகளின் தொடரியாக ஆறுகளை உருவாக்கும் பசும் புல்வெளிகள், அரிய மரங்கள், காணுயிர்கள் நிறைந்த பல்லுயிர்ப் பெட்டகமாகும். பசும்புல்வெளிகள் தங்களின் நாடி நரம்புகளில் நதிகளின் ஜீவிதத்துளிகளை தேக்கி வைத்து ஆண்டு முழுவதும் கசிந்துருகுகிறது. அவை சுனைகளாகவும், நீரூற்றுகளாகவும், சிற்றோடைகளாகவும் உயிர்ப்பிடிக்கிறது. அவ்வாறு    பெருக்கெடுக்கிற ஒரு நீரோடை  'சாமிமுடியாறு'.   மலையே சிவமாக கருதப்பட்டதால் மலையிலிருந்து கூந்தல்போல் தொங்குகிற நீரோடை சாமிமுடியானது. இது பாவநாச ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.  கீழே இறங்கியவுடன் தரையில்  தவழ்கிற  இவளுக்கு பெயர் 'நீலிஆறு'.  சாமிமுடியாறு, 300 மீட்டர் உயரத்தில் தாணிக்கண்டி பழங்குடி கிராமத்திற்குப் பின்னால்  அணையாத்தா பாறை பகுதியில் உறையூர் சோழன் கரிகாலன் கட்டிய  பழங்கால கல்லனையில் தடுக்கப்படுகிறது. இங்கிருந்து நீலியாறு, ராசியாறு ( சவுக்காடு ஆறு ) என  இரண்டாகப்  பிரிகிறது. சமவெளி வந்தவுடன் நீலியாற்றை நீலியாறு தடுப்பணை வரவேற்கிறது.  இதிலிருந்து ராஜவாய்க்கால் வழியாக பாசனத்திற்கு பாய்ந்து முட்டத்துவயல் பகுதியில் நொய்யலின் முதல் குளமான உக்குளத்தை நிரப்புகிறது . இது 187 ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய சங்ககால குளம். இந்த உக்குளம் நிரம்பியதும் ஊமை மதகுக்கண்டி  மதகுகள் வழியாக வெளியேறும் நீர் பெரியாறுடன் கலந்து நொய்யலாக பாய்கிறது. 

 இந்த  நீராதாரங்களின் சங்கல்பத்தில் கனிந்ததுதான் செம்மேடு போளுவாம்பட்டி வருவாய் கிராமப் பகுதிகளில் பல்லாயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பின் பச்சையமும் விவசாயமும். இது தவிர மழைக்காலங்களில் பெருக்கெடுக்கிற ஏராளமான நீரோடைகளும் குறுக்கும் நெடுக்குமாய நடைபயில்கின்றன. இது காணுயிர்களின் காதல் தேசம். யானைகள் திருவீதி உலா செல்லும் வலசைப்பாதைகளின் சங்கமம்.  தாணிக்கண்டி, முள்ளாங்காடு, மடக்காடு, முட்டத்துவயல், குளத்தேரி போன்ற பழங்குடி கிராமங்களின் புகலிடம்.  நகர விரிவாக்கத்தால் மெல்ல மெல்ல விரட்டியடிக்கப்பட்ட இருளர்களுக்கு மீதமுள்ள ஒரே நிலத்தட்டு. 14 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள  போளுவாம்பட்டி வனச் சரகத்துக்குள் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட நொய்யல் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் காப்புக்காடுகளாகும்.  இந்தகைய வெள்ளியங்கிரி மலைச்சாரலில் நீலியணையின் கரையில்தான் ஈஷா யோக மையம் கம்பீரமாய் தரிசனம் தருகிறது.  

மலைதள பாதுகாப்பு அரண்கள் : 

இயற்கை வளங்களையும், நீராதாரங்களையும் பாதுகாக்க   நொய்யல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சுற்றியுள்ள 27 ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிப்  பகுதிகளை தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை 22.04.1990 தேதியிட்ட அரசாணை எண் G.O. M.S.  No. 44/1990 ன் மூலம்     மலைதள பாதுகாப்புக் குழுமத்தின் அதிகார வரம்பின் கீழ் கொண்டுவந்தது.  இதன்படி,  இக்குழுவின் அனுமதியின்றி விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றவோ, 300  சதுர மீட்டருக்கு  மேல்  எந்த கட்டிடங்களும்  கட்டவோ கூடாது.  புதிய லே-அவுட்டுகளை உருவாக்க முடியாது மேலும்  மாவட்ட ஆட்சியர் மற்றும் வனம், வருவாய், நகர் ஊரமைப்புத் துறை, பொதுப்பணித் துறை,  நீர்வள ஆதாரப் பிரிவு, மாசுக்கட்டுப்பாடு வாரியம், வேளாண் பொறியியல், மின்சாரம், தீயணைப்பு, காவல், நெடுஞ்சாலை, உள்ளாட்சி, கனிம வளம் ஆகிய துறைகளிடமிருந்து  தடையின்மைச் சான்றுகள் பெறவேண்டும்.  

இதே போன்ற நிபந்தனைகள் வீட்டுவசதி மற்றும் நகர் வளர்ச்சித் துறையின் 24.03.2003 தேதியிட்ட அரசாணை எண்.  G.O. M.S. No. 49/2003 மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டுமான விதிகள் 1997 ன் விதி 25  பொதுப்பயன்பாட்டு கட்டுமானங்களுக்கு பஞ்சாயத்து செயல் அதிகாரி , நகர் ஊரமைப்புத் துறையின் ஆலோசனை இல்லாமல் அனுமதியளிக்கக்கூடாது என்கிறது. மேலும் விதி 4 (3)  பொது வழிப்பாடு அல்லது மத பயன்பாட்டு கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயமாகும்.  

நீலியணையின் கேவல் சப்தம் ;

ஈஷா அமைந்துள்ள இக்கரை போளூவாம்பட்டி ஊராட்சியும் இதற்கு உட்பட்டதாகும். ஆனால் மலைகளைத் துண்டுகளாக்கி பாளங்களாக அடுக்கப்பட்ட ஈஷாவின் பல லட்சம் சதுரடி தியான மண்டபங்கள் கட்டிடங்கள் எந்த அரசுத் துறைகளின் அனுமதியைப் பெறாதவை. இதனால் இப்பகுதியின் இயற்கைவளம், சுற்றுச்சூழல்.  பச்சையம், நீர்மை, வேளாண்மை, பல்லுயிர்ப் பெருக்கம், காணுயிர் வாழிடம், வலசைகள் அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட ஓடைகள், மழைக்கால நீரோடைகள், காலங்காலமாக வேளாண் குடிகள் பயன்படுத்தி வந்த வண்டிப்பாதைகள் ஆகியவை  ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளதாக இப்பகுதி பழங்குடிகளும் வேளாண்குடிகளும் குமறுகிறார்கள். ஈஷாவின் கக்கத்தில் சிக்குண்ட நீலியணையின் கேவல் சப்தம் சத்குருவின் அருளுரையில் அமுக்கப்படுகிறது. அக்னி குண்டத்திலும் தீர்த்த குண்டத்திலும் நீங்கள் ஜலகிரிடை செய்தால் புதைக்கப்பட்ட நீரோடைகளின் எலும்புத்துண்டுகள் உங்கள் கால்களை இடரலாம். கழுத்தறுக்கப்பட்ட  வலசைப் பாதைகளின் விசும்பலைக் கேட்கலாம். 

மிக்சர் துறைகள் ;

இது குறித்த பொதுமக்களின் புகார்கள் அரசுத் துறைகளின் கருவறைகளில் தியானம் புரிகின்றன. தொடர் பிரார்த்தனைகளின் விளைவாக நகர் ஊரமைப்புத் துறை இயக்குனர் 05.11.2012 தேதியிட்ட ந.க.எண்1866/2012/கோ.ம.4 ஆணையின் மூலம் சட்ட விரோத கட்டுமானப் பணிகள் நிறுத்த  உத்தரவிட்டுள்ளார். அதனை மீறி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டதால் 21.12.2012 தேதியில் அதே ந.க.எண் 1866/2012/கோ.ம. 4 எண்ணிலும்  26.11.2014 தேதியில் ந.க.எண் 661/2014/கோ.ம.4 எண்ணிலும்  தியானலிங்கம், சிவபாடம் போன்ற அதன் சட்ட விரோத கட்டிடங்களை மூடி முத்திரையிடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் அந்த உத்தரவோ ஈஷாவின் ஈசான மூலையில் மூன்று வருடமாய் குதிங்காலிட்டு மிக்சர் தின்கிறதாம்.  அரசுத் துறைகளுக்கு மூட்டை மூட்டையாக மிக்சர் சப்ளை செய்வதற்காகவே அங்கு ஒரு பத்மபூஷ மண்டபம் செயல்படுகிறதாம். 

ஆதியோகியின் திருப்பாதங்களில் ;

ஈஷாவின் மர்மங்களும் அதற்கு எதிரான புகார்களும் போராட்டங்களும் விசாரனைகளும் சுழன்றெழுந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் முட்டத்துவயல் பகுதியில் 112 அடி ஆதியோகி சிலையையும் லட்சம் சதுரடி கட்டிடங்களையும் மீண்டும் எழுப்பி பிரதிஷ்டைக்கு அழைகிறார் சத்குரு. இது தற்போது ஈஷா யோகா மையம் அமைந்துள்ள நீலியணைக்கும்  நொய்யலின் முதல் குளமான உக்குளத்திற்கும் இடையில் பரந்து விரிந்துள்ள பச்சை வயல்வெளிகள், பாக்குத் தோப்புகள், தென்னந்தோப்புகள் நீள்கிற பச்சயம் கமழும் நிலத்துண்டை ஊடறுத்து நிற்கிறது.  இவை பல வேளாண்குடிகளின் குடிகளைச் சிதைத்து பெறப்பட்ட  பலநூறு ஏக்கர் விவசாய நிலங்களின் மூச்சடக்கி மண்ணிட்டு மேடுயர்த்தப்பட்டவை. ஆதியோகியின் திருப்பாதங்களில் நீலியணையிலிருந்து நீள்கிற ராஜவாய்க்கால், பல நீரோடைகளை, வண்டிப்பாதைகளை, வலசைகளை உயிர்ப்பலி கொடுத்து கட்டப்பட்டவை.  மேலே சொன்னதைப் போல் இந்தக் கட்டுமானங்களும் மலைதள பாதுகாப்புக்குழுமம், வனம், நகர் ஊரமைப்புத் துறை  உள்ளிட்ட எந்த அரசுத் துறையின் அனுமதியைப் பெறாதவை. சட்டவிதிகளையும் அரசாணைகளையும் அப்பட்டமாக மீறிய சட்டவிரோத கட்டிடங்கள். 

மாயமான அணைகளும் குளங்களும் ; 

சிலை எழுப்புவதற்கும் 300 சதுர மீட்டர் கட்டிடங்களுக்கும் 29.09.2016 அன்று ந.க.எண். 6901/2016/ஈ2 நடவடிக்கைகளின்படி மாவட்ட ஆட்சியர் அருளாசி அளித்துள்ளதார். ஆனால் மற்ற எந்தத் துறைகளிடமும் அனுமதி பெறவில்லை. எனவே இது சட்ட விரோத கட்டுமானம்தான். மாவட்ட ஆட்சியர் அனுமதியை பரிசீலித்தாலும் 300 சதுர மீட்டரை மீறி ஒரு லட்சம் சதுரடிக்கு மேல் கட்டிடங்கள் எழுப்பியுள்ளார்கள்.  மாவட்ட ஆட்சியர் அனுமதிகூட அப்பட்டமான விதிமீறல் அதிகார மீறல்.  அந்த உத்தரவில் எழுதப்பட்டுள்ள வரிகளை அந்த ஆதியோகியே ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்படி என்னதான் எழுதப்பட்டுள்ளது. இந்த நிலங்களுக்கு எந்தவித நீர்ப்பாசன வசதியும் இல்லை. நிலத்தடி நீராதாரம் மட்டுமே உள்ளது.  கள ஆய்வின் போது எவ்வித பயிர்களும் இல்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்யப்படவில்லை. நீர்வழிப்பாதைகள் திசை திருப்பப்படுவதற்கான சாத்தியங்களோ நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கான சாத்தியங்களோ இல்லை அதனால் விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கு அனுமதி அளிப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய மோசடித்தனம். உக்குளத்தின் கரையிலிருந்து சில நூறடிகள் தூரத்தில்தான் இந்த ஆதியோகி சிலை கட்டெழுப்பப்பட்டுள்ளது.  இப்பகுதில் பாய்கிற நீலியாறு, நீலியணை, ராஜவாய்க்கால், 187 ஏக்கர் பரப்புள்ள உக்குளம் ஆகியவை அனைத்தும்  அரசதிகாரிகள் கண்களுக்கு மட்டும் எப்படி மாயமானது. வயல்களின் சொர்க்கபுரி என்பதால் தான் இப்பகுதி ஊர்கள் முட்டத்துவயல், சாடிவயல், நல்லூர்வயல் எனப் பெயர் பெற்றுள்ளது. இதெல்லாம் அரசதிகாரிகளுக்கு தெரியாதா. ஆண்டு முழுவதும் உயிர்ப்பிடிப்போடு வாழ்கிற நொய்யலின் நீர்ப்பிடிப்புப் பகுதியையே நீர்ப்பாசனமற்ற பகுதியென பொய்யுரை பொழிவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு  யார் அதிகாரம் அளித்தது.  
 
சிவன் மலையும் ஈஷாவின் வர்த்தகமும்; 
 
பலநூறு ஆண்டுகளாக ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று பல்லாயிரம் பக்தர்கள் சிவன் மலையாக கருதப்பட்ட வெள்ளியங்கிரி  மலையேறி வழிபாடுகள் நடத்திவந்த போதும்  எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. ஏனெனில் மலையுச்சியிலும் அடிவாரத்திலும் சிறு கோவில் கட்டிடங்களே உள்ளன. இதில் ஆன்மீகம் மட்டுமே தரிசனம் தந்தது. வர்த்தகம் அண்டவில்லை.   ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் பல லட்சம் சதுரடி கட்டிடங்களால், நீர்வழிகள், காணுயிர் வலசைகள் அழிப்பால் இப்பகுதியின் இயற்கை வளமும், சூழலும் , நீராதாரமும் பல்லுயிர்ப் பெருக்கமும் பெருமளவு சூறையாட்டுள்ளது. தற்போது ஆதியோகியின் பெயரால் மேலும் மேலும் அழித்தொழிப்புகளை அரங்கேற்றுகிறார்கள்.  ஈஷாவுடன், காருண்யா, அமிர்தா, சின்மயா போன்ற கல்வி நிறுவனங்கள், ரேக்கண்டோ நகர்த் திட்டம், கேளிக்கை விடுதிகள், மினரல் வாட்டர் நிறுவனங்கள் போன்றவையும் தங்கள் பகுதிகளில் இந்த அழித்தொழிப்புகளை முன்னெடுத்துள்ளார்கள். 

தியான மண்டபங்களில் எதிரொலிக்கும் யானைகளின் விசும்பல்; 

சில மாதங்களுக்கு முன் ஒரு காணொளி சமூக வலைத் தளங்களில் வலம் வந்தது. நடுப்பகலில் பத்திற்கும் மேற்பட்ட யானைக்கூட்டம் பயத்தால்  வால்களை முறுக்கிக்கொண்டு ஈஷா வாயில் முன்பாக பீதியில் பிளிறிக்கொண்டு ஓடுகிற காணொளிதான் அது.  காணுயிர் வாழிடங்கள் வலசைகள் அபகரிக்கப்பட்டுள்ளதால் யானைகளும் விலங்குகளும் குடியிருப்புகளுக்குள்ளும் விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து சேதங்களை விளைவிக்கின்றன. மனித விலங்கு மோதல்களும் இருதரப்பு உயிரிழப்புகளும்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக வனத்துறை வழங்கிவரும் இழப்பீடு விபரங்களில் இந்த உண்மையை காண முடியும். சமீபத்தில் கடந்த 18.09.2016 அன்று கூட ஈஷாவின் மாகாமுத்ரா என்ற சட்டவிரோத கட்டிடத்தின் அருகில் பொன்ராஜ் என்பவர் யானை தாக்குதலால் மரணமடைந்தார். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 300 யானைகள் உயிரிழந்துள்ளதாம். 1999 க்கு முன்பு பாதுகாப்பான பகுதியாக இருந்த இந்த வனச்சரகம் இந்தியாவிலேயே தற்போது ஹை ரிஸ்க் ஏரியாவாக மாறிவிட்டது என்கிறார்கள் வன உயிரின ஆய்வாளர்கள்.  

மகாசிவராத்தியும் நிசப்த மண்டலமும் ;

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் விடிய விடிய நடந்தேறும் ஈஷாவின் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் மேலெழும்புகிற ஒலிமாசு வன உயிர்களின் இயல்பு வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கின்றன. அவை  பீதியடைந்து  மனித உயிர்களையும் குடியிருப்புகளையும் தாக்குவது தொடர்கதையாகிறது. 2013 உயர்நீதிமன்றம் அப்பகுதி மனித வாழ்க்கைக்கும் வன உயிரன இயல்பிற்கும் பாதிப்பு ஏற்படாத அளவில் ஒலிமாசு ஏற்படாத அள்வில் மகா சிவராத்திரி கொண்டாடப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது. வன உயிர்களின் இயல்பை பாதுகாக்க இது இரவுநேர நிசப்த மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் அதனை மீறும் வகையில் எதிர்வரும் பிப்ரவரி 24 நடைபெறுவுள்ள மகாசிவராத்திரி நிகழ்வுக்கும் பல லட்சம் மக்களை திரட்டவும் கொண்டாட்டங்களை அரங்கேற்றவும் ஆயுத்தமாகிவருகிறது.  ஆகவே இதற்கு தடை விதிக்கக் கோரி தென்மண்டல பசுமைத் தீர்வாயத்தில் பூவுலகின் நண்பர்கள் வழக்கு தொடுத்து தற்போது அது நிலுவையில் இருந்து வருகிறது. அதேபோல் ஈஷாவின்  சட்ட விரோத கட்டுமானங்களுக்கு தடைவிதிக்கவும் இடிக்கவும் கோரி வெள்ளியங்கிரி மலை பழங்குடிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் முட்டத்துவயல் முத்தம்மா சென்னை உயர்நீதிமன்றத்தில்  ரிட் வழக்கு ( W.P.No. 3556/2017)  தாக்கல் செய்து  அது விசாரனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  ஆனால் இது வரை எவ்வித தடையுத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. 

ருத்ரதாண்டவமாட  வாருங்கள் ;

  பிரட்சனைகள் எழும்போதெல்லாம் மத்திய அமைச்சர்களை அழைத்துவந்து விழா நடத்துவதுதான் ஈஷா நிலைநிறுத்தும் சட்டத்தின் ஆட்சி. தற்போது ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் வருகிறார். இந்த சட்ட விரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு நிர்வாகமும் காவல்துறையும் சல்யூட் வைக்கிற விசுவாசத்தில் முண்டியடித்து முட்டி மோதிக்கொள்ளும். அரசின் பாதுகாப்பில் சட்டவிரோதங்கள் அரங்கேறும்.  சத்குரு அழைகிறார் ஆதியோகியின் பெயரில் அழித்தொழிப்புகளை பிரதிஷ்டை செய்ய செல்வீர்களா இல்லை ஈஷாவின் அதிகார லிங்கத்தை தகர்த்தெறிந்து இயற்கை வளங்களை காத்திட ருத்ர தாண்டவமாட வருவீர்களா ? பதில் சொல்லுங்கள் ! 

- மு.ஆனந்தன் -  94430 49987 – anandhan.adv@gmail.com

Wednesday, February 22, 2017

ஜக்கிக்கும் மோடிக்கும்தான் பொருத்தம்

ஜக்கி அமைத்துள்ள சிலையை மோடி திறந்து வைப்பதுதான் மிகவும் பொருத்தம்.

ஆமாம்,

இருவருக்கும் அவ்வளவு ஒற்றுமை உண்டு,

தனது ஆஸ்ரமத்திற்கு வரும் பக்தர்களை போதையின் பிடியில் வைத்துள்ளதாய் ஜக்கி மீது புகார்கள் உண்டு. பொய்யான வாக்குறுதி கொடுத்து வாக்காளர்களை போதை மயக்கத்திற்கு எடுத்துப் போனவர் மோடி.

நாடாளுமன்ற மரபுகளை காலில் போட்டு மிதித்து பல சட்டங்களை நிறைவேற்றியவர். மோடி. அனைத்து விதிகளையும் காலில் போட்டு மிதித்து ஆஸ்ரமம் கட்டியவர் ஜக்கி.

பேச்சின் மூலம் மக்களை ஏமாற்றுவதில் இருவருமே கில்லாடிகள்.

எதற்கும் உதவாத பிரம்மாண்ட சிலைகளை மும்பையிலும் குஜராத்தில் அமைத்துக் கொண்டிருப்பவர் மோடி. அதை வெள்ளியங்கிரியில் செய்தவர் ஜக்கி.

எத்தனை கடுமையான விமர்சனம் இருந்தாலும் அவற்றை துடைத்துப் போட்டு வெட்கமே இல்லாமல் இருப்பதில் மோடியும் ஜக்கியும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.

ஜக்கியின் மனைவியின் மரணம் மர்மமானது என்று அந்த பெண்ணின் பெற்றோர் கண்ணீர் விட்டார்கள். மோடியோ மனைவி இருப்பதையே மறைத்தவர்.

கார்பரேட்டுகளுக்கு சேவை செய்பவர் மோடி. கார்ப்பரேட்டுகளால் சேவை செய்யப்பட்டு கார்ப்பரேட்டாக மாறியவர் ஜக்கி.

மோடியை யாராவது திட்டுகையில் பதில் அளிக்க முடியாமல் இதை காங்கிரஸ் செய்யவில்லையா என்று ஜால்ராக்கள் கேட்பார்கள். ஜக்கியின் ஜால்ராக்கள் காருண்யா செய்யவில்லையா என்று கேட்பார்கள்,

மோடி ஸ்வச்ச பாரத் என்று புரியாத ஹிந்தியில் சொன்னால் ஜக்கி ஆதியோகி என்று புரியாத தமிழில் சொல்வார்.

கமலஹாசனை விட அதிகமாக ஆடைகளில் கவனம் செலுத்துபவர்களும் விதம் விதமாக போட்டோவிற்கு போஸ் கொடுப்பவர்கள் இந்த இருவர்களைத் தவிர வேறு யார் உள்ளார்கள்?

தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றுவதிலும் அதீத மோகம் கொண்டவர்கள் இருவருமேதான். 

மொத்தத்தில் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பவர் மோடி.
இயற்கை வளங்களை பறிப்பவர் ஜக்கி.

இந்த கூட்டணி அடிப்படையில் மக்களுக்கு எதிரான, நாட்டு மக்களுக்கு எதிரான கிரிமினல் கூட்டணி.

பின் குறிப்பு : ஜக்கி பற்றிய இன்னும் இரண்டு முக்கிய பதிவுகளை நாளை பகிர்ந்து கொள்கிறேன்
 


    

சயனைட் மல்லிகாவுக்கு ஆபத்தா?

சசிகலாவின் பரப்பன அக்ரஹார சிறைக் கூட்டாளியான “பிரபல சயனைட் மல்லிகா” பாதுகாப்புக் காரணங்களுக்காக பெல்காம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாராம்.

இந்த செய்தியை படித்த “பாட்டையா பாரதி மணி” அவர்கள் சயனைட் மல்லிகாவுக்கு யாரால் ஆபத்து என்ற கேள்வியை முக நூலில் எழுப்பி உள்ளார்.

கொஞ்சம் குசும்புத்தனமாக தெரிந்தாலும் நியாயமான கேள்விதானே!

சொல்லுங்க.

அவங்களுக்கு யாரால்  ஆபத்து??????

எச்சரிக்கை:

அடுத்த எமது பதிவு

மோடியும் ஜக்கியும் சரியான கூட்டாளிகள்

விரைவில் எதிர்பாருங்கள்