Saturday, July 30, 2016

பேசப்படாத “லைபாக்லை ஆண்ட்டி”வட கிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் போட்டோ எடுத்துக் கொண்டு வருவார்கள். ஆனால் எங்கள் மதுரைக் கோட்டத் தோழரும் முன்னணி எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ், அம்மாநிலங்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து அவற்றை தமிழாக்கமும் செய்துள்ளார். அதுதான் லைபாக்லை ஆண்ட்டி.

வட கிழக்கு மாநில மக்களின் பிரச்சினைகளை, அவர்கள் மனதில் உருவான அவ நம்பிக்கைகளை, பதட்டம் நிறைந்த அவர்களின் வாழ்க்கையை இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ரத்தமும் சதையுமாக கண் முன்னே நிறுத்துகிறது. “அதிகமாக பேசப் படாத நூல்” என்று தோழர் ச.சுப்பாராவ், தனது ஆதங்கத்தை முக நூலில் வெளிப்படுத்தியிருந்தார். அது நியாயமான ஆதங்கமே. நமக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத பகுதியின் மக்களைப் பற்றிய இந்நூல் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. அது நடக்காதது வருத்தமே. தோழர் ச.சுப்பாராவிற்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

பதினான்கு சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பிலிருந்து ஆறு கதைகள் பற்றி மட்டுமே நான் அறிமுகம் செய்துள்ளேன். நீங்கள் வாங்கி முழுமையாக படித்தால் மட்டுமே உங்களால் வாசிப்பனுபவத்தை பெற முடியும். நூல்                         லைபாக்லை ஆண்ட்டி
ஆசிரியர்                    ச.சுப்பாராவ்
வெளியீடு                   பாரதி புத்தகாலயம்
                              சென்னை 18
விலை                      ரூபாய் 90.00

“நாங்க்தூம்பாம் குஞ்சமோகன்சிங்” என்ற சாகித்ய அகாடெமி விருது பெற்ற இளம் எழுத்தாளரால் மணிப்புரி மொழியில் எழுதப்பட்ட “பிறந்த மண்” என்ற சிறுகதை தாங்கள் பிறந்த மண்ணிலிருந்து அரசியல் காரணமாக புலம் பெயர வேண்டியுள்ள ஒரு குடும்பத்தின் வலியை அழுத்தமாக சொல்கிறது.

லாரிகளில் அடுக்கி வைக்கப்பட்ட தானிய மூட்டைகளிலிருந்து  குத்தூசி மூலம் ஓட்டை போட்டு அதில் கிடைப்பதையே ஜீவனமாக கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஒரு சிறுவன் மூட்டைகள் சரிகையில் சிக்கி நசுங்கி இறந்து போகிறான். அந்த துயரத்திற்குப் பிறகும் அவனது தாய் வாழ்வதற்காக சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவல நிலையை  “பாபேந்திர நலீத் சைக்கியா” வின் அஸ்ஸாமியக் கதையான “மற்றொரு மோதி” சித்தரிக்கிறது.

விவசாயக்கடன் வாங்குவதற்காக படுகிற அவஸ்தையை, அது கடைசி வரை கைகூடாத கையறு நிலையை, அரசு அலுவலகங்களில் நடைபெறும் கூத்துக்களை மேகாலய மாநில எழுத்தாளர் “திரு டா என் னின் இனிய பயணம்” சொல்கிறது. மேகாலய மக்களின் மொழியான காசி மொழிக்கு வரி வடிவம் கிடையாது என்பது கூடுதல் செய்தி.

வங்காள மக்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் இடையே சில விஷமிகள் தூண்டிய கலவரத்தால் அருகாமை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இடையே உருவாகும் பகைமையும் அது சொந்த பாட்டி, பேரனாக வாழ்பவர்களை பாதிக்கவில்லை என்பதையும் அந்த பந்தம் இறப்பில் கொண்டு போய் முடிகிறது என்பதை தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட திரிபுரா மாநில அமைச்சர் “பிமன் சின்ஹா” எழுதிய “பாசனின் பாட்டி” கண்ணீர் மல்க பதிவு செய்கிறது.

ஒரே அறையில் வசிக்கும் இரண்டு தொழிலாளர்கள், ஒருவர் மற்றவரை கொன்று விடுவாரோ என்ற அச்சத்தை உருவாக்கிய நாகா- குக்கி இன மோதலின் பின்னணியையும் அடுத்தவர் மீதான அவ நம்பிக்கையோடே வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சோகத்தையும் “கெய்ஷம் பிரியோகுமார்”  எழுதிய “ஓர் இரவு” மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்பை அளித்த “லைபாக்லை ஆண்ட்டி” போராட்டத்தின் மீது நம்பிக்கையுள்ள மனுஷியைப் பற்றியது.  “நாங்க்தூம்பாம் குஞ்சமோகன்சிங்” எழுதிய சிறுகதையில் வரும் லைபாக்லை ஆண்ட்டி அரசுக்கு எதிரான போராட்டத்தில் தனது மகன் கைதானதை பெருமிதமாகக் கருதுவார். சாதாரண மக்களை அரசு எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதையும் அவர்களின் போராட்டத்தை எப்படி நசுக்குகிறது என்பதையும் ஒரு மருத்துவர் வாயிலாக, மருத்துவமனை பின்னணியில் சொல்கிறது இக்கதை. சிகிச்சையில் இருக்கும் லைபாக்லை ஆண்டியை கைது செய்து ஜீப்பில் ஏற்றுகையில் அங்கே சூழும் மக்கள் எழுப்புகிற முழக்கத்தை நாமும் எழுப்புகிற அளவிற்கு உணர்ச்சி வசப்படுவோம்.

இன்குலாப் ஜிந்தாபாத் . . . .   இன்குலாப் ஜிந்தாபாத் . . . . 

எச்சரிக்கை. தாக்குதல் தொடங்குகிறது

இந்த வாரம் எனக்கு பயண வாரம்.  சனிக்கிழமை கடலூர், திங்கள் நெய்வேலி, புதன் திருக்கோயிலூர், வெள்ளி விழுப்புரம், நேற்று செய்யாறு, நேற்றே மீண்டும் புறப்பட்டு இப்போது பாலக்காடு பக்கத்தில் என்று  என்று பயணங்களில்தான் பெரும்பாலான நேரம் கழிந்தது,

பயண வாரம் படிப்பு வாரமாகவும் மாறி விட்டதால் சமீபத்தில் படித்த நூல்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொண்டே இருக்கப் போகிறேன். 

இதோ தாக்குதல் தொடங்கி விட்டதுவாழ்க்கை வரலாற்றை கச்சிதமாக எழுதிட . . . .


 
நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி எழுதப்பட்ட ஒரு வாழ்க்கை வரலாறு நூல் மிகவும் ஏமாற்றமளித்தது என்று சில மாதங்கள் முன்பு எழுதியிருந்தேன்.

அதற்கு மாறாக இந்த வாரம் படித்த ஒரு வாழ்க்கை வரலாறு நூல், மனதுக்கு நிறைவாகவும் ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை எப்படி கச்சிதமாக எழுத வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் இருந்தது.

நூல்                       :  செகாவ் வாழ்கிறார்
ஆசிரியர்                      எஸ்.ராமகிருஷ்ணன்,
வெளியீடு                     உயிர்மை பதிப்பகம்
                              சென்னை – 600018
விலை                       ரூபாய் 150.00

உலகப் புகழ் பெற்ற சிறுகதைப் படைப்பாளி ஆன்டன் செகாவ் பற்றி திரு எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்.

நாற்பத்தி நான்கே ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் படைப்புலகின் தாரகையாக இன்னும் மின்னுகிற ஆன்டன் செகாவ் பற்றி பதிமூன்று அத்தியாயங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

செகாவின் துவக்க கால வாழ்க்கை, அவரது ஆரம்ப கால பணிகள், மருத்துவராக அவர் செய்த சேவை, தண்டனைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட ஷகல் தீவிற்குச் சென்ற அனுபவம், அவரது நாடக அனுபவங்கள், செகாவின் தனிப்பட்ட வாழ்க்கை, வாழ்க்கையின் பலவீனங்கள். டால்ஸ்டாய் போன்ற மூத்த எழுத்தாளர்களுடனான பரிச்சயம், அவர்கள் பற்றிய செகாவின் கருத்துக்கள், செகாவ் பற்றி அவர் காலத்திய, அவருக்கு இளைய எழுத்தாளர்களின் கருத்துக்கள், செகாவின் முக்கிய சிறுகதைகளின் சுருக்கம், செகாவ் மீது பிற எழுத்தாளர்கள் முன் வைக்கும் விமர்சனம்.  செகாவின் கடைசி நாட்கள், அவருக்கான இறுதி அஞ்சலி என்று கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது.

பெரிய வார்த்தை ஜோடனைகள் இல்லாமல் செகாவ் போலவே அவரது வாழ்க்கை வரலாற்றையும் எளிமையாக எழுதியுள்ளார் செகாவ். அவரின் சிறப்பான குணாம்சங்களை விவரிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், பலவீனங்களையும் எழுதியுள்ளது நூலின் மீது நம்பகத்தன்மை உருவாகிறது.

செகாவோடு சேர்ந்து பயணித்த, அவரது படைப்புக்களை வாசித்த உணர்வு ஏற்படுகிறது. ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் இந்த நூல் அமைந்துள்ளது.

மழை வந்த நொடிகளுக்கு முன்புஒரு கையில் தேநீர்க் குவளை,
மறு கையில் காமெராவாய் 
உருவெடுத்த அலைபேசி.

குளிர் காற்றும்
கரு மேகங்களும்
சின்னதாய் தோன்றிய
ஓளிக் கீற்றும் 
கண்ணிற்கும் நெஞ்சிற்கும்
இதமளித்த அந்த நொடிகள்.

மழை வந்த மறு கணம் 
அடைக்கலம் தேடி
ஓடி ஒதுங்கியதில் 
மாறிப் போனதே!

கடந்த வருட 
பெரு மழை தந்த
அச்சத்தின் மிச்சமோ!

பின் குறிப்பு : இன்று செய்யாறு சென்று திரும்பி வருகையில் எடுத்த புகைப்படங்கள். புகைப்படங்கள் எடுத்த அடுத்த நிமிடமே பெருமழை பிடித்துக் கொண்டது. 

என்னவொரு உற்சாகம்! என்னவொரு நம்பிக்கை!!
இந்த காணொளியை அவசியம் முழுமையாக பாருங்கள். எவ்வளவு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ததும்புகிறது பாருங்கள்.

அத்தனை பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

நெஞ்சார்ந்த நன்றிகள், உங்களின் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் எனக்கு உள்ளேயும் கடத்தி விட்டீர்கள்.Friday, July 29, 2016

பசுக்கள் சாகட்டும் என்ற விவேகானந்தர்

பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் காவிக் காலிகள் செய்யும் அராஜகம், அயோக்கியத்தனம் ஆகியவற்றைப் பார்க்கையில் முன்பு படித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. 

"வங்காளம் கடுமையான பஞ்சத்தில் சிக்கித் தவித்த காலம் அது. வறட்சி ஆயிரக்கணக்கான மக்களை பலியாக்கிக் கொண்டிருந்தது. எங்கும் துயரம் என்ற நிலையில் கோமாதா பாதுகாப்பு சமிதி என்ற அமைப்பினர் விவேகானந்தரைச் சந்தித்து தாங்கள் பஞ்சத்தில் பசு மாடுகள் இறந்து போகாமல் பாதுகாத்து பராமரிக்கும் பணியை செய்வதாகவும் அந்த புனிதக் கடமைக்கு விவேகானந்தர் நிதியளிக்க வேண்டும் என்று கேட்கின்றனர். 

பஞ்சத்தில் இறந்து போகும் மனிதர்களை பாதுகாக்க ஏதேனும் தொண்டு செய்கிறீர்களா என்று விவேகானந்தர் வினவ, மனிதர்கள் தங்கள் பூர்வ ஜென்ம பயன் காரணமாகவே இறந்து போகிறார்கள். ஆகவே அவர்களைப் பற்றி கவலைப்பட எதுவுமில்லை. கடவுளின் வடிவான பசுக்களை பாதுகாப்பதே முக்கியம் என்று அவர்கள் சொன்னார்கள். 

உடனே கோபமுற்ற விவேகானந்தர், "மனிதர்கள் இறப்பது பூர்வ ஜென்ம பயன் என்றால் பசுக்களும் தங்களின் பூர்வ ஜென்ம பயன் காரணமாக சாகட்டும்" என்று சொல்லி அவர்களை துரத்தி விட்டார். 

 பசு அரசியல் நடத்தும் பாழாய் போனவர்களுக்கு அது சமர்ப்பணம்.

 

கனவிலும் மிரட்டுதா "கபாலி"?

கபாலி படம் தினமணி நாளிதழை கனவில் கூட மிரட்டிக் கொண்டு இருக்கிறது போல.

அதனால்தான் இப்படி ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டு தனது வக்கிரத்தை மேலும் தணித்துக் கொண்டிருக்கிறது.இதோடு நிற்காமல் இன்னும் என்னவெல்லாம் இழிவு செய்யப் போகிறதோ?

வைரமுத்துவிற்கு நாலாயிரம் ஓசி டிக்கெட் கொடுத்த கலைப்புலி தாணு தினமணிக்கு ஒரு நாற்பது ஓசி டிக்கெட்டாவது கொடுத்து வாயை அடைத்திருக்கலாம்.

எலும்பைக் கடிக்கையில் வேறு சிந்தனை தோன்றாது அல்லவா?

பின் குறிப்பு : நான் இன்னும் கபாலி பார்க்கவில்லை. எனக்கு ஓசி டிக்கெட்டும் கிடைக்காது. ஆனாலும் இவர்கள் செய்கிற கூத்தால் மூன்றாவது முறையாக கபாலி பற்றிய பதிவை  எழுத வேண்டியதாகி விட்டது. என்ன செய்ய வேகநரி சார்.

Thursday, July 28, 2016

போராளிகள் யாரெல்லாம் இப்போ வாரீங்க?தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் பழங்குடி இனப்பெண்கள் மீது மீண்டும் ஒரு வாச்சாத்தி பாணி தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழக அரசு வழக்கம் போல பிரச்சினையை மூடி மறைக்கவும் குற்றவாளிகளை பாதுகாக்கவுமே முயல்கிறது. கீழேயுள்ள தீக்கதிர் பத்திரிக்கைச் செய்தி உண்மை விபரங்களை எடுத்து வைக்கிறது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. பல்வேறு முற்போக்கு அமைப்புக்களும் போராட்டத்தில் இணைந்து கொள்கின்றன. எங்களது மதுரைக் கோட்டச் சங்கம் வழக்குச் செலவுகளுக்காக ரூபாய் இருபதாயிரம் அளித்துள்ளது.

நடந்திருப்பது மிகப் பெரிய அயோக்கியத்தனம். வனத்தை காக்க வேண்டியவர்கள், பெண்கள் மீது அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர்.

சுவாதி கொலையுண்ட சமயத்தில் கொலையாளியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழகத்தின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த போதே

“சுவாதிக்காக மாதர் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று போராளிகள் வேடம் பூண்ட பலரும் பொங்கி எழுந்தார்கள்.

அந்த அத்தனை போராளிகளையும் கேட்கிறேன். பாதிக்கப்பட்ட பழங்குடி இனப் பெண்களுக்காக நீங்கள் யாரெல்லாம் கண்ணீர் சிந்துகிறீர்கள்? யாரெல்லாம் போராட்டக் களத்திற்கு வரப் போகிறீர்கள்? இல்லை குறைந்த பட்சம் முக நூலிலாவது பொங்கி எழப் போகிறீர்கள்?

இவை எதையும் செய்ய தயாராக இல்லையென்றால்…..

நான் என்ன சொல்வது?

உங்களுக்கே தெரியும், நீங்கள் ஒரு போலி என்று.

இப்போது செய்தியைப் படியுங்கள்.


நன்றி தீக்கதிர் 28.07.2016


பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்த உ.வாசுகி, என்.அமிர்தம், சு.வெண்மணி, கே.ராஜப்பன், டி.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள்.

பழங்குடிப் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் வனத்துறையினரை கைது செய்க! தேனியில் உ.வாசுகி பேட்டி


தேனி, ஜூலை 27 -
சுருளி மலைப்பகுதிகளில் மலைப்பொருட்கள் சேகரித்து வந்த பழங்குடி பெண்களிடம் சோதனை என்ற பெயரில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும். காவல்துறையினர் இந்த விசயத்தில் மெத்தனம் காட்டக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவருமான உ.வாசுகி வலியுறுத்தியுள்ளார்.

வனத்துறையினரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட பழங்குடிப் பெண்களை கடமலைக்குண்டில் புதனன்று நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் உ.வாசுகி கூறியதாவது:வன உரிமை சட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு வனப்பகுதிகளில் சென்று மலைப்பொருட்களை சேகரித்து வர அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்குட்பட்ட மலைப்பகுதிகளில் தேன், நன்னாரி வேர், கிழங்கு வகைகளை சேகரித்துவிட்டு திரும்பும் போது வனத்துறையினர் சாலையில் பழங்குடி பெண்களையும், ஆண்களையும் நிறுத்தி சோதனை போட்டுள்ளனர். அப்போது பெண்களின் புடவையை உருவியும், ஆண்களின் உள்ளாடை தவிர மற்றவற்றை களைத்தும் நிறுத்தியுள்ளனர். 

வேறு ஏதும் ஒளித்துவைத்துள்ளீர்களா எனக் கூறி பெண்களை தொடக்கூடாத இடங்களில் கையை விட்டு தேடியுள்ளனர். 13 வயதுசிறுமியின் கால் சட்டையை உருவி வக்கிரமான செயலில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கைச்செலவிற்கு வைத்திருந்த பணத்தையும், செல்போனையும் பறித்துக்கொண்டதால் இரவோடு இரவாக 40 கிலோ மீட்டர் வரை நடந்தே வந்துள்ளனர். அதோடு பாதிக்கப்பட்ட பெண்களின் கணவர்களை வனத்துறையினர் கடுமையாக தாக்கி பொய் வழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். 

வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு 

பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த திங்களன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி மனு அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ்  உடனடியாக வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து துணை காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை விசாரணைக்கு நியமிக்க வேண்டும். இச்சம்பவத்தில் 13 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 

மிரட்டல் தொனியில்    ஆர்.டி.ஓ விசாரணை 

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு மாணவியர் விடுதியில் சாப்பாடு கொடுப்பதாக கூறி அழைத்து சென்ற அதிகாரிகள் அவர்களை உள்ளே வைத்து கதவை மூடிவிட்டனர். அப்போதுதான் பெரியகுளம் கோட்டாட்சியர் விசாரணை என்று அவர்களுக்கு தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மலைவாழ் பெண்கள் நடந்த சம்பவத்தை தெளிவாக கூறிய பின்பும் பலமுறை மிரட்டல் தொனியில், உண்மையை்ச் சொல்லுங்கள்; அப்போதுதான் உங்கள் கணவர்களை சிறையிலிருந்து வெளியே விடுவோம் என்று அவர்களிடம் பேசியிருக்கிறார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாத நிலையில் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டது சட்டரீதியான பிழையாகும். தமிழ்நாட்டில் ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறதா? அல்லது காவல்துறை, வனத்துறையினரின் ஆட்சி நடக்கிறதா? என்பது தெரியவில்லை. இதற்கெல்லாம் தமிழக முதல்வர் பதில் சொல்ல வேண்டும். 

ஆர்ப்பாட்டம்

மலைவாழ் மக்களிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்ட வனத்துறையினரை இடைநீக்கம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், மற்றும் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் படியும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க    வேண்டும். பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில்  அவர்கள் சேகரித்து வரும் மலைப்பொருட்களுக்கு சந்தை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து வருகிற 29ம் தேதி கடமலைக்குண்டிலும், வருகிற 4ம் தேதி தேனியிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கடமலைக்குண்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவரும், பெரியகுளம் முன்னாள் எம்எல்ஏ-வுமான ஏ.லாசர், மாதர் சங்கத்தின் மாநில தலைவர்களில் ஒருவருமான என்.அமிர்தம் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும். பழங்குடி மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர் சங்கமும் பாதுகாக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் தேனி மாவட்டச்செயலாளர் டி.வெங்கடேசன், கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன், மாதர் சங்க மாநில துணைத்தலைவர் என்.அமிர்தம், மாவட்ட நிர்வாகிகள் சு.வெண்மணி, எம்.விஜயா, விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.சுருளி நாதன், மாவட்ட தலைவர் டி.கண்ணன், விதொச மாவட்டச்செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தயாளன், கடமலை -மயிலை ஒன்றிய செயலாளர் பி.மணவாளன், தேனி தாலுகா செயலாளர் சி.சடையாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர். (ந,நி,)

டி.ஆரும் மோடியும் - Non Stop Comedy
கடந்த சில பதிவுகள் சூடாகப் போய் விட்டதால் இந்த காணொளியைப் பார்த்து மனம் விட்டு சிரியுங்கள், டி.ஆரை ரசியுங்கள்


Wednesday, July 27, 2016

அன்னிக்கு வேற மாதிரி சொன்னீங்களே, யுவர் ஹானர்பாரம்பரிய விளையாட்டு என்றால் என்ன குடி முழுகிப் போய் விட்டதா என்றும் அப்படியானால் குழந்தைத் திருமணத்தை அனுமதிக்கலாமா என்று விபரமாக கேட்டுள்ள மரியாதைக்குரிய நீதிபதிகளே,

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசின் ஹிந்து அறநிலையத் துறை எடுத்துக் கொண்ட வழக்கில் சிதம்பரம் தீட்சிதர்கள்தான் அக்கோயிலை பாரம்பரியமாக நிர்வகித்து வந்தார்கள் ( அது ஒரு இடைச் செருகல் கட்டுக்கதை  என்ற போதும்) என்று சொல்லி அவர்களின் ஊழல் தொடர அவர்களிடமே அக்கோயிலை மீண்டும் ஒப்படைத்தீர்களே, பாரம்பரியமாக நிர்வாகித்தால் என்ன குடி முழுகிப் போய் விட்டதா என்று கேட்க அப்போது ஏன் மறுத்து விட்டீர்கள்?

 

Tuesday, July 26, 2016

வைரமுத்து வயிற்றெச்சலின் பின்னணிகபாலி படம் தோல்வி என்று வைரமுத்து இரு முறை அழுத்திச் சொன்ன வீடியோவை நானும் பார்த்தேன். இரு முறை பார்த்தேன்.

முதல் முறை பார்த்த போது ஏதோ அவருக்கும் தாணுவிற்குமான பங்காளிப் பிரச்சினை என்றுதான் நினைத்தேன். 

இரண்டாவது முறை பார்த்த போதுதான் அவரின் கோபத்திற்கான காரணம் புரிந்தது.

நீங்க எல்லாம் போட்டிருக்கிற கோட்டை கழட்டித்தான் ரஞ்சித் ரஜனிகாந்துக்கு கொடுத்திருக்கார் என்று ரொம்பவுமே நக்கலாக சொல்கிறார்.

ரஜனிகாந்த் என்ன இதற்கு முன்பு கோட் அணிந்து நடித்ததில்லையா என்று யோசித்தால் தீ, பில்லா, பாட்சா, படையப்பா, ராஜாதிராஜா, அண்ணாமலை, அருணாச்சலம் என்று பல படங்கள் நினைவுக்கு வந்தது. ஏன் ரஜனிகாந்தின் முதல் படத்திலே கூட கோட்டில்தான் வருவார்.

பிறகு ஏன்?


கபாலியை ஆதரிப்பவர்கள் சொல்லும் ஒரு காரணம்.

காந்தி அரை வேட்டி அணிந்ததும் டாக்டர் அம்பேத்கர் கோட் அணிந்ததிலும் அரசியல் உண்டு என்ற வசனம்.

அதுதான் வைரமுத்துவுக்கு உறுத்துகிறது. அதை வாந்தியும் எடுத்து விட்டார். அவருக்குள் ஒளிந்திருந்த ஆதிக்க அரசியல் அம்பலமாகி விட்டது. 

அடுத்த படத்துக்கு டைட்டில் சாங் கொடுத்தால் மாற்றிப் பேசிடுவார் என்பது வேறு விஷயம்.

ரஜனிகாந்த் கோட் அணிந்த படங்கள் கோட் அணிந்த வைரமுத்துவுக்கு சமர்ப்பணம்கபாலி – இப்படி பண்றீங்களேய்யா, தினமணி !!!

கபாலி திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஆரம்பத்திலிருந்தே அவ்வளவாக இல்லை. நடிகர் ரஜனிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தாக மாறியதற்குப் பிறகு அவ்வளவாக அவர் படத்தினை முண்டியடித்துக் கொண்டு பார்ப்பது இல்லை. வாய்ப்பு கிடைத்தால் பார்ப்பது, இல்லையென்றால் அது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. எந்திரன் கூட தொலைக்காட்சியில் பார்த்ததுதான். கபாலிக்கு  தாணு உருவாக்கிய அளப்பறை கொஞ்சம் எரிச்சலைக் கூட உருவாக்கியிருந்தது.

ஆனால் சமூக வலைத்தளங்களில் நடக்கிற விவாதங்கள் “கபாலி” படம் பார்ப்பது பற்றிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. தின மணி பத்திரிக்கை கடுமையாக தாக்கியுள்ளது. அப்படி என்றால் அவர்களால் இந்த படத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்று அர்த்தம். தின மணியால் அப்படி சகித்துக் கொள்ள முடியாத விஷயங்கள் இருந்தால் “கபாலி” யில் ஏதோ உருப்படியான விஷயம் இருக்கிறது என்றும் அர்த்தம்.

கபாலி பார்க்க வேண்டிய அவசியத்தை இப்போது தின மணி யே உருவாக்கி விட்டது. வேறு எந்த விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் தின மணி எதிர்க்கிறது என்ற ஒரே காரணத்தினிலாயே கபாலி பார்க்கலாம் என்று தீர்மானித்துள்ளேன்.

முன் கூட்டியே முடிவு செய்யப்பட்ட பணிகள் காரணமாக இன்னும் பத்து நாட்களுக்கு ஒரு திரைப்படம் போவது என்பதற்கு வாய்ப்பில்லை. அதன் பிறகுதான் பார்க்க வேண்டும்.

அது வரை கபாலி ஓடுமல்லவா?

இல்லையென்றால் உலகத் தொலைக்காட்சிகள் முதல் முறையாக ஓளிபரப்பாகும் வரை காத்திருக்க வேண்டும்.

பின் குறிப்பு : திருட்டு விசிடியிலோ அல்லது தரவிறக்கியோ நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. அதை ஒரு கொள்கையாவே வைத்துள்ளேன்.