Showing posts with label புரட்சி. Show all posts
Showing posts with label புரட்சி. Show all posts

Sunday, October 9, 2022

எதிரிகளுக்கும் பார்வை கொடுத்தவன்



 சே - எதிரிகளுக்கும் பார்வை கொடுத்தவன்

தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன்,

ஆசிரியர் (ஓய்வு), ஃப்ரண்ட்லைன்.

(இன்று சே குவேரா கொல்லப்பட்ட தினம். சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் இந்துவில் நான் எழுதிய கட்டுரை)
”எனக்கு முன்னால் மருந்துகள் நிரம்பிய ஒரு சாக்குப் பையும், தோட்டாக்கள் நிறைந்த பெட்டியும் இருந்தது. கனமான இரண்டையும் தூக்கிக் கொண்டு என்னால் நடக்க முடியாது. சாக்குப் பையை அங்கேயே விட்டுவிட்டு தோட்டாக்கள் இருந்த பெட்டியை நான் எடுத்துக்கொண்டேன்.”

அர்ஜெண்டினாவின் ரோசாரியோ நகரில் வாழ்ந்த பெற்றோருக்கு இப்படித் தன் பிரியாவிடைக் கடிதத்தை எழுதிவிட்டுதான் தன் முடிவில்லாப் புரட்சிப் பயணத்தைத் தொடங்கினார் டாக்டர் சே குவேரா. அவரைக் கடைசியாகப் பேட்டி கண்ட உருகுவே நாட்டுப் பத்திரிக்கையாளர் இப்படி எழுதுகிறார்: “சே ஒரு அதிபுத்திசாலியான மருத்துவ மாணவர். ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்வார். ஆறு மணி நேரம் தன் பிழைப்புக்கு. ஆறு மணி நேரம் படிப்புக்கு. அதே நேரத்தில் உயர் கணிதம் குறித்த சிக்கல் நிறைந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தார். கவிதைகள் எழுதினார். சவால் நிறைந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார். தன் 17-வது வயதிலேயே தத்துவங்கள் பற்றிய நிகண்டைத் தொகுக்கத் தொடங்கினார்!”

சாகச மனம்

அடிப்படையிலேயே சாகசக்காரனின் மனம் படைத்திருந்த சே குவேராவுக்கு இதில் எதிலும் தொடர்ந்து மனம் லயித்துச் செயல்பட முடியவில்லை. நான்கு வயதிலிருந்தே அவரைக் கடுமையாகப் பாதித்திருந்த ஆஸ்துமா நோயால்கூட அவரது புரட்சியின் உத்வேகத்தைத் தடுக்க முடியவில்லை. சிறுவயதில் கால்பந்து, ரக்பி விளையாடுவார். மூச்சுத் திணறும்போது நண்பர்கள் அவரை வெளியே தூக்கிச் செல்வார்கள். மருத்துவரான பின்னும் விளையாடும்போது ஆஸ்துமா தாக்குதல் ஏற்பட்டால் ஓரமாகச் சென்று ஒரு ஊசிமூலம் மருந்தை உடலில் செலுத்திக்கொண்டு மறுபடியும் விளையாட வந்துவிடுவார்.

ஆஸ்துமா இருப்பதால் அர்ஜெண்டினாவின் ராணுவம் இவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்தது. ராணுவத்துக்குத் தகுதியற்ற இந்த ஆஸ்துமா நோயாளிதான் தன் மைக்ரோன் மோட்டார் சைக்கிளில் ஆயிரக் கணக்கான மைல்கள் பயணம் செய்து ஆண்டிஸ் மலைத்தொடரையும் கடந்து பொலிவியாவுக்கும், பிறகு குவாட்டமாலா நாட்டுக்கும் சென்றார். குவாட்டமாலாவை ஆண்டு வந்த ஜேகப் ஆர்பென்ஸ் தீவிரமான நிலச் சீர்திருத்தம் செய்துகொண்டிருந்தார். அதன் பயனாக 5 லட்சம் பூர்வகுடி மக்களுக்கு நிலம் கிடைத்தது. அந்தக் காலத்தில் லத்தீன் அமெரிக்க நிலங்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனமான யுனைட்டெட் ஃப்ரூட் கம்பெனியின் கையில் இருந்தன. ஆர்பென்ஸின் சீர்திருத்தங்களால் ஆத்திரமடைந்த அந்த நிறுவனம் அமெரிக்க அரசிடம் புகார் சொன்னது. அமெரிக்க சிஐஏ உதவியுடன் நடத்தப்பட்ட ராணுவப் புரட்சியில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்பென்ஸ் அரசு வீழ்ந்தது. அதற்கு முன்பே பெரு நாட்டின் புரட்சிக்காரர் ஹில்டா காடியாவிடமிருந்து மார்க்ஸியம் குறித்தும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்துவந்த போராட்டங்கள் புரட்சிகள் குறித்தும் அறிந்து வைத்திருந்த சே குவேராவின் சிந்தனையில் புரட்சித் தீ மூண்டது இத்தருணத்தில்தான்.

சபதம்

“யுனைட்டட் ஃப்ரூட் கம்பெனிக்குச் சொந்தமான நிலத்தைக் கடந்து செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த முதலாளித்துவ ஆக்டோபஸ்களின் வெறுக்கத்தக்க தன்மையை நான் உணர்ந்தேன். இந்த ஆக்டோபஸ்களை அழித்தொழிக்கும் வரை நான் ஓய மாட்டேனென்று தோழர் ஸ்டாலினின் படத்துக்கு முன் சபதமெடுத்துக்கொண்டேன். குவாட்டமாலாவில் நான் என்னையே மேம்படுத்திக்கொண்டு உண்மையான புரட்சியாளனாக எழுவேன்” என்று சே தனது அத்தைக்கு எழுதிய கடிதத்தில் எழுதினார். குவாட்டமாலாவில் ராணுவப் புரட்சி நடந்த நேரத்தில் காடியாவுடன் சேர்ந்து மெக்சிகோவுக்குத் தப்பிச் சென்றார்.

அக்காலத்தில் ஒரு முறை அருகில் இருந்த கோஸ்டாரிகா நாட்டுக்குச் சென்ற சே ஒரு காப்பிக் கடையில் கியூபா நாட்டின் இளைஞர்களின் உற்சாகமான உரையாடலைக் கேட்டார். தங்கள் நாட்டின் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராக ஒரு புரட்சிப் படை மோன்கடா எனும் ராணுவத் தளத்தின்மீது தொடுக்கப்போகும் தாக்குதலைப் பற்றிதான் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அதை நம்பமுடியாத சே, “ஏன் நீங்கள் வேறொரு கவ்பாய் கதையைச் சொல்லக் கூடாது?” என்று கேட்டார். இதே இளைஞர்களை மீண்டும் மெக்சிகோவில் சந்தித்தார். மோன்கடா தாக்குதலுக்குப் பின் கைதுசெய்யப்பட்டு பின்னர் பொது மன்னிப்பில் வெளிவந்திருந்த நெடிதுயர்ந்த ஒரு மனிதரை அந்த இளைஞர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அவர் பெயர் ஃபிடல் காஸ்ட்ரோ. புரட்சிப் படையில் சே இணைந்தார். அர்ஜெண்டினா ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட சே, காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவின் மிகச் சிறந்த மாணவராகக் கருதப்பட்டார்.

பொலிவியப் புரட்சி

கியூபப் புரட்சியின்போது துப்பாக்கியைச் சுமந்துகொண்டு கழுத்து வரை இருக்கும் சேற்றில் நடந்து சென்றதும் இந்த ஆஸ்துமா நோயாளிதான். அதற்குப் பிறகு நிகழ்ந்தது உலகையே குலுக்கிய புரட்சி வரலாறு. காஸ்ட்ரோ அரசின் பொருளாதார அமைச்சராக இருந்த சே, அடுத்து பொலிவியாவுக்குப் புரட்சி நடத்தச் சென்றார்.

பொலிவிய புரட்சிப் படையை நடத்திச் சென்ற அவரையும் சகாக்களையும் ராணுவம் சூழ்ந்தது. அவருடைய இரு கால்களையும் சுட்டு வீழ்த்தினார்கள் ராணுவத்தினர். அதற்குப் பின்னும் தன் கையிலிருந்த எம் 1 துப்பாக்கியை வைத்துக்கொண்டு தரையில் அமர்ந்தவாறே இரண்டு மணி நேரம் சண்டையைத் தொடர்ந்தார். நேரடியாக ஒரு குண்டு அவர் கைகளில் பாய்ந்ததால் துப்பாக்கி கையை விட்டு நழுவியது. அவரை ராணுவ முகாமுக்குத் தூக்கிச் சென்றனர். அந்தப் புரட்சிக்காரனை என்ன செய்வது என்று முடிவெடுக்க பொலிவிய அரசால் முடியவில்லை. ஒரு இரவு ஒரு பகல் முடிந்த பின்னும் முகாமில் மயான அமைதி. பொலிவிய அதிபரின் முடிவு முகாமுக்குத் தெரிவிக்கப்பட்டது. சண்டை நடக்கும்போதே சே குவெராவைக் கொன்றது போலத் தோற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது உத்தரவு.

காயமடைந்த சே குவேராவின் எகத்தாளப் புன்னகையை அதற்கு மேலும் தாங்க முடியாத மரியோ டெரான் சலாசார் என்கிற பொலிவிய ராணுவ வீரன் கைத்துப்பாக்கியைக் எடுத்தான். “நீ இங்கு என்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். கோழையே என்னைச் சுடு. நீ ஒரு மனிதனை மட்டும்தான் கொல்லப் போகிறாய்,” என்றார் சே. குண்டுகள் சீறிப்பாய்ந்தன. புரட்சி இதயம் அடங்கியது. மந்திரம் போன்ற வாழ்க்கைக்கு மந்திரம் போன்ற முடிவு என்று எழுதினார் கலியானோ. சே குவேராவின் அன்றைய வயது 39. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின், சே குவேராவைச் சுட்ட டெரானின் கண்ணில் ஏற்பட்ட புரை கியூப அரசின் மருத்துவ உதவியுடன் அகற்றப்பட்டது. எதிரிகளுக்கும் பார்வையைத் தந்ததுதான் சே குவேராவின் புரட்சி.

-ஆர். விஜயசங்கர், ஆசிரியர், ஃபிரண்ட்லைன்

Saturday, November 7, 2020

வரும், நிச்சயம் மீண்டும் வரும்





 
மனிதனை மனிதன் சுரண்டும்
இழிநிலை தொடர்கிறது.

வறியவனுக்கும் வளம் படைத்தவனுக்குமான
இடைவெளி அதிகரிப்பதும் தொடர்கிறது.

இல்லாதவனிடமுள்ள சொற்பத்தையும் பறித்து
இருப்பவனுக்கே சேர்க்கிற அரசுகள் தொடர்கிறது.

பசியும் பஞ்சமும் பட்டினியுமாய் நரகத்தில் பலர் உழல,
சொர்க்கத்தில் பலர் மிதப்பதும் தொடர்கிறது.

அடக்கி வைக்கப்படும் ஆத்திரம்
பெரும் புயலாய் சீறிப் பாயும்.

உள்ளத்துக்குள் குமுறுபவர்கள்
எரிமலையாய் வெடிப்பார்கள்.

வருடங்கள் ஓடினாலும் 
அன்றைய சூழல் மீண்டும் வருகையில்

அன்று உலகைக் குலுக்கிய
ரஷ்யப்புரட்சி 
இனி உலகெங்கும் மீண்டும் வரும்.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டுமென்ற
பொதுவுடமை மாற்றம் மீண்டும் வரும்.
நிச்சயம் வரும்.

நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள் 

 



Friday, October 9, 2020

சே – மரணிக்காத விழிகள்

 உண்மையான புரட்சியாளனான தோழர் சேகுவாராவின் விழிகளை மட்டும் அற்புதமான ஓவியம் மூலம் அளித்துள்ளார் இயக்குனரும் நடிகருமான திரைக் கலைஞரான தோழர் பொன்வண்ணன்.

 


சே வின் விழிகளுக்கு மட்டுமல்ல, அவரது போராட்ட உணர்வுக்கும் என்றும் மரணமில்லை. முதலாளித்துவத்திலிருந்து சுரண்டலிலிருந்து மத அடிப்படைவாதத்திலிருந்து  மக்களை விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சே என்றென்றும் உத்வேகம் அளித்துக் கொண்டே இருப்பார்.

 

செவ்வணக்கம் தோழர் சே!

Friday, March 23, 2018

இன்று. இன்றுதான் அந்நாள்



மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு ஆகியோர் இந்தியாவின் விடுதலைக்காக தூக்குக்கயிற்றைத் தழுவி வரலாற்றில் நிலை கொண்ட நாள் இன்றுதான்.

ஆம்.

மார்ச் மாதம் 23 ம் நாள்தான் அவர்கள் லாகூர் சிறையில் தூக்கிலப்பட்டார்கள்.

இளந்தியாகிகளை மட்டுமல்ல, அவர்களின் இறுதி நாளையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் வேறொரு நாளில் வேறொரு வதந்தி பரவுகிறது.

கேளா காதுகள் கேட்கட்டும் என்று நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவன் பகத்சிங்.

இன்றும் நாடாளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு ஏழை மக்களின், தொழிலாளர்களின் விவசாயிகளின் குமுறலும் கேட்கவில்லை. அவர்கள் எழுப்பும் உரிமைக்குரலும் கேட்கவில்லை.

பகத்சிங்கின் குரலாய், உணர்வாய் நாம் மாறுவோம்.
கேளாக்காதினரை கேட்க வைப்போம்

Tuesday, November 7, 2017

அவர்கள் இல்லாமல் இருந்திருந்தால்??????




 ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி என்று மகாகவி பாரதியால் பாடப்பட்ட ரஷ்யப்புரட்சியின் நூற்றாண்டு தினம் இன்று.

ரஷ்யப்புரட்சியினை ஏன் நினைவு கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் சுருக்கமாக  எழுதியதை முதலில் பகிர்ந்து கொள்கிறேன். 



#சோவியத்_புரட்சி_அப்படி_என்ன_தான்_சாதித்தது?
☆☆☆புரட்சி☆☆☆


☆ரஷ்ய சமூகம் தன் புரட்சியின் மூலம் அப்படி என்ன தான் செய்தது.. வாருங்கள் பார்ப்போம்...


☆உலகின் முதல் பட்டினியற்ற தேசத்தை உருவாக்கிக்காட்டியது. 


☆உலகின் முதல் கல்லாதோர் அற்ற தேசத்தை உருவாக்கிக் காட்டியது.


☆முழுக்கல்வியும் இலவசமாக்கப்பட்டது.


☆உயர் கல்வி வரை கட்டாயமாக்கப்பட்டது. 


☆சுகாதாரத்திற்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்றது.


☆தொழிலாளர்களின் வேலை நேரம் 7 மணி நேரமாக்கப்பட்டது.


☆24 மணிநேரம் பணியாற்ற வேண்டிய அத்தியாவசியத் தொழிலாளர்களின் வேலை நேரம் 6 மணி நேரமாக்கப்பட்டது. 


☆தவிர்க்க முடியாத காலகட்டத்தை தவிர கூடுதல் நேர உழைப்பு தடை செய்யப்பட்டது.


☆தொழிலாளர்களுக்கு இதர விடுமுறை இல்லாமல்,ஆண்டிற்கு ஒரு மாதம் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது. 


☆விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வோருக்கான மானியத்துடன் கூடிய உல்லாச விடுதிகள் கொடுக்கப்பட்டன. 


☆ஆண்களுக்கு 60 வயதும், பெண்களுக்கு 55 வயதும் ஓய்வு பெறும் வயதாகவும், ஓய்வு பெறுவோர்க்கும், உழைக்க இயலாதவர்களுக்கும் ஓய்வூதியமாக முழுச்சம்பளமும் வழங்கப்பட்டது. 


☆ஓய்வூதியத்தை உலகமே அறிந்தது ரஷ்ய புரட்சியின் விளைவாகத்தான்.


☆எல்லோருக்கும் குடியிருப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நாடும் ரஷ்யா தான். 


☆வீட்டு வாடகை, எரிபொருள், மின்சாரம், தண்ணீர் உட்பட எல்லாவற்றிற்கும் சேர்த்தே ஊதியத்தில் 3 சதவீதம் மட்டுமே பெறப்பட்டது. 


☆பெண்களுக்கு பேறுகால விடுப்பு நான்கு மாதங்கள் முழு ஊதியத்துடன் வழங்கப் பட்டது. 


☆தேவைப்படின் ஓராண்டு காலம் வரை பாதி ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்பட்டது. 


☆தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரைக்கும் பெண்களுக்கு வாரத்தில் 6 நாட்களோ, நாள் ஒன்றுக்கு 7மணி நேரமோ உழைக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. 


☆எல்லா குழந்தைகளுக்கும் 16 வயது வரையிலும், தனித்து வாழும் பெண்கள் வளர்க்கும் குழந்தைகளுக்கு 18 வயது வரையிலும் அரசு மானியம் வழங்கியது. 


☆எல்லோருக்கும் வேலை வழங்கிய முதல் நாடும் ரஷ்யா தான்.


☆இன்னும் இதுபோன்ற பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவ்வளவு ஏன், இன்றைக்கு நான்  அனுபவிக்கிற பல உரிமைகளும், தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பல உரிமைகளும் ரஷ்ய புரட்சியின் மூலமாகவே இந்த உலகம் அறிந்தது, பெற்றது. 


☆சூரிய அஸ்தமனமே இல்லாத பெரும் செல்வம் படைத்த பிரிட்டிஷ் சாம்ராஜியமே, தன் சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் கூட செய்யாத பல நலத்திட்டங்களை அன்றைக்கு வறுமையிலிருந்து உருவான ரஷ்யாவின் புரட்சிகர அரசாங்கம் செய்துகாட்டியது. 


☆காரணம் செல்வம் ஒரே இடத்தில் குவியாமல், எல்லோருக்கும் நாட்டின் மொத்த செல்வமும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய பொதுவுடைமை கருத்தாலேயே அது சாத்தியமானது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை “இன்று ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் கம்யூனிஸம் எனும் பூதம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது” என்றுதான் பேராசான்கள்  மார்க்ஸூம் ஏங்கல்ஸூம் துவக்கி இருப்பியிருப்பார்கள்.


ரஷ்யப்புரட்சிக்குப் பின்பு அவர்களை அந்த பூதம் இன்னும் அதிகமாக ஆட்டி வைத்தது. தங்கள் நாட்டு தொழிலாளர்கள் சிவப்பின் பக்கம் சென்று விடக்கூடாது என்று “நல அரசு" (Welfare State) என்ற அம்சத்தை கொண்டு வந்தார்கள். 

அது ஒரு புறம் இருக்கட்டும், ரஷ்யப்புரட்சியின் விளைவாக உருவான சோவியத் யூனியன் இல்லாமல் இருந்திருந்தால் இந்திய நிலைமை என்ன ஆகியிருக்கும்?

இந்திய விடுதலைக்குப் பின்பு இந்தியாவின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவ எந்த ஒரு முதலாளித்துவ நாடும் முன்வராத போது நமக்கு கை கொடுத்தது சோவியத் யூனியன் மட்டுமே.

ரூர்கேலா, பிலாய் போன்ற இடங்களில் உருக்காலை அமைப்பதில் தொடங்கி அனல் மின் நிலையங்கள் அமைப்பது வரை நமக்கு உதவியது சோவியத் யூனியன் மட்டுமே. அவர்கள் உதவவில்லை என்றால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமே கிடையாது. பெட்ரோலிய துரப்பண ஆராய்ச்சியும் அவர்களது ஒத்துழைப்பால்தான் நிகழ்ந்தது. 

கட்டமைப்புத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்றால் அது சோவியத் யூனியன் நமக்கு அளித்த ஒத்துழைப்பால் மட்டுமே.

இன்று இந்தியாவின் பெருமை நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. இந்திய விண்வெளி ஆராய்ச்சியும் சோவியத் யூனியனின் கொடையே. அவர்கள் கொடுத்த அடித்தளத்திலிருந்துதான் இந்திய சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா  என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சென்றது சோவியத் யூனியனின் விண்கலத்தில்தான் என்பது எத்தனை பேருக்கு நினைவில் உள்ளது?

வங்க தேசப் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது ஏழாவது கடற்படையை அனுப்பியபோது சோவியத் யூனியனின் கடற்படையும் தனது கப்பல்களை அனுப்பியதால் அமெரிக்கா பின் வாங்கியது. 

எனவே சோவியத் யூனியன் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா இப்போது இருப்பதை விட மிகவும் பின் தங்கிய நிலையில்தான் இருந்திருக்கும் என்பதுதான் யதார்த்தம். 

உழைக்கும் வர்க்கத்தால் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்பதை முதன் முதலில் நிரூபித்த ரஷ்யப் புரட்சி வாழிய வாழியவே!!!

Monday, November 7, 2016

நாளை மீண்டும் . . .




நூறாண்டுகள் தொட்டாலும்
இன்றும் மெய் சிலிர்க்கவைக்கும்
உலகை உலுக்கிய
ரஷ்யப் புரட்சி

உழுபவனுக்கு நிலம்,
அனைவருக்கும் வேலை,
சுய மரியாதையோடு
வாழ்க்கை.

கனவில் அல்ல,
நிஜத்திலும் சாத்தியமாக்கிய
யுகப் புரட்சி
இன்றும் எழுச்சியின்
சின்னமாய்.

காலத்தின் வேகத்தில்
சிதைந்து போனது
நாடுகளாய் இருக்கலாம்,
கட்சிகளாய் இருக்கலாம்.

எல்லாம் முடிந்ததென்று
எதிரிகள் 
கை கொட்டியும் சிரிக்கலாம்.

நெஞ்சில் தேக்கிய கனல்
என்றென்றும் அணையாது.

இலக்கு நோக்கிய
இலட்சியம் என்றும் சாகாது.

தவறுகளை திருத்திக் கொண்டு
தடைகளை தகர்த்து விட்டு
தளைகளை அறுத்தபடி
போலிகளை களையெடுத்து

லெனின் ஏந்திய 
புரட்சி தீபத்தோடு

நம்பிக்கையை மனதிலேந்தி
நாளை மீண்டும் வருவோம்

Sunday, November 6, 2016

இன்றுதான் பொருத்தமான நாள்



மிக முக்கியமான இந்த நூல் பற்றி “உலகை உலுக்கிய ரஷ்யப் புரட்சி” யின் நூற்றாண்டு தொடங்கும் இன்று பகிர்ந்து கொள்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.


நூல் அறிமுகம்

நூல்                               நீலக் குறிப்பேடு
ஆசிரியர்                          இ.கஸாகேவிச்
தமிழில்                           பி.சிவகாமசுந்தரி
வெளியீடு                         பாரதி புத்தகாலயம்
                                    சென்னை – 600018
விலை                            ரூபாய்  90.

“தென்றலைத் தீண்டியதில்லை, தீயைத் தாண்டியதுண்டு” என்ற வாசகங்களை நிஜமாகவே உச்சரிக்கும் தகுதி படைத்தவர்கள் வரலாற்றில் சிலரே. அதிலே முதன்மையானவர் ரஷ்யப் புரட்சியின் தலைவர் தோழர் லெனின்.

புரட்சிக்கு முந்தைய கால கட்டங்களில் அவர் சிறைப்பட்டிருக்கிறார். சைபீரியாவிற்கு கடத்தப்பட்டுள்ளனர். மாறு வேடங்களில் திரிந்துள்ளார். தலைமறைவாய் இருந்துள்ளார். அப்படி தலைமறைவாய் இருந்த சில நாட்களின் அனுபவத்தைப் பேசுகிறது நீலக் குறிப்பேடு.

எம்ல்யனேவ் என்ற விவசாயியின் வீட்டில் காட்டுக்குள்ளே லெனின் தங்குகிறார். தலைமறைவாக இருந்தாலும் அன்றாடம் செய்தித் தாள்களை வரவழைத்துப் படிக்கிறார். நாள் தோறும் எழுதிக் கொண்டே இருக்கிறார். முந்தைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து திருத்திக் கொள்ள வேண்டிய அம்சங்களை முடிவு செய்கிறார்.

எந்த வசதியும் இல்லாமல் வைக்கோல் போரில் அவர் தன் காலத்தைக் கழிக்கையில் அவருக்கு வருகிற செய்தித்தாள்களோ “உல்லாச வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிற லெனின் பிடிபட்டார்” என்று கற்பனைச் செய்திகளை வெளியிடுகிறது.

காட்டுக்குள்ளே இருக்கும் அவரை சந்திக்க வரும் அவரது தோழர்களோடு “நடைபெறவுள்ள போல்ஷ்விக் கட்சியின் மாநாடு, தீர்மானங்கள் குறித்து விரிவாக விவாதிக்கிறார்.வழிகாட்டுகிறார்”.  அவரது முந்தைய வசிப்பிடத்திலிருந்த நீலக் குறிப்பீட்டை தன்னிடம் கொண்டு வந்து சேர்க்குமாறு வலியுறுத்துகிறார். அதிலே அப்படி என்ன இருக்கிறது என்பதை கடைசியில் பார்ப்போம்.

தலைமறைவு வாழ்க்கை தோழர் லெனினை முடமாக்கவில்லை, மாறாக புரட்சியை முன்னெடுக்க தன்னை கூர் தீட்டிக் கொள்ள பயன்படுத்திக் கொண்டார். எம்லயனேவ் குடும்பத்தாருடன் நிகழ்த்தும் அவர் நிகழ்த்தும் உரையாடல்கள் புரட்சி வெற்றி பெற பெண்களின் பங்கு அவசியம் என்ற அவரது கருத்தை உணர்த்தும். எதிர்காலத்தில் இளைஞர்கள் எவ்வாறு முன்னேறுவார்கள் என்ற கருத்தையும் நம் கண் முன் நிறுத்தும்.

அவரோடு உடன் இருந்த ஜினோவிவ் என்ற தோழரோடு லெனின் நிகழ்த்துகிற நீண்ட உரையாடல் அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. ரஷ்ய புரட்சிக்கு முந்தைய காலகட்டம் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல் இது.

நீலக்குறிப்பேட்டில்தான் லெனின் புரட்சிக்குப் பிந்தைய அரசு மேற்கொள்ள வேண்டிய கடமைகள், செயல் திட்டங்கள் பற்றி மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையில் தயாரித்த குறிப்புக்கள் இருந்தன.

அனைவருக்கும் பசிப்பிணியற்ற, முழுமையான கல்வி அறிவோடு, உறைவிடத்தோடான கௌரவமான வாழ்க்கையை சொந்தமாக்கிய முதல் தேசம் ரஷ்யாதான் என்பது சாதனை. அந்த சாதனைக்கான வித்து துவங்கிய இடம் நீலக்குறிப்பேடு.