ஆயிரம் குடும்பங்களை கடந்த பொதுக் காப்பீட்டு ஊழியர்களின் ரூ 10 லட்சம் நிவாரணம்
ஊரடங்கு மீறாமல் மக்களோடு ஒருங்கிணைதலுக்கு சாட்சியம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஜி.ஆனந்த்
*******************************
கொரோனா தேசியப் பேரிடராய் எல்லோரையும் நிலைகுலையைச் செய்த போது இன்னொரு சவாலையும் சேர்த்தே கொண்டு வந்தது. ஆம். சுனாமி, தானே, ஓக்கி, சென்னை வெள்ளம், கஜா போன்ற இயற்கைச் சீற்றங்களின் போதெல்லாம் மக்களுக்காக களமிறங்கிய அமைப்புகளுக்கும், நல்லுள்ளங்கள் கொண்ட தன்னார்வலர்களுக்கும் அது விடுத்த சவால்தான் அது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் அதை சந்தித்தது. தனி மனித இடைவெளியை சற்றும் மீறாமல் எப்படி துயர் துடைக்கும் பணியில் ஈடுபடுவது என்று திகைத்து, திட்டமிட்டு, திறவு கோல்களைக் கண்டறிந்த அனுபவமே இன்று 1000 இல்லங்களை எட்டியிருப்பது.
மும்முனைச் சவால்கள்
கோவிட் 19 மிகப்பெரிய பாதிப்பை உலகம் முழுதும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முறைசாரா தொழில் இருக்கின்ற கோடிக்கணக்கான மக்கள், கிராமப்புற விவசாயக் கூலிகள், நடைபாதை வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்கள் இந்த நோயின் கொடுமையை காட்டிலும் வறுமையினாலும் வேலையின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நிவாரணம், சரியான பயனாளிகளை கண்டறிதல், நேரடியாக பொருட்களை கொண்டு போய் சேர்ப்பது என்று மும்முனைச் சவால்கள் இருந்தன.
ஒரு சிறிய அளவில் சென்னையில் தென்சென்னையில் குரோம்பேட்டை பகுதியில் ஒரு 20 குடும்பங்களுக்கு உதவி செய்வது என்று சென்னை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பாக முடிவெடுக்கப்பட்டு அந்த 20 குடும்பங்களுக்கான பொருட்களை வாங்குவதற்காக முயற்சி செய்தோம். எப்படி செய்வது? ஒரு கடையை தேர்வு செய்தோம். அவர்களுக்கு ஆன்லைன் பேமன்ட் மூலம் ஒவ்வோர் குடும்பத்திற்கும் ரூ 1000 வீதம் செலுத்திவிட்டு 20 பேர் முகவரி, செல் எண்களை அனுப்பி வைத்தோம். கடையில் இருந்து அவர்கள் அளிக்கப்பட்டு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த அனுபவத்தை விரிவு செய்ய ஆரம்பித்தோம். இந்த முறை பல நன்கொடையாளர்களையும் ஈர்த்தது.
20 குடும்பம் என்ற அந்த எண்ணிக்கை என்பது கூடுதல் ஆகி கொண்டே போனது. வெகுஜன ஸ்தாபனங்கள், முறைசாரா தொழில்களில் இருக்கின்ற தொழிற்சங்கங்கள், நம்மோடு நட்போடு இருக்கின்ற பல நண்பர்களுடைய ரெபரன்ஸ் மூலமாக பட்டியல் என்று நீண்டு கொண்டே போனது. நீண்டுகொண்டே போன பட்டியலை பூர்த்தி செய்வதற்காக ஊழியர்கள் மத்தியில் அதிகாரிகள் மத்தியில் நிதி உதவி செய்வதற்கான ஒரு கோரிக்கையை நாங்கள் வைத்தோம். அதே சமயத்தில் கடைகளிலும் பேசினோம். சென்னையில் ஒரு கடையில் ஆரம்பித்து கிட்டத்தட்ட பல பகுதிகளில் 15 கடைகள் உடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. நன்கொடையாளர்கள் நேரடியாக கடைகளுக்கே ஆன் லைன் பேமெண்ட் செய்வது என்ற ஏற்பாடு. ஊழியர்களும் அதிகாரிகளும் நண்பர்களும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் அவர்கள் விரும்புகிற தொகையை அனுப்பி வைத்தார்கள். ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் என்ற அடிப்படையில் நாம் உதவி செய்ய ஆரம்பித்தோம். உண்மையில் ஆயிரம் என்று சொன்னால் அது ஒரு ஒட்டுமொத்த வியாபார கடை என்பதால், அது ரீடெய்ல் வரும் போது கிட்டத்தட்ட ரூ 1300 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது.
நூறாய் நூறாய் விரிந்தது
முதல் பட்டியல் 20, பின்னர் 200, பின்னர் 300, 500 , 800 பின்னர் தற்போது 1000 இல்லங்களை கடந்துள்ளோம். சென்னை முழுவதும் எல்லா பகுதிகளிலும் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது. அது மட்டுமல்லாமல் தொலைபேசி மூலமாக உதவி வேண்டும் என்று சொன்னார்களோ அந்த அந்தப் பகுதிகளிலும் நாம் உதவி செய்து இருக்கின்றோம். தென்சென்னையில்- பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், டி நகர் ,போரூர், கண்ணகி நகர்.மத்திய சென்னையில்- எக்மோர், ஆயிரம் விளக்கு பகுதி, வடசென்னையில்- பெரம்பூர், திருவிக நகர், ராயபுரம், அம்பத்தூர், மாதவரம், மணலி, கொளத்தூர் , ஆர்கே நகர், திருவொற்றியூர் மட்டுமின்றி செங்கல்பட்டு , திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களுக்கும் விரிவு செய்தோம். செங்கல்பட்டு, ஒயலூர், திருப்போரூர், குன்றத்தூர், நந்தம்பாக்கம்.
திருவள்ளூர், செங்குன்றம், திருநின்றவூர், திருத்தணி, வேலூர், இப் பகுதிகளின் கிராமங்கள் என உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
ஒயலூர் என்ற கிராமத்தில் உள்ள இருளர் பகுதியில் 150 குடும்பங்கள் என நெடுஞ்சாலையில் இருந்து ஒதுங்கியிருக்கிற சிறு கிராமம் இதன் விரிவுக்கு ஒரு சாட்சியம். இன்னும் ஏராளமான கிராமங்களை நோக்கி நாங்கள் போய் கொண்டே இருக்கின்றோம். செங்கல்பட்டு பக்கத்தில் இருக்கின்ற மூன்று கிராமங்களில் பிலாபூர் சித்தண்டி , மெய்யூர் ஏற்கனவே பயனாளிகளை கண்டுபிடிக்கின்ற பணி என்பது தொடங்கி அது முடிவுறும் தறுவாயில் இருக்கின்றது. 20 குடும்பங்கள் 20 ஆயிரம் என்று தொடங்கி இன்றைக்கு ஆயிரம் குடும்பங்களை தாண்டி நிவாரணம் பத்து லட்ச ரூபாயை கடந்து இருக்கிறது என்று சொல்லும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த எல்லா காலகட்டத்திலும் நாம் சமூக விலகல் நெறிமுறைகளை கடைப்பிடித்து இந்த உதவிகளை என்பதை செய்திருக்கிறோம்.
சமூக விலகல் என்பது உடலளவில் இருந்தாலும் உள்ளத்தால் மக்களோடு இணைந்து இருக்கிறோம்.
ஏழைகளின் நேர்மை
படப்பை பக்கத்தில் இருக்கின்ற கரசங்கால் பகுதிக்கு சென்றபோது ஒரு 45 இருளர் குடும்பங்கள் அங்கு வசித்து வருகிறார்கள் அவர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு பத்து கிலோ அரிசி கொடுக்க வேண்டும் என்று சொல்லி நேரடியாக போய் வீடுகள், என்ணிக்கை போன்ற விவரங்களை கேட்ட போது, அவர்கள் சொன்னது எங்களை உலுக்கி விட்டது. நேற்றைய தினம் விஏஓ வந்து அஞ்சு கிலோ அரிசியும் ஒரு கிலோ எண்ணையும் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள் ஆகவே இந்த குடும்பங்களுக்கு இன்னும் ஒரு 5 நாட்கள் 10 நாட்களுக்கு போதுமானது; இது கூட இல்லாமல் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த உதவியைச் செய்தால் பயனாக இருக்கும் என்றார்கள். அவர்கள் குடும்பங்களின் குடிசைகள் எல்லாம் மாட்டுக் கொட்டகையில் விட மிக சிறியதாக அத்தகைய குடிசையில் 5 பேர் ஆறு பேர் கொண்ட குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அடுத்தவேளை சோறு என்பது உத்தரவாதம் இல்லாத சூழலில் கூட அவர்களிடமிருந்த நேர்மையும் அவர்கள் அடுத்தவர்களுக்காக உதவி வேண்டும் என்ற குணமும் பிரம்மிக்க வைத்தது. எங்கள் கண்களில் கண்ணீர் வந்தது.
சில பகுதிகளில் கண்ணீர் மல்க சில மாணவர்கள் சொன்னார்கள். நாங்கள் படித்து பின்னாளில் இது போன்ற உதவிகளை நாங்களும் செய்வோம் என்று.
ஊழியர்கள் அதிகாரிகள் பொறுத்தவரை ஆயிரக்கணக்கான ரூபாய்களை எங்கள் ஊழியர்களும் அதிகாரிகளும் நன்கொடையாக அளித்தார்கள். வெளிநாடுகளில் வாழ்கின்ற நண்பர்கள் மூலமாகவும் நன்கொடைகள் பெறப்பட்டன.
நன்கொடை தந்தவர்களுக்கு நிவாரணம் குறித்த தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்பட்டன. தேவைகள், வருகிற வேண்டுகோள்கள் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அவர்களே புதிய புதிய நன்கொடையாளர்களை அறிமுகம் செய்தவர்கள். ஒரே நன்கொடையாளரே இரண்டு முறை, மூன்று முறை, நான்கு முறை என நன்கொடை வழங்கியது அவர்கள் சங்கத்தின் அளிப்பு சங்கிலியின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளம்.
(கட்டுரையாளர் தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்)
நன்றி - தீக்கதிர் 19/04/2020
No comments:
Post a Comment