Showing posts with label முக நூல். Show all posts
Showing posts with label முக நூல். Show all posts

Wednesday, November 20, 2024

நல்லா இருக்குடா மார்க்கு உன் சமூகத் தரம்

 


இப்படித்தான் வெறுப்பை விதைக்கிறார்கள்  என்பது சில நாட்கள் முன்பு எழுதிய பதிவு. மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நடந்த ஒரு விஷப் பிரச்சாரம் குறித்த பதிவு. அந்த நச்சுத்தனமான பதிவை அகற்ற வேண்டும் என்று முகநூலிடம் ரிப்போர்ட்டும் செய்திருந்தேன்.

அதற்கு ஒரு பதில் வந்துள்ளது.


பொய்ப் பிரச்சாரம் செய்து மத வெறியைத் தூண்டும் அந்த நச்சுப் பதிவு முகநூலின் சமூகத்தரத்திற்கு எதிரானது கிடையாதாம். அதனால் அந்த பதிவை நீக்க மாட்டார்களாம்.

அடப்பாவி மார்க்கு!

நீட் தேர்வு வேண்டாம் என்றால்,

அமெரிக்க இந்தியர்களின் வேலை வாய்ப்புக்களுக்கு ட்ரம்பால் ஆபத்து என்றால்

வினீஷ் போகத்தை பாராட்டினால்

சமூகத் தரத்திற்கு எதிரானது என்று சொல்லி பதிவை நீக்குகிறது முகநூல். ஆனால் சங்கிகளின் அயோக்கியத்தனத்திற்கு சாமரம் வீசுகிறது.

அப்படியென்றால் சங்கிகளின் கீழ்த்தரம்தான் முகநூலின் சமூகத்தரம்!

என்ன மார்க்கு சரியா?

Thursday, November 7, 2024

ஏமாந்திட்டியே மார்க்கு

 


மோடிக்கு ட்ரம்பின் பரிசு  என்ற நேற்றைய பதிவிற்கு வழக்கம் போல முகநூலில் இணைப்பு கொடுத்தவுடன் "சமூகத் தரத்திற்கு எதிரானது" என்று சொல்லி நீக்கி விட்டது.


அதனால் அப்படியே விட்டு விடவில்லை.

வலைப்பக்க இணைப்பாக இல்லாமல் நேரடியாக பதிவு செய்தேன்.


அதே கருத்து, அதே படங்கள். ஆனால் இம்முறை பதிவு பத்திரமாக உள்ளது.

ஏன்யா மார்க்கு, இப்போ எங்கே போச்சுய்யா உம்ம "சமூகத் தரம்"?


Friday, August 9, 2024

சதிகார சகுனிகளுக்கு ஆதரவாக . . .

வினீஷ் போகத்தின் பதக்கத்தை பறித்த சதி குறித்து நேற்று இதயங்களை வென்றாய் பெண்ணே  என்ற பதிவை எழுதி அதனை முகநூலிலும் பகிர்ந்து கொண்டேன்.

முகநூலின் சமூகத் தரத்திற்கு எதிராக இருப்பதாக என்று சொல்லி ஒரு பத்து நிமிடத்திற்குள் நீக்கி விட்டார்கள்.

சதிகார சகுனிகளுக்கு ஆதரவாக நிற்பதுதான் முகநூலின் சமூகத்தரம் போல . . .

240 சீட்டிற்கே இப்படியென்றால் மோடி சொன்னது போல சாக்கோபார் கிடைத்திருந்தால் ஆட்டம் எப்படி இருக்கும்!
 

Saturday, July 6, 2024

கடைசியில் என் பெயரிலேயும் . . .

 


முகநூலில் பல சமயம் நமக்கு ஏற்கனவே நண்பர்களாக இருப்பவர்களிடமிருந்து நட்பழைப்பு வருகிற போது அது போலி என்று தெரிந்து அவர்களை கலாய்த்து அவர்கள் பணம் கேட்பதற்கு முன்பே நான் பணம் கேட்டு வெறுப்பேற்றுவது எனக்கு ஒரு பொழுதுபோக்கு.

இன்று என் பெயரிலேயே ஒரு திருடன் போலிக்கணக்கு ஆரம்பித்து பல நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நட்பழைப்பு அனுப்பியிருக்கிறான்.


புதிதாக ஏதாவது முகநூல் கணக்கு துவக்கி இருக்கிறாயா என்று என் மகன் தொலைபேசியில் கேட்டபோதுதான் விபரம் தெரிந்தது.

இதில் கொடுமை என்னவென்றால் அவன் எனக்கே நட்பழைப்பு அனுப்பி உள்ளான். அந்த நட்பழைப்பை இப்போது காணவில்லை.

எனவே இதனால் நான் அளிக்கும் எச்சரிக்கை என்னவென்றால்

என் பெயரில் வரும் நட்பழைப்பை ஏற்க வேண்டாம். பணம் கேட்டால் ஒரு பைசா கூட அனுப்ப வேண்டாம். முடிந்தால் அந்த போலியை பணம் கேட்டு வெறுப்பேற்றவும்.


Friday, June 21, 2024

அப்படியென்ன சமூகத்தரம் பாழானது?

 


நேற்று முன் தினம் எழுதிய "நீட் - எதிர்ப்புத் தீ பரவட்டும்  என்ற பதிவை முகநூல் நீக்கி விட்டது.


இந்த பதிவால் அப்படி என்ன முகநூலின் சமூகத் தரம் பாழானது என்று தெரியவில்லை. 

சங்கிகள் அனுதினமும் செய்யும் நச்சுப் பிரச்சாரத்தால் பாழாகாத சமூகத் தரத்திற்கு நீட் எதிர்ப்பு மட்டும் பிரச்சினையாகிறது.

சமூகத் தரம் என்பதை விட மிகவும் கடுப்பேற்றியது வேறு ஒன்று.

லைக்கிற்கும் ஷேருக்கும் தவறான பதிவு போடுகிறாய் என்று சொல்கிறது.

அடேய் மார்க், இந்த லைக்கையும் ஷேரையும் வச்சி என்னய்யா செய்யறது? ஒரு ரூபாய் கடலை மிட்டாய்க்குக் கூட பிரயோசனம் கிடையாது.

Thursday, January 11, 2024

முகநூலை புறக்கணிப்பீரா சங்கிகளா?

 



 முகநூல் முதலாளி மார்க், இப்போது புதிதாக மாட்டுக்கறி வியாபாரம் தொடங்கியுள்ளாராம். சுவையான மாட்டுக்கறி கிடைப்பதற்கு பல முயற்சிகள் செய்வதாகவும் சொல்லியுள்ளனர்.

 மாட்டுக்கறி வைத்ததாக கொலை செய்யும் சங்கிகளால் எப்படி மாட்டுக்கறியை சிலாகிக்கும்  மார்க்கின் முகநூலில் செயல்பட முடியும்! ஆகவே சங்கிகள் முகநூலில் இருந்து விலகி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

 என்ன! சங்கிகள் இல்லாவிட்டால் முகநூல் சுத்தமாக இருக்கும். அதே சமயம் முட்டாள்தனமான பதிவுகள் போட்டு நம்மை சிரிக்க வைக்கும் சில சங்கிகளை இழப்போம்.

Wednesday, December 27, 2023

இறந்தவர் வருவார் முகநூலில், பணம் கேட்க

 



 

தோழர் சுப்பராயன், நெய்வேலியில் பணியில் சேர்ந்த என்னை தொழிற்சங்க இயக்கத்திற்கு கொண்டு வந்தவர். பின்பு அதிகாரியாக எங்கள் வேலூர் கோட்டத்திற்கே முதுநிலை கோட்ட மேலாளராக வந்தவர். 

 


கடந்த ஆண்டு இறந்து போன அவரது பெயரில் முகநூல் நட்பழைப்பு வந்தது. உள் பெட்டியில் உரையாடலும் தொடங்கியது.

 

“இப்போது எங்கே இருக்கிறீர்கள்? சொர்க்கத்திலா? நரகத்திலா? “  என்று நான் கேட்க

 

மோசடிப் பேர்வழியோ

 

“நான் நலம், நீங்கள் நலமா?

 

என்று நலம் விசாரிக்க

 

அடுத்த கேள்வியை இன்னும் காட்டமாக

 

“போன வருடம்தான் இறந்து போனீர்கள். எப்படி மறுபடியும் வந்தீர்கள்?” என்று கேட்க

 

அந்தாளோ தன் பணிதான் முக்கியம் என்பது போல

 

“கூகிள் பே இருக்கிறதா?”

 

என்று கேட்க

 

“ஹ்லோ ஃபிராடு”

 

என்று அழைத்த பின்பு ப்ளாக்கி விட்டு போய் விட்டான்.

 

இப்படி ஃபேக் அக்கவுண்ட் தொடங்கி  யாராவது ஏமாறுவார்களா என்பதையே வேலையாகக் கொண்டு அலைகிறார்கள் போல.

 

இந்த மாதம் மட்டும் இது போல நான்கு போலிக் கணக்குகளின் அழைப்பு.

 

நம்ம பெயரில் என்றைக்கு ஃபேக் அக்கவுண்ட் ஆரம்பிக்கப் போகிறானோ தெரியவில்லை.

 

அப்படி யாராவது பணம் கேட்டால் தராதீர்கள். எனக்கு தேவையென்றால் நானே நேரடியாக தொலை பேசியில் அழைத்து கேட்பேன்.

 

 

Friday, December 8, 2023

போலியோடு மீண்டும் ஜாலியாய் . . .

 


நம்முடைய நண்பர்கள் பெயரில் போலி முகநூல் கணக்கு துவங்கி நம்மிடம் பணம் கேட்கும் மோசடிப்பேர்வழிகளோடு உரையாடுவது ஒரு ஜாலியான பொழுது போக்கு,

இந்திய வங்கி ஊழியர் சம்மேளம் (BEFI) யின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான தோழர் சி.பி.கிருஷ்ணன் பெயரில் அப்படி ஒரு போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்திருந்தார்.

அந்த போலியிடமிருந்து நேற்று நட்பழைப்பு வந்திருந்தது. சரி கொஞ்சம் விளையாடுவோம் என்று அதை ஏற்றுக் கொண்டேன்.

உடனடியாக இன் பாக்ஸில் உரையாடலை தொடங்கி விட்டது அந்த போலி. தான் யாருடைய பெயரில் கணக்கு தொடங்கியுள்ளோம் என்று ஏதாவது ஆராய்ந்து துவக்கியதா என்று அறிய வங்கி ஒப்பந்தம் தொடர்பாக

“ஐந்து நாள் வாரம் என்ன ஆனது?” என்று முதல் கேள்வியை கேட்க அந்த போலியோ “நன்று” என்று பதிலளித்தது.

“எப்போது கையெழுத்திடுவீர்கள்” என்ற கேள்விக்கோ “ஓகே” என்றது.

“உங்கள் மாநாடு எப்போது?” என்று நான் கேட்க

அந்த போலி  “ஜிபே உள்ளதா?” என்று கேட்டது.

“நான் இருக்கு ஆனா இல்லை” என்று சொல்ல

தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் போல

“என் நண்பருக்கு பணம் அனுப்ப வேண்டும். உதவ முடியுமா?” என்று தன் வேலையில் கவனமாக இருந்தது.

“உன் அப்பா பெயரை சொல்லவும்” என்று கேட்டேன். 

தோழர் சி.பி.கிருஷ்ணன் அவர்களின் தந்தை தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் அஞ்சல் ஊழியர் சங்கத்தின் முக்கியத் தலைவர். வேலூர் நகரத்தில் தொழிற்சங்கக் கூட்டமைப்பை உருவாக்கியவர். அவர் பெயரைச் சொன்னாலே எங்களின் மூத்த தலைவர்கள் நெகிழ்ந்து போவார்கள்.

 இந்த கேள்விக்கு பதில் இல்லை.

 அடுத்து “நான் யாருன்னாவது சொல்லுய்யா” என்று கேட்க

 





அந்த போலி என்னை ப்ளாக் செய்து விட்டது. ஃப்ராடு என்றெல்லாம் திட்டும் முன்பே அப்படி ப்ளாக் செய்து ஓடி விட்டது கொஞ்சம் வருத்தமாகவே உள்ளது.

 

பார்ப்போம். மீண்டும் ஒரு போலிக்கணக்கோடு வராமலா இருக்கப் போகிறது!

Saturday, June 10, 2023

என்னங்கய்யா உங்க சமுதாய தரம்?

 



முக நூலில் திடீரென ஒரு நோடிபிகேஷன் வந்தது.

 



எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மார்க். அதற்கு “அவர்களின் சமுதாய தரத்தை ஏதோ பின்னூட்டத்தில் கடைபிடிக்கவில்லை” என்று காரணமும் சொல்லி உள்ளார். “தவறு செய்வது இயல்பு. அதனால் உங்கள் பக்கத்தில் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை” என்று நான் எவ்வளவு பெருந்தன்மை பார்த்தாயா என்று வேறு சொல்லியுள்ளார்.

 

அப்படி என்னய்யா நான் உங்க சமுதாய தரத்தை மீறிட்டேன் சொல்லு பார்ப்போம் என்று அதை காண்பிக்கவே இல்லை.

 

எல்லாம் சரி மார்க்கு! அதென்ன உங்க “சமுதாய தரம்?”

 

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில சங்கிகள் போடும் பதிவுகளும் சரி பின்னூட்டங்களும் சரி, மத வெறியை தூண்டும் பொய்ப் பிரச்சாரமாக இருக்கும். சங்கிகளுக்கு எதிராக பெண்கள் ஏதாவது எழுதினால் அதிலே போடப்படும் பின்னூட்டங்கள் பாலியல் வக்கிரத்துடன் ஆபாசமாக இருக்கும். அப்போதெல்லாம் எங்கே போகும் உங்கள் “சமுதாய தரம்?”

 

இந்தியாவில் மார்க்கை கட்டுப்படுத்துவது டிமோவின் ஆட்கள் என்பதை நிரூபிச்சிட்டியேப்பா!

Friday, September 10, 2021

முக நூலுக்கு இதிலென்ன பிரச்சினை?

 யாரந்த அல்ப மனிதன்?

மூத்த வழக்கறிஞர் தோழர் ஞானபாரதி அவர்களின் முக நூல் பதிவினை பகிர்ந்து கொண்டுள்ளேன். இதில் அவர் வெறுமனே அல்ப மனிதன் என்று மட்டும்தான் குறிப்பிட்டுள்ளார். யார் பெயரையும் சொல்லவில்லை. நீங்களாகவே அது சீமான் என்று நினைத்துக் கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

 





"சசிவர்ணத் தேவர்""என்ற நூலை எழுதிய மருது மோகன் பல ஆண்டுகளுக்கு முன்பு மருது சகோதரர்கள் பற்றி ஒரு திரைப்படம் தயாரிப்பது பற்றி ஆலோசனை நடத்த சென்னையில் ஏற்பாடு செய்து இருந்த ஒரு கூட்டத்திற்கு என்னையும் அழைத்துப் போய் இருந்தார்.

 பலர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில்  நடுநாயகமாக வீற்று இருந்த.புலவர்  புலமைப் பித்தன் அவர்களை அன்று தான் முதன்முறையாகப் பார்த்தேன்.

 வயது முதிர்ந்த சிங்கம் போல வசீகரிக்கும்    கம்பீரத் தோற்றம்.அவரைத் தனித்துவமான ஆளுமையாகக் காட்டியது.

 அப்போது எம்ஜிஆர் பற்றியும் அவர் வீட்டில் தங்க வைத்து இருந்த விடுதலைப்புலிகள் தலைவர் பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை கூட்டம் தொடங்குவற்குப் முன்பு அவர் பலரோடு பகிர்ந்து கொண்டார்.

  அவர் சொன்ன தகவல்கள் பலரையும் மெய் மறந்து போக வைத்தது.

 விடுதலைப் புலிகளின் தலைவர்  பிரபாகரனை வீட்டில் வைத்துப் பாதுகாத்த புலமைப்பித்தன் போன்ற   ஆளுமைகள் அதை ஒருநாளும் அவரை ஒரு சில. நிமிடங்கள் மட்டுமே சந்தித்த சில அல்ப மனிதர்களைப் போல "வயிறு கழுவ' பயன்படுத்திக் கொண்டது இல்லை என்பதை நினைத்துப் பார்க்கும் போது தான் புலவர் புலமைப் பித்தனின் .தார்மீகப்  பேராண்மை விளங்குகிறது..

 மேன் மக்கள் என்றும் மேன் மக்களே.அல்பைகள் என்றும் அல்பைகளே.

 "கவிக்கோ சொன்னது போல " அம்மி கொத்துபவன் எல்லாம் சிற்பி போல நடிக்கும் கூத்து தமிழகத்தில் நடக்கிறது..

பிகு: இந்த பதிவு முக நூல் விதிமுறைகளுக்கு முரணானது என்று நீக்குமாறு கூறியதாக தோழர் ஞானபாரதி தெரிவித்திருந்தார். அப்படி என்ன முக நூலுக்கு இதில் பிரச்சினை என்றுதான் தெரியவில்லை. 

Sunday, August 15, 2021

போலியோடு ஜாலியாய் உரையாடினால் . . .

 


கொஞ்ச நாட்கள் முன்பாக மறைந்த தென் மண்டல முன்னாள் தலைவர் தோழர் எம்.எம்.ஜோசப் அவர்களின் பெயரில் ஒரு நட்பழைப்பு ஒரு போலியால் வந்து உரையாடி கேள்வி கேட்டதும் என்னை ப்ளாக் செய்ததை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

சில நாட்கள் முன்பாக திருச்சி தோழர் புகழ் அமுதன் பெயரிலும் ஒரு நட்பழைப்பு வந்திருந்தது. அவர் இவ்வாறு நடப்பதாக முக நூலில் பதிவு செய்திருந்தார். அதனால் அந்த போலியோடு உரையாடத் தொடங்கினேன். ஒரு கேள்வி கேட்டவுடனேயே அவன் ப்ளாக் செய்து ஓடி விட்டான்.

நான்கு நாட்கள் முன்பாக எங்கள் ராஜமுந்திரி கோட்டத்தின் மூத்த தலைவர் தோழர் கே.எஸ்.மூர்த்தி அவர்களின் பெயரிலும் இப்படி ஒரு நட்பழைப்பு. அதைப் பார்த்து பேசுவதற்கு முன்பாகவே அந்த கணக்கு செயலிழந்து விட்டது.

நேற்று இரவு உறங்கச் செல்லும் முன்பாக எங்கள் போளூர் கிளைச்சங்கச் செயலாளர் தோழர் சங்கரிடமிருந்து ஒரு நட்பழைப்பு. ஒரு மணி நேரம் முன்பாகத்தான் ஒரு பதிவில் பின்னூட்டமிட்டிருந்ததால் வந்த அழைப்பு மோசடி அழைப்பு என்று தெளிவாகத் தெரிந்தது.



சரி, கொஞ்சம் விளையாடுவோமே என்று நட்பழைப்பை ஏற்றால் அடுத்த நொடியே இன் பாக்ஸில் செய்தி வந்தது. எங்கே உள்ளீர்கள் என்ற கேள்விக்கு அமெரிக்கா என்று பதில் சொன்னேன். கொஞ்சமும் தயங்காமல் கூகிள் பே, போன் பே இருக்கிறதா என்று கேட்க, நான் முந்திக் கொண்டேன். எனக்கு பணம் வேண்டும், ஐயாயிரம் டாலர் வேண்டும் என்று கேட்க மீண்டும் ப்ளாக் செய்து ஓடி விட்டான்.

போலிகளோடு இவ்வாறு விளையாடுவது ஜாலியாகத்தான் உள்ளது, 

போலி என்று தெரிந்த முகமறியாதவர்களோடு இவ்வாறு உரையாட முடிகிற நம்மால், போலி என்று தெரிந்த முகமறிந்தவர்களை எதுவும் செய்ய முடிவதில்லையே!

மோடி ஒரு போலி என்பதை நாம் குறைந்த பட்சம் ஒப்புக் கொள்ளவாவது செய்கிறோமா?