Friday, July 31, 2015

அனுஷ்கா ஷர்மாவும் ஒரு மாநில அரசும்

திரு அப்துல் கலாம் மறைவின் போது அனுஷ்கா ஷர்மா என்ற ஹிந்தி திரைப்பட நடிகை அவரது பெயரை  தவறாக அப்துல் கலாம் ஆசாத் என்று எழுதி விட்டதற்காக சமூக வலைத்தளங்களில் அவரை போட்டுத் தாக்கினார்கள் என்று செய்தி படித்தேன்.

அப்துல் கலாம் என்று சொல்வதற்குப் பதிலாக  சட்டிஸ்கர் மாநில முதல்வர் ரமன்சிங் நரேந்திர மோடி என்று அபத்தமாகச் சொன்ன காணொளிப் பதிவை நானும் இரண்டு தினங்கள் முன்பாக பகிர்ந்து கொண்டேன்.

நேற்று வாட்ஸப்பில் ஒரு அரசு சுற்றறிக்கையின் நகல் வந்தது. அதிலே இரண்டு இடங்களில் சுழிக்கப்பட்டிருந்தது. நமக்குத்தான் ஹிந்தி தெரியாதே! அதனால் இன்று ஹிந்தி நன்றாகத் தெரிந்த தோழர் அதாவூர் ரஹ்மானிடம் என்ன விஷயம் என்று விளக்கச் சொன்னேன்.

அவரும் விளக்கம் சொன்னார்.

சட்டிஸ்கர் மாநில அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அது. முன்னாள் குடியரசுத்தலைவர் மறைவிற்காக ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கச் சொல்லும் சுற்றறிக்கையாம். ஒரு வாரம் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க வேண்டும், எந்த அரசு நிகழ்ச்சிகளும் நடைபெறக் கூடாது என்று அரசுச் செயலாளர் வெளியிட்ட உத்தரவு என்று அவர் விளக்கினார்.

இதில் என்ன சர்ச்சை இருக்கிறது என்று கேட்டேன்.

குஜராத் மாநில பாஜக அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பெயரை கீழுள்ளவாறு எழுதியுள்ளதாகச் சொன்னார்.

அப்துல் கலாம் ஆசாத்.


அனுஷ்கா ஷர்மா இதை அறிந்தால் மகிழ்ச்சியடைவார் அல்லவா?
 

Thursday, July 30, 2015

மரண வியாபாரி மாறலாமே!
கருணை மனுக்களை வேகவேகமாக நிராகரித்துக் கொண்டு தன்னை ஒரு "அழிக்கும் கடவுள்" (மரண வியாபாரி என்றும் அழைக்கலாம்) என்று  வரலாற்றில் இடம் பெறச் செய்வதற்குப் பதிலாக அந்த மனுக்கள் மீது நிஜமாகவே "கருணை" செலுத்தி "காக்கும் கடவுள்" என்ற பெயரை அடைய பிரணாப் முகர்ஜி முயன்றால் என்ன?

மாயாபென் கோட்னானிக்கு எப்போது தூக்கு?
நீதி - 

சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதல்ல.
சாட்சியங்கள் சொல்லும் உண்மைகளின் அடிப்படையிலும் அல்ல. 
ஆட்களுக்கு ஏற்றார்போல், ஆட்சியாளர்களுக்கு ஏற்றார்போல்
வழங்கப்படுவதாகி விட்டது. பொதுப் புத்தி என்ன விரும்புகிறதோ
அதை வழங்குவதற்கு நீதி ஒன்றும் நேயர் விருப்பம் அல்ல.

கொலைகள், கலவரங்கள்  தவறுதான்.
தவறிழைத்தவர்களை தண்டிக்க வேண்டும்தான்.

மும்பை மாநகரத்தில் இரண்டு சம்பவங்கள்.

மசூதி இடிப்பின் தொடர்ச்சியாய் கலவரங்கள், உயிரிழப்புக்கள்
அதன் எதிர்வினையாய் குண்டு வெடிப்புக்கள்.

முதல் சம்பவத்திற்கு காரணமானவர் இறந்து போனார். அரசு மரியாதையோடு அவரின் உடலை அடக்கம் செய்தார்கள். இவரென்ன அவ்வளவு பெரிய தியாகியா என்று கேட்டதாலேயே  இரண்டு பெண்களுக்கு சிறைவாசமும் தந்தார்கள்.

குற்றம் - நடந்தது என்ன என்று பறந்து வந்து உண்மைகளை ஒப்புக் கொண்ட மனிதனுக்கு, குற்றவாளியின் தம்பியாய் பிறந்த காரணத்தாலேயே இன்று தூக்கு மேடை ஏற்றி மரணத்தில் மகிழ்ச்சி  கொள்கிறார்கள்.

இன்று மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்ததாய் பெருமைப் பட்டுக் கொண்டு நியாயம் நிலைநாட்டப் பட்டதாக பேசும் நண்பர்களுக்கு ஒரே ஒரு கேள்வி.

மும்பை கலவரங்கள் தொடங்கி குஜராத் கலவரங்கள் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காதது பற்றி எப்போதாவது சிந்தித்ததுண்டா?

இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனரே, அதற்காக யாரும் சிறையில் கூட அடைக்கப்படவில்லை என்று கவலைப்பட்டதுண்டா? ஜகதீஷ் டைட்லர் மத்திய அமைச்சராகவே காலம் கழித்தாரே!

யாகூப் மேனனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றிய இந்திய நீதிமான்கள், மோடியின் அமைச்சர் மாயாபென் கோட்னானியை தூக்கிலிடுவார்களா?

வாதத்திற்காக இப்படி கேட்டாலும் கூட அவருக்கும் தூக்கு தண்டனை வேண்டாம் என்றுதான் நாங்கள் சொல்வோம். நீதிமன்ற நீதி வேண்டுமானால் ஆட்களுக்கு ஏற்ப மாறலாம். ஆனால் மரண  தண்டனை கூடாது என்ற எங்கள் கொள்கை மாறாது.

தூக்கு தண்டனை வேண்டாம் என்று சொன்னவரின் உடல் மண்ணுக்குச் செல்லும் முன்னே அவரது கருத்து தூக்கிலேற்றப்பட்டது என்பது ஒரு பெரும் துயரம்

 

 

Wednesday, July 29, 2015

மோடிக்கு அஞ்சலி - பாஜக முதல்வரின் அபத்தம்

கிரண் பேடி பற்றி பதிவு போட்டு சில மணி நேரங்கள் கூட முடியவில்லை.  அதற்குள் அடுத்த செய்தி.
 

சட்டிஸ்கர் முதல்வர் ரமன்சிங் திரு அப்துல் கலாமிற்குப் பதிலாக நரேந்திர மோடிக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

இதோ காணொளியைப் பாருங்கள்


உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டுமானால் இந்த இணைப்பைப் பாருங்கள் .பி.பி.ஸ்ரீனிவாஸ் யாரென்று தெரியாமல் தவறாக செய்தி வெளியிட்ட இந்தியன் எஸ்பிரஸ் கிண்டலடிக்கக் கூடிய அளவில் உள்ளது பரிதாபமே. 

உயிரோடு இருக்கும் போதே ஜார்கண்ட் மாநில மந்திரி கலாம் படத்திற்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினார்.

இப்போது சொந்தக் கட்சி ஆளுக்கே சூனியம் வைக்கிறாரு ஒரு முதலமைச்சரு.

மனசுல இருக்கிறதுதான் வார்த்தையா வாயில வந்துருச்சோ?

விஜயகாந்த் உளறினா போட்டு கலாய்க்கிற இணைய தள மீம் படைப்பாளிகளே, புதுசா ஒருத்தரு சிக்கியிருக்காரு. விடாதீங்க.

 

கிரண் பேடிக்கு “பொது அறிவு” கற்றுக் கொடுங்கள்
“அப்துல் கலாமை கண்டறிய ஒரு வாஜ்பாய் தேவைப்பட்டார்”

இது சூப்பர் போலீஸ் அதிகாரி என்று வர்ணிக்கப்பட்டு அண்ணா ஹசாரே உடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு போராளியாக மாறி பிறகு “வியாபம்” ஊழல் புகழ் பாஜக வில் இணைந்து முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு தோற்றுப் போன திருமதி கிரண் பேடி டிவிட்டரில் பதிவு செய்துள்ள அபாரமான கண்டுபிடிப்பு.

வாஜ்பாய் பிரதமராகி அவர்தான் திரு அப்துல் கலாம் அவர்களை கண்டறிந்து அவருக்கு அடையாளம் கொடுத்தாரா?

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்களையும் அக்னி ஏவுகணை சோதனைகளும் வாஜ்பாய் பதிமூன்று நாள் பிரதமராவதற்கு முன்பே நிகழ்ந்தவை அல்லவா? இவற்றில் திரு அப்துல் கலாம் அவர்களின் பங்களிப்பை இந்தியா முன்னரே அறியுமே!

நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் பிரதமரின் அறிவியல் ஆலோசகராக திரு அப்துல் கலாம் இருந்திருக்கிறாரே!

வாஜ்பாய் பிரதமராவதற்கு முன்பே பத்ம விபூஷன் வரை உள்ள அனைத்து பத்ம விருதுகளும் திரு அப்துல் கலாம் அவர்களுக்கு மத்தியரசால் தரப் பட்டுள்ளதே!

அப்படி இருக்கையில்  திரு அப்துல் கலாமை கண்டறிய ஒரு வாஜ்பாய் தேவைப்பட்டார் என்று சொல்வது எவ்வளவு அபத்தமான விஷயம்.

அதே நேரம் இன்னொரு உண்மையையும் நாம் மறந்திடக் கூடாது.

மோடியின் கோர வெறியாட்டத்தால் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டு குஜராத் ரத்த பூமியான போது உலக அரங்கில் இந்தியாவின் பெயர் நாறிப் போனது. எந்த முகத்தோடு நான் மற்ற நாடுகளுக்குச் செல்வேன் என்று வாஜ்பாய் புலம்பும் அளவிற்கு நிலைமை இருந்தது.

அந்த நேரத்தில் தனது ஆட்சி மீது விழுந்த கறையை துடைப்பதற்கு ஒரு இஸ்லாமிய முகம் வாஜ்பாய்க்கு தேவைப்பட்டது. திரு அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக முன்மொழியப் பட்டார்.

வாஜ்பாயின் அடையாளத்தை மாற்ற அவருக்குத்தான் திரு அப்துல் கலாம் தேவைப்பட்டாரே தவிர கலாமிற்கு வாஜ்பாய் தேவைப்படவில்லை.

பாவம், கிரண் பேடி! திஹார் சிறையில் கைதிகளோடு மன்றாடிக் கொண்டிருந்ததால் அவருக்கு பொது அறிவு விஷயங்களையோ இல்லை அரசியல் விஷயங்களையோ கற்றுக் கொள்ள நேரமிருக்கவில்லை போலும்!. இப்போது சும்மாதானே இருக்கிறார். யாராவது பாஜக காரர்கள் அவருக்கு உண்மையான பொது அறிவு விஷயங்களை கற்றுக் கொடுங்களேன்.

Tuesday, July 28, 2015

சீமான் காமெடி - சிரியுங்கள்

பதிவுலகம் முழுவதுமே சோகத்தில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. நானும் கூடத்தான்.

எனவே இந்த மனநிலையை மாற்ற கொஞ்சம் வாய் விட்டு சிரியுங்கள்.

வாட்ஸப்பில் வந்த இந்த காணொளியைப் பார்த்து மகிழுங்கள்.


 http://viyapu.net/images/news/large/seeman_02.JPG
இது பழையதாகக் கூட இருக்கலாம். பரவாயில்லை. நாகேஷ் காமெடியை இப்போதும் ரசிக்கிறோமில்லையா?

 

Monday, July 27, 2015

உழைப்பால் உயர்ந்தவருக்கு அஞ்சலி

 Former President APJ Abdul Kalam Dies at 83: Press Trust of India
மிகவும் எளிய ஒரு குடும்பத்தில் பிறந்து தனது அறிவாலும் உழைப்பாலும்  உயர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி

ரத்த வங்கியில் இன்று
http://www.newmansu.org/uploads/1/2/8/4/12841948/9902996_orig.jpg
இன்று வெற்றிகரமாக ஐம்பத்தி நான்காவது முறையாக ரத்த தானம் செய்தேன். கடந்த முறை ரத்த தானம் செய்த போது எழுதிய பதிவு இது. இன்றும் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் அமைதியாகவே இருந்தனர். நானும் கூட. ஏனென்றால் இம்முறை என் கையிலும் ஸ்மார்ட் போன் இருந்தது.

மருத்துவரின் அழைப்பிற்காக காத்திருந்த நேரத்தில் அருகே அமர்ந்திருந்த ஒரு மாணவனோடு பேசிக் கொண்டிருந்தேன்.வேலூர் ஊரிஸ் கல்லூரியில் படிக்கும் அந்த மாணவன் பகிர்ந்து கொண்ட செய்தி மிகவும் மகிழ்ச்சியளித்தது. நண்பர்களாக ஒரு ஐம்பது மாணவர்கள் சேர்ந்து ஒரு குழுவாக செயல்படுவதாகவும் அந்த மாணவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் ரத்த தானம் செய்து கொண்டு வருவதாகச் சொன்னார்.

வாரம் ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து ரத்தம் தேவைப்படும் நோயாளிகள் யாராவது இருக்கிறார்களா  என்று கண்டறிந்து ரத்த தானம் செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லி தன்னுடைய அலைபேசி எண்ணையும் கொடுத்து உங்களுக்கு தேவைப்பட்டாலும் தயங்காமல் என்னை அழையுங்கள் என்றார்.

உண்மையிலேயே மனம் மிகவும் மகிழ்ந்து போனது. நம்பிக்கையளிக்கும் அந்த இளைஞர்களுக்கு எனது பாராட்டுக்களை கைகொடுத்து தெரிவித்துக் கொண்டேன்.

இன்று கண்ட இன்னொரு காட்சி இந்தியாவின் வேலையின்மைப் பிரச்சினையை உணர்த்துவதாக இருந்தது. இரு இளம் பெண் ரத்த தானம் செய்ய வந்திருந்தார். ஏதோ ஒரு வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தோற்றத்திலேயே தெரிந்தது.

அந்தப் பெண்ணிற்கு அந்த மாணவர் படிவத்தை நிரப்பிக் கொடுத்தார். டார்ஜிலிங்கைச் சேர்ந்தவர் அந்தப் பெண். இங்கே யாராவது நோயாளியோடு வந்துள்ளீர்களா என்று கேட்டதற்கு "இல்லை, இங்கே "நேச்சுரல்ஸ்" கிளையில் வேலை செய்வதாகச் சொன்னார்.

பல்லாயிரம் ரூபாய் ஊதியம் பெறும் ஐ.டி வேலை அல்ல. பத்தாயிரத்துக்கும் குறைவான ஊதியத்திற்கு பல மாநிலங்கள் தாண்டி மொழி தெரியாத ஊருக்கு வேலைக்கு வந்திருக்கிறார், கட்டுமானப் பணிக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவது போல.

வேலைக்கு வந்த இடத்திலும் யாருக்காவது உதவலாமே என்று ரத்த தானம் செய்ய முன்வந்தது பாராட்டுக்குரிய ஒன்று.

 

 

Sunday, July 26, 2015

கோவைத் தோழர்களுக்கு பாராட்டுக்கள்

எங்களது கோவைக் கோட்டத் தோழர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். 
மாணவி ஜீவா தனது கல்லூரிப் படிப்பில் சிறந்த வெற்றிகள் பெற்ற
வாழ்த்துகிறேன்.
 
விபரம் அறிந்து கொள்ள கீழேயுள்ள சுற்றறிக்கையை படிக்கவும்.Saturday, July 25, 2015

காதல் தோல்வியாம், ஆண்மைக்குறைவாம்
இன்று காலை எழுந்தவுடனேயே வாட்ஸப்பில் ஒரு செய்தி வந்து விழுந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் கர்னாடகாவில் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த பதிமூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட செய்தி அது. கடன் தொல்லை, பயிர் நாசம், உற்பத்திக்கான விலை வீழ்ச்சி ஆகியவையே அந்த தற்கொலைகளுக்கான காரணமாக இருந்தது. இதயத்தை வருத்தப்படச் செய்தி அது.

அதன் பின்பு நாளிதழில் பார்த்த செய்தி நொந்து போன இதயத்தை குத்தீட்டியால் கிழிப்பது போல அமைந்திருந்தது.

விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப் பட்ட கேள்வி ஒன்றுக்கு விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன்சிங் என்ற படுபாவி கொடுத்த பதில் அது.


காதல் தோல்விகள், வரதட்சணைப் பிரச்சினை மற்றும் ஆண்மைக் குறைவு ஆகிய பிரச்சினைகளுக்காகத்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று அந்த அற்ப மனிதன் எழுத்துபூர்வமாக விளக்கம் கொடுத்துள்ளார். விவசாயிகளுடைய பிரச்சினைகள் குறித்து எப்படிப்பட்ட புரிதல் உள்ளவர் விவசாயத்துறை அமைச்சராக இருக்கிறார் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல எப்படிப்பட்ட மனிதர்களை மோடி தனது அமைச்சர்களாக பொறுக்கி எடுத்துள்ளார் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

இந்திய விவசாயம் இன்றைக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். விவசாயத்தை விட்டு வெளியேறும் விவசாயிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விளை நிலங்கள் வீட்டு மனைகளாகவும் தரிசாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விவசாயத்திற்கான உற்பத்திச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. விதைகள், உரம், பூச்சி மருந்து ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கின்றன. ஒன்று கடுமையான வறட்சியால் தண்ணீர் கிடைக்காது. இல்லையெனில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பயிர்கள் அழுகிப் போகும்.

இத்தனையும் தாண்டி எந்த வருடமாவது நல்ல விளைச்சல் வந்தால் அதற்கேற்ற விலை கிடைக்காது. அரசு கொள்முதல் என்பதை கடந்த கால நிகழ்வாக மாற்றப்பார்க்கிறது மோடி அரசு. குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்வதிலும் விவசாயிகளை வஞ்சித்து விட்டார்கள். 

மனைவியின் தாலியை அடமானம் வைத்து கடன் வாங்கி விவசாயம் செய்கிறவனால் அந்த தாலியை மீட்க முடியாத போது தூக்குக் கயிற்றில் தொங்கி, மனைவியின் தாலிக்கயிற்றை அறுக்கிறான். 

விவசாயிகள் என்ன அம்பானிகளா இல்லை அதானிகளா? எண்பதாயிரம் கோடி ரூபாய் கடன் நிலுவையில் இருந்தாலும் இன்னும் ஒரு ஆறாயிரம் கோடி ரூபாய் கடன் கொடுக்கச் சொல்ல இந்திய விவசாயி என்ன மோடியின் நண்பனா?பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி கட்ட முடியாமல் நிறுவனங்களை மூடி விட்டாலும் கடற்கரை மாளிகை பின்னணியில் இருக்க கவர்ச்சியுடை அணிந்த பெண்களோடு ஒய்யாரமாய் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க இந்திய விவசாயி என்ன விஜய் மல்லய்யா போல மானங்கெட்டவனா? வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதவன் என்ற அவப்பெயரைச் சம்பாதிப்பதை விட உயிரை விடுவது மேல் என்று முடிவெடுக்கிறான்.

விவசாயிகளின் பிரச்சினைகளை மோடி அரசு தீர்க்காது. இருக்கும் நிலங்களையும் அபகரித்து அதானி, அம்பானிகளுக்கு தாரை வார்க்க துடிக்கிற அரசு விவசாயிகளை வாழ வைக்கா விட்டாலும் சரி, இழிவு படுத்தாமலாவது இருக்கலாம்.

இறந்து போகிற விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் ஐம்பது வயதுக்காரர்கள். அவர்களுக்கு காதல் தோல்வியும் ஆண்மைக் குறைவுப் பிரச்சினையும் எங்கிருந்தய்யா வருகிறது? இப்படிச் சொல்வதற்கு அந்த மனிதனுக்கு நா கூசவில்லை. 

பாஜக மந்திரி இப்படி சொல்வது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. இந்த அயோக்கியத்தனமும் ஆணவமும்தான் அவர்கள் குணம். இப்படி திமிரோடு பேசுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்களே, அந்த அதி மேதாவிகள் மீதுதான் கோபம் வருகிறது. இத்தனை அலங்கோலம் இந்த ஒரு வருடத்தில் நடப்பதைப் பார்த்தாலும் மோடி மீது விமர்சனம் வைத்தால் முகம் சுளிக்கிற சில புத்திசாலிகள் இருக்கிறார்கள். இந்த மந்திரி பேசுவதைக் கேட்ட பிறகாவது அவர்கள் திருந்தினால் சரி.