Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts
Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts

Thursday, March 28, 2024

எந்த சினிமாவில் நாட்டாமை?

 


தேவயானியை சூர்யவம்சம் படத்தில் கலெக்டராக்கியது போல ராதிகாவை எம்.பி யாக்குவேன் என்று சொன்ன நாட்டாமை அவர்களே, ராதிகாவை எந்த படத்தில் எம்.பி ஆக்குவேன் என்பதை மட்டும் சொல்லவில்லையே?

ஆனால் நீங்க ரொம்ப லேட்டு.

மணிரத்தினத்திடம் சொல்லி பொன்னியின் செல்வன் படத்திலேயே அனிருத்த பிரம்மராயர் வேடத்தில் ராதிகாவை நடிக்க வைத்திருந்தால் பிரதம அமைச்சராக நடித்த பெருமையே கிடைத்திருக்குமே!

ஐய்யோ! அது ஆண் வேடமாயிற்றே என்று யோசித்தீர்களா?

மணிமேகலை பாத்திரத்தையே படத்தில் தூக்கி விட்டார். மதுராந்தகன்தான் செம்பியன் மாதேவியின் அசல் மகன் என்று கதையை மாற்றி சேந்தன் அமுதனையும் பூங்குழலியையும் அம்போவென்று விட்டு விட்டார்.

ஆதித்த கரிகாலனும் அருள்மொழியும் குந்தவையும் சந்திப்பதாக நாவலின் ஐந்து பாகத்திலும் இல்லாததை புதிதாக கொண்டு வந்தார்.

இவ்வளவு மாத்தினவரு அநிருத்த பிரம்மராயரை மட்டும் பெண்ணாக மாத்தி இருக்க மாட்டாரா என்ன?

Wednesday, May 10, 2023

PS 2 – மணியின் செல்வன்

 


ஞாயிறு அன்று காலைக்காட்சியில் பார்த்த படம். பரவாயில்லை. அந்த காலைக்காட்சியிலேயே  சுமார் அறுபது பேர் இருந்திருப்பார்கள். மின் கட்டணத்திற்கான பணம் வசூலாகி இருக்கும்.

குறைந்த பட்சம் எட்டு முறை படித்த நாவல் பொன்னியின் செல்வன். மணிரத்னம் – ஜெயமோகன் கூட்டணி என்பதால் பெரிய எதிர்பார்ப்பு கிடையாது, அதனால் ஏமாற்றம் கிடையாது என்று முதல் பாகம் வெளி வந்த போதே எழுதியிருந்தேன். முதல் பாகம் தந்த அனுபவத்தால்  இரண்டாவது பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பு கிடையாது.

 படத்தில் சிறப்பாக இருந்த சில அம்சங்கள்.

 பாடல்களும் பின்னணி இசையும். சோழர் காலத்தில் இசை எல்லாம் எப்படி இருந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் பலரும் ஒப்பிடுவது அந்த காலத்து வரலாற்று, புராணப்படங்களுக்கு கே.வி.மகாதேவன், மெல்லிசை மன்னர்கள் அளித்த இசைதான். அந்த வகையில் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அற்புதம், “வீரா, தீரா” பாடலை நான்கைந்து முறையாவது யூட்யூபில் பார்த்து கேட்டிருப்பேன்.

 வழக்கமான மணிரத்னத்தின் படங்கள் போல இருட்டிலேயே பாதி படம் நகர்ந்தாலும் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.

 விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஜெயம் ரவி கிஷோர், ஆகியோரின் நடிப்பும் பொருத்தமாக இருந்தது.

 இது படத்தில் உள்ள நல்ல அம்சங்கள்.

 சொதப்பிய விஷயங்களை சொல்ல வேண்டுமல்லவா!

 பொன்னியின் செல்வன் நாவலே வரலாறு கிடையாது எனும் போது நாவலின் விஷயங்களை மாற்றும் அதிகாரம் இயக்குனருக்கு கிடையாதா என்றொரு கேள்வி எழுப்பப்படுகிறது.

 உண்மை, அந்த அதிகாரம் இருக்கிறது என்றே எடுத்துக் கொண்டாலும் நாவலின் மிக அடிப்படையான அம்சங்களை சிதைக்கக் கூடாதல்லவா!

 ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்து கொண்டதாக காண்பிப்பது அந்த பாத்திரத்தின் வீரத்தையே கொச்சைப்படுத்துகிற ஒன்றாகும்.

 நாவலில் பொன்னியின் செல்வனோ, குந்தவையோ ஆதித்த கரிகாலனை ஒரு இடத்தில் கூட சந்திக்க மாட்டார்கள். ஆனால் இங்கே அவசியமே இல்லாமல் ஒரு சந்திப்பு நடக்கிறது. கடம்பூர் மாளிகை சதியையே வந்தியத்தேவன் அறிவது யதேச்சையாக நடக்கும் விஷயமாகும். முதல் பாகத்திலேயே அதை ஆதித்த கரிகாலனே வந்தியத்தேவனிடம் சொல்வது போன்ற சொதப்பல் இது

 மதுராந்தகன், கண்டராதித்தர், செம்பியன்மாதேவிக்கு பிறந்த மகன் அல்ல என்பதற்காகத்தான் அவர் அரசராவதை செம்பியன்மாதேவி கடுமையாக எதிர்ப்பார். உண்மையான மகன் சேந்தன் அமுதனுக்கு கடைசியில் பொன்னியின் செல்வன் மகுடம் சூட்டுவதாக கதை சொல்லும்.

 ஆனால் இங்கேயோ சேந்தன் அமுதன் பாத்திரத்தை டம்மியாக்கி மதுராந்தகனுக்கே மகுடம் சூட்டுகிறார்கள். பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவன் என்ற உண்மை தெரிந்து ஆபத்துதவிகளோடு இணைந்து பிற்காலத்தில் அமரபுஜங்க பாண்டியன் என்ற பெயரில் சோழ நாட்டின் மீதே படை எடுத்து வந்த ஒரு பாத்திரத்தை சோழ அரசனாக்குவதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.

 இதெல்லாம் காண்பித்தால் நேரமாகாதா என்றொரு கேள்வியும் வந்தது.

 நாவலில் வரவே வராத ராஷ்டிரகூட போர், மதுராந்தகனோடு டீலிங், வானதி போலவே தோற்றமளித்த ராஷ்டிரகூட இளவரசி, பாகுபலி டைப்பில் எடுக்கப்பட்ட கடைசி போர் ஆகியவற்றை தவிர்த்திருந்தால் நாவலுக்கு நியாயம் செய்திருக்கலாம்.

 மணிமேகலை என்ற பாத்திரமே காணவில்லை. அரச குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நான் எந்த விதத்தில் குறைந்தவள் என்று கேள்வி கேட்டு நானும் இளவரசன் ஒருவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று முதலில் சொல்லும் பூங்குழலி பிறகு பூக்கட்டும் சேந்தன் அமுதனின் காதலை ஏற்று, அரச குடும்பத்து அரசியல் தேவை இல்லை என்று சொல்லி மணமுடிப்பதாக கல்கி எழுதியிருப்பார். பின்பு அவர் அரசியாவது அவருக்கான நீதி என்றும் எழுதியிருப்பார். ஆனால் படத்திலோ, பூங்குழலியை ஒரு பேராசைக்காரியாகவே காட்டி அந்த பாத்திரத்தின் கம்பீரத்தை அழித்திருப்பார்கள்.

  பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, லால் ஆகியோர் பரிதாபத்துக்கு உரியவர்கள்.

 அப்புறம் வசனம்?

 நாவலில் வந்த வசனங்களை பல இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். மற்றவை ஒன்றும் சுகமில்லை.

 ஆனால் புளிச்ச மாவு ஆஜானின் விஷமம் இருக்கிறது. சோழர்கள் காலத்தில் பாரதம் என்றெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. ஆனால் பாரதம் முழுதும் ஆலயங்கள் எழுப்ப வேண்டும், அதன் மூலம் நம் பெருமையை பரப்ப வேண்டும் என்று ஜெயம் ரவியை பேச வைத்து தன் ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தை உள்ளே நுழைத்து விட்டார்.

 மொத்தத்தில் இந்த படம் பொன்னியின் செல்வன் இல்லை, மணியின் செல்வன்.

 பிகு: முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ஜெயராம் பேசியது மிகவும் வைரலானது. “மணி, பசிக்குது மணி” என்று பிரபு பசியில் துடித்ததை பிரபுவின் குரலில் பேசி ஜெயராம் கலக்கியிருப்பார். அந்த காட்சியில் பிரபு அரசவையில் உட்கார்ந்திருப்பார். ஒரே ஒரு நொடி மட்டுமே அக்காட்சியில் அவர் திரையில் தோன்றுவார். அந்த ஒரு நொடிக்காக அந்த பெரிய உருவத்தை ஒரு நாள் முழுதும் பட்டினி போட்டதெல்லாம் அடுக்கவே அடுக்காது மணிரத்னம்.

Thursday, October 6, 2022

PS 1 – எதிர்பார்ப்பில்லை, ஏமாற்றமில்லை.

 


பொன்னியின் செல்வன் நாவலை குறைந்த பட்சம் பத்து முறையாவது படித்தவன் நான். என் வாசிப்புக்கு ஊக்கம் கொடுத்த முக்கிய நூலாக பொன்னியின் செல்வனையும் முக்கிய எழுத்தாளராக சுஜாதாவையும் சொல்வேன். அந்த அடித்தளத்தில்தான் தொடங்கியது என் வாசிப்பு. பிறகு சீரியஸான விஷயங்கள் தொடர்பாக கவனத்தை திருப்பியது ராகுல சாங்குருத்தியாயனின் “வோல்கா முதல் கங்கை வரை” யும் ஃபிடல் கேஸ்ட்ரோவின் “வரலாறு என்னை விடுவிக்கும்” நூல்களும்.

பொன்னியின் செல்வன் நாவலை பல முறை படித்தவனாக இருந்தும் திரைப்படமாகப் போகிறது என்ற செய்தி அப்படி ஒன்றும் உற்சாகத்தைத் தரவில்லை.

 

அதற்கு முக்கியமான காரணம் இரண்டு.

 

ரோஜா தொடங்கி, பம்பாய், உயிரே என்று எடுத்துக் கொண்ட பிரச்சினைகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆட்சியாளர்களுக்காக சமரசம் செய்து கொண்டு உண்மைகளை திரித்துக் கூறிய மணிரத்னம்.

 

கட்சி ஆபீஸில் சுந்தர் ராமசாமியை கொலை செய்ய லீகல் ஒப்பினியன் வாங்கிக் கொண்ட, கள்ள ஓட்டு போட 60 லட்ச ரூபாய் கொடுப்பது போல வஜனம் எழுதிய பு.மா ஆஜான்.

 

அதனால் படம் சூப்பராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்லை. அதனால் எந்த ஏமாற்றமும் இல்லை.

 

பூமணியின் “வெக்கை” நாவலை “அசுரன்” என்று செழுமைப்படுத்திய வெற்றிமாறன் அல்ல, மணிரத்னம். சிதைக்காமல் இருந்தாலே போதும் என்ற உணர்வுதான் இருந்தது.

 சரி, இப்போது படத்துக்கு வருவோம்.

 நல்ல அம்சங்கள்.

 பெரும்பாலான பாத்திரங்களுக்கு நடிகர், நடிகையர் பொருந்தி இருந்தனர். ஆதித்த கரிகாலனுக்கு விக்ரம், வந்தியத் தேவனுக்கு கார்த்தி, அருண்மொழி வர்மனுக்கு ஜெயம் ரவி, குந்தவைக்கு த்ரிஷா, நந்தினிக்கு ஐஸ்வர்யா ராய், சின்ன பழுவேட்டரையருக்கு பார்த்திபன், மதுராந்தகனுக்கு ரஹ்மான், ஆழ்வார்க்கடியானுக்கு ஜெயராம், திருக்கோயிலூர் மலையமானாக லால், கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவி ஆகியோர் கச்சிதம். இவர்கள் அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்கள். சுந்தர சோழன் பிரகாஷ்ராஜின் தாடியை சவரம் செய்திருக்கலாம். அதே போல பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திற்கு சத்யராஜ் அல்லது நெப்போலியன் பொருந்தியிருப்பார்கள். ஒட்டு மொத்த சோழ நாட்டின் நிகழ்வுகளையும் தன் விரல் நுனியில் வைத்திருக்கும் அமைச்சர் அநிருத்த பிரம்மராயர் ஏனோ இங்கே பஞ்சத்தில் அடிபட்ட தோற்றத்தில் உள்ளார். பூங்குழலி பாத்திரத்திற்கு நயன்தாரா பொருத்தமாக இருந்திருப்பார்.

 பொன்னி நதி பார்க்கனுமே என்ற முதல் பாடலைத் தவிர மற்ற பாடல்களும் பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு பொருத்தமாகவே இருந்தது. அந்த முதல் பாடலின் “ ஈமாரி, எச மாரி” வரிகள் “குச்சி குச்சி ராக்கம்மா” பாடலை ஏனோ நினைவுபடுத்தியது. மற்ற பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு.

 கொஞ்சம் பாகுபலி தாக்கம் இருப்பினும் கலை இயக்கம் சிறப்பு.

 ஒளிப்பதிவு அற்புதம், ஒலிப்பதிவும் கூட, ,மணிரத்னம் படங்களில் வசனம் காதில் விழுவதே ஒரு அதிசயமல்லவோ!

 இப்போது பலவீனங்களை பார்ப்போம்.

 நாவலை மாற்றுவதற்கு இயக்குனருக்கு படைப்புச் சுதந்திரம் உண்டு என்பது உண்மையே. ஆனால் அந்த படைப்புச்சுதந்திரம் இங்கே திரைப்படத்திற்கு நியாயம் செய்துள்ளதா?

 தஞ்சை செல்லும் வழியில் கடம்பூரில் தங்கும் வந்தியத்தேவன் யதேச்சையாகத்தான் சிற்றரசர்களின் சதியை அறிவான். ஆனால் இங்கோ ஆதித்த கரிகாலனுக்கே அந்த சதி தெரிந்து விபரங்களை அறிந்து வருமாறு வந்தியத் தேவனிடம் சொல்கிறான். அதனால் அந்த மாளிகைச் சதி உருவாக்க வேண்டிய சஸ்பென்ஸ்  அடிபட்டு  விட்டது.

 தஞ்சையில் சிற்றரசர்கள் கூட்டம் நடக்கையில் குந்தவை உள்ளே புகுந்து என் சகோதரர்களுக்கு உங்கள் மகள்களை திருமணம் செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்று சொல்லி விட்டு ஏதோ குழப்பத்தை உருவாக்கிய பெருமிதத்தோடு வானதியிடம் பேசியபடி நடந்து போகும் காட்சி,  இறுதிப் போட்டியின் இடைவேளையில் அணியின் வீராங்கனைகளை கண்டபடி திட்டி விட்டு “கொளுத்திப் போட்டிருக்கேன். இன்னும் நாப்பது நிமிஷத்துக்கு புள்ளிங்க தீயா விளையாடும்” என்று விஜய் நயன்தாராவிடம் சொல்லும் பிகில் படக் காட்சியைத்தான் நினைவு படுத்தியது. இரண்டும் மொக்கைக் காட்சிகள்தான். அட்லி சுட்ட ரொட்டியை மணியும் சுட்டு விட்டார்.

 படத்தின் மிகப் பெரிய குறையாக நான் கருதுவது துண்டு துண்டாக தொடர்ச்சியில்லாமல் வரும் காட்சிகள்தான். பூங்குழலி போன்ற பாத்திரங்களுக்கு சரியான அறிமுகம் இல்லை. படத்தின் நீளம் காரணமாக இருக்கலாம். இலங்கையில் நடக்கும் சண்டைக்காட்சியையும் இறுதியாக கப்பலில் நடக்கும் சண்டைக் காட்சியை சுருக்கியிருந்தால் முக்கியமான செய்திகளை சொல்லி இடைவெளிகளை தவிர்த்திருக்கலாம். கருத்திருமன் நாவலில் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் கதாபாத்திரம். இங்கே அந்த பெயர் மட்டும் படகோட்டிக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது.

 அதே போல மணிரத்தினம் பெரும்பாலான காட்சிகளை அவரது வழக்கமான பாணியில் இருட்டிலேயே எடுத்துள்ளார், அவை அவசியமற்றது என்ற போதிலும். ஆஜான் வசனம்- பாராட்டவும் ஏதுமில்லை, திட்டவும் ஏதுமில்லை.

 ஒரு முறை பார்க்கலாம் என்ற அளவிலான படம்தான். அதுவும் நடிக நடிகையர்களுக்காக.

 தமிழனின் பெருமையா? இந்து மன்னனின் பெருமையா என்றெல்லாம் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த அளவு சர்ச்சைக்கான விஷயம் எதுவுமே படத்தில் இல்லை என்பதுதான் யதார்த்தம். நாவலும் அன்றைய மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசவில்லை. திரைப்படமும் பேசவில்லை.

 அது மட்டுமல்ல

 ராஜராஜசோழனின் சிவப்பற்றை வெளிப்படுத்தும் அளவிற்கு காட்சிகள் இல்லை என்ற விமர்சனம் வேறு ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் நாவலைப் படிக்காதவர்கள் என்றே சொல்வேன். அரியணையை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சி மட்டுமே நாவலின் கருப்பொருளே தவிர பக்தியின் மேன்மையை சொல்வது அல்ல. செம்பியன்மாதேவி மற்றுமே சிவ பக்தராக காண்பிக்கப்படுவார். மதுராந்தகனின் பக்தி கூட அன்னையால் திணிக்கப்பட்ட ஒன்றுதான்.

 கதாபாத்திரங்கள் விபூதி அணியவில்லை என்று ஒரு விமர்சனம் வந்தது. அப்படியெல்லாம் இல்லை. அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும் மதச் சின்னங்களோடுதான் இருக்கிறார்கள். பிறகு புதிய சர்ச்சை வந்தது. விக்ரம், ஜெயம் ரவி பிரகாஷ்ராஜ் போன்ற அரச குடும்பத்தினர் சிறிய அளவில் திருநூறு அணிந்திருக்கையில் அவர்களுக்கு எதிராக சதி செய்யும் வில்லன் கதாபாத்திரங்களான சிற்றரசர்கள் பெரிய அளவில் விபூதி பூசியிருப்பது போல வைத்திருப்பதும் உள் நோக்கமுடையது என்ற குற்றச்சாட்டும் வந்தது.

 இந்திய ஜனநாயகத்திற்கு, மக்கள் ஒற்றுமைக்கு, மத நல்லிணக்கத்திற்கு, சாமானிய மக்களின் மேம்பாட்டிற்கு எதிரான வில்லன்களான பாஜக கட்சியினரும் தங்களை பக்தர்களாகத்தானே காண்பித்துக் கொள்கிறார்கள். இந்த உண்மை அவர்களை சுடுகிறது போல!

 

Thursday, September 29, 2022

கல்கி பின்பு இறந்திருக்கலாம்.

 


1954 ல் கல்கி இறந்தார். 1956 ல் மணி ரத்னம் பிறந்தார். அவர் கல்கியின் மறு அவதாரம். அதனால்தான் அவர் பொன்னியின் செல்வன் நாவலை படம் எடுக்கிறார் என்று சொல்கிறது இந்த நிலைத்தகவல்.

 


ஐயா கல்கி அவர்களே, 1954 ல் இறப்பதற்கு பதிலாக மணி ரத்னம் பிறந்த பின் இறந்திருக்கலாமே! இந்த மறு அவதாரக் கொடுமைகளைக் கேட்காமல் நாங்கள் தப்பித்திருப்போமே!.

 இப்போதே இப்படி . . .

 நாளை பொன்னியின் செல்வன் வெளியான பின்பு என்ன மாதிரியான இம்சைகளை பார்க்கபோகிறோமோ . . .

Friday, August 27, 2021

பொன்னியின் செல்வன் – வந்துட்டார்யா வடிவேலு

 


மணிரத்தினம் எடுத்துக் கொண்டிருக்கிற பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பவர்களின் தோற்றங்களை வெளியிட்டார்கள். அப்போதே ஒருவர் சொன்னார், அத்தனை பாத்திரங்களிலும் வடிவேலுவை வைத்து கூடிய சீக்கிரம் படம் வரும் பாருங்கள் என்று சொன்னார்.

 அது போலவே வந்துட்டாருய்யா வடிவேலு . . .

 அருண்மொழிவர்மன், ஆதித்ய கரிகாலன் வேடத்திற்கு மட்டுமல்ல, குந்தவை, நந்தினி கதாபாத்திரங்களுக்குக் கூட வடிவேலு . . .

 

எஞ்சாய் . . . .











Sunday, August 8, 2021

மணிரத்னத்தை ஆதரிக்க வைப்பார்களோ?



ஒரு சார்புத் தன்மையோடு மட்டும் எடுத்த ரோஜா படம் பார்த்த போது மணிரத்தினத்தின் மீது ஒரு எரிச்சல் வந்தது. பம்பாய் படத்தில் நடுநிலை என்ற பெயரில் செய்து கொண்டிருந்த சில சமரசங்கள் அந்த எரிச்சலை அதிகரிக்க வைத்ததால் அதற்குப் பிறகு மணிரத்தினத்தின் படங்களை பார்ப்பதில்லை.

 பொன்னியின் செல்வன் படத்தை அவர் இயக்கப் போகிறார் என்ற சேய்தி வந்த போது உருவான அச்சம் அதற்கு புளிச்ச மாவு ஆஜான் வசனம் எழுதப் போகிறார் என்ற செய்தி அந்த அச்சத்தை பல மடங்கு அதிகரித்து விட்டது. வாசிப்பின் துவக்க காலத்தில் மிகவும் பிடித்த, பல முறை படித்த நூலாக “பொன்னியின் செல்வன்” இருந்த போதிலும் மணிரத்தினம்-ஜெயமோகன் காம்போவிற்காகவே அத்திரைப்படத்தை தொலைக்காட்சியில் கூட பார்க்கக்கூடாது என்று முடிவு செய்திருந்தேன்.

 ஆனால் மத்யமர்  குழுவில் ஒரு பதிவையும் அதற்கான சில பின்னூட்டங்களை பார்த்த போது “நம்மையும் இவர்கள் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வைத்து விடுவார்கள் போலிருக்கே!” என்று தோன்றியது.













 அப்படி விஷம் கக்க என்ன காரணம் என்று பார்த்தால் இது வரை வெளியான ஸ்டில்களில் இந்து மதக்குறியீடுகள் இல்லை என்று எல்லோரும் புலம்பியுள்ளார்கள். ஒரு புலிப்படமும் வாளும் சேர்ந்த ஒரு போஸ்டர் தவிர முக்கிய பாத்திரங்கள் அடங்கிய இன்னொரு போஸ்டர். விகடன் ஒரு ஓவியம்  போட்டிருந்தது. இவை எவற்றிலும் காலி நெற்றி இல்லவே இல்லை. பிறகு என்ன பிரச்சினை? ராஜராஜன் முகத்தில் திருநூறு இல்லையாம்! கல்கி  எழுதிய பொன்னியின் செல்வனுக்கு மணியம் படம் வரைந்த போதே விபூதியெல்லாம் இல்லை. அது சிவாஜி நடித்த ராஜராஜ சோழன் படத்தில் போட்டு விட்டிருந்தார்கள். ஆனால் இந்த ஸ்டில்களில் எல்லாம் விபூதி நன்றாகவே தெரிகிறது.

 




பதிவு எழுதிய புண்ணியவானும் சரி, பின்னூட்டம் போட்ட புத்திசாலிகளும் சரி, எதையும் பார்க்காமலே எழுதியுள்ளார்கள் என்பது மட்டும் தெரிகிறது. அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சங்கிகள் என்பவர்கள் அடிமுட்டாள்களும் அயோக்கியர்களுமானவர்கள்.

 

நாம் தமிழர் கட்சியினர் ஜாதி சான்றிதழ் வழங்கும் குத்தகை எடுத்துள்ளார்கள். அது போல மதச் சான்றிதழ் வழங்கும் குத்தகையை சங்கிகள் எடுத்துள்ளார்கள். இவர்களுக்கு பிடிக்காதவர்களை இவர்களே மதம் மாற்றி விடுவார்கள்.

 

பம்பாய் படத்தில் “காவி சார் நிலை” எடுத்ததுதான் மணிரத்தினத்தை பிடிக்காமல் போனதற்கான காரணம். ஆனால் காவிகளே இப்போது அவருக்கு எதிராக விஷத்தைக் கக்குகிறார்கள்.

 

ஏன்?

 

சில மாதங்கள் முன்பாக கருத்துரிமையை நசுக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து  சில படைப்பாளிகள் கையெழுத்திட்டு மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதிலே கையெழுத்திட்டவர்களில் மணிரத்தினமும் ஒருவர்.

 

மோடியை கண்டிக்கலாமா?

 

மோடியை கண்டிப்பவர்கள் தேச விரோதிகள், ஜிஹாதிகள், மிஷனரிகள், அர்பன் நக்ஸலைட்டுகள்.

 

இதிலே மணிரத்தினத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முத்திரை மிஷனரி. அவ்வளவுதான்.

 

இப்போதே இப்படி! இவர்கள் மொண்டு வந்துள்ள மசோதாவை நிறைவேற்றினால் நிலைமை இன்னும் மோசமாகும்.

 

முன்னொரு காலத்து “நியூஸ் ரீல்” போலத்தான் திரைப்படமே இருக்கும்.

 

Sunday, June 8, 2014

ராஜீவ் காந்தி, மருத்துவ மனை மற்றும் பொன்னியின் செல்வன்

தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே என்று உங்களுக்கு தோன்றலாம். நேற்று வலைச்சரத்தில் திரு சொக்கன் சுப்ரமணியன் "பொன்னியின் செல்வன்" நாவலை கருப்பொருளாக கையாண்டிருந்தார். அதைப் படித்தவுடன்  பொன்னியின் செல்வனுடனான என்னுடைய ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தூண்டியது.

இந்திரா காந்தி கொல்லப்பட்டதும் பிரதமரான ராஜீவ் காந்தி கொஞ்ச நாளிலேயே மக்களவையைக் கலைத்து விட்டு தேர்தலை கொண்டு வந்தார்.தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் நெய்வேலி வந்தார். அந்த சமயம் கல்லூரி செமஸ்டர் விடுமுறை என்பதால் நான் நெய்வேலியில் இருந்தேன். 

பிரச்சாரக் கூட்டம் நெய்வேலி மந்தாரக் குப்பத்திற்கு வெளியே ஒரு எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பொட்டல் காட்டில் மதிய வேளையில் நடந்தது. சைக்கிளில்  போகிறேன், போகிறேன், போய்க் கொண்டே இருக்கிறேன். ஆனால் மைதானம் வரவில்லை. வானத்தில் ஹெலிகாப்டர் தெரிந்ததும் இன்னும் வேகம் வேகமாக மிதித்து அங்கே போனேன். மைதானம் வந்ததும் அப்படியே சுருண்டு விட்டேன். ஆனால் வந்தது செக்யூரிட்டி ஹெலிகாப்டர். ஒரு மணி நேரம் கழித்து ராஜீவ்காந்தி வந்தார், பேசினார், போய் விட்டார். மீண்டும் சைக்கிளை மிதித்து வீடு வந்து படுத்தவன் அன்று முழுதும் சாப்பிடக்கூட எழவில்லை. காய்ச்சல் அடிக்கத்தொடங்கி விட்டது. 

லோக்கலில் இருந்த மருத்துவரிடம் இரண்டு நாள் போனாலும் காய்ச்சல் குறையவில்லை. டைபாய்டாக இருக்கலாம் ஆகவே என்.எல்.சி பொது மருத்துவமனைக்கு சென்று விடுங்கள் என்று அவர் கூறி விட்டார். அங்கே சென்றதும் உடனடியாக அட்மிட் ஆக சொல்லி விட்டார்கள். 

இன் பேஷண்ட் ஆன மறு நாள் குணமாகி விட்டது. இரண்டு நாட்கள் அப்சர்வேஷனில் இருந்தால் நல்லது என்று மருத்துவர் ரங்கபாஷ்யம் சொல்ல சும்மா படுத்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் வீட்டில் இருந்த பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் கொண்டு வரச் சொன்னேன்.கல்கியில் தொடராக வந்ததை கிழித்து என் அப்பா பைண்ட் செய்து  வைத்த நூல்கள் அவை.

நான் இருந்தது சி ஸ்பெஷல் வார்ட். இரண்டு பெட்டுகள் உண்டு. இந்த இருவரைப் பார்த்துக் கொள்ள ஒரு நர்ஸ் உண்டு. நான் பொன்னியின் செல்வன் முதல் பாகம் படித்து முடித்தவுடன் அந்த நர்ஸ் அதை படிக்கத் தொடங்கினார்கள். ரொம்ப நாளா படிக்கனும்னு நினைச்சது இப்பதான் சான்ஸ் கிடைச்சது என்று அவர்களுக்கு ரொம்பவுமே சந்தோஷம். நான் படித்து முடித்த பாகங்களை வீட்டிற்கு எடுத்துப் போய் விடுவார்கள்.

இரண்டு நாள் அப்சர்வேஷன் மூன்று நாள் அப்சர்வேஷனாக மாறியது. நானும் பொன்னியின் செல்வன் ஐந்து பாகஙகளும் படித்து முடித்து விட்டேன்.  ஆனால் சிஸ்டரோ நான்காம் பாகத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்தார்கள். அன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்வது பற்றி பேசும்போதே அவர்கள் அவசரம் அவசரமாக மறுத்தார்கள். டாக்டர் சாலிட் ஃபுட் சாப்பிட்டு என்ன ரியாக்சன் என்று பார்த்து விட்டு டிஸ்சார்ஜ் செய்யலாமே எனச் சொல்ல அவரும் ஒகே என்று போய் விட்டார்.

நான் பரிதாபமாக  சிஸ்டரைப் பார்க்க "ஏய் நீ போய்ட்டா அப்புறம் நான் ஐந்தாவது பாகத்தை எப்படி முடிக்கிறது?" என்று கேட்டாரே ஒரு கேள்வி. நீங்க நிதானமா படியுங்க, நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கெஞ்சி கூத்தாடி மறுநாள் டிஸ்சார்ஜ் ஆனேன்.

வாசிப்பு ருசி உள்ள யாராலும் பொன்னியின் செல்வன் படிக்காமல் இருக்க முடியாது. எனக்கு நினைவு தெரிந்து ஒரு எட்டு முறையாவது முழுமையாக படித்திருப்பேன். தொடர்கதையாக வந்து படித்தது கணக்கில் வராது. 

இப்போது காலையில் மீண்டும் ஐந்து பாகங்களையும் எடுத்து வைத்து விட்டேன். கடந்தாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் விகடன் வெளியீடு மொத்தமாக வாங்கியது.  வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான, அருண்மொழி, குந்தவை, நந்தினி, பூங்குழலி, சேந்தன் அமுதன், செம்பியன் மாதேவி, பழுவேட்டரையர்கள், அநிருத்த பிரம்மராயர், ரவிதாசன், இடும்பன் காரி ஆகியோரோடுஅடுத்த பயணம் தொடங்குகிறது

அந்த புத்தகத்தில் உள்ள வண்ணப்படங்கள் உங்களுக்காக கீழே.