Showing posts with label பிள்ளையார் சிலை. Show all posts
Showing posts with label பிள்ளையார் சிலை. Show all posts

Thursday, September 28, 2023

பிள்ளையாரை அவமானப்படுத்துவது யார்?

 


கடந்த சனியும் ஞாயிறும் கள்ளக்குறிச்சியில் கோட்ட மாநாடு. வெள்ளிக்கிழமை மாலை கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தோம். பலத்த மழை காரணமாக மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது மணலூர்பேட்டையை தாண்டியதும் ஓட்டுனர் பிரேக் போட்டார்.

 சாலை முழுதும் காவலர்கள் குழுமியிருந்தார்கள். காரின் உள்ளேயே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

 ஒரு குட்டி யானை வண்டியிலிருந்து ஒரு பெரிய பிள்ளையார் சிலையை அப்படியே சாலையில் தூக்கி வீசினார்கள். பிறகு சாலையிலேயே தரதர என்று இழுத்துச் சென்று பக்கத்தில் உள்ள ஒரு நீர்நிலையில் (அது குளமா, ஏரியா என்று அந்த இருட்டில் சரியாக தெரியவில்லை)   மீண்டும் வீசினார்கள். அங்கே இன்னும் சில வினாயகர் சிலைகளும் உடைந்த நிலையில் இருந்தது என்பதை அப்போது தோன்றிய மின்னலின் வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது.

 வினாயகர் சிலைகளை எல்லா இடங்களிலும் இப்படித்தான்  அலட்சியமாக கையாளுகிறார்கள். சென்னை கடற்கரையில் ஒதுங்கிய சிலைகளின் சிதிலங்களே அதற்கு சாட்சி (முகப்பில் உள்ள படம்)  இதற்கு ஒரு விளக்கமும் கொடுக்கிறார்கள் சங்கிகள். பந்தலில் வைத்து பூஜை செய்த பிறகுதான் அந்த பிள்ளையாருக்கு சக்தி வருமென்றும்  கடைசி ஆரத்தி காண்பித்த பின்பு அந்த சக்தி போய்விடும். அப்போது வெறும் பொம்மைதான் என்றும் சொல்கிறார்கள்.

 


அதாவது இவர்கள் பூஜிக்கும் கடவுளுக்கு சக்தி கொடுக்கின்ற, பிறகு அந்த சக்தியை பறிக்கின்ற அளவிற்கு வல்லமை இவர்களுக்குத்தான் உண்டு. (சனாதன தர்மத்தின் பிரிவினை புத்தி பற்றி அந்த சங்கி கொடுத்துள்ள க்ளூவின் அடிப்படையில் அது என்னவென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்)

 சரி, வெறும் பொம்மை என்றே வைத்துக் கொள்வோம், இத்தனை நாள் கடவுளாக வழிபட்ட ஒன்றை சட்டென்று பொம்மையாக கருதி தடியால் அடித்து உடைத்து மேலிருந்து தள்ளி விட ஒரு பக்தனுக்கு மனம் வருமா?

 இந்த சங்கியின் குடும்பத்தில் ஒரு இழப்பு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். உயிர் போனால் வெறும் பிணம்தான். அதனால் அந்த பிணத்தையும் பிள்ளையார் பொம்மையைச் செய்வது போல தரதரவென்று இழுத்துப் போய் சுடுகாட்டிலோ இடுகாட்டிலோ தூக்கிப் போட்டுவிட்டு வந்து விடுவாரா?

 தந்தை பெரியார் பிள்ளையார் பொம்மைகளை உடைத்தார் என்று இன்னமும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒன்றும் அந்த பிள்ளையார் சிலைக்கு சங்கிகள் போல சக்தியெல்லாம் கொடுத்திருக்கப் போவதில்லை. அதனால் அவர் உடைத்ததும் பொம்மைதான். அதற்கு மட்டும் ஏன் பொங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

 மொத்தத்தில் பிள்ளையாரை இழிவுபடுத்துவது அவர் பெயரில் அரசியல் செய்யும் சங்கிகள் மட்டுமே.

Tuesday, September 19, 2023

வினாயகருக்கும் விடுதலை . ..

 


வினாயகர் சதுர்த்தியின் போது வழக்கமாக எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வைக்கும் வினாயகர் சிலை இந்த வருடம் இல்லை.

அதனால் நாள் முழுதும் குத்து பாடல்களை மட்டும் கேட்கும் அவஸ்தையில் இருந்து எங்களுக்கு விடுதலை.

எங்களுக்கு மட்டுமா விடுதலை?

வினாயகருக்கும்தான்.

குத்து பாடல்களை  கேட்பதிலிருந்து மட்டுமல்ல, பிள்ளையார் சிலையை திரை போட்டு மூடி விட்டு அங்கேயே டாஸ்மாக் சரக்குகளை அடிப்பதை வேடிக்கை பார்ப்பதிலிருந்து கூட.

ஆனால் இந்த விடுதலை எல்லோருக்கும் கிடைக்கவில்லை.

சங்கப்பணியாக நேற்று மாலை அலுவலகம் சென்ற போது ஒரு கோயிலிலும் இன்னும் இரண்டு இடங்களிலும் பிள்ளையார் சிலை இருந்தது.

கோயிலில் இருந்து மட்டும் "ஒன்பது கோள்களையும் ஒன்றாய் காண" வரச்சொல்லும் பாடல். மற்ற இடங்களில்?

காவாலய்யா, நூ காவாலய்யா, ஆஆஆஆஆ
அலப்பறை அலப்பறை சூப்பர் ஸ்டாரு.

திரும்பி வருகையில் ஒலித்த பாடல்கள் சத்தியமாக புரியவே இல்லை. பாவம் பிள்ளையார் . . . .

Wednesday, September 6, 2023

கிருஷ்ணர், பிள்ளையார் - பக்தியும் அரசியலும்

 


இன்று காலையிலிருந்தே அருகாமையிலிருந்த கோயிலில் இருந்து பாடல்கள் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. கண்ணதாசன் - எம்.எஸ்.வி வழங்கிய கிருஷ்ண கானம் ஆல்பத்தின் பாடல்கள் பல முறை ஒலித்தது. எஸ்.பி.பி யின் இளமையான குரலில் "ஆயர்பாடி மாளிகையில்" டி.எம்.எஸ் ஸின் கம்பீரமான "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" எம்.எஸ்.வி யின் உருக்கமான "அமர ஜீவிதம்" ஆகிய பாடல்களை இப்போது கூட ரசிக்க முடிந்தது. ஒலித்த மற்ற பாடல்கள் கூட திரையில் வந்த கிருஷ்ணன் பாடல்களே! 

இறை நம்பிக்கை இல்லையெனினும் இசை ஈர்த்தது.

ஆனால் அடுத்த வாரம் ????

வருகிறது பிள்ளையார் சதுர்த்தியும் சங்கிகளின் ஏற்பாட்டில் பிள்ளையார் சிலைகளும்.

அங்கே குத்துப்பாடல்கள் தவிர வேறெதுவும் ஒலித்ததில்லை என்பதுதான் இருபது வருட அனுபவம். ஒரு இரண்டு ஆண்டுகள் மட்டும் கொரோனாவால் பிள்ளையாரும் இந்த இம்சையிலிருந்து தப்பித்தார்.

ஏன் இந்த வித்தியாசம்?

எளிதான காரணம்தான்.

கிருஷ்ண ஜெயந்தி பக்தியியால் கொண்டாடப்படுகிறது.
பிள்ளையார் சதுர்த்தி சிலைகளின் பின்னே இருப்பது அரசியல், 
மத வெறி அரசியல், ஆதிக்க அரசியல், 

Tuesday, September 6, 2022

உண்மையான பக்தனாக இருந்தால்???

 


மேலே உள்ள படத்தை அனைவரும் பல முறை பார்த்திருப்பீர்கள்.

ஊரெல்லாம் காசு வசூல் செய்து சேர்த்த காசில் பாதியை பிள்ளையாருக்கும் மீதியை சரக்குக்கும் சைட் டிஷ்ஷிற்கும் செலவு செய்து மூன்று நாட்கள் வீதியில் நிறுத்தி அப்போதும் உண்டியலும் தட்டும் வைத்து வசூல் செய்து விட்டு ஊரையே பதற்றத்தில் ஆழ்த்தி போலீஸ்காரர்களை வேறு பிழைப்பை எல்லாம் விட்டு விட்டு பந்தோபஸ்து கொடுக்க வைத்து கட்டையால் அடித்து உடைத்து கரைத்தாலும் இப்படி தலை வேறு கால் வேறாக பிள்ளையார் சிலையின் எச்சங்கள் மிதப்பதை பக்தர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?

நீங்கள் வணங்கும் கடவுளுக்கு இப்படி ஒரு இழிவான நிலை உருவாவதை நீங்கள் விரும்புகிறீர்களா?

நீங்கள் உண்மையான பக்தன் என்றால் பிள்ளையார் சிலையை வைத்து வியாபாரம் செய்வதையும் கலவரம் செய்வதையும் இனியாவது அனுமதிக்காதீர்கள்.

நினைவில் இருக்கட்டும். நல்லவர்கள் அமைதியாக இருந்தால் அயோக்கியர்கள் கூத்தாடுவார்கள்.

உங்களின் எதிரி நாத்திகர்கள் அல்ல, கடவுளின் பெயரில் வியாபாரம் செய்யும் சுய நலப் பேர்வழிகள்தான். . .

 அவர்களை ஒதுக்கி வைத்தால் உங்களுக்கும் பிரச்சினை கிடையாது. நீங்கள் வழிபடும் கடவுளுக்கும் பிரச்சினை கிடையாது.

Monday, September 5, 2022

சங்கிங்க பொழப்பை கெடுக்கறீங்களே!

 







நாங்கள் ஒற்றுமையாக வாழ்வது பரங்கிப்பேட்டை...
மத நல்லிணக்கத்துக்கு இதுதான் கோட்டை!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை 14வது வார்டுக்கு உட்பட்ட குருநாதசெட்டிமேட்டு தெருவில் அமைந்துள்ள செண்பக விநாயகர் ஆலயத்தில் 7ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் ஊர்வலத்தை
பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாத் தலைவர் M.S முகமது யூனுஸ் அவர்கள் துவக்கி வைத்தார்.

இதில் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி.தேன்மொழி சங்கர் அவர்களும் மற்றும் இஸ்லாமிய நண்பர்களும் ஆலய நிர்வாகிகளும் ஊர்பொதுமக்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்

மேலே உள்ள படங்களும் பதிவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு வின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

பாவம் சங்கிகள். இப்படியெல்லாம் ஒற்றுமையாக இருந்தால் அவர்கள் எங்கிருந்து கலவரம் செய்வார்கள்! எப்படி தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்து ஆட்டுக்குட்டி சி.எம் ஆவது!

மக்கள் ஒற்றுமைதான் சங்கிகளை, மோடி வகையறாக்களை தனிமைப் படுத்தும்.

நம் சிந்தனையும் செயலும் அந்த இலக்கை நோக்கியே அமையட்டும்.


Saturday, September 3, 2022

பிள்ளையாரை அசிங்கப்படுத்தறாங்க!

 


நேற்றும் நேற்று முன் தினமும் பார்த்த சில காட்சிகள்.

 காட்சி 1

 எங்கள்  வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பிரம்மாண்டமான வினாயகர் சிலை வெள்ளை திரை போட்டு மூடப்பட்டிருந்தது. ஆனாலும் திரைக்குப் பின்னால் நடப்பது நன்றாக தெரிந்தது.

 மூவர் அங்கே அமர்ந்து பிளாஸ்டிக் டம்ப்ளர்களில் ஏதோ ஒரு கருந்திரவத்தை பாட்டிலில் இருந்து ஊற்றிக் கொண்டிருந்தார்கள். பிள்ளையார் பால் குடித்தார் என்ற வதந்தியை நம்பாதவர்கள் என்று மட்டும் புரிந்தது. அப்படி அவர்கள் நம்பியிருந்தால் அவர்கள் அங்கே சரக்கை சாப்பிட்டிருக்க மாட்டார்கள் அல்லவா!

 காட்சி 2

 வினாயகர் விஸர்ஜன ஊர்வலத்தின் ஒரு பகுதி எங்கள் அலுவலகத்தை கடந்துதான் சென்றது. அதிரடிப்படை தலைமை தாங்க, அதன் பின்பு சாதாரண போலீஸ் நடைபோட பின்பு வந்தது போலீஸ் ஊர்வலம். தலையில் காவித்துண்டை கட்டியிருந்தவர்கள் கண்கள் சிவப்பேறியிருந்தது. காரணம் என்னவென்பதை தனியாக சொல்லவும் வேண்டும். பதினோரு மணிக்கு ஊர்வலம் புறப்படும் என்று பேனர் சொன்னாலும் அவர்கள் தாமதமாகத்தான் புறப்பட்டிருக்க வேண்டும். ஆமாம் வழியில் உள்ள திப்பு மசூதியில் வெள்ளிக் கிழமை தொழுகை நடக்கும் நேரமும் அவர்கள் அந்த இடத்தை கடந்த நேரமும் ஒன்றுதான். காரணம் ? அதை தனியாக வேறு எழுத வேண்டுமா?

 காட்சி 3

 எங்கள் அலுவக சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த  தெரிவில் ஐந்தாறு இளைஞர்கள். தலையில் காவித்துண்டும் முகத்தில் சாயமும் பூசியிருந்தார்கள். காரசாரமான விவாதத்தில் ஒருவன் மற்றவர்களுக்கு பணம் தர, அவர்கள் அதை அவன் முகத்திலேயே தூக்கி எறிந்து வசூல் காசு மொத்தத்தையும் நீயே சுருட்டிக்க பார்க்கிறாயா என்று சண்டை போட்டார்கள்.

 காட்சி 4

 அலுவலகத்திலிருந்து வீடு வரும் வேளையிலும் வினாயகர் ஊர்வலம் சென்று கொண்டுதான் இருந்தது. வாகனங்கள் செல்ல வழி கொடுத்தார்கள். ஊதுபத்தி, கற்பூரம் என்று பக்தி மணம் கமழும் என்று நினைத்தேன். டாஸ்மாக் வாசம் வீசிக் கொண்டிருந்தது.

 காட்சி 5

 எங்கள் தெருவுக்கு பின் தெருவில் இருந்த பிள்ளையார் சிலையை அப்போதுதான் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். “தண்ணி கருத்துடுச்சு, தவளை சத்தம் கேட்டுருச்சு” என்று அந்த கால பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. “டேய் பிள்ளையாரு பிரம்மச்சாரி. அவரை விட்டுருங்கடா”  என்ற என் மைண்ட் வாய்ஸ் அவர்களுக்கு கேட்கவே இல்லை. அடுத்த பாடல் ஒலித்தது.

 “படிச்சுப் பார்த்தேன். ஏறவில்லை. குடிச்சுப் பார்த்தேன். ஏறிடுச்சு”

 இந்த காட்சிகளைப் பற்றி நான் என்ன கருத்து சொல்ல?

 


Wednesday, August 31, 2022

காவிகளின் கலவர வினாயகர்

 


நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு,

பெங்களூரில் வக்ப் ஆணையத்துக்கு சொந்தமான,  இருநூறு வருடங்களாக இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வரும் ஈத்கா மைதானத்தில் வினாயகர் சதுர்த்தி விழா நடத்த வேண்டும் என்ற கர்னாடக அரசின் ஆணைக்கு எதிரான வழக்கு அது. நல்ல வேளையாக உச்ச நீதிமன்றம் கர்னாடக அரசை அனுமதிக்கவில்லை. 

இஸ்லாமியர்களின் வழிபாட்டு இடத்தில்தான் வினாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டுமா? வேறு இடமே பெங்களூரில் கிடையாதா?

கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இதில் இருக்க முடியும்!

புதிய பரிசோதனைக்கூடமாக கர்னாடக மாநிலத்தை மாற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பதை கவனத்துடன் பார்க்கத் தவறினால் பாதிப்பு மிகவும் பெரிதாக இருக்கும். 

Friday, September 10, 2021

அப்போது கூட சங்கிகள் நீங்கள் ????

 


எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் சங்கிகள் உள்ளார்கள். பிள்ளையார் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும் என்பதற்காக அவர்களின் புதிய வசனம் ஒன்றை பேசத் தொடங்கியுள்ளனர்.

 அந்த வசனம்

 “சுதந்திரப் போராட்டத்திற்கு மக்களை திரட்ட பிள்ளையார் சிலை ஊர்வலம்தான் பயன்பட்டது தெரியுமா?”

 சரி. அது உண்மையாகவே இருக்கட்டும்.

 ஆனால் சங்கிங்களா, அப்போ கூட நீங்க சுதந்திரப்  போராட்டம் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லையே துரோகிகளா!

 உங்களுக்கு பிள்ளையார் மேலயும் பக்தி கிடையாது.  சுதந்திரப் போராட்டத்தின் மீதும் நம்பிக்கை கிடையாது.

 கலவரம் செய்ய பிள்ளையார் சிலையை கையில எடுக்கிற உங்களுக்கு எல்லாம் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியெல்லாம் பேச அருகதையே கிடையாது.

Thursday, September 9, 2021

மொட்டைச்சாமியாருக்கு ஆட்டுக்காரரின் கடிதம் . . .

 


பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்களை தமிழ் நாட்டு முதல்வருக்கு அனுப்பிய ஆட்டுக்கார அண்ணாமலை, தமிழ் நாடு போலவே முடிவெடுத்த உ.பி முதல்வருக்கு என்ன கடிதம் எழுதியிருப்பார் என்று யோசித்தேன்.

அந்த கற்பனைக் கடிதம் கீழே.



Wednesday, September 8, 2021

அண்ணாமலையை வெறுப்பேத்தலாமா முதல்வரே?

 


அயோக்கியனின் கடைசி புகலிடம் ஜாதி, மதம் என்பது போல ஆட்சிக்காலம் முழுதும் தொழிலாளர்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிற, அவர்களின் உரிமைகளை பறிக்கிற, வாழ்வாதாரத்தை அழிக்கிற மோடி வகையறாக்களின் தமிழ்நாட்டுப் பிரிவு பிள்ளையார் சிலை விவகாரத்தில் சிலை செய்யும் தொழிலாளர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தது. 

சங்கிகள் எந்த காலத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், கலைஞர்கள் பற்றியெல்லாம் கவலைப்பட்டுள்ளார்கள்?

சிலை செய்யும் 3000 தொழிலாளர்களுக்கு ரூபாய் 5,000 உதவித் தொகை அறிவித்ததன் மூலம் சங்கிகளின் வாய் அடைக்கப்பட்டு விட்டது.

அண்ணாமலை அடுத்து என்ன செய்வார் மாலன்? அவர் புத்திசாலி என்று சொன்னவர் அல்லவா நீங்கள்!

Tuesday, September 7, 2021

அடியெல்லாம் புதுசா என்ன மாலன் ?

 


மூமூமூமூமூத்த்த்த்த்த்த்தததத பத்திரிக்கையாளர் மாலன் பழையபடி ஃபார்மிற்கு வந்து விட்டார் போல.

லட்சம் வீடுகளுக்கு வெளியே பிள்ளையார் சிலை வைக்கப் போவதான ஆட்டுக்கார அண்ணாமலையின் அறிவிப்பை ஒட்டி எழுத்தாளர் பா.ராகவன் பக்கத்தில் காரசார விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

 வழக்கம் போல அதில் மூக்கை நுழைத்த மாலன், அண்ணாமலைக்கு புத்திசாலி என்று ஒரு சான்றிதழ் வேறு கொடுத்துள்ளார். 




சென்ற வருடம் விஷூ அன்று பாட்டையா பாரதி மணி தன் வீட்டிற்கு நண்பர்கள் வந்தனர் என்பதை பதிவு செய்த போது  “வயதாகி டேஞ்சர் ஜோனில் இருக்கும் உங்களுக்கெல்லாம் விருந்தினர்கள் வேறா? அதை பதிவு வேறு போடுவீரா?” என்று அநாகரீகமான ஒரு பதிவெழுதினார்.

இப்போது அவர் எடுக்கும் நிலை அன்றைய நிலைக்கு முற்றிலும் முரணானது. கொரோனா எத்தனை பேருக்கு வந்தால் எனக்கென்ன? எனக்கு படியளப்பவனின் மனம் குளிர்ந்தால் போதும் என்ற நிலைதான் அவருக்கு.

சரி மாலன், மறுபடியும் உங்க முகநூல் பக்கத்தை திறந்து விடுங்க. அப்போதான் உங்களுக்கு நல்லா அடி விழும். அதை காரணம் காண்பித்து உங்க ரேட்டை உயர்த்திக்கலாம்.

உங்களுக்கு அடி வாங்கறதெல்லாம் புதுசா என்ன? துட்டு அதை விட முக்கியம் அல்லவா?

 

Friday, September 3, 2021

பிள்ளையார் சந்தோஷப்படுவார் அண்ணாமலை

 


 

பொது வெளியில் பிள்ளையார் சிலை வைப்பதற்கும் சிலை ஊர்வலத்திற்கும்  இந்த வருடமும்  அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளதைக் கண்டித்து சங்கிகள் திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். கேடி.ராகவன், மதன், வெண்பா பிரச்சினையிலிருந்து தப்பிக்க ஆட்டுக்கார அண்ணாமலை ஓவராக குதிக்கிறார். அவர்கள் கட்சி ஆட்சி செய்யும் கர்னாடக மாநிலத்திலும் பிள்ளையார் சிலை ஊர்வலங்கள் இந்தாண்டு தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசை கலைக்கப் போவதாக மிரட்டும் ப்ரவுட் கன்னடிகா அண்ணாமலை கர்னாடக பாஜக அரசையும் கலைத்து நீதியை நிலை நாட்டுவார் என்று நம்புவோமாக.

 நிற்க,

 தமிழகத்தில் மிகப் பெரும் மக்கள் திரளோடு நடைபெறக் கூடிய கோயில் விழாக்கள் பல உண்டு.

 அதிலே முதன்மையானது என்று மதுரை சித்திரைத் திருவிழாவையும் அதிலும் குறிப்பாக அழகர் ஆற்றில் இறங்குவதையும் சொல்லலாம்.  எங்கள் பகுதியை எடுத்துக் கொண்டால் குடியாத்தம் கங்கையம்மன் கோயில் திருவிழாவை சொல்லலாம். திருவண்ணாமலை தீபத் திருவிழா இன்னும் ஒரு உதாரணம். இப்படி எத்தனையோ விழாக்கள் பல லட்சம் மக்கள் பங்கேற்போடு நடப்பவை. அவை இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக நடக்கவில்லை. நிகழ்வு நடந்தாலும் மக்கள் பங்கேற்பிற்கு அனுமதி கிடையாது.

 இந்த விழாக்கள் பற்றி பாஜக வாய் திறக்கவே இல்லை. அவை மக்கள் விழாக்கள். அமைதியாகத்தான் நடக்கும். அங்கே அரசியல் செய்வதற்கான ஸ்கோப் கிடையாது. பல இடங்களில் சமூக நல்லிணக்கமும் பேணிப் பாதுகாக்கப்படும் வகையில் சில சடங்குகள் உண்டு. ஆகவே சங்கி அரசியலுக்கு வாய்ப்பில்லாத கடவுள்களை அவர்கள் மதிக்கவே மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.

 கலவரம் செய்வதற்காகவே அவர்கள் வடிவமைத்ததுதான் பிள்ளையார் சிலை ஊர்வலங்கள். பல ஊர்களின் பல பகுதிகளில் வைக்கப்படுகிற சிலைகள் அந்தந்த பகுதி மக்களால் வைக்கப்படுவதல்ல, சிலைகள் இந்து முன்னணியால் வைக்கப்படும், பந்தல், மைக் செட் செலவுகளுக்கும் பணம் கொடுக்கப்படும்.

 இந்த வேலைக்கு பெரும்பாலும் விடலைப் பசங்கள், அதிலும் ரசிகர் மன்ற கண்மணிகளைத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள்  சிலையின் பெயரால் அவர்கள் வசூல் செய்து அந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கம்யூனிஸ்டுகளை உண்டியல் குலுக்கிகள் என்று நக்கலடிக்கும் சங்கிகள், சின்னப் பசங்களை சாலையில் போகும் வாகனத்தை நிறுத்தி உண்டியலை குலுககி காசு போடச் சொல்லி தொந்தரவு செய்வார்கள், அந்த பணம் மூலம் பலனடைவது டாஸ்மாக்காக மட்டுமே இருக்கும். பந்தல்களில் ஒலிப்பரப்பப்படும் பாடல்கள் இன்னொரு கொடூரம்,

 வினாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் சர்ச்சுகள் முன்பாகவும் மசூதிகள் முன்பாகவும் வெறுப்பேற்றி மோதலுக்கு அழைப்பு கொடுப்பதுதான் நோக்கம்.  வினாயகர் ஊர்வலத்தில் போதையில்லாமல் வருபவர்களை விரல் விட்டு எண்ணி விட முடியும். அவர்களை இன்னும் வெறியேற்றும் வேலையை இறந்து போன ராம.கோபாலன் முதற்கொண்டு உயிரோடு இருக்கிற அர்ஜூன் சம்பத் வரை செய்வார்கள்.

 இரண்டு வருடங்களாக பிள்ளையார் ஊர்வலங்கள் இல்லாத காரணத்தால் பிள்ளையாரின் பெயரில் அரசியலோ கலவரமோ செய்ய முடியவில்லை. பிள்ளையாரின் பெயரில் கல்லா கட்டும் வாய்ப்பும் அடிபட்டு விட்டது. அந்த கடுப்புதான் அண்ணாமலை அறிக்கையில் தெரிகிறது.

 யப்பா, அண்ணாமலை, பாவம்யா பிள்ளையாரு! அவரை ஃப்ரீயா     விடுய்யா.

 டாஸ்மாக் சரக்கின் நாற்றத்திலிருந்து,
குத்துப்பாட்டுகளின் கொடூரத்திலிருந்து,
கலவர வினாயகர் என்ற பழியிலிருந்து
நிஸர்ஜனம் என்ற பெயரில் சிலையை  
        மூழ்கடிக்க நடத்தும் தடியடியிலிருந்து

 தப்பித்து

 இந்த வருடம் பிள்ளையார் நிம்மதியாக இருக்கட்டுமே அண்ணாமலை.

 

Saturday, August 22, 2020

இன்றுதான் வினாயகருக்கு விடுதலை

 

ரசாயனப் பூச்சிலிருந்து விடுதலை. 

படுதாவை தொங்க விட்டு வண்ண திரவம் குடிக்கும் காட்சியை பார்ப்பதிலிருந்து விடுதலை. 

ஓயாமல் ஒலிக்கும் குத்துப் பாட்டுக்களை கேட்டு காதுகள் புண்ணாவதிலிருந்து விடுதலை. 

வீட்டில் மட்டும் வழிபடும் உண்மையான பக்தர்களுக்கு மட்டும் அருள் பாலித்தால் போதும் என்றொரு விடுதலை. 

டாஸ்மாக் மணம் சூழ போலீஸ் பாதுகாப்போடு வழியெங்கும் செல்வதிலிருந்து விடுதலை. 

கலவரங்களோடு இணைத்து தன் பெயர் சொல்லப்படுவதிலிருந்தும் விடுதலை. 

இறுதியாய் தடிகள் கொண்டு நொறுக்கப்படுவதிலிருந்தும் விடுதலை. 

வினாயகர் நிம்மதியாய் இன்று விடுதலைக் காற்றை சுவாசித்திருப்பார்.


கொரோனாவை ஒழிச்சிருக்கலாமே லூசுகளா?



 விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தமிழகஅரசு அனுமதிக்கவேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று தமிழ்நாடு முழுக்க ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவோம். அப்போது கணபதி ஹோமம் நடக்கும். அதில் மூலிகை வைத்து எரிப்போம். அந்த மூலிகை புகை தமிழ்நாடு முழுக்க பரவும். அது தமிழ்நாடு முழுக்க பரவியிருக்கும் கொரானா நோய்கிருமியை ஒழித்துவிடும். இது ஏற்கனவே போபால் விஷவாயு நடந்தபோது விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்டது.

----புதிய தலைமுறை நேர்பட பேசு விவாதத்தில் எஸ்.ஆர்.சேகர் (பிஜேபி)


இதன் உண்மைத்தன்மை பர்ற்றிய விவாதத்திற்குள் நான் செல்லவில்லை.

என் கேள்வி ஒன்றே ஒன்றுதான். நான் சீரியஸாகவே கேட்கிறேன்.

இதன் மூலம் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றால் 

மார்ச் 22 அன்று கைதட்டி மணியடிக்கச் சொன்னதற்கு பதிலாக ஏப்ரல் 9 அன்று லைட்டை அணைத்து விளக்கேற்றச் சொன்னதற்குப் பதிலாக அப்போதே கணபதி ஹோமம் செய்திருந்தால், கொரோனா அப்போதே ஒழிந்திருக்குமே. பி.எம் கேர்ஸ் என்ற மர்ம நிதி வசூல் செய்து ஆளுக்காள் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பை தவிர்த்திருக்கலாமே? ஐம்பதாயிரம் பேர் இறப்பைக் கூட தவிர்த்திருக்கலாமே!


இந்த அரிய அறிவியலை கலவரத்துக்கு வாய்ப்பில்லை என்பது வரை சொல்லாமல் இருந்தது தேசத்துரோகமில்லையா மிஸ்டர் எஸ்.ஆர்.சேகர்?

Friday, August 14, 2020

13 நாளில் இ.மு பல்டி ஏன்?

 

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு இருப்பதால் இந்த வருடம் பொது இடங்களில் வினாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்வதோ, வினாயகர் சிலை மூழ்கடித்தல் ஊர்வலங்களோ அவசியமில்லை என்றும் அவரவர் வீட்டிற்குள் மஞ்சளால் பிடித்த பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டுக் கொள்ளுங்கள் என்று இந்து முன்னணி 01.08.2020 அன்று அறிக்கை விடுத்தது. 


இந்த வருடம் வினாயகர் சிலை ஊர்வலங்களுக்கு அனுமதி கிடையாது என்று நேற்று தமிழக அரசு அறிவித்ததும் "தடையை மீறி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இடங்களில் வினாயகர் சிலை வைக்கப்பட்டு வினாயகர் சிலை மூழ்கடித்தல் ஊர்வலம் நடந்தே தீரும்" என்று இந்து முன்னணி நேற்று அறிவித்துள்ளது.


01.08.2020  அன்று அவர்கள் எடுத்த நிலையைத்தான் அரசும் எடுத்துள்ளது. இந்த வருடம் வினாயகர் சிலை வைக்க வேண்டாம் என்று முடிவெடுத்த இந்து முன்னணி அரசு அறிவித்ததும் பல்டி அடித்து அடம் பிடிப்பது ஏன்?

முருகருக்கான வேல் பூஜை காமெடியாகப் போனதால் மீண்டும் வினாயகரை வைத்து வன்முறை அரசியலை கையிலெடுக்கப் பார்க்கிறதா?

ஒரு வேளை தமிழக அரசும் சங்கிகளும் ஏதாவது கூட்டுக் களவாணித்தனம் செய்கிறார்களா என்று ஒரு சந்தேகமும் வருகிறது.

உண்மையான பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்து முன்னணி போன்ற காவிகளின் நோக்கத்தை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். இந்த கயவர்களுக்கு வினாயகரோ, முருகனோ அல்லது பக்தர்களின் உடல் நலனோ முக்கியமில்லை. கடவுளின் பெயரால் கலவரத்தைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அனைத்து அங்கங்களையும் புறக்கணியுங்கள்.

தகவல் உதவி : வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராம



Monday, September 2, 2019

வினாயகரை புலம்ப வைக்காதீர் . . .


இரண்டு நாட்களாக எங்கள் பகுதியில் காணும் காட்சிகள் கவலையாக உள்ளது. 

வழக்கமாக வினாயகர் சதுர்த்தியின் போது ஒரு பரபரப்பு இருக்கும். சிறுவர்கள் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். மிஞ்சிப் போனால் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

இந்த வருடம் எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் மட்டும் நான்கு பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பந்தல் அமைப்பது தொடங்கி அலங்காரம் செய்வது வரை பதினைந்து, பதினாறு வயது சிறுவர்கள்தான்.

ஆனால் நான் கவனித்த சில விஷயங்கள் 

ரோட்டில் குழி வெட்டி பந்தல் போடும் போது தாராளமாக பயன்படுத்தப்பட்ட கெட்ட வார்த்தைகள்,

சாலையில் வேகமாக வரும் வாகனங்களை மறித்து பணம் கேட்பது, கொடுக்காதவர்களை பார்க்கும் முறைப்பான பார்வை, 

நான் பார்த்த நான்கு இடங்களில் மூன்று இடங்களில் அவர்கள் சிறுவர்களாகவே நடந்து கொள்ளவில்லை. வினாயகர் சிலை வைப்பது என்ற பெயரில் சங்கிகள் ரௌடிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றியது. 

நேற்றிரவு கடைசியாக பார்த்த ஒரு காட்சிதான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

ப்ளெக்ஸ் பேனர் கொண்டு மூடப்பட்டிருந்தாலும் முழுமையாக மூடப்படாமல் இருந்த பிள்ளையார் சிலைக்கு அருகே இருந்த பாட்டிலில் இருந்த கருந்திரவம் பானகம் என்றும் அதைத்தான் இரண்டு பேர் யூஸ் அன்ட் த்ரோ  டம்ப்ளரில் அருந்திக் கொண்டு இருந்தார்கள் என்று நம்புகிறேன்.

PLEASE, NOT IN MY NAME என்று 
உயிர் இருந்தால் பிள்ளையார் சிலைகளும் கண்டிப்பாகக் கூறும் . . .

Thursday, August 1, 2019

வினாயகர் சிலையும் சப்பாணியும்

காலையில் இன்றைய நாளிதழ் வரத் தாமதமானதால் நேற்றைய, அதற்கு முந்தைய நாள் இதழ்களை புரட்டிக் கொண்டிருந்தேன். 

அப்போது கண்ணில் பட்ட ஒரு செய்தி கீழே உள்ளது.

வினாயகர் சிலைகள் எப்படி அமைய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள உத்தரவுகள் பல.

சுட்ட களி மண்ணிலோ அல்லது ப்ளாஸ்டர் ஆப் பாரீஸிலோ சிலைகள் அமையக்கூடாது.

ரசாயன வர்ணம் பூசக் கூடாது,

அதிக உயரம் கூடாது.

சிலை வைக்கும் இடத்திலோ அல்லது கரைக்கும் இடத்திலோ குப்பை கூடாது, இத்யாதி, இத்யாதி.



வருடா வருடம் இவை அனைத்தையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

கோபாலகிருஷ்ணன் என்று கூப்பிடச் சொன்ன சப்பாணியை எப்படி யாரும் மதிப்பதில்லையோ, அது போலத்தான் இந்த கட்டளைகளுக்கான மதிப்பும்.

கோபால கிருஷ்ணன் போல அரசு என்று சப்பென்று அடிக்குமோ?

Saturday, September 15, 2018

கொடியவர்களே, குழந்தைகளை விட்டுவிடுங்கள் . . .




பிள்ளையாரின் பெயரில் செங்கோட்டையில் காவிக்கயவர்கள் நடத்திய கலவரக் காட்சிகளின் காணொளியை பார்க்க நேரிட்டது.

அதிலே மிகவும் கவலையளித்த விஷயம் சிறுவர்கள் பலர் காவித் துணியை தலையில் கட்டியபடி கல் எறிவதும் பூந்தொட்டிகளை வீசி உடைப்பதுமான காட்சிதான்.

இது நாள் வரை வினாயகர் சிலை நிகழ்வுகளில் சிறுவர்கள் இருந்திருக்கிறார்கள். சாலையில் செல்பவர்களை மடக்கி உண்டியல் குலுக்குவதும் ஒலி பெருக்கிகளில் இசைக்கும் குத்துப்பாடல்களுக்கு நடனம் ஆடுவதுமாகத்தான் அவர்களின் அதிகபட்ச செயல்பாடாக இருந்திருக்கிறது.

ஆனால் கல்லெறிவது போன்ற கலவர நடவடிக்கைகளில் அவர்களின் பங்கைப் பார்க்கும் போது மனதை என்னவோ செய்கிறது.

எதிர்காலத் தலைமுறையின் மனதிலும்  நச்சினை கலக்கும் வேளையை காவிக்கயவர்கள் துவக்கி விட்டார்கள் என்பது தெரிகிறது. முகத்தை துணியால் மூடிக் கொண்டு இன்றைக்கு கல்லெறியும் அக்குழந்தை நாளை பட்டாக்கத்தியைத் தூக்கிக் கொண்டு வெட்டப் போகாதா?

அந்த சின்னக்குழந்தைக்கு மதத்தைப் பற்றி என்ன தெரியும்? அரசியலைப் பற்றி என்ன தெரியும்?

கடவுளின் பெயரால் காவிக்கயவர்கள் அதிகாரத்தை கைப்பற்ற நடத்தும் கலவரங்களில் சிறுவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குவதா?

பொன்னாரோ அல்லது தமிழிசையோ அல்லது ஹெச்.ராசாவோ தங்களின் குழந்தைகளுக்கு இந்த ரௌடிக் கலாச்சாரத்தை கற்றுத் தருவார்களா?

கொடியவர்களே, வேண்டாம். வெறி பிடித்த உங்கள் செயல்களை அடுத்த தலைமுறைக்கும் கற்றுத் தராதீர்கள்.

தகவல் 1

அலுவலகத்திலிருந்து புறப்பட்ட வேளையில் இன்னும் சில நிமிடங்கள் காத்திருங்கள் என்று செக்யூரிட்டி கூறினார். அலுவலக வாசலில் சாலையில் போக்குவரத்து அப்படியே நின்று போயிருந்தது.  

ஒரே ஒரு பிள்ளையாரைக் கொண்டு போன ஒரு கும்பல் சாலையில் வாகனத்தை நிறுத்தி குத்து பாட்டிற்கு டான்ஸ் போட்டுள்ளார்கள். இரண்டு சிறுவர்கள் சைக்கிளில் கடந்துள்ளார்கள். அவர்களை மடக்கி அவர்கள் விளையாட எடுத்துச் சென்ற ஸ்டம்பை எடுத்து அதனாலேயே தலையில் அடித்துள்ளார்கள். ரத்தம் ஒழுக அருகிலிருந்த கடைக்குள் சென்ற சிறுவனை துரத்திக் கொண்டு போயுள்ளார்கள். தடுக்க முயன்ற ஒரு பெரியவரை கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி உள்ளார்கள். அந்த கும்பலில் இருந்த அனைவருக்கும் வயது 20 க்குள்தான் இருக்கும்.

காட்சி 2

நாங்கள் வீடு திரும்புகையில் மூன்று குட்டி யானை வண்டிகளில் பிள்ளையார்கள் செல்ல, வண்டியில் இருந்த அனைத்து இளைஞர்களும் முழுமையான போதையில் ஏதோ கத்திக் கொண்டே இருந்தார்கள். 

காட்சி 2

வண்டிகளைத் தொடர்ந்து சில இரு சக்கர வாகனங்கள். அதில் சென்ற பலரும் முழுமையான போதையில்தான்.



Thursday, September 13, 2018

சாக்லேட் பிள்ளையார் வாழ்க. . .


வாட்ஸப்பில் வந்த சாக்லேட் பிள்ளையார் இவர்.

எந்த ஊர் என்ற விபரங்கள் தெரியவில்லை. 

வினாயகர் சதுர்த்தி முடிந்ததும் பாலில் கலந்து ஏழைக் குழந்தைகளுக்கு கொடுக்கப் போகிறார்களாம்.

கேட்கவே இவ்வளவு இனிப்பாக உள்ளது இச்செய்தி!

பிளாஸ்டர் ஆப் பாரீஸில் செய்யப்பட்டு பல வண்ண ரசாயணங்கள் பூசப்பட்டு தடியால் அடித்து நொறுக்கி கடலிலும் பல நீர் நிலைகளிலும் போடப்பட்டு 

வினாயகரையும் அசிங்கப்படுத்தி சுற்றுச் சூழலையும் மாசு படுத்தும் 

காவிப் பிள்ளையார்களை விட

இந்த சாக்லேட் பிள்ளையார் பல மடங்கு மேல்.

Wednesday, September 12, 2018

பாவம், காவிப் பிள்ளையார்கள்!!!




ஒரு தோழர் வீட்டு புது மனை புகு விழாவிற்கு மதியம் காட்பாடி வரை சென்றிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக பரபரப்பான போக்குவரத்து.. நாளைக்காக வீதி முனைகள் ரிசர்வ் செய்யப்பட்டு பந்தல்கள் போடப்பட்டதாலும் குட்டி யானை வண்டிகளில் சென்று கொண்டிருந்த பிள்ளையார் சிலைகளாலும் ஏற்பட்ட நெரிசல் அது. மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போதும் இதே நிலைதான்.

நாளையை நினைத்தாலும் அதற்குப் பிறகு வரப் போகும் “விஸர்ஜன ஊர்வலம்” என்ற பெயரில் நடைபெறப் போகும் கலாட்டாவை நினைத்தாலும் கவலையாகத்தான் உள்ளது.

உண்மையிலேயே  பிள்ளையார்தான் பாவம்.

ஹை டெசிபல்களில் ஒலிக்கும் குத்துப் பாட்டுக்களை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

சிறுவர்கள் “உண்டியல் குலுக்கிகள்” ஆக மாறி சாலையில் செல்பவர்களை மறித்து வசூல் செய்வதை  வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.

ஊர்வலத்தின் போது பக்தர்கள் என்ற போர்வையில் உலா வருபவர்களிடமிருந்து வீசும் டாஸ்மாக் நாற்றத்தை சகித்துக் கொள்ள வேண்டும்.

மசூதியோ, சர்ச்சோ வந்தால் வேண்டுமென்றே அங்கே நிறுத்துவார்கள். கடுமையான வெயிலை வேறு அனுபவிக்க வேண்டும்.

கடைசியாக விஸர்ஜனம் என்ற பெயரில் கட்டையால் அடித்து உடைத்து கீழே தள்ளுவார்கள். அதனையும் சகித்துக் கொள்ள வேண்டும்.

ஆற்றங்கரையிலும் கோயில்களிலும் ஏன் தெரு முனைகளிலும் கல்லால் உருவாக்கப்பட்ட காலத்தில் பிள்ளையாருக்கு இந்த அவஸ்தையெல்லாம் கிடையாது. வீட்டில் வைக்கப்படும் களி மண் பிள்ளையார்களுக்குக் கூட குடை, மாலை, கொழுக்கட்டை என்றெல்லாம் மரியாதை கிடைக்கும்.

எல்லா அவஸ்தையும் பாவம் காவிப் பிள்ளையார்களுக்குத்தான்.

ஏனென்றால் காவிகளுக்கு பிள்ளையார்கள் கடவுள் கிடையாது. அரசியல் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம். அவ்வளவுதான் . . .

பி.கு ; அதிகாலையில் பின்னூட்டம் போடும் ஆங்கில அனாமதேய சங்கி வழக்கம் போல வாந்தி எடுத்தால், முன்னை விட மோசமான பதில் மரியாதை கிடைக்கும். வெட்கம், மானம், ரோஷம், சூடு சொரணையற்ற காவிக் கயவர்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். பி.கு 2
கேள்வி : உலக மகா அயோக்கியர்களாக இருக்கையிலேயே பெரிய . . . .. . . மாதிரி எழுதுகிற இந்த கயவர்கள் நெசமாகவே தேச பக்தர்களாக இருந்தால் எப்படி எழுதுவார்கள்? 

பதில் : அவர்கள் கயவர்களாக இருப்பதால்தான் இப்படி நடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.