ராஜீவ் நினைவகத்திற்கு சென்று வந்தது பற்றி இரு தினங்கள் முன்பாக எழுதியிருந்தேன்.

அது ராஜீவ் காந்திக்கான நினைவகம்தான், காங்கிரஸ் ஆட்சியால் துவக்கப் பட்டதுதான். அங்கே ராஜீவ் காந்தியின் புகழ் பாடுவதுதான் அரசின் நோக்கமாகவும் இருக்க முடியும்.
ஆனால்
அந்த கொடூர சம்பவத்தில் ராஜீவ் மட்டும் கொல்லப் படவில்லை. மேலும் ஒரு பதினாலு பேர் கொல்லப்பட்டனர், தனுவைத் தவிர. அதில் போட்டோகிராபர் ஹரிபாபுவைத் தவிர வேறு யாருக்கும் கொலை முயற்சிக்கும் தொடர்பில்லை.
ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு அளிக்க வந்த காவல்துறையினர், அவரது கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஆகியோர்தான் கொல்லப் பட்டனர். ராஜீவ் காந்தி கொல்லப்படவில்லை என்றால் இவர்களும் இறந்து போயிருக்க மாட்டார்கள்.
அவர்களுக்கெல்லாம் சிலை வைத்திருக்க வேண்டாம், ஓவியம் எழுதியிருக்க வேண்டாம், வாழ்க்கை வரலாறெல்லாம் கூட சொல்லி இருக்க வேண்டாம். அந்த பிரம்மாண்டமான வளாகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அந்த பதினாலு பேருடைய பெயர்களையாவது எழுதி இவர்களும் அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் என்றாவது பதிவு செய்திருக்கலாம்.
எந்த வரலாறும் தெரியாதவர்கள் அங்கே வந்தால் ராஜீவ் காந்தி மட்டுமே அன்று கொல்லப்பட்டார் என்றுதான் நினைப்பார்கள்.
அதே நேரம் வெண்மணி நினைவகம் ஒன்றும் பிரம்மாண்டமானதில்லை. பச்சை புல்வெளிகள் அங்கே கிடையாது, பத்துக்கு பத்து அறை, அங்கே ஒரு ஸ்தூபி, அதற்கு வெளியே இன்னொரு ஸ்தூபி. மிகப் பெரிய கலைநயம் என்பதெல்லாம் கிடையாது. ஆனால் அந்த ஸ்தூபியில் தீயில் எரிக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தியாகிகள் பெயர்கள் மட்டுமல்ல, கீழத்தஞ்சை மாவட்டத்தில் கொல்லப்பட்ட தியாகிகள் அனைவரது பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.

ஏனென்றால் வெண்மணி நினைவகத்தை கட்டியது உழைப்பாளி மக்களின் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி.
ராஜீவ் நினைவகத்தை கட்டியது முதலாளித்துவக் கட்சியான காங்கிரஸ் த்லைமையிலான அரசு. அங்கே மற்றவர்களின் தியாகத்திற்கு மதிப்பில்லை.