Friday, November 22, 2019

கொரிய திரைப்பட விழா பாத்துடுங்க . . .


இன்றிலிருந்து சென்னையில் மூன்று நாட்கள் கொரிய திரைப்பட விழாவாம்.

வாய்ப்புள்ளவர்கள் அவசியம் பார்த்து விடுங்கள்.

எந்த படத்திலிருந்து எந்த காட்சிகளை நம் தமிழ்ப்படங்களில் சுட்டுள்ளார்கள் 

என்பது மட்டுமல்லாமல்

இனி சுட்டாலும் தெரிந்து கொள்ள

அரிய வாய்ப்பு.

வாய்ப்புள்ளோர் நழுவ விடாதீர் . . .

Thursday, November 21, 2019

மோடி குடும்ப துட்டு 42,336 கோடி ரூபாய்


ஸ்பெக்ட்ரம்  ஏலம் எடுத்த தொகையை கட்டுவதற்கு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள்  இரண்டாண்டு கால அவகாசம் கொடுத்துள்ளது மத்தியரசு. 

அதாவது இன்று கட்ட வேண்டிய தொகையை இரண்டாண்டுகள் கழித்து கட்டிக் கொள்ளலாம். அதுவும் உடனடியாக அல்ல. அடுத்து ஒரு ஐந்து ஆண்டுகளில் சமமாக பிரித்துக் கட்டிக் கொள்ளலாம்.

இந்த முக்கிய முடிவை நேற்று மோடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டம் எடுத்துள்ளது.

நிதிப்பற்றாக்குறை காரணமாக பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கண்டய்ணர் கார்ப்பரேஷன் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது மட்டுமல்லாமல் நிர்வாகப் பொறுப்பையும் கை மாற்றி விடுவது என்றும் அதே கேபினட் கூட்டம் முடிவெடுத்துள்ளது.

ஒரு புறம் நிதிப்பற்றாக்குறை என்று சொல்லி பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதும் அதே நேரம் அரசுக்கு தனியார் நிறுவனங்கள் அளிக்க வேண்டிய 42,336 கோடி ரூபாய்க்கு கால அவகாசம் அளிப்பதும் (நாளை ரகசியமாக தள்ளுபடி கூட செய்து விடுவார்கள்) எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

இதை ஊழல் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?

அரசுக்கு வர வேண்டிய பணத்திற்கு கால அவகாசம் கொடுக்க அது என்ன மோடி குடும்ப சொத்தா?


Wednesday, November 20, 2019

காதலுடன் துருக்கிக்கு பாகிஸ்தான் வழியே


ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபர் திங்கட்கிழமையன்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துருக்கியில் உள்ள தனது காதலியை சந்திக்க பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக துருக்கி செய்யப் பயணப்பட்ட போது தான் பாகிஸ்தானில் கைதானதாக அவர் சொன்னதாக சொல்லப்படுகிறது. அவரிடம் பாஸ்போர்ட்டோ அல்லது வேறு ஆவணங்களோ எதுவும் இல்லை. 

2017 ஏப்ரல் முதலே அவர் காணவில்லை என்று அவருடைய பெற்றோர் சொல்லி உள்ளார்கள்.

இரண்டரை வருடங்களாக அவர் எங்கே இருந்தார்?

நடந்து போவதாக இருந்தால் கூட இத்தனை நாட்களில் இரண்டு முறை துருக்கி போய் விட்டு வந்திருக்கலாமே?

பாஸ்போர்ட், விசாவோடு நேரடியாக துருக்கிக்கு போக முடியும் என்பது ஒரு மென்பொருள் பொறியாளருக்கு தெரியாதா?

இதில் என்னமோ மர்மம் இருக்கிறது. 

அதை மறைக்க காதல் என்ற சாயம் பூசப்படுகிறதோ?

பிரசாந்திற்கும் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பியவர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்!
Tuesday, November 19, 2019

எம்.பி க்கு ஜிலேபி மட்டும் போதாதாம் . .

மாசுப் பிரச்சினையால் புது டெல்லி மக்கள் சொல்ல முடியா சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

இது பற்றி விவாதிக்க கடந்த வெள்ளிக்கிழமையன்று சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. புது டெல்லி அரசு, புது டெல்லியைச் சேர்ந்த எம்.பி க்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஒரு பாஜக எம்.பி. அவரும் கலந்து கொள்ள வேண்டும்.  ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.

முக்கியமான பிரச்சினை குறித்த கூட்டத்தில் கூட கலந்து கொள்ள முடியாமல் அப்படி என்ன தலை போகிற வேலையைச் செய்து கொண்டிருந்தார்?

அவருடைய சக முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் அந்த ரகசியத்தை ட்விட்டரில் போட்டோவுடன்  போட்டு உடைத்து விட்டார்.

“இந்தூரில் நாங்கள் சூடான ஜிலேபியை ருசித்துக் கொண்டிருக்கிறோம்”

ஏதோ கிரிக்கெட் பந்தயத்திற்கு தொலைக்காட்சி வர்ணனை கொடுக்க போய்விட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீர்.

தொலைக்காட்சியில் வர்ணனை செய்தால் துட்டு கிடைக்கும். மாசுப்பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டால்  என்ன கிடைக்கும். அந்த கூட்டத்தில் கூட ஜிலேபி, சமோசா எல்லாம் கூட கிடைக்கலாம். ஆனால் வர்ணனை செய்வதற்கு கிடைக்கும் துட்டு கிடைக்குமா?

பிரச்சாரத்தின் போதே தன்னைப் போல தோற்றமளித்தவரை திறந்த ஜீப்பில் நிற்க வைத்து தான் ஓய்வெடுத்துக் கொண்ட சொகுசுப் பேர்வழிக்கு ஓட்டு போட்டது தவறு என்று இனியாவது அத்தொகுதி மக்கள் உணரட்டும்.

Monday, November 18, 2019

விடியும் முன்பே

கதிரவன் தன் பயணத்தை துவங்கும் முன்பே அதிகாலையில் இன்று எடுத்த படம்


அச்சம் ஏன் மோடி?நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. அதை முன்னிட்டு நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னாள் காஷ்மீர் முதல்வரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான ஃபாரூக் அப்துல்லா அவர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வழிவகை செய்ய அவரை வீட்டுக் காவலிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த மோடி அரசு அதை நிராகரித்து விட்டது.

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியிருந்தால் ஃபாரூக்கை விடுதலை செய்திருக்கலாமே?

அச்சம் ஏன் மோடி?

Sunday, November 17, 2019

நேருவே காரணம். நிர்மலா அல்ல . . .


என்னமோ நேருவிற்கு தொலை நோக்கு பார்வை இருக்கு, அதனால்தான் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினதா பீற்றிக் கொள்கிறீர்களே, 

நிஜமாகவே அவருக்கு தொலை நோக்கு பார்வை இருந்திருந்தால்,  நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன், மோடி போன்றவர்கள் ஆட்சிக்கு வருவார்கள், அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை விற்பார்கள் என்று தெரிந்திருக்குமல்லவா? 

இன்று பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவதற்கு அவற்றை உருவாக்கிய நேருதான் காரணமே தவிர, அதை விற்கிற மோடியோ, நிர்மலாவோ காரணமல்ல. 

அவற்றை நேரு உருவாக்காமல் இருந்திருந்தால் மோடியாலும் நிர்மலாவாலும் அவற்றை விற்க இயலுமா? தேசத்தின் சொத்துக்களை விற்கிறார்கள் என்ற அவப்பெயரும் அவர்களுக்கு வந்திருக்காதே!

பாவங்க அவங்க!