Showing posts with label போலி தேசபக்தி. Show all posts
Showing posts with label போலி தேசபக்தி. Show all posts

Thursday, August 18, 2022

கோணல் கொடி அம்பானியுடையதுதான்.

 


ஒன்றிய அரசின் கட்டளைப் படி அஞ்சல் அலுவலகத்திலிருந்து வாங்கப்பட்டு ஊழியர்கள் அனைவருக்கும் எங்கள் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தேசியக் கொடிதான் மேலே உள்ளது.

தேசியக் கொடி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கென்று வரையறைகள் உண்டு. கொடியின் நீள, அகலம் எந்த அளவில் இருக்க வேண்டும், மூன்று வர்ணங்களும் சம அளவில் இருக்க வேண்டும். வெள்ளையின் நடுவில் நீல நிறத்தில் அசோகச் சக்கரம் இருந்திட வேண்டும்.

இந்த கோணல் கொடியில் எதுவாவது ஒழுங்காக இருக்கிறதா பாருங்கள்.

கதர்க் கொடிக்குப் பதிலாக பாலியெஸ்டர் கொடியை பயன்படுத்தலாம் என்றும் வீட்டுக்கு வீடு கொடியேற்ற வேண்டும் என்பதும் ரிலையன்ஸ் கம்பெனி தேசியக் கொடியை தயாரித்து லாபம் பார்க்கத்தான் என்று ஒரு தகவல் உலா வந்தது.

இந்த கோணல் கொடியை பார்க்கும் போது “அது நிச்சயம் அம்பானியின் தயாரிப்புதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வேறு யார் இப்படி அலட்சியமாக கொடி தயாரிப்பார்கள் !!!!

மோடியின் முதலாளி லாபம் சம்பாதிக்க அசிங்கப்பட்டது என்னவோ தேசியக் கொடிதான் . . .

Tuesday, August 16, 2022

திணித்தால் வராது தேச பக்தி

 


\பாவம் பாஜக ஆட்கள்!

சுதந்திரப் போராட்ட தியாகிகளை காட்டிக் கொடுத்த துரோகிகளை திடிரென்று தேச பக்தர்களாக வேஷம் கட்டச் சொன்னால் . . . .


இப்படித்தான் தேசியக் கொடியை தலைகீழாகப் பிடிப்பார்கள்!

இப்படியெல்லாம் திணித்தால் வராது தேச பக்தி. . .


பிகு: தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 35 வது பொது மாநாட்டை எங்கள் வேலூர் கோட்டம் பொறுப்பேற்று நடத்தியதால் நான்கு நாட்கள் வலைப்பக்கம் வர அவகாசம் கிடைக்கவில்லை. இனி மீண்டும் தொடங்கும் ஆட்டம், ஆவேசமாக . . .

Friday, December 10, 2021

நடிக்கவாவது செய்யுங்கடா . . .

 


மேலே  உள்ள படம் நாகர்கோவிலில் பாஜகவினர் முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்ட படம்.

இதுதான் இவர்களின் தேச பக்தியின் லட்சணம்.

புகைப்படம் எடுக்கும் போதாவது சிரிக்காமல் இருந்திருக்கலாம். மோடியின் கட்சி ஆளுங்களுக்கு நடிக்கத் தெரியாமல் இருப்பது அதிசயம்தான்.


Thursday, February 4, 2021

“சச்சின் வடை” போச்சே காங்கிரஸ்!

 


பாவம் காங்கிரஸ் கட்சி!

சச்சின் டெண்டுல்கரை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தீர்கள்.

 அது மட்டுமா இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வேறு அவருக்கு கொடுத்தீர்கள்.

 ஆனால் அவர் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா?

 உங்கள் கட்சியும்  ஆதரிக்கிற விவசாயிகள் போராட்டத்திற்கு எதிரான நிலையை எடுத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?

 


கங்கணா ரணவத்தாவது அக்மார்க் சங்கி. இவருக்கு என்ன வந்தது?

 


மற்ற பல நடிகர்களுக்கும் இன்றைய கிரிக்கெட் வீரர்களுக்கும் தங்கள் எதிர்கால கலையுலக, விளையாட்டுலக வாழ்வை பாதுகாக்க ஆளும் கட்சிக்கு வால் பிடிக்க வேண்டிய கட்டாயமுள்ளது. அக்மார்க் சங்கி கங்கணா ரணவத்  பாணியில் ட்வீட் செய்ய வேண்டிய தேவையும .நிர்ப்பந்தமும் உள்ளது.

 


இவருக்கு என்ன அவசியம்?

 

ஓ! அமித்தின் மகன்தான்  கிரிக்கெட் வாரிய செயலாளர் அல்லவா? சச்சினுக்கு என்ன பசியோ! என்ன தேவையோ?

 

எந்த உள்நோக்கத்தோடு அவரை எம்.பி யாக்கி பாரத ரத்னா கொடுத்தீர்களோ, அதற்கு அவர் இனி பயன்பட மாட்டாரே!

 

ஆக உங்களுக்கு வடை போச்சே!

 பிகு 1: சச்சினுக்கு பாரத ரத்னா அவசியமில்லை என்று பல வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய பதிவின்

  இணைப்பு இங்கே உள்ளது 

 அதில் பெரும் பகுதியை குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டது. சச்சினைப் பற்றி கடுமையாக எழுதியதற்கு அப்போது பலர் கோபப்பட்டார்கள்.  அவரைப் பற்றிய என்னுடைய மதிப்பீடு சரிதான் என்பதை இப்போது காலம் வெளிச்சம் போட்டு காண்பித்து விட்டது.

 பிகு 2 : சங்கிகளின் கதறலுக்கும் நிர்ப்பந்தமாக பெறப்படும் கருத்துக் குவியலுக்கும் ரியானாவின் ஒற்றை ட்வீட்தான் காரணம். நம் நாட்டுப் பிரச்சினை குறித்து பேச அவர்கள் யார் என்று பொங்கி எழும் போலி தேச பக்தர்கள் கீழே உள்ளதற்கு குறைந்த பட்சம் குஷ்பு போல பஞ்சுப் பொங்கலாவது பொங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.



பிகு 3 மேலே உள்ள ஓவியத்தை வரைந்தது தோழர் ரவி பாலேட்

பிகு 4: இந்தியாவின் இறையாண்மைக்காக செயற்கைப் பொங்கல் பொங்கிய ஒரு பிரபலமும் இந்திய மக்கட்தொகையில் பெரும்பான்மையாக இருக்கிற விவசாயிகள் பற்றி ஒரு வரி அளவிற்குக் கூட கவலைப்படவில்லையே!


Tuesday, February 2, 2021

எலியாய் இந்தியன்

 



முக நூலில் பார்த்த படம்.

பலரும் தங்கள் பார்வையில் விளக்கம் அளிக்கிறார்கள். என்னுடைய பார்வையில் இந்த எலி இந்திய மக்களாகவே தெரிகிறார்கள்.

15 லட்ச ரூபாய்க்கும் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைகளுக்கும் ஆசைப்பட்டு,

மத வெறிப் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு,

போலி தேச பக்தர்களால் உசுப்பேத்தப்பட்டு

போட்டோஷாப் பொய்களில் மயங்கி

மோடி வகையறாக்களிடம் சிக்கிக் கொண்டு விடுதலை பெற வழியின்றி தவிக்கும் எலிகளாகவே இந்தியர்களின் நிலை மாறியுள்ளது.

ஜாடியில் இருந்த தானியமாவது எலிக்கு கிடைத்தது. இந்தியர்கள் நிலையோ இன்னும் மோசம். இருந்ததையும் பறித்துக் கொண்டு விட்டது இந்த கேடு கெட்ட ஆட்சி

Tuesday, February 26, 2019

ஒரு தேசியவாதி என்பவர் ??????




எட்டு வயது பெண் குழந்தையை கோயில் வளாகத்தில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன் புணர்ச்சி செய்து முதுகெலும்பை உடைத்து கொலை செய்த உத்தமர்களை விடுதலை செய் என்று ஊர்வலம் போகும் போது கூட கையில் தேசியக் கொடியை ஏந்திச் செல்பவர்கள்.

ஒரு சாதாரண பாலியல் வன் புணர்ச்சி வழக்கை பெரிது படுத்தினால் சுற்றுலா மூலம் வரும் வருமானம் குறைந்து போகும் என்று கவலைப் படுபவர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விடாமல் கலவரம் செய்து, குற்றச் செயல் புரிந்த உத்தமர்களுக்காக வாதாடி, அரசு வழக்கறிஞர் பதவி பெறுபவர்.

ஆசிபாவுக்கு நிகழ்ந்த கொடுமையைப் பற்றி நீங்கள் பேசினால் மோடியை ஆதரிக்க வேண்டும் என்ற என் உணர்வுதான் பெருகும் என்று உத்தமர்களால் வாழ்விழந்த அந்த சின்னஞ்சிறு பெண் மீது இரக்கத்தைப் பொழிந்தவர்.

இவர்கள்தான் தேசியவாதிகள், தேச பக்தர்கள்.

இப்படியெல்லாம் செயல்பட்டு “தேசியவாதி” “தேச பக்தர்” என்ற முத்திரையை போலிகளிடமிருந்து  பெறுவதைக் காட்டிலும்

மக்களின் துயரங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமானவர்கள் யாரோ, அவர்களுக்கு எதிராக போராடி “தேசத் துரோகி” பட்டம் பெறுவதே  மேலானது. சிறந்தது.

Friday, November 23, 2018

காமெடி தேச பக்தர்கள் !!!




காவிகளுக்கு தாங்கள் பெரிய தேச பக்தர்கள் என்று எப்பவுமே ஒரு நினைப்பு இருக்கும்.

தேசம் என்றால் என்ன?
தேச பக்தி என்றால் என்ன?
தேசத்தின் சொத்துக்கள் எது?
தேசத்தின் சொத்துக்களை யாருக்கு எப்படி பகிர்ந்தளிப்பது?
தேசத்தின் சொத்துக்களை எப்படி பாதுகாப்பது?
தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யார்?
தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தது யார்?
தேசத்தின் இறையாண்மை என்றால் என்ன?
தேசத்தின் இறையாண்மையை காப்பதென்றால் என்ன?

இப்படி வரிசையாக கேள்விகளை எழுப்பினால் பதில் சொல்ல முடியாமல் காவிகள் ஓடி விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கே நன்றாகத் தெரியும், மேலேயுள்ள கேள்விகளின் அடிப்படையில் அவர்களை விட மிகப் பெரிய தேசத்துரோகிகள் யாரும் கிடையாதென்று.

ஆனாலும்  மூளைச்சலவை செய்யப்பட்ட விஷயங்களை மட்டுமே வாந்தி எடுக்கிற சில பீட்டர் விடும் அனாமதேயங்கள், தங்களை பெரிய தேச பக்தர்கள் என்று பீற்றிக் கொண்டிருக்கும்.

அவர்கள் மண்டையில் உறைப்பதற்காக ஒரு உண்மையை சொல்ல வேண்டும்.

திரிபுராவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ க்களை திரிணாமுல் காங்கிரஸ் விலைக்கு வாங்கியது. அவர்களை பாஜக அப்படியே ஹோல்சேல் ரேட் போட்டு கொள்முதல் செய்து கொண்டது. காங்கிரஸ் நரி பாஜக பரியான திருவிளையாடல் புராணம் மட்டும் வெற்றி பெற போதாது என்பதால் அங்கே உள்ள ஒரு லோக்கல் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டது.

அது எந்த கட்சி தெரியுமா?

அந்த கட்சியின் கொள்கையும் கோரிக்கையும் என்ன தெரியுமா?

அந்த கட்சியின் பெயர் IPFT (Indigenous People Front of Tripura)

இந்தியாவிலிருந்து திரிபுராவை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கை, கோரிக்கை, கோட்பாடு எல்லாமே.

இந்தியாவை துண்டாட வேண்டும் என்று வெளிப்படையாக சொல்கிற கட்சியோடு, வன்முறைக் கலவரங்களை நடத்துகிற ஒரு கட்சியோடு வாக்குகளுக்காக கூட்டணி வைக்கிற பாரதீய ஜனதா கட்சி தேச பக்த கட்சியா?

சொல்லுங்க காவிஸ், சொல்லுங்க . . .

திரிபுராவில நீங்க முதலமைச்சராக பிரிவினை கோரும் கட்சியோடு கூட்டு வச்சீங்க.

ஆனால்

ஜம்மு காஷ்மீரிலோ

சுதந்திர காஷ்மீரை கோரும் சஜ்ஜத் லோனை முதலமைச்சராக்கவே தயாராகிட்டாங்க!

IPFT யும் சரி, மக்கள் மாநாட்டுக் கட்சியும் சரி, பாஜக வரையறைப்படியே பிரிவினைவாத கட்சிகள், தீவிரவாதக் கட்சிகள்.

நாற்காலிக்காக அவர்களோடு கூட்டணி வைக்கும் பாஜகவினர்தான் தேசபக்தர்களாம்.

நல்லா காமெடி பண்றாங்கடா . . . .

Monday, February 12, 2018

ஒவ்வொரு வருஷமுமா? முடியலை . . .


இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவை மீண்டும் பகிர்கிறேன்.  இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை என்பது போல பிப்ரவரி மாதம் வந்தாலே வருகிற காதலர் தின காழ்ப்புணர்வும், பகத்சிங் மீதான போலிப் பாசமும் தாங்க முடிவதில்லை.

மக்களின் நினைவுத்திறன் குறைந்து கொண்டு வருவதும் பார்ப்பதையெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற வெறியும் காவிகளுக்கே சாதகமாகும் என்பதை பகத்சிங் பற்றிய தவறான தகவலை பகிர்ந்து கொள்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று காலை வந்த இந்த படம்தான் இந்த பதிவினை கோபத்தோடு எழுத வைத்தது.



இரண்டு மூன்று வருடங்களாகவே பிப்ரவரி மாதம் வந்தாலே சிலருக்கு சுதந்திர வேட்கையும் தியாகிகள் மீதான நேசமும் வந்து விடும்.

“பிப்ரவரி பதினான்காம் தேதி காதலர் தினம் என்று ஞாபகம் வைத்துள்ளவர்களே, உங்களுக்கெல்லாம் அன்றுதான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டார்கள் என்று தெரியுமா?” என்று உணர்வுகளை உசுப்பேத்தி விடும் போலி தேச பக்தர்கள் முகநூல், வாட்ஸப் என்று வியாபித்திருப்பார்கள். இந்த வருடமும் ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்களுக்கு பகத்சிங் மீதான பாசத்தை விட காதலர் தினத்தின் மீதான வெறுப்புதான் அதிகம்.

ஏனென்றால் அவர்களுக்கே பகத்சிங் என்று தூக்கிலிடப்பட்டார் என்பது தெரியாது.

ஆமாம் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் பிப்ரவரி 14 ம் தேதி ஒன்றும் தூக்கிலிடப்படவில்லை. 1931 ம் வருடம் மார்ச் மாதம் 23 ம் தேதி அன்றுதான் அவர்களை பிரிட்டிஷ் அரசு தூக்கிலிட்டது. ஆனால் காதலர் தினம் என்று இவர்கள் சொல்லிக் கொண்டு அலைகிறார்கள்.

ஆசிரியர் தினத்தை “குரு உத்ஸவ்”, கிறிஸ்துஸ் தினத்தை “நல்ல நிர்வாக(!) தினம் என்று மாற்றியவர்களின் தொண்டரடிப் பொடிகள் அல்லவா இவர்கள்!

இப்படி வரலாற்றை திரிக்கிறீங்களேப்பா? நியாயமா இது?

Friday, July 7, 2017

ஒரு தேச விரோதக் கவிதை

மனுஷ்ய புத்திரனின் கவிதை இது. இதில் சொல்லப்பட்டுள்ளவை உண்மை. அதனால் மீண்டும் ஒரு முறை அவர் தேச விரோதி என்று காவிகளால் அறிவிக்கப்படுவார்.



மஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல்
.........................................................
மனுஷ்ய புத்திரன்
------------------
எல்லையில்
பதட்டம் நீடிக்கிறது
எல்லையில் நாங்கள்
ஒரு சிறிய யுத்தத்தை
நடத்திக்கொள்கிறோம்
1962 ல் இருந்ததுபோல இல்லை
இப்போது எங்கள் மார்புகள்
அவை 56 இஞ்சுகளாக விரிந்துவிட்டன
மஞ்சள் தேகத்தினரே
எமது இந்த சவடால்கள் கண்டு நீர்
கோவிக்க வேண்டாம்
அவை உள் நாட்டு தேவைகளுக்கானவையே தவிர
உமக்கானவையல்ல
நமக்குள் என்ன சண்டை
நாங்கள் பல் குத்தும் குண்டுசி
நீங்கள் செய்ததுதான்
நாங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி
நீங்கள் செய்ததுதான்
எங்கள் குழந்தைகள் விளையாடும்
பொம்மையும் நீங்கள் செய்ததுதான்
ஏற்கனவே முழு நாடும்
உங்கள் கையிலிருக்கும்போது
எல்லையில் ஒரு துண்டு நிலத்தை ஆக்ரமித்து
உங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை
என்பதை அறியாதவரா நீங்கள்?
எல்லையில் எங்களுக்கு
இப்போது அவசரமாக
ஒரு யுத்தம் தேவைப்படுகிறது
தேசபக்த ஒலிப்பெருக்கியின்
பேட்டரியில் சார்ஜ் குறைந்துவிட்டது
செல்லாத நோட்டுகளுக்குப்பின்
தேச விரோதிகள் அதிகரித்துவிட்டார்கள்
ஜிஎஸ்டிக்குப் பின் மக்கள்
எல்லாவற்றிற்கும் கணக்குப் பார்கிறார்கள்
மாட்டிக்கறிக்காக தோல் உறிக்கப்படும் மனிதர்கள்
அதிகமாக கூச்சல் போடுகிறார்கள்
விவசாயிகள் ஜட்டி போடாமல்
பிரதமர் அலுவலகம் முன் வந்து நிற்கிறார்கள்
எல்லையில் ஒரு சிறிய யுத்தம் வந்தால்
எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்
உள் நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமெனில்
எல்லையில் கொஞ்சம் பதட்டம் வேண்டும்
கார்கில் போரில் பனிபடந்த மலைகளில்
வெற்றிடத்தில் பீரங்கிகள் சுடுவதை
நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தோம்
துல்லியத் தாக்குதலின் போது
இந்தியா எழுச்சியடைந்து
தனது எல்லாக் கவலைகளையும்
மறந்ததுபோல இப்போதும்
_ எழுச்சியடைய, விரும்புகிறோம்
அனுமதியுங்கள்
எல்லையில் ஒரு சிறிய யுத்தத்தை நடத்திகொள்கிறோம்
யாரோ சில அப்பாவி பலியாடுகள்
இரு புறமும் இறப்பார்கள்
நாட்டின் வளர்ச்சிக்கு அவ்வப்போது
தியாகங்கள் முக்கியம்
சமாதானத்திற்குப் பிறகு
புதிய இந்தியா இன்னொரு முறை பிறக்கும்
அரசர் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட
உங்கள் தேசத்திற்கு வெற்றி வீரனாக வருவார்
இப்போது அவசரமாக எங்களுக்கு
எல்லையில் ஒரு சிறிய யுத்தம் தேவைப்படுகிறது
நீங்கள் இப்போது எங்களை
ஒரு சிறிய யுத்த்திற்கு அனுமதித்தால்
நாங்கள் உங்களுக்குத் தேவைப்படும் போது
ஒரு சிறிய யுத்த்த்தை அனுமதிப்போம்
அண்டை நாடுகளுடனான
எங்கள் வெளியுறவுக்கொள்கையை
இதைவிட எளிமையாக
என்னால் விவரிக்க முடியாது
நல்லெண்ணத்தின் அடிப்படையில்
அன்பு கூர்ந்து
ஒரு சிறிய யுத்தத்தை எங்களுக்கு
அனுப்பி உதவுங்கள்...

Sunday, April 23, 2017

காஷ்மீர் – ஒரு தேச விரோதியின் மனசாட்சி



               


இப்படி ஒரு அராஜகம் வேலூர் சிப்பாய் புரட்சியின் போது நிகழ்ந்ததாய் படித்துள்ளேன்.

வேலூர் சிப்பாய் புரட்சியை முன்னின்று நடத்திய தளபதிகளை பீரங்கிகளின் வாயில் கட்டி சிதறடித்தார்கள் என்பது வெள்ளையர்கள் நடத்திய அராஜக வரலாறு.

அதற்கு சற்றும் குறைந்ததல்ல ஒரு காஷ்மீர் வாலிபரை ஜீப்பின் முன்னால் கட்டி ஊர் ஊராக இழுத்துச் சென்ற இந்திய ராணுவத்தின் செயல்.

மனிதாபிமானம் உள்ள அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டிய செயல் இது. ஆனால் தவறான இந்த செயலை நியாயப்படுத்த ஏராளமான ஆட்கள் கிளம்பியுள்ளனர். கல்லெறியும் கும்பலிடமிருந்து ராணுவ வீரர்களை பாதுகாக்க ராணுவம் மேற்கொண்ட புத்திசாலித்தனமான நடவடிக்கை என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. ஜீப்பில் கட்டப்பட்டவன் ஒரு தீவிரவாதி, கல்லெறியும் கபோதி என்றெல்லாம் வசை பாடப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு  உள்ளாக்கப்பட்ட பெண்ணை தவறான நடத்தை உள்ளவராக சித்தரிக்கும் இழிசெயலுக்கு கொஞ்சமும் குறையாத கொடுமை, பாதிக்கப்பட்டவரை தீவிரவாதி என்று வர்ணிப்பது..

கல்லெறிந்தவர் என்று ராணுவத்தால் சொல்லப்பட்டவர் உண்மையிலேயே ஒரு அப்பாவி. ஆமாம் அப்பாவிகளிடம்தானே அதிகார வர்க்கம் எப்போதும் தனது வீரத்தை காண்பிக்கும். ஃபாரூக் அகமது தர் என்ற அந்த அப்பாவி, காஷ்மீர் இடைத்தேர்தலில் வாக்களித்த 7.1 % வாக்காளர்களில் அதாவது 31,476 பேரில் ஒருவர். பைக்கில் தனியாகிப் போய்க் கொண்டிருந்த அவரை அடித்து உதைத்து ஜீப்பில் கட்டி, கல்லெறிபவர்களுக்கு இதுதான் கதி என்று மனிதத்தன்மையற்ற முறையில் நடந்து கொண்டுள்ளது ராணுவம். இதற்கு காரணமானவர்கள் யாரோ, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். சிலரது பொறுப்பற்ற செயல், நிலைமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. ராணுவத்தின் மீது காஷ்மீர் மக்களுக்கு உள்ள அவநம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. இடைவெளி இன்னும் பெரிதாகி உள்ளது.

காஷ்மீர் மக்கள் இந்தியாவிடமிருந்து அன்னியப்படுவதாக உணர்வதற்கு முக்கியக் காரணமாக தொடர்ந்து பல்லாண்டுகளாக நிகழும் ராணுவ அத்துமீறல்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இலங்கையில் காணாமல் போன தமிழ் இளைஞர்களுக்காக அனுதாபப்படுபவர்கள் இங்கே உள்ளனர். அந்த உணர்வு நியாயமானதும் சரியானதும் கூட. ஆனால் இந்தியாவிலும் ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எத்தனையோ இளைஞர்கள் பல ஆண்டுகளாக வீடு திரும்பவேயில்லை என்பது தெரியுமா?

ஒரு மிகப்பெரிய பட்டியலையே சில ஆண்டுகள் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் வழங்கினார். ராணுவ அதிகாரங்கள் சிறப்புச் சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை காஷ்மீர் மக்களால் அழுத்தமாக வலியுறுத்தப்படுகின்றது என்றால் அதற்கு அவர்கள் மீது நடந்த தாக்குதல்கள்தான் காரணம். பாலியல் வன் கொடுமை நிகழ்த்திய ராணுவ வீரர்கள் சிறு கீறல்கள் கூட இல்லாமல்  சட்டப் பாதுகாப்பு பெற்று தப்பிப்பதை அம்மாநில மக்கள் கையாலாகதவர்களாக வேடிக்கை பார்க்கும் அவலம் தொடர வேண்டுமா?

எப்போதெல்லாம் ராணுவத்தின் அத்து மீறல் அதிகமாகிறதோ, அப்போதெல்லாம் மக்களின் எதிர்வினையும் கடுமையாகிறது. அத்து மீறல்களை போர்வைக்கு அடியில் புதைத்து விட்டு எல்லாவற்றுக்கும் தீவிரவாதிகளின் தூண்டுதல்கள்தான் காரணம் என்று ப்ழி போட்டுக் கொண்டிருந்தால் காஷ்மீர் எப்போதுமே எரிந்து கொண்டுதான் இருக்கும்

காஷ்மீர் மக்கள் கொதிப்போடு இருப்பதன் காரணத்தை உணர மறுத்தால் அங்கே யாரால் எப்படி அமைதியை உருவாக்க முடியும்/

ஜம்மு காஷ்மீர் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட போது நாடெங்கிலும் உள்ள எங்கள் தோழர்கள் அளித்த நிதி கொண்டு பல்வேறு நிவாரணப்பணிகள் நடைபெற்றது. கடந்த ஜனவரியில் எங்கள் அகில இந்திய மாநாடு எர்ணாகுளத்தில் நடைபெற்றது. அந்த நிவாரணப் பணிகள் பற்றிய தனது அனுபவங்கள் குறித்து இம்மாநாட்டில் எங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் பேசியதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர் லால் சௌக் மைதானத்தில் இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றிய அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதிக்கு நாம் நம் சங்கத்தின் சார்பில் ஆம்புலன்ஸ்கள் கொடுத்த போது “வித்தியாசமான இந்தியாவை உங்களிடம் பார்க்கிறோம்”  என்று அம்மக்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

இதுதான் அந்த மக்களின் மன நிலை. அப்படிப்பட்ட நிலைக்கு தள்ளியதில் நேரு தொடங்கி மோடி வரை அனைத்து பிரதமர்களுக்கும் பங்கு உண்டு. உள்ளதையும் பறிக்கிற செயல்திட்டமுள்ள மோடி பிரதமரானது நிலைமையை மேலும் சிக்கலாக்கி விட்டது.

காஷ்மீரின் வரலாற்றை கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்வோம்.

காஷ்மீர் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியல்ல. அவர்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கிய அரசரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி. இந்திய விடுதலையின்போது இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேர அன்றைய காஷ்மீர் மன்னர் ஹரிசிங் விரும்பவில்லை. தனித்தே இருக்க விரும்பினார். மக்களில் பெரும்பான்மையாக இருந்த இஸ்லாமியர்களும் பாகிஸ்தானோடு இணைய விரும்பவில்லை. அவர்களின் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லா, இந்தியாவில் இணைய விரும்பினார்.

பாகிஸ்தான் காஷ்மீரைக் கைப்பற்ற பதான்களை அனுப்ப, இந்தியாவின் உதவி கோரப்பட்டது. இந்திய ராணுவத் தலையீட்டின் காரணமாக காஷ்மீரின் கணிசமான பகுதி பாகிஸ்தான்வசம் செல்லாமல் பாதுகாக்கப்பட்டது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஏராளமான உறுதிமொழிகள் அளிக்கப்பட்டது. அரசியல் சாசனப் பிரிவு 370 உருவாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் ஸின் சிஷ்ய கோடியாக அப்போது காஷ்மீரில் செயல்பட்ட அமைப்பு இந்தியாவுடன் இணைய மறுத்தது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இன்று அவர்கள்தான் தேச பக்த நாடகம் போடுகிறார்கள்.

காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு உறுதிமொழிகள் கைவிடப்பட்டதும் 370 பிரிவு நீர்த்துப் போக வைத்ததும். காங்கிரஸ் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளும் அங்கே தீவிரவாதம் துளிர்க்க காரணமாக இருந்தது. தீவிரவாதத்தை ஒடுக்க சென்ற ராணுவத்தின் கை ஓங்கியதும். சுய நலம் மிக்க சில அதிகாரிகள் பதவி உயர்வுக்காகவும் பரிசுகளுக்காகவும் போலி எண்கவுன்டர்கள் நடத்தியது இளைஞர்களை கைது செய்து காணாமல் போக வைத்தது ஆகியவை மக்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளியை அதிகரித்தது. இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளாதவர்களே காஷ்மீர் பிரச்சினை பற்றி கருத்து சொல்கின்றனர்.

தீவிரவாதிகள் தேர்தலை புறக்கணிக்கச் சொன்னதால்தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது என்று சொல்வது சரியாக இருக்க முடியாது. ஒவ்வொரு தேர்தலையும் தீவிரவாதிகள் புறக்கணிக்கத்தான் சொல்கிறார்கள். ஆனால் அந்த மிரட்டலைத்தான் மக்கள் இதுநாள் வரை புறக்கணித்துள்ளனர். மிகப்பெரிய அளவிலான வாக்குப்பதிவு என்பது எப்போதுமே காஷ்மீரில் நடந்ததில்லை ஆனாலும் ஏழு சதிவிகிதம் என்ற மோசமான நிலை வந்தது கிடையாது.

மக்களின் கோபத்தை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு புள்ளி விபரமே ஏழு சதவிகித வாக்குப்பதிவு என்கிற போதே அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனநாயகத்தை ஏற்க மறுக்கிறார்கள்  என்பதன் அடையாளம்.

பல ஆண்டுகள் தேர்தலே நிகழாமல் பின்பு எண்பதுகளின் இறுதியில் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுப் போனது. அது குறித்து பத்திரிக்கை நிருபர்கள் அப்போதைய பொதுச்செயலாளர் திரு கருப்பையா மூப்பனாரிடம் கேட்கிறார்கள்.

“தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் தேர்தலை நடத்தியதே காங்கிரஸ் கட்சியின் வெற்றி”

என்று அவர் சொன்னார். அது சமாளிப்புதான் என்றாலும் கூட அந்த நிலையில் தேர்தல் நடந்ததே பெரிய விஷயம்தான்.

இருபத்தி ஐந்து சதவிகிதத்திலிருந்து ஐம்பது சதவிகிதம் வரைதான் அங்கே வாக்குப்பதிவு சதவிகிதம் பெரும்பாலும் அமைந்திருக்கும். (தேர்தல் ஆணைய இணையதளத்தில் அந்த புள்ளிவிபரங்கள் இருக்கின்றன)  அந்த நிலையிலிருந்து முன்னேறி கடந்த 2014 சட்டமன்ற தேர்தலில் 65 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி, தோண்டியை போட்டுடைத்த கதையாக இப்போது இவ்வளவு மோசமான வாக்குப்பதிவிற்கு என்ன காரணம்?

வெறுமனே தீவிரவாதிகள் மீதும் பாகிஸ்தான் மீதும் பழி போட்டு விட்டு கண்களை மூடிக் கொண்டிருக்கப் போகிறோமோ?

பர்கான் வானியின் மரணம், அதற்கான எதிர்வினையான போராட்டங்கள், அதனை அடக்க நிகழ்ந்த அத்துமீறல்கள், கொல்லப்பட்ட உயிர்கள், ஏவப் பட்ட பெல்லட் குண்டுகள், அவை ஊடுறுவி நிகழ்ந்த காயங்கள், பறிக்கப்பட்ட கண் பார்வை, இவை எல்லாமே மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருக்கின்றன. தீவிரவாதிகளின் அறைகூவலுக்கு ஒத்துழைக்கும் மன நிலையை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரை வெறும் மண்ணாக, நாட்டின் எல்லையாக பார்ப்பதை விடுத்து மக்களாக என்று ஆட்சியாளர்கள் பார்ப்பார்களோ, அவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கான நடவடிக்கைகளை எப்போது எடுக்கத் தொடங்குவார்களோ, அப்போதுதான் நிலைமை மாறும்.

அப்படிப்பட்ட அரசியல் பார்வையோ, உறுதியோ கொண்ட ஆட்சியாளர் மோடி அல்ல என்பது துயரம் தோய்ந்த யதார்த்தம்.

இனி நான் எப்போதுமே வாக்களிக்க மாட்டேன் என்பது பாரூக் அகமது தர்ரை சொல்ல வைத்ததுதான் ராணுவம் நிகழ்த்திய சாதனை. இது நிச்சயம் ஜனநாயகத்துக்கு நிகழ்ந்த துயரம். அவருக்கு நடந்த கொடுமை மேலும் பலரை அம்முடிவை நோக்கி தள்ளியிருக்கும் என்பது இன்னொரு சோகம்.

பழி ஒன்று சொல்லி
ஜீப்பின் மேலே
கட்டிப் போட்டார்.
பாதாளத்திற்குப் போனது
தேசத்தின் பெருமை.

வாகனம் சாலையில் சென்றது
இந்தியாவின் மானமோ
காற்றில் பறந்தது.

அவனைக் கட்டிய
கயிற்றால்  அறுபட்டது 
ஆள்வோர்  மீதான
நம்பிக்கை.

கல்லெறிபவர்களுக்கு எச்சரிக்கை
என்றதொரு கபட நாடகத்தால்
அமைதியின் அடித்தளம்தான்
ஆட்டம் கண்டது.

குளிர் நிலவும் பூமியில்                       
ஏமாற்றப்பட்ட மக்களின்
மனம் மட்டும்
எப்போதுமே சூடாய்..

நெருப்பை அணைக்க வேண்டியவர்கள்
நெய் வார்த்து வளர்க்கிறார்கள்
வெறுப்புத் தீயை.

மனிதக் கவசமென்று சொல்லி
காட்சிப் பொருளாய்
இழுத்துச் சென்றது
பதிவானது
காஷ்மீர் வரலாற்றில்
ஓர் கரும் புள்ளியாய்.    

 
பின் குறிப்பு : போலி தேச பக்தர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் எரிச்சலூட்டும். அவர்கள் எரிச்சலடைந்தால், கோபப்பட்டால் அது எனது நியாயத்திற்குக் கிடைத்த வெற்றி. அவர்கள் நிச்சயம் தேச விரோதி என்ற வழக்கமான முத்திரையை கொடுக்கத்தான் போகிறார்கள். அதனால் நானே எனக்கு பட்டம் அளித்துக் கொண்டேன்.