சமையலறை அனுபவங்கள் பற்றி நான் எழுதுவது பலருக்கும் பாதிப்புக்கள் ஏற்படுத்துகின்றது என்பதை நான் அறிவேன். அது குடும்பத்தில் கூட எதிரொலிக்கும் என்பது எதிர்பாராதது.
சில நாட்களுக்கு முன்பு ஒரு நெருங்கிய உறவினர் கீ ரைஸ் மற்றும் கிரீன் பீஸ் மசாலா செய்து முக நூலில் போட்டு இது போல உங்களால் செய்ய முடியுமா என்று கேட்க, வேறு வழியில்லாமல் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் வந்து விட்டது. என் மனைவி வழக்கம் போல் போட்டது ஒரே ஒரு நிபந்தனைதான். கிச்சம் மட்டும் நாசமாச்சு?????
அந்த சவாலை சந்திக்க நான் நேற்று செய்ததுதான் குட மிளகாய், காலிப்ளவர் புலாவ் மற்றும் காலிப்ளவர், பட்டாணி குருமா.
குட மிளகாய் புலாவ் செய்த வழி முறை கீழே.
முதலில் இரண்டு தக்காளியை தனியாக சாறு தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு கப் தேங்காய் துறுவல், ஒரு ஸ்பூன் தனியா, இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, ஏழு மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் தனியாக அறைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியை கொஞ்ச நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
காலிப்ளவரை தனியாக சுடுநீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து
தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். குருமாவுக்கு தேவையான பச்சை பட்டாணியைக் கூட இத்தோடே ஊற வைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து பெருஞ்சீரகம், லவங்கம், போட்டு பிறகு வெங்காயத்தை வதக்கவும். அதன் பின்பு குடமிளகாயும் அதற்கு பிறகு காலிப்ளவரையும் சேர்த்து வதக்கி பிறகு அறைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு தக்காளி சாறையும் சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பிறகு அதிலே அரிசியை போட்டு குக்கரை மூடி இரண்டு சவுண்ட் வந்த பின்பு அணைத்து விடவும். அதற்குப் பிறகு கொத்த மல்லி, வறுத்த முந்திரி கலந்து பறிமாறவும்.
இப்போது குருமாவிற்கு வருகிறேன்.
தேங்காய், தக்காளி, வெங்காயம், லவங்கம், கசகசா சேர்த்து தனியாக அறைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் கடுகு வெடித்த பின்பு வெங்காயம், தக்காளி வதக்கி பின்பு காலிப்ளவர், பட்டாணி சேர்க்கவும். அதற்குப் பிறகு அறைத்து வைத்த மசாலாவை சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீராக இருந்தால் கொஞ்சம் கடலை மாவை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும்.
எப்படி உள்ளது என்று படத்தை பார்த்து சொல்லுங்கள். அதற்கு முன்பு என் சகலை சொன்ன ஒரு கமெண்ட் மிகவும் முக்கியம். அதை கடைசி வரியில் பார்க்கவும்.
உங்களுக்கு சமைக்கத் தெரியும்னு நீங்க பாட்டுக்கு ஏதோதே செஞ்சுட்டு எனக்கும் மத்த ஆம்பிளைங்களுக்கும் ஏழரையை கொண்டு வரீங்களே! நியாயமா இது?
அப்படியா? இப்படியும் ஒரு பிரச்சினை இருக்கிறதோ?