Showing posts with label சேவை. Show all posts
Showing posts with label சேவை. Show all posts

Thursday, October 26, 2017

அவர் புகைப்படம் இங்கே . . .



ஏழு ரூபாய் டாக்டர் இங்கேயும் கூட      (இணைப்பின் மூலம் செல்லவும்)


என்ற நேற்றைய பதிவில் வேலூரில் குழந்தைகள் நல நிபுணராக திகழ்ந்த  டாக்டர் பிரகாசம் அவர்கள் பற்றிய என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு அவரது புகைப்படம் இணையத்தில் கிடைக்கவில்லை என்றும் எழுதியிருந்தேன். 

முத்து என்ற ஒரு நண்பர் அவரது புகைப்படத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். 

அந்த மின்னஞ்சலில் அவர் எழுதியிருந்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  

Read your message on Dr. Praskam...Thanks for sharing your experiences of the great man.

your search for Dr.'s picture if it has not yielded any lookout for his son normally puts up obituaries in tamizh newspapers in the month of August for his parents together.


Best Regards
Muthu

அது  மட்டுமல்லாது மருத்துவர் பிரகாசம் அவர்களின் மகனும் பின்னூட்டம் இட்டிருந்தார். 

Thanks for your acknowledgement sir...I'm really proud of my father..

உண்மையிலேயே மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. 

முந்தைய பதிவிலேயே அவர் புகைப்படத்தை இணைத்திருந்தாலும் கூட தனியாக இன்னொரு முறையும் பதிவு செய்ய வேண்டும் என்ற உணர்வை ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி தோழர் மரியா சிவானந்தம் அவர்கள் முகநூலில் இட்டிருந்த பின்னூட்டம் உருவாக்கியது.

 Yes . He has been an epitome of sincere medical service to the people of Vellore. Recalling with gratitude .


ஆம். உண்மையாக சேவை செய்தவர்களை மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். 

Wednesday, October 25, 2017

ஏழு ரூபாய் டாக்டர் இங்கேயும் கூட . . .





1993 அக்டோபரில் என் மகன்  கும்பகோணத்தில் பிறந்தான். 1994 ஜனவரியில் அவனை  வேலூருக்கு அழைத்து வந்தோம். அதன் பின்பு அவனுக்கு உடல் நலத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் வேலூர் தென்னமரத் தெருவில் இருந்த டாக்டர் பிரகாசம் என்ற குழந்தைகள் நல நிபுணரிடம்தான் அழைத்துச் செல்வோம்.

சின்ன இடத்தில்தான் அவரது கிளினிக் இருந்தது. மருத்துவர் பார்வையிட ஒரு அறை. அதற்கு முன்பாக நோயாளிகள் அமர ஒரு அறை அவ்வளவுதான். அதிகபட்சமாக ஒரு இருபது பேர் உட்காரலாம். எப்போதுமே கூட்டம் அலைமோதும். முன் கூட்டியே சென்று டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளை பரிசோதனை செய்து விட்டு அவரே மூன்று வேளைக்கான மாத்திரைகளை அவரே கொடுத்து விடுவார். ஐந்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொள்வார். அவசியமேற்பட்டால் மட்டுமே ஊசி போடுவார். அதற்காக கூடுதல் பணமும் வாங்க மாட்டார்.

நாம் சொல்வதை முழுதாகக் கேட்பார். ஆனால் அவர் அதிகம் பேச மாட்டார்.  வெள்ளை சட்டை, வெள்ளை பேண்டோடுதான் எப்போதும் பார்த்திருக்கிறேன். வேலூரைப் பொறுத்தவரை குழந்தைகள் நிபுணர் என்றால் அவர்தான். தனியாக மருத்துவமனை எதுவும் அவர் நடத்தவில்லை. குழந்தைகளின் நிலைமை மோசமாவது போல தோன்றினால் சி.எம்.சி மருத்துவமனைக்குப் போகச் சொல்லி விடுவார்.

நீண்ட நாட்கள் வரை ஐந்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தார். 1995 மத்தியில் ஏழு ரூபாய் வாங்கத் தொடங்கி இருந்தார்.

ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

ஆம்.

வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் ஒரு சுரங்கம் தோண்டி தப்பித்தார்கள் என்ற செய்தி நினைவுக்கு வருகிறதா?

அந்த நாள் 15.08.1995. அன்று இரவு வேலூர் முழுதும் மின் வெட்டு. இரவு பத்து மணி அளவில் போன மின்சாரம் மறு நாள் காலை ஏழு மணி அளவில்தான் வந்தது.

மின்சாரம் போன நிலையில் அவர் கையில் மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டு போர்ட்டபிள் ஜெனரேட்டரை இயக்கியுள்ளார். டீசல் அவர் மீது தெறித்து விழுந்து தீ பற்றிக் கொள்ள அந்த விபத்தில் அவர் காலமானார்.

வருடங்கள் பல உருண்டோடினாலும் அவரது சேவை மனப்பான்மை இன்னும் அவரை நினைக்க வைக்கிறது.

மருத்துவர்கள் நினைத்தால் எளிய கட்டணத்தில் சேவை செய்ய முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.

பின் குறிப்பு : இணையத்தில் எவ்வளவோ தேடியும் அவரது புகைப்படம் கிடைக்கவில்லை. ஆனால் என்ன, என் மனதில் அவர் படம் பதிந்துள்ளது. 

பின் குறிப்பு 2


இந்த பதிவைப் பார்த்து ஒரு நண்பர் பின்னூட்டமிட்டது அல்லாமல் மருத்துவர் பிரகாசம் அவர்களின் புகைப்படத்தையும் அனுப்பி இருந்தார். அப்படத்தை மேலே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அவரது மகன் வேறு ஒரு பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார். அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

Thursday, September 22, 2016

அப்போதும் இப்போதும் நாங்கள்தான் - நாங்கள் மட்டும்தான்




மேலே உள்ள படம், ஜாம்ஷெட்பூர் எல்.ஐ.சி கோட்டத்தின் அதிகாரிகள் ஊரியில் கொல்லப்பட்ட ஒரு ராணுவ வீரர் குடும்பத்திற்கு அவரது காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அளித்த போது எடுத்த படம்.

துயரமான சூழ்நிலையை அரசியல் லாபத்திற்காக மோடி வகையறாக்கள் பயன்படுத்தும் நேரத்தில் தன்னுடைய கடமையை விரைவாக நிறைவேற்றி உள்ளது எல்.ஐ.சி.

சியாச்சின் பனிப் பொழிவிலும் இவ்வாறு விரைந்து செயல்பட்டது உங்களுக்கு நினைவிலிருக்கலாம்.

Monday, May 23, 2016

மோடியிடமும் சொல்லுங்கள் நவ்ஜோத்சிங் சித்து





அன்னை தெரசாவுடனான தனது அனுபவம் பற்றி கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பகிர்ந்து கொண்டது வாட்ஸப்பில் வந்திருந்தது. அன்னை தெரசா பணம் பற்றிய தனது பார்வையை மாற்றி அன்பே பிரதானம் என்பதை உணர்த்தினார் என்பதை நெகிழக் கூடிய விதத்தில் கூறியுள்ளார்.

பாராட்டுக்கள் சித்து. பொது வெளியில் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ள நீங்கள் இன்னொன்றும் செய்ய வேண்டும்.

அன்னை தெரசா இறந்து போய் எத்தனையோ ஆண்டுகள் கடந்து போன பின்பும் இன்னும் அவர் மீது அவதூறு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிற உங்கள் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கும், பிரதமர் மோடிக்கும், இன்னும் முக்கியமாக உங்கள் கட்சியின் குரு பீடமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்வசங்சாலக் மோகன் பகவத்திற்கும் இதை அனுப்பி வையுங்கள். அவர்கள் திருந்துவார்கள் என்ற மூட நம்பிக்கை எல்லாம் எனக்கும் கிடையாது. அவர்கள் கட்சியில் கூட உண்மை பேசக் கூடிய ஒருவர் உள்ளார் என்பதையாவது அவர்கள் அறிந்து கொள்வார்கள் அல்லவா?



காண்க; கசடற கற்க...

அன்னை தெராசாவைப் பற்றி கிரிக்கெட் வீரர் சித்து பகிர்ந்துக்கொண்டது

1991-92 ம் வருடங்களில், ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு ஊதியமாக எங்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுவது வழக்கம். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின்போது அப்படி எனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, அன்னை தெரசாவைக் கட்டாயம் சந்திக்கவேண்டும்.. அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவைக்காக அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தேயாகவேண்டும்என்று எனக்குள் ஓர் உந்துதல் ஏற்பட்டு, அவ்வாறே அவரது ஆசிரமத்துக்குச் சென்றேன். “Sisters of Charity” என்ற அந்த அலுவலகம் மிகச்சிறியதாய் இருந்தது. அங்கே இருந்த கன்னியாஸ்திரிகளிடம் ‘Where is Mother?’ என்று கேட்டேன். அதற்கு அங்கே இருந்த ஒரு கன்னியாஸ்திரி, ‘Mother is at the ‘Home for the dying’ என்றார். எனக்கு ‘Home for the dying’ என்று அவர் கூறியதன் பொருள் விளங்கவில்லை. அவர்கள் என்னை அந்த அலுவலகத்தின் பின்புறம் இருந்த ஒரு கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அந்தக் கட்டிடத்தினுள் தங்களது வாழ்வின் கடைசி மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கும், மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

நான் உள்ளே நுழைந்தபோது அந்த கட்டிடத்தினுள்ளிருந்து ஒரு சகிக்க இயலாத நாற்றம் வந்துகொண்டிருந்தது. அழுகிக்கொண்டிருக்கும் மாமிசத்திலிருந்து வருவதுபோன்றதான அந்த நாற்றத்தின் நெடி குமட்டலை வரவைத்தது. அதைச் சகித்துக்கொண்டு அந்த சிறிய சந்தின் வழியாக நான் நடந்து சென்று ஒரு அறையை அடைந்தேன்.

அங்கேதான் முதன்முதலாக அன்னைத் தெரசாவைக் கண்டேன். தன் மரணப்படுக்கையிலிருந்த நீண்ட தலைமுடியைக் கொண்ட ஒரு மனிதன் அங்கே படுக்கவைக்கப்பட்டிருந்தான். அவனது உடலில் ஆடை எதுவும் காணப்படவில்லை. ஒரு துணி மட்டும் அவனது இடுப்பின் கீழே போர்த்தப்பட்டிருந்தது. அவன் உடல்முழுவதும் அழுகி, புண்களில் இருந்து சீழ் வடிந்துகொண்டிருந்தது. அன்னை, மிகுந்த அன்புடன் அந்தப் புண்களில் வழிந்துகொண்டிருந்த சீழை ஒரு துணியினால் துடைத்துக்கொண்டிருந்தார். அவன் மிகுந்த வேதனையில் துடித்துக்கொண்டிருந்தான். அவன் உடலிலிருந்து வந்த நாற்றம் என் குடலைப்புரட்டியது.

ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. அந்தக் கட்டிடத்தினுள் இருந்து நான் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தேன் NavjotSingh Sidhu .. International Cricketer அங்கிருந்த சாக்கடையில் பெரும் குமட்டலுடன் வாந்தியெடுத்தான்.

பத்து நிமிடங்கள் கழித்து அன்னை தெரசா என்னிடம் வந்தார். புன்னகையுடன், ‘Yes My Son’ என்றார். ‘Mother I wanted to meet you’ என்றேன். ‘Come my son! Follow me!’ என்றவர் நடக்கத் துவங்கினார். அலுவலகம் வந்தோம். நான் மனம் நிறைய அகங்காரத்துடன் என் பாக்கெட்டிலிருந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்தேன். அங்கிருந்த மேஜையின் மேல் வைத்தேன். அவரை வணங்கி, ‘Mother.. You are an Instrument of Good... I have come here to assist you. I would be really obliged if you accept this’ என்றேன். அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறு, ‘Son.. I don’t need your money. I need your time. Can you spend time with these people? Can you give me some days where you can nurse them?’ என்றார். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

இவ்வுலகில் இப்படி உள்ளம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்களா? நான் கொடுக்கும் பணத்தை மறுத்து, என்னை வந்து இந்த நோயாளிகளுடன் நேரம் செலவிடச் சொல்கிறாரே?’ என்று உறைந்துபோனேன்.

அந்த நாற்றத்தினுள் இரண்டு நிமிடங்கள் என்னால் நிற்கக் கூட இயலவில்லை. நான் எங்கிருந்து அவர்களுக்கு சேவை செய்வது? That was a life changing story for me.

பணம் கொடுத்து யாருக்கும் உதவி செய்துவிடலாம்என்ற என் எண்ணம் அன்று சுக்குநூறாகிப்போனது. பணத்தை விட அன்பும், நாம் பிறர்க்கு செய்யும் சேவையும் மிக மிக உயர்ந்தவைஎன்று அன்னை தெரசா அன்று எனக்கு உணர்த்தினார்.

- நவ்ஜோத்சிங் சித்து.

Wednesday, March 16, 2016

அன்னை தெரசா புனிதராக அற்புதம் எதற்கு?





அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்க போப்பாண்டவர் ஒப்புதல் அளித்தார் என்ற செய்தியை நாளிதழில் பார்த்தேன்.

தன்னலமற்ற சேவையால் அவர் வாழும் போதே புனிதராகத்தான் திகழ்ந்தார். எங்கோ பிறந்து இந்தியாவில் உள்ள தொழு நோயாளிகளின் மீட்பராக அவர் ஆற்றிய பணி என்பது எல்லோருக்கும் ஓர் முன்னுதாரணம். கருணையின் வடிவமாய் அவர் எப்போதும் நம் நினைவில் இருப்பார்.

மரணத்திற்குப் பின் ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்க இரண்டு அற்புதங்கள் நிகழ்ந்தால்தான் சாத்தியமென்று வழக்கமுள்ளதாம். அதன் படி தீரா நோயுள்ள இருவர் அவரது அற்புதத்தால் குணமானதால் இப்போது அவருக்கு புனிதர் என்ற நிலை அளிக்கப்படுவதாய் சொல்லப் படுகிறது.

இது ஒரு மூட நம்பிக்கையின் மீட்சியே. அவரது வாழ்வே ஒரு அற்புதமாக இருந்த போது இறப்பிற்குப் பின் அவரால் அற்புதம் நிகழ்த்தப் பட வேண்டும் என்றெல்லாம் விதிகள் வைத்திருப்பதே அறிவியல் பார்வைக்கு முரணானது. தனது பிடிமானத்தை தக்க வைப்பதற்கு எல்லா மதங்களுக்கும் ஏதோ ஒரு சித்து வேலை தேவைப்படுகிறது.

வாழும் போது அவர் செய்த பணிகளை, சேவைகளைக் காட்டிலுமா அவரது மறைவிற்குப் பிறகு அவர் செய்ததாக சொல்லப்படுகிற அற்புதங்கள் மகத்தானது?

அன்னை தெரசா நிச்சயமாக ஒரு உன்னதமான புனிதர், வாழும் காலத்தில் செய்த அரிய சேவைகளால், இறந்த பின் நிகழ்த்தியதாக சொல்லப்படும் அற்புதங்களால் அல்ல.