Tuesday, February 28, 2012

அவன் சிரித்தான், நாங்கள் அழுதோம்.




நாகையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநில மாநாட்டில் பிரதிநிதிகள் அமர்வில்  நெகிழ்ச்சியூட்டிய இரு நிகழ்வுகள்  பற்றி பகிர்ந்து கொள்ளவே  இப்பதிவு.

கள்ளச்சாராயக் கும்பல்களுக்கு  எதிராக போராடியதால் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  தோழர் நாவலன்  வெட்டிக் கொல்லப்பட்டார். மாநாடு அவரது குடும்பத்தினரை கௌரவித்தது. நாவலனின்  தந்தை தோழர் ஜகன்னாதனும்  ஒரு கட்சி உறுப்பினர்தான் என்றும்  என் மகன் இப்போது கொல்லப்பட்டாலும் எங்கள் குடும்பம் எப்போதும் போல் கட்சியில் உறுதியாக நிற்போம் என அவர் கூறினார் என்று  தோழர்  ஜி.ஆர்  சொன்ன போது உண்மையிலேயே மெய் சிலிர்த்தது.

தோழர் பிரகாஷ் காரத் அவர்களுக்கு சால்வை போர்த்துகையில் உடைந்து போய் கதறத் தொடங்கினார்கள். அப்போது அவையிலிருந்து “தோழர் நாவலனுக்கு வீர வணக்கம், வீண் போகாது, வீண் போகாது நீங்கள் செய்த தியாகம்  வீண் போகாது” என்ற முழக்கங்கள் இயல்பாகவே ஒலிக்கத் தொடங்கியது. அந்த முழக்கங்களைக் கேட்ட தோழர் நாவலனின் மனைவி கண்ணில் வழியும் நீரோடு கையை உயர்த்தி செங்கொடிக்கு ஜே என்ற போது அந்த முழக்கத்திலே முதிய தாயும் தந்தையும் இணைந்து கொண்ட போது எழுந்த உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.





அதே போல நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கந்து வட்டி அராஜகக் கும்பலை எதிர்த்து போராடியதற்காக படுகொலை செய்யப்பட்ட தோழர் வேலுச்சாமியின் சகோதரனும் மகனும் மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப் பட்டனர். அந்த ஐந்து வயது பச்சிளம் பாலகன்  அனைவரையும் பார்த்து புன்னகைச் சிரிப்பை உதிர்த்த போது அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஒரு கணம் கலங்கித்தான் போனார்கள்.


மனதை இளக வைத்தது இவ்விரு நிகழ்வுகளும்.

Sunday, February 26, 2012

கல்யாண கலாட்டாக்கள் கூட இல்லாத ஒரு மாநாடு.















மார்க்சிஸ்ட்  கட்சியின்  இருபதாவது  மாநில மாநாடு 
நடந்த லலிதா மஹால் திருமண மண்டபத்திற்கு  வெளியே
ஒரு காட்சி. 

மண்டபத்திற்கு   எதிரே  இருந்த வீட்டின் உரிமையாளர்  
மிக்க மகிழ்ச்சியோடு  என்னிடம் கூறியது.

" ஒரு கட்சியின் மாநில மாநாடு  எதிரில் நடக்கப் போகின்றது
என்று  தெரிந்ததும் மிகவும் கவலைப்பட்டோம், பதட்டப்பட்டோம்,
என்ன கலாட்டா நடக்குமோ, வருபவர்கள் எப்படியெல்லாம் 
நடந்து கொள்வார்களோ  என்று மிகவும் டென்ஷனாக இருந்தது,
போலீஸ் பாதுகாப்பு கூட கேட்கலாம் என்று யோசித்தேன். ஆனால்
இரண்டு நாட்களாக மாநாட்டுப் பிரதிநிதிகள் அமைதியாக 
வருகின்றார்கள் , போகின்றார்கள். சிறு குழப்பம் கூட இல்லை. 
திருமணம் நடந்தால் ஏற்படும் இடையூறில் சிறு பகுதி கூட
மாநாட்டால் எங்களுக்கு ஏற்படவில்லை "     

இதைக் கேட்கையில் மிகவும் பெருமையாக இருந்தது.

கம்யூனிஸ்டுகள்  என்றால் கட்டுப்பாடு  என்றும் ஒரு அர்த்தம்
உள்ளதல்லவா?    

இறுதியாய் சிக்கிய புறா.



இடம் : லலிதா  மஹால் திருமண மண்டபம், நாகை.

நிகழ்வு : மார்க்சிஸ்ட்  கட்சி மாநில மாநாடு - பிரதிநிகள் அமர்வு.

பிரதிநிதிகள்  அட்டை அணியாத யாருக்கும்  உள்ளே வர
கண்டிப்பாக அனுமதி கிடையாது.

ஆனாலும்   சரியாக    மாலை  ஆறரை மணிக்கு  ஒருவர்
யாருடைய அனுமதியும்  இல்லாமல் உள்ளே  புகுந்து 
ஒரு மணி நேரம் சர்வ சாதாரணமாக  உலாவி விட்டு
வெளியேறி விடுவார், 

அந்த புறாவின் இயல்பு வாழ்க்கையில்தான்  ஒரு வேளை
மாநாடு  குறுக்கிட்டு விட்டதோ?

கடுமையான முயற்சிக்குப் பிறகுதான்  அரைகுறையாக
அந்த புறாவை இறுதியில் படமஐக்க முடிந்தது.







         

Monday, February 20, 2012

தமிழக மீனவர்கள் இறக்கும் போது இந்த வேகம் எங்கே ஒளிந்து கொண்டது?




கொச்சின் அருகே இத்தாலியக் கப்பலால் கேரள மீனவர்கள் தாக்கப்பட்டவுடன் மத்தியரசு காண்பித்த வேகம் அதிசயமானது. இங்கேயும் கொல்லப்பட்ட மீனவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் படகு கேரளாவை சேர்ந்தது. மற்ற மீனவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மத்தியமைச்சர் ஏ.கே.அந்தோணி உடனடியாக கண்டிக்கிறார். இத்தாலி நாட்டு தூதர் உடனடியாக வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்படுகின்றார். கப்பல் கொச்சின் துறைமுகத்திற்கு இழுத்து வரப்படுகின்றது. இருவர் கைது செய்யப்பட்டனர்.

எல்லாம் சரிதான். எனக்குள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் போது இந்த வேகம் எங்கே ஒளிந்து கொண்டது? ஒவ்வொரு முறை எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை சென்று திரும்பி வந்த ஓரிரு நாட்களில் தாக்குதல் நடக்கிறதே, ஒரு முறை கூட இலங்கை தூதரை அழைத்து கண்டிப்பதே இல்லையே?

இப்படி ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது மத்தியரசிற்கு அழகா?

Sunday, February 19, 2012

நான் அவளில்லை, இது என் கையெழுத்தில்லை




தமிழகம் பல்வேறு ஊழல்களைக் கண்டிருந்தாலும் இது சற்று வித்தியாசமான ஒன்று. ஊழல் செய்யப்பட்டதிலோ, அரசு கஜானாவிற்கு வர வேண்டிய பணம் பறி போனதிலோ வித்தியாசம் இல்லை. வழக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது குற்றம் சுமத்தப்பட்டவர் தன்னை பாதுகாக்க சொன்ன காரணம், இடையில் வந்த தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவைதான் வித்தியாசமானது.

தமிழக முதல்வராக முதல் முறையாக செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றபோது அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. அதிலே முக்கியமான ஒன்று டான்சி நில ஊழல். தமிழக அரசு நிறுவனமான டான்சி (தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம்)  ஒரு காலத்தில் லாபமீட்டும்  நிறுவனமாக இருந்தது. ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் நொடித்துப்போனது. சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் டான்சிக்கு சொந்தமான நிலம், ஜெயலலிதாவும் அவரது முன்னாள் ( தற்போதைய நிலவரப்படி) உடன் பிறவா சகோதரி சசிகலாவும் பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்ப்ரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன.

ஒரு கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு ஏழு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தாலும் மூன்று லட்ச ரூபாய் என்று நிர்ணயம் செய்து விற்கப்பட்டதாலும், அதனால் முத்திரைத்தாள் கட்டணம் குறைவாக செலுத்தப்பட்டதிலும் அரசுக்கு நான்கு கோடி ரூபாய் இழப்பு என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறப்பு தனி நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்று சொல்லி ஜெ, சசிகலா மற்றும் பலருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை  வழங்கியது.

இந்த நிலம் தொடர்பான கோப்பில் உள்ள கையெழுத்து என்னுடையதே கிடையாது என்று ஜெ தடாலடியாக சாதித்து விட்டார். டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டதால் தவறு எதுவும் நடைபெறவில்லை என்று உயர்நீதி மன்றம் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. நிலத்தை அரசிடமே மீண்டும் ஒப்படைக்கிறேன் என்றும் ஜெ கூறினார்.

வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குப் போனது. இதிலே தவறு என்பது நடத்தை விதிகளுக்கு எதிராக ஜெயலலிதா நடந்து கொண்டார். இதனை சட்டப்படியான தவறு என்று சொல்ல முடியாவிட்டாலும் தார்மீக அடிப்படையில் தவறு. ஒரு சாதாரண ஊழியனுக்கு உள்ள பொறுப்பு கூட முதலமைச்சருக்கு இல்லாதது வருத்தத்திற்குரியது.

ஜெயலலிதா, நிலத்தை திருப்பித் தருவது மட்டும் போதுமானதல்ல. நடந்த தவறுக்காக வருந்த வேண்டும், நன்னடத்தை விதிகளுக்கு மாறாக, சுய நலமாக நடந்து கொண்டது சரியா, சந்தேகம் வருவது போல் நடந்து கொண்டது சரியா என அவரது மனசாட்சிக்கு பதிலளிக்க வேண்டும் என்று தீர்ப்பு சொன்னது. அப்படியெல்லாம் செய்தாரா என்பது கூட ஜெ வின் மனசாட்சிக்கு மட்டும்தான் தெரியும்.

எங்கள் சங்க மாத இதழில் வரும் ஊழல்களின் ஊர்வலம் தொடருக்காக எழுதியது


Saturday, February 18, 2012

அழகான அற்புதம்

இந்த  இயற்கையின் அற்புதம் நார்வே 
நாட்டில் உள்ளது. ஒரு தமிழ்ப் படத்தில்
பார்த்தது கடைசி புகைப்படங்களைப்
பார்க்கும் போது நினைவுக்கு  வரும்



















































  

எங்கே தவறு ?




சென்னையில் ஒரு மாணவன், தன் ஆசிரியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம், அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. அந்த சோகம்  இன்னும் நெஞ்சில் பாரமாய் வீற்றிருக்கும் போதே அடுத்த அதிர்ச்சிச் செய்தி வந்து தாக்கியது. திருப்பூரில் ஒரு மாணவன் தனது மரணத்திற்கு ஆசிரியர் தன்னை சித்திரவதை செய்ததுதான் காரணம் என்று எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்ற செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடர்கதையாவது ஏன் என்று ஆராய வேண்டிய அவசியம் உள்ளது.

கல்வி என்பது அறிவை வளர்ப்பதற்காக என்ற நிலை மாறி வேலை வாய்ப்பு பெறுவதற்கான தகுதி என்றாகி விட்டது. தேர்வு என்பது அச்சுறுத்தும் அம்சமாக நிலை கொண்டு விட்டது. கல்வி என்பது இப்போது முழுவதும் வணிகமயமாகி விட்டது. தனியார் பள்ளிகள் புற்றீசல் போல கிளம்பி விட்ட சூழலில் தேர்வு முடிவுகள் நூறு சதவிகிதம் பெறுவது என்ற இலக்கோடு அவை செயல்படுகின்றன. அந்த முடிவுகள்தான் அவர்களது வணிகத்திற்கான மூலதனம்.

அதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைவருமே கடுமையான மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர். சரியான வடிகால் கிடைக்காதவர்கள் தவறான முடிவுகளை நாடுகின்றனர். கல்வி முறை, வேலை வாய்ப்பின்மை, கல்வியில் தனியார்மயம்  ஆகிய அனைத்துமே இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணியாக உள்ளது.

கல்வியாளர்கள் சற்று தீவிரமாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது. கற்றலை இனிய அனுபவமாக மாற்றுவது குறித்த ஆய்வுகளை நடத்திட வேண்டும். சரியான பரிந்துரைகளை அரசுகளும் ஏற்று அமுலாக்கிட வேண்டும். இதுதான் எதிர்காலத் தலைமுறைக்கு நல்லது.   

Wednesday, February 15, 2012

ஜெ விடம் உள்ளது, மக்களிடம் இல்லாதது.

இருண்ட தமிழகத்தில்  மின்சாரம் உள்ளிட்ட சகல
அதிகாரமும் ஜெ விடம் மட்டுமே குவிந்து 
கிடப்பதை சொல்லும்  இந்த  வரைபடம் எப்படி
உள்ளது என்று சொல்லுங்கள்.   




















Tuesday, February 14, 2012

அனைவரும் காதலிப்போம். அனைத்தையும் காதலிப்போம்,




இன்று காதலர் தினம். ஒரு புறத்தில் மலர் விற்பனை, வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் விற்பனை, குறுஞ்செய்திகள், மின் அஞ்சல்கள், இத்யாதி, இத்யாதி என பரபரப்பாய் நடந்து கொண்டிருக்கிறது. மறு புறத்தில் காதலர் தினத்தை அனுமதிக்க மாட்டோம் என ஆர்ப்பாட்டங்கள், எல்லை மீறும் காதலர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என காவல்துறை எச்சரிக்கை என்று நடந்து கொண்டிருக்கிறது. சிவப்பு ரோஜா  காதலைத் தெரிவிக்க, மல்லிகை மலர் சமாதனத்தை உருவாக்க என்ற புதிய அறிவியல் கண்டு பிடிப்பு வேறு இந்த ஆண்டு வெளியாகி உள்ளது. மலர் பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தால் சரி.

இன்னொரு சுவாரசியமான கதையும் பார்த்தேன். ரூம் போட்டு யோசித்த ஒரு ஜோசியர், காதலைச் சொல்ல நல்ல நேரம் எது? எந்த ராசிக்காரர்கள் எந்த இடத்தில் காதலை தெரிவிப்பது நல்லது என்று சொல்லியிருக்கிறார்கள். காதலர்களுக்கு நல்லதோ இல்லையோ, ஜோசியர்களுக்கு இனி யோகம்தான். காதலிப்பவர்கள் காதல் கடிதம் எழுதும் முன் ஜாதக நோட்டை எடுத்துக் கொண்டு ஜோசியர்கள் முன் நிற்கப் போகின்றார்கள்.

காதலர் தினம் தேவையா இல்லையா என்ற விவாதத்திற்குள் நான் செல்லவில்லை. எந்த ஒரு உணர்வுகளையும் தெரிவிக்க குறிப்பிட்ட ஒரு நாள் என்பது அவசியமில்லை. சில தினங்கள் வரலாற்று முக்கியத்துவம் படைத்தவை. உழைக்கும் மக்களின் உரிமைக்கான மே தினம், பெண்களின் உரிமைகளுக்கான மகளிர் தினம், அடிமைப் பட்டுக் கிடந்த நாடுகள் சுதந்திரம் பெற்ற தினம், உலகின் எதிரியாய் விளங்கிய ஹிட்லர் வீழ்த்தப்பட்ட தினம் ஆகியவை எல்லாம் முக்கியமானவைதான். அதோடு இன்று ஊடகங்கள் உருவாக்கி வரும் புதிய புதிய தினங்களை ஒப்பிடக் கூடாது. இந்த நவீன புதிய தினங்கள் எல்லாம் வணிக நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டது.

காதலர் தினத்தை இரு பால் பிரிவினரின்  உணர்வுகள் என்று மட்டும் ஒதுக்கி வைத்து விட வேண்டாம். அன்பு செலுத்துவதும் நேசிப்பதும், அந்த நேசத்தை வெளிப்படுத்துவதும் காதல்தான். அப்படி காதலை வெளிப்படுத்த எத்தனையோ விஷயங்கள் உள்ளதாய் நான் உணர்கின்றேன்.

அமைதியை காதலிப்போம். ஆதிக்கம் செலுத்துவதை கைவிட்டால் அங்கே அமைதி உருவாகும். அது நாடுகளுக்கும் பொருந்தும், சில பெரிய மனிதர்களுக்கும் பொருந்தும். ஏன் நமது குடும்பத்திற்குள் கூட கைவிட வேண்டிய அம்சம் இது. உலகெங்கும் போர்களும், வன்முறையும் கலவரங்களும் இல்லையென்றால் இந்த பூமியே ஒரு அழகிய பூங்காவன்றோ! அமைதியை காதலிப்போம்.

இல்லாதவரைக் காதலிப்போம். இந்த பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் அனைவரும் கொஞ்சம் வசதியானவர்கள்தான். சொந்தமாக கணிணி வசதியும், இணையதள இணைப்பும் வைத்துள்ளவர்கள்தான். சொந்தமாக இல்லையென்றாலும் கூட ஒரு மணி நேரத்திற்கு இருபது ரூபாய் ப்ரௌசிங் சென்டருக்கு செலவழிக்கும் வாய்ப்புள்ளவர்கள்தான். மாண்டெக்சிங் அலுவாலியா நிர்ணயித்த வறுமைக் கோட்டிற்கு மேலாக உள்ளவர்கள்தான். நம்மை விட வறியவர்களை நேசிப்போம், நம்மால் இயன்றதை அவர்களுக்கு அளித்திடுவோம். விரயமாய் செலவழிக்கும் தொகையில் சிறு பகுதியையாவது அடுத்தவருக்கு அளித்திடுவோமே!

பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்று பாட்டில்களிலும் கேன்களிலும்தான் கிடைக்கிறது. நாளை சுவாசிப்பதற்கான காற்றையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் உருவாகலாம். ஏற்கனவே மாசுபட்ட பூமியை மேலும் மாசு படாமல் பாதுகாப்போம். சுற்று சூழல் பாதுகாப்பு என்ற அம்சத்தை காதலிப்போம்.

இன்னும் காதலிக்க எவ்வளவோ இருக்கிறது.
நல்ல புத்தகங்களை,
நல்ல திரைப்படங்களை,
காதிற்கு இனிய இசையை,
கருத்தில் நல்லதான கவிதைகளை,
மக்களுக்கு நல்லது செய்யும் மனிதர்களை, இயக்கங்களை,
எல்லாவற்றிலும் நேர்மையை,
காதலிப்போம்.
அனைவரும் காதலிப்போம். நல்லது அனைத்தையும் காதலிப்போம்,
இன்று மட்டுமல்ல,
என்றென்றும்.



Monday, February 13, 2012

பாகிஸ்தானில் பதட்டம் - இந்தியா எச்சரிக்கையாக இருக்குமா?




பாகிஸ்தானில் ஜனநாயகம் எப்போதுமே  அபாயகரமான நிலையில்தான் 
இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் ராணுவ ஆட்சியும் மாறி மாறி
வருவது என்பதே நடைமுறை ஆக உள்ளது. பாகிஸ்தானில் பதட்டம்
குழப்பம் வரும் போது இந்தியா மீது தாக்குதல் நடத்தி பிரச்சினையை
திசை திருப்புவது என்பதும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கிறது. 


இப்போது கிலானி பதவிக்கும் ஜனாதிபதி சர்தாரி பதவிக்கும் ஆபத்து
வந்துள்ளது. அரசு, ராணுவம், உச்ச நீதிமன்றம் ஆகிய மூன்றும்
இப்போது முறைத்துக் கொண்டிருக்கிறது. யாருடைய கை ஓங்கப் 
போகிறது என்பதை நிகழ்ச்சிப் போக்குகள் முடிவு செய்யும். பாவம்
பாகிஸ்தான் மக்கள்! 


ஆனால் எப்படியானாலும் இந்தியா வோடு  பிரச்சினையை எழுப்பி
திசை திருப்பும் வேலை கண்டிப்பாக நடக்கும். ஆனால் இந்திய அரசு
எச்சரிக்கையாக இருக்குமா? அந்த நம்பிக்கை எனக்குக் கிடையாது.
பாகிஸ்தானோடு பிரச்சினை வருவது இவர்களுக்கும் நல்லதுதானே!
இவர்களின் தவறுகளையும் மக்கள் தற்காலிகமாகமாவது  மறந்து
விடுவார்களே!