Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

Saturday, August 16, 2025

ராஜ்பவனை இழுத்து மூடி ரெவியை . . .

 


சென்னை ராஜ்பவன் மக்கள் விரோதியின், மனித குல விரோதியின் வசிப்பிடமாகி விட்டது. ஆளுனர் பதவியில் அமர்ந்துள்ள ரெவி எனும் நச்சுப்பாம்பு தொடர்ந்து விஷத்தை கக்கிக் கொண்டிருக்கிறது. 

சுதந்திர தினத்திற்கு முன்பாக ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளது. அதை இங்கே பகிர்ந்து கொள்ள எனக்கு மிகவும் கூச்சமாக இருக்கிறது.

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் விஷ(ம)ப் பிரச்சாரம் அது. பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு இன்று ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என்று செய்துள்ள சிறு மதி கொண்டவனின் சில்லறைச் செயல்.

ராஜ்பவனை இழுத்து மூடி ரெவியை பீகாருக்கு துரத்தாவிட்டால் ரெவியின் எண்ணம் பலித்து தமிழ்நாடு கலவரக்காடாகும்.

தூய்மைப் பணியாளர்களை ஒடுக்குவதிலும் அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதிலும் காண்பித்த வீரத்தில் நூறில் ஒரு பங்கையாவது திமுக உடன் பிறப்புக்கள் ரெவி மீது காண்பிக்கட்டும். ஒரு மாணவியின் வீரம் மற்றவர்களுக்கு எப்போது வரும்?


Monday, April 14, 2025

அண்ணல் அம்பேத்கரும் அடுத்த தேர்தலும்

 


இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மக்கான் முனையில் இருந்த சிலைக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாலை அணிவிக்க சென்ற போது பார்த்த காட்சிகள் சுவாரஸ்யமானது.

அங்கே சென்ற போது ஒரே காவிமயம். முதல் முறையாக பாஜக  ஆட்கள் அங்கே  கூடியிருந்தார்கள். கொடிகள் மட்டும் இருந்தால் அவர்கள் யார் என்று தெரியாது என்ற நினைப்போ என்னமோ, பிஜேபி என்று அச்சிடப் பட்ட துண்டுகளை அணிந்திருந்தார்கள். காத்திருந்தார்கள், காத்திருந்தார்கள், காத்துக் கொண்டே இருந்தார்கள்.

அதிமுகவின் சார்பில் வேலூர் மேயராக இருந்து, எங்கள் சங்க மாநாட்டிற்கு மொட்டைக்கடிதத்திற்கு பயந்து டிமிக்கி கொடுத்து, 2024 ல் சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போன கார்த்தியாயணி அம்மையாருக்காக அவர்கள் காத்திருந்தார்கள்.  அந்த அம்மையார் வந்து மாலை அணிவித்த பின்பு போட்டோ ஷூட் நடத்தி விட்டு ஒரு வீர உரை வேறு ஆற்றினார்.

மோடியின் கட்சியல்லவா! மோடியைப் போலவே பொய்யாகவே அள்ளி விட்டார். அண்ணல் அம்பேத்கருக்கு மோடிதான் நாடாளுமன்றத்தில் சிலை வைத்தார் என்று சொன்னாரே ஒரு கதை, அப்படியே ஆடிப் போய் விட்டேன். நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் சிலையை பின் பக்கத்தில் மாற்றி வைத்து சிறுமை செய்து விட்டு என்ன பேச்சு இது!

அடுத்த போட்டோ ஷூட் த.வெ,க தம்பிகளுடையதுதான். அவர்கள் வாயிலிருந்து ஒரு முழக்கம் கூட வரவில்லை. பெரும்பாலும் சின்ன வயது பையன்கள், பெண்கள்.  ட்ரோன் வைத்தெல்லாம் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்களில் ஒரு மூத்த பையன் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டதும் ஒரே விசில் சத்தம். திரையில் விஜய் தோன்றியதும் அடிக்கும் விசிலை இங்கேயும் அடித்து விட்டார்கள். நல்ல வேளை பேப்பரெல்லாம் கிழித்துப் போடவில்லை.

டி.டி.வி தினகரன் கோஷ்டியிலிருந்து கூட ஆறேழு பேர் வந்து மாலை போட்டு விட்டு சென்றார்கள்.

அதிமுகவிலிருந்து கூட சிலர் வந்திருந்தார்கள். இவர்கள் இன்று மாலை போட்ட  அதிமுகவின் மூன்றாவது கோஷ்டி என்று மூத்த தோழர் ஸ்ரீதர் சொன்னார்.

தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சியெல்லாம் வேறு வந்திருந்தார்கள்.

திமுகவில் இந்த வருடம் அமைச்சர் துரை முருகன், எம்.பி கதிர் ஆனந்த், மற்றும் லோக்கல் தலைவர்கள் வந்திருந்தார்கள். போன சட்டசபை தேர்தலுக்கு முன்பாக துரை முருகன் வந்திருந்தார். அப்போது அவர் காரிலேயே அமர்ந்து மாலையை தொட்டுக் கொடுத்தார். இந்த வருடம் சிலை வரைக்கும் நடந்து வந்தார். அவரை அப்படியே தூக்கிக் கொண்டு போவார்களோ என்று பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை அப்படியெல்லாம் அவரை படுத்தவில்லை.

அதென்ன இந்த வருடம் அண்ணல் அம்பேத்கர் மீது அப்படியென்ன இத்தனை கட்சிகளுக்கு திடீர் பாசம்?

எல்லாம் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வருவதுதான் . . .

அடுத்த வருடம் வாக்குப்பதிவு முடியவில்லையென்றால் வருவார்கள். இல்லையென்றால் . . .

பிகு : மேலே உள்ள அண்ணல் அம்பேத்கரின் ஓவியத்தை வரைந்தது தோழர் ரவி பாலேட். 

Wednesday, March 12, 2025

பாம்பிற்கு பால் வார்க்கும் திமுக

 


"மாற்றோரும் போற்றும்" என்ற தலைப்பில் தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன் முதல்வரின் பிறந்த நாள் விழா கூட்டம் நடத்தியுள்ளார். 

இன்றைய மாநில அரசுக்கு எதிரான கட்டுக்கதைகளை தீவிரமாக பரப்பி வரும் சங்கி ரங்கராஜ் பாண்டேவை அந்த விழாவில் பேச அமைச்சர் அழைத்துள்ளார்.

தான் செய்வது என்னவென்று அறிந்து செய்தாரா என்று தெரியவில்லை. ஒரு நச்சுப்பாம்புக்கு தன் மேடையில் இடம் கொடுத்தால் அது அங்கேயும் நச்சைத்தான் கக்கும் என்ற புரிதல் கூட இல்லையா அல்லது அவருக்கு பாண்டே மூலம் ஏதேனும் டீலிங் உள்ளதா? 

ரங்க்ராஜ் பாண்டேவை அழைத்துப் பேச வைத்தால் அவர் திமுக மீது கடுமை காண்பிக்க மாட்டார் என்று தப்புக் கணக்கு போட்டிருந்தால் அதை விட மூடத்தனம் ஏதுமில்லை.

இன்று மட்டும் பாண்டே, சாணக்யா ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவுகளில் சில . . .




இது மட்டுமா, சாண்க்யாவின் ஆண்டு விழாவிற்கு அழைக்கப்பட்டவர்கள் யாரென்று பாருங்கள்.



அனைவருமே திமுகவிற்கு எதிரானவர்கள். நீங்கள் அவரை அழைத்தீர்கள். அவர் உங்களை கண்டுகொள்ளவில்லை. அந்த விழாவே உங்களுக்கு எதிராகத்தான் இருக்கும்.

இதெல்லாம் முதல்வருக்கு தெரியுமா?

திமுகவில் வளர்ந்துள்ள களைகளை நீக்காவிட்டால் அது 2026 ஐ வெகுவாக அழித்து விடும். 






Wednesday, October 9, 2024

சாம்சங் - உங்களின் வாட்டர்லூவா ஸ்டாலின்?

 



சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக பலர் இருக்கின்றனர்.

சாம்சங் நிர்வாகம், 

சாம்சங்கின் துணைப்படையாக மாறிய தமிழ்நாடு போலீஸ்,

சாம்சங்கின் கொள்கை பரப்பு செயலாளர்களான திமுக அமைச்சர்கள்,

வாக்களித்த மக்களை விட முதலாளிகளே முக்கியமாக கருதும் திமுக அரசு.

முதலாளிகளின் பிரதிநிதிகளாக கருதிக் கொண்டு போராடும் தொழிலாளர்களையும் இடதுசாரிகளையும் கொச்சைப்படுத்தும் சமூக வலைத்தள மேதாவிகள்.

தமிழ்நாடு அரசு தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் இந்திய அரசியல் சாசனத்தையும் நிலை நாட்டும் என்ற நம்பிக்கை மனதின் ஓரத்தில் கொஞ்சம் இருந்தது.

ஒரு கோரிக்கையைத்தானே ஏற்கவில்லை, பரவாயில்லை, வேலைக்கு செல்லுங்கள் என்று மந்திரிகள் சொன்ன போதும் கூட போராட்டத்தில் ஈடுபடாத உதிரிகளோடு உடன்பாடு ஏற்பட்டதாக நாடகம் நடத்திய போதும் கூட திமுக மந்திரிகளின் வழக்கமான அதிகப்பிரசங்கித்தனம் என்றுதான் தோன்றியது.

பட்டத்து இளவரசன் உதயநிதியின் அறிக்கையைப் பார்த்த உடன், மந்திரிகளை ஆட்டி வைக்கும் கயிறு முதல்வரிடம்தான் உள்ளது என்பது  தெளிவாக தெரிந்தது. சாம்சங் நிர்வாகத்தின் விருப்பப்படித்தான் முதல்வரின் செயல்பாடு அமைந்துள்ளது என்பதும் புரிகிறது.

தொழிற்சங்கம் அமைப்பது என்பது தொழிலாளர்களின் உரிமை. இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமை. இந்தியாவில் செயல்படும் பன்னாட்டுக் கம்பெனிகள், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட முடியாது. சி.ஐ.டி.யு சங்கத்திற்கு பதிலாக ஒருவேளை சாம்சங் தொழிலாளர்கள் தொ.மு.ச சங்கத்தை உருவாக்கியிருந்தாலும் இதே அறிக்கையை திமுக அரசு கொடுத்திருக்குமா?

தொழிற்சங்கத்தால் தொழில் நிறுவனங்கள் மூடப்படுகிறது என்ற பழைய பொய்ப் பிரச்சாரத்தை தூசி தட்டி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அபத்தம் குறித்து தனியாக எழுத வேண்டும்.

சங்கிகள் களம் இறங்கி போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக நச்சை கக்கிக் கொண்டிருக்கின்றனர். காவிக்கயவர்களுடன் ஒரே கோட்டில் திமுக நிற்கிறதா? சங்கிகள் பேசினால் அது அயோக்கியத்தனமாகத்தான் இருக்கும் என்பது கூட திமுகவிற்கு தெரியாதா?

தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் திமுக கூட்டணிக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் 2024 மக்களவைத் தேர்தலிலும் அமோக ஆதரவளித்தார்கள். அந்த கூட்டணியில் உள்ள திமுக அல்லாத அனைத்து கட்சிகளும் போராடும் தொழிலாளர்களுடன் நிற்கின்றனர். 

இதையெல்லாம் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்ந்து இந்த மண்ணின் சட்டத்தை நிலை நாட்ட முயற்சிக்க வேண்டும். சாம்சங் நிறுவனத்தின் அராஜகத்தை கட்டுப்படுத்த வேண்டும். 

வாக்கே இல்லாத சாம்சங் நிர்வாகம் அளிக்கும் நிதிக்காக அவர்களுக்கு ஆதரவாக  செயல்பட்டால் "நெப்போலியனின் வீழ்ச்சி வாட்டர்லூ போரில்" நிகழ்ந்தது  போல உங்களின் வீழ்ச்சி சாம்சங்கிலிருந்து தொடங்கும்.

இனியும் அவகாசம் இருக்கிறது. இப்போதாவது உருப்படியாக செயல்படவும்.

பிகு: போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டு இன்சூரன்ஸ் ஊழியர்கள் சார்பில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் போராட்ட பந்தலுக்கு நேரில் சென்று தோழமை ஆதரவளித்து போராட்ட நிதி கொடுத்த போது எடுத்த புகைப்படங்கள் மேலே உள்ளது. 

Sunday, March 14, 2021

திமுக கூட்டணிக்கு ஏன் என் வாக்கு?

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துள்ள அணிக்கே வாக்களிப்பது என்பதைத்தான் வாக்குரிமை கிடைத்த நாள் முதல் வழக்கமாக உள்ளது. இந்த முறை மட்டுமே என் பிரத்யேகமாக எழுத வேண்டும்?

நான் மட்டுமல்ல எங்கள் நிறுவனமான எல்.ஐ.சி யை நேசிப்பவர்கள் அனைவரும் கூட திமுக கூட்டணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்.

ஆம்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விற்பனை என்ற மத்தியரசின் சதிக்கு எதிரான குரல் திமுக வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. 

திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் திரு துரைமுருகன், பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களை எங்கள் சங்கத் தோழர்கள் தமிழகம் முழுதும் சந்தித்து எங்கள் இயக்கத்திற்குக் கேட்ட ஆதரவு தேர்தல் அறிக்கையில் எழுத்து பூர்வமாக மலர்ந்துள்ளது. 

எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிரான இயக்கம் இதன் மூலம் கூடுதல் பலம் பெற்றுள்ளது.

இந்த உற்சாகத்தோடு 18.03.2021 ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மிகுந்த எழுச்சியோடு மகத்தான வெற்றியடையச் செய்வோம்.

Sunday, May 15, 2016

சன் டி.வி, பாஜக, காசு, துட்டு, பணம், மணி அல்லது ??????





கலைஞர் பிரச்சாரம் செய்கையில் அவரோடு நிழல் போல தயாநிதி மாறன் இருக்கிறார்.

கலாநிதி – தயாநிதி மாறன் பிரதர்ஸ்க்கு சொந்தமான சன் டி.வி யிலோ ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை பாஜகவின் தேர்தல் விளம்பரம் வந்தது.

அந்த விளம்பரம் திமுக வையும் சேர்த்தே தாக்கியது.

திமுக கூட்டணிக்கு எதிரான விளம்பரத்தை திமுக தலைவர் குடும்பத்தைச் சேர்ந்தவரின் தொலைக்காட்சியே ஒளிபரப்பியதே!

என்ன காரணம்?

வெறும் காசு, பணம், துட்டு, மணி, மணி மட்டும்தானா
இல்லை இவர்களுக்குள் வேறு ஏதாவது டீல் உண்டா?

பின் குறிப்பு 1: லக்கானி சார், இது தேர்தல் பிரச்சாரம் அல்ல

பின் குறிப்பு 2 : தலைவர்கள் பணத்திற்காக, வழக்கிற்காக என்ன வேண்டுமானால் டீலிங் செய்து கொள்வார்கள். இது புரியாத யாராவது ஒரு முட்டாள் உ.பி, அனானியாக வந்து அபத்தமாக உளருவார்கள் பாருங்களேன்.
 


Thursday, May 12, 2016

அந்த குடும்பத்து ஓட்டு அவுட். யாருக்கு?



நேற்று போளூர் தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் பி.செல்வனுக்காக வாக்கு சேகரிக்க   சென்றிருந்தோம். 

ஒரு பகுதியில் வீடு வீடாக பிரசுரங்களை அளித்து விட்டு அடுத்த பகுதிக்குச் செல்ல திரும்பிக் கொண்டிருந்தோம். 

நாங்கள் வந்து கொண்டிருந்த வீதியில் அப்போது திமுக வேட்பாளர் ஓட்டு கேட்டு வந்து கொண்டிருந்தார். அவரை வரவேற்க உ.பிக்கள் ஒரு ஐயாயிரம் வாலா சரவெடியை விரித்துக் கொண்டிருந்தார்கள்.

வேட்பாளரைப் பார்ப்பதற்காக ஆர்வத்தோடு ஒரு பெண்மணி தனது வீட்டிலிருந்து வெளியே வந்தார்.  "அண்ணே, உடம்பு முடியாத வயசான ஆளுங்க இருக்காங்க. கொஞ்சம் தள்ளிப் போய் வெடி வையுங்க" என்று  தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார்.

முதலில் அவர் சொன்னதை பொருட்படுத்தவில்லை.  டாஸ்மாக் உபயத்தில் உற்சாகமாக இருந்த ஒரு மத்திய வயது உ.பி "போம்மா, அப்பால" என்று ஒரு கெட்ட வார்த்தையோடு திட்ட, அந்த பெண்மணி கோபத்தோடு வீட்டுக் கதவை சாத்திக் கொண்டு உள்ளே போய் விட்டார். 

அவர் கதவை வேகத்தோடு அறைந்து  மூடியது உணர்த்தியது இதைத்தான்.

"அந்த குடும்பத்து வோட்டு, திமுகவுக்கு அவுட்"

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உடன்பிறப்புக்களின் அராஜகத்திற்கு அளவே கிடையாது போல.

வீதிகளிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி

Wednesday, April 20, 2016

திமுகவிற்கு திருஷ்டியில் நம்பிக்கை உண்டா?








மேலேயுள்ள ஜூனியர் விகடன் செய்தி   "துரைமுருகனின் திருஷ்டி கழிந்ததாக கலைஞர் சொன்னதாக "  சொல்கிறது.

பகுத்தறிவுப் பாசறை திமுக விற்கு திருஷ்டி போன்ற மூட நம்பிக்கை விஷயங்களில்  நம்பிக்கை வந்து விட்டதா என்ன?

இல்லை ஜூனியர் விகடன் செய்தி தவறானதா?

ஆபாசமாக பேசாமல் எனது சந்தேகத்திற்கு உ.பிக்கள் விளக்கம் அளிப்பார்களா? 

Wednesday, February 24, 2016

திமுக வின் ஜெமோ பாணி தமிழ்த்துரோகம்




திமுக வின் தேர்தல் விளம்பரங்கள்தான் சமூக வலைத்தளங்களின் புதிய பரபரப்பு. ஜெயலலிதா மீது விமர்சனம் வைத்திட வேண்டும் என்ற ஞானோதயம் இப்போதாவது திமுக விற்கு வந்தது மகிழ்ச்சி. ஏனென்றால் மக்கள் நலக் கூட்டணி அளவிற்கு  ஜெ அரசை திமுக விமர்சிப்பதே இல்லையே என்ற புரிதலோ குற்ற உணர்ச்சியோ கொஞ்சம் கூட இல்லாமல் கீழ்த்தரமான முறையில் மக்கள் நலக் கூட்டணி மீதான தங்கள் எரிச்சலை, வயிற்றெரிச்சலை உடன் பிறப்புக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

திமுக வின் விளம்பரம், அதற்கு அதிமுக வின் எதிர்வினை ஆகியவற்றை பார்க்கும் போது தேர்தல் நெருங்க நெருங்க இருவருமே தரம் தாழ்ந்து போவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

ஒரு தவறான முன்னுதாரணத்தை திமுக உருவாக்கியுள்ளது.

மேலே உள்ளது திமுக நேற்று ஹிந்து நாளிதழில் கொடுத்துள்ள விளம்பரம்.

தமிழ் வாசகங்களை ஆங்கில எழுத்துருக்களில் (Fonts) கொடுத்துள்ளர்கள்.

இந்த விளம்பரத்தை அவர்களால் தமிழிலேயே கொடுத்திருக்க முடியாதா? எதற்கு ஆங்கில எழுத்துருக்கள்? ஆங்கிலத்திலேயே மொழி பெயர்த்துக் கூட விளம்பரத்தைக் கொடுத்திருக்கலாமே?

தமிழ் எழுத்துருக்கள் அவசியமில்லை, ஆங்கில எழுத்துருக்களையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஜெயமோகன் சொன்ன அபத்தமான ஆலோசனையை திமுக ஏன் பின்பற்றுகிறது? தமிழை கொல்லும் முயற்சியல்லவா இது? தமிழினக் காவலர் என்று சொல்லிக் கொள்பவர் இதை ஊக்குவிக்கிறாரா?

ஜெயமோகன் தனது அரிய ஆலோசனையைச் சொன்ன போது அவருக்கு எதிராக அப்போது வீரமாக பொங்கிய திமுக வலைத்தள போராளி மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டவர்கள் இதை மட்டும் ஆதரிக்கிறார்களா?

இந்த விளம்பரம் கண்டிப்பாக திமுக தமிழிற்கு செய்துள்ள துரோகம்.  

Friday, August 1, 2014

திமுகவின் தைரியத்தை பாராட்டலாம்

நாளை திமுக கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப் போகிறார்கள். வேலூரில் அக்கட்சியின் முன்னால் அமைச்சர் எ.வ.வேலு பேசுகிறார். அதற்கான விளம்பர ப்ளெக்ஸ்களை பல இடங்களில் வைத்துள்ளார்கள்.

வேலூரில் ப்ளெக்ஸ் வைக்க மூன்று கட்ட அனுமதி வாங்கி பணம் கட்டி அந்த ரசீதையும் ப்ளெக்ஸிலே அச்சடிக்க வேண்டும் என்ற விதி உள்ளது என்பதையும் அதை அதிமுக மட்டுமல்லாமல் காவல்துறையும் பின்பற்றாது என்பதை நான் ஏற்கனவே  எழுதியுள்ளேன்.

பரவாயில்லை இப்போது திமுகவும் தைரியமாக அனுமதி பெற்ற விபரம் இல்லாமல்தான் ப்ளெக்ஸ் வைத்துள்ளார்கள். பிரச்சினை வந்தால் பார்த்துக் கொள்வோம் என்றுதான் அனுமதி பெற்றிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

சரி இதன் மூலம் கலகம் பிறந்து நல்லது நடந்தால் சரி.

இது ஒரு விஷயமா என்று கேட்காதீர்கள். கடந்த ஆண்டு எங்கள் சங்க மாநாட்டிற்கு ப்ளெக்ஸ் வைக்க அலைந்த அலைச்சல் எங்களுக்குத்தான் தெரியும்.
  

Thursday, July 11, 2013

யாருக்கு எதிராக திமுகவின் சேது சமுத்திர ஆர்ப்பாட்டம்?










சில தினங்கள் முன்பாக திமுக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

சேது சமுத்திரத் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது சரியான அரசியல் நடவடிக்கை என்பதிலும் மாற்றுக் கருத்து கிடையாது.

ஆனால் இந்த ஆர்ப்பாட்டம் யாரைக் கண்டித்து அல்லது யாரிடம் முறையிட்டு?

ஆனால் இங்கேதான் திமுக வின் மவுன மொழி ஆச்சர்யமளிக்கிறது.

சேது சமுத்திரத் திட்டம் தடைபட்டு நிற்பதற்கு மூன்று குற்றவாளிகள் காரணம்.

கற்பனைக் கதை சொல்லி இயற்கையாய் உருவான மண் திட்டுக்களை ராமர் பாலம் என்று சொல்லி முட்டுக்கட்டை போடும் பாஜக.

பாஜக வின் நிலையை அப்படியே எதிரொலிக்கும் ஜெ.

இவர்கள் இருவர் மட்டும்தான் குற்றவாளிகளா?

மூன்று மாதங்கள் வரை திமுக வும் இடம் பெற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காரணம் கிடையாதா? கலைஞரின் மகள் மாநிலங்களவை உறுப்பினராக ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி காரணம் கிடையாதா?

சொல்லப் போனால் அவர்கள்தான் முதல் குற்றவாளி, பெரும் குற்றவாளி.

ஆட்சியதிகாரத்தை கையில் வைத்துள்ள  காங்கிரஸ் கட்சிக்கு சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே இருக்குமானால் அது நிச்சயமாக சட்டபூர்வமான தடைகளை எப்போதோ தகர்த்திருக்கும்.

எத்தனையோ மோசமான சட்டங்களை, முடிவுகளை கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் எடுக்கிற காங்கிரஸ் கட்சியால் சேது சமுத்திரத் திட்டத்தை மட்டும் அமுலாக்க முடியாதா என்ன? நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் எதிர்க்கும் போது சில்லறை வர்த்தகத்தில் அன்னியக் கம்பெனிகளை அனுமதிக்க முடிகிற போது இது மட்டும் இயலாதா?

பாஜக போடும் அதே வாக்கு வங்கி கணக்கையே காங்கிரஸ் கட்சியும் போடுவதால் மட்டுமே  அது இப்பிரச்சினையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டது.

அமைச்சரவையில் பங்கு வகித்தபோது சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி வாய் திறக்காமல் இப்போது ஆர்ப்பாட்டம் என்பதே கொஞ்சம் வினோதமாகத் தான் உள்ளது.

ஆனாலும் பரவாயில்லை என்று பார்த்தால்

ஆர்ப்பாட்டத்திற்காக திமுக அச்சடித்த சுவரொட்டிகள் கூட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் என்றுதான் சொல்கிறதே தவிர மத்திய அரசை வலியுறுத்தி என்று சொல்ல அது தயாராக இல்லை.

மத்தியரசின் செயலற்ற தன்மையை கொஞ்சம் கூட சுட்டிக் காண்பிக்காமல் எனது உயிரையும் கொடுப்பேன் என்றெல்லாம் வசனம் பேசுவது வெறும் நாடகமே..


பின் குறிப்பு : கலைஞர் மீதான விசுவாசத்தோடு ஆவேசத்தோடு பின்னூட்டம் எழுதக் கிளம்பும் உடன் பிறப்புக்கள், கொஞ்சம் நிதானமாக யோசித்து, நான் சொல்வதில் உள்ள நியாயங்கள் பற்றி சிந்தித்து அதன் பின்பு கீ போர்டிற்குச் செல்லுங்கள்.

Wednesday, June 26, 2013

தந்தையாக கலைஞருக்கு வெற்றி, தலைவராக ?????


 http://www.theunrealtimes.com/wp-content/uploads/2012/09/sonia-karuna-300x293.jpg

மகள் கனிமொழியை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதில்
அவர் தந்தை கலைஞர் கருணாநிதிக்கு வெற்றி கிடைத்து விட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருக்கு?

இல்லை என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி சில மாதங்கள் கூட
ஆகவில்லை. எந்த காரணத்தை சொன்னாரோ, அந்த காரணம்
இன்னும் அப்படியே இருக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சினையில்
காங்கிரஸ் காண்பிக்கும் அலட்சியம் அப்படியே தொடர்கிறது. 
அப்படி இருக்கையில் மீண்டும் காங்கிரஸின் காலடியில் சரணாகதி
அடைந்தது  கட்சியை விட குடும்பம்தான் முக்கியம் என்று 
செயல்படுபவர் என்ற குற்றச்சாட்டை நிரூபித்து விட்டார்.

எந்த ஒரு முடிவிலும் உறுதியாக இருக்க முடியாமல் தடுமாறும்
நிலையில் இருப்பவர் என்ற குற்றச்சாட்டும் இப்போது
உறுதியாகி விட்டது.

எந்த ஒரு முடிவும் ஜனநாயக பூர்வமாக பொதுக்குழுவில் 
விவாதிக்கப்படும் என்ற தோற்றத்தையாவது இதுநாள் வரை
திமுகவில் பார்க்கலாம். கனிமொழியை போட்டியிட வைப்பதோ,
இல்லை அவர் வெற்றி பெற காங்கிரஸ்  கட்சிக்கு காவடி தூக்குவது
என்ற முடிவோ எந்த பொதுக்குழுவிலும் எடுக்கப்பட்டதாக
தெரியவில்லை.

காங்கிரஸ் கூட்டணி உறவை முறித்ததும் பட்டாசு வெடித்து,
இனிப்பு அளித்து கொண்டாடிய திமுக உடன்பிறப்பின் நிலை
இப்போது எப்படி இருக்கும்?

கனிமொழி வெற்றிக்காகவும் இனிப்பு கொடுத்து பட்டாசு 
வெடிப்பார்களா அல்லது தங்கள் மானத்தை தலைவர் இப்படி
வாங்கி விட்டாரே என்று நொந்து கொள்வார்களா?

திமுகவையெல்லாம் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று 
வீரம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இப்போது என்ன
சொல்லப் போகிறார்?

" காங்கிரஸ், திமுக இரண்டு கட்சிகளுக்கும் வெட்கமும் 
கிடையாது, விவஸ்தையும் கிடையாது. ஆகவே நாங்கள்தான்
இயல்பான கூட்டணி"   என்று சொல்வாரா அவர்?

தென்னைய பெத்தா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு
என்ற பாடல் வரிகளை கலைஞருக்கு டெடிகேட் செய்கிறேன்.

ராஜ்யசபா தேர்தல் முடிந்த பின் அண்ணன் அழகிரி குடைச்சல்
ஆரம்பமாகுமோ?
 

Tuesday, March 12, 2013

திமுக மீது மக்கள் பயமிழந்து விட்டார்களா?

திமுக  இன்று அறிவித்திருந்த பந்த் போராட்டத்திற்கு மக்கள்
ஆதரவு சிறிதும் இல்லை. வேலூரைப் பொறுத்தவரை திமுக
அலுவலகக் கட்டிடத்தில் இருந்த கடைகளைத் தவிர வேறு
எந்த கடைகளும் மூடப்படவில்லை.

கடந்த காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது 
இது போன்ற போராட்டங்கள் அறிவித்த போது கடையடைப்பு
நன்றாகவே நிகழ்ந்திருக்கிறது. இயல்பு வாழ்க்கை தொடர
வேண்டும் என்று ஆளும் கட்சி முயற்சிகள் மேற்கொண்ட
முயற்சிகளையும் மீறி மக்கள், வியாபாரிகள் ஆதரவளித்து
உள்ளனர்.

எங்கே யாராவது கலாட்டா செய்து கடைகளை அடித்து
நொறுக்கினால் என்ன செய்வது என்ற அச்ச உணர்வும்
ஒரு காரணம்.

இம்முறை கூட அந்த அச்ச உணர்வு காரணமாக பல
கடைகள் மூடப்படலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால்
அவ்வாறு நிகழவில்லை. அப்படிப்பட்ட பயம் எதுவும்
மக்களுக்கோ, வணிகர்களுக்கோ இருக்கவில்லை.

இந்த நிலைமைக்கு திமுகதான் காரணம்.
அவர்கள் மீது  மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதுதான்
காரணம்.

இலங்கைப் பிரச்சினையில் வாய்ப்பிருந்தபோது
அதையெல்லாம் கோட்டை விட்டு விட்டு
இப்போது டேஸோ என்று சொல்வதை யாரும்
நம்பத் தயாரில்லை.

சில்லறை வணிகத்தில் எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டே
மத்தியரசு முடிவிற்கு ஆதரவாக வாக்களித்த இரட்டை
வேட சந்தர்ப்பவாதத்தை மன்னிக்க வணிகர்கள்
தயாராக இல்லை.

இன்றைய அவல நிலைக்கு அவர்கள்தான் காரணம்.
எனவே கலைஞர் அடுத்தவர் மீதோ, ஆளும்கட்சி மீதோ
பழி போடுவதற்கு பதில் சுய பரிசோதனை 
செய்து கொள்ளட்டும்.