Showing posts with label சிந்தனைக்காக. Show all posts
Showing posts with label சிந்தனைக்காக. Show all posts

Sunday, October 13, 2013

இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?

கீழே உள்ளது மாடியில் உள்ள என் மாமனார் வீட்டில் சரஸ்வதி
பூஜைக்கு போய்விட்டு வந்த என் மகன் முகநூலில் போட்ட
நிலைத் தகவல்.

That Awkward moment when I find that a 3rd standard school student has more books to keep for Saraswathi Pooja than a 3rd year College Student!! 

சிரிப்பதற்கான விஷயமாக மட்டும் இது இருப்பதாக எனக்கு
தோன்றவில்லை. இன்றைய கல்வி முறையைப் பற்றிய ஒரு
விமர்சனமாகவே பார்க்கிறேன்.

சுமை தூக்கும் தொழிலாளர்கள் போல சின்னக் குழந்தைகள்
பிரம்மாண்டமான புத்தக மூட்டையை  முதுகில் சுமந்து 
கொண்டு அனுதினமும் பள்ளிக்குச் செல்கின்றனர். 
தொழில்நுட்பத்தின் முன்னேற்றமாக பல குழந்தைகள் 
இப்போது சக்கரம் வைத்த பைகளை தள்ளிக் கொண்டு 
செல்கின்றனர்.

ஒரு பாடத்திற்கு ஒரு புத்தகம் என்றிருந்த நிலையில் மாற்றம்
என்பது மெட்ரிகுலேஷன்  பாட முறைக்கு பிறகே வந்தது. 
சி.பி.எஸ்.இ முறையிலும் அப்படித்தான். இந்தப் பள்ளிகளுக்கு
பாடப்புத்தகம் அச்சடித்துக் கொடுப்பது என்பதே ஒரு மிகப் பெரிய
சந்தை. அதிக புத்தகங்கள் விற்றால் அந்த புத்தக 
நிறுவனங்களுக்கும்  லாபம், கமிஷன் அடிப்படையில் 
பள்ளிகளுக்கும் லாபம்.  

சமச்சீர் கல்வி முறையை  மெட்ரிகுலேஷன்  பள்ளிகள் 
கடுமையாக எதிர்த்ததன் காரணம் புரிகிறதா?

நான் முக்கியமாக சொல்ல வந்த விஷயமே வேறு.

எல்.கே.ஜி தொடங்கி பனிரெண்டாவது வரையில் காலை
விழித்தது முதல் இரவு உறங்கும்வரை புத்தகங்களோடே
மன்றாடிக் கொண்டிருப்பதால்தான் இன்றைய தலைமுறைக்கு
வாசிப்பு பழக்கம் என்பது குறைந்து வருகிறதா?

எந்த புத்தகத்தை பார்த்தாலும் அது பாடப்புத்தகம் போல
சலிப்பு தருகிறதா?



 

Friday, October 4, 2013

ஒரு மலரின் குமுறல்


கூந்தலில் சூட்டியிருந்தால்
அழகைக் கூட்டியிருப்பேன்.

மண மாலையாய் தொடுத்திருந்தால்
மகிழ்ச்சியில் இணைந்திருப்பேன்.

ஆலயத்திற்கு அனுப்பியிருந்தால்
அருளாவது பெற்றிருப்பேன்.

இறுதி மரியாதைக்கு 
எடுத்துச்  சென்றார்கள்.
சாலையில் இரைந்து
கால்களில் மிதிபட்டு
மரியாதை இல்லாமல்
மாண்டேன் நான்
 
 

Sunday, September 29, 2013

தரமிழந்து போன தமிழருவி மணியனுக்கே ஒரு திறந்த மடல்

ஊரில் உள்ள  தலைவர்களுக்கெல்லாம் திறந்த மடல் எழுதித் திரிந்த
தமிழருவி மணியனுக்கு  ஒரு  திறந்த மடல் எழுதும் தேவை
உருவாகும் என்று சிந்தித்ததேயில்லை. 

தங்களின் தமிழ் அறிவை அரசியலுக்காக விற்றுக் கொண்டிருக்கும் 
பல பேச்சு வியாபாரிகள் மத்தியில் அறிவு ஜீவியாக உலா வந்து
கொண்டிருந்த உங்கள் முகமுடி இவ்வளவு சீக்கிரம் கழண்டு விழும்
என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

க.சுப்புவிற்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே அதிகமாக கட்சி
மாறிய ஒருவர் என்ற பெயர் உங்களுக்கு இருந்தாலும் உங்கள்
தமிழாற்றலால், தேர்ந்த வழக்கறிஞர்களை விட திறம் மிகுந்த
வாதங்களால்  உங்களை கருத்துக்களைப் பற்றி சிந்திக்க வைத்து
உங்களைப் பற்றி சிந்திக்காமல் தடுத்து விட்டீர்கள். லாவகமாக
தவிர்த்து விட்டீர்கள்.

அதனால்தான் நீங்கள் சொன்ன கருத்துக்களே இப்போது 
முன்னுக்கு  வந்து உங்கள் பொய் முகத்தை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.  சோ,   சுப்ரமணிய சாமி வரிசையில் 
புதிய கூட்டணித் தரகர் என்ற  புதிய தொழிலை 
தொடங்கியுள்ளீர்கள்.

நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் என்று சுற்றி வளைத்து
கடைசியில் வெளிப்படையாக சொல்லி விட்டீர்கள். ஆனால்
அதையும் எவ்வளவு அழகாக நியாயப்படுத்துகின்றீர்கள்.
2016 ல் தமிழகத்தில் மாற்றம் வருவதற்காக ஒரு கூட்டணி
இப்போதே வர வேண்டுமாம். அதனால் மோடி பிரதமரானால்
பரவாயில்லை என்பது உங்கள் வாதம்.

உங்கள் வீடு பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒட்டு மொத்த
இந்தியாவும் பற்றி எரிய வேண்டுமா? நல்லெண்ணம் கொண்ட
மனிதரய்யா நீங்கள். நீங்கள் விரும்புகிற மதிமுக, தேமுதிக, பாஜக,
பாமக கூட்டணி உருவானாலும் அது ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பே
கிடையாது என்பது அரசியலிலேயே ஊறிப் போயிருக்கிற
உங்களுக்கு என்னை விட நன்றாகவே தெரியும்.

2016 என்று  தூண்டில் போட்டாலும்  நீங்கள் மீன் பிடிக்க நினைப்பது
என்னவோ 2014 மக்களவைத் தேர்தலுக்குத்தான். பாஜக வைப் பற்றி
உங்கள் கருத்து என்ன?

முகநூலில் ஒரு நண்பர் நீங்கள் கூறியதை அப்படியே நினைவுபடுத்தி
பதிவு செய்திருந்தார். 

அதை நீங்களும் கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.




தமிழகத்தில் தி.மு.-வுக்கு மாற்று ...தி.மு.. என்பது எப்படி அரசியல் சாபமோ, காங்கிரஸுக்கு மாற்றாகத் தேசிய அளவில் பா... இருப்பதும் அதே போன்ற சாபம்தான். அதிகாரத்தைச் சுவைக்கும் வரை பற்றற்ற புத்தரைப் போல் தோற்றம் காட்டிய பா..., ஆட்சி அரியாசனத்தில் அமர்ந்ததும் 'காங்கிரஸுக்கு எந்த வகையிலும் தாங்கள் இளைப்பில்லை காண்என்று அதன் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு நன்றாக உணர்த்தி விட்டனர். பங்காரு லட்சுமணன் தொடங்கி, எடியூரப்பா வழியாக, நிதின் கட்காரி வரை பா..-வின் நிஜமுகம் தெரிந்து விட்டது. இப்போது, 'கோத்ராரத்தக் கறை படிந்த மோடி அதன் முகமூடி ஆகிவிட்டார்.  பாவம் இந்திய வாக்காளர்கள்

இப்போது மட்டும் பாஜக எப்படி உத்தம சிரோண்மணி ஆனார்கள்?

ஊழலிலும் சரி, மக்களை வதைக்கும்  பொருளாதாரக் 
கொள்கைகளிலும்  சரி இரண்டு கட்சிகளுக்கும் 
வேறுபாடு கிடையாதுஎன்பது தெரியாத 
பச்சிளம் பாலகர் அல்ல நீங்கள். ஆனால் மத வெறி
என்ற அம்சத்தால் இன்னும் மோசமாக காட்சியளிக்கிறது பா.ஜ.க.

நரேந்திர மோடியை ஆதரிக்க வேண்டும் என்ற மோகத்தில் உங்கள்
நாக்கு எப்படியெல்லாம் விளையாடியுள்ளது?

அவருக்கு நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்று
பட்டியல் போட்டுள்ளீர்கள்.

இதோ அவை இங்கே


வைகோவும் விஜயகாந்த்தும் பா..-வுடன் சேர்ந்து நிற்பதற்கு முன், சில நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.

 'பாபர் மசூதி பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முன், அயோத்தியில் ராமர் கோயில் விவகாரத்தை வளர்த்தெடுக்கக் கூடாது.  

பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தக் கூடாது.  


காஷ்மீருக்குத் தனிச்சலுகை தரும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவில் கைவைக்கக் கூடாது.  

ஒரு தேசம் இந்தியா என்பதில் இருகருத்து இல்லை. ஆனால், இந்துக்களும் சிறுபான்மை சமயங்களைச் சார்ந்தவர்களும், இந்தியர் என்ற வகையில் சமஉரிமையும் சமவாய்ப்பும் பெறுவதில் எந்த வேற்றுமையும் இருக்கலாகாது.  

ஈழத்தமிழரின் அரசியல் உரிமைகளைக் காப்பதில் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து இந்தியா உணர்வுபூர்வமாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்என்று வலியுறுத்த வேண்டும்.  

வகுப்பு வாதத்தில் ஈடுபடாத நிலையில், மோடி பிரதமராவதைத் தயக்கமின்றி வரவேற்கலாம்.

அப்படி நிபந்தனை விதிக்கும் தைரியம் இவர்களுக்குக் கிடையாது
என்பதும் தேர்தல் ஆதாயத்திற்காக அவற்றை ஏற்றுக் கொண்டாலும்
பிறகு அதை மீறும் கட்சிதான் பாஜக என்பது உங்களுக்கு புரியாதா
என்ன? இப்படிப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் அதற்குப்
பிறகு அது பாரதீய ஜனதா கட்சியா என்ன?


உலக இலக்கியங்களைப் படித்துள்ள உங்களுக்கு "சிறுத்தையின்
புள்ளிகளை மாற்ற முடியாது" என்று ஷேக்ஸ்பியர் சொன்னது
நினைவில் இல்லையா என்ன?

இந்த மகா கூட்டணியில் பாமக இணைய வேண்டும் என்று 
விருப்பம்தெரிவித்துள்ளீர்கள். அன்னம் விடு தூது, 
காகம் விடு தூது போலதாவும் குரங்கு தூதாக 
உங்கள் தூது தொடங்கியுள்ளது. 

மருத்துவர் ஐயாவிற்கு நீங்கள் எழுதியுள்ள கடிதங்களை அதற்குள்
மறந்து விட்டீர்களா என்ன? 

மதுவின் போதைக்கு எதிராக குரல் கொடுப்பதாக சொல்லும் 
நீங்கள் மதுவை விட மோசமான ஜாதி வெறி சக்தியையும் 
மத வெறி சக்தியையும் கரம் கோர்க்க வைக்க 
ஆசைப்படுகிறீர்கள். தமிழகத்தில் நச்சை
பரவச் செய்ய அவ்வளவு ஆசை உங்களுக்கு.

மதுவின் போதை அக்குடும்பத்தை அழிக்கும் என்றால் 
இவர்களின் வன்ம அரசியல் பல தலைமுறைகளையே 
முடமாக்கி விடும் என்பது தெரிந்தும் அதை 
செய்கிறீர்கள் என்றால் உங்களை போலித்தனமான
மனிதர் என்று சொல்வது கூட தவறு.
 அபாயகரமான சந்தர்ப்பவாதி.

உங்களின் கீழ்த்தர அரசியலுக்கு ஜெயகாந்தன் பாட்டை வேறு
துணைக்கு அழைத்துள்ளீர்கள். 

அதையே நானும் உங்களுக்காக கொஞ்சம் மாற்றிப் பாடுகிறேன்

தாழ்ந்ததைச் சொல்லுகிறேன்- நீங்கள்
தரங்கெட்டதைச் சொல்லுகிறேன் - இங்கே
தாழ்வதும் தாழ்ந்து வீழ்வதும் - உமக்குத்
தலையெழுத்தென்றால் - அதை
தமிழகத்திற்கும் செய்வதுண்டோ?

தம்பிடிக்காக மட்டுமே இதை செய்கிறீர்கள் என்று குற்றம் சுமத்த
என்னிடம் ஆதாரம் இல்லை. ஆதாயம் இல்லாமல் இந்த தரகு
வேலைக்கு சென்றிருக்க மாட்டீர்கள் என்பதை  மட்டும்  எனது
உள்ளுணர்வு சொல்கிறது.

அஹிம்சையை போதித்த காந்தியின் பெயரை  ஏன் இன்னும்
உங்கள் இயக்கத்தில் வைத்துள்ளீர்கள்?

நரேந்திர மோடியின்  நரவேட்டை புகழ்பாடும் 
 புரோக்கர் இயக்கம் என்று மாற்றி விடுங்கள்.