Tuesday, May 31, 2016

இதெல்லாமும் சினிமாதான், ஆனா வேற சினிமா






நாலு பாட்டு, மூன்று பைட், கொஞ்சம் பஞ்ச் டயலாக், கூடவே கொஞ்சம் காமெடி, வெளிநாட்டில் டூயட், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் - இப்படியாகவே நாம் காணும் பெரும்பாலான தமிழ்ப் படங்கள் இருக்கின்றன, இரண்டரை மணி நேரம்  ஜாலியாய் பொழுதைக் கழிக்கத்தான் சினிமா என்பதும் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் சூழலில்  மக்களின் பிரச்சினைகளைப் பற்றியும் அதன் உள்ளே இருக்கும் அரசியலையும் பேசுகிற திரைப்படங்கள் பற்றிய அறிமுகத்தை இந்த நூல் அளிக்கிறது. 

நூல் அறிமுகம்

நூல்                        அரசியல் பேசும் அயல் சினிமா 
ஆசிரியர்                இ.பா.சிந்தன்
வெளியீடு              பாரதி புத்தகாலயம்
                                    சென்னை 600018
விலை              ரூபாய் 140.00


பதினைந்து திரைப்படங்களைப் பற்றிய அறிமுகம் இந்த நூலில் தரப்பட்டுள்ளது. நோக்கியா தொலைபேசி தயாரிப்பதற்காக சுரண்டப்படுகிற காங்கோ நாட்டு கனிம வளம், தொழிலாளர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள், அதைப் பற்றி காங்கோ சென்று ஆய்வு நடத்துகிற பிராங்க் எனும் பத்திரிக்கையாளரின் அனுபவங்கள், அவர் எழுப்பும் கேள்விகளை அலட்சியமாக புறம் தள்ளுகிற நோக்கியா நிர்வாகம் - இதையெல்லாம் சொல்கிறது Blood in Mobile

தொழிலாளர்களின் உரிமைகளை கேட்பவர்களை கொல்லுகிற கொலைகார நிறுவனம்தான் கோகோ கோலா என்பதை The Coca Cola Case விவரிக்கிறது. போராடும் தலைவரின் அறையில் சேகுவாரா படம் இருந்த காரணத்தால் அவருக்கான நீதியை  நீதிமன்றம் மறுத்தது என்பது கூடுதல் செய்தி.

நமக்கு இனிப்பான சுவையளிக்கும் சாக்லேட்டுக்களில் குழந்தைத் தொழிலாளர்களின் குருதி இருப்பதை கண்ணீரோடு The Dark side of Chocolate பார்த்தால் உணரலாம்.  

பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும் பெண்கள் பற்றிய எகிப்து நாட்டுப்படம்  678, தண்ணீரை விற்பனைப் பொருளாக்கிய பன்னாட்டுக் கம்பெனியை துரத்தியடித்த பொலிவிய மக்களின் போராட்டத்தைச் சொன்ன Even the Rain,  தேங்காய் மூலம் தன்னிறைவை அடையத் துடிக்கும் பூகென்வில் என்ற சிறு நாட்டின் கண்ணீர் கதையான The Coconut Revolution, தனது நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று கனவுகளோடு முயற்சித்த புர்கினோ பாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டு அதிபர் தாமஸ் சங்கராவை ஏகாதிபத்தியம் கொலை செய்த சதியைச் சொல்லும் The Upright Man, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அடக்குமுறையை ஐந்து காமெராக்கள் உடைக்கப்பட்டபோதும் சளைக்காமல் பதிவு செய்கிற  5   Broken Cameras  ஆகியவை நமக்கு படிப்பினை தரும் படங்கள். 

இரான் அரசால் தண்டனை வழங்கப்பட்ட பிரபல இயக்குனர் “ஜாபர் பனாகி” தனக்கு அனுமதி மறுக்கப்பட்ட திரைப்படத்தின் திரைக்கதையை வாய் வழியாக சொல்வது “This is not a film”. இந்தப்படம், ஒரு கேக்கில் மறைத்து வைக்கப்பட்ட பென் டிரைவ் மூலம் வெளியே கொண்டு செல்லப்பட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது என்பது முக்கியமான செய்தி. க்யூபா, வெனிசுலா, அர்ஜெண்டினா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பற்றிய படங்களும் இந்நூலில் உண்டு.

இத்திரைப்படங்களின் திரைக்கதை மற்றும் அவை சொல்லும் அரசியல் செய்திகள்  பற்றி மட்டுமே இந்த நூல் விரிவாக பேசுகிறது. அழகியல் அம்சங்களான ஒளிப்பதிவு, இசை, இயக்கம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அவை பற்றியும் எழுதினால் நூலின் நோக்கம் நீர்த்துப் போகலாம் என்று ஆசிரியர் கருதி இருந்தால் அதுவும் சரிதான்.

நூலிலே விவாதிக்கப்பட்ட படங்களை பார்க்கத் தூண்டும் விதத்தில் எளிய நடையில் எழுதிய தோழர் இ.பா.சிந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

(எங்கள் சங்கச்சுடர் மே 2016 இதழிற்காக எழுதப்பட்டது)

தமிழ்மணத்தில் ஏன் இப்படி? அடிக்கடி




சில மாதங்கள் முன்பாகத்தான் கவனித்தேன்.

தமிழ்மணம் வெளியிடுகிற சூடான இடுகைகளில் ஒரு சின்ன வேறுபாடு இருப்பதை.

முகப்பு பக்கத்தில் வெளியிடும் சூடான இடுகைகள் பட்டியலுக்கும் உள்ளே சென்று பார்த்தால் கிடைக்கும் பட்டியலுக்கும். 

முகப்பு பக்கத்தில் இல்லாத பதிவு உள்ளே சென்று பார்த்தால் இருக்கிறது. 

அடிக்கடி இது போல நிகழ்கிறது. 

இங்கே ஒரு உதாரணத்தைப் பாருங்கள்





உள்ளே, முதல் பக்கத்தில் இருக்கிற "அதிரப்பள்ளிக்கு போகாதீங்க" என்ற பதிவு முகப்புப் பக்கத்தில் காணவில்லை பாருங்கள். 


முகப்புப் பக்கத்தில் ஒரு பதிவரின் ஒரு பதிவு மட்டுமே தெரியும்படி ஏதேனும் கொள்கை இருக்கிறதா என்ன? மற்றவர்களுக்கும் இது போன்ற அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.


 

Monday, May 30, 2016

ரொம்பவே லேட்டா ஒரு விமர்சனம் -24





அனேகமாக பெரும்பாலான அரங்குகளை விட்டு வெளியேறி இருக்கும் வேளையில் நேற்று 24 சென்றேன். படத்தை வெகுவாக புகழ்ந்து என் மகன் முக நூலில் எழுதியிருந்தது அப்படம் பார்க்கச் சென்றதற்கான முக்கியமான காரணம். லாஜிக், சைன்ஸ் எல்லாத்தையும் மறந்துட்டு பாரு. டெக்னிக்கலா வாய்ப்பு உண்டா என்றெல்லாம் பார்க்காதே என்று எச்சரித்து விட்டு, கரெக்டா போயிடு. முதல் சீனை பார்க்கவில்லையென்றால் ஒன்னும் புரியாது என்றும் சொல்லி அனுப்பி வைத்தான்.

படத்த்தின் கதையைப் பற்றி பலரும் அக்குவேர் ஆணிவேராக எழுதி விட்டதால் அதைப் பற்றி எழுதப் போவதில்லை.

லாஜிக் என்பதை மறந்து விட்டால் சுவாரஸ்யமான ஒரு படம். சூர்யா வில்லன் கதாபாத்திரத்தினை விட தந்தை மற்றும் மகன் பாத்திரம் பரவாயில்லை என்று தோன்றியது. ஆனால் மீண்டும் மீண்டும் வாட்ச் மெகானிக் என்று சொன்னதில் சமந்தாவிற்கு கடுப்பு வந்ததாகத் தெரியவில்லை, எனக்கு வந்தது.

கால இயந்திரத்தை வைத்துக் கொண்டு இன்னும் சிறப்பாக காட்சிகளை அமைத்திருக்கலாம். பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து அப்பா கண்டுபிடித்த கால இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருபத்தி நான்கு மணி நேரம் மட்டுமே இருக்குமாம். அதை பல வருடங்கள் பின்னோக்கிச் செல்வதற்கான படி நள்ளிரவிற்குள் மகன் மாற்றி விடுவாராம். இது ஓவர் உடான்ஸ்.

சில காட்சிகள் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். வாட்ச் வேறு கையில் கட்டப்பட்டதை அறிந்து மகன் சூர்யா தேடி வருகையில் வில்லன் அப்பாவாக காட்சி தருவது, தன்னை சமந்தா கண்டு பிடித்த உடன் மாடிப்படியில் கீழே விழுந்து, நிலைமையை மாற்றுவது, தான் மாற்றியமைத்த கால இயந்திரம் கொண்டு வந்துள்ளது வில்லன் என்று கண்டுபிடித்த காட்சி ஆகியவற்றை சொல்லலாம். மழையை ஃப்ரீஸ் செய்யும் காட்சியும் ரசிக்க வைக்கிறது. 

சமந்தா வழக்கமான பொம்மை என்றால் சரண்யா வழக்கம் போல் நெகிழ்வூட்டும் அம்மா. ஒரு பாடலைக் கூட ரசிக்க முடியவில்லை என்று சொன்னால் ரஹ்மான் ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதால் எதுவும் சொல்லவில்லை. 

கால இயந்திரத்தை இதற்கு முன் வந்த லோ பட்ஜெட் படமான "இன்று, நேற்று, நாளை" இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருந்தனர் என்பது கால இயந்திரம் இல்லாமலே நினைவுக்கு வருகிறது. 

லாஜிக்கை மறந்து விட்டு பார்த்து விட்டு வரலாம்.

Sunday, May 29, 2016

அதிரப்பள்ளிக்கு “மட்டும்” போகாதீங்க



கேரளாவின் முக்கியமானதொரு சுற்றுலா மையம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, அதாங்க புன்னகை மன்னன் நீர்வீழ்ச்சி. பெரும்பாலானவர்கள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியோடு திரும்பி விடுகிறார்கள். அதிரப்பள்ளியிலிருந்து கொச்சின் செல்லும் சாலையில் சரியாக ஐந்தாவது கிலோ மீட்டரில் சாலக்குடி நீர் பிரிவு பூங்கா இருக்கிறது.

சாலக்குடி ஆற்றில் ஒரு தடுப்பணை உள்ளது. அதையொட்டி ஒரு பூங்கா, வேகமாய் சீறிப் பாயும் ஆற்றுக்கு நடுவே ஒரு தொங்கும் பாலம், இயற்கைக் காட்சிகளை கண்டு களிக்க ஒரு பார்வை கோபுரம், இதை விட முக்கியமாக, சுத்தமாக பராமரிக்கப்படும் கழிப்பறைகள் என அட்டகாசமாக அமைந்துள்ளது.

மழைச்சாரல் வந்து போய், வந்து போய் சிலுசிலுவென்று குளிர் காற்று அடித்துக் கொண்டிருக்க, அந்த மாலைப் பொழுது அன்று அங்கே மிகவும் ரம்மியமாய் கழிந்தது.

வண்ணத்துப் பூச்சிகளின் சரணலாயமாகவும் இந்த பூங்கா அமைந்து உள்ளது. அப்படங்களை முன்னமே இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்

அதனால்தான் சொல்கிறேன்.

அதிரப்பள்ளியோடு மட்டும் திரும்பி வந்து விடாதீர்கள். சாலக்குடிக்கு அவசியம் செல்லுங்கள், ரசியுங்கள்.