Showing posts with label ஆடம்பரம். Show all posts
Showing posts with label ஆடம்பரம். Show all posts

Thursday, October 20, 2016

கொள்ளைப் பணம்தானே. அள்ளி விடலாம்





சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள இரண்டு செய்திகள்.

திருவண்ணாமலை கோயில் வாசலில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்கள் தட்டில் ஆயிரம் ரூபாய் நோட்டை அள்ளி வீசிய ஜின்டால் குடும்பம்.

நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகனின் திருமணத்தை நடத்தவுள்ள முன்னாள் கர்னாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி. அழைப்பிதழ் பெட்டியைத் திறந்தால் LED திரையில் சினிமா காட்சி போல பாடல், நடனம், சீன் etc, etc.

பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான் என்று ஒரு வரியோடு ஒதுங்கிப் போகிற விஷயமில்லை.

இத்தனை ஆடம்பரத்திற்கு இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து வந்தது பணம்?

நிலத்தில் பாடுபட்டு வியர்வை சிந்தி உழைத்த பணமா? அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்த பணமா? நேர்மையாய் முதலீடு செய்து நியாயமாய் வந்த லாபமா?

அப்படி கஷ்டப்பட்டு வந்த பணமாக இருந்தால் ஆடம்பரமாய் விரயம் செய்ய மனம் வராது.

ஜின்டால் நிறுவனத்திற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்து மலைகளை வெட்டி தொழில் நடத்த வேண்டும். அங்கே மக்கள் எதிர்ப்பு இருக்கிறது. தாங்கள் மிகவும் நல்லவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்க, இவர்கள் தொழில் நடத்தினால் அள்ளி அள்ளித் தருவார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க நடத்திய சீப் பப்ளிசிட்டிதான் பிச்சைக்காரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை அள்ளி வீசியது.

கர்னாடக மாநிலத்தின் சுரங்கங்களை சுரண்டி எடுத்து அரசாங்கத்தையும் ஏமாற்றிய பணம்தான் LED திரையில் நடனமாடுகிறது.

நாட்டையும் மக்களையும் கொள்ளையடித்த பணத்தில்தான் இவர்களது ஆடம்பர, ஊதாரித்தன செலவுகள் செய்யப்படுகிறது.

அந்த ஆடம்பரத்தின் பிரம்மாண்டத்தில் மயங்கி விடாமல் அதன் பின்னே உள்ள ஊழல் நாற்றத்தை மறந்து விட வேண்டாம்.

Thursday, September 15, 2016

போதுமோ இந்த நகை????????




மேலே உள்ளது வாட்ஸப்பில் வந்த படம்.

ஏழை மக்கள் அதிகம் உள்ள நாடு என்று சொன்னால் அப்படத்தை பார்க்கும் யாராவது நம்புவார்களா?

நகைக்கடைக்குள் பெண்களை உட்கார்த்தி வைத்தது போல இருக்கிறது. மனைவியின் உடலை பனிரெண்டு கிலோ மீட்டர் தோளில் சுமந்து கொண்டு போன தேசத்தில்தான் நகைகளை சுமக்க முடியாமல் திணறும் காட்சியைப் பார்க்கிறோம்.

பல் உள்ளவர்கள் பக்கோடா சாப்பிடுகிறார்கள் என்று சிலர் சொல்லலாம். ஆனாலும் இது ரொம்பவே ஓவர். பணம் உள்ளவர்கள் செய்யும் ஆடம்பரம் அடுத்தவர்களையும் அகலக்கால் எடுத்து வைக்க தூண்டுகிறது. இன்றைய திருமணங்கள் இப்படித்தான் மாறியிருக்கின்றன.

பின் குறிப்பு : இப்பதிவிற்கு அப்பெண்கள் அணிந்துள்ள நகைகள்தான் முக்கியம் என்பதால் முகங்களை மறைத்து விட்டேன்.