Showing posts with label புதுச்சேரி. Show all posts
Showing posts with label புதுச்சேரி. Show all posts

Tuesday, March 19, 2024

ஆழ்ந்த அனுதாபங்கள் தமிழிசை

 


தோற்றுப் போன ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் ஜாக்பாட் பரிசு கவர்னர் பதவி. உங்களுக்கும் சந்திரசேகர் ராவிற்கும் பிரச்சினை என்பதால்”தாமரை மலர்ந்தே தீரும்” என்று தொண்டை வறண்டு போகும் அளவு கத்தியதால் பாண்டிச்சேரி கவர்னராக எக்ஸ்ட்ரா போஸ்டிங் வேறு கொடுத்தார்கள்.

ஆனால்  நீங்கள் அதையெல்லாம் ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்க தயாராகி விட்டீர்கள்?

எங்கே நிற்கப் போகிறீர்கள் தமிழிசை மேடம்?

ஸ்டெரிலைட் வேதாந்தா முதலாளி அனில் அகர்வாலிடம் வாங்கிய எலும்புத்துண்டுக்காக  பனிரெண்டு பேரை சுட்டுக் கொன்றீர்களே அந்த தூத்துக்குடியிலா? போன முறை கனிமொழி அவர்களிடம் தோற்றுப் போன அதே தொகுதியிலா? ஊரே மூழ்கிப் போனாலும் மோடி எட்டிக்கூடப் பார்க்காத அந்த தூத்துக்குடியிலா?

நீலகிரித் தொகுதியின் கன்பர்ம்ட் வேட்பாளர் என்று சொல்லப்பட்டு வந்த எல்.முருகன், ஆட்டுக்காரனின் அளப்பை நம்பாமல், துண்டைக் காணோ, துணியைக் காணோம் என்று தலை தெறிக்க ஓடி மத்தியப் பிரதேசத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினரானதை பார்த்துமா ரிஸ்க் எடுத்துள்ளீர்கள்?

பாண்டிச்சேரி தொகுதியில் நிற்பீர்களோ?

பாண்டியைப் பொறுத்தவரை நீங்கள் வெளியாள். உங்கள் கட்சி ஆட்களே உங்களுக்கு சீட் கிடைக்க விட மாட்டார்கள். அப்படியே மேலிடச் செல்வாக்கு மூலம் கிடைத்தாலும் உங்கள் கட்சி ஆட்களும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்களுமே உங்களை தோற்கடித்து விடுவார்கள்.

இந்த முறை தோற்றுப் போனால் இன்னொரு முறை கவர்னர் பதவி தர மோடியே ஜெயிக்கப்போவதில்லை.

ஆக உள்ளதையும் எதிர்காலத்தையும் இழந்து நொந்து போகப்போவதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

Wednesday, November 8, 2023

முடியலை. நிஜமாவே !

 



 

இறந்து போனவரைப் பற்றி எழுதுவதை எப்போதுமே நான் தவிர்த்து விடுவேன்.

 இந்த பதிவில் எழுதுவது கூட விமர்சனம் என்பதை விட தகவல் என்று சொல்வதே சரி.

 புதுவையின் முக்கியமான அரசியல் பிரமுகர் திரு பி.கண்ணன், நேற்று முன் தினம் இறந்து போனார்.

 நேற்றைய ஆங்கில இதழில் அவரது அரசியல் பயணம் என்று பட்டியல் போட்டிருந்தார்கள்.

 அந்த தகவல் மட்டுமே இங்கே

 

காங்கிரஸ் கட்சியில் அரசியல் தொடங்குகிறது

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுகிறார்.

1996 ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதுவை பிரிவை துவக்குகிறார்.

சில வருடங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதுவை பிரிவை மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு இணைக்கிறார்.

2001 ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதுச்சேரி மக்கள் காங்கிரஸை துவக்குகிறார்.

2002 ல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

2005 ல்  புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸை துவக்குகிறார்.

2009 ல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்கிறார்.

சில வருடங்களுக்குப் பின்பு அதிமுகவிற்கு செல்கிறார்.

2019 ல் அதிமுகவிலிருந்து வெளியேறி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியை துவக்குகிறார்.

2021 ல் பாஜகவில் இணைகிறார்.

மணிப்பூர் பிரச்சினையை முன் வைத்து இரண்டு மாதங்கள் முன்பு பாஜகவில் இருந்தும் வெளியேறி விட்டார்.

 ஒரு மனிதரால் இந்த அளவிற்கு கட்சிகள் மாறிக் கொண்டே இருக்க முடியுமா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நிஜமாகவே முடியவில்லை.

Thursday, October 12, 2023

விளக்கம் சொல்வீங்களா தமிழிசை?

 


புதுவை அரசின் ஒரே பெண் அமைச்சர் சந்திரா பிரியங்கா தன் அமைச்சர் பதவியை தம் மீது நிகழ்த்தப்படும் ஜாதிய, பாலின பாகுபாடு காரணமாக ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.

அக்கடிதம் கீழே


இதற்கு தமிழிசை எதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று கேட்பீர்கள்!

புதுவையில் முதல்வர், சபாநாயகர், துணை நிலை ஆளுனர் என்று மூன்று அதிகார மையங்கள் உண்டு என்றும் அதிலே சக்தி மிக்கவர் தமிழிசைதான் என்று எங்கள் புதுவை தோழர்கள் சொல்வார்கள்.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஆட்டுக்காரன் பதில் சொல்ல வேண்டிய விஷயங்களில் கூட இவர் ஆளுனர் என்ற பொறுப்பை மறந்து பேசுவார்.

அதனால் தலித் என்ற காரணத்தாலும் பெண் என்ற காரணத்தாலும் தனக்கு பிரச்சினை வந்தது என்று அமைச்சர் சொன்னதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு தமிழிசை அம்மையாருக்கே அதிகம் உண்டு,

சொல்வீர்களா? 

Monday, June 28, 2021

ஒன்றியமென்றால் பொங்கிய சங்கிகளே

 


சமீப காலத்தில் சங்கிகளை உறக்கமிழக்க வைத்த வார்த்தை "ஒன்றியம்". ஒன்றியம் என்று சொல்பவர்களுக்கெல்லாம் அவர்கள் பாணியில் தேச விரோதி பட்டம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

இதோ அவர்களின் தானைத்தலைவி தமிழிசை பதவிப் பிரமாணம் எப்படி எடுத்து வைக்கிறார் என்று பாருங்கள்.



இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்பு என்று சொன்ன தமிழிசை மீதும் சங்கிகள் பொங்குவார்களா?

அவரை ஆளுனர் பதவியிலிருந்து நீக்கச் சொல்வார்களா?

I am waiting

Thursday, June 3, 2021

புதுவைக்கு பொங்குங்கய்யா

 


தமிழக அரசை கலைக்க வேண்டும், மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சங்கிகள் அவர் பதவியேற்ற நாள் முதலாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 அதே நேரம் புதுவை பற்றி அவர்கள் வாய் திறப்பதே இல்லை.

 புதுவையில் ரங்கசாமி முதலமைச்சராக பதவி ஏற்றாரே தவிர அங்கே அமைச்சரவை இன்னும் பதவியேற்றகவில்லை.

 முதலமைச்சரும் கொரோனா தொற்று என்று கதவை சாத்திக் கொண்டு விட்டார்.  பத்து தொகுதிகளில் ரங்கசாமி காங்கிரஸும் ஆறு தொகுதிகளில் பாஜகவும் வென்றது. மூன்று பாஜக காரர்களை நியமன எம்.எல்.ஏ க்களாக்கி ஆறை ஒன்பதாக்கினார்கள். மூன்று சுயேட்சைகளை சேர்த்து ஒன்பதை பனிரெண்டாக்கி, உங்களை விட நாங்கள் இரண்டு அதிகம் என்று சொல்ல, முதல்வர் அலுவலகம், சட்டப்பேரவை போன்றவற்றை விட மருத்துவமனையே பாதுகாப்பானது என்று முதல்வர் நினைக்கிறார் போலும்.

 அங்கே ஆட்சி என்ற ஒரு நடைபெறவே இல்லை என்பதைப் பற்றி சங்கிகள் கவலைப்பட மாட்டார்களா? ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்ல மாட்டார்களா?

 உண்மையில் அந்த முதல்வர் பதவியை அவரிடமிருந்து பறிக்கவே முயல்கின்றனர் என்பதுதான் உண்மை. ராஜினாமா செய் என்று சொல்லாமல் அதற்கான நிலைமையை அவருக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்ககள் என்பதும் உண்மை.

 ரங்கசாமிக்கும் இது தேவைதான்.

 

Saturday, March 13, 2021

வெக்கமா இல்லியா? பதில் ?????

 


வாட்ஸப்பில் வந்த சுவாரஸ்யமான உரையாடல் உங்களுக்காக?



என் மனதின் கேள்வி, மேலே படத்திலும் . . .

Tuesday, February 23, 2021

ஆட்சியைக் கவிழ்த்தது தோற்றுப் போனவர்கள்

 



நேற்று புதுவையில் நடந்த ஜனநாயகப் படுகொலை பற்றிய பதிவைப் படித்த ஒரு புதுவை தோழர் “நியமன எம்.எல்.ஏ க்கள் எல்லாம் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு மோசமாக தோற்றவர்கள்” என்று வாட்ஸப் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று ஒரு பயணம். இரவில் வீடு திரும்புகையில் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் அந்த விபரங்களை தேடி எடுத்தேன்.

2016 சட்டமன்ற தேர்தலில் பாஜக முப்பது தொகுதிகளிலும் போட்டியிட்டது.  மொத்தம் பதிவான 7,90,881 வாக்குகளில் அது பெற்ற மொத்த வாக்குகள் 18406 மட்டுமே.

உசுடு என்ற ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 6,323 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. இரண்டு தொகுதிகளில் மட்டும் தலா 1492, 1633 வாக்குகளைப் பெற்று நான்காவது, ஐந்தாவது இடங்களைப் பெற்றிருந்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் பாஜக பெற்றது வெறும் 2.32 % மட்டுமே.

 ஐநூறுக்கும் மேல் வாக்குகள் பெற்ற தொகுதிகள் ஐந்து. மூன்னூறிலிருந்து ஐநூறுக்குள் பெற்றது மூன்று தொகுதிகள். இருநூறிலிருந்து முன்னூறுக்குள் பெற்றது எட்டு தொகுதிகள். நூறிலிருந்து இருநூறுக்குள் பெற்றது ஒன்பது தொகுதிகள். நூறுக்கும் குறைவாகப்ப் பெற்றது இரண்டு தொகுதிகள்.

 கிரண் பேடியால் தன்னிச்சையாக நியமனம் செய்யப்பட்ட மூன்று எம்.எல்.ஏ க்களில் ஒருவர் புதுவை பாஜக தலைவர். இன்னொருவர் பாஜக பொருளாளர். இன்னொருவரோ “கல்வி வள்ளல்:. சங்கர் என்ற பொருளாளர் இறந்து போனதால் அந்த இடத்தில் விக்ரமன் என்ற இன்னொரு சங்கி நியமன எல்.எல்.ஏ ஆகிறார்.

 இந்த நியமன எம்.எல்.ஏ க்கள் பெற்ற வாக்கு விபரங்களைப் பார்ப்போம்.

 கல்வி வள்ளல் எஸ்.செல்வ கணபதி போட்டியிடவில்லை.

 லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட வி.சாமிநாதன் பெற்றது 1,492 வாக்குகள் மட்டுமே. நான்காவது இடம். வெற்றி பெற்றவர் பெற்றதோ 11,980 வாக்குகள்.

 மனவேலி தொகுதியில் போட்டியிட்ட டி.விக்ரமன் பெற்றது 172 வாக்குகள் மட்டுமே. ஒன்பதாவது இடத்தைப் பிடித்தவர் இவர். வெற்றி பெற்றவர் பெற்றதோ  9,194 வாக்குகள்.

 இன்னொரு முக்கியமான ஒன்று உண்டு. கவிழ்ப்பு வேலையை முன் நின்று செய்த கிரண் பேடி அம்மையார் டெல்லி சட்டமன்ற தேர்தலில் 2,200 வாக்குகள் வித்தியாசத்திலும் தமிழிசை அம்மையார் மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் 3,47,200 வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்றுப் போனவர்கள்.

புதுவை மக்களால் கேவலமான முறையில் நிராகரிக்கப்பட்டவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஆட்சியை கவிழ்ப்பது என்பது எவ்வளவு மோசமான செயல்!

 

நிச்சயம் இதற்கு புதுவை மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

Monday, February 22, 2021

புதுவை படுகொலை புதிதல்ல.

 



 

புதுவையில் வி.நாராயணசாமி அரசு கவிழ்ந்துள்ளது. முன்னாள் போலீஸ் அதிகாரியின் சட்ட விரோத நடவடிக்கையே இன்றைய ஜனநாயகப் படுகொலைக்கு அடிப்படை.

 மாநில அரசை கொஞ்சம் கூட மதிக்காமல் தன்னிச்சையாக மூன்று காவிகளை சட்டமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்து அவர்களுக்கு தானே பதவிப் பிரமாணமும் செய்து வைத்து படுகொலைக்கு அட்வான்ஸ் கொடுத்தார் கிரண் பேடி அம்மையார்.

 நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்பதை புதுவைக்கு மட்டும் மாற்றி படுகொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது மத்தியரசு. அந்த ஸ்கெட்சிற்கு அங்கீகாரம் கொடுத்தது உச்ச நீதி மன்றம்.

 காவிகள் காண்பித்த ஆசைக்கு அடிபணிந்து கொலைகாரர்களாக மாறினார்கள் ராஜினாமா செய்த சபலப் பேர்வழிகள்.

 மோடியின் ஆட்சியில் ஜனநாயகப் படுகொலைகள் புதிதல்ல.

 கோவா, மணிப்பூர், கர்னாடகா, மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் என்று அதன் கொடுங்கரங்கள் செய்த கொலைகள் எண்ணற்றவை.

 இப்போது நடந்துள்ளது புதுச்சேரியில்.

 ஜாதிக்கட்சிக்கோ, மதக் கட்சிக்கோ புதுவை மக்கள் இதுவரை இடம் கொடுத்தது கிடையாது. இனியும் ஆதரிக்க மாட்டார்கள் என்றே நம்புவோம்.

Wednesday, February 17, 2021

கிரண் பேடி நீக்கம் - மகிழ்ச்சியடைய ஏதுமில்லை

 


புதுவை துணை நிலை ஆளுனர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி நீக்கப் பட்டதால் மகிழ்ச்சியடைய ஏதுமில்லை.

குதிரைகள் ஓடிப்போன பின்பு லாயத்தை பூட்டுவது போன்ற கதை இது.

ஒரு பாஜக சங்கியாக அவர் செய்ய வேண்டிய அனைத்து பேரழிவுகளையும் ஏற்கனவே செய்து முடித்து விட்டார். நியமன எம்.எல்.ஏ க்கள் தொடங்கி ஆட்சி அதிகாரத்தை சீரழித்தது, காங்கிரஸ் கட்சியை உடைத்தது போன்று அனைத்து நாசங்களையும் நிகழ்த்தி விட்டு இனி ஏதுமில்லை என்ற நிலையில்தான் அவர் புதுவையை காலி செய்துள்ளார்.

குதிரை பேரம் நிகழ்த்த கிரண் பேடியை விட தமிழிசை இன்னும் பொருத்தமாக இருப்பார் என்று அவர் கொண்டு வரப் பட்டுள்ளார். அவ்வளவுதான்.


Sunday, March 4, 2018

புதுவை - தமிழில் ஒன்று. ஆங்கிலத்தில் வேறு




ஒரு தோழரின் பணி நிறைவு பாராட்டு விழாவிற்காக செவ்வாய் கிழமையன்று புதுவை சென்றிருந்தேன்.

புதுச்சேரி என்றாலே அது “ரூம் போட்டு யோசித்த” ஃப்ளக்ஸ் பேனர்களின் பூமியாகவே இப்போது மாறியுள்ளது. அதுவும் மோடி வேறு வந்து போனதால் சுவாரஸ்யமாக ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.

என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை.

மோடியை வரவேற்று என்.ஆர்.காங்கிரஸ் (புதுவையைத் தாண்டாத அக்கட்சிக்கு அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் என்று அவர்கள் பெயர் சூட்டியிருந்தது வேறு விஷயம்)  ஆங்கிலத்திலும் தமிழிலுமாக பேனர்களும் போஸ்டர்களும் வைத்திருந்தார்கள்.

ஆங்கில பேனரில்

Welcome to Madiji, Achiever of New India

அதுவே தமிழில்

புதிய இந்தியாவை நிர்மாணிக்க புதுவை வரும் மோடிஜியை வரவேற்கிறோம்.

நமக்கெல்லாம் தெரியாமல் மோடி எப்போது புதிய இந்தியாவை படைத்தார் என்று ஆங்கில பேனரைப் பார்த்து யோசித்த நேரத்தில்

இனிமேல்தான் புதிய இந்தியாவை நிர்மாணிக்கப் போகிறார் என்று தமிழ் பேனரில் எழுதி குழப்பி விட்டார்கள்.

ரங்கசாமி சார், கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

புதிய இந்தியா பிறந்துடுச்சா இல்லை இனிமேதான் பிறக்கப் போகுதா?

பின் குறிப்பு

பேருந்திலிருந்து இறங்கி ஆட்டோவில் அலுவலகம் போன போது வழியில் பார்த்தது. ஆட்டோவின் வேகத்தில் புகைப்படம் எடுக்க முடியவில்லை.

Wednesday, August 23, 2017

மோடி போலவே அந்த லேடியும் . . . .




மோடியைப் போலவே, சொல்லப்போனால் சில சமயம் மோடியை விட அதிகமே ஸ்டண்ட் அடிப்பவர், மோடியால் புதுவை துணை நிலை ஆளுனராக நியமிக்கப்பட்ட  முன்னாள் ஊழல் எதிர்ப்புப் போராளி (அப்படி வேடம் போட்ட) கிரண் பேடி அவர்கள்.

அவர்கள் நள்ளிரவில் நகர் உலா போன காணொளிக் காட்சி இங்கே.



நகர் உலா போவதை புகைப்படம் எடுக்கவும் காணொளி எடுக்கவும் ஏற்பாடு செய்து விட்டுத்தான் அம்மணி ராஜ் நிவாஸை விட்டு புறப்பட்டுள்ளார்.

சரியாக புகைப்படம் எடுக்கிறார்களா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்கிறார்.

ஆனால் பாவம் அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது மட்டுமல்ல

அவர் போட்ட ஹெல்மெட் உத்தரவை அவரே பின்பற்றவில்லை என்ற விமர்சனம்தான் வந்தது.

விமர்சனம் செய்தவர்களுக்கு ஒரு விஷயம் ஏனோ புரியவில்லை.

ஹெல்மெட் போட்டால் புகைப்படத்தில் முகம் எப்படி நன்றாகத் தெரியும்?
புகைப்படத்தில் முகம் தெரியாவிட்டால் பின் என்ன எழவிற்கு நகர் உலா போவது?
 

Thursday, August 11, 2016

அங்கியும் ஒரு "மக்கள் முதல்வர்"




முதலமைச்சராக பதவியில் நீடிக்க முடியாதவருக்கு "மக்கள் முதல்வர்" என்ற அடைமொழியை அதிமுக அடிமைகள் அளித்தார்கள். 

அந்த "மக்கள் முதல்வர்"  பட்டத்தை இப்போது புதுவை ரங்கசாமி கையில் எடுத்துக் கொண்டார்.

நேற்று புதுவை வழியாக கடலூர் சென்றோம். அவரது பிறந்த நாள் கடந்து போயிருந்தது.  வழக்கமான அளவில் பேனர்கள் கண்ணில் படவில்லை (ஒரு வேளை எடுத்து விட்டார்களா என்று தெரியவில்லை) இருந்தாலும் கண்ணில் பட்ட அனைத்து பேனர்களிலுமே அவரை "மக்கள் முதல்வர்" என்றே குறிப்பிட்டிருந்தார்கள்.

ஒரு பேனரில் பார்த்த வாசகம்

நான் வருவேன்னு சொல்லு
திரும்பி வருவேன்னு சொல்லு
மகிழ்ச்சி

நாராயணசாமி சட்டமன்ற தேர்தலில் போட்டி போட தங்கள் பதவியை ராஜினாமா செய்ய எந்த எம்.எல்.ஏ வும் தயாராக இல்லை என்ற செய்திக்கும் இந்த வாசகங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா?

பின் குறிப்பு " மேலேயுள்ள படம் இணையத்திலிருந்து எடுத்தது. 

 

Saturday, May 28, 2016

அடி வாங்கிய ஆளும் கட்சியினர்




ஒரு வழியாக புதுச்சேரி முதல்வர் யாரென்பது முடிவாகி விட்டது. மற்ற கட்சிகளின் உட்கட்சி விவகாரம் பற்றி கருத்து தெரிவிப்பது கிடையாது என்ற கொள்கை எனக்கு உள்ளதால் அது பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை.

இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத கட்சிக்காரர்கள் கல் வீசி  பேருந்துகளின் கண்ணாடிகளை உடைக்க, காவல்துறை அவர்களை துரத்தி துரத்தி தடியால் அடித்திருக்கிறது.

இந்தியாவிலேயே ஆளும்கட்சியினர் அடி வாங்கியது முதன் முதலாக புதுச்சேரியில் என்றுதான் நினைக்கிறேன். 

ஆரம்பம் அமோகமாக இருக்கிறது. 

பின் குறிப்பு : ஒரு பிளாஷ்பேக். புதுவையில் திரு சண்முகம் என்பவர் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத போதும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராவதற்கு வசதியாக தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய யாரும் தயாராக இல்லாததால் ஆறு மாதத்தில் ராஜினாமா செய்து விட்டார்.