Showing posts with label மலைவாழ் மக்கள். Show all posts
Showing posts with label மலைவாழ் மக்கள். Show all posts

Tuesday, October 20, 2015

கரவொலிகளாய் வெடித்த ரணங்கள்



(நீண்ட நாட்களாக டிராப்டிலேயே இருந்ததை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்)

திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஏழாவது மாநில மாநாட்டு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றது ஒரு நல்ல அனுபவம்.






 

பேரணி வந்து சேருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக சென்றடைந்தோம். முன் வரிசையில் சில நாற்காலிகளில் மட்டுமே தோழர்கள் அமர்ந்திருந்து கலை நிகழ்ச்சிகளை பார்த்துக்! நாற்காலிகளில் அமர்ந்தவர்களின் எண்ணிக்கைக்கு நிகராக எண்ணிக்கையில் கொண்டிருந்தார்கள். பேரணி வந்து சேர்ந்த அடுத்த நிமிடம் அத்தனை நாற்காலிகளும் நிறைந்து போனது. தங்களுக்கு ஒரு இடத்தைப் பிடிக்க என்று முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என ஓட்டம் ஓட்டமாக ஓடிப் போன காட்சியை இதுவரை எந்த நிகழ்விலும் பார்த்ததில்லை. எளிய உழைப்பாளி மக்கள் அல்லவாஇடம் கிடைக்காமல் நின்று  கொண்டிருந்தார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் அவர்களின் உரையிலிருந்து சில பகுதிகளை முந்தைய இரண்டு பதிவுகளில் பகிர்ந்து கொண்டிருந்தேன். தோழர் பிருந்தா அவர்கள் உரையாற்றும் போது முக்கியமான இரண்டு விஷயங்களப் பற்றி அவர் பேசும் போது வந்த மலைவாழ் மக்களிடமிருந்து பலத்த ஆரவாரம் இருந்தது.

“எங்கள் மலைவாழ் மக்கள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால் கலாச்சாரத்திலும் சுய மரியாதையிலும்  மேன்மையானவர்கள். எங்களது பெண்களின் மானத்தோடு காவல்துறையோ, வனத்துறையோ விளையாடினால் அதை சகித்துக் கொள்ள மாட்டோம். அதை எதிர்கொண்டு முறியடிப்போம். எங்கள் பெண்களுக்கு உங்களால் சிக்கல் வருமானாலும் செங்கொடி கொண்டு அதை தடுப்போம்”

என்றும்

“மாநில அரசு ஒப்புக் கொண்ட போதும் மலைவாழ் மக்களுக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மேல் மட்ட அதிகாரிகள் வரை அலட்சியப்படுத்தி வருகின்றனர். சான்றிதழ் என்பது அவர்களது உரிமை. அது ஒன்று அதிகாரிகளின் மூதாதையர் சொத்து கிடையாது. குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு முதல் முறையாக 110 பேருக்கு சான்றிதழ் கிடைத்துள்ளது. அடைபட்டுக் கிடந்த தகவல்களை திறந்து விட்டோம். மற்றவர்களுக்கும் கிடைக்க தொடர்ந்து போராடுவோம்.”

இந்த இரண்டு விஷயங்களின் போது மட்டும் அவர்கள் மிகவும் ஆரவாரமாக வரவேற்றார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு.

காவல்துறையாலும் வனத்துறையாலும் மலைவாழ் மக்கள் தொடர்ந்து சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பொய் வழக்கு போடுவது, அவர்கள் பயிர் செய்த விளைபொருட்களை சூறையாடுவது, இருப்பிடங்களை காலி செய்ய மிரட்டுவது, பாலியல் இச்சைக்கு பெண்களை உட்படுத்துவது போன்ற கொடுமைகள் சர்வ சாதாரணம். வாச்சாத்திப் பிரச்சினையும் திருக்கோயிலூர் அருகே இருளர் இனப் பெண்கள் காவலர்களால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது ஓரளவு ஊடகங்கள் மூலமாக வெளி வந்த செய்தி. ஆனால் ஊடக வெளிச்சம் படாமல் எவ்வளவோ கொடுமைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

அது போல எஸ்.டி சான்றிதழ் பெறுவது என்பது இன்று குதிரைக் கொம்பாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஒப்புக் கொண்டால் கூட கீழேயுள்ள அதிகாரிகள் மறுப்பது என்பது பல மாவட்ட அனுபவம். பழங்குடி மக்களின் குழந்தைகள் படித்து முன்னேறுவது என்பது அதிகாரிகளுக்கு கசக்கிறது. இட ஒதுக்கீடு என்பது சட்டத்தில் இருந்தாலும் சான்றிதழ் வழங்கப்பட மறுப்பதால் அதை அவர்கள் அனுபவிக்க முடியாத நிலைதான் இருக்கிறது. விடுதலை பெறுவதற்கு முன்பு என்ன நிலையில் இருந்தார்களோ, அப்படித்தான் இப்போதும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இந்த இரண்டும்தான் பழங்குடி மக்களின் முக்கியமான இரண்டு பிரச்சினைகள். காவல்துறை, வனத்துறை யின் அட்டூழியங்களும் ஜாதி சான்றிதழ் கிடைக்காத துயரமும் அவர்களின் மனங்களில் மாறாத ரணங்களாக இருக்கின்றன.

அதனால்தான் அப்பிரச்சினைகள் பற்றி தோழர் பிருந்தா காரத் பேசிய போது அவர்கள் அப்படி ஆரவாரம் செய்து வரவேற்றதாக நான் உணர்கிறேன்.

மோடி போல கூட்டத்தில் பேசிய உடனே மறந்து போகிற பாரம்பரியம் இடதுசாரிகளுக்குக் கிடையாது.

சொல்லப்பட்ட பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவார்கள். வெற்றியும் பெறுவார்கள். மலைவாழ் மக்களின் வாழ்வில் நிச்சயம் விடியல் பிறக்கும்.




Sunday, October 4, 2015

இந்த கேசையும் கவனியுங்க, அம்மாஜி

 

இடதுசாரிக் கட்சிகளின் வலியுறுத்தலால் 2005 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வன உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. 

ஆனால் பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் மட்டும் ஒரு மலைவாழ் மக்களுக்குக் கூட அவர்கள் குடியிருக்கும் இடத்தின் பட்டா வழங்கப் படவில்லை. ஒரு பட்டா கூட வழங்கப்படாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. திமுக, அதிமுக இரண்டு அரசுகளுமே வன உரிமைச் சட்டத்தை அமலாக்குவது பற்றி கவலைப்படவில்லை.

வனத்தை பாதுகாக்கிற, வனத்தின் உண்மையான சொந்தக்காரர்களான மலைவாழ் மக்களுக்கு  அவர்களுக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவைக் கொடுத்தால் காட்டு விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என சில தீய எண்ணம் கொண்டவர்கள் வழக்கு தொடுக்க சென்னை உயர்நீதி மன்றமும் ஒரு பிற்போக்குத் தனமான தடை உத்தரவை வழங்கி வன உரிமைச் சட்டத்தின் அமலாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளது. அந்த தடையை நீக்குவதற்கான முயற்சிகளையோ, மேல் முறையீட்டையோ இரண்டு கழக அரசுகளும் செய்யவில்லை.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் சேர்ந்த பெரிய புள்ளிகள், போலி ஆவணங்கள் மூலம் மலைகளை, காடுகளை அழித்து பெரிய பெரிய உல்லாச மாளிகைகள  கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கு தொடுத்த அந்த மனிதர்கள், இவர்கள் இயற்கையை அழிப்பது பற்றியோ, இயற்கை வளத்தை சுரண்டுவது பற்றியோ கவலைப்படுவது கிடையாது.

உங்கள் மீதான் ஊழல் வழக்குகளிலிருந்து வெளி வருவதற்கு ஏராளமான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிற தமிழக முதல்வர் அம்மாஜி அவர்களே, வன உரிமைச் சட்டத்தின் மீதான தடையாணையை அகற்ற என்ன செய்யப் போகிறீர்கள்? 

இந்தியாவிலிருக்கிற பிரபல வழக்கறிஞர்களையெல்லாம் உங்களை விடுவிப்பதற்காக கொண்டு வந்து நிறுத்த முடிகிற உங்களால் ஏன் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க எந்த சட்டபூர்வமான நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை?

உங்கள் வழக்குகள் மீது காண்பிக்கும் அக்கறையில் சிறு பகுதியையாவது இந்த மண்ணின் பூர்வ குடிகளுக்கான உரிமைகளை வழங்குவதற்கான வழக்கிலும் செலுத்துங்கள்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டு பொதுக் கூட்டத்தில்
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
தோழர் பிருந்தா காரத்.

திருவண்ணாமலையில் நேற்று.
பட உதவி : தோழர் கருப்பு கருணா