Sunday, April 12, 2020

ஸ்டிக்கர் ஒட்டி அரசு தடுக்கும் முன்பே . . .

இரண்டு தினங்களுக்கு முன்பாக பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டலத் துணைத் தலைவர் தோழர் வி.குபேந்திரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

ஊரடங்கு காரணமாக குடியாத்தம் நகரத்தில் பீடித்தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சங்கத்தின் சார்பாக அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்.

கோட்டச்சங்கத் தலைவர் தோழர் பழனிராஜூம் நானும் விவாதித்தோம். மற்ற கோட்டச் சங்கப் பொறுப்பாளர்களோடும் வாட்ஸப் மூலமாக ஆலோசித்தோம். சர்வ தேச மகளிர் தினத்தை ஒட்டி செய்யப்படும் சமூக நல உதவிகளுக்காக வசூலிக்கப்பட்ட நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். 

அதன் படி மகளிர் துணைக்குழுவின் சார்பில் அனுப்பப்பட்ட ரூபாய் பத்தாயிரத்தோடு ஓய்வு பெற்ற தோழர் வி.மோகன், அதிகாரி கே.ஆர்.ஸ்ரீதர் ஆகியோரின் உதவியோடும் இருபது பீடித் தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அளிக்கப் பட்டது. 






இது சிறு உதவிதான். உங்களோடு நாங்களுக்கும் நிற்கிறோம் என்று அளிக்கப்படும் நம்பிக்கைதான் அளிக்கப்படும் பொருட்களை விட மதிப்பு வாய்ந்தது.

சமூக விலகல் பாதிக்கப்படுகிறது என்ற காரணம் சொல்லி அரசைத் தவிர வேறு யாரும் நிவாரண உதவி செய்யக்கூடாது என்று எடுபிடி அரசு தடை விதித்துள்ளது.

இது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கை. அரசியல் உள் நோக்கம் கொண்டது.

அரசால் முழுமையாக உதவ முடிந்தால் அமைப்புக்களோ அல்லது தன்னர்வலர்களோ தலையிட வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது?

சுனாமி, தானே புயல், பெரு வெள்ளம், கஜா புயல் போன்ற பல்வேறு இயற்கைப் பேரிடர்களின் போது நேரடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் உண்டு.

அனைத்து இடங்களிலும் மக்களிடமிருந்து வருகிற ஒரே ஒரு பதில் "அரசாங்கம் இதுவரை எங்கள் பகுதியை எட்டிப்பார்க்கவில்லை. நீங்கள்தான் வந்துள்ளீர்கள்"

இது போன்ற குரல்களை மறைக்கும் முயற்சியாகவேதான் அரசின் முடிவை பார்க்க வேண்டியுள்ளது. 

நல்ல வேளையாக இந்த தடை வரும் முன்பாக குடியாத்தம் நிகழ்வு முடிந்து விட்டது.


No comments:

Post a Comment